மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லெனின் 150: லெனினும் இந்திய விடுதலை போராட்டமும்


குரல்: ஆனந்த்ராஜ்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

தோழர் லெனின் பிறந்தது 1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி. அவர் பிறந்து 150 ஆண்டுகள் ஆகியும், அவர் 1924 ஜனவரி மாதம் மறைந்து 96 ஆண்டுகள் முடிந்தும், லெனின் அவர்களின் மகத்தான புரட்சிகர பங்களிப்பு நமது சமகால பிரச்சினைகளுக்கும் வெளிச்சம் காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் காலத்திற்குப் பின் மார்க்சீயத்தை முன்னெடுத்து சென்று சமகால பிரச்சினைகளை புரிந்துகொள்ளவும் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும் ஆகப்பெரிய பங்களித்தவர் தோழர் லெனின். மார்க்ஸின் மூலதனம் நூல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு மூலதனத்தை மையப்படுத்தி ஒரு சில பெரும் மூலதனங்களின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும்; போட்டி முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக மாறும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தது. காலனி ஆதிக்கம் பற்றியும், வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்றுவந்த வர்க்கப் போராட்டங்களின் மீது காலனி ஆதிக்க அமைப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் மார்க்ஸ்-எங்கெல்ஸ் இருவரும் மிகச்சரியான சில கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக  முன்வைத்தனர் என்பது உண்மை.

எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இந்தியாவை நாசப்படுத்தியது பற்றியும் அதன் வீழ்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் அற்புதமான இரு கட்டுரைகளை 1853இல் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிக்கையில் மார்க்ஸ் எழுதியுள்ளார். எனினும், காலனி ஆதிக்கமும் அதன் முரண்பாடுகளும் உலக முதலாளித்துவத்தின் மீது விளைவிக்கக்கூடிய தாக்கங்கள் பற்றி மார்க்ஸும் எங்கெல்ஸும்  முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அது மையப்பிரச்சினையாகவும் இல்லை. மேலை நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் அதன் ஆரம்ப மூலதன திரட்டலுக்கும் காலனிகள் ஆற்றிய பங்கை மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரிக்கிறார். ஆனால் காலனி நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சியும் நவீன தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பங்கும் துவக்க நிலையில் இருந்த பின்புலத்தில் இப்பிரச்சினைகள் மார்க்ஸின் படைப்புகளில் மைய இடம் பெறவில்லை. இந்த இடைவெளியை இட்டுநிரப்புவதில் தோழர் லெனினின் பங்கு மிக முக்கியமானது.

காலனி ஆதிக்கம் உலக முதலாளித்துவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், இதற்கு இணையாக, காலனி நாடுகளில் உருவாகும் தேச விடுதலை இயக்கங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர இயக்கத்திற்கு எவ்வளவு முக்கியமானவை என்பது பற்றியும் 1905இல் இருந்தே லெனின் தீவிரமாக சிந்தித்து வந்தார். இதனையொட்டி இந்தியாவிலும் சீனாவிலும், பொதுவாக ஆசிய கண்டத்திலும் ஏற்பட்டுவந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை அறிந்துகொள்வதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கங்கள் மலர காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து பல காலனி நாடுகளில் முதலாளித்துவம் வேகம் அடைந்த சூழலில் காலனிகளிலும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்  பிரவேசம் துவங்கி வளர ஆரம்பித்தது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் பற்றி 1908ஆம் ஆண்டில் ஒரு முக்கிய பதிவு செய்கிறார் லெனின். இதில் துவங்கி இந்த கட்டுரையில், லெனினுக்கும் இந்திய விடுதலை போருக்கும் உள்ள உறவின் ஒரு சில முக்கிய அம்சங்களை நாம் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியா பற்றி லெனின்

 ப்ரோலெதாரி (Proletary) என்ற, லெனினை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த, பத்திரிக்கையில் 1908 ஜூலை 23 இதழில், “உலக அரசியலில் தீப்பற்றி பரவக்கூடிய பொருட்கள் என்ற தலைப்பில் லெனின் பின்வருமாறு எழுதுகிறார்:

இந்தியாவில் தங்களது எழுத்தாளர்களுக்காகவும் அரசியல் தலைவர்களுக்காகவும் சாதாரண மக்கள் போராடத் துவங்கியுள்ளனர்…….. இந்திய ஜனநாயகவாதியான திலக் மீது பிரிட்டிஷ் குள்ளநரிகள் விதித்துள்ள தண்டனையை எதிர்த்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் பம்பாய் நகரில் வேலை நிறுத்தமும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் கூட உணர்வுபூர்வமான அரசியல் வெகு மக்கள் போராட்டத்தை நடத்தும் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் வளர்ந்துள்ளது. இதன் பொருள், ரஷ்ய பாணியில் இந்தியாவில் செயல்படும் பிரிட்டிஷ் சர்வாதிகார ஆட்சி அழிந்தே தீரும் என்பதாகும்.

ஐரோப்பிய நாடுகளில் பாட்டாளி வர்க்க இயக்கங்கள் சில பின்னடைவுகளை சந்தித்த நேரத்தில் 1913இல் ‘பின் தங்கிய ஐரோப்பாவும் முன்னேறிய ஆசியாவும்’ என்ற தலைப்பில் லெனின் எழுதிய கட்டுரையில் அவர் கூறுகிறார்:

ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயக இயக்கம் வளர்ந்து, விரிவடைந்து, வலுப்பெற்று  வருகிறது……….பல கோடி ஆசிய உழைப்பாளி மக்களுக்கு நம்பத் தகுந்த நேச சக்தியாக வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் உள்ளது. இதன் வெற்றியை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இதன்மூலம் ஐரோப்பிய (உழைக்கும்) மக்களும் ஆசிய (உழைக்கும்) மக்களும் விடுதலை பெறுவார்கள்.

அக்டோபர் புரட்சியின் தாக்கம்

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்த புரட்சியில் கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சி ரஷ்ய மக்களால் தூக்கி எறியப்பட்டது. ஆனால் இந்த மக்கள் எழுச்சியின் தலைமை சமரச போக்கு கொண்ட கட்சிகளின் கையில் இருந்தது. நிலைமை வேகமாக மாறியது. அடுத்த சில மாதங்களில் தொழிலாளிகளும், விவசாயிகளும், போர்முனையிலிருந்து போரை நிராகரித்து பெரும் எண்ணிக்கையில் திரும்பி வந்துகொண்டிருந்த ராணுவ வீரர்களும், வீதிகளில் இறங்கி தங்கள் கோரிக்கைகளுக்காக போராடினர். இவர்களின் போராட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமான முன்னணிப் படையாக லெனின் தலைமையில் செயல்பட்டுவந்த ரஷ்ய சமூக ஜனநாயக கட்சி – போல்ஷெவிக் கட்சி –  அமைந்தது. ரஷ்யா முழுவதும் தொழிலாளிகள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் இணைந்த ஜனநாயக அமைப்புகள் – இவை “சோவியத்” என்று அழைக்கப்பட்டன – மிக வேகமாக பரவின.  1917 அக்டோபர் மாதத்தில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் உழைக்கும் மக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ரஷ்ய சோசலிச குடியரசு பிறந்தது.   ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த மகத்தான புரட்சி உலகெங்கும் பெரும் தாக்கத்தை விளைவித்தது. அக்டோபர் புரட்சியைக்கண்டு ஏகாதிபத்திய முதலாளித்துவ வல்லரசுகள் பதறின.

ஏன் பதறின? உழைக்கும் மக்களே ஆட்சி நடத்த முடியும்; வலுவான பொருளாதார, அரசியல், சமூக வளர்ச்சியை, திட்டமிட்ட சோசலிச பொருளாதார வளர்ச்சியை சாதித்து உழைக்கும் மக்களின் வாழ்வை பன்மடங்கு மேம்படுத்த முடியும் என்று பின்னர் உலகிற்கு நிரூபித்தது அக்டோபர் புரட்சி. இப்புரட்சியின் வர்க்கத்தன்மையை, இது முதலாளித்துவம் என்ற அமைப்பிற்கே விடப்பட்ட பெரும் சவால்; இப்புரட்சி நிலைத்துவிட்டால் முதலாளித்துவமும் முதலாளி வர்க்கமும் வரலாற்று போக்கில் காலாவதி ஆகிவிடுவர் என்பதை ஏகாதிபத்திய முதலாளித்துவம் உணர்ந்தது. எனவேதான், ஏகாதிபத்திய வல்லரசுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் புரட்சியை முளையிலேயே கிள்ளி எறிய முனைந்தன. 1918 மே மாதமே 14 ஏகாதிபத்திய முகாம் நாடுகளின் துருப்புக்கள் ரஷ்யாவிற்குள் நுழைந்து எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாய் போரிட்டன. ஆனால் செம்படை மக்கள் ஆதரவுடன் இரண்டு ஆண்டுகள் மிகக்கடுமையாக போரிட்டு வெற்றி பெற்றது. சோசலிச ரஷ்யாவை எளிதில் அழித்துவிடலாம் என்ற ஏகாதிபத்தியக் கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகள், ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலனி நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கொடுங்கோல் ஜார் மன்னனை வீழ்த்தி, ஏகாதிபத்திய நாடுகளின் படைகளையும் விரட்டி அடித்த சோசலிச ரஷ்யாவின் மீதும், போல்ஷெவிக் கட்சி மீதும், அதன் தலைவர் லெனின் மீதும் இந்தியா உள்ளிட்ட   காலனி நாடுகளில் மிகப்பெரிய மரியாதையும் நேச உணர்வும் ஏற்பட்டன. இதன் ஒரு விளைவாக அன்றைய காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமென்ற வேட்கையுடன், இதனை செய்து முடிக்க சோசலிச ரஷ்யா சென்று அந்நாட்டின் தலைவர்களின் ஆலோசனையும் உதவியும் பெறலாம் என்ற என்ணத்துடன் துடிப்புமிக்க பல இந்தியர்கள் ரஷ்யாவிற்கு பயணித்தனர். (இவர்களில் பலரும் தேச பக்தர்கள் தான்; கம்யுனிஸ்டுகள் அல்ல.) சிலர் ரஷ்யா சென்று திரும்பி வருகையில் ஆஃப்கனிஸ்தான் தலைநகரான காபுலில் தங்கி பிரிட்டிஷ் காலனி அரசுக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் செயல்பட்டனர். 1920ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  காபுலில் செயல்பட்டுவந்த  “இந்திய புரட்சியாளர்கள் அமைப்பு” தனது பேரவை கூட்டத்தில் இந்திய விடுதலைப்போருக்கு சோவியத் ரஷ்யா அளித்த ஆதரவுக்கும், காட்டிய நட்பு உணர்வுக்கும் நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி லெனினுக்கு அனுப்பியது. இத்தீர்மானத்தை பெற்றுக்கொண்டு அளித்த பதிலில், லெனின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்திய மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ரஷ்ய உழைப்பாளி மக்களின் முழு ஆதரவை தெரிவித்தார்.

லெனின் பாய்ச்சிய புத்தொளி

லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல் எனலாம்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் காலத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள வலுவான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச புரட்சி நிகழும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் 1871 பாரிஸ் நகரிலும் வேறு சில தருணங்களிலும் தொழிலாளிவர்க்கம் அரசியல் ரீதியாக கிளர்ந்து எழுந்தது என்றாலும், சோசலிச புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள இயலவில்லை. பிரிட்டன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் சோசலிச சக்திகள் ஆட்சிக்கு வர இயலவில்லை. இப்பிரச்சினையை புரிந்துகொண்டு செயல்பட  1916 ஜூன் மாதத்தில் லெனின் எழுதி முடித்த, அவரது மிக முக்கியமான படைப்பான ஏகாதிபத்தியம் – முதலாளித்துவ வளர்ச்சியின் உச்ச (இறுதி) கட்டம்  என்றநூல் வழிகாட்டியது. இந்த நூல் ஏகாதிபத்தியம் உலகம் முழுவதையும் இணைத்துள்ள நிலையில், இந்த ஏகாதிபத்திய சங்கிலியின், இணைப்பின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கக்கூடும் என்ற புதிய பார்வையை கொடுத்தது. இந்த புரிதலின் அடிப்படையில்தான் ‘ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில்’ என்று  1917 அக்டோபர் புரட்சிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே லெனினால் கூற முடிந்தது.     அன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்கு தலைமை தாங்கி லெனின் கூற்று சரியென்று போல்ஷெவிக் கட்சி நிரூபித்துக்காட்டியது.[i]

இவ்வாறு தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தையும், உலக ஏகாதிபத்திய அமைப்பின் பின் தங்கிய, பலவீனமான பகுதிகளில் சோசலிச புரட்சி வெடிக்கும் வாய்ப்பு உண்டு என்பதையும் முன்வைத்ததோடு இல்லாமல், இப்புரிதலை விரிவுபடுத்தி,  கடும் காலனி ஆதிக்க சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளிலும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகள் நிகழும் காலமாக ஏகாதிபத்திய காலம் அமையும் என்பதையும் லெனின் தெளிவுபடுத்தினார். வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், ஏகாதிபத்தியத்தால் சுரண்டப்படும் காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களும் நேச சக்திகள் என்ற முக்கியமான கருத்தை லெனின் வலுவாக முன்வைத்தார். இவ்விரு சக்திகளும் வலுப்பெற்று அவர்கள் போராட்டங்கள் வெற்றி அடைவது மானுடம் உலகளவில் சோசலிச புரட்சியை நோக்கி பயணிக்க மிக அவசியம் என்ற புரிதலை சர்வதேச பொது உடைமை இயக்கத்தில் லெனின் கொண்டு சென்றார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு  

19ஆம் நூற்றாண்டின் இறுதி 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் வேகமாக வளர்ந்ததுடன் தொழிலாளி வர்க்கமும் அதன் அரசியல் அமைப்புகளும் வலுப்பெற்று வந்தன. இதில் அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி என்ற பெயரில் இயங்கிய கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் கணிசமான இடங்களைப் பெறும் அளவிற்கு அக்கட்சி செல்வாக்கு பெற்றிருந்தது. ஆனால் ஒருகாலத்தில் ஐரோப்பாவிற்கே வழிகாட்டியாக இருந்த அக்கட்சியில் திருத்தல்வாதம் தலைதூக்கியது. இதன் விளைவாக, 1914ஆம் ஆண்டு பல நாடுகளின் தொழிலாளி வர்க்கங்களை ஒன்றிணைத்து, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மூண்ட லாபவெறி காக்கும் போரை எதிர்த்து உழைப்பாளி மக்கள் காவு கொடுக்கப்படுவதை தடுப்பது என்ற தனது சர்வதேசக் கட்மையை நிறைவேற்றுவதற்குப் பதில் இக்கட்சி ஜெர்மானிய பேரரசின் யுத்தத்தை ஆதரிக்கும் நிலை எடுத்தது. இந்த பின்னடைவின் அடிப்படை காரணங்களை லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலிலும், ‘ஏகாதிபத்தியமும் சோசலிச(இயக்க)த்தின் பிளவும்என்ற கட்டுரையிலும் விரிவாக விளக்கியுள்ளார். சோசலிசம் இவ்வாறு எதிர்கொண்ட நெருக்கடியான பன்னாட்டு சூழலில், அக்டோபர் புரட்சிக்கெதிராக ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்த பின்னணியில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 6 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மாநாட்டில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நோக்கி உலகம் பயணித்திட உதவும் இலக்குடன்  பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சக்திகளையும் உறுப்பினர்களாக கொண்ட, பரஸ்பர உதவிக்கான அமைப்பாக “கம்யூனிஸ்ட் அகிலம்” என்ற புதிய அமைப்பு பேரியக்கமாக பிறந்தது. 

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாடு 1920ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது.துவக்க நிகழ்ச்சிகள் மட்டும் பெட்ரோகிராட் நகரில் நடந்தன. பின்னர் மாநாடு மாஸ்கோவில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல காலனி நாடுகளில் விடுதலை போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறை எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க விவாதம் இடம் பெற்றது. இதில் லெனின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

தேச விடுதலை போராட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலமும்

இந்த மாநாட்டின் ஒரு முக்கிய விவாதப்பொருள் ‘காலனி நாடுகளின் பிரச்சினை’ என்பதாகும். இப்பிரச்சினை குறித்து, அச்சமயம் நிலவிய உலக சூழலை கணக்கில் கொண்டு, லெனின் சமர்ப்பித்த முன்மொழிவுகள் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருந்தன:

·          உலகளவில் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங்கள் என்று நாடுகள் வேறுபடுத்தி பார்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் அகிலம் ஒடுக்கப்படும் தேசங்களின் மக்கள் பக்கம் நிற்கும்.

·          ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய முதல் உலகப் போருக்குப்பின் உலக அரசியல் அமைப்பிலும் பல்வேறு தேச மக்களுக்கு இடையிலுமான பரஸ்பர உறவுகள், சோவியத் ரஷ்யா, அதன் தலைமையில் உள்ள பல சோவியத் குடியரசுகள் மற்றும் சோவியத் வடிவிலான ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றின் மீது விரல்விட்டு என்ணக்கூடிய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வரும்  யுத்தத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது.

·         பின்தங்கிய காலனி நாடுகளில் எந்த தேச விடுதலை இயக்கமும் முதலாளித்துவ ஜனநாயக தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். காரணம், இங்கு மக்களில் பெரும்பகுதியினர் தம்வயம் உற்பத்திக்கருவிகளை வைத்துக்கொண்டு, சிறு/குறு/பெரு சுய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள். இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளே. எனினும், பின்தங்கிய, காலனி நாடுகளில் நடந்துவரும் தேச விடுதலைக்கான போராட்டங்களை “தேசீய-புரட்சிகர” இயக்கங்கள் என்று கம்யூனிஸ்ட் அகிலம் வரையறுக்கிறது. காரணம், இந்த இயக்கங்களின் தலைமையும் தன்மையும் எல்லா இடங்களிலும், எல்லா கட்டங்களிலும் முதலாளித்துவ-ஜனநாயகத்தன்மையுடன் தான் இருக்கவேண்டும் என்பது அவசியம் அல்ல.

·         கம்யூனிஸ்டுகள் என்ற முறையில் நாம் (அகிலம்) காலனிகளில் முதலாளி வர்க்கத்தினர் தலைமையிலான தேச விடுதலை இயக்கங்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் ஆதரவு அளிப்போம்:  அவை உண்மையில் புரட்சிகரமாக இருக்கவேண்டும். மேலும் இந்த இயக்கத்தவர், நாம் சுரண்டப்படும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் புரட்சிகர உணர்வுபெறும் வகையிலும் கல்வியூட்டி, அமைப்புரீதியாக திரட்டுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

·          வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் பின் தங்கிய காலனி நாடுகளின் உழைப்பாளி மக்களுக்கு உதவ வேண்டும்.

·          சோவியத் குடியரசுகளில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளி வர்க்கம் பின்தங்கிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். இது சாத்தியமாகும் பொழுது, பின்தங்கிய நாடுகள் முன்னேறுவது சாத்தியமாகும்.

அகிலத்தின் லெனினிய நிலைபாடும் இந்தியாவும்

1920இல் நிலவிய இந்திய சூழலுக்கு இவை பொருத்தமாகவே இருந்தன. இந்தியாவில் 1880களிலேயே முதலாளிவர்க்கம் அரசியல் களத்திற்கு வந்துவிட்டது. அதன் அரசியல் கருவியாகத்தான் இந்திய தேசீய காங்கிரஸ் உருவானது. அங்கொன்றும் இங்கொன்றுமாக 1860களிலிருந்தே தொழிலாளிகளின் போராட்டங்கள் நிகழ்ந்திருந்தபோதிலும், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் பிரவேசம் 1920களில் தான் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்படத் துவங்கியது. ஆகவே, இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை முதலாளி வர்க்கத்திடம் தான் இருந்தது. அதேசமயம் காந்தி அவர்கள் விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு ஆற்றத்துவங்கிய பிறகுதான் அது விரிவான மக்கள் இயக்கமாக மாறத்துவங்கியது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகளின் பங்கேற்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய நிலமையில் துவக்க நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் அடுத்துவந்த பல பத்தாண்டுகளில் தேச விடுதலை போராட்டத்தில் இருந்து தனிமைப்பட்டு விடாமல் இருக்க கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் மாநாட்டு வழிகாட்டுதல் பெரிதும் உதவியது. அகிலத்தின் இரண்டாம் மாநாட்டின் காலனி எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பான நிலைபாட்டை உருவாக்கியதில், ஆழ்ந்த மார்க்ஸீய தத்துவார்த்த ஞானத்துடன் இப்பிரச்சினையைப்பற்றி லெனின் முன்வைத்த கருத்துக்கள் ஆகப்பெரிய பங்கு வகித்தன.


[i] 1916ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லெனின் எழுதிய ‘ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் என்ற முக்கியமான கட்டுரை. மேலை நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சியை தடுப்பதில் காலனிகளை ஏகாதிபத்திய நாடுகள் சுரண்டி அபரிமிதமான உபரிகளை பெறமுடிந்த நிலை எத்தகைய பங்கு ஆற்றியது என்று இக்கட்டுரையில் விளக்குகிறார். (https://www.marxists.org/archive/lenin/works/1916/oct/x01.htm)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: