என்.எல்.ஸ்ரீதரன்
நாட்டு மக்கள், சாதி மத பேதமின்றி, ஒன்றுபட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் தோழர் டி.லட்சுமணன். அவர் படித்து அரசுப்பணிக்கு வந்த காலகட்டம் விடுதலைப்போராட்ட கனவுகள் நிறைவேறாமல் மக்களிடையே அதிருப்தி நிலவிவந்த காலமாகும். அப்போது தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளும் பொதுவுடைமைக் கருத்துகளும் நாடகங்களிலும் சினிமாக்களிலும் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தன.இவைகளின் தாக்கம் துவக்க காலத்திலிருந்தே தோழர் DL இடம் இருந்துள்ளது. இதை அவரே அவருடன் அளவளாவிய காலங்களில்
உணர்வுபூர்வமாக தெரிவித்தள்ளார்.
சமூகத்தில் மக்கள் சாதி, மத பேதங்கள் இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்ந்தால்தான் அனைவரும் வாழ்வில் முன்னேற முடியும் என்கிற கருத்துக்களை அவர் அவருடைய சங்க நடவடிக்கைகளின் ஆரம்ப காலத்திலேயே வலியுறுத்தி வந்தார். தமிழக அரசு ஊழியர் இயக்கம் உயிர்ப்புடன் செயல்படாமல் அரசிடம்
பணிந்து கிடந்த காலத்தில், அரசு ஊழியர்களின் உண்மையான பிரதிநிதியாக
செயல்படக்கூடிய ஒரு உயிர்ப்புள்ள சங்கத்தை உருவாக்கிட செயலாற்றினார்.
அன்றைய காலத்தில் அரசு ஊழியர்களிடையே நிலவிவந்த சமூக ஒற்றுமைக்கெதிரான கருத்துக்களிலிருந்து அரசு ஊழியர்களை விடுவிக்க தொடர்ந்து அவர்களிடையே பேசியும் எழுதியும் போராடியும் வந்துள்ளார். அதில். அவர் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளார்.
அரசுப்பணியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவர் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு படிப்படியாக பல பொறுப்புகளில் இருந்த எல்லா காலங்களிலும் “மத நல்லிணக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம்” ஆகியவற்றை உயர்த்திப்
பிடிக்கவும் அவைகளுக்காக போராடவும் முன்னின்று பாடுபட்டுள்ளார். பம்பாய் கலவரமும் கோவைக்கலவரமும் நடைபெற்ற காலங்களிலும் பாபரி மஸஜித் இடிக்கப்பட்ட காலங்களிலும் நடந்த மாநாடுகளிலும் கருத்தரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பலரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இடதுசாரி கட்சிகளின் நிபந்தனைகளுடன் கூடிய தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளியிடப்பட்ட சச்சார் குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது அதைப்பற்றிய விளக்கங்களை இஸ்லாமிய மக்களிடையே கொண்டு் செல்லவும் அதை அமுல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் அவர்களை அணிதிரட்டவும் அரும்பாடுபட்டுள்ளார்.
சிறுபான்மை மக்கள் நல மாநில மற்றும் மாவட்ட மாநாடுகளில் சிறுபான்மையின கிருஸ்துவ மற்றும் முஸ்லிம் தலைவர்களை பங்கேற்க வைக்க தோழர் DL தீவிரமாக பணியாற்றியுள்ளார்.. மாநாடுகளில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் ஏராளமான தகவல்களை உள்ளடக்கியவைகளாகவும் பிரச்சினைகளை எல்லோரும் எளிதாக
புரிந்துகொள்ளக்கூடியவைகளாகவும் இருந்தன.தன் சொந்த வாழ்க்கையிலும்
முற்போக்கு கண்ணோட்டங்களுடன் வாழ்ந்தார். தன் மகனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் அமைப்பினை தமிழகத்தில் கட்டுவதற்கும் அதன்
வளர்ச்சிக்கும் இறுதி வரை அரும்பணி ஆற்றினார். தோழர் DL மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவிலிருந்து பல பணிகளை ஆற்றிக் கொண்டு கட்சிக்கல்வி பணிகளையும் மேற்கொண்டார். தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன், தோழர் பி.ராமச்சந்திரன் ஆகியோரோடு இணைந்து கட்சிக்கல்வி
பணிகளை மேற்கொண்டு வந்தார்.ஏராளமான தோழர்களுக்கு அவரது எளிமையான வகுப்புக்கள் மார்க்சிய அரசியல் தத்துவார்த்த பயிற்சி பெற உதவியாக அமைந்தன.
தோழர் DL மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் நீண்ட காலம்
பணியாற்றினார்..அடிப்படை மார்க்சியம், சாதியம், வகுப்புவாதம் என பல
தலைப்புக்களில் எளிமையான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தோழர் DL மறைவு மார்க்சிய இயக்கத்திற்கும் மக்கள் இயக்கங்களுக்கும் பேரிழப்பு. .
Leave a Reply