இன்றைக்கும் வெளிச்சம் தரும் வள்ளலார் ஏற்றிய விளக்கு


மதுக்கூர் இராமலிங்கம்

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே…“

என்ற இந்தக் குரல் ஒரு நாத்திகருக்குச் சொந்தமானது அல்ல. வள்ளலார் என்று தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படுகிற இராமலிங்க அடிகளாருக்கு சொந்தமானது.

நான்கு வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட பழய சமூக அமைப்பை இந்த நவீன யுகத்திலும் கைவிட ஆர்எஸ்எஸ் பரிவாரம் தயாராக இல்லை. மதச்சார்பற்ற, அரசியல் சட்டத்தின் இடத்தில் மநு நூலை வைக்கத் துடிக்கின்றனர். வரலாற்றுச் சக்கரத்தை பின்னுக்குத் தள்ளி வேதகாலத்திற்கு கொண்டு போய் விட முடியுமா என்று முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ‘நான்கு வர்ணங்களும் நால்வகை ஆசிரமங்களும் ஆசாரங்களும் இவை சொன்ன சாத்திர சரிதங்களும்’ வெறும் பிள்ளை விளையாட்டு என்று எள்ளி நகையாடியவர் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ராமலிங்க அடிகளார்.

1823 ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள மருதூர் என்ற சிற்றூரில் அவர் பிறந்தார். அடுத்த ஆண்டு அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. 1858 ஆம் ஆண்டு வரை சென்னையில் குடியிருந்திருக்கிறார்.  மொத்தம் 50 ஆண்டுகள் 9 மாதங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய வாழ்க்கை குறித்து பல்வேறு புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த புனைவுத் திரைகளை நீக்கிப் பார்த்தால்தான் வள்ளலார் என்கிற சமூக சீர்திருத்தவாதியை புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த போது தேவர்கள் பூமாரி பொழிந்தனர் என்பதில் துவங்கி சிதம்பரம் கோவிலுக்கு குழந்தையை தூக்கிச் சென்றபோது, சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கண்டு அந்தக் குழந்தை சிரித்தது. அங்கிருந்த தீட்சிதர், இது அம்பலவாணரின் அருட்குழந்தை என வாழ்த்தினார் என விரிந்து தண்ணீரால் விளக்கு எரித்தார் என்றெல்லாம் சென்று, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் அவருக்கிருந்தது என்றெல்லாம் பல கதைகள் இருக்கின்றன. இத்தகைய கதைகளை அவரே விரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவர் செய்ய விரும்பிய பணிகளுக்கு இவையெல்லாம் பெரும் இடையூறாக இருந்ததும் தெரிய வருகிறது.

இயற்கைக்கு மேலானது எதுவுமில்லை

வள்ளலாரின் தலைமைச் சீடரான தொழுவூர் வேலாயுத முதலியார், பிரம்ம ஞான சபையினருக்கு அளித்த வாக்குமூலத்தில், ‘அவர் சாதி வேற்றுமைகளை கண்டித்து பேசியதால், அனைவரது பெரும் பாராட்டுக்குரியவராக இல்லை. . ஆயினும், எல்லா சாதியாரும் பெருந்திரளாக அவரை சூழ்ந்திருந்தனர். உபதேசங்களை கேட்டு . பயன்பெற அவர்கள் வரவில. சித்தாடல்களை கண்டுகளிக்கவும் அவற்றின் பயனைப் பெறவுமே வந்தனர். சித்தாடல்களில் அவர் வல்லவர். இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவது இல்லை. தமது மார்க்கம் தூய அறிவியலையே அடிப்படையாகக் கொண்டது என்று இடையறாது வலியுறுத்துவார்’ என்று கூறியுள்ளது மனங்கொள்ளத்தக்கது.

மேலும், வள்ளலார் இறந்தவர்களை குறிப்பிட்ட நாளில் பிழைக்க வைக்கவிருப்பதாக வதந்தி பரவ, அதை அவரே மறுத்து, அவ்வாறு எதுவும் நடக்காது, யாரும் வந்து ஏமாற வேண்டாம் என்று பொது அறிவிப்பாக நோட்டீஸ் அடித்து வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில் சித்த மருத்துவம் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தியுள்ள அவர், அதைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்துள்ளார்.

வள்ளலார் உருவானதன் காலப் பின்னணியை புரிந்து கொள்வது அவரைப் புரிந்து கொள்ள உதவும். அந்நிய ஆட்சி, கிறிஸ்துவ போதகர்களின் தொண்டு போன்றவை நிலவுடமை சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை என்ற போதும் , ஒரு சில அதிர்வுகளை  எழுப்பத் துவங்கியிருந்தது. தமிழகத்தின் தென்கோடியில் வைகுண்ட சுவாமிகள் புறப்பட்டு, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த மக்களை குறிப்பாக நாடார் சமூக மக்களை தட்டி எழுப்பினார். சென்னையில் பிரம்ம சமாஜத்தின் கிளை உருவாக்கப்பட்டிருந்தது.

சென்னை மாகாணத்தில் 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் உருவான ஏழு கடுமையான பஞ்சங்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதே நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான 24 பஞ்சங்களில் 2 கோடி மக்கள் இறந்தனர். இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் படும் பாட்டை காணச் சகியாமல் சென்னையை விட்டு அவர் வெளியேறியதாக ஒரு குறிப்பு உண்டு. “தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே” என்று அவரே பாடியிருக்கிறார். ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று அவர் பாடியது பஞ்சத்தை, பசியை சகிக்காமல்தான்.

அவர் வாழ்ந்த காலம் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாக வளராத காலம். அவரது மறைவுக்குப் பிறகுதான் காங்கிரஸ் இயக்கம் உருவானது. எனினும், தன்னுடைய பாடலில் ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக, அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க – தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து’ என்று பாடியுள்ளார்.

பழமைவாதங்களை எதிர்த்த கிளர்ச்சியாளர்

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நவீன கல்வி முறை பரவியதால், நவீன சிந்தனையோட்டமும் வளரத் துவங்கியது. அறிவியல் கண்ணோட்டமும் அறிமுகமாகியது. இதன் விளைவாக சமூக சீர்திருத்த இயக்கங்களும் உருவாகத் துவங்கின. துவக்கத்தில் வள்ளலார் பக்திப் பனுவல்கள் எழுதும் பக்தி நெறிப் புலவராகவே இருந்திருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் சிவனை, முருகனை பாடும் பக்திப் பாடல்களாகவே இருக்கின்றன. திருவருட்பாவின் ஐந்தாம் திருமுறையில் காணப்படும் சில பாடல்களும், ஆறாம் திருமுறையும் வள்ளலார் என்கிற சமூக சீர்திருத்தவாதியை, உலக உயிர்களிடத்து எல்லாம் இரக்கம் காட்டுகிற, அன்பு கொள்கிற, ஆன்ம நேய ஒருமைப்பாட்டாளரை,  சாதி, மதங்களுக்கு எதிராகவும் வர்ண முறைக்கு எதிராகவும் ஆச்சாரங்களுக்கு எதிராகவும் பெரும் குரலெடுத்துப் பேசுகிற கிளர்ச்சியாளரை அடையாளம் காட்டுகிறது.

செய்யுளை கவிதையாக்கிய முன்னோடிகளில் ஒருவர் வள்ளலார். இந்த வகையில் பாரதியாருக்கு முன்னோடியாக அமைந்தவர் இவர். கருத்துக்களில் மட்டுமல்ல, கவிதையிலும் வள்ளலாரை பாரதியார் தன்னுடைய முன்னோடியாக கொண்டுள்ளார். ‘ஒழிவிலொடுக்கம்’ உள்ளிட்ட நூல்களை பதிப்பித்தவர். அவர் எழுதியுள்ள ‘மநு முறை கண்ட வாசகம்’ அற்புதமான உரைநடை நூல். இது அன்றைய சூழலில் ஒரு அரசியல் செயல்பாடு என்று அறிந்து கொண்டதால்தான், வள்ளலாரை எதிர்த்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ‘பெரியபுராண வசனம்’ எழுதினார் என்று முனைவர் வீ.அரசு கூறுவதை கருத்தில் கொள்ள வேண்டும். பண்டிதர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய செய்யுளிலிருந்து உரைநடைக்கு மாறுவதற்கு அச்சு எந்திரங்களின் வருகையும் ஒரு காரணமாக இருந்தது என்பதோடு, தன்னுடைய கருத்துக்களை வெகு மக்களின் மொழியில் பேசி அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கமும் வள்ளலாருக்கு இருந்திருக்க வேண்டும்.

மநு முறை கண்ட வாசகத்தில் வள்ளலார் எழுதியுள்ள சில வரிகள், அவருள் ஏற்பட்டிருந்த மாற்றத்தையும், மொழி அழகையும் புரிந்து கொள்ள உதவும். ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ.. குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ.. ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ… கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ… பட்சியை கூண்டில் பதைக்க அடைத்தேனோ… கன்றுக்கு பாலூட்டாது கட்டி வைத்தேனோ… கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ… வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்தேனோ… தந்தை-தாய் மொழியை தள்ளி நடந்தேனோ…’ என்று எழுதிச் செல்கிறார்.

கன்றை கொன்ற மனுநீதிச் சோழன் புலம்புவதாக அமைக்கப்பட்டுள்ள இந்த வரிகளின் வழியாக, அவர் வாழ்ந்த காலத்தின் சமூகக் கொடுமைகளை பட்டியலிடுகிறார். வரிக் கொடுமையிலிருந்து கலப்படம் வரை தாய் மொழியை தள்ளி வைப்பது வரை விரிவாக எடுத்துரைக்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலையும் எழுதியுள்ளார். கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் மொழிப் பற்று

வள்ளலார் தன்னுடைய தாய்மொழியான தமிழ்மொழி மீது தாளாத பற்று கொண்டிருந்தார். அவர் சமஸ்கிருதத்தை கற்று வேதங்களையும் படித்திருந்தார். ஆனால், வேதம் அவருக்கு உவப்பானதாக இல்லை.

‘இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகிற, ஆரிய, முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல ஒட்டாது. பயிலுதற்கு மறிதற்கும் மிகவும் மிலேசமுடையதாய்ப் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், சாகாக் கல்வியை லேசில் அறிவிப்பதாய் திருவருள் வலர்த்தாற் கிடைத்த தென்மொழி யொன்றி நடந்தே, மனம் பட்டச் செய்து அததென் மொழிகளாற் பலவகை தோத்திரப் பாட்டுகளை பாடுவித்து அருளினீர்’ என்று இறைவனிடத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

இராமலிங்க அடிகளார் சென்னையில் இருந்த போது சங்கராச்சாரியாரை சந்தித்திருக்கிறார். அப்போது சங்கராச்சாரியார் சமஸ்கிருதமே மாத்ரு பாஷை. அதாவது, அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று கூற, அதை மறுத்த வள்ளலார், ‘தமிழ் பித்ரு பாஷை’ என்று மறுத்து வாதிட்டுள்ளார். மேலும், தமிழ் என்ற பெயருக்கு விரிவான விளக்க உரையும் எழுதியுள்ளார். 

தமிழ் நூல்களை பதிப்பித்ததன் மூலமும், மொழியை எளிமையாக்கி எல்லோருக்கும் கொண்டு செல்ல முயன்றதாலும் சில நூல்களுக்கு உரை எழுதியதாலும் அவருடைய தமிழ்த் தொண்டு என்றென்றும் நினைக்கப்படும்.

சாத்திரக் குப்பை

சாதி, சமயங்களை சாடுவதில், வள்ளலார் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளை தொட்டிருக்கிறார். இவருக்கு முன்னோடியாக சித்தர்களின் குரல் தமிழகத்தில் ஒலித்திருக்கிறது. பக்தி இயக்க காலத்தில் புத்த, சமண மதங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. பேரரசுகள் இதற்கு துணை நின்றன. சாதி, வர்ண, ஆசிரம முறைக்கு எதிராக சித்தர்களின் பாடல்கள் வெடித்தெழுந்தன.

‘சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்’ என்று பற்ற வைத்தார் பாம்பாட்டி சித்தர். தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை, தேவாரம் ஏதுக்கடி, குதம்பாய்-தேவாரம் ஏதுக்கடி?’ என்றார் குதம்பைச் சித்தர்.

துவக்கத்தில் தன்னை ஒரு பக்திப் பாடகராகவே பாவித்துக் கொண்ட வள்ளலார் பலநூறு பாடல்களை கோவில்கள் தோறும் சென்று பாடினார். ஆனால், ஆறாம் திருமுறையில் அவர் எழுதியுள்ள பாடல்கள் வெடிகுண்டுகளைப் போல வைதீக உலகை தாக்கின.

‘வேதாக மங்களென்று
வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின்
விளைவறியீர் – சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி
தோன்ற உரைக்கவில்லை
என்ன பயனோ
இவை’

என்று பாடிய வள்ளலார், ‘சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன், சாத்திரக் குப்பையும் தணந்தேன்’ என்று விலகி நிற்கிறார். ‘அறிவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்துஆள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதியே’ என்று பாடிக் கொண்டிருந்தால் வைதீகர்களுக்கும் வள்ளலாருக்கும் மோதல் வந்திருக்கப் போவதில்லை. ஆனால் இவரோ அத்தனையையும் கொட்டிக் கவிழ்த்தார். அத்தனையும் பிள்ளை விளையாட்டு என்றார்.

அவரது இறுதிக் காலத்தில் கூறப்பட்டு பேருபதேசம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ள உரையில், ‘சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக் குறியாக குறித்திருக்கிறதேயன்றி புறங்கவியச் சொல்லவில்லை. நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படி போய்விட்டது பார்த்தீர்களா? ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது’ என்கிறார்.

இது வள்ளலார் சொன்னதே அல்ல, என்று சொல்லிப் பார்த்தார்கள். அது நிரூபிக்கப்பட்ட நிலையில், வள்ளலாருக்கு எதிராக கடுமையான அவதூறுகளை வைதீகர்கள் கிளப்பிவிட்டனர். ஒரு பெரும்படையே புறப்பட்டு அவருக்கு எதிராக செயல்பட்டது. அன்றைய தஞ்சை, தென்னாற்காடு மாவட்டங்களில் பெரும் நிலங்களை குவித்து வைத்திருந்த சைவ மடங்கள் வள்ளலாருக்கு எதிரான செயல்களுக்கு பின்னணியாக இருந்தன.

அருட்பா – மருட்பா

வள்ளலார் தன்னுடைய பாடல்களை தொகுத்து வெளியிடுவதையே விரும்பவில்லை. அவருடைய சீடர்கள் உண்ணாவிரதம் இருப்போம் என்று கூறிய பிறகுதான் அதற்கு அவர் இசைந்தார். திருஅருட்பா என்ற பெயரை வைக்கவும் இல்லை. சீடர்கள்தான் வைத்தனர். ஆனால் வள்ளலார் முழுமையாக கிளர்ச்சிக்காரராக வெளிப்பட்ட ஆறாம் திருமுறை பாடல்கள் வெளிவருவதை அவருடைய சீடர்கள் பலரே விரும்பவில்லை. தன்னுடைய கையொப்பத்தைக் கூட சிதம்பரம் இராமலிங்கம் என்றே போட்டிருக்கிறார். ஆனால், தேவாரம், திருவாசகம் மட்டும்தான், அருட்பா; இராமலிங்கரின் பாட்டு வெறும் மருட்பா என்று அவர் இருந்தபோதும், அவருடைய மறைவுக்குப் பிறகும் பெரும் விவாதங்கள், வழக்குகள் நடந்தன. அவர் மறைவுக்குப் பிறகு நடந்த அருட்பா, மருட்பா விவாதத்தில் பெரும் புலவரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர் பல இடங்களுக்குச் சென்று இது அருட்பாதான் என்று வாதிட்டுள்ளார். இவர், ஒரு இஸ்லாமியர் என்பது கருத்தில் கொள்ள வேண்டியது.

வள்ளலார் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளார். இந்த செயல்பாட்டின் காரணமாகவே சீர்திருத்த மரபில் அவர் தனித்து கவனிக்கப்பட்டவராக இருக்கிறார். 1865 ல் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை அவர் உருவாக்கினார். இதில் உள்ள வேதம் என்ற சொல் யசூர், சாம, அதர்வண வேதங்களை நினைவுபடுத்தும் என்பதால் பின்னர் தனது சங்கத்தின் பெயரை 1872 இல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று மாற்றினார். தாம் கூறும் சமரச வேதம் சமயம் கடந்தது. சமயாதீனமானது. எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவானது என்று விளக்குகிறார். சங்கத்தை உருவாக்குவதற்கு முன்பே பசிப் பிணி அகற்ற அன்ன சாலையை 1867லிலேயே அவர் உருவாக்கியிருந்தார். அந்த சபை சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மசாலை என்று அழைக்கப்பட வேண்டும் என்று வள்ளலார் கூறியுள்ளார். அவர் உருவாக்கிய சத்திய தர்மசாலை இன்றளவும் செயல்பட்டு வருகிறது. அவர் மூட்டிய அணையா அடுப்பு இன்றளவும் எரிந்து வருகிறது.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய தருமச் சாலை, சத்திய ஞானச் சபை மற்றும் சித்தி விளாகம் என்ற நான்கு அமைப்புகளை வள்ளலார் உருவாக்கினார். முதல் மூன்றும் வடலூரிலும், சித்தி விளாகம் மேட்டுக்குப்பத்திலும் அமைந்தன. 

புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த சங்கத்திற்கு பிறகு சமயத்திற்கு என்று உருவாக்கப்பட்ட சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சங்கமே ஆகும். வள்ளலார் துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த போதும், சைவ மடங்களை தேடிச் சென்று மடாதிபதிகளால் தீட்சை பெற்றுக் கொண்டவர் அல்ல. காவி உடையை மறுத்து வெள்ளாடை மட்டுமே அணிந்தார். சைவர்கள் சைவ சாத்திரங்களைத் தவிர பிற தமிழ் இலக்கியங்களை கற்கக் கூடாது என்று சைவ மடங்கள் கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், திருக்குறளையும் மக்களுக்கு கற்பித்தார்.

அவர் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தில் விக்கிரகம் எதுவும் இருக்கக் கூடாது என்றும் ஜோதி வழிபாடு மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அந்த விளக்குக் கூட தகரத்தினால் அமைக்கப்பட வேண்டும் என்றும் நிரந்தரமான பூசாரி யாரும் இருக்கக் கூடாது என்றும், வயதில் மிக இளையவர் அல்லது முதியவர் அன்றன்று ஜோதியை ஏற்ற வேண்டும் என்றும் வள்ளலார் வகுத்திருந்தார். அவர் காலத்திலேயே, சபையில் லிங்கம் வைத்து, விபூதி கொடுத்து சிலர் அதை ஒரு கோவில் போல உருவாக்க முயன்ற நிலையில், சபையினை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதத்திற்கும் வன்முறைக்கும் இடமில்லை

வடலூரில் சத்திய ஞான சபையை இந்து சமய அறநிலையத்துறை பின்னாளில் ஏற்றுக் கொண்டது. அங்கு ஜோதி வழிபாடு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்பு வள்ளலாரை புரிந்து கொள்ள உதவும். வள்ளலார் எழுதிய பாடல்களை படிக்கும்போது சிலை வழிபாட்டை அவர் நிராகரித்துள்ளார். ஜோதி வழிபாடு குறித்து கூறியுள்ளார். இங்கு மதத்துக்கு இடமில்லை. மனிதகுலத்துக்குத்தான் இடம் உள்ளது என்று கூறியுள்ளார். வன்முறைக்கு இடமில்லை என்று ஜீவகாருண்யத்தை குறிப்பிட்டுள்ளார். சைவம், வைணவம், சித்தாந்தம், வேதாந்தம் இவற்றில் தன்னுடைய சீடர்கள் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதே வள்ளலார் கருத்து என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்த அன்றைய சூழலில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்த கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் தங்கி படிப்பது சமண சமய வழக்கமாகும். இதை மீண்டும் கொண்டு வர வள்ளலார் முயன்றார். பெண்களுக்கு தொழில் கல்வியும், ஆன்மீகக் கல்வியும், யோகம், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் கற்பிக்கப்பட வேண்டும் என்றார். சன்மார்க்க நெறியில் பெண்களும் ஈடுபடும் உரிமை உண்டு என்றார்.

கணவன் இறந்த பின்பு, பெண்களுக்கு தாலி வாங்க வேண்டா என்று கூறுவதன் மூலம் பெண்கள் விதவை கோலம் பூணுவதை தடுத்தார். இதன் மூலம் விதவை திருமணத்தை அவர் ஆதரித்தார் என்று கருத இடம் உண்டு.

தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை உருவாக்கியவரும் அவரே ஆவார். தாம் உருவாக்கிய பாடசாலையில் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்றார்.

புத்த மதத்தில் நாகார்ஜூனர் என்பவர் உள் நுழைந்து மகாயானம் என்ற பிரிவை உருவாக்கி இந்து மதத்தின் சாயலில் புத்த மதத்தை உருமாற்றம் செய்தது போல, வள்ளலாரிடம் சீடராக வந்து சேர்ந்த உமாபதி சிவாச்சாரியார் என்பவர் துவக்கத்தில், வள்ளலார் வழி நிற்பவர் போல காட்டிக் கொண்டு, வள்ளலார் மறைவுக்குப் பிறகு வள்ளலார் உருவாக்கிய வழிபாட்டுத் தலத்தை, லிங்கத்தை வைத்து வழக்கமான சிவாலயமாகவே மாற்றிவிட்டார். பூசாரித்தனமும் வசூலும் நடந்தன. மீண்டும் ஜோதி வழிபாட்டை நடத்த பெரும் போராட்டம் நடந்துள்ளது.

வள்ளலார் ஜீவகாருண்யம் என்ற பெயரில் மாமிச உணவு மறுப்பை கடுமையாக வலியுறுத்தியுள்ளார். இதனால் விளிம்பு நிலை மக்கள் அவருடைய இயக்கத்தினால் அதிகமாக ஈர்க்கப்படாமல் போயிருக்கலாம். அவருடைய சமூக சீர்திருத்த கருத்துக்கள் அவருடைய சீடர்களாலேயே தொடர்ந்து பின்பற்றப்படவில்லை. அவரும் ஒரு வழக்கமான சாமியார் போலவே சித்தரிக்கப்பட்டுவிட்டார்.

சைவ சமயம் உட்பட அனைத்தையும் அவர் நிராகரித்த நிலையில், சைவ சமயத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாக அவருடைய இயக்கம் சுருக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலை சீர்திருத்த அவர் விரும்பினார். ஆனால், அந்தக் கோவிலில் நந்தனாருக்கு ஏற்பட்டதுபோல அவருக்கும் கசப்பான அவமானமே நேர்ந்தது. சிதம்பரத்திற்கு போட்டியாக வடலூர் வழிபாட்டுத் தலத்தை அவர் உருவாக்க விரும்பினார். ஆனால் அவர் காலத்திலேயே அவர் உருவாக்கிய நியதிகள் மீறப்பட்டது கண்டு ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என வெதும்பினார். அவருக்கு பின்பு அவருடைய சீடர்கள் அவருடைய சீர்திருத்த மரபை முன்னெடுத்துச் செல்லவில்லை. எனினும், பின்னாளில் பாரதியார், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகளின் முன்னோடியாக அவர் திகழ்ந்தார். அவருடைய சமூக, சீர்திருத்த கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து, மாயத்திரைகளை விலக்கி அவர் காண விரும்பிய  சமநீதி வெளிச்சத்தில் சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. 

மதவெறி மிகத் தீவிரமாக பரப்பப்படுகின்ற நிலையில், சித்தர்கள், இராமனுஜர், வைகுண்ட சுவாமிகள், வள்ளலார், நாராயண குரு, ஜோதிபாபூலே, அய்யங்காளி போன்ற சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை ஆழமாக புரிந்து கொண்டு, இந்துத்துவாவாதிகள் பேசுகிற ஆன்மீக அரசியலுக்கு மாற்றாக முற்போக்கு அம்சங்கள் கொண்ட சமய, சமூக சீர்திருத்த மரபை முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. வள்ளலார் அன்னதான பிரபுவாக மட்டுமே  குறுக்கப்பட்டுவிட்ட நிலையில், சாதி மறுப்பு, பெண்ணுரிமை, அனைவருக்கும் கல்வி, மூட நம்பிக்கை எதிர்ப்பு உள்ளிட்ட அவரது சிந்தனைகளை பரப்ப வேண்டியது அவசியம்.

மதவெறிக்கு எதிரான போர் அரசியல் தளத்தில் மட்டுமல்ல, தத்துவ தளத்திலும் நடைபெற வேண்டும். இதற்கு வள்ளலாரும் ஒரு ஆயுதமாக இருப்பார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s