ஜி. ராமகிருஷ்ணன்
“இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்”
– கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இந்தக் கட்டுரை கடந்த 100 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தளங்களில் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்களை, தமிழ்நாட்டை மையப்படுத்தி விவரிக்க முயல்கிறது.
உலகைக் குலுக்கிய ரஷ்ய புரட்சி 1917 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் கல்கத்தாவிலிருந்து வெளியாகி வந்த ஒரு நாளிதழ் “ஜார்ஆட்சியின் வீழ்ச்சி இந்தியாவிலும் அந்நிய அதிகார வர்க்கத்தை ஒழித்துக் கட்டக் கூடிய ஒரு புதிய காலத்தின் துவக்கமாக அமைந்துள்ளது” என எழுதியது. உண்மையில் இப்படியான எழுச்சி இந்தியாவில் நடந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் கடும் தடுப்பு நடவடிக்கைகளை 1919 ஆம் ஆண்டிலேயே பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி விட்டது. புரட்சியாளர்கள் வேட்டையாடப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தை கருவிலேயே அழிக்க முயற்சித்தது ஆங்கிலேயர் அரசு. இந்தப் பின்னணியில்தான் இந்திய புரட்சியாளர்கள் ரகசியமாக சோவியத் யூனியனுக்குப் பயணம் செய்து, தாஷ்கண்ட் நகரில் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை உருவாக்கினார்கள்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை தடுக்க சதி வழக்குகளை ஏவியது. 1923ஆம் ஆண்டு, பெஷாவர் சதி வழக்கினை ஏவியதன் மூலம் பல கம்யூனிஸ்டுகளைக் கைது செய்யத் துவங்கியது. 1924ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகள் மீது கான்பூர் சதி வழக்கு போட்டது.
மீண்டும் 1929இல் 31 கம்யூனிஸ்ட் தலைவர்களை கைது செய்து, மீரட் சதிவழக்கினைத் தொடுத்தது. “பிரிட்டிஷ் மன்னரிடமிருந்து, பிரிட்டிஷ் இந்தியாவின் இறையாண்மையை பறிப்பதற்கான சதியில் ஈடுபட்டதாக” அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்தியாவில் நடந்துவரும் வர்க்கப் போராட்டத்தில் இது ஒரு அத்தியாயம் என அன்றைய தலைவர்கள் இதனைக் கருதினார்கள். மீரட் சதிவழக்கின் விசாரணைமேடையை கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தையும், நோக்கத்தையும், தத்துவத்தையும் பிரச்சாரம் செய்யவாய்ப்பாக பயன்படுத்தினார்கள். நீதிமன்றத்தின் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்கள் தேச மக்களுக்குச் சென்றடைந்தது.
கைது செய்யப்பட்ட தலைவர்கள், இந்த சூழ்நிலையை, சந்தித்து விவாதிப்பதற்காக பயன்படுத்தினார்கள். இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி 1931ஆம் ஆண்டு தனது திட்டத்தை வெளியிட்டது.
பலவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளான கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள், 1933ஆம் ஆண்டில் சதிவழக்கிலிருந்து விடுதலையான பிறகே கட்சியின் மத்தியக்குழுவை அமைத்தார்கள். நாட்டின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உருவான பின்னணியில், சென்னையில் தோழர்கள் பி. சுந்தரய்யா, எஸ்.வி. காட்டே உதவியோடு, தோழர்கள் பி.ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், ஏ.எஸ்.கே. அய்யங்கார், டி.ஆர். சுப்பிரமணியம், கே. முருகேசன், நாகர்கோவில் சி.பி. இளங்கோ, சி.எஸ்.சுப்பிரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன்ஆகியோரைக் கொண்ட முதல் கிளை 1936ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தஞ்சை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவானது. இப்பின்னணியில் மாநில அளவில் இயக்கத்திற்கு வழிகாட்டிட 1942ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, பி. சீனிவாசராவ், ப. ஜீவானந்தம், எம். கல்யாணசுந்தரம், சி.எஸ். சுப்பிரமணியம், ஆர்.கே. கண்ணன் ஆகியோரைக் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மோகன் குமாரமங்கலம் மாநிலச் செயலாளராகவும், எம்.ஆர். வெங்கட்ராமன் உதவிச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1943ஆம் ஆண்டு கட்சியின் அகில இந்திய பணிக்காக மோகன் குமாரமங்கலம் மும்பைக்குச் சென்ற போது எம்.ஆர். வெங்கட்ராமன் மாநிலச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிய – லெனினிய கொள்கையின் அடிப்படையில் 1931ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தோடு, விவசாயப் புரட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியை தூக்கியெறிவதோடு, சாதிய அமைப்பு முறையை ஒழித்து விவசாயப் புரட்சியின் மூலம் தான் ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் அடிமைபடுத்தப்பட்ட மக்களுக்கு சமூக, பொருளாதார, கலாச்சார சட்டரீதியான விடுதலையை பெற முடியும் என்ற அடிப்படையில் கீழ்க்கண்ட திட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது.
* அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். பிரிட்டிஷ்துருப்புக்களை வெளியேற்ற வேண்டும்.
* தேசத்தின் பல பகுதிகளில் இருக்கும் மன்னர் ஆட்சிகளை அகற்றி தேசிய அளவில் ஒரு கூட்டாட்சியை உருவாக்க வேண்டும்.
* ஆங்கிலேயர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய, மன்னர்களுடைய நிலங்களை நட்ட ஈடு கொடுக்காமல் கைப்பற்றி நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும். சாதி, மத, பாலின வேறுபாடுகளை அகற்றி மக்கள் மத்தியில் சமத்துவத்தை உருவாக்கிட வேண்டும்.
* ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளை, வங்கிகளை, ரயில்வேயை, தோட்டங்களை, நீர்வழிப் போக்குவரத்து நிறுவனங்களை பறிமுதல் செய்து தேச உடமையாக்க வேண்டும்.
* அரசு முற்றிலுமாக மதத்திலிருந்துவிலகியிருக்க வேண்டும்.
* இன ரீதியில், மத ரீதியில் உழைப்பாளி மக்களை பிளவுபடுத்திட முயற்சிக்கும் ஆங்கிலேய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
* காண்ட்ராக்ட் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலையுடன், ஆர்ப்பாட்டம், மறியல், வேலைநிறுத்தம் போன்ற உரிமைகளோடு தொழிற்சங்கங்கள் செயல்படக் கூடிய உரிமைகள் வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்.
* ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
* 16 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி, அவர்களின் தாய்மொழியில் அளித்திட வேண்டும். மாணவர்களுக்கு இலவச உணவு, சீருடை, பாடப் புத்தகங்களை அரசே வழங்கிட வேண்டும்.
* பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அளித்திட வேண்டும்.
மேற்கண்ட திட்டங்களை பிரகடனப்படுத்தியதோடு, இதனடிப்படையில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து பகுதி உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமெனவும் கட்சி அறைகூவல் விடுத்தது.
பண்ணையடிமை முறையை ஒழித்திட
1942 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை திரட்டுவது பற்றி விவாதிக்கப்பட்டது. தஞ்சையில் குறிப்பாக, கீழத்தஞ்சையில் (இன்றைய நாகை, திருவாரூர்) நிலங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலச்சுவான்தாரர்கள், மடங்கள், கோவில்களுக்கு சொந்தமாக இருந்தன. மக்கள் தொகையில் 30 சதவிகிதமாக இருந்த தலித் மக்கள் நிலச்சுவான்தாரர்களிடம் பண்ணையடிமைகளாக இருந்தார்கள். பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக அவர்களிடம் குத்தகை விவசாயிகளாக இருந்தனர்.
பண்ணையடிமைகளின் குடும்பம் – பெற்றோர், மனைவி, குழந்தைகள் குறிப்பிட்ட பண்ணையார்களிடம் வேலை செய்தார்கள். ஆண்கள் வயலில் வேலை செய்ய வேண்டும். பெண்கள் ஆடு, மாடு மேய்ப்பதோடு, நடவு நடுவது, களையெடுப்பது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். பண்ணையடிமைகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது. 6 வயது சிறுவர்கள் மாடு மேய்க்க வேண்டும். 10 வயதில் மாட்டுத் தொழுவத்தை கூட்டிக் கழுவ வேண்டும். 15 வயதானால் மாட்டு வண்டிகளை ஓட்ட வேண்டும். 18 வயதானால் அப்பாவைப் போல் வேலை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் வேலைக்கு சென்று, சூரியன் அஸ்தமித்தபிறகே வீடு திரும்ப முடியும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தீண்டாமைக் கொடுமை கோரமான வடிவில் தஞ்சை மாவட்டத்தில் நிலவியது.
குத்தகைதாரர்கள் விளைச்சலில் நான்கில் மூன்று பங்கை குத்தகையாக அளித்திட வேண்டும். சில சமயங்களில் ஐந்தில் நான்கு பங்கை கூட கொடுக்க வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும் அதே நிலத்தை அடுத்தாண்டு நிலச்சுவான்தார் குத்தகைக்கு தருவாரா என்பதில் உத்தரவாதம் இல்லை. இத்தகைய பின்னணியில்தான் பண்ணையடிமைகளையும், விவசாயிகளையும் திரட்டிட கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியது.
மாநிலக் குழுவின் முடிவின் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்திற்குச் சென்ற பி. சீனிவாசராவ் தலித் மக்கள் மத்தியில் பேசுகிற போது, ’நிலச்சுவான்தாரர்கள், குண்டர்கள் உங்களை சாட்டையால் அடித்தால், நீங்கள் திருப்பி அடியுங்கள்’ என்றார். குத்தகை விவசாயிகளின் பிரச்சனையையொட்டி திருவாரூர் மாவட்டம் தென்பறை கிராமத்தில் முதன்முதலாக விவசாயிகள் சங்க கொடி ஏற்றப்பட்டது. குத்தகை விவசாயிகளை திரட்டி, ’விவசாயிகளுக்கு 18 சதவிகித குத்தகைக்குப் பதிலாக 67 சதவிகிதம்’ என்ற கோரிக்கையை விவசாயிகள் சங்கம் முன்வைத்தது. விவசாய சங்கத்தின் முயற்சியை முறியடிக்க மிராசுதாரர்கள் விளைச்சல் நிலத்திற்கு தீ வைக்க முயற்சித்தார்கள். விவசாயிகளுடைய தீவிர போராட்டத்தால் களத்துமேட்டிலேயே குத்தகையை அளந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்பறையில் நடந்த போராட்டத்தின் வெற்றி தலித் மக்கள் உள்ளிட்டு அந்த மாவட்டத்து மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சாணிப் பால் சாட்டையடிக்கு எதிராகவும், மற்றும் பல வடிவங்களிலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் மாவட்டம் முழுவதும் தலித் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். கீழத்தஞ்சை முழுவதும் போராட்டக்களமாக மாறியது. 1944ஆம் ஆண்டு நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ’சாணிப்பால், சாட்டையடி ஒழிக்கப்பட்டது’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உருவானது. விவசாயிகளுக்கும், தலித் மக்களுக்கும் எதிரிகளாக இருந்தவர்கள் நிலச்சுவான்தாரர்கள். விவசாயிகளும், பண்ணையடிமைகளும் நிலச்சுவான்தாரர்களின் நிலப்பிரபுத்துவ கொடுமையையும், தீண்டாமைக் கொடுமையையும் எதிர்த்து போராடுகிறபோது, ஆங்கிலேய அரசின் நிர்வாகம் நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக நின்றது. இதனால் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, தீண்டாமைக் கொடுமை எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ சுரண்டல் எதிர்ப்பு என்ற வடிவத்தில் நிகழ்ந்தது. கீழத்தஞ்சையில் தீண்டாமை கொடுமையும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருந்தது. தஞ்சை மாவட்டத்தில் பண்ணையடிமைகளாக இருந்த தலித் மக்களும், விவசாயிகளாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த மக்களும் ஒன்றிணைந்து போராடியதால்தான் அவர்கள் போராட்டம் வெற்றியடைந்தது. இப்போதும் தமிழகத்தில் ஒப்பீட்டளவில் தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் (நாகை, திருவாரூர்) ஒழிக்கப்பட்டதற்கு இதுதான் காரணம்.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 1952 ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக வந்த போது தஞ்சாவூர் சாகுபடிதாரர், பண்ணையாள் பாதுகாப்பு அவசரச்சட்டத்தை கொண்டு வந்தார். தஞ்சையில் ஒரு கூட்டத்தில் பேசுகிற போது, ’தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்ட் என்ற பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து அவர்களை விடுவிக்கத்தான் இந்த சட்டம். நிலச்சுவான்தாரர்களே இதை ஏற்றுக்கொள்ளுங்கள்!’ என்று ராஜாஜி பேசினார். இச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு, குறிப்பிட்ட நிலச்சுவான்தாரர்களிடம் வேலை செய்து வந்த பண்ணையடிமைகள் விடுவிக்கப்பட்டு, தினக் கூலி விவசாய தொழிலாளர்களாக மாறினார்கள். குத்தகை விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவது தடுக்கப்பட்டது.
இதற்கு பிறகு விவசாயத் தொழிலாளர்கள் மாவட்டம் முழுவதும் கூலி உயர்வுக்காகப் போராடினார்கள். இப்போராட்டத்தை ஒடுக்கிட நிலச்சுவான்தாரர்களுக்கு ஆதரவாக மாநில அரசு நின்றது. நிலச்சுவான்தாரர்களின் குண்டர்களும், காவல்துறையும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கிட முற்பட்டார்கள். ஆனால், போராட்டம் தொடர்ந்து வெற்றி முகமாகச் சென்றது.
1968ம் ஆண்டு கூலி உயர்வுக்கான போராட்டம் கீழத்தஞ்சை முழுவதும் நடந்த போது, ஒருபுறம் அரசு அந்த போராட்டத்தை ஒடுக்கிட முற்பட்டது. மறுபுறம் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில், நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் துவங்கப்பட்டு, கிராமம், கிராமமாக போராடும் தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதையொட்டி தான், 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந் தேதி வெண்மணியில், 44 தலித் மக்களை நிலச்சுவான்தாரர்களும், அவர்களின் குண்டர்களும் உயிரோடு எரித்துக் கொன்றனர். வெண்மணியில் தலித் மக்களை எரித்துக் கொன்று விட்டால், கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்து விடலாம் என்று நிலச்சுவான்தாரர்கள் கருதினார்கள். ஆனால் முன்பை விட கம்யூனிஸ்ட் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது.
வெண்மணி கோரச்சம்பவத்திற்கு பிறகு கணபதியா பிள்ளை கமிசனை மாநில அரசு அமைத்தது. அந்த கமிசனுடைய சிபாரிசின் அடிப்படையில் தான் முதன்முறையாக விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டம் உருவானது.
கீழத்தஞ்சையில் தலித் மக்கள் அனைவருமே நிலச்சுவான்தாரர்களின் இடங்களில் தான் குடிசைப் போட்டு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு சொந்தமான மனையோ, வீடோ இல்லை. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் நிலங்களை அவர்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. போராட்டத்தின் நிர்பந்தத்தால் மாநில அரசாங்கம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தலித் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கியது.
1961ஆம் ஆண்டு கேரளாவைப் போல் தமிழகத்திலும் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும்; உச்சவரம்பை 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராக குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக ஆட்சியில் உச்சவரம்பை 15 ஏக்கராகக் குறைத்துச் சட்டம் இயற்றினாலும், உபரி நிலம் விநியோகம் செய்யப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி உபரி நிலங்களை விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டுமென்று வீரமிக்க போராட்டத்தை நடத்தியது. போராட்டத்தில் காவல்துறை, நிலச்சுவாந்தாரர்கள், குண்டர்கள் ஆகியோரின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. போராட்டத்தின் விளைவாக, சுமார் 3 லட்சம் ஏக்கர் உபரி நிலம் விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில், அரசு அதிகாரத்திற்கு வராமலேயே போராட்டத்தின் மூலமாக உபரி நிலம் விநியோகம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் தான் அடிப்படையாக இருந்தது.
இவ்விடத்தில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் பங்களிப்பைக் குறிப்பிட வேண்டியுள்ளது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தோழர் இ.எம்.எஸ். இருந்தபோது, 1939 ஆம் ஆண்டு மலபார் குத்தகை விவசாயிகள் சம்பந்தமாக, அரசு அமைத்த ஆணையத்தில் ஓர் உறுப்பினராக இருந்து அவர் அளித்த அறிக்கை, நிலப்பிரபுத்துவம், குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நிலச் சீர்திருத்தம் போன்ற அம்சங்களில் தீர்வு காண வழிகாட்டும் ஆவணமாக இன்றைக்கும் உள்ளது.
ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள்:
1936ஆம் ஆண்டு ஏஐடியுசியினுடைய மாநிலக்குழு உருவாக்கப்பட்டு அதனுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை, நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் திட்டமிட்ட முறையில் தொழிலாளர்களை திரட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலத்தில் ஆலைத் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்கள் எல்லாம் அந்நிய ஆட்சியான ஆங்கிலேயர் அரசுக்கு எதிரான போராட்டங்களாகவே மாறியது. ஆங்கிலேய அரசு நிர்வாகம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிய போது, ஆலை நிர்வாகங்களுக்கு ஆதரவாக நின்றது. தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கிட போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பல பகுதிகளில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1946ஆம் ஆண்டு பம்பாய் கப்பற்படை வீரர்கள் ஆங்கிலேய அரசின் ராணுவத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது, ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 270 பேர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படை வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் நடந்தன. சென்னையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இத்தகைய சூழல்தான் இந்திய விடுதலைக்கான நிர்ப்பந்தத்தை உருவாக்கியது.
1940களில் கோவையில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வீரஞ்செறிந்த பல போராட்டங்களை நடத்தினார்கள். ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் போராடிய போது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். லட்சுமி மில் தொழிலாளர் போராட்டத்தின்போது தொழிலாளர்களுக்கும் – கருங்காலிகளுக்கும் நடந்த மோதலில் ஒரு கருங்காலி இறந்து விட்டான். இதையொட்டி 4 சின்னியம்பாளையம் தொழிலாளர்கள் மீது கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறு மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக, உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இத்தகைய போராட்டத்தினால் அந்நிய ஆட்சியின்போது பல தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 1926ஆம் ஆண்டு இந்திய தொழிற்சங்க சட்டம், 1946ஆம் ஆண்டு தொழிற்சாலை நிலையாணை சட்டம், 1947ஆம் ஆண்டு தொழிற்தகராறு சட்டம் போன்று பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கிய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல், அந்நியர் ஆட்சிக்கு எதிராக போராடியதோடு, மதச்சார்பின்மைக்காகவும் பாடுபட்டார்கள்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற இஸ்லாமியர்கள் என அப்பாவி மக்கள் வன்முறைகளுக்கு ஆளானார்கள். ரயில் போக்குவரத்தை துரிதப்படுத்தினால் தான் மோதலை தவிர்க்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் வட இந்திய மாநிலங்களைச் சார்ந்த ரயில்வே தொழிலாளர்கள் கலவர பகுதிகளுக்குச் சென்று ரயிலை இயக்க மறுத்தனர். பிரதமர் நேரு இந்தியா – பாகிஸ்தான் பகுதிகளில் ரயிலை இயக்க ரயில்வே தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். திருச்சியை மையமாக கொண்ட தட்சிண ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினுடைய தலைவர்களாக இருந்த கே. அனந்த நம்பியார், எம். கல்யாண சுந்தரம் இருவரும், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ரயிலை இயக்குவதற்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். திருச்சி, மதுரை, கொல்லம், விழுப்புரம், ஷொரனூர் ஆகிய பகுதிகளிலிருந்து 150 ரயில்வே டிரைவர்கள், பயர்மேன்கள் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குச் சென்று, லூதியானாவை மையமாகக் கொண்டு 5 மாதங்கள் ரயில்களை இயக்கினார்கள். இதற்காக அண்ணல் காந்திஜி அவர்களே தட்சிண ரயில்வே சங்க தொழிலாளர்களைப் பாராட்டினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
தேசிய இனங்களின்உரிமைக்காக
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் மொழிவழி மாநிலம் அமைக்க வேண்டுமென்ற முழக்கத்தை முன்வைத்து போராடியது. தமிழ்மொழி பேசக் கூடிய மக்களின் எல்லைகளைக் கொண்ட தமிழ்நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இக்கோரிக்கைக்காக சென்னையில் கட்சி ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய எம்.ஆர். வெங்கட்ராமன், ஜீவாஉள்ளிட்டோர் காங்கிரஸ் ஆட்சியின் போலீசாரால் தாக்கப்பட்டு அவர்களின் மண்டை உடைந்தது. நாடு முழுவதும் நடைபெற்ற இயக்கத்தின் பின்னணியில் மத்திய அரசு மொழிவழி மாநிலங்களை அமைத்தது.
இதற்கு பிறகு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுமென்று தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை 1956ஆம் ஆண்டு ஜூலை 27இல் துவக்கினார். மாநில முதலமைச்சராக இருந்த காமராஜர் இந்த கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. பி. ராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரைச் சந்தித்து, ’உங்கள் கோரிக்கைகளை நாங்கள் ஏற்கிறோம்; இதற்காகப் பாடுபடுகிறோம்; நீங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது; உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்’ என கோரினார்கள். அவர் ஏற்கவில்லை. 77 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் உயிர்நீத்தார்.. அவர் இறப்பதற்கு முன்னதாக என்னுடைய போராட்டத்தை ஆதரித்த கம்யூனிஸ்ட்டுகளிடம் என்னுடைய உடலை கொடுக்க வேண்டுமென்று அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். மதுரையில் நடைபெற்ற சங்கரலிங்கனாரின் இறுதி நிகழ்ச்சியில் கே.பி. ஜானகியம்மாள் கலந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக பி. ராமமூர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டுமென்ற தீர்மானத்தை அளித்தார். அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இருந்த பூபேஷ்குப்தா இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திமுக தலைவர் அண்ணா இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார். காங்கிரஸ் அரசு தீர்மானத்தை ஏற்கவில்லை. 1967ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியும், திமுகவும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டோம். திமுக ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
சட்டமன்றத்தில் ஆட்சி மொழி குறித்த தீர்மானம் குறித்து நடந்த விவாதத்தில், தமிழகத்தில் கல்வி நிலையங்களில் பாட மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் தமிழை கொண்டு வர வேண்டுமென்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பாடநூல்கள் மொழியாக்கம் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் முடிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. பாலசுப்பிரமணியமும், என். சங்கரய்யாவும் வலியுறுத்தினார்கள். சங்கரய்யா பேசுகிற போது, நாடாளுமன்றத்தில், ‘அகில இந்திய அளவிலான பப்ளிக் சர்வீஸ் கமிசன் தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத வேண்டுமென்று காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழிகளில் சர்வீஸ் கமிசன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்ற திருத்தத்தையும் முன்வைத்தார். விவாதங்களுக்கு பதில் அளிக்கிறபோது, அன்றைய முதலமைச்சர் அண்ணா, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தமிழ் பாட மொழியாக, நிர்வாக மொழியாக, நீதிமன்ற மொழியாக ஆக்க வேண்டுமென்பதை ஏற்றார். மத்திய அரசின் பப்ளிக் சர்விஸ் கமிசன் தேர்வு பற்றி எதுவும் கூறவில்லை. இப்பிரச்சனையில் பல மாநிலங்களிலிருந்து நிர்ப்பந்தம் வந்த பிறகு, மத்திய அரசாங்கம் நடத்தும் தேர்வுகளில் அவரவர் மொழிகளில் தேர்வுகள் எழுதலாம் என முடிவை மாற்றியது.
1952ஆம்ஆண்டிலேயே சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையின் மீது தோழர் பி. ராமமூர்த்தி முதன்முறையாகத் தமிழில் உரையாற்றினார். “ நம் நாடு சுதந்திரம் அடைந்து 5 வருடங்கள் ஆகியும் நாம் இன்னும் இந்த அந்நிய பாஷையை வைத்துக் கொண்டு பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் வந்த பிறகு இப்படிப்பட்ட ஒரு காட்சியை நாம் காண முடியாது” எனப் பேசினார்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ், தமிழர்கள், தமிழ்மொழி, தமிழர் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது.
தமிழக தொழில் வளர்ச்சிக்காக
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையானது உருக்கு மற்றும் மின்சாரம். நாடு சுதந்திரம் அடைந்த போது உருக்கு, மின்சாரஉற்பத்தியில் மிகவும் பின்தங்கியிருந்தது. இந்தத்துறைகளில் உற்பத்திக்காக, பிரதமர் நேரு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிடம் உதவி கேட்டார். ஆனால், அந்த நாடுகள் உதவி செய்ய மறுத்துவிட்டன. 1953ஆம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கு சென்ற போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கோபாலன், சோவியத் தலைவர் ஸ்டாலினை சந்தித்து இந்திய தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். நாடு திரும்பிய ஏ.கே.ஜி. பிரதமர் நேருவைச் சந்தித்து சோவியத் யூனியனிடம் கேளுங்கள் என்று வலியுறுத்தினார். இதற்கு பிறகு தான் இந்திய அரசின் வேண்டுகோளுங்கிணங்க பிலாய், ரூர்கேலா என்ற இரண்டு உருக்காலைகளை சோவியத் நாடு உருவாக்கி கொடுத்தது. மேலும், மின் உற்பத்திக்காக சோவியத் யூனியனுடைய தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியோடு நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் வெட்டும் அனல் மின்நிலையமும் உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 4140 மெகாவாட்டை உற்பத்தி செய்யக் கூடிய மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக விளங்குவதற்கு சோவியத்யூனியன் உதவி முக்கியமான காரணம் ஆகும். நெய்வேலியில் சுரங்கம் வெட்டும் பணியை மத்திய அரசாங்கம் கைவிட எண்ணியபோது, பி. ராமமூர்த்தி, பிரதமர் நேருவைச் சந்தித்து திட்டத்தை தொடரக் கேட்டதுடன், தமிழக சட்டமன்றத்திலும் பேசினார். நிறுவனத்தை நிலைநாட்ட முக்கியப் பங்காற்றினார்.
திருச்சி பி.ஹெச்.இ.எல். நிறுவனம், ஜெர்மனி நாட்டின் பன்னாட்டுக் கம்பனி சீமன்ஸிடம் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற ஒப்பந்தம் போட வேண்டுமென்று 1978ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசு முடிவு செய்தது. திருச்சி பி.ஹெச்.இ.எல் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டது. வேறு எந்த நாட்டு உதவியும் அதற்குத் தேவையில்லை என்று பி. ராமமூர்த்தி வலியுறுத்தியதால் திருச்சி ஃபெல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டது.
இதைப்போன்று சேலத்தில் உருக்காலை துவக்க வேண்டுமென்று வலியுறுத்தியதும் கம்யூனிஸ்ட் இயக்கம் தான். இவை மட்டுமல்லாமல் கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பஞ்சாலை உள்ளிட்ட தொழில்களையும், மாநிலத்தில் இதர தொழில்களையும் பாதுகாப்பதற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் அரும்பாடுபட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டு இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசை நேரு பிரதமராகவும், இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தபோது தான் கலைத்தார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சி உருவான பின்:
1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்கத்தா அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது; அவ்வாண்டு டிசம்பர் மாதமே நாடு முழுவதும் தோழர்கள் இ.எம்.எஸ். ஜோதிபாசு தவிர, மற்ற அகில இந்திய மாநில தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியமான தலைவர்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் 1966 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் விடுதலை செய்யப்பார்கள். இப்படி தொடக்கம் முதல் இன்று வரை ஆளும் வர்க்கங்களுடைய கொடுமையான அடுக்குமுறைகளை எதிர்கொண்டே மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசை சீர்குலைப்பதற்கு காங்கிரஸும், பாஜகவும் முயற்சித்து வருகின்றன.
1964 இல் இருந்து இதுவரையிலான 50 ஆண்டுகால வரலாற்றை தனியாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு, தமிழகத்தில் மாறி வரும் அரசியல் பொருளாதார சூழலுக்கு ஏற்ப, புதிய உத்தியை உருவாக்கி அரசியல் அரங்கில் தனது முத்திரையைப்பதித்து வருகிறது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில், கட்சியினுடைய பிரதிநிதித்துவம், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசுகளுடைய கொள்கைகளை எதிர்த்து ஒரு மாற்றுக் கொள்கையை முன்வைத்து மக்கள் நலனைப் பாதுகாப்பதில் முன்னிலை வகித்து வருகிறது.
தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரங்கங்களில் ஏற்கனவே இருக்கக்கூடிய ஆதரவு தளத்தை விரிவுபடுத்திட இந்த உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களைப் பாதுகாக்க வீரம்செறிந்த போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த அரங்கங்களில் அகில இந்திய அமைப்புகள் உருவான போது, அவைகளின் தலைமையில் மாநிலக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, துடிப்போடு செயல்பட்டு வருகின்றன.
மாணவர், வாலிபர், மாதர் அரங்கங்களில் அநேகமாக புதிதாகத் துவங்க வேண்டிய நிலையில் இருந்து, மாநில அமைப்புகளை உருவாக்கிப் பல களப்போராட்டங்களை நடத்தி, மாநிலத்தில் இந்த அமைப்புகள் பரவலாக வேர்விட்டன.
தீண்டாமை ஒழிப்புக்காக, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, மாற்றுத் திறனாளிகளுக்காக, மக்கள் ஒற்றுமைக்காக, கலாச்சார தளத்தில் முற்போக்கு கலை இலக்கியத்திற்காகப் பல அமைப்புகளையும், மேடைகளையும் உருவாக்கி, அவ்வமைப்புகள் சம்பந்தப்பட்ட அரங்கங்களில் வலுவாகச் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக 1991 ஆம் ஆண்டு நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய 30 ஆண்டுகளில், கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும், நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஒரு மாற்றுக்கொள்கையை முன்வைத்து மகத்தான பல இயக்கங்களை நடத்தியுள்ளன.
தமிழகத்தில் கல்விக்காக, வேலைவாய்ப்புகாக. மனித உரிமைக்காக, தீண்டாமை ஒழிப்புக்காக, பெண்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், வர்க்க, வெகுஜன அமைப்புகளும் நடத்திய போராட்டங்கள், பெற்ற வெற்றிகள், இவற்றிக்காக செய்த தியாகங்கள் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
வரலாறு நெடுக ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கிறது. பல நாட்டு அனுபவமும் அதுதான். ஸ்பெயின் தேசத்தில் பாசிசம் அந்த நாட்டில் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முதல் பெண் தோழர் டொலேரஸ் (லாபாசனாரா) பேசுகிறபோது “நாங்கள் சாவைக் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. காரணம் எங்களுக்கு சாவில் மரணம் இல்லை” என்று உறுதிபடக் கூறினார். வெண்மணியில், ”கேட்ட கூலி உயர்வைத் தருகிறோம்; செங்கொடியைஇறக்குங்கள்” என்று நிலச்சுவான்தாரர்கள், குண்டர்கள் கேட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், ”நாங்கள் மனிதர்களாக நிமிர்ந்து நிற்பதற்குப்போராடியது இந்தச் செங்கொடி. உயிரே போனாலும் செங்கொடியை இறக்குவதென்ற பேச்சே இல்லை” என்று உறுதிபடக் கூறினார்கள்.கோவை சின்னியம்பாளையத்து தொழிலாளர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு முதல் நாள், அவர்களைப்பார்க்கச் சென்ற பி.ராமமூர்த்தி, எம். பூபதி, கே. ரமணி, ஆகிய தலைவர்களிடம், “எங்கள் நான்கு பேர்களை அழித்துவிட்டால், செங்கொடியை, கம்யூனிச தத்துவத்தை அழித்துவிட முடியாது; எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள் முன்னணிக்கு வருவார்கள்” என உறுதியாகக் கூறினார்கள். மார்க்சிஸ்ட் கட்சி, மார்க்சிய, லெனினிய வழிகாட்டுதலில் ஆளும் வர்க்க அரசை எதிர்த்து, கரத்தாலும், கருத்தாலும்உழைக்கக்கூடிய உழைப்பாளி மக்களை ஒன்று திரட்டி, அடக்குமுறைகளை எதிர்கொள்ளும்; வெற்றிபெறும்.