கி.தீபான்ஜன்
வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் (ஜே.என்.யூ)
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும் அதற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியான சுதந்திரப் போராட்டமும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். தற்கால இந்திய சமுதாயத்தில் நிலுவையிலுள்ள பல சிந்தனை ஓட்டங்கள் மேற்கண்ட காலத்தில் உருவானதுதான். இந்திய தேசிய போராட்டத்தின் துவக்கமும் 1885இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியோடு பொதுவாக இணைத்து பார்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய அளவிலான ஒரு இயக்கம் உருவானதற்கு பல அரசியல் சமுதாய கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. பற்பல காரணங்கள் இருப்பினும் இந்த கட்டுரையின் நோக்கம் இந்திய சுதந்திர போராட்டத்தின் வர்க்கத் தன்மையை ஆராய்வதாகும்.
சுதேசி முழக்கம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்வி முறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஆங்கில கல்வி அறிவை பெற்று இருந்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த ராஜதானி தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதற்கான பிரதான காரணம்.
அக்காலம் இந்திய முதலாளித்துவம் வலுபெறாத காலம். இந்திய முதலாளிகள் தன்னைத்தானே ஒரு வர்க்கமாக திரள வேண்டும் என்ற ஒரு யோசனை உருவான காலம். வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறுகையில் ”1860களில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு ஆங்கிலேய முதலாளிகளுக்கு தங்கள் வியாபாரத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்தவர்கள்தான் அப்போது இருந்த இந்திய முதலாளிகள். 1920கள் வரை இந்திய முதலாளி வர்க்கம் பெரும்பாலும் தரகு முதலாளிகளாகதான் இருந்தார்கள். 1905ல்தான் முதன்முதலாக சுதேசி இயக்கம் வங்காளத்தில் நடைபெற்றபோது வெள்ளையர் பொருட்கள் புறக்கணிப்பு, இந்தியப் பொருட்கள், இந்திய கல்வி, இந்திய வியாபாரம் போன்ற முழக்கங்கள் ஒலித்தன. அப்போதுதான் இந்திய முதலாளிகள் முதல்முறையாக சுய உற்பத்தியினால் லாபம் கண்டனர்” என்கிறார்.
போராட்டமும் சமரசமும்
”1914-1947 வரையிலான காலகட்டத்தில் இந்திய முதலாளித்துவம் ஆங்கிலேய வியாபாரத்தோடு போட்டி போட்டு வளர்ந்த காலம்” என்கிறார் பிபின்சந்திரா. “இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் இந்திய நிறுவனங்கள் 72-73% உள்நாட்டு சந்தையை பிடித்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வங்கித்துறையில் 80% மேலான வைப்பு வைத்திருந்தார்கள்” என்றும் அவர் கூறுகிறார். “1920களின் நடுப்பகுதியில் முதலாளிகள் தங்களுடைய நீண்டகால வர்க்க நலனை சரியாக யூகித்து, தைரியமாகவும் வெளிப்படையாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார்கள்” என்றும் கூறுகிறார்.
இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், தங்களின் வர்க்க நலனை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவர்கள் முடிந்த அளவிற்கு அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில்தான் போராட்டம் நடத்த விரும்பினார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்களுக்கு மேல் நீடித்தால், புரட்சிகர சக்திகள் இயக்கத்தை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சமும், நீண்டநாள் இயக்கம் தொடர்ந்தால் அவர்களுடைய தினசரி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அதற்கான காரணமாகும். இவை அவர்களின் வர்க்க நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணினர். ஒரு பக்கம் இத்தகைய தயக்கங்கள் இருந்தாலும், பெருந்திரள் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் பொழுது அவர்கள் தங்களுடைய வர்க்க பலன்களை அடைவதில் குறியாக இருந்தார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்கள் நீடிக்கும் சூழல் வரும்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். அவர்கள் வர்க்கம் சார்ந்த ஸ்தூலமான சலுகைகளை பேச்சுவார்த்தையின்போது பெற முயன்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறினால் போராட்டத்தில் சமரசம் ஏற்படும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று மிரட்டலும் விடுத்தனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கு பக்கபலமாக நின்றது காங்கிரசும் காந்தியும்தான்.
1931இல் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவி போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய முதலாளிகளின் பிரதிநிதியான ஜி.டி. பிர்லா, இன்னொரு முதலாளிகளின் பிரதிநிதியான புருஷோத்தம் தாஸ்க்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “எள்ளளவும் சந்தேகமில்லை நமக்கு இப்பொழுது தரப்படும் சலுகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க காந்திஜியால்தான்…. நாம் விரும்புவதை அடைய வேண்டுமென்றால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கம் சோர்வடைய விடக்கூடாது”. என்று குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்டுகளின் போராட்ட யுக்தி
உலகமெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாடுகளிலெல்லாம், 1917இல் தோழர் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. இந்தியாவிலும் ரஷ்ய புரட்சியின் கருத்தோட்டங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு ரஷ்யப் புரட்சி உத்வேகம் அளித்தது. தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாயிற்று. நாடெங்கும் கட்சி கிளைகள் உருவாயின. கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு வெகுஜனங்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கண்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கம் பொதுவெளியில் மட்டும் அல்லாமல், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயும் வலுவடைந்தது. இளம் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிய சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். முதல்முறையாக அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பும், தொழிற்சங்கங்களும் உருவாகின. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்படி, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்திற்கு உள்ளேயே இருந்து செயல்பட்டனர். இப்படியான ஒரு அரசியல் சூழல் குறித்து இந்திய முதலாளி வர்க்கம் அச்சம் கொண்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், காலனிய நாடுகள் குறித்த ஆரம்ப ஆய்வு அறிக்கையில் (Preliminary theses on the national colonial question) கீழ்காணும் அம்சங்களை தோழர் லெனின் சுட்டிக்காட்டினார்.
காலனிய நாடுகளில் நடைபெறும் தேசிய போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாக மட்டும்தான் இருக்க முடியும். ஏனெனில், பின்தங்கிய நாடுகளில் பெரும்பகுதி மக்கள் பூர்ஷ்வா முதலாளித்துவ உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளே. மேலும், பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளி வர்க்கம், தேசியப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதேசமயம், அந்த வர்க்கம் அந்நிய முதலாளிகளுடனும் நல்லிணக்கத்தோடு செயல்படுகின்றன. அதாவது புரட்சிகர இயக்கங்களும், புரட்சிகர வர்க்கங்களும் வலுவடையும்போது உள்நாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் லெனின் எச்சரித்தார்.
ஆகவே, முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளே புரட்சிகர சக்திகளையும் சீர்திருத்தவாதிகளையும் வேறுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய முதலாளிகளுக்கு அவர்களின் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்கிற வகையில், காலனிய நாடுகளின் முதலாளித்துவ விடுதலைப் போராட்டங்களை புரட்சிகரமானதாக உள்ளவரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின். விவசாயிகளையும் பெரும்பாலான உழைப்பாளி மக்களையும் முதலாளிகள் தலைமையிலான விடுதலை போராட்டங்களில் திரட்டும்போது முட்டுக்கட்டைகள் உருவாக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளேயிருந்து கட்சி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும், கட்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இரண்டாவது அகிலம் வழிகாட்டியது. இதனடிப்படையில்தான் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளே இருந்து செயல்பட்டனர்.
முதலாளிகளுக்கு சாதகமான செயல்திட்டம்
”1920களின் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடு, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் ஈர்க்கப்படும் காங்கிரசின் இளம் ஊழியர்கள், இவைகளை கண்டு முதலாளிகள் கவலை அடைந்தனர். எனவே, காங்கிரஸ் இயக்கத்திற்குள் தங்களையும் பெருமளவில் உறுப்பினர்களாக இணைக்துக் கொள்வதென அவர்கள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பல முதலாளிகள் காங்கிரசில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்” என்கிறார் பிபன் சந்திரா.
”காந்தி எந்த ஒரு போராட்டம் அறிவித்தாலும், இயக்கத்தின் தலைமை மற்றும் போக்கு குறித்து மிக கவனமாக இருப்பார். 1920இல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார். தொழிலாளர்களும் பெருமளவில் பங்கெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் ஆங்கிலேய தொழிற்சாலைகளுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக இருக்கும் வரை கவலை கொள்ளமாட்டார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் இந்திய முதலாளிகளுக்கு எதிராக நடக்கும்போது, உடனடியாக ஏதாவது காரணத்தை காட்டி போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார். இதுதான் 1921இல் பம்பாய் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தின்போதும் நடந்தது. எனவே, காந்தியினுடைய போராட்ட வடிவமும், நிலைபாடும் இந்திய முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால்தான் தேசிய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் காங்கிரஸ் இயக்கத்தோடு காந்தியோடு எந்தவிதமான தத்துவார்த்த ரீதியான, செயல்பாட்டு ரீதியான பிரச்சினையையும் இருந்ததில்லை. அப்படியே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ளேயே விவாதித்து தனக்கு சாதகமான முடிவை எடுக்கும் அளவிற்கு முதலாளிகள் வலுவாக இருந்தனர். காந்தியின் வருகைக்குப் பிறகு தேசியப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவானது. ஆனால், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம், அதை வழிநடத்திய நுண்ணறிவு உள்ளவர்களின் சிந்தனையோட்டமும் குணாம்சமும் முதலாளித்துவத்திற்கு சாதகமாகவே இருந்தது” என்கிறார் பேராசிரியர் இர்பான் அபிப்.
முற்போக்கு பாதையை தடுத்த சமரசம்
தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல, இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும். இ.எம்.எஸ். கூறுகிறார், “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை பூர்சுவா தேசியவாதிகளாக இருந்தமையால் அவர்களால் அவர்களின் வர்க்க நலனை மீறி பார்க்க இயலவில்லை. இத்தகைய நிலைப்பாடு அவர்களின் சமுதாய பொருளாதார தத்துவங்களை வழி நடத்தியது. சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணுவதில் திறன் அற்றவர்களாக இருந்ததுதான் இந்தியாவின் தேசிய பிரச்சினைகளுக்கு காரணம்.”
இ.எம்.எஸ். சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களின் சமுதாய சிந்தனையை மேலும் விளக்குகிறார். “சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.
மேலும் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிரவாத தேசியவாதிகளுக்குமான வேறுபாட்டையும் சமூக கலாச்சார சிந்தனைப் போக்கையும் அவர் விளக்குகிறார். மிதவாதிகளை நவீனத்துவவாதிகள் என்றும், அவர்கள் இந்தியாவையும் பிரிட்டன் நாட்டைப்போல ஒரு முதலாளித்துவ நவீனத்துவப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஆங்கிலேயர்கள் அதை செய்ய தவறுவதன் மீதே அவர்களது கோபமிருந்தது. தீவிரவாத தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் மிதவாதிகள் சமுதாய கலாச்சார அம்சத்தில் முற்போக்கானவர்களே. தீவிரவாத தேசியவாதிகள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை அன்னிய முதலாளித்துவத்திற்கு எதிராக பாதுகாத்தனர். தேசியப் போராட்டம் இந்த தீவிரவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்டதால், பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் “தங்களது காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திய முதலாளிகளோ முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வரவில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும். இன்றைய இந்திய சமூகமானது, ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஒரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித்துவதிற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்பு கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி, அந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது.” என்கிறது.
Leave a Reply