உழைப்பு சக்தி என்பது உயிர்வாழும் உழைப்பாளியின் உருவத்தில் இருக்கிறது. அந்த உழைப்பாளிக்கும் அவன் இறந்த பின்பும் உழைப்பு சக்தி தொடர்ந்து கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் அவன் குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வாழ்க்கைத் தேவைகள் அவசியமாகின்றன. அத்தேவைகளை உற்பத்தி செய்ய எவ்வளவு உழைப்பு நேரம் அவசியப்படுகிறதோ அந்த உழைப்பு நேரம்தான் உழைப்பு சக்தியின் மதிப்பாகிறது.
ஒரு தொழிலாளி, ஒரு குறிப்பிட்ட வரலாற்று சகாப்தத்தில், ஒரு குறிப்பிட்ட நாட்டின் வரலாற்று முறையில் நிலைநாட்டப்பட்டுவிட்ட வழியில் தன்னை பராமரித்துக் கொள்ளவும், மேலும் இனவிருத்தி செய்து கொள்ளவும் தேவையான வாழ்க்கை சாதனங்களின் மதிப்புதான் உழைப்பு சக்தியின் மதிப்பாகும்.
முதலாளி அந்தந்த தொழிலாளியிடம் வேலை வாங்குகிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அத்தொழிலாளி தான் பெற்ற கூலிக்கு சமமான அளவு உழைப்பைக் கொடுத்திருப்பார். அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் தனக்கு கொடுக்கப்பட்ட கூலியின் முழு மதிப்பையும் தொழிலாளி முதலாளிக்கு ஈடு செய்திருப்பார். ஆனால் அத்த குறிப்பிட்ட நேரத்துடன் தொழிலாளி தனது வேலையை நிறுத்திக் கொள்வதில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடு செய்யத் தேவையானதைவிட அதிகமான உழைப்பை முதலாளி தொழிலாளியிடமிருந்து பெறுகிறார். அதாவது தொழிலாளிக்கு தான் கொடுக்கும் ஊதியத்தின் அளவுக்கு முதலாளி உழைப்பை பெறுவதுடன், தான் ஊதியம் கொடுக்காத உழைப்பையும் சேர்த்துப் பெற்றுக் கொள்கின்றார். இதுவே உபரி உழைப்பு எனப்படுகிறது.
தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட கூலிக்கு ஈடு செய்யத் தேவையானதைவிட அதிகமாக பெறப்படும் உபரி உழைப்புத்தான் உபரி மதிப்பிற்கும், லாபத்திற்கும், தொடர்ந்து பெருகிக் கொண்டே போகும் மூலதனத் திரட்சிக்கும் தோற்றுவாய் ஆகும்.
– எங்கெல்ஸ்
மார்க்சின் “மூலதனம்”