வறுமையை ஒழிக்கும் போராட்டத்தில் சோசலிச சீனா!


இரா. சிந்தன்

‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கம் கேட்காத நாடே உலகில் கிடையாது. பெரு முதலாளிகளின் வயிற்றை வளர்ப்பதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படும் முதலாளித்துவ அரசுகள் கூட, இவ்வகையில் நாங்கள் ‘வறுமையை வளர்க்கிறோம்’ என்று உண்மையைச் சொல்வதில்லை. அதனால் வறுமை ஒழிப்பு முழக்கம், என்றும் புகழ் குன்றாத, இறப்பேயில்லாத முழக்கமாக நீடிக்கிறது. இப்படியான சூழலில்தான் நம்புவதற்கே அரிதான விதத்தில்,மக்கள் சீன குடியரசு, தனது நாட்டில் அதீத வறுமையை ஒழித்துவிட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது.

சியா கங் (xiaokang) சமூகம்

சியா கங் என்றால் மாண்டரின் மொழியில் ‘ஓரளவு முன்னேறிய’ என்று பொருள் ஆகும். சீன சமூகம் எல்லா வகைகளிலும் ஓரளவு முன்னேறியதாக மாற்றப்பட வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ‘சியா கங் சமூகம்‘என்ற இலக்காக வடித்துக் கொண்டுள்ளார்கள்.

1979 ஆம் ஆண்டில் சீனா தனக்கு தீர்மானித்துக் கொண்ட இந்த இலக்கினை, நிர்ணயித்த காலக்கெடுவில் (2020 ஆம் ஆண்டு இறுதிக்குள்) நிறைவு செய்து காட்டியுள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.

அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவது மட்டுமல்ல. ஒரு குடும்பத்தின் வருமானத்தில் உணவுக்கான செலவு 40 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். ஒரு தனி நபருக்கு வாழ்விடம் 3 சதுர மீட்டருக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதீத வறுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் சியா கங் இலக்குகள் ஆகும்.

மேற்சொன்ன இலக்குகளில் ஒன்றாகிய ‘அதீத வறுமை ஒழிப்பு’ என்பது அத்தனை எளிதானது அல்ல. பொதுவாக வறுமை என்பது ஒப்பீட்டளவிலானது. பல்வேறு நிலைகளைக் கொண்டது. இப்போது சீனம் தனது இலக்காக வைத்து எட்டியிருப்பது அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியையே.

உலக வங்கி அளவீட்டின்படி ‘வறுமைக் கோட்டின்’ கீழ், அதாவது ஒரு நாளைக்கு ஒரு நபரின் வருமானம் ரூ.140 க்கு குறைவாக இருந்தால் அது அதீத வறுமை ஆகும். சீனா தனது நாட்டின் சூழலுக்கு ஏற்ப அமைத்துக் கொண்ட அதீத வறுமையின் அளவுகோல் இதைவிட சற்று கூடுதலானது. (உலக வங்கி 2010 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக வைத்து வறுமைக்கோட்டை அளவிடுகிறது. சீனா 2011 ஆம் ஆண்டினை அடிப்படைஆண்டாக எடுத்துக் கொண்டுள்ளது. விலைவாசிக்கு ஏற்ப அடிப்படை ஆண்டை மாற்றிக்கொண்டும் வந்துள்ளது). இதன் அடிப்படையில், சீனத்தில் ஒவ்வொரு தனிநபரின் வருமானமும் நாள் ஒன்றுக்கு ரூ.169 க்கும் அதிகமாக பெறும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு உத்திரவாதங்கள், மூன்று உறுதிகள்

மேலும், அதீத வறுமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை, ஒரு நாள் வருமானம் என்ன என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. கூடுதலாக ‘இரண்டு உத்திரவாதங்கள் மற்றும் மூன்று உறுதிகள்’ மக்கள் அனைவருக்கும் கிடைப்பதையும் இந்தப் போராட்ட வெற்றியின் அளவுகோலாக வைத்தனர். அதன்படி, சீன நாடு முழுவதும் உணவும், உடையும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் கிடைப்பது உத்திரவாதப் படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பாதுகாப்பான குடிநீர், மற்றும் வசிக்கத் தகுதியான வீடு ஆகிய மூன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்தச் சாதனை வேறு எந்த நாடும் செய்யாத ஒன்று, வரவேற்று மகிழவேண்டியது.

ஆயிரமாண்டு இலக்கு

மேற்சொன்ன செய்தியை படிக்கும் போது, நமக்கு இரண்டு கேள்விகள் மனதில் தோன்றலாம்.

‘இதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்?’,

‘அதீத வறுமையை ஒழித்துவிட்டோம் என்ற அறிவிப்பு பொருளுள்ள ஒன்றா? அல்லது வெற்று விளம்பரமா?’

2000 ஆம் ஆண்டில், செப்டம்பர் மாதத்தில் கூடிய ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளுக்கு சில இலக்குகளை தீர்மானித்து அறிவித்தது. அதில் முதலாவது ‘ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோரில் பாதிப் பேரையாவது அந்த நிலைக்கு மேலாக உயர்த்திட வேண்டும்’ என்பதாகும். அதீத வறுமைக்கு ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளஅளவுகோள், ஒரு நாளுக்கு ஒரு டாலர் (இப்போதைய மதிப்பில் சுமார் ரூ.73) என்பதுதான். அதிலும் பாதியளவு நிறைவேற்றுவதைத்தான் அவர்கள் முதல் கட்ட இலக்காக முன்வைத்தனர். இந்த இலக்கை நோக்கி மெதுவாகவாவது உலகம் முன் நகர்ந்துகொண்டிருந்த சமயத்தில், பொருளாதார நெருக்கடிகளும், கொரோனா பெருந்தொற்று நோயும் புதிய சவால்களாக உருவாகின. நெருக்கடிக் காலத்தில் பெரும் பணக்காரர்கள் செல்வம் குவிப்பதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை. ஆனால், உலகின் ஏழைகளுக்கோ வாழ்க்கை மேலும் மோசமானது. இந்த காலத்தில் உலகில் 8.8 கோடி முதல், 11.5 கோடி வரையிலான மக்கள் அதீத வறுமையில் தள்ளப்படுவர் என்கிறது உலக வங்கியின் அறிக்கை.

முதலாளித்துவ உலகம் முற்றிலும் மக்களைக் கைவிட்டுவரும் நிலையில்,சோசலிச சமூக அமைப்போ நெருக்கடிகளை திட்டமிட்ட வகையில் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளதுடன். அனைத்து மக்கள் நலன்களை பாதுகாத்து, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி பாய்ச்சல் வேகத்தில் பயணிக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளில், வறுமையில் இருந்து மீட்கப்பட்ட மொத்த உலக மக்கள்தொகையான 100 கோடிப்பேரில், 70% சீனத்தின் சோசலிச கட்டமைப்பினால் மீண்டவர்கள் என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்கும்போது, இந்தச் செய்தி வெற்று விளம்பரமல்ல, மனித நேயம் கொண்ட அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான செய்தி என்பதை அறிய முடியும்.

வறுமை ஒழிப்பின் முதல் படி

உலகின் முதல் பெரும் பொருளாதாரமும், வளர்ந்த நாடும் ஆகிய அமெரிக்காவில் இப்போதும் ஒரு கோடியே 80 லட்சத்து 25 ஆயிரம் பேர், அந்த நாட்டின் வறுமைக் கோடு அளவை விட பாதி வருமானத்துடன் ‘உச்ச வறுமையில்’ வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீடு சுட்டிக் காட்டுகிறது. எனவே வறுமை என்பது ஏழை நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்குமான பிரச்சனை மட்டுமல்ல. அதுவொரு உலக நிகழ்வுப்போக்கு. முதலாளித்துவ உற்பத்தி முறையின் உடன் விளைவு.

சோசலிசத்தை தேர்வு செய்ததுதான், வறுமை ஒழிப்பு திசையில் சீனா எடுத்து வைத்த முதல் அடி. புரட்சிக்கு முன் சீனாவின் ஊரகப் பகுதிகளில் வறுமைதான் விதியாக இருந்தது. ஆனால், சோசலிச அரசு இந்த விதியை மாற்றியமைத்தது. ஊரகப் பகுதிகளில் நிலக்குவியலை உடைத்து, சீர்திருத்தத்தை முன்னெடுத்தது, கூட்டுப் பண்ணை, கூட்டுறவு மற்றும் கம்யூன் ஆகிய ஏற்பாடுகள் நிலவுடைமையின் ஆதிக்கத்தை முடிவிற்கு கொண்டு வந்தன.

உலகமயமும் – இந்தியாவும், சீனாவும்

1978 ஆம் ஆண்டில் சீனத்தில் சந்தை உலக வணிகத்திற்காக திறக்கப்பட்டது. அதற்கேற்ப சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. அப்போது ‘தேச வளர்ச்சியின் முழுமையான திட்டத்தில் ஒரு பகுதியாக ‘வளர்ச்சியைச் சார்ந்து வறுமை ஒழிப்பு’ என்பதும் சேர்க்கப்பட்டது.

பொதுவாக உலகமயக் கொள்கைகளால் ‘வளர்ச்சியை சாதித்த’ முன்னுதாரணமாக சீனாவை முதலாளித்துவ அறிஞர்களும் சுட்டிக் காட்டுவார்கள். இதனாலேயே சீனம் உலகின் ‘உற்பத்திச் சாலை’ என விதந்தோதப்படுகிறது. இவ்வகையில் இந்தியாவும் கூட தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதிக்காக கவனிக்கப்படுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்த இரண்டு நாடுகளிலும் ‘ஏற்றத்தாழ்வுகள்’ அதிகரிப்பதையும் பார்த்தோம். இந்தியாவைப் பொருத்தமட்டில், ‘வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி’, ‘வேலை இழப்புடன் கூடிய வளர்ச்சி’ ஆகிய விநோதமான சொல்லாடல்களை, உலகமய எதார்த்தம் உருவாக்கியது.

சீனத்தின் சூழலை பொருத்தமட்டில், இக்காலத்தில் பொருள் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வேளாண்மையின் பங்கு குறைந்தது. எனவே விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளை தேடி மக்கள் இடம்பெயர்வது நேர்ந்தது. மேலும், கடற்கரையை ஒட்டி அமைந்த கிழக்கு மாகாணங்களின் அளவுக்கு, மத்திய மாகாணங்களும், மேற்கு மாகாணங்களும் தொழில்மயமாகவில்லை. முறைசார்ந்த பணி வாய்ப்புகளில் சரிவு ஏற்பட்டது. மேலும் 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிப்பேர் வேலை தேடி சந்தையில் புதிதாக நுழைந்துகொண்டிருந்தனர் என்கிறது ஒரு ஆய்வு.

அதே நேரத்தில்,உலகச்சந்தையைப் பயன்படுத்திக் கொண்டு,உலகில் எந்த நாடும் காணாத அளவிற்கு உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளை சீனம் ஈர்த்தது. சீனத்தின் வலிமையான பொதுத்துறைகளும், நிதித் துறையில் அந்த அரசுக்கு உள்ள வலிமையான கட்டுப்பாடும், சோசலிச இலக்குகளை நோக்கிய அதன் பயணத்திற்கு உதவி செய்வதாகவே அமைந்தன.

இக்காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், தனிநபர் வருமானத்திலும் பெருவிகித வளர்ச்சியை பார்க்க முடிந்தது. இப்போது சீன நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 99 லட்சம் கோடி யுவான்கள். அதாவது 1, 120 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிகம். தனிநபர் தலா வருமானம் அதிகரித்துள்ளது, உலகிலேயே நடுத்தர வருமானம் கொண்டவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் சீனத்தில்தான் வாழ்கிறார்கள்.

பொருளாதாரம் திறக்கப்பட்ட காலத்தில், சீன சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த உலக மார்க்சிய பொருளாதார வல்லுனர்கள், ‘ஏற்றத்தாழ்வான வளர்ச்சி’ என்ற சிக்கலை சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டவட்டமான தலையீட்டின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர். இப்படியான சூழலில்தான், ஏற்றதாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கிறது மக்கள் சீன குடியரசு.

படிப்படியான முன்னேற்றம்

வறுமையை எதிர்க்கும் போராட்டம் என்பது எப்போதுமே தனி ஒரு மனிதனின் வாழ்நிலைமைகளை சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை. அது ஒரு நாட்டின் வரலாற்றுச் சூழலோடும் தொடர்புடையது. நிலவும் உற்பத்தி முறையும், சுற்றுச்சூழலும், பிராந்தியத்தின் வளர்ச்சியும் அதில் பெரும்பங்கு வகிக்கிறது.

எனவே அதீத வறுமைக்கு எதிராக சீனம் நடத்தியுள்ள போராட்டத்தை 4 நிலைகளில் பார்க்கலாம். புரட்சியின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மாற்றங்கள், உற்பத்தி சக்திகளை முடுக்கிவிட்டதன் வழியாக சாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பான திட்டங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட உத்தி அடிப்படையிலான திட்டங்கள், இறுதியாக குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சாதிக்கப்பட்ட 100 சதவீத வெற்றி.

சோசலிச அரசும் – கம்யூனிஸ்ட் கட்சியும்

சீன நாட்டின் கட்டமைப்பில் மத்திய அரசின் கீழ் மாகாணங்களும், தன்னாட்சிப் பகுதிகளும் உள்ளன. நகரங்களுக்குள் பல கவுண்டிகள் உள்ளன, கவுண்டிகளில் பல்வேறு டவுன்கள் உள்ளன. டவுன் பகுதிகளில் சிறு கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.

இவைகளில் கவுண்டி என்ற நிலைக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள், அரசு நிறுவனங்களில் பணியாற்றுவோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற பணிக்கப்பட்டனர். அரசுத்துறைகளில் இருந்து 30 லட்சம் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்நிலை செயலாளர்கள் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரும், 7 லட்சம் அதிகாரிகளும், இவர்கள் அல்லாமல் 19 லட்சத்து 74 ஆயிரம் நகர அளவிலான அதிகாரிகளும் வறுமை ஒழிப்பு திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் பணியாற்றினர். மக்கள் விடுதலை ராணுவமும், மக்கள் ஆயுதக் காவல்துறையும் 26000 முனைகளில் தங்கள் வறுமை ஒழிப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். இவர்களெல்லாம் வறுமையில் வாடும் மக்களோடு மிக அருகில் வசித்து அவர்களை அறிந்து, அதற்கேற்ப வழிநடத்தினார்கள்.

சீன மக்கள் குடியரசின் தலைவரான ஜி ஜின்பிங், வறுமை உச்சத்தில் நிலவக்கூடிய 14 பகுதிகளை குறித்த கால இடைவெளிகளில் நேரில் பார்வையிட்டார், 6 கருத்தரங்குகளில் தலைமையேற்று வழிநடத்தினார். இவ்வகையில் இந்த திட்டத்தில் கவனம் குவிந்திருப்பதை அவர் தொடர்ந்து உறுதி செய்தார்.

ஒருங்கிணைந்த முன்னெடுப்புக்கள்

2012 ஆம் ஆண்டுக்கு பின் வளர்த்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த வழிமுறைகள் நமக்கு பல்வேறு பாடங்களைக் கொடுக்கின்றன.சிறப்புத் திட்டங்கள், தொழில் துறை ஆதரவு மற்றும் சமூக பங்களிப்பு ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டன. கட்சியும், அரசு கட்டமைப்பும் இவற்றை முன்னணியில் வழிநடத்தின.

  1. உற்பத்தியை உயர்த்துவது
  2. வசிப்பிடத்தை இடம் மாற்றுவது
  3. சூழல் ஈட்டுத்தொகை வழங்குவது
  4. கல்வி வழங்குவது
  5. அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உதவித்தொகை தருவது என்பவைகளுடன் சேர்த்து,

வேலைவாய்ப்பை அதிகரித்தல், மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல், சொத்துக்களை பயன்படுத்தி பொருள் ஈட்டலுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றினார்கள்.ஒரு மனிதர் தனது சொந்த உழைப்பில் வாழ்வதற்கு தடையாக எது அமைகிறதோ, அதனை கண்டறிந்து மாற்றியமைத்தார்கள்.

இந்தியாவில் நிதிக் கொள்கையை தீர்மானிப்பதில், வட்டி விகிதத்தை மாற்றிமைப்பதைத்தான் ஒரே வழிமுறையாக அரசு பயன்படுத்த முடிகிறது. ஆனால் சீனத்தின் சோசலிச கட்டமைப்பு, நிதிக் கொள்கையை அரசின் திட்டமிடலுக்கு ஏற்ப கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. இவையல்லாமல், உலகப் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்த காலத்திலெல்லாம், சீனா பொது முதலீடுகளைஅதிகப்படுத்தி, அதன் வழியாக கிராக்கியை தூண்டிவிட்டதை அறிவோம். குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பில் அந்த நிதி செலவிடப்பட்டது. சாலைகளும், போக்குவரத்து வசதிகளும், புதிய ஆராச்சிகளும் முடுக்கி விடப்பட்டன. இவை வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு பேருதவி செய்தன. இவை தவிர, தனியார் மூலதனத்தை, நாட்டின் திட்டமிடலுக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்துவதை சீனா, வறுமை ஒழிப்பு நோக்கத்திலும் வெற்றிகரமாகச் செய்து காட்டியது. (வேறொரு தருணத்தில் இவை பற்றி விரிவாக பார்ப்போம்)

76 ஆயிரத்து, 400 தனியார் நிறுவனங்கள் தங்களுடைய உதவியை 48ஆயிரத்து 800 கிராமங்களுக்கு வழங்கினார்கள். 1கோடியே 10 லட்டசம் மக்கள் இவ்வுதவிகளால் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும். ரஷ்ய எல்லையில் அமைந்த ஒரு கிராமத்தில் மக்கள் ஒட்டகங்களை வளர்த்து வருகிறார்கள். ஆனால் ஒட்டகப் பாலினை சந்தைப்படுத்துவது பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தனியார் நிறுவனம் ஒன்று, ஒட்டகப் பாலுக்கான சந்தையை ஏற்படுத்திய பின்னணியில் அந்தப் பகுதியின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. குகைகளை ஒத்த வீடுகளில் வாழ்ந்த அந்த மக்கள் இப்போது நவீன வீடுகளை கட்டி வாழ்கிறார்கள். “தங்கத்தில் திருவோடு ஏந்தியவர்களைப் போல அவர்கள் வாழ்ந்தார்கள்” என விளக்குகிறார் தனியார் பால் பண்ணையின் நிர்வாகி.

பொது வழிகாட்டுதல், குறிப்பான செயலாக்கம்

எல்லோருக்கும் ஒரே விதமான தீர்வு என்ற அணுகுமுறையால் இந்த வெற்றியை சாதிக்க முடியாது என்பதை உதாரணத்துடன்ஜி ஜின்பிங் சுட்டிக் காட்டுகிறார். “வறுமை ஒழிப்பிற்கான இலக்குகள் ஒன்றாக இருந்தாலும், அளவுகோல்கள் மாறுபட்டவையே. சீனத்தின் தெற்கு மாகாணங்களில் வீட்டு வசதி ஏற்படுத்தும்போது அங்கே காற்றோட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு மாகாணங்களில்,வெப்பமூட்டும் வசதியை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர் எனும்போது கூட சீனத்தின் வடமேற்கு மாகாணங்களின் பிரச்சனை குடிநீர் ஆதாரங்களை கண்டறிவதை சார்ந்து இருக்கிறது. அதே சமயம் தென்மேற்கு மாகாணங்களில் சேமிப்பிலும்,விநியோகத்திலும் கவனம் தேவைப்படுகிறது. வெவ்வேறு வாழ்விடங்களில் தேவைகள் வெவ்வேறாக உள்ளன. தேவை அறிந்து தீர்வு தேடுதல் என்ற அணுகுமுறைதான் முக்கியம்” என்கிறார்.“வறுமையில் உள்ள மண்டலங்களில், சிந்தனையில் வறுமை நிலவக்கூடாது”.

சிச்சுவான் பகுதியில் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் கல்வித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. குய்சோ பகுதியில் பிக் டேட்டா தொழில்நுட்பம் வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்தப்பட்டது, குய்ங்கா என்ற பகுதியில் உள்ளூர் நூடுல்ஸ் உற்பத்தியை தொழில்மயப்படுத்தியதன் வழியாக வறுமையை தீர்க்க வழி காணப்பட்டது. இன்னர் மங்கோலியா பகுதியில் வறுமை ஒழிப்புக்கான அனைத்து வழிமுறைகளுமே திட்டமிட்ட வகையில் பின்பற்றப்பட்டன.

ஆரம்பத்தில் வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த திட்டமிடலில் ஒரு பகுதியாக வறுமை ஒழிப்பும் இருந்தது. அடுத்தடுத்து பல மாறுதல்களை சந்தித்தது. 2012 ஆம் ஆண்டில் அது ‘இலக்கை குறிவைத்து வறுமை ஒழிப்பு’ என மாற்றியமைக்கப்பட்டது. இந்த கடைசி 8 ஆண்டுகளில்சுமார் 10 கோடிப்பேர் அதீத வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதுவும் கூட முதல் 7 கோடிப்பேருக்கு ஒரு அணுகுமுறையும், கடைசி 3 கோடிப்பேருக்கு மாறுபட்ட அணுகுமுறையும் கொண்ட போராட்டமாகவே இருந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வழிநடத்துதல் இல்லாமல் இவ்வளவு பெரிய சாதனை சாத்தியமாகியிருக்காது. ஒவ்வொரு கிராமத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கிளைகளும், கமிட்டிகளும் இத்திட்டத்தை செயலாக்குவதில் கைகோர்த்து செயல்பட்டுள்ளன. அரசுத்துறைகளை வழிநடத்தியிருக்கின்றன. அதே சமயத்தில்இந்த திட்டங்கள் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு மேலும் நெருக்கமாகியுள்ளது.

சருக்கல்களும் தொடர் ஆய்வுகளும்

வறுமை ஒழிப்பிற்கான போராட்டத்தின் போது என்னவெல்லாம் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்பதை, ஜி ஜின்பிங் தனது உரையில் விளக்கியுள்ளார்.

சில மண்டலங்கள், வறுமையை ஒழிப்பதற்கான மதிப்பீட்டை குறைவாக நிர்ணயித்துக் கொண்டன. எடுத்துக்கொண்ட பணிகளை நிறைவேற்ற முடியாமல் போவதும், நிதியை பலனளிக்காத வகையில் செலவிடுவதும். திட்டமிட்ட பலன்களை கொடுக்காமல் போவதும் பொதுவாக நிலவிய சவால்களாகும். சில பகுதிகளில் தொழில்மயத்திற்கான முயற்சிகள் உரிய காலத்தில் முடியவில்லை. இடம் மாற்றி குடியமர்த்தப்பட்டவர்களுக்கு, தொடர் உதவிகளை வழங்குவதில் அலட்சியம் நிலவியது.

மேலும்,

  1. வறுமை ஒழிப்பினை முதன்மை அரசியல் பணியாக கருதாத போக்கு
  2. பணம் அல்லது பொருட்களை விநியோகித்தாலே வறுமை ஒழிந்துவிடும் என்ற கருத்து
  3. பெயரளவிற்கு உழைத்தல், அதிகாரத்துவம்

இவற்றையெல்லாம் களையாவிட்டால் வறுமையை ஒழித்துவிட்டோம் என சாதித்து முழங்கும் பகுதிகள் ஒன்றிரண்டு ஆண்டுகளில் மீண்டும் வறுமையில் விழுந்துவிடும் ஆபத்து உள்ளது என்ற எச்சரிக்கையை, ஜி ஜின்பிங் பங்கேற்ற ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருந்ததை பார்க்க முடிகிறது. அவற்றில் உடைப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.

சமூக நீதி, அதிகாரப் பரவல் மற்றும் சூழலியல் கண்ணோட்டங்கள்

சமூக நீதியும், சூழலியல் பாதுகாப்பும் சோசலிசத்தின் பிரிக்க முடியாத பகுதிகளே ஆகும். வறுமை ஒழிப்புக்கான போராட்டத்தினையும் அந்த நோக்கில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

இனவழி சிறுபான்மையினர்

2018 – 2020 காலகட்டத்தில் வறுமை ஒழிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சரிபாதியை, இனவழி சிறுபான்மையோர் வாழும் பகுதிகளிலேயே செலவிட்டது அந்த அரசு. அந்த நாட்டில் மொத்த 55 வகையான இன வழி சிறுபான்மையோர் வாழ்கின்றனர். அவர்களுடைய வசிப்பிடங்கள் வனப்பகுதிக்கு நடுவில் அமைந்திருந்தன. சிதறலாகவும், கரடு முரடான மலைகளுக்கு நடுவிலும் அமைந்திருந்தன. இங்கெல்லாம், சாலை, ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் குவிக்கப்பட்டது.

பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு

சீனத்தின் மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பின் தங்கிய நிலையை சரி செய்திட, மத்திய அரசு கூடுதல் நிதி உதவியை மேற்கொண்டது. இவை அல்லாமல், மாகாண அரசுகளுக்கு இடையிலான உதவிகளும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கிழக்குப் பகுதி மாகாணங்கள், மேற்கு பகுதி மாகாணங்களுடன் கைகோர்த்து செயல்பட்டன. 2018 ஆம் ஆண்டில் மட்டும் கிழக்கின் ஒன்பது மாகாணங்களின் உதவியோடு 17.7 பில்லியன் டாலர் பொது உதவி நிதி மேற்கு மாகாணங்களுக்கு பெறப்பட்டது. 28 ஆயிரத்து 500 அதிகாரிகளும், சிறப்பு திறனாளர்களும் அந்த மாகாணங்களில் இருந்து, வறுமை ஒழிப்பிற்காக அனுப்பப்பட்டனர். இது சுமார் 14 லட்சத்து 40 ஆயிரம் ஏழைகள் வாழ்க்கையை மேம்படுத்தும் குறிப்பான திட்டங்களில் பயன்பட்டது.

சூழலைக் காப்பதில் வறுமை ஒழிப்பு

சூழல் வளங்களை, பொருளாதார வளங்களாக மாற்றுவதும், சூழலியல் சாதகங்களை பொருளாதார சாதகங்களாக மாற்றுவதும் வறுமையிலிருந்து வெளியேறுவதற்கான வேகமான வழியாக உள்ளன. ஆனால் முக்கிய வனப்பகுதிகளுக்கு அருகில் அமைந்த கிராமங்களில் அந்த அணுகுமுறை கைகொடுக்குமா?. சூழலைஅழிப்பதாக அது ஆகிவிடாதா?

அவ்வாறான பகுதிகளில், சூழலை மேம்படுத்துவதையே ஒரு பணி வாய்ப்பாக மாற்றியுள்ளனர். ஷாங்க்சி என்ற மாகாணத்தில் டானிங் என்ற கவுண்டி அமைந்திருக்கிறது. அந்த நிலப்பகுதி பாழடைந்த இடுக்குகள் சூழ்ந்த பகுதியாகும். சூழலியல் பாதுகாப்புக்கான பகுதியாகவும் அது அமைந்தது.

எனவே, அங்குள்ள மக்கள் வறுமையில் வாடிவந்தார்கள். உதாரணமாக பைகன் என்ற கிராமத்தில் வாழ்ந்துவந்த பெங்சோப்பிங் (வயது 53) குடும்பத்தை பிரிந்து, வேறு ஊர்களுக்கு சென்று கடுமையாக உழைத்து வந்தார். ஆனாலும் அந்தக் குடும்பம் வறுமையில் இருந்து மீள முடியவில்லை.

எனவே, அரசு இப்பகுதியில் வனம் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இப்போது பெங் சோப்பிங்16 ஹெக்டேர் அளவிலான வனத்தை வளர்த்துள்ளார். அந்த மரங்களை பராமரிப்பதற்காக அவருக்கு நிதி தரப்படுகிறது. சூழலியல் ஈட்டுத்தொகை, பசுங்கூட வாயுவுக்கான மானியத்தொகை தரப்படுகிறது. மேலும் அவர் வளர்த்துள்ள மரங்களும் அவருக்கே சொந்தமாகும். இவ்வாறு நாடு முழுவதும் 5 லட்சம் பேர் வனப் பாதுகாவலராகியுள்ளனர். வறுமையை வென்றதுடன், இப்பகுதிகளில் சூழலியல் சுற்றுலாவும் நடக்கிறது.

மனித உழைப்பின் மாபெரும் சாதனைகள்

உலகின் மாபெரும் அதிவிரைவு ரயில் கட்டமைப்பு சீனாவிலேயே அமைந்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதியிலும், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் இணைப்பு அல்லது சோலார் மின்சாரம் உறுதி செய்துள்ளனர். நாடு முழுவதும் அதிவேக இணைய இணைப்பு கட்டமைப்பை, 5ஜி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுத்து, பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மனித உழைப்பின் மாபெரும் சாதனைகளாக இவற்றைக் குறித்து தனியாக பேசலாம். அதே சமயம்,இத்தகைய நவீன கட்டமைப்புகளின் வழியே கரடுமுரடான சூழல்கள், தொலைவு காரணமாக வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதலில் இருந்த தடைகளை நீக்கியுள்ளனர். மருத்துவமும், பாதுகாப்பான குடிநீரும், வீட்டுவசதியும் இந்த கட்டமைப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை.

வறுமை ஒழிப்பு என்ற நோக்கில், அந்த நாட்டில் 81 ரயில் பாதைகளில் ரயில்கள் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு உதவியாக மெதுவாக இயக்கப்படுகின்றன. அதே போல, நவீன முறையில் ‘லைவ் ஸ்டிரீமிங்’ செய்து வேளாண் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதும் நடக்கிறது. அரசு அதிகாரிகளே இதுபோன்ற சந்தைப்படுத்துதலை முன்னெடுக்கிறார்கள்.

திபெத்தின் தனிச் சிறப்பான சாதனை

திபெத் தன்னாட்சிப் பகுதியை, உலகின் கூரை என அழைப்பதுண்டு. அதுவொன்றும் அன்றாட வாழ்க்கைக்கு அத்தனை சாதகமான விசயம் அல்ல. மிக சவாலான திபெத் நிலப்பகுதியும், அதன் தட்பவெப்பநிலையும், பின் தங்கிய சமூக நிலையும் வளர்ச்சிக்கு தடையாகஅமைந்தன.

புரட்சிக்கு பின் அந்த நிலைமை படிப்படியாக மாற்றப்பட்டது. குறிப்பாக, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வழியாக தொழில்துறை ஊக்குவிக்கப்பட்டது, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.

உள்கட்டமைப்பு என்றால் போக்குவரத்து வசதிகள், மருத்துவம், மின்சாரம், தொலைபேசி இணைப்பு அனைத்தும் உள்ளடக்கம்.

உலகின் மிக உயரமான மின் இணைப்புத்தொடரைஅமைப்பதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திட்டமிட்ட வகையில் பணியாற்றி, கட்டுமானப் பணிகளை ஓராண்டு காலத்தில் முடித்துக் காட்டியுள்ளனர். “மின் கோபுரங்களைப் பொருத்தும்போது பல சமயங்களில் உறைகுளிரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதையாவது பிடித்தால், கைகளும் அந்த பொருளோடு ஒட்டிக் கொள்ளும்” என்று அப்பகுதியின் ஆபத்தான நிலையை விளக்குகிறார்.

மேலும், திபெத் தன்னாட்சி பகுதியின் 99 சதவீதகிராமங்களிலும் 4ஜி இணைப்பும், ஃபைபர்ஆப்டிக்ஸ் இணைய சேவையும்தரப்பட்டுள்ளது.

நவீன மருத்துவ வசதிகளை ஒவ்வொரு கவுண்டியிலும் உறுதி செய்துள்ளனர். இதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சி, மருத்துவர்களை வறுமை நிலவும் பகுதிகளில் தங்கி சேவை செய்திட பணித்துள்ளது. மேலும், ஒவ்வொரு கவுண்டியிலும் நவீன மருத்துவம் கிடைப்பதை வறுமை ஒழிப்பின் பகுதியாக முன்னெடுத்து சாதித்துள்ளனர்.

இந்த முயற்சிகளின் காரணமாக, 2015 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ரூபாய் 17 ஆயிரம் வரை மட்டுமே இருந்த தனிநபர் வருமானம் இப்போது ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.

உய்குர் முஸ்லிம்களும், வறுமை ஒழிப்பும்

சீனத்தின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங்உய்குர் குறித்து மேற்குலக ஊடகங்கள் பலவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டதை அறிவோம். அந்த பிராந்தியம் முழுமையும் ஒருங்கிணைந்த முயற்சிகளால் வறுமையிலிருந்து மீண்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பல அரசு/தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் ‘வேலைவாய்ப்பற்ற முதலீடுகள் அல்ல’என்பது குறிப்பிடத்தக்கது.

83 கி.மீ., தொலைவிலிருந்து, குழாய் மூலம் குடிநீர் திட்டம் உட்பட மையப்படுத்தப்பட்ட 1300 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. “எங்களின் பல தலைமுறை மக்கள் குழாய் குடிநீரை பார்த்ததில்லை. இப்போது குடிநீர் குழாய்கள் வாழ்க்கையை சுலபமாக்கியுள்ளன” காஸ்கர் என்ற பகுதியில் வாழும் விவசாயி.

(திபெத் மற்றும் உய்குர் பகுதிகளின் வளர்ச்சிக்கான போராட்டங்கள் தனித்தனி கட்டுரையாகவே எழுதப்படவேண்டியவை)

வறுமை ஒழிப்பும் கண்காணிப்பும்

அமெரிக்க பத்திரிக்கையாளரும், சீன விவகாரங்களில் நிபுணரும் ஆகிய ராபர்ட் லாரன்ஸ் குன் என்ற பத்திரிக்கையாளர், வறுமை ஒழிப்பு பகுதிகளிற்கு நேரில் சென்று பதிவு செய்திருக்கிறார். அதில், கண்காணிப்பு ஏற்பாடுகளின் வலிமையை நம்மால் அறிய முடிகிறது.

முதலில் ஏழைகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஒவ்வொரு வீடாகச் சென்று பேட்டி காண்பதின் வழியாகவும், அரசு புள்ளிவிபரங்களை தொகுப்பதன் மூலமும் நடக்கின்றன. இந்த இடத்தில், கிராம குடிமக்களை ஈடுபடுத்தி வாக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம், உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசும், மாகாண அரசும் பொதுவான திட்டங்களை வகுக்கின்றன.

நாட்டின் அனைத்து படிநிலை நிர்வாகங்களிலும் திட்டமிடல் நடக்கிறது. இதில் ஊரக பகுதியில் உள்ள கட்சி செயலாளர்கள் மேலிருந்து நியமிக்கப்படுவதில்லை; கீழிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக வறுமை ஒழிப்பு பணிகள், பல்கலைக் கழக மாணவர்களை உள்ளடக்கிய மூன்றாம் நபர் கண்காணிப்பு குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து விபரங்களும் தகவல் மையம் ஒன்றில் இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

மூன்றாம் நபர் கண்காணிப்புக் குழுக்களின் ஆய்வுகள் தவறுகளைக் களைவதில் பெரும் பங்களிப்பை செய்திருப்பதை குடியரசுத் தலைவருடைய உரையும் வெளிப்படுத்துகிறது.

போராட்டம் முடியவில்லை

இப்போது சீனத்தின் அனைத்து கிராமங்களிலும் மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது, 98% கிராமங்களுக்கு அலைபேசி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் கிராமங்களை சாலைகள் இணைக்கின்றன. 7.7 கோடி ஏழைகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களும் இணைக்கப்பட்டு சீனத்தின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உலகிலேயே மிகப்பெரியதாக உள்ளது. 1 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டி மாற்று வசிப்பிடங்களை வழங்கியுள்ளனர்.

இவ்வகையில் 70 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட பெரும் போராட்டத்தின் வழியாகவும், 8 ஆண்டுகள் குறிவைத்து செயல்பட்டதன் மூலமும் தனது நாட்டில் அதீத வறுமையில் இருந்த அனைவரையும் மீட்டிருக்கிறது மக்கள் சீன குடியரசு. இருப்பினும் இது வெற்றியின் முதல் கட்டமே.

தனியார் உற்பத்தியால் உருவாகும் சிக்கல்களை சீனா தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும். ஒப்பீட்டளவிலான வறுமையை ஒழிப்பதும், நவீன சோசலிச தேசமாக சீனத்தை வளர்த்தெடுப்பதும் மாபெரும் போராட்டங்களே. இப்போது அவர்கள் சாதித்திருக்கும் வெற்றி நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது. அந்த வகையில் உலக மக்களுக்கு சோசலிசத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இது அமைந்துள்ளது.

சோசலிசமே மாற்று என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s