பிரபாத் பட்நாயக்
இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் என்னென்ன நிகழ்ந்தன? கம்யூனிஸ்ட் ஆட்சிகள் முன்னேறின. வளர்ந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றன. பிரிட்டன் தேர்தலில் வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வியைத் தழுவினார். பிரான்ஸ், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும் பலம் பெற்றதை எல்லோரும் கண்டனர். காலனி, அரைக் காலனி, சார்ந்துள்ள நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் மத்தியில் எதிர்பாராத குழப்பம் ஏற்பட்டது. போரினால் தாக்கப்பட்டு பலவீனமான ஏகாதிபத்திய தலைநகரங்களின் மூலதனம் சில சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மூன்று மிக முக்கியமான சலுகைகள் இதோ…
- காலனி ஆதிக்கம் தகர்தல்.
- கிராக்கி நிர்வாகம் வாயிலாக உயர்ந்த விகிதத்திலான வேலை வாய்ப்புகளை, உறுதி செய்வதற்கான அரசு தலையீடு. (நிதி மூலதனம் எப்போதும் எதிர்க்கிற – போருக்கு முந்தைய காலம் வரை அதனால் தடுத்து நிறுத்தப்பட்ட – அரசு தலையீடு).
- எல்லோருக்கும் வாக்குரிமை. ஜனநாயக பூர்வமாக அரசுகளைத் தேர்ந்தெடுத்தல். (பிரான்சில் கூட 1945இல் தான் எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்தது)
இந்த சலுகைகள் முதலாளித்துவம் “மாறி விட்டது” என்ற எண்ணத்தை உருவாக்கியது. பழைய முதலாளித்துவம், புதிய “சேம நல முதலாளித்துவத்திற்கு” வழி விட்டது. மிகப் பெரும் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் அரசுத் தலையீட்டின் வாயிலாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட மிக அதிகமான இராணுவச் செலவினத்தையே செய்தது. காலனி ஆதிக்கத்தை விலக்கிக் கொள்வதாகக் கூறினாலும், (அது பெரும்பாலும் முழுமையானதாக இல்லை) மேலை நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை. என்றாலும் முதலாளித்துவம் அடிப்படையில் மாறிவிட்டது என்ற எண்ணமும் நீடித்தது. காரணம் மேலை நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் உலக மக்களுக்கு சில பயன்கள் கிடைத்ததுதான். அதுவே உண்மை.
இந்த மாற்றங்களோடு சேர்ந்து போருக்குப் பிந்தைய இணைவுச் சூழலில் லெனினிய அனுமானங்களைக் கடந்த சில போக்குகளும் ஏற்பட்டன. அதாவது ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான தீவிர முரண்பாடுகளுக்கு மாறாக ஆதிக்கத்தை செலுத்தக் கூடிய ஒரு பெரும் சக்தி (சிலர் இதை சூப்பர் ஏகாதிபத்தியம் என்கிறார்கள்.) முன்னுக்கு வந்தது. உலகப் புரட்சி குறித்த பார்வைக்கு வழி வகுத்திருந்த கம்யூனிச இயக்கத்தின் அடிப்படையான கருத்தாக்கம் ஏகாதிபத்திய கட்டம் பற்றி வரையறுத்திருந்தது என்ன? ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும், போர்களும் இருக்கும் என்பதே. ஆனால் பின்- போர்க் காலத்தின் இணைவுச் சூழலில் இந்த மதிப்பீடு செல்லத்தக்கதாக இல்லை. கியூபா, வியட்நாம் புரட்சிகள் இந்த இணைவுச் சூழலில்தான் நடந்தேறியது. ஆனால் அது தாமதமாக நடந்தேறிய முந்தைய இணைவுச் சூழலின் விளைபொருளாக இருந்தது என்பதே உண்மை. அது பின்-போர்க் காலத்திய விளை பொருள் அல்ல.
ஆனால் இந்த பின்- போர் இணைவுச் சூழல் ஓர் இடைவேளையாக மட்டுமே இருந்தது என்று நிரூபணம் ஆனது. மார்க்ஸ் அழுத்தமாகச் சுட்டிக் காட்டிய போக்கான மூலதனத்தின் மையமாதல் என்பது பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமின்றி ஏராளமான நிதிக் குவிப்பு நிறுவனங்களின் உருவாக்கமாகவும் அமைந்தது. இந்த நிதிக் குவிப்பு நிறுவனங்களுக்கான தீனி பல வழிகளில் கிடைத்தது. பிரட்டன் வுட்ஸ் காலத்தில் தொடர்ந்த அமெரிக்காவின் நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் இருந்து அதன் ஊற்று அமைந்தது. (அப்போது அமெரிக்க டாலர் தங்கத்திற்கு சமானமானதாக, ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன.) ஓபெக் (OPEC) நாடுகள் விலை உயர்வை செய்த பிறகு குவிந்த பெட்ரோ டாலர்கள்; பின்- போர் காலத்தில் நிதி நிறுவனங்களில் குவிந்த, அரசுத் தலையீட்டின் அடிப்படையில் கிராக்கி நிர்வாகம் செய்யப்பட்டதால் உருவான சேமிப்புகள் ஆகியனவும் நிதி மூலதனத்தின் பெருக்கத்திற்கான ஊற்றுக்களாக அமைந்தன. இப் புதிய சூழலில், நிதி மூலதனம் உலகம் முழுவதும் தடைகள் ஏதுமின்றி சுற்றி வருவதில் ஆர்வம் காட்டியது. அதற்காக தேச எல்லைகளை உடைக்க முனைந்தது. அதில் வெற்றி பெற்று “உலக மயம்” என்கிற சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தது. பின் போர்க் காலத்தின் முந்தைய அரசுகள் செய்யாத “சுதந்திரமான” சரக்கு, சேவை, மூலதனப் பரவலுக்கு உலகம் முழுக்க வழி திறக்கப்பட்டது.
உலகமயமாக்கல் ராஜ்யம்
உலகமயமாக்கல் காலத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் கட்டுக்குள் இருக்கின்றன. காரணம் ஒரு ஏகாதிபத்திய நாடு பெரும் பலம் பொருந்தியதாக இருப்பதால் மட்டுமல்ல. நிதி மூலதனம் உலகளாவியதாய் மாறி இருப்பதால் அது தனது நகர்வுகளைத் தடுக்கக் கூடிய வகையில் உலகில் குறிப்பிட்ட நாடுகளின் செல்வாக்கு மிக்க பிராந்தியங்கள் இருக்கக் கூடாது என நினைக்கிறது.
இப்படி ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதை சுட்டுகிற சிலர் அதை கார்ல் காவுட்ஸ்கி அன்று எடுத்த நிலையின் நிரூபணம் என சித்தரிக்கின்றனர். லெனின், ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் எப்போதும் ஜீவித்திருக்கும் என்று மதிப்பிட்டார். இதை ஏற்காத காவுட்ஸ்கி, “தீவிர ஏகாதிபத்தியம்” என்ற கருத்தை முன் வைத்தார். காவுட்ஸ்கி கருத்தின் நிரூபணம் என்பது சரியல்ல. லெனின், காவுட்ஸ்கி இருவருமே நிதி மூலதனம் தேசியத் தன்மையோடும், தேசிய அரசின் துணையோடும் மைய மேடைக்கு வந்த காலத்தில் செய்த மதிப்பீடுகள் அவை. இன்றைய நிலைமை வேறு. நிதி மூலதனம் சர்வதேசத் தன்மை பெற்று இருக்கிற காலம் இது. காவுட்ஸ்கி சொன்னது “சர்வதேச அளவிலான நிதி மூலதனங்களின் கூட்டு நடத்துகிற, உலகின் மீதான கூட்டுச் சுரண்டல்” ஆகும். ஆனால் இன்று நடப்பதோ தேசிய நிதி மூலதனங்களின் கூட்டு அல்ல. மாறாக நிதி மூலதனமே சர்வதேசத் தன்மை.பெற்று இருப்பதுதான்.
பன்முகத் தன்மை பற்றிய விவாதத்திலும் இக் குறிப்பிட்ட அம்சம் குறித்த அழுத்தம் இடம் பெறாமல் போகிறது. பொதுவாக பன்முகத் தன்மை முன்னுக்கு வரும் போது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளும் தீவிரமடையும் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இன்றையச் சூழலில் அரசியல் அம்சங்கள் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடாது. பொருளாதார நிகழ்வுகளே அடிக்கற்களாக உள்ளன. முக்கியமான பொருளாதார உள்ளடக்கம் எதுவெனில், சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கம்தான்.
இன்றைய தேசிய அரசுகளின் உலகத்தில் நாம் சர்வதேச நிதி மூலதனத்தை கொண்டிருக்கிறோம். 1933 இல் கீன்ஸ் ஒரு கட்டுரையில் “எல்லாவற்றிற்கும் மேலாக நிதி தேசியத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்று எழுதியதற்கு மாறாக இன்றைய நிலை உள்ளது. இதன் பொருள் தேசிய அரசுகள், சர்வதேச நிதி மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும். இல்லாவிடில் நிதி மூலதனம் அந்த நாட்டை விட்டு வெளியேறி நெருக்கடியை உருவாக்கி விடும். எந்த நிறத்தில் அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அதே பொருளாதாரப் பாதையே தொடர வேண்டும். இது ஜனநாயகத்தை நீர்க்கச் செய்வதாகும். மேலும் சர்வதேச நிதி மூலதனச் சுழலுக்குள் சிக்கி விட்டால் முக்கியமான பொருளாதார விளைவுகளுக்கு ஆளாக வேண்டி வரும்.
முதலாவது, அரசின் தன்மையில் மாற்றம். சமூகத்திற்கு மேலே தன்னை நிறுத்திக் கொண்டு எல்லோரின் நலன்களையும் பாதுகாக்கிற உணர்வைத் தர வேண்டிய அரசு, தற்போது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை வளர்க்கிற பிரத்தியேகத் தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. தேசத்தின் நலன்களும் சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களும் ஒன்றிப் போகின்றன என்று அவர்கள் வாதிடுவார்கள். (மூடி – Moody- நிறுவனம் அதிக ரேட்டிங் கொடுத்தால் அது தேசத்தின் பெருமை ஆகி விடுகிறது) இதன் பெரும் தாக்கம் எதன் மீது எனில், மூன்றாம் உலகின் சிறு உற்பத்தியாளர்கள் மீதுதான். அரசின் ஆதரவும், பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்படுகிறது. விவசாயிகளும் இதில் அடக்கம். பெரு நிறுவனங்கள்- பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டு- சிறு உற்பத்தியாளர்களின் இடங்களைப் பறித்து ஆக்கிரமிப்பது நடைமுறை ஆகிறது.
காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டம் விவசாயிகளைப் பெரு நிறுவனங்களின் ஆக்ரமிப்பில் இருந்தும், உலகச் சந்தை விலைகளின் ஊசலாட்டங்களில் இருந்தும் காப்பாற்றுவதாக உறுதி தந்திருந்தது. காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய அரசாங்கங்கள் இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்ததால் சிறு உற்பத்தியாளர்கள் பயன் பெற்றனர். நவீன தாராளமய அரசு அத்தகைய ஆதரவைத் திரும்பப் பெற்று அவர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இத் துறைகளைச் சார்ந்து இருந்த பெரும் எண்ணிக்கையிலான சிறு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் வீசி எறியப்பட்டுள்ளனர். துயரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். நகரில் இல்லாத வேலைகளை நாடி இடம் பெயர்கிறார்கள். இல்லையெனில் தற்கொலைகளையும் நாடுகிறார்கள்.
இரண்டாவதாக, அதிகரிக்கும் தொழிலாளர் காத்திருப்பு பட்டாளம். அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தாலும் அது உருவாக்குகிற வேலை வாய்ப்புகள், உழைப்பாளர் படையின் இயற்கையான வளர்ச்சியை ஈடு செய்கிற எண்ணிக்கையில் இருப்பதில்லை. இதனால் தொழிலாளர்களின், அமைப்பு சார் ஊழியர்களாயினும், உற்பத்தி திறன் அதிகரித்திருந்தும், உண்மை ஊதியத்தை அதிகரிப்பதில்லை. இது உபரியின் விகிதத்தை அதிகரித்து வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் இட்டுச் செல்கிறது.
மூன்றாம் உலகத் தொழிலாளர்கள் மட்டுமல்ல. மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்கள் வந்து போட்டி போடுவதால் வளர்ந்த நாடுகளைச் சார்ந்த தொழிலாளர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளின் அளவுகளுக்கு வீழாவிட்டாலும் அவர்களின் உண்மை ஊதியமும் உயரவில்லை. உபரி உழைப்பு மிகுவதால் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகின்றன. (1968 க்கும் 2011 க்கும் இடையில் அமெரிக்க ஆண் தொழிலாளர்களின் சராசரி உண்மை ஊதியம் உயரவில்லை; மாறாக வீழ்ந்திருக்கின்றன என்கிறார் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்). மொத்தத்தில் உலக உற்பத்தியில் உபரி உழைப்பின் பங்கு அதிகரித்துள்ளது.
மூன்றாவதாக, நுகர்வு உந்தல் கூலி வருமானத்தில் கிடைக்குமேயன்றி, பணக்காரர்களிடம் குவியும் உபரியில் இருந்து கிடைக்காது. இது சமூகத்தில் அதீத உற்பத்தி (Over Production) என்கிற போக்கிற்கு வழி கோலுகிறது.
நான்காவதாக, இந்த அதீத உற்பத்தி போக்கை எதிர்கொள்ள கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரசு தலையீடு என்பதை உலகமய ராஜ்யம் தடுத்து விட்டது. அரசு தலையிட்டை நிதிப் பற்றாக்குறை மூலமோ, பணக்காரர்கள் மீது வரி போட்டோ அரசு செய்ய வேண்டும். ஆனால் சர்வதேச நிதி மூலதனத்தின் வலையில் வீழ்ந்த எந்த தேசிய அரசும் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு மேல் வைத்திருக்க முடியாது; பணக்காரர்கள் மீது வரிகளையும் போட முடியாது. அமெரிக்காவுக்கு இந்த தடைகள் எல்லாம் இல்லாவிட்டாலும் நிதிப் பற்றாக்குறை வாயிலாக நெருக்கடியை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. காரணம் அமெரிக்கா நிதிப் பற்றாக்குறையை அதிகப்படுத்தினால் அதனால் ஏற்படும் நுகர்வு வெளி நாடுகளில்தான் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதே.
ஆகவே அதீத உற்பத்தியை எதிர்கொள்ள நீர்க் குமிழி வழிமுறைகளையே கையாண்டார்கள். நீர்க் குமிழிகள் உடைந்தவுடன் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுவிடும்.
ஆகவே உலகமய ராஜ்யம் ஏற்றத்தாழ்வுகளை வளர்க்கும். கூலி அளவு தேக்கம் அடையும். சிறு உற்பத்தியாளர்கள் பறிப்பிற்கு ஆளாவார்கள். நீர்க் குமிழிகள் தருகிற தற்காலிக ஆசுவாசம் அவை வெடிக்கும் போது பெரும் நெருக்கடிகளாக மாறும். வேலையின்மையை பெருமளவு உருவாக்கும். சேம நல செலவுகளை வெட்டும். சமூகக் கூலியை குறைக்கும்.
பின்-போர் காலத்திய அரசு தலையீடு முதலாளித்துவம் மாறி விட்டது என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் உலகமயம் கடிகார முள்களை பின்னோக்கி நகர்த்தியுள்ளது. சேம நல அரசு என்கிற கருத்தாக்கத்தை சிதைத்துள்ளது. “முதலாளித்துவத்தின் மனித முகம்” என்பது வளர்ந்த நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் இரண்டிலுமே தென்படவில்லை. சர்வதேச நிதி மூலதனம், ஏகாதிபத்திய முரண்பாடுகளை மட்டுப்படுத்தினாலும், மீண்டும் அராஜகத் தன்மை கொண்ட ஆதி மூலதனத் திரட்சி வழி முறைகளை நோக்கி அது நகர்கிறது. கீன்ஸ் வார்த்தைகளில் “நியாயமற்றது… ஒழுக்கமற்றது… நல்லது எதையும் செய்யாது… வெறுப்பிற்கு மட்டுமே தகுதியானது”.
இணைவுச் சூழலைக் கடப்பது எவ்வாறு
இன்றைய இணைவுச் சூழலில் உழைப்பாளி மக்களின் துயர் களைய அரசு தலையீடு தேவைப்படுகிறது. சர்வதேச நிதி மூலதனத்தின் தளையிலிருந்து விடுபட்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்குகிற சுதந்திரம் அரசுக்கு இருக்க வேண்டும். இச் சுதந்திரத்தை இரண்டு வழிகளில்தான் எட்ட இயலும். ஒன்று எல்லா பெரிய தேசிய அரசாங்கங்களும் கை கோர்த்து (மாற்று உலக அரசாங்கம் போன்று) சர்வதேச நிதி மூலதனத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு உழைப்பாளி மக்களின் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை அமலாக்க வேண்டும். இரண்டாவது, தனித் தனி நாடுகளாகவோ, குழுவாகவோ சர்வதேச நிதி மூலதனப் பிடியில் இருந்து விடுபட்டு மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து மாற்று நிகழ்ச்சி நிரலை மேற்கொள்ளலாம்.
இதை விவரிப்பதெனில், கிராக்கியின் அளவை உயர்த்தி வேலையின்மையை குறைக்க வேண்டும். ட்ரம்ப் போல “அக்கம் பக்கத்தாரிடம் இருந்து பிடுங்குவது” (Beggar thy neighbour) என்ற வழிமுறையை கடைப்பிடித்தால் மற்ற நாடுகளும் தங்கள் சந்தையைப் பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். அது நெருக்கடியை ஆழப்படுத்தி வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும்.
அரசின் பணக் கொள்கைகள் (Monetary policies) இன்று கிராக்கியை உயர்த்துகிற சக்தியற்றவையாக உள்ளன. ஆகவே நிதிக் கொள்கைகள் வாயிலாகவே அது நடந்தேற வேண்டும்.
அதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பங்களுக்கு மாறாக, பெரிய தேசிய அரசுகள் சில, நிதி ஊக்கத் திட்டங்களை (Fiscal stimulus) அறிவிக்கலாம். 1930இல் இது போன்ற கோரிக்கையை ஜெர்மனி தொழிற்சங்க இயக்கம் முன் வைத்தது. கீன்சும் முன் வைத்தார். அது போன்று இந்த நாடுகளின் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் வாயிலாகவே இதைச் செய்வதற்கான நிர்ப்பந்தங்களைத் தர முடியும்.
இரண்டாவது வழி, தனி நாடுகள் மூலதனக் கட்டுப்பாடுகள், நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பின் மூலம் அரசு முதலீடுகள், பணக்காரர்கள் மீது வரிகள் என்ற வழிகளில் நிதி விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணி பலமாக உள்ள நாடுகள்தான் மற்ற நாடுகளை விட இத்தகைய பாதையில் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியும். சர்வதேச நிதி மூலதன வலைப் பின்னலில் இருந்து விடுபடாமல் இவ் வழிமுறை சாத்தியம் இல்லை. எவ்வளவு விடுபட வேண்டும் என்பதை சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவு செய்யலாம்.
ஆனால் குறிப்பிட்ட நாட்டில், அதுவும் சிறு உற்பத்தி அதிகமாக நிலவும் நாட்டில், தொழிலாளர் – விவசாயி கூட்டணியைப் பலப்படுத்தி இன்றைய இணைவுச் சூழலைக் கடப்பது மட்டும் இறுதித் தீர்வாக அமையாது. லெனின் சுட்டுவது போல் ஜனநாயகப் புரட்சியை சோசலிசம் நோக்கி முன்னெடுக்கிற தொடர் பயணத்தின் பகுதியாக அது இருக்க வேண்டும். உலகமயத்தில் இருந்து விடுபடுவது, தொழிலாளர்- சிறு உற்பத்தியாளர் மீதான உலகமயத்தின் பாதிப்புகளை சரி செய்வது, தொழிலாளர்- விவசாயி கூட்டணி அடிப்படையிலான அரசு அமைவது என பல கட்டங்களாக சோசலிசம் நோக்கி நகர வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இணைவுச் சூழலை கடப்பது என்பது சமூக அமைப்பையே மாற்றுவது என்ற இலக்கோடு இணைந்ததாக இருக்க வேண்டும். தொழிலாளி – விவசாயி கூட்டணியில் இணைகிற புரட்சிகர சக்திகளுக்கு தங்களின் இறுதி இலக்கு குறித்த புரிதல் இல்லாமல் இருந்தால் சர்வதேச நிதி மூலதனத்தை எதிர்த்த களத்திலேயே அவர்கள் காதுகளில், மார்க்ஸின் வார்த்தைகளில் “மத்தள தத்துவ விசாரணைகளாக” ( Drum dialectics) மாற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட இணைவுச் சூழலைக் கடப்பதற்கே சமூக அமைப்பைக் கடக்கிற முனைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்த்த வேண்டும்.
தற்போதைய இணைவுச் சூழல் நவம்பர் புரட்சியின் போது முன் வைக்கப்பட்ட லெனினிய நிகழ்ச்சி நிரலின் பொருத்தத்தை புதுப்பிக்கிறது. இருப்பினும் இரண்டு சூழல்களும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள் அறிந்ததே. நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து விடுதலை பெறுவதற்கான விவசாய வர்க்கங்களின் விருப்பம் (மூன்றாம் உலகின் மற்ற சிறு உற்பத்தியாளர்களுடையதும்) இன்று உலகமயம் விதித்துள்ள நவீன தாராளமயத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெறுவதாக விரிந்துள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தை மையமாகக் கொண்ட உலகமயத்தின் பிடியில் இருந்து விடுபடுவதையும் கடந்த இலக்கைக் கொண்ட ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் தேசிய அரசால் சுதந்திரமாக செயல்பட இயலும்.
உலகமயம் தொழிலாளர்- விவசாயி கூட்டணிக்கான தேவையையும், வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. இரண்டு தெரிவுகள்தான் உள்ளன. ஒன்று இக் கூட்டணியைப் பலப்படுத்துவது. இரண்டாவது, நெருக்கடிக்குள் மேலும் மேலும் மூழ்கி பாசிச சிந்தனைகள் வளர்ந்து அதன் துணையோடு சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடர அனுமதிப்பது.
ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. முதலாளித்துவம் ஒழுங்கற்றதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டிருப்பதாக உள்ள நிலையில் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தில் இருந்து அவ்வளவு எளிதாக விடுதலை பெற முடியுமா? லெனின் காலத்தில் கூட இல்லாத நிலையல்லவா இது! கடும் ஒடுக்குமுறை கொண்ட தற்போதைய இணைவுச் சூழல் “வெளியேறும் வழிகளற்றதாக” உள்ளதா என்பதே அது.
இதற்கான விடை களத்திலேயே கிடைக்கும். வலுவான தொழிலாளர் – விவசாயி கூட்டணி தற்போதைய இணைவுச் சூழலை கடப்பதற்கு மிக முக்கியமானதாகும். சோசலிசத்திற்கான நகர்வு காலம் எடுப்பதாக இருக்கக் கூடும். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நவம்பர் புரட்சி உருவாக்கிய தொழிலாளர் – விவசாயி கூட்டணியின் வலுவை அவர்களால் தக்க வைக்க இயலாததும் ஆகும். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட கொள்கைகள் இந்த கூட்டணியின் இணைப்பை பலவீனப்படுத்தியது. அதனால் ஏற்பட்ட காயங்கள் நிரந்தரத் தழும்புகளாக மாறி விட்டன. அத்தகைய தவறுகள் நிகழக் கூடாது. இடதுசாரிகள் மத்தியில் கூட நவீன தாராளமயத்தில் இருந்து அறுத்துக் கொள்வது பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. நவீன தாராளமயத்தில் இருந்து அறுத்துக் கொள்வது இன்றைய இணைவுச் சூழலைக் கடப்பதற்கான முதல் முன்னுரிமைக் கடமை ஆகும்.
தமிழில்: க. சுவாமிநாதன்
Leave a Reply