மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நம்பிக்கையூட்டும் லத்தீன் அமெரிக்கா


அபிநவ் சூர்யா

லத்தீன் அமெரிக்க நாடுகளின் அண்மைக்கால நிகழ்வுகளும் வளர்ச்சிகளும் சர்வதேச இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கிய பாடமாகவும், பெருமளவு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளன. குறிப்பாக, 2019ல் துவங்கி, இன்று வரை, அப்பகுதியின் பல நாடுகளிலும் பெருந்திரளான மக்கள் அமெரிக்கா ஆதரவுடன் அமலாகி வரும் ஏகாதிபத்திய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து வருகின்றனர். பல காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா தன் சொந்த ஆட்சிக்களமாக நினைத்து, அங்கு அனைத்து நாடுகளையும் தன் கட்டளைகளுக்கு அடிபணிய வைக்க முயற்சித்து வந்துள்ளது. இன்று உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கும், சீனாவின் அசுர வளர்ச்சிக்கும் மத்தியிலே தளர்ந்து வரும் வல்லரசாக அமெரிக்கா மாறியுள்ள நிலையில், லத்தீன் அமெரிக்காவை மேலும் இருக்கிப் பிடித்துக்கொள்ளவே முயற்சித்து வருகிறது. “சீர்திருத்தம்” என்ற பெயரில் நவீன தாரளமயக் கொள்கைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாக பலியாக வர, அந்நாட்டு மக்களின் நலன்களுக்கான முன்னெடுப்புகள் முற்றிலுமாக கைவிடப்படுவதை நேரடியாக காண முடிகின்றது. தொழிலாளர் சட்டங்கள், வரி மற்றும் அரசு செலவுகள் குறித்த கொள்கைகள், சுற்றுச்சூழல் குறித்த கொள்கைகள், கல்வி சுகாதாரம் போன்ற இதர சமூக கொள்கைகள் என அனைத்தின் மீதும் பிற்போக்குத்தனமான தாக்குதலை தொடுத்து, தனியார்மய-தாரளமய கொள்கைகள் மூலம் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை முற்றிலுமாக சூறையாடியதால், மொத்த பகுதியும் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் துவங்கி, தொழிலாளர்-விவசாய-மாணவர் இயக்கங்களின் உறுதி மிக்க போராட்டங்களின் காரணமாக சமூக நீதியுடன் சேர்ந்த மக்கள் நலன் சார்ந்த அரசுகள் பல நாடுகளிலும் அமைந்தன. ஆனால் அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட ஏகாதிபத்திய தாக்குதல் இந்நாடுகளை சர்வதேச நிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைத்தன. அதே வேளையில் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக புரட்சிகர மக்கள் இயக்கங்கள் எழாமல் தடுக்க, வலதுசாரி மற்றும் பாசிச இயக்கங்களை வளரச்செய்யும் போக்கும் தேர்ந்த திட்டமிடுதலுடன் நடந்து வந்தன. முன்தய காலங்களில் அறியப்படாத பாசிச சக்திகள் இன்று பூதாகாரமாக வளர்ந்து நிற்கின்றன. இந்த சக்திகள் பல நாடுகளிலும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், பல ஆண்டுகளாக கடுமையாக போரடி வென்ற ஜனநாயக மற்றும் உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளை தீவிரமாக தாக்கி வருகின்றன. ஏகாதிபத்தியம் தன் ஜனநாயக்ப் போர்வையை தூக்கி எறிந்து விட்டு, உண்மையான பாசிச முகத்துடனே தீவிர நவீன தாரளமயக் கொள்கைகளை அமலாக்கி வருகிறது. ஆனால் இப்படிப்பட்ட வளர்ச்சிப் போக்கு நெருக்கடிக்குள் சிக்குவதை தவிர்க்க முடியாது. நெருக்கடியும், தாரளமயத் தாக்குதலும் சேர்ந்து இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களிடையே அரசாங்கங்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக சிதைந்து, கடும் மோதல்கள் வளரும் நிலையை உருவாகியுள்ளது. வலதுசாரி அரசுகள் நிலை குலைந்து நிற்க, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எழுந்துள்ள மக்களின் போரட்ட அலை ஒரு பெரும் மாற்றத்திற்கான சூழலையும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.

பொலிவியா

அண்மை காலத்தில் உலக இடதுசாரிகளுக்கு மாபெரும் உத்வேகம் அளித்த நிகழ்வு அமெரிக்க ஏகாதிபத்திய முன்னெடுப்புகளை முற்றிலும் தவிடுபொடியாக்கி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த பொலிவியா மக்களின் வெற்றியே ஆகும். 1825ல் ஸ்பெயின் காலனியாதிக்கத்திற்கு எதிராக புரட்சியாளர் சிமோன் பொலிவார் தலைமையில் ஒன்றிணைந்து வென்ற பொலிவியா மக்கள், 195 ஆண்டுகளுக்கு பின் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தங்கள் நாட்டின் வளங்களையும், ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் காக்க போராடி வென்றுள்ளனர்.

பொலிவியாவில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு பூர்வகுடி மக்கள் தான் என்றாலும், நாட்டின் அரசு அதிகாரம் பெரும்பாலும் “வெள்ளையர்” இன மக்களிடமே இருந்து வந்தது. பூர்வகுடிகள் பல காலமாக சமூக-பொருளாதார-கலாச்சார துறைகளில் இனவெறி மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்தனர். 1980களுக்கு பின் நவீன தாரளமயம் பொலிவியாவையும் தாக்கியது. 200 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு சொற்ப விலையில் விற்கப்பட்டு, பெரும் நட்டம் ஏற்பட்டது. விளைவாக நாட்டு பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி, 2003ல் அமெரிக்க ராணுவ தளங்கள் பொலிவியாவில் அனுமதிக்கப்பட்டதால், பொலிவியாவின் இறையாண்மை பறி போனது.

இது அனைத்துமே 2005ல் மாறியது. “சோசியலிசத்தை நோக்கிய இயக்கம்” (MAS) பாரம்பரிய இடதுசாரிகளையும், மார்க்சியவாதிகளையும், ஊரக பூர்வகுடி மக்களையும் ஒருங்கிணைத்து, சமூக ஒடுக்குமுறைக்கும், நவீன தாராளமயமாக்கத்திற்கும் எதிரான உறுதியான மாபெரும் கூட்டணியை உருவாக்கியது. 2005 தேர்தலில் MAS தலைவர் ஈவோ மொராலெஸ் மாபெரும் வெற்றியடைந்து நாட்டின் முதல் பூர்வகுடியைச் சேர்ந்த அதிபரானார். அவரின் ஆட்சி நாட்டை புரட்டிப் போட்டது. நாட்டின் முக்கிய வளங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளை தேசியமயமாக்கி, நில சீர்திருத்தத்தை முன்னெடுத்தார். நாட்டின் அரசியல் சாசனத்தை மக்கள் நலன் சார்ந்து சீரமைத்தார். அவரின் அசாதாரண மக்கள் நல முன்னெடுப்புகள் காரணமாக வறுமை பெருமளவு குறைந்து (38%-லிருந்து 15%-ற்கு), கல்வியின்மை பெருமளவில் ஒழிக்கப்பட்டு, மக்கள் உடல்நலம் மற்றும் ஆயுட்காலம் அதிவிரைவாக வளர்ந்தது. லத்தீன் அமெரிக்காவில் அதிவிரைவாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொலிவியா மாறியது. “ஈவோ மாயாஜாலம் வேலை செய்கிறது” என சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அது மட்டுமின்றி, பூர்வகுடிகளுக்கு எதிரான இனவெறியையும் முழு மூச்சுடன் எதிர்த்தது ஈவோ அரசு. பாரம்பரிய குடியரசிலிருந்து, அனைத்து தேசிய இனங்களையும் மதிக்கும் “பல தேச அரசாக” பொலிவியா மாற்றப்பட்டது. “எங்கள் வளங்களை தேசியமயமாக்கி, எங்கள் விதியை நாங்கள் எங்கள் கையில் எடுத்துள்ளோம்” என்றார் ஈவோ. மேலும் உட்சபட்சமாக, அமெரிக்க ராணுவத்தை நாட்டிலிருந்து வெளியேற்றினார் ஈவோ. இது அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளை ஆத்திரப்படுத்தியது.

பொலிவியாவின் முக்கிய வளம் அந்நாட்டின் “லித்தியம்”. உலகின் மிகப்பெரும் லித்தியம் வளம் பொலிவியாவில் உள்ளது. மின்சார வாகனங்களில் இது முக்கிய இடுபொருள். உலகமே மின்சார வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், ஒரு புதையலை தன்வசம் வைத்துள்ளது பொலிவியா. ஆனால் லித்தியம் வளத்தை எடுக்கும் பணியில் எந்த நாடு நுழைந்தாலும் அதில் பாதி பங்கு பொலிவிய பொதுத்துறையிடம் இருக்கவேண்டும் என கட்டளையிட்டார் ஈவோ. இதனால் மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் கோபமடைந்தன. சீனா மட்டுமே லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டின் இறையாண்மையை மதித்து முதலீடு செய்து வருகிறது. பொலிவியாவிலும் முதலீடு செய்ய முன் வந்தது. ஆனால் “டெஸ்லா” போன்ற அமெரிக்க மின்சார வாகன பெரு நிறுவனங்கள் சீனாவுடனான வர்த்தகப் போரினால் இதை விரும்பவில்லை. ஈவோ வெளியேற்றப்பட வேண்டும் என முடிவெடுத்தன.

நவம்பர் 2019ல் நடந்த தேர்தலில் ஈவோ வெற்றி பெற்றாலும், அதை எதிர் கட்சிகள் ஏற்க மறுத்தன. அமெரிக்க உளவுத்துறை நிதி பெற்று, ஆட்சிக்கவிழ்ப்பையே நோக்கமாகக் கொண்ட “அமெரிக்க அரசுகளின் அமைப்பு”(OAS) என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு, எவ்வித ஆதாரமுமின்றி தேர்தலில் முறைகேடு நடந்ததாக அறிவித்தது. இதை பிடித்துக்கொண்ட வலதுசாரிகள், ராணுவ உதவியுடன் ஈவோவை வெளியேற்றினர். நாட்டிலிருந்து விரட்டப்பட்டார் ஈவோ. வலதுசாரி மற்றும் இனவெறி கொண்ட ஜெனீன் ஆன்யெஸ் என்பவர் தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டார். இதை அமெரிக்காவும் அங்கீகரித்தது. அதிகாரத்தை பிடித்த ஆன்யெஸ், இடதுசாரிகள், குறிப்பாக பூர்வகுடிகளுக்கு எதிரான கொடூரமான தாக்குதலை ஏவி விட்டார். ஆட்சியிலிருந்த 11 மாதங்களில் கொடூர நவீன தாராளமய கொள்கைகளை முன்னெடுத்து, பல கோடி டாலர்கள் ஊழல் செய்து, தேசிய ஆலைகளை முடக்கி, தொழிலாளர் விரோத-கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை அமலாக்கியாதால் வறுமை மற்றும் வேலையின்மையை தீவிரமடைந்தது. கொரோனா தொற்றை கையாள்வதிலும் தோல்வியுற்று, பல கோடி மக்களை நிவாரணமின்றி ஊரடங்கில் தள்ளி, பட்டினியில் ஆழ்த்தியது ஆன்யெஸ் அரசு.

ஆனால் இடதுசாரி அமைப்புகளின் உறுதி நிகரற்றதாக இருந்துள்ளது. போலீஸ்-ராணுவத்தின் தீவிர தாக்குதல்களை எதிர்கொண்டு, தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி மக்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு நாளும் தீவிர போரட்டத்தை முன்னெடுத்தது. கள அளவில் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலமும், அயராது மக்களை ஒன்று திரட்டுவதன் மூலமும் மட்டுமே வலதுசாரிகளை எதிர்கொண்டு நீண்ட காலம் நிலைக்கும் இடதுசாரி அரசை கட்டமைக்க முடியும் என்பதை இக்காலத்தில் MAS நிறுவியது. சட்டவிரோத ஆன்யெஸ் அரசு மூன்று முறை தேர்தல்களை தள்ளி வைத்த போதும், அரசு ஆதரவு பெற்ற பாசிச குண்டர்களின் கடுமையான தாக்குதலுக்கு பின்னும் இடதுசாரிகள் மன உறுதியை விடவில்லை. குறிப்பாக ஆக்ஸ்ட் 2020ல் வியக்கத்தக்க மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. தேசிய தொழிற்சங்கத்தால் விடுக்கப்பட்ட பொது வேலைநிறுத்த அழைப்பை தொடர்ந்து, காலவரையற்ற போராட்டங்கள் துவங்கி, நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்தன. இறுதியாக போரட்டங்களுக்கு அடிபணிந்து அக்டோபரில் தேர்தலை நடத்தியது அரசு. வலதுசாரிகளுக்கு அமெரிக்க ஆதரவு, ஏகாதிபத்திய ஊடகங்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு, 55% வாக்குகள் பெற்று (2019 தேர்தலை விட அதிக வாக்குகள்) தேர்தலை வென்றது MAS. ஈவோ அரசில் நிதி அமைச்சராக இருந்த லூயிஸ் ஆர்சே அதிபரானார். பொலிவியா மக்களின் கொண்டாட்டங்கள் விண்ணைத் தொட்டது. ஆர்சே அரசு உடனடியாக ஆன்யெஸ் அரசின் அனைத்து குற்றங்களையும் சரி செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈவோ மீண்டும் பொலிவியா திரும்பினார்.

போரட்டம் இத்துடன் முடியவில்லை என்பதை MAS அறிந்துள்ளது. பாசிச விதைகள் தூவப்பட்ட நாட்டில், மக்களை அவர்களின் தேவைகளை ஒட்டி தொடர்ந்து ஒருங்கிணைக்கும் பொருப்பு இருப்பதை அவர்கள் உணர்வர். ஆனால் இன்று அவர்களின் வெற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பெரும் அவமானத்தையும், உலக இடதுசாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும், பாடத்தையும் அளித்துள்ளது.

கியூபா

கியூபா என்றொரு சோசியலிச நாடு இருப்பதே அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு பெரும் இன்னல் தான். பெரும் மக்கள் புரட்சியின் வெற்றியையும், உலகில் எப்பகுதியிலும் ஏற்படா தோல்வியை 62 ஆண்டுகளாக ஏகாதிபத்தியம் சந்தித்து வருவதையும் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது சோசியலிச கியூபா. இதனால் கியூபா அமெரிக்க ராஜ்ஜியத்தின் கடும் கோபத்திற்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. இதர ராணுவ உக்திகளை தவிர, பொருளாதார தளத்தில் கியூபாவுடனான வர்த்தகத்திற்கு கடுமையான தடைகள் விதித்து வருகிறது அமெரிக்கா. இந்த பொருளாதார தடைகள் காரணமாக கியூபாவிற்கு கடந்த 60 ஆண்டுகளில் 130 பில்லியன் டாலர்கள் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின் இந்த நெருக்கடி கூர்மையாக இருந்தது. அமெரிக்காவின் இப்படிப்பட்ட தன்னிச்சையான தடைகளை ஐ.நா. சபை தொடர்ந்து ஒருமனதாக எதிர்த்தாலும், அமெரிக்கா அடங்கவில்லை. 2019ல் மேலும் கியூபாவுடனான சுற்றுலா பயணங்களுக்கு தீவிர தடைகளை விதித்தது டிரம்ப் அரசாங்கம். எனினும் புரட்சியை காக்கும் கியூப மக்களின் மன உறுதி உலகை வியக்கச் செய்கிறது.

இந்த பாதையில், சோசியலிச கட்டமைப்பை வலுப்படுத்த 2019ல் புதிய அரசியல் சாசனத்தை வடிவமைக்க துவங்கியது கியூபா. முன்னதாக 1976 அரசியல் சாசனத்தில் தனிச்சொத்து முற்றிலுமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இப்பொழுது மக்களுக்கு அத்தியாவசியமற்ற துறைகளில் (எ.கா: அழகு நிலையம்) தனிச்சொத்தை அங்கீகரித்து, அத்துறைகளை அரசு கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் சோவியத் வீழ்ச்சிக்கு பிந்தய சூழலுக்கேற்ப, சோசியலிச கட்டமைப்பை வலுப்படுத்த, திறன் இல்லா துறைகளில் அந்நிய முதலீடுகள் அனுமதிப்பது, முந்தய கால தவறுகளை சரி செய்யும் வகையில் ஒரு பாலினத்தவர் திருமண உரிமை, அத்தியாவசிய சேவைகளுக்கான உரிமைகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. சொத்துக் குவியலை தெளிவாக தடை செய்துள்ளது புதிய அரசியல் சாசனம். இந்த சாசனத்தின் வரைவு கியூப மக்களின் ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும், பணி இடங்களிலும் 3 மாதங்கள் விவாதிக்கப்பட்ட்டு, மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு, பின் அங்கீகரிப்பு வாக்கெடுப்பு 2019ன் இறுதியில் நடத்தப்பட்டது. வாக்களித்தவர்களில் 87% மக்களின் பேராதரவுடன் சோசியலிசத்தை வலுப்படுத்தும் புதிய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஃபிடல் கேஸ்ட்ரோவின் கனவை நினைவாக்கும் அரசியல் சாசனத்தை நாட்டு மக்கள் அமலாக்கியுள்ளதாக கியூப அதிபர் மிகேல் டியாஸ்-கானெல் வாழ்த்தினார்.

இதனையடுத்து கியூப சோசியலிசத்தின் சக்தி கொரோனா காலத்தில் உலகிற்கே பிரகடணம் செய்யப்பட்டது. கொரோனா காலத்திலும் கியூபா மீதான தடைகளை நீக்காமல், வர்த்தகத் தடையை கடினமாக்கி, அத்தியாவசிய பொருட்களான மருந்துகளுக்கு கூட தடை விதித்தது அமெரிக்கா. ஆனால் இதையும் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த சோசியலிச கட்டமைப்பும் மற்றும் உலகிலேயே மிகச் சிறந்த, நவீன பொது சுகாதார கட்டமைப்பும் கொண்டுள்ள கியூபா, ஆகச்சிறந்த முறையில் பெருந்தொற்றை கட்டுப்படுத்தியது. அதனுடன் நிற்காமல், பல நாடுகளுக்கும் உதவும் கரமும் நீட்டியது. 1960களிலிருந்தே தன் சோசியலிச சர்வதேசியத்தை பரைசாற்றும் வகையில், தன் அதிநவீன மருத்துவ சேவைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து வருகிறது கியூபா. இதுவரை 40 நாடுகளில் கியூபாவின் 40,000 மருத்துவர்கள் பயணம் செய்து தங்கள் மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளனர். ஆனால் இதையும் கருணையின்றி எதிர்த்து வருகிறது அமெரிக்க அரசு. கியூப மருத்துவர்களை தீவிரவாதிகள் என்றும், ஒற்றற்களென்றும் கூறி வந்த அமெரிக்கா, பின்னர் கியூப அரசு தன் மருத்துவர்களை அடிமைப் பணியில் ஈடுபடுத்துவதாக கூறியது. இந்த கொரோனா காலத்திலும் கூட தன் கூட்டாளி நாடுகள் கியூப மருத்துவர்களின் சேவையை பெறக் கூடாது என வலியுறுத்தியது. ஆனால் கியூப மருத்துவ துறையின் சேவைகள் இன்றியமையாதவை. இத்தாலி உட்பட 12ற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1,800 கியூப மருத்துவர்கள் பயணித்து கொரோனா தடுப்பில் இணையில்லா உதவி புரிந்தனர். குறிப்பாக டிரம்ப்பின் கட்டளைகளுக்கு இணங்கி பிரேசில் வலதுசாரி அதிபர் போல்சனாரோ தன் நாட்டில் செயல்பட்டு வந்த கியூப மருத்துவர்களை 2019ல் திருப்பி அனுப்பினார். அதன் பின் அந்நாட்டில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பும், பூர்வகுடிகள் மத்தியில் இறப்பும் அதிகரித்தது. ஆனால் கொரோனா காலத்தில், சுகாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத போல்சனாரோ, கியூப மருத்துவ அணியை மீண்டும் நாட்டிற்கு அழைத்து உதவி நாடினார். மேலும் சீனா-கியூபா இடையிலான உறவும் கொரோனா காலத்தில் வலுவுற்றது. பெருந்தொற்று தடுப்பு மட்டுமல்லாமல், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பிலும் இரு நாடுகளும் நெருங்கிய முறையில் தொழில்நுட்ப பகிர்வில் ஈடுபட்டுள்ளன. இதற்கு முன்னரும் எபோலா பெருந்தொற்று சமயத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவியதற்காக உலக சுகாதார அமைப்பின் உட்சபட்ச விருதை பெற்றனர் கியூப மருத்துவர்கள். இந்த கொரோனா கால சேவைகளால் கியூப மருத்துவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கக் கோரி பல்வேறு நாடுகளிலிருந்தும் குரல்கள் வலுவாக ஒலித்தன. ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாகி வரும் காலத்தில், சோசியலிச சர்வதேச ஒற்றுமையை உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கச் செய்துள்ளது கியூபா.

வெனிசுவெலா

உலகின் மிகப்பெரும் கச்சா எண்ணெய் வளத்தை கொண்டுள்ள வெனிசுவெலாவில் 1990கள் வரை அதன் வளங்களை பன்னட்டு-உள்நாட்டு பெரு முதலாளிகள் மட்டுமே கையில் வைத்துக்கொண்டு சூரையாடினர். ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, தோழர் ஹூகோ சாவேஸ் தலைமையிலான “பொலிவாரியன் புரட்சியின்” விளைவாக, 1998ல் ஒன்றிணைந்த சோசியலிச கட்சி அதிபர் தேர்தலில் வென்றது. தோழர் சாவேஸ் நாட்டு வளங்களை தேசியமயமாக்கிய பின், கச்சா எண்ணெய் விற்பனை மூலமான வருமானம் நாட்டு மக்கள் நலத் திட்டங்களுக்கு பயனானது. அந்த நொடியிலிருந்த அவர் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க ஏகாதிபத்தியம் பணிகளை துவங்கிவிட்டது. 2002ன் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் துவங்கி, வெனிசுவெலாவின் மக்கள் நல ஆட்சியை நிலைகுலையச் செய்ய அனைத்து வழிகளையும் பயன்படுத்திவிட்டது அமெரிக்கா. ஆனால் தோழர் சாவேஸ், மற்றும் அவர் மறைவின் பின் தோழர் நிக்கோலஸ் மதூரோ தலைமையில் வெனிசுவெலா மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நின்று வருகின்றனர்.

வெனிசுவெலா ஒரு தீவிரவாத மற்றும் போதைப் பொருள் கடத்தலை ஊக்குவிக்கும் சர்வாதிகார அரசு என சித்தரித்து அதன் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ராணுவ-பொருளாதார-அரசியல் “கலப்புப் போர்” ஒன்றை ஏவி விட்டு, வெனிசுவெலா மக்களை வாட்டி வருகின்றது. தன் நாட்டு அத்தியாவசிய பொருளாதார பணிகளைக் கூட நிர்வாகிக்க இயலாத வண்ணம் வெனிசுவெலாவிற்கு எதிராக தன் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நிதி நிறுவனங்களை ஒன்றிணைப்பது, ஆதிக்கத்தை கொண்டு நாட்டை தனிமைப்படுத்துவது, தனியார் நிறுவனங்கள் வெனிசுவெலாவுடன் வர்தகம் வைத்துக்கொள்வதை தடை செய்வது போன்ற பல்வேறு கொள்கைகள் மூலம் வெனிசுவெலாவை நெறித்து, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தும் முயற்சியை அமெரிக்கா தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த தடைகள் வெனிசுவெலாவை பெருமளவில் தாக்கியுள்ளன. இந்த தடைகளின் காரணமாக வெனிசுவெலாவிற்கு சர்வதேச வர்த்தகத்திலிருந்து வர வேண்டிய வருமானம் குறைந்ததால், மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிகள் வறண்டு வருகின்றன. மேலும் தன் வளங்களைக் கொண்டு சுதந்தரமாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாததாலும், ஏகாதிபத்திய சக்திகள் உள்ளூர் தனியார் வியாபாரிகளிடையே பதுக்கலை ஊக்குவிப்பதாலும், உணவு இறக்குமதி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததால் நாட்டு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு சொல்லிலடங்கா இன்னல் ஏற்படுத்திய பின், மோசமாக நிர்வாகித்ததாக காரணம் கூறி, ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தி, வலதுசாரிகளை ஆட்சியில் அமர்த்தி, நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்குவதே ஏகாதிபத்தியவாதிகளின் நீண்ட கால உக்தி. இப்படிப்பட்ட தடைகளினால் மநிதநேய நெருக்கடியை உருவாக்கி, 2017-18ல் மட்டும் வெனிசுவெலாவில் 40,000 பேரை கொன்றுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

ஆட்சிக்கவிழ்ப்பு முன்னெடுப்பில் 2015ல் ஏகாதிபத்தியவாதிகள் சிறு வெற்றியும் அடைந்தனர். முதலாளி வர்க்க எதிர் கட்சியினர் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை வென்றனர். இதானால் பாராளுமன்றம் ஆட்சிக் கவிழ்ப்பிற்கான கருவியாக மாறியது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் சேமிக்கப்பட்டுள்ள வெனிசுவெலா அரசின் நிதியை பெற முடியாமல், பாராளுமன்றம் மூலம் சட்ட ரீதியான தடைகளை ஏற்படுத்தினர் முதலாளி வர்க்கத்தினர். எனினும் இடதுசாரிகளை வெளியேற்ற அமெரிக்க நிதி உதவியை பெருவதில் முதலாளி வர்க்கத்தினரிடையே மோதல்கள் நிலவின. பெரும் பகுதியினர் இதை தேசத் துரோகமாகவே கருதினர். ஆனால் ஒரு பகுதியினர் இதை நியாயமாகக் கருதினர். அவர்களில் ஒருவரான வலதுசாரி பிரதிநிதி யுவான் காய்டோ என்பவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஆனார். 2017ல் அரசியல் சாசன சீர்திருத்த மன்ற தேர்தலிலும், 2018 அதிபர் தேர்தலிலும் வலதுசாரிகள் தோல்வியுற்ற பின், காய்டோ நாட்டை விட்டு வெளியேறி, வெனிசுவெலா மீது தீவிர பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகளை கோரினார். 2018 தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அந்த தேர்தல் முடிவுகளை நிராகரித்தது அமெரிக்கா. 2019ல் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் காய்டோ தன்னைத் தானே வெனிசுவெலா அதிபராக அறிவித்துக் கொண்டார். இதை அங்கீகரிக்கவும் செய்தது அமெரிக்கா. ஆனால் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை வெற்றிகரமாக முறியடித்தது மதூரோ அரசு. “அவர்களுக்கு இந்நாட்டு எண்ணெய் மற்றும் தங்கம் வேண்டும். நாங்கள் மீண்டும் சொல்கிறோம். இது வெனிசுவெலா மக்களுடையது. அப்படித்தான் எப்போதுமே இருக்கும்” என்றார் மதூரோ.

இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்திலும் கருணை பாராமல் தடைகளைத் தீவிரப்படுத்தியது அமெரிக்கா. எனினும் இந்நிலையில் தான் வெனிசுவெலாவின் சோசியலிசத்தை நோக்கிய மக்கள் நலக் கொள்கைகளின் சக்தி வெளியானது. உலக சுகாதார மைய அறிவுரைகளை பின்பற்ற மக்களை ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்தது வெனிசுவெலா அரசு. மேலும் “பொலிவாரிய புரட்சி”யின் முக்கிய அம்சமாக இருந்தது மக்கள் சக்தியைச் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்துவதும், உள்ளாட்சி அளவில் சுயசார்பையும், கூட்டு உற்பத்தியையும் ஊக்குவிப்பதும் ஆகும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நிவாரணம் சென்றடைய இந்த அம்சம் கொரோனா காலத்தில் பெரும் உதவியாக இருந்தது. மேலும் அமெரிக்க தாக்குதலை முன்னோக்கி, 2016ல் CLAP என்ற மக்கள் ஒருங்கிணைப்பின் மூலம், 70 லட்சம் விளிம்பு நிலை குடும்பங்களுக்கு உணவு கொண்டு சேர்க்கும் தேசிய இணைப்பை இடதுசாரிகள் உருவாக்கினர். இதுவும் கொரோனா காலத்தில் பெரும் சொத்தாக அமைந்தது. CLAP அமைப்புக்கு உணவு வழங்கும் சர்வதேச நிறுவனங்களையும், கொரோனா காலத்தில் வெனிசுவெலா பொதுத் துறை சுகாதார நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் தனியார் நிறுவனங்களையும் கடுமையாக தண்டிக்கப் போவதாக எச்சரித்தது அமெரிக்கா. அதுமட்டுமின்றி, சர்வதேச நிதி நிறுவனத்திடம் (IMF) நெருக்கடி காலத்திற்காக மூன்றாம் உலக நாடுகள் பெறுவதற்காக உள்ள நிதியையும் தன் ஆதிக்கத்தை பயன்படுத்தி வெனிசுவெலாவை பெற விடாமல் தடுத்தது அமெரிக்கா. ஆனால் இவை ஏதும் வெனிசுவெலா மக்களின் மன உறுதியை சிதைக்கவில்லை. இதன் காரணமாக, லத்தீன் அமெரிக்காவில் கியூபாவிற்கு அடுத்தபடியாக பெருந்தொற்றை திறம்பட கையாண்ட நாடானது வெனிசுவெலா. இந்த மக்கள் சக்தி அமைப்புகளின் சாதனையால் அரசின் பணி ஏதுமில்லை என்றல்ல. ஆனால் சோசியலிசத்தை நோக்கிய பாதையில் மக்கள் அமைப்புகளையும், கூட்டு உற்பத்தி அடிப்படையிலான அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் இடதுசாரி அரசுகளுக்கு உள்ள முக்கிய பங்கினை உணர்த்துகிறது.

இந்த சூழலில் தான் மீண்டும் 2020 பாராளுமன்ற தேர்தல் நடந்தது. தோல்வியை எதிர்நோக்கிய காய்டோ தலைமையிலான வலதுசாரிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். ஏகதிபத்திய அழுத்தங்களையும் தாண்டி தேர்தல் சுமூகமாக நடந்தது. மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து 200 மேற்பார்வையாளர்கள் கண்காணித்து, தேர்தலில் முறைகேடுகள் நடக்கவில்லை என்றனர். தேர்தலில் போட்டியிட்ட முதலாளித்துவ எதிர்கட்சிகள் கூட தேர்தல் நியாயமாக நடந்ததை ஒப்புக்கொண்டனர். வெனிசுவெலா ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை சர்வதேச அளவில் குலைக்க முனையும் காய்டோ போன்ற வலதுசாரிகள் முகத்திரை கிழிந்து நின்றனர். தேர்தலில் சோசியலிச கட்சி தலைமையிலான கூட்டணி 277 இடங்களில்ல் 253 இடங்களை வென்று, ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து பாராளுமன்றத்தை மீட்டது.

ஆனால் இது இறுதி வெற்றியல்ல. அமெரிக்கா திணித்துள்ள நெருக்கடியிலிருந்து வெனிசுவெலாவை மீட்கும் மாபெரும் பொருப்பு புதிய பாராளுமன்றத்திற்கு உள்ளது. ஏகாதிபத்தியத்தின் தொடர் தாக்குதலால் வெனிசுவெலாவின் சாமானிய மக்கள் பெருமளவில் சோர்வடைந்துள்ளனர் என்பது உண்மை. இதைத் தான் ஏகாதிபத்திய சக்திகளும் எதிர்ப்பார்க்கின்றன. மக்களை சோர்வடையச் செய்து, ஆட்சிக் கவிழ்ப்பை ஒப்புக்கொள்ள அவர்களை தள்ளும் முயற்சியே இது. இதனால் ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் பங்கெடுப்பு குறைந்துள்ளது நிதர்சனம். மக்கள் இயக்கங்களை எப்படி மீண்டும் உயிர்ப்பிப்பது என்ற சவால் அந்நாட்டு இடதுசாரிகளிடையே உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றி இதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வலதுசாரிகளை பல லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆட்சியில் அமர்த்தும் ஏகாதிபத்தியத்தின் முயற்சிக்கு எதிராக வெனிசுவெலா ஒரு முக்கிய அரணாக திகழ்ந்து வருகிறது. இதை பாதுகாக்கும் பொருப்பு உலக இடதுசாரிகளுக்கு உண்டு.

சிலி

இந்த ஆண்டு சிலி நாட்டின் மக்கள் எழுச்சி உலக இடதுசாரிகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளன. 1973ல் மார்க்சிய அதிபர் சால்வடோர் அயென்டே அமெரிக்க உளவுத்துறையின் ஆட்சிக்கவிழ்பு முயற்சியில் கொலை செய்யப்பட்ட பின், ஏகதிபத்திய கைப்பாவை சர்வாதிகாரி பினோஷே ஆட்சியில் அமர்ந்த பின்னர் கடுமையான தாராளமய கொள்கைகளை துவங்கினார். அவர் சர்வாதிகாரியாக இருந்தாலும் அவரின் நவீன தாரளமயக் கொள்கைகள் சிலி பொருளாதாரத்தை அதிவேகமாக வளரச்செய்தது என்றும், சிலி தான் நவின தாரளமயக் கொள்கைகளின் வெற்றிக்கு உதாரணம் என்றும் கூறி வந்த முதலாளித்துவ அறிஞர்களின் கட்டுக்கதைகளை முறியடிக்கும் விதமாக அமைந்தது இந்த ஆண்டு சிலி மக்களின் போராட்டம். மார்க்ஸ் கூறியது போல் செல்வங்களை ஒரு முனையில் குவித்து, துயரங்களை மறு முனையில் குவித்தது இந்த வளர்ச்சி. மோசமான ஏற்றத்தாழ்வு, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான தனியார்மயமாக்கப்பட்ட சுகாதாரத் துறை, மூன்றே மருந்து நிறுவனங்கள் கட்டுப்பாட்டில், அவர்களின் கொள்ளை விலையால் தவிக்கும் மருந்து விற்பனை துறை, லத்தீன் அமெரிக்காவிலேயே மிக விலை அதிகமான போக்குவரத்து சேவை கொண்ட சான்டியாகோ நகரம், கொள்ளை விலைக்கு அளிக்கப்படும் தனியார்மயப்படுத்தப்பட்ட எரிவாயு, நீர், மின்சாரம், தொலத்தொடர்பு சேவைகள் என பன்முனைகளிலிருந்தும் தாக்கப்பட்டு வந்தனர் சிலி மக்கள். பெருமளவு மக்கள் கடன் பிடியில் தான் அன்றாட வாழ்வையே நடத்தி வந்தனர். இவை அனைத்தும் சேர்ந்து மக்களை கிளர்ந்தெழ தூண்டியது.

2019 அக்டோபரில் அதிபர் செபாஸ்டியன் பின்யேராவின் அரசு மக்கள் நல செலவீனங்களை வெட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, மெட்ரோ சேவை கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர் இயக்கமாக துவங்கிய போராட்டம், ஒரே மாதத்தினுள் நவீன தாரளமயத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த மாபெரும் போராட்டமாக மாறியது. நாட்டின் வரலாற்றில் காணாத அளவு, 12 லட்சம் மக்கள் வீதிகளில் ஒன்று திரண்டனர். தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் என 50 இயக்கங்களை ஒன்றிணைத்த சமூக ஒற்றுமைக்கான கூட்டணி (CUT) போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றது. முதலில் அதிகாரத்தை காட்டிய பின்யேரா, பின் பணிந்து, செலவீனங்களை வெட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அயென்டேவின் வாரிசுகள் என அடங்காமல் போரடிய மக்கள், சர்வாதிகாரி பினோஷே காலத்தில் அமலாக்கப்பட்ட, நவீன தாரளமயத்திற்கு வழிவகுக்கும் அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 5 மாதங்கள் போராடினர். அயென்டேவின் படமும், தோழர் ஹோ சி மின்-னிற்காக எழுதப்பட்ட “அமைதியில் வாழும் உரிமை” என்ற பாடலும் போராட்டங்களில் மிகப் பிரபலமாகின.

இறுதியாக மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து, புதிய அரசியல் சாசனம் தொடர்பான வாக்கெடுப்பை ஏப்ரல் 2020ல் நடத்துவதாக முடிவெடுத்து, பின் பெருந்தொற்று காரணத்தால் அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. நடந்த வாக்கெடுப்பில் 78% வாக்காளர்கள் புதிய மக்கள் நலன் சார்ந்த அரசியல் சாசனம் வேண்டும் என்றும், இந்த சாசனத்தை வடிவமைக்கும் மன்றத்தில் தற்போது உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவே கூடாது எனவும் வாக்களித்தனர். இந்த மாபெரும் வெற்றியை சிலி மக்கள் “மறுபிறப்பு” (Renace) எனக் கூறி கொண்டாடினர். “உலகிலேயே மிக வெற்றிகரமான நவீன தாரளமய முன்னெடுப்பு” என ஏகாதிபத்தியவாதிகளால் கூறப்பட்ட சிலி நாட்டின் நவீன தாராளமய வளர்ச்சிப்பாதையை சிலி மக்கள் ஒருமனதாக குப்பையில் தூக்கி எரிந்தது உலக இடதுசாரி இயக்கங்களுக்கு இந்தாண்டு கிடைத்த பெரும் வெற்றி.

மெக்ஸிகோ

போர்ஃபிரோ டியாஸ் என்ற ஏகாதிபத்திய சர்வாதிகாரிக்கு எதிராக எமிலியானோ ஜபாடா தலைமையில் லத்தீன் அமெரிக்காவில் முதன் முதலில் இடதுசாரி எழுச்சியை நிகழ்த்திக்காட்டியதும் மெக்ஸிகோ மக்கள் தான். அதே வேளையில் 1980களில் அமெரிக்கா-சர்வதேச நிதி நிறுவனத்தின் சூழ்ச்சிக்கும், கடன் வலைக்கும் முதன் முதலில் இறையான நாடுகளில் ஒன்றும் மெக்ஸிகோ தான். அன்று முதல் பல ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியம் புகுத்தி வரும் நவீன தாராளமயக் கொள்கைகளால் பெரும் துயரில் வாடி வருகின்றனர் மெக்ஸிகோ மக்கள். மெக்ஸிகோவின் வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கப்பட்டன. 80% பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது அந்நாடு. இந்த நவீன தாராளமய சுரண்டல் அந்நாட்டின் 13 செல்வந்தர் குடும்பங்களின் வளங்களை பன்மடங்கு பெருக்கிட, நாட்டின் பெரும்பகுதி மக்கள் பெரும் போரை சந்தித்தது போன்ற ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆனால் 2018ல் இந்த போக்கில் முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. “ஆம்லோ” (AMLO) என்றழைக்கப்படும் ஆன்திரேஸ் மானுவேல் லோபேஸ் ஓப்ரேடார் என்ற இடதுசாரி தலைவர் நாட்டின் பல்வேறு மக்கள் இயக்கங்களையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு குடையின் கீழ் ஒன்று திரட்டி, நவீன தாராளமய எதிர்ப்பை முன்வைத்து தேர்தலில் பேராதரவுடன் வென்று அதிபர் ஆனார்; பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வென்றார். அன்றிலிருந்து, மெல்ல மெல்ல தாராளமய சிதைவுகளை சீரமைக்கும் கொள்கைகளை அமலாக்கி வருகிறார் ஆம்லோ. அவரின் பதவியேற்பு உரையிலேயே நவீன தாராளமயம் தான் நாட்டின் ஜனத்தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுவதற்கு காரணம் என்றும், ஊழலும், ஏற்றத்தாழ்வுகளும், அந்நிய சக்திகளுக்கு நாடு அடமானம் வைக்கப்பட்டதும் சர்வாதிகாரி டியாஸ் காலத்திற்கு ஒப்பாக இருந்ததாகவும் கூறினார்.

ஆம்லோவின் ஒவ்வொரு அறிவிப்பும் நாட்டில் சமத்துவம் மற்றும் சமூக நீதியை முன்னெடுக்கும் வகையில் அரசை நகர்த்தி வருகிறது. நாட்டின் முக்கிய பதவிகளுக்கு இடதுசாரி பெண்களை நியமித்தல், உயர்மட்ட வர்க்கங்களுக்கு சார்பான நீதித் துறையை எதிர்த்து நிற்பது போன்ற நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன. “அனைவருக்குமான நன்மை. முதலில் ஏழைகள்” என்ற கொள்கையின் அடிப்படையில் பல சமூக திட்டங்கள், அரசு மற்றும் பொதுத் துறையின் பங்கை மீண்டும் முன்னிறுத்துவது, ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சி, பொதுப் பணிகளில் முக்கிய முதலீடுகள் போன்றவை மட்டுமல்லாமல், இது நாள் வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து இருந்ததை மாற்றி, தேசிய இறையாண்மையை பாதுகாக்கும் சுதந்திர, மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையிலான வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதும், அமெரிக்க மிரட்டல்களையும் மீறி கியூபா, நிகாரகுவா, வெனிசுவெலா, பொலிவியா போன்ற இடதுசாரி அரசுகளுடன் நெருங்கிய உறவு பேணுவதும் பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கின்றது.

பிரேசில்

இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பிரேசில் நாட்டில் இடதுசாரி பாட்டளி கட்சி (PT) அதிபர் தேர்தலில் தொடர்ந்து நான்கு முறை வென்று வந்தது. 2010 வரை ஆண்ட “லூலா” என அழைக்கப்படும் லூயிஸ் இனாஷியோ லூலா டா சில்வா என்ற இடதுசாரி தலைவர் 1980களில் சர்வாதிகாரத்திலிருந்து நாட்டை ஜனநாயகத்திற்கு மீட்ட முக்கிய தொழிற்சங்க தலைவர். அவரின் ஆட்சியில் அமலாக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களும், வறுமை ஒழிப்பும், தாராளமய எதிர்ப்பு கொள்கைகளும் அவரை பிரேசில் வரலாற்றிலேயே மிகவும் பிரபலமான தலைவராக்கியது. அதன் பின் டில்மா ரூசெஃப் நாட்டின் முதல் பெண் அதிபர் ஆனார். ஆனால் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரும் நாட்டு மக்களை கடுமையாக சுரண்டவும், அமேசான் காடுகளை கார்ப்பரேட் வேளாண் மையமாகவும் மாற்ற துடித்து வந்தனர் பன்னாட்டு-உள்நாட்டு பெரு முதலாளிகள். 2016ல் தந்திரமான அரசியல் சாசன ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் டில்மா பதவி நீக்கப்பட்டார். நிதிகளை துஷ்பிரயோகம் செய்து நாட்டை நெருக்கடியில் தள்ளியதாக பொய்யாக குற்றம் சாட்டி பாராளுமன்றம் அவரை பதவியிலிருந்து நீக்கியது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு மத்திய நிலை தாராளவாத கட்சிகளும் பாசிச வலதுசாரிகளும் கைகோர்த்தனர். அதன் பின் அமலான நவீன தாரளமயக் கொள்கைகள் பாசிச சக்திகள் பூதாகாரமாக வளர வழிவகுத்தது. மேலும் 2018 தேர்தலில் மீண்டும் லூலா போட்டியிடாமல் தடுக்க ஆளும் வர்க்கங்கள் மீண்டும் ஒன்றிணைந்து அவர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி சிறையிலடைத்தனர் (அவரை சிறையில் அடைத்த நீதிபதி பின்னாளில் வலதுசாரி ஆட்சியில் நீதி அமைச்சர் பதவி பெற்றார்). இவ்வளவு மோசடிகளை நிகழ்த்திய பின், இந்தியாவைப் போலவே ஊடக பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் பிரிவினைவாத தூண்டல்கள் மூலம் 2018ல் பாசிச தலைவர் ஜேர் போல்சனாரோ மெல்லிய வித்தியாசத்தில் பாட்டளி கட்சியை வீழ்த்தி அதிபர் ஆனார்.

முன்னாள் ராணுவ தளபதியான போல்சனாரோ அனத்து வலதுசாரி ஆட்சியாளர்கள் போலவே ஆட்சிக்கு வந்த பின் நவீன தாராளமய, இனவாத சித்தாந்தங்களை முன்னெடுத்தார். அறிவியலை தாக்கி, பருவ நிலை மாற்றத்தை மறுத்தார். அவரே சோசியலிஸ்டுகளுக்கு எதிராக லத்தீன் அமெரிக்காவை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னெடுத்தார். இந்தியாவைப் போலவே அவரின் கட்டளைக்கிணங்க பிரிவினைவாதத்தை தூண்டும் “வெறுப்பு அலுவலகம்” போன்றதொரு படையை உருவாக்கினார். சர்வாதிகார காலத்திற்கு பின் பிரேசில் அடைந்த ஜனநாயக முன்னேற்றங்கள் அனைத்தும் சிதைத்தொழிக்கப்பட்டன. இடதுசாரிகளுக்கு எதிராக வலதுசாரிகளுடன் மத்திய நிலை கட்சிகள் ஏற்படுத்திக்கொண்ட சமரசத்தின் காரணமாக பாசிச தன்மை கொண்ட அரசு அமைந்தது.

போல்சனாரோ தன் பிரதான பணியாக அமேசான் காடுகளின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கும் சட்டங்களை இயற்றினார். கார்ப்பரேட்டுகள் அமேசான் வனப்பகுதியை சட்டப்பூர்வமாக ஆக்கிரமித்துக்கொள்ள இது வழிவகுத்தன. கார்ப்பரேட் கால்நடை நிறுவனத்திற்காகவும், மக்காச்சோள விளைச்சலுக்காகவும் அமேசான் காடு அழிக்கப்பட்டது. இதை எதிர்த்த வனத்தை சார்ந்த பூர்வகுடிகள் மீது இனவெறியை உமிழ்ந்தார். 2019ல் அமேசான் காட்டுத் தீ பரவிய பொழுது, அந்நிலங்களை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க, வேண்டுமென்றே தீயை அணைக்க ஏதும் செய்யாமல், உலகை பேராபத்தில் தள்ளினார். இப்படிப்பட்ட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், லூலாவின் சிறையடைப்பிற்கு எதிராகவும் மக்கள் பேரலையாக அணி திரண்டு போராடினர். இறுதியில் 2019 பிற்பகுதியில் லூலா விடுதலை ஆனார்.

போல்சனாரோவின் மிகப்பெரும் வீழ்ச்சி கொரோனா காலத்தில் துவங்கியது. டிரம்ப்பின் நண்பரான இவர் அவரைப் போலவே கொரோனா “ஒன்றுமில்லை” என வாதிட்டு, சமூக இடைவெளி, தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் வேண்டாமென வாதிட்டார். சுகாதார அமைச்சகம் எடுக்கும் முன்னெடுப்புகளை தடுத்தார். முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க, மற்றும் பூர்வகுடிகளை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டங்களை நிராகரித்தார். மேலும் அவர் சொந்த அரசாங்கத்தினரையே பகைத்துக் கொண்டார். சுகாதார முன்னெடுப்புகளை தடுத்ததால் இரண்டு சுகாதார அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். பின் சுகாதாரம் குறித்து அறியாத ராணுவ தளபதியை சுகாதார அமைச்சராக்கினார். சொந்த கட்சி மாநில ஆளுநர்களே அவர் மீது கோபமுற்றனர். அவரை ஆட்சியிலிருந்து நீக்கும் முயற்சி பற்றிய பேச்சுகள் கூட நிகழ்ந்தன.

ஏற்கனவே பொது சுகாதார கட்டமைப்பை நிதி அளிக்காமல் சிதைத்ததன் காரணத்தால் கொரோனா எண்ணிக்கையும் இறப்புகளும் விண்ணைத் தொட்டன. போல்சனாரோவின் மெத்தனப் போக்கால் ஆத்திரமுற்றனர் மக்கள். 65 மக்கள் அமைப்புகள், கருப்பின பிரேசிலியர்கள், பூர்வகுடிகளை உள்ளடக்கிய “அச்சமற்ற மக்கள் முன்னணி” என்ற கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து, “பெருந்தொற்று குறித்த போல்சனாரோவின் மெத்தனப் போக்கு பிரேசில் மக்களை அழிவின் விளிம்பிற்கு தள்ளிவிட்டதாக” கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) வழக்கு தொடுத்தனர். பல மாநில தலைநகரங்களில் தீவிர போராட்டங்கள் தினசரி வாடிக்கையானது. நெருக்கடியை சமாளிக்கும் பொருப்பை அரசியல் அமைப்புகளும் இயக்கங்களும் சொந்த கையில் எடுத்தனர். வாழ்வாதாரம், சுகாதாரம், வருமான, மற்றும் வேலைவாய்ப்புக்கான “மக்கள் அவசர திட்டம்” ஒன்றை உருவாக்கினர். மக்களை துயரில் ஆழ்த்தும் நவீன தாராளமயக் கொள்கைகளை நிராகரித்தனர். மேலும் கள நிலையில் ஒருங்கிணைக்கும் திட்டத்தின் மூலம் பாசிச போக்குடைய அரசிற்கு எதிரான நாடு தழுவிய ஒருமைப்பாட்டை கட்டமைத்தனர். இந்த பரந்தபட்ட முன்னெடுப்புகளால் போல்சனாரோ தன் சொந்த வாக்கு வங்கி ஆதரவையே பல இடங்களில் இழக்க நேரிட்தது.

இந்த போராட்டங்களால் மட்டும் போல்சனாரோவை வீழ்த்திட இயலாது. இந்தியாவைப்போல் பாசிஸ்டுகளை குருட்டுத்தனமாக நம்பும் கூட்டம் பிரேசில் நாட்டிலும் வளர்ந்துள்ளது. ஆனால் போல்சனாரோவை வீழ்த்தும் இந்த முயற்சி சமூகத்தின் பல மட்டத்தினர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏகாதிபத்திய தாராளமயக் கொள்கைகள் மற்றும் அதனை தீவிரமாக முன்னெடுக்கும் வலதுசாரி பாசிச சக்திகள் பற்றிய ஆபத்தை உணர்த்தியுள்ளது. சவாலுடன் சேர்ந்த வாய்ப்புகள் நிறைந்த இந்த சூழலை இடதுசாரிகள் முன்னெடுத்துச் செல்வது அவசியம். லூலாவின் விடுதலையும் பிரேசில் அரசியலில் முக்கிய தாக்கத்தை உருவாக்குமென எதிர்பார்க்கலாம்.

கொலோம்பியா

பல காலமாக தாரளமயவாதிகள் மற்றும் வலதுசாரிகளை ஊக்குவித்து கொலோம்பியா நாட்டை தன் இருக்கமான பிடியில் வைத்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஊரக பகுதி கொலோம்பியா தான் லத்தின் அமெரிக்காவிலேயே மிக மோசமான ஏற்றத்தாழ்வு நிறைந்த பகுதி. ~80% விளைநிலங்கள் வெறும் 1% செல்வந்தர்கள் கையில் உள்ளன. பூர்வகுடிகள் மற்றும் கருப்பின மக்கள் மத்தியில் ஏழ்மை நிலை கொடுமையாக உள்ளது. இதன் காரணமாக பல காலமாக கொலோம்பியாவில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. “கொலோம்பியாவின் ஆயுதம் தாங்கிய புரட்சிகர படை” (FARC) என்ற அமைப்பிற்கும் கொலோம்பிய அரசுக்கும் இடையேயான இந்த போரை முடிவுக்கு கொண்டு வர விடாமல், நாட்டில் ஒற்றுமையை பரைசாற்ற விடாமல், பிரிவினையை தன் சுரண்டலுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது ஏகதிபத்தியம். மேலும் அமெரிக்கா சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்திக்கு எதிராக “போதைப்பொருள் எதிரான போர்” தொடுப்பதாக சொல்லி, அந்த போர்வையில் மக்கள் நல இயக்கங்களை வளர விடாமல் தடுத்து, நாட்டின் தாது வளங்களையும் அமேசான் காட்டின் வளங்களையும் பன்னாட்டு நிறுவனம் சூரையாடும் அமைப்பை நிலைநாட்டி வருகிறது. இடதுசாரி சமூகப் பணியாளர்களை இழிவுபடுத்தி அவர்களி சட்டவிரோதமாக கொன்று குவிக்கும் செயல்களை கொலோம்பிய அரசே நேரடியாக செய்து வருகிறது. மேலும் அமெரிக்க ஆதரவு பெற்ற வலதுசாரிகள் உள்நாட்டு போருக்கு ஆயுதம் தாங்கிய தாக்குதலே ஒரே தீர்வு என பிரகடணம் செய்து வருகின்றனர். எனினும் முற்போக்கு இயக்கங்களின் தொடர் போராட்டங்களின் காரணமாக 2016ல் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 2016 அமைதி ஒப்பந்தம் வெறும் புரட்சிகர படைகளின் ஆயுதப் போரை கைவிடச் செய்வதோடு நிற்காமல், ஏற்றத்தாழ்வு நிறைந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகள், நிலம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை உறுதி செய்யவும் முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இந்த அமைதி ஒப்பந்தம் அமலாகி வந்த வேளையில், 2018ல் வலதுசாரி தலைவர் இவான் டூகே அதிபர் ஆனார். அமைதி ஒப்பநதத்தை எதிர்த்து, ஆயுதத் தாக்குதலை முன்னெடுக்கும் கூட்டணியிலிருந்து அவர் வென்றார். எனினும் அவர் எளிதாக வெல்லவில்லை. நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அவரை எதிர்த்த இடதுசாரி வேட்பாளர் குஸ்தாவோ பெட்ரோ 42% வாக்குகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டூகே ஆட்சிக்கு வந்த பின் மிக மோசமான போர் முழக்கங்களை விடுத்தார். நாட்டின் வளங்களுக்கான உரிமைகளை உள்ளாட்சி அரசாங்கங்களிடமிருந்து எடுத்து பெரு நிறுவனங்கள் கையில் கொடுப்பது, தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வது போன்ற சட்டங்களை உடனடியாக இயற்றினார். ஆயுதங்களை கைவிட்ட முன்னாள் போராளிகளை தாக்கி கொலை செய்வது, இடதுசாரிகளை தாக்குவது போன்ற செய்லகளை ஊக்குவித்து, நாட்டில் அமைதியை குலைத்து, பிரிவினையை தூண்டி வருகிறார்.

ஆனால் டூகேவின் மிக மோசமான செயல்பாடு, அவர் அரசு முற்றிலும் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதில் தான் உள்ளது. அண்டை நாடான வெனிசுவெலாவை டூகே தொடர்ந்து எதிரியாக பிரதிபலித்து, வெனிசுவெலா மீது போர் தொடுக்கப்போவதாக மிரட்டி வருகிறார். அமெரிக்க உளவாளிகள் வெனிசுவெலாவில் ஊடுருவவும் உதவி வருகிறார். “லீமா குழு” என்ற பெயரில் லத்தின் அமெரிக்காவில் வலதுசாரிகளை வெனிசுவேலாவிற்கு எதிராக ஒன்றிணைக்கும் அமெரிக்காவின் முன்னெடுப்பில் அங்கமாக உள்ளது கொலோம்பியா. மேலும் ஏகதிபத்திய ராணுவக் கூட்டணியான NATO-வில் அங்கம் வகிக்கும் ஒரே லத்தீன் அமெரிக்க நாடு கொலோம்பியா தான். இதனால் அமெரிக்காவின் 9 ராணுவ தளங்கள் கொலோம்பியாவில் செயல்பட்டு, வெனிசுவேலாவை அச்சுறுத்தி வருகிறது.

ஆனால் டூகேவின் ஆதிக்கம் நிலையானதல்ல. 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் நாட்டின் மிகப்பெரும் 7 நகரங்கள் அனைத்துமே இடதுசாரிகள்-முற்போக்காளர்கள் அதிகாரத்தின் கீழ் வந்துள்ளது. இது மாபெரும் முன்னேற்றம். ஆனால் இந்த வெற்றிக்கு பின் டூகே அரசின் கோர தாண்டவம் மோசமடைந்துள்ளது. டூகே அரசின் கீழ் ~700 சமூக இயக்கங்களின் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை தடுக்க டூகே நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா. சபை கூட கண்டித்துள்ளது. எனினும் முற்போக்காளர்களின் போராட்டங்கள் ஓயவில்லை. பல காலங்களாக வலதுசாரிகள் மட்டுமெ ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டில் இன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, அமைதிக்கு ஆதரவாக போராடும் முற்போக்காளர்கள்-இடதுசாரிகள் பெரும் வெற்றிகளை பெற்றிருப்பது லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இதர நாடுகள்

இதைத் தவிர பெரு, அர்ஜென்டீனா, ஈக்வடார், ஹைதி போன்ற இதர நாடுகளிலும் ஏகாதிபத்திய நவீன தாராளமயத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி துவங்கியுள்ளன. பெரு நாட்டில் அதன் அதிபர் மார்ட்டின் விஸ்காராவை பாராளுமன்றம் பதவி நீக்கியதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். அந்த அதிபர் பெரும் முற்போக்காளர் இல்லை என்றாலும், பல காலமாக ஊழல் நிறைந்த உயர்மட்ட வர்க்கத்தின் கையிலுள்ள பாரளுமன்றம் நவீன தாராளமயக் கொள்கைகள் மூலம் மக்கள் மீது பளுவை சுமத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இது பார்க்கப்பட்டது. மக்கள் எழுச்சியின் காரணமாக, ஒரே வாரத்தில் மூன்று அதிபர்களைக் கண்டது பெரு நாடு.

அர்ஜென்டீனாவிலும் இடதுசாரி திருப்பம் நிகழ்ந்தது. வலதுசாரிகள் பல ஆண்டுகளாக அரசை நிலைகுலையச் செய்த பின், 2012ல் வலதுசாரி மொரிசியோ மாக்ரி அதிபரானார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், சர்வதேச நிதி நிறுவனத்திற்கும் கட்டுப்பட்டு, நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி, பொருளாதாரத்தை பாதாளத்திற்கு இட்டுச் சென்று, பல லட்சம் மக்களை மீண்டும் வறுமையில் தள்ளி, நாட்டை கடனில் மூழ்கடித்தார். பின்னர் 2018ல் நவீன தாராளமயத்திற்கு எதிராக குரலெழுப்பிய இடதுசாரி தலைவர் ஃபிரன்டே டே டொடோஸ் ஆட்சிக்கு வந்து, மாக்ரியின் சிதைவுகளை மெல்ல மெல்ல சரி செய்து வருகிறார்.

மேலும் மிக அண்மையில் கூட குவாதேமாலாவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. மக்கள் நலனுக்கான செலவுகளை அரசு வெட்டியதற்கு எதிராக போராட்டங்கள் அதி தீவிர அளவை எட்டி, பாரளுமன்ற கட்டிடத்திற்கே தீயிடப்பட்டது. மக்களின் கோபம் உட்சத்தில் உள்ளது.

இதுபோன்ற மொத்த லத்தீன் அமெரிக்காவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் மற்றும் அதன் நவீன தாராளமய சுரண்டலுக்கு எதிராக கொதித்தெழுந்து வருகிறது.

இறுதியாக

லத்தீன் அமெரிக்காவில் பல காலமாக ஏற்பட்டு வரும் ஆட்சிக் கவிழ்ப்புகள், வலதுசாரி கொடுங்கோலர்கள் ஆட்சிப் பிடிப்பு, நவீன தாரளாமயம் மூலம் மக்களை ஏழ்மையில் தள்ளி அப்பகுதியின் வளங்களை சுரண்டுதன் போன்ற அனைத்திலும் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு இருந்து வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. “ஜனநாயகத்திற்கான தேசிய நிதி” (NED) என்ற பெயரில் அமெரிக்க உளவுத்துறை துவங்கிய அமைப்பின் ஒரே நோக்கம், சர்வதேச அளவில் கம்யூனிச மற்றும் இடதுசாரி அரசுகளுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பிற்கு நிதி வழங்குவது தான். 2018ல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த மட்டுமே இந்த அமைப்பு 28 மில்லியன் டாலர்கள் வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் பெருமளவு நிதி கியூபா மற்றும் வெனிசுவெலா நாடுகளுக்கு செல்கின்றன. “ஜனநாயகம்”, “மனித உரிமை” என்ற பெயர்களில் வலதுசாரி கொடுங்கோலர்களை கருணையின்றி ஊக்குவித்து வருகிறது. இதைத் தவிர நவீன தாரளமயத்தை நிலைநாட்டுவதற்கான ராணுவ மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளும் தீவிரமடைந்தே வருகின்றன.

ஆனால் பல ஆண்டுகளாக இந்த வேதனையில் வாடி வரும் லத்தீன் அமெரிக்க மக்கள் இனியும் இதை சகித்துக்கொள்ள தயாராக இல்லை என்பதையே சமகால நிகழ்வுகள் காட்டுகின்றன. தற்கால நெருக்கடியும், மோதல்களும் தற்செயலானதல்ல. நவீன தாராளமய வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க முடியாத நெருக்கடியே இதற்கு முழு காரணம்.

ஆனால் இந்த மக்கள் எழுச்சிகளின் காரணமாகவே நவீன தாராளமயமும், அதை தூக்கிப் பிடிக்கும் வர்க்கங்களும் வீழ்ச்சி அடைந்துவிடும் என அதீத நம்பிக்கை அடைந்துவிட முடியாது. எனினும் சர்வதேச ஏகாதிபத்திய சுரண்டல் வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையேயான மோதல் கூர்மையடைந்துள்ளதையும், லத்தீன் அமெரிக்காவில் பெரும் பகுதி உழைக்கும் மக்கள் இதை மனதளவில் உணர்ந்துள்ளனர் என்பதையும் கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளும், பெருந்தொற்று கால போராட்டங்களும் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன.

மக்கள் உரிமைகளையும், தேச வளங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான உரிமைகளையும் மீட்டெடுக்க அதி தீவிர போராட்டங்கள் அவசியமாக உள்ளன. இதை நிகழ்த்திட தேர்ந்த ஒற்றுமையை பரைசாற்றும் மக்கள் இயக்கங்கள் அவசியமாக உள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் ஒற்றுமையை சிறிய அளவிலிருந்து தேசிய, பிராந்திய அளவு வரை கட்டியமைக்கும் பணி எளிதானதல்ல. இதற்கு எதிராக சர்வதேச நிதி மூலதனத்தை ஆயுதமாகக் கொண்ட ஏகாதிபத்தியம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டே தீரும். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டத் தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இதை திறம்பட கட்டியமைக்க பிரபல இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து, மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாத புரிதல் உள்ள, வர்க்கப் பார்வை கொண்ட அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானதாக அமையும். வரும் காலங்களில் ஏகாதிபத்தியம் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதென்ற நம்பிக்கையை லத்தீன் அமெரிக்க மக்கள் அளித்துள்ளனர்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: