மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அவனது ரத்தம் போதிய அளவு வெளியேற்றப்படவில்லை!


  • பி. சாய்நாத்

(ஃப்ரண்ட்லைன் ஆகஸ்ட் 14, 2020 இதழில் வெளியானது. PARI Link )

இரத்தம் வெளியேற்றுவது என்பது பொதுவான சிகிச்சை முறையாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்திருக்கிறது. உடலில் உள்ள இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் ஆகிய சுரப்பிகளிடையேயான சமனின்மையே நோய்களுக்காக காரணம் என நம்பிக்கை நிலவியது. இந்த நம்பிக்கையை ஹிப்போகிரேட்டஸ் என்பவர் வெளிப்படுத்தினார், அவரைத் தொடர்ந்து இந்தக் கருத்து  மத்திய கால ஐரோப்பா கண்டம் முழுவதுமே பரவலாக காணப்பட்டது.

ரத்தம் வெளியேற்றலுக்கு அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. மருத்துவர்களின் மருத்துவ-தத்துவ மாயைகளின் காரணமாக இரத்தம் வெளியேறி செத்தவர்கள் எத்தனை பேர் என்பது நமக்கு தெரியாது. இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ் மரணத்திற்கு முன் அவருடைய உடலில் இருந்து 24 அவுன்ஸ் ரத்தம் வெளியேற்றப்பட்டதை அறிவோம். ஜார்ஜ் வாஷிங்டன் தொண்டையில் ஏற்பட்ட கிருமித் தொற்றினை குணப்படுத்த, (அவரது வேண்டுகோளின் பேரில்) மிகுதியான ரத்தம் அவர் உடலில் இருந்து  வெறியேற்றப்பட்டது. உடனடியாக. அவர் இறந்தும் போனார்.

முதலாளித்துவத்தின் பிரேதப் பரிசோதனை

கொரோனா வைரஸ் நோய் நவ தாராளமயக் கொள்கையின், அதன் வழியே முதலாளித்துவ அமைப்பின், முழுமையான, தெளிவான பிரேதப் பரிசோதனை அறிக்கையை நமக்குக் கொடுத்திருக்கிறது. பிரேதம் மேசை மீது கிடத்தப்பட்டிருக்கிறது. பிரகாசிக்கும் வெளிச்சத்தில், அதன் நாடி நரம்புகளும், எலும்புகளும், தசைகளும் நம் முகத்திலடித்தாற்போல் தெளிவாகத் தெரிகின்றன. அட்டைப்பூச்சிகளை தெளிவாகப் பார்க்க முடிகிறது – தனியார்மயம், கார்ப்பரேட் உலகமயம், அதீத சொத்துக் குவியல், இதுவரை பார்த்திருக்காத ஏற்றத்தாழ்வின் உண்மை நிலை என எல்லா அட்டைப்பூச்சிகளுமே நன்கு தெரிகின்றன. சமூக, பொருளாதாரப் பிணிகளுக்கு மருந்தாக முன்வைக்கப்பட்ட ‘இரத்தம் வெளியேற்றும் வழிமுறையின்’ காரணமாக, உழைக்கும் மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படைகள் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

ஐரோப்பிய கண்டத்தில் மூன்றாயிரம் ஆண்டுகளாக நிலவிய அந்த மருத்துவமுறை, 19ஆம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை அடைந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டிலும்தான் இந்த மூட நம்பிக்கை அதன் மதிப்பை இழந்தது. எனினும் அதன் கோட்பாடுகளும், நடைமுறைகளும் பொருளாதார, தத்துவ, தொழில் மற்றும் சமுதாயத் துறைகளில் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

தம்மிடம் வந்த நோயாளியை சாகக் கொடுத்துவிட்ட மத்தியகால மருத்துவர்கள், சோகத்துடன் தம் தலையை ஆட்டியபடியே ‘அவனுடைய ரத்தம் போதுமான அளவு வெளியேற்றப்படவில்லை’ என்று சொல்வார்கள் என அலெக்சாண்டர் காக்பர்ன் குறிப்பிட்டதைப் போலத்தான் இவர்களும் பேசுகின்றனர். உலக வங்கியும், சர்வதேச நிதியமும் தங்கள் அதிர்ச்சியூட்டும் நடைமுறைகளால் ஏற்பட்ட அச்சமூட்டும் பேரழிவுகளை, சிலசமயம் இனப்படுகொலைகளை ஒத்த பாதிப்புகளையும் பார்த்து, இந்த அழிவுகளெல்லாம் தனது ‘சீர்திருத்த’ நடவடிக்கைகள் எல்லை மீறியதால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று சொல்லவில்லை. சீர்திருத்தங்களை போதுமான அளவு மேற்கொள்ளாத காரணத்தாலேயே ஏற்பட்டதாகவும், உண்மையில் சீர்திருத்தங்களை சமூக விரோதிகளும், அழுக்கடைந்த மனிதர்களும் தடுத்து விட்டதன் காரணமாகவே அழிவுகள் ஏற்படுவதாகவும் ஊளையிட்டு வந்துள்ளனர்.

தத்துவக் கிறுக்கர்களின் வாதங்களின்படி, ஏற்றத்தாழ்வு என்பது அச்சப்பட வேண்டிய விசயம் அல்ல. அதன் மூலமே போட்டி மனப்பான்மையும், தனிநபர் முயற்சிகளும் ஊக்கம்பெறும். எனவே ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் தேவை என்பதுதான் அவர்களின் வாதம்.

கடந்த 20 ஆண்டுகளாக, மனித சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பில்லை என்று கருணையற்ற முறையில் கூறிக் கொண்டிருந்தனர். இந்த புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில். புரூக் கிங்ஸ் என்ற நிறுவனம் ஏற்றத்தாழ்வுகள் பற்றிய விவாதத்தை அலட்சியப்படுத்துவது; பலவீனப்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்தது.  இந்த எகனாமிஸ்ட் இதழில், கொரோனா நோய் தொற்று உலகையே வாரிச் சுருட்டுவதற்கு சரியாக 90 நாட்களுக்கு முன்னதாக “சமத்துவமின்மை என்பது மாயை” “செல்வமும், வருமான இடைவெளியும் நமக்குத் தோன்றுவது போல உண்மையானதல்ல” என்ற அட்டைப்படச் செய்தியை வெளியிட்டது. கோழிக்கு முன் அதன் நுரையீரலைக் காட்டுவதைப் போன்ற கசப்பான இந்தச் செய்தியில், “வருமான ஏற்றத்தாழ்வு செல்வக் குவிப்பு தொடர்பான புள்ளிவிபரங்கள் குறித்து அது கடுமையாக விமர்சனம் செய்தது; புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்ட ஆதாரங்களை மறுத்தது”

தொடர்ந்து அந்தக் கட்டுரையில் “போலிச் செய்திகளும், சமூக ஊடகங்களும் நிறைந்த இந்த உலகத்தில், இப்புள்ளிவிபரங்களைப் போன்ற நம்பிக்கைகளும் நகைப்புக்குரிய வகையில் நீடித்துக்கொண்டுள்ளன” என ஏகடியம் பேசியது.

கொரோனா வைரஸ் நோய் பரவல் இப்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தந்துள்ளது. இப்போதும் கூட அவர்களின் தரப்பு சிந்தனையாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்கள், கடந்த மூன்றாண்டுகளில் நடந்துவரும் அழிவுகள் எதுவும் முதலாளித்துவத்துடன் தொடர்புடையவை அல்ல என்று காட்டுவதற்கான வழிகளை மும்முரமாக தேடிக் கொண்டிருக்கின்றன.

இயல்பு நிலையே பிரச்சனை

பிரச்சனைக்கு எத்தனை சீக்கிரமாக தீர்வை அடைந்து ‘இயல்புக்கு திரும்பிட’ முடியும்?.  ஆனால் இயல்புக்குத் திரும்புவதல்ல பிரச்சனை.

‘இயல்புநிலைதான்’ பிரச்சனையாக இருந்தது. (ஆளும் வட்டாரங்களில் ‘புதிய இயல்பு’ என்பது பற்றிய வாதங்கள் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது)

கொரோனா வைரசுக்கு முந்தைய இயல்பு நிலை: 2020, ஜனவரி மாதம் வாக்கில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து, உலகின் 22 பணக்கார ஆண்களின் கைவசம் உள்ள சொத்து, ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் வசிக்கும் பெண்களின் கைவசமுள்ள சொத்துக்களை விட அதிகம் என அறிந்துகொண்டோம்.

அதே போல உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், இந்த பூமியில் வாழும் மக்களின் மொத்த சொத்தில் 60 சதவீதத்தை  தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

புதிய இயல்பு நிலை: கொள்கை ஆய்வு நிறுவன அறிக்கை சொல்கிறது, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள், பெருந்தொற்று பரவிய முதல் மூன்று வாரங்களில், தங்கள் சொத்துக்களில் 282 பில்லியன் டாலர்களை கூடுதலாக சேர்த்திருப்பதாக எடுத்துக் காட்டுகிறது. 1990களில் அவர்களின் வசமிருந்த மொத்த சொத்துக்களை விட இது அதிகம். (240 பில்லியன் டாலர்கள்)

இயல்பு நிலை என்பது,  உலகில் உணவுக் கையிருப்பு பிதுங்கி வழிந்து கொண்டிருந்தபோதும், கோடிக்கணக்கானவர்கள் பசியில் வாழ்ந்து வந்ததுதான் ‘இயல்பு நிலை’ எனப்பட்டது. இந்தியாவில் ஜூலை 22 வாக்கில் 91 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்கள் ‘உபரி’ அல்லது  அவசர கையிருப்பு என்ற பெயரில் அரசின் வசம் இருந்தது – ஆனால் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை, உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருந்தது.

புதிய இயல்பு நிலையில் என்ன ஆனது? தானிய கையிருப்பில் மிகக் குறைந்த அளவு கையிருப்பு தானியங்களை மட்டுமே அரசு இலவசமாக  விநியோகித்தது. ஆனால். மிகப் பெரிய அளவிலான அரிசி கையிருப்பை கிருமி நாசினி தயாரிக்க தேவைப்படும் எத்தனால் தயாரிப்புக்காக வழங்கியது.

உணவுக் கிடங்குகளில் நாம் 50 மில்லியன் டன் அளவுக்கான உணவுப் பொருட்களை கிடங்குகளில் தேக்கி வைத்திருந்த பழைய இயல்பு நிலை காலத்தில், பேராசிரியர் ஜீன் டிரெஸ் அந்த சூழலை ரத்தினச் சுருக்கமாக இவ்வாறு விளக்கினார்: “உணவுக் கிடங்குகளில் தானியங்களை வைத்திருக்கும் சாக்குப் பைகளை வரிசையாக அடுக்கினால், அவை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவரும் தொலைவை இரண்டுமுறை நிரப்புவதற்கு ஒப்பாகும்.” புதிய இயல்புநிலை காலத்தில் அந்த அளவு இரண்டு மடங்காகி 104 மில்லியன் டன்களாக ஆனது. நிலவிற்கு சென்றுவர இரண்டு பாதைகளை அமைக்கலாம். அதில் ஒன்று பெரும்பணக்காரர்களுக்கான ராஜபாட்டையாக அமைந்த நெடுஞ்சாலையாகவும், இன்னொன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சோர்வுடன் நடந்து பயணிப்பதற்கான அழுக்கடைந்த சர்வீஸ் சாலையாகவும் இருக்கும்.

1995 முதல் 2018 வரையிலான காலத்தில் 3,15,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அரசு புள்ளிவிபரங்களின் அடிப்படையிலான எண்ணிக்கை. இதுவே குறைவான மதிப்பீடுதான். பல பத்து லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். துணைத் தொழில்களும் நசிந்து போனதால், மேலும் பல லட்சம் பேர் கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்தனர்.

நல வாழ்வு

மருத்துவத் துறையில் பெருகிவரும் தனியாரும், ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும் இயல்பு நிலையாக இருந்தது. அமெரிக்காவில் ஓட்டாண்டிகளாக மாறிய தனிநபர்களில் பெரும் எண்ணிக்கையினர் மருத்துவச் செலவுகளின் காரணமாகவே அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் காணாத வகையில், மருத்துவச் செலவுகளின் காரணமாக 5.5 கோடிப்பேர் ஒரே ஆண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டனர்.

புதிய இயல்புநிலை காலத்தில், மக்கள் நல்வாழ்வின் மீது கார்ப்பரேட் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற நாட்டின் தனியார் மருத்துவமனைகள் அதீத லாபமீட்டுகின்றன, லாபம் குவிக்கும் பல்வேறு செயல்பாடுகளோடு சேர்த்து கொரோனா வைரஸ் பரிசோதனைகளின் வழியாகவும் பணத்தைச் சுருட்டுகிறார்கள்.

தொழிலாளர்

மாநிலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. அல்லது சட்ட மீறல் சாதாரணமாகியுள்ளது. எட்டுமணி நேர வேலை எனப்படும் தனிச்சிறப்பான சட்ட விதியும் கூட சில மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என ஆக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கூடுதல் 4 மணி நேர உழைப்புக்கு ஓவர்டைம் சம்பளம் இல்லை என ஆக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 38 தொழிலாளர் நலச் சட்டங்கள் இடைநிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் ஒன்றுகூடவோ, போராடவோ கூட சாத்தியங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்பதை முதன் முதலில் ஏற்றுச் செயல்படுத்திய முதலாளி ஹென்றி போர்டு (1914). ஃபோர்டு நிறுவனம் அடுத்துவந்த இரண்டாண்டுகளில் இருமடங்கு லாபம் ஈட்டியது. எட்டுமணி நேரத்திற்கும் கூடுதலாக உழைக்கும்போது, உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைவதைக் காண முடிந்தது. புதிய இயல்பு நிலையில் இந்திய முதலாளிகள், அவசர சட்டங்களின் மூலம் கொத்தடிமை நிலையை உருவாக்கவேண்டுமென விரும்புகிறார்கள். இதில் கிளர்ச்சியடைந்த ஊடக ஆசிரியர்களும் ‘நல்ல நெருக்கடியை வீணாக்காதீர்கள்’ என்று வற்புறுத்தத் தொடங்குகின்றனர். இத்தனைக்குப் பிறகும், அந்த அழுக்கடைந்த தொழிலாளர்கள் முட்டி போட்டு நிற்குமளவுக்கு தெம்புடன் இருப்பதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். அட்டைப்பூச்சிகளை ஏவி விடுங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை’ வேகப்படுத்தாமலிருந்தால், அது பைத்தியக்காரத்தனமே என்கிறார்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியர்கள்.

விவசாயம்

விவசாயத்தில் அச்சமூட்டும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், வங்கி நிதியுதவியுடன் இனிய வார்த்தைகள் மூலமும், பலவந்தமாகவும், துன்புறுத்தியும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் பணப்பயிர்களுக்கு மாற்றப்பட்டதை நினைவில் கொள்ளுங்கள். பணப்பயிர்களை ஏற்றுமதி செய்யலாம். கத்தையாக பணம் கிடைக்கும். நாடுகளுக்கு டாலர் வந்து குவிவதன் மூலம் ஏழ்மையை விரட்டமுடியும் என்றார்கள்.

என்ன நடந்ததென்பதையும் நாம் அறிவோம். சிறு பணப்பயிர் விவசாயிகள், குறிப்பாக பருத்தி விவசாயிகள்தான், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். கடன் சுமை அதிகம் ஏற்றப்பட்டவர்களும் அவர்களே.

நிலைமை இப்போது மேலும் மோசமடைகிறது. மார்ச் – ஏப்ரல் வாக்கில் ராபி விளைச்சலை விற்பனை செய்யமுடியாமல் குவிக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் அழுகக் கூடிய விளைச்சலாக இருந்தால், ஊரடங்குக் காலத்தில் விளை நிலங்களிலேயே அழிக்கப்பட்டன. பருத்தி, கரும்பு போன்ற பணப்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு லட்சக்கணக்கான குவிண்டால் அளவில், விவசாயிகளின் வீட்டுக் கூரையை முட்டும் அளவுக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போர்க் காலத்திற்கு பின் இப்போதுதான் கடுமையான பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்கிறோம் என்றும், 1870ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியோ குந்தரேஸ் கூறுகிறார். உலக அளவில் வருமானம் மற்றும் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியாவையும் விட்டுவைக்கப் போவதில்லை.

கொரோனா வைரஸ் பற்றி இன்னொன்றையும் குந்தரேஸ் குறிப்பிட்டார், “எல்லா இடங்களிலும் நிலவிவரும் பொய்களையும், தவறான நம்பிக்கைகளையும் கொரோனா வைரஸ் தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. சுதந்திர சந்தைகள், அனைவருக்கும் மருத்துவத்தை உறுதி செய்யும் என்ற பொய் அம்பலமாகிவிட்டது. கட்டணம் செலுத்தாத சேவை, சேவை அல்ல என்பதும் பொய்யாகிவிட்டது”

இணையவழிக் கல்வி

கோடிகளில் லாபம் குவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இணையவழிக் கல்வியை பரவலாக்கிக் கொண்டிருப்பதுதான் ‘புதிய இயல்புநிலை’ ஆகும். ஏற்கனவே பெரிய அளவில் பணம் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், இப்போது இரண்டு மடங்கு லாபம் கொழிக்க திட்டமிட்டுள்ளனர். சாதி, வர்க்கம், பாலினம் மற்றும் மண்டல அளவிலான விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் பிரம்மாண்டமான அளவில் கொள்ளை நோயின் பெயரால் சட்டப்பூர்வமாகவே கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள். (குழந்தைகளின் கல்வி தடைபடலாமா என்ற புலம்பல் காதில் கேட்கிறதா?)

இப்போது புதிதாக வேலை இழந்த பெற்றோர்கள் நொடித்துப்போனதால்,  பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் எத்தனை பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைவிலகப் போகின்றனரோ? நிதி நெருக்கடியின்போது பெண் குழந்தைகளை இடைநிறுத்துவது பழைய இயல்பு நிலைதான். ஆனால் ஊரடங்கில் அந்த இடை விலகல்கள் தீவிரமடைந்துள்ளன.

இயல்பு நிலை காலத்திலேயே, இரண்டு டிரில்லியன் மதிப்புள்ள ஊடகம் (பொழுதுபோக்கு) தொழிற்சாலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி எந்த செய்தியும் வெளியானதில்லை. தேசியப் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சிகள் எதிலும் தொழிலாளர், விவசாயிகளுக்கென சிறப்புச் செய்தியாளர்களே இல்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதமே உள்ள மக்களைக் குறித்த செய்திகள் ஏதுமில்லை. அவர்களிடமிருந்து செய்திகளை எடுத்துச் சொல்லவோ, அவர்களுக்கு செய்திகளைப் பேசுவதற்கோ ஊடகங்கள் விரும்பவில்லை.

மார்ச் 25 ஆம் தேதிக்கு பிறகு, பல வாரங்களாக கையறு நிலையில் உதவிக்காக நின்ற புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி, ஊடக நெறியாளர்கள் அறிந்து வைத்திருக்கவே இல்லை. ஒரு சில ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த செய்திகள் இன்னும் சரியாக சொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஒப்புக்கொண்டனர். கார்ப்பரேட் ஊடக முதலாளிகள் ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களையும், தொலைக்காட்சி ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றிய விரிவான செய்தி சேகரிப்பு மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கவே ஊழியர்களும், செய்தியாளர்களும் வீட்டுக்கு அனுப்பபட்டனர். இந்த பணி நீக்கங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதுதான். இவ்விசயத்தில் மோசமான குற்றவாளிகள் ஏராளமாக லாபமீட்டும் ஊடக நிறுவனங்கள்தான்.

தொலைக்காட்சி வழி ரியாலிட்டி ஷோ

இப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ வருவதைப் போல ஒரு மனிதர் அவ்வப்போது தொலைக்காட்சியில் தோன்றி நாட்டை வழிநடத்துகிறார். அவருடைய தற்பெருமையை நாட்டின் எல்லா சேனல்களும், முக்கிய நேரத்தில் ஒளிபரப்பு செய்கின்றன. அமைச்சரவை, அரசாங்கம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், எதிர்க் கட்சிகள் என எதுவுமே தேவையில்லை. நாம் எத்தனை தொழில்நுட்ப மேம்பாட்டை அடைந்திருந்தபோதிலும், ஒரே ஒரு நாள் கூட நாடாளுமன்றத்தை கூட்ட சாத்தியப்படவில்லை. மெய் நிகர் வழியில், ஆன்லைன் மூலமாக, தொலைக்காட்சி மூலமாகக் கூட ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 125 நாட்களில் ஒருமுறை கூட நாடாளுமன்றம் கூடவில்லை. தொழில்நுட்ப வலிமையில் நம்மைப்போல் கடுகளவும் இல்லாத, பரிதாபமான மற்ற நாடுகளும் கூட சிரமமில்லாமல் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்திவிட்டன.

முற்போக்கு இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் என்றுமே பழைய இயல்பு நிலையை ஏற்றுக் கொண்டது கிடையாது. ஆனால் நீதிக்கான போராட்டம், சமத்துவம் மற்றும் பூமிப் பந்தை பாதுகாத்துக் கொண்டே மக்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான போராட்டம் ஆகிய சில பழைய விசயங்களுக்குத் திரும்ப வேண்டியுள்ளது. நீதியே நமது சட்டகம். சமத்துவமின்மைக்கு முடிவுகட்டுவதே இலக்கு. அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் சில ஏற்கனவே இருக்கின்றன. இன்னும் சிலவற்றை கண்டடைய வேண்டியுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் இயக்கங்கள் இனி பருவநிலை மாற்ற பிரச்சனையையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே விவசாயத்தை நாசமாக்கியிருக்கும் பருவநிலைமாற்ற பிரச்சனையை விவசாயப் பிரச்சனைகளில் ஒன்றாக சேர்க்காவிட்டால் விவசாய இயக்கங்களும், விவசாயத் தொழிலாளர் இயக்கங்களும் சிரமங்களை எதிர்கொள்ளும். வேளாண் சூழலியல் அணுகுமுறையை இணைத்து போராட வேண்டும்.

தொழிலாளர் இயக்கங்கள், பெரிய ரொட்டித் துண்டுக்காக நடத்தும் போராட்டங்கள் அவசியம்தான். சாதாரண காலங்களில் முன்வைக்காத, ரொட்டி கடையின் உரிமையையே கோரும் முழக்கங்களையும் எழுப்ப வேண்டிய காலம் இது.

மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்துவது மிகத் தெளிவான முழக்கமாகும். இந்தியாவில் மக்கள் மீதான கடன் சுமைகளை ரத்து செய்ய கோருவது மிகச் சரியான முழக்கமாகும்.

கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்ற வேண்டும். முதலில்,  மருத்துவம், உணவு, விவசாயம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இருந்து கார்ப்பரேட் ஏகபோகங்களை அகற்றுதல் ஆரம்பிக்க வேண்டும்,

அரசுகளை நிர்பந்தப்படுத்தி, வள ஆதாரங்களை மறுவிநியோகம் செய்ய வைப்பதற்கான தீவிரமான இயக்கங்கள் வேண்டும். பணக்காரர்கள் மீது ஒரு சதவீதமாவது வரி விதிக்கக் கேட்பது துவக்கமாக அமையும். எவ்வித வரியும் செலுத்தாமல் லாபத்தை அப்படியே கொண்டு செல்லும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மீது வரி விதிக்க வேண்டும். பல்வேறு நாடுகளும் பல பத்தாண்டுகளாக நிறுத்திவிட்ட அந்த வரி விதிப்பு முறையை மேம்படுத்த வேண்டும்.

மக்கள் இயக்கங்கள்

மிகப் பெரும் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதன் மூலமே அரசுகளை கட்டாயப்படுத்தி விரிவான பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான கட்டமைப்புகளை உருவாக்கச் செய்வது சாத்தியமாகும். உணவுக்கான நீதி, நலவாழ்வுக்கான நீதி ஆகிய முழக்கங்களை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை கட்டமைக்கும் தேவை உள்ளது. இதுபோன்ற ஊக்கமளிக்கும் முன்னுதாரண மக்கள் இயக்கங்கள் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றன. ஆனால் கார்ப்பரேட் ஊடகங்களின் செய்தி சேகரிப்பில் அவை ஓரங்கட்டப்பட்டு மறைக்கப்பட்டுவிட்டன.

தனிப்பட்ட பிரகடனங்களை விடவும், விடுதலைப் போராட்ட பாரம்பரியமும் அதனால் உருவான அரசியலமைப்புச் சட்டமும், மக்களை அணி திரட்டுவதற்கு கூடுதலாக பயன்படும் வாய்ப்புள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சந்தைப் பொருளாதாரத்தை அமல்படுத்தி, தார்மீக நீதியை அழித்து, ஒவ்வொரு நாளும் இந்திய அரசாங்கங்கள், அரசமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியுள்ளன. இவர்கள் முன்வைத்த ‘வளர்ச்சிப் பாதை’ முழுவதும் மக்களையும், அவர்களின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும், கட்டுப்பாட்டையும் இல்லாமலாக்கும் நோக்கத்தோடே அமைந்திருந்தன.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பெருந்தொற்றினை, மக்கள் ஒத்துழைப்பின்றி எதிர்த்து வீழ்த்த முடியாது. கொரோனா பரவலுக்கு எதிரான போராட்டத்தில் கேரளா அடைந்திருக்கும் வெற்றியானது உள்ளூர் சமுதாய மட்டத்தில் மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட சமுதாய சமையலறைகள் இல்லாமல் சாத்தியமில்லை. இந்த சமையலறைகளை வலைப்பின்னலாக உருவாக்கி மக்களுக்கு மலிவான விலையில் உணவு வழங்கப்பட்டது. தொற்றின் தடம் அறிதல், நோய் தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் பங்கேற்பின் காரணமாகவே சிறப்பாக நடந்தன. சர்வதேச பரவல் முடிவுக்கு வந்தாலும் கூட, கேரள அனுபவங்கள் நாட்டிற்கு அது பயணிக்க வேண்டிய பாதை எது என்று எடுத்துக் காட்டும் படிப்பினைகளைத் தருகின்றன.

அனைத்து முற்போக்கு இயக்கங்களும், பல்வேறு பின்னடைவுகளை எதிர்கொண்டுள்ளன. நிறைவேற்றப்படாத நிகழ்ச்சி நிரல்களை எட்டுவதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையும் உணர்ந்தே உள்ளன.

இந்திய சுதந்திர தினத்தின் 73வது ஆண்டான இக்காலத்தில், இன்னும் வென்றெடுக்கப்படாத  விடுதலையின்  நிகழ்ச்சிநிரலை சாத்தியப் படுத்துவதற்காக போராடுவதே, வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக்கும்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் (ஆகஸ்ட் 14, 2020)

தமிழில்: ம. கதிரேசன்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: