மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சொல்லகராதி: அறுதி உபரி மதிப்பு சார்பு உபரி மதிப்பு


குரல்: தேவிபிரியா

கே.சுவாமிநாதன்

உபரி மதிப்பு எவ்வாறு உருவாகிறது, அது மூலதனக் குவியலுக்கு வழி வகுக்கிறது என்பதை கடந்த மாதங்களில் இப் பகுதியில் கண்டோம். முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உபரி மதிப்பின் விகிதத்தையும், அதன் குவிப்பையும் அதிகரிப்பதற்கான தொடர்ந்த முனைப்பு இருந்து கொண்டே இருக்கும். உபரி மதிப்பு அதிகரிப்பை அது இரண்டு வழிகளில் செய்யும். ஒன்று அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus Value). இன்னொன்று சார்பு உபரி மதிப்பு ( Relative Surplus Value).

அறுதி உபரி மதிப்பு என்றால் என்ன?

வேலை நாளை நீட்டிப்பதன் மூலமாக முதலாளித்துவம் உபரி மதிப்பை குவிப்பது ஒரு வழி. இவ்வாறு குவிக்கப்படும் உபரி மதிப்பையே அறுதி உபரி மதிப்பு (Absolute Surplus) என்கிறோம். தற்போது கூட இந்தியாவின் பல மாநில அரசுகள் 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேர வேலை நாளாக அதிகரிக்கிற முடிவை மேற்கொண்டன. உதாரணத்திற்கு தொழிலாளரின் அவசிய சமுக உழைப்பு நேரம் 4 மணி என்றால் 8 மணி வேலை நாளில் தொழிலாளர் 4 மணி நேரம் கூலி உழைப்பையும் 4 மணி நேரம் உபரி உழைப்பையும் வழங்குகிறார் என்று அர்த்தம்.

எளிமையாக சொல்வதானால் 4 மணி நேரம் தனக்காகவும், 4 மணி நேரம் முதலாளிக்காகவும் வேலை பார்க்கிறார். இப்போது வேலை நாள் 12 மணியாக நீட்டிக்கப்பட்டால். தனக்காக உழைக்கிற 4 மணிக்கும் மேலாக 8 மணி நேரம் முதலாளிக்காக உழைத்து கூடுதல் உபரி மதிப்பை உருவாக்கித் தருகிறார் என்பதே பொருள்.

8 மணி நேர வேலையை விட 12 மணி நேர வேலைக்கு அதிக கூலி கிடைக்குமே என்று அப்பாவித்தனமாக தொழிலாளர்கள் நினைக்கக் கூடும். இதுவே முதலாளித்துவவாதிகளின் பசப்புமாகும். ஆனால் உண்மை என்ன? போதுமான ஓய்வும் பொழுது போக்கும் இல்லாத வாழ்க்கை, தொழிலாளர் உடல் நலத்தின் மீது உயிர் வாழும் காலத்தின் மீது, அவர் குடும்பத்தின் மீது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? இந்த விவாதம் புதிதல்ல. காரல் மார்க்ஸ் “கூலி விலை லாபம்” நூலில் (1865 ல் நிகழ்த்திய உரை) அவர் பேசுகிறார்.

வேலை நாளை நீட்டி முதலாளிகள் கூடுதல் கூலி கொடுத்த போதும்…. பிழிந்தெடுக்கப்படும் கூடுதல் உழைப்பின் அளவிற்கும் அதனால் உழைப்பு சக்திக்கு (தொழிலாளிக்கு) ஏற்படும் சேதாரத்திற்கும் ஈடாக கூலி உயர்தில்லை. முதலாளித்துவ புள்ளியியல் நிபுணர்கள், லங்காசயர் ஆலைகளில் தொழிலாளர்கள் குடும்பங்களில் சராசரிக் கூலி உயர்ந்து விட்டது என்று உங்களுக்கு கூறுவார்கள். ஆனால் குடும்பத் தலைவனான ஆடவன் மட்டுமின்றி அவனுடைய துணைவி, மூன்று அல்லது நான்கு குழந்தைகளும் கூட இப்போது மூலதனத்தின் தேர்ச் சக்கரங்களுக்கு அடியில் எறியப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், மொத்தக் கூலி உயர்வு அந்த குடும்பத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட மொத்த உபரி உழைப்பிற்கு ஈடாகவில்லை என்பதையும் அவர்கள் மறந்து விட்டார்கள்” என்று வேலை நாள் நீட்டிப்பால் அறுதி உபரி மதிப்பை அதிகரிக்கும் சுரண்டலை இவ்வாறு விவரிக்கிறார்

மார்க்ஸ்.

சார்பு உபரி மதிப்பு” என்றால் என்ன?

இயந்திரங்களின் பயன்பாட்டை, தொழில் நுட்ப மேம்பாட்டை உற்பத்தியில் ஈடுபடுத்தும் போது உபரி மதிப்பின் விகிதமும், குவிப்பும் அதிகரிக்கும். இதுவே சார்பு உபரி மதிப்பு” எனப்படுகிறது. மேலே சொன்ன உதாரணத்தின்படி தொழிலாளி 4 மணி நேரம் தனக்காகவும், 4 மணி நேரம் முதலாளிக்காகவும் வேலை பார்க்கிறார். இப்போது இயந்திர பயன்பாடு அதிகரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தனது உழைப்பு சக்தியை மீண்டும் மறு உற்பத்தி செய்து கொள்வதற்கான “அவசிய சமூக உழைப்பு நேரம்” 3 மணி நேரமாக குறைந்து விடும். அதாவது 3 மணி நேரத்திற்குள்ளாகவே அவர் உயிர் வாழ, உடல் நிலையை பராமரிக்க, குடும்பத்தையும் பராமரிப்பதற்கானவையின் மதிப்பிற்கு ஈடானதை 3 மணி நேரத்திலேயே உற்பத்தி செய்து விடுகிறார். ஆகவே முன்பு 4 மணி நேரமாக இருந்த கூலி உழைப்பு தற்போது 3 மணி நேரமாகக் குறைந்து விடுகிறது. முதலாளிக்கான உபரி உழைப்பு 4 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம் ஆக உயர்ந்து விடுகிறது. இவ்வாறு அதிகரிக்கும் உபரி மதிப்பின் விகிதமும், குவிப்புமே சார்பு உபரி மதிப்பு எனப்படுகிறது.

இயந்திர பயன்பாட்டிற்கான முனைப்பு முதலாளித்துவத்தின் இயல்பு என்பதை “கூலி உழைப்பும் மூலதனமும்” நூலில் (1849) காரல் மார்க்ஸ் விவரிக்கிறார்.  “மூலதனங்களது எண்ணிக்கை பெருக்கம் முதலாளிகளிடையே போட்டிகளை அதிகரிக்கிறது… பிரம்மாண்டமான போர்க் கருவிகள் கொண்டு வலிமை வாய்ந்த உழைப்பு சேனைகளைத் தொழில் போர்க் களத்தில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளையும் அளித்திடுகிறது.”  இது பெரு விகித உற்பத்திக்கு வழி வகுக்கிறது. உபரி மதிப்பை இடையறாது குவித்துக் கொண்டே போகிறது. உழைப்பின் உற்பத்தி திறனை தீவிரமாக்கிச் செல்லும்படி மூலதனத்தை பலவந்தம் செய்கிறது… இந்த விதிதான் மூலதனத்திற்கு சற்றும் ஓய்வு அளிக்காமல் இன்னும் போ! இன்னும் போ! என்று விடாமல் அதன் செவிகளுக்குள் கூறி உசுப்பிய வண்ணம் உள்ளது.” என்கிறார் மார்க்ஸ். இன்றைய செயற்கை அறிவூட்டல் (AI- Artificial Intelligence), பெருந்தரவு (Big data) போன்ற நவீன தொழில் நுட்ப பரவல் யுகத்தில் சார்பு உபரி மதிப்பு” மூலதனம் மையமாதலுக்கும் குவிவதற்கும் பெருமளவு வழி வகுக்கிறது. ஒரே நேரத்தில் வேலை நாள் நீட்டிப்பும், தொழில் நுட்ப மேம்பாடும் கட்டவிழ்த்து விடப்படுவது இப்போக்கை மேலும் விரைவாக்குகிறது.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: