உ. வாசுகி
மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை ஒரு சராசரி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின் நடவடிக்கைகளாக மட்டும் வரையறுக்க முடியாது என்பதும், பாசிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆட்சி என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விதழின் பல கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மோடி ஆட்சி பாசிச ஆட்சியா?இல்லையா? என்ற விவாதத்தை நடத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அது எடுத்துவருகிறது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. கடந்த 6 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட தொடர்நிகழ்வுகளின் ஒட்டுமொத்த தாக்கமாக இந்திய குடியரசின் அடிப்படை குணாம்சமே பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க இயலாமல் நிகழ்ந்து வருகிறது. அவர்கள் விரும்பும் புதிய இந்தியாவைக் கட்டமைக்கும் நோக்கத்தின் பகுதியே இது. வரலாறு, கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் இதற்கு ஏற்றாற் போல் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்திய குடியரசின் அடிப்படை குணாம்சம் என்பது ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட கோட்பாடுகளுடன் இணைந்தது. நடைமுறையில் எவ்வளவு தூரம் இவை நிகழ்கின்றன என்பது கேள்விக்குரியதாக இருந்தாலும், அரசியல் சாசனத்தில் இவை இடம் பெற்றிருப்பது, இவற்றை அமல்படுத்தும் போராட்டத்துக்கு வலு சேர்ப்பதாகும். குறிப்பாக மதச்சார்பின்மை என்பது முக்கிய விழுமியம் மட்டுமல்ல; பன்மைத்துவ இந்தியாவை ஒன்றுபடுத்தும் ஏற்பாடு.
சமூகநீதி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்றவை ஜனநாயகத்தின் பிரிக்கமுடியாத கண்ணிகள். ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவம், இந்த அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானவை. எனவே நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகளை தனித்தனியாகப் பார்ப்பது பலன் தராது. இவை அனைத்தும் இந்த ஒட்டுமொத்த வலைப்பின்னலின் விளைவுகள். அவர்கள் சித்தாந்தத்தின் மைய புள்ளி பிராமணிய, வகுப்புவாத, ஆணாதிக்க, கார்ப்பரேட் ஆதரவு என்பதுதான்.
பெரு முதலாளிகளின் வர்க்கப் பிரதிநிதி என்ற முறையில் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் மேலும் மேலும் மோடி ஆட்சியில் தீவிரமாகவும், அடாவடியாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட மிதவாத முகமூடிகள் கூட கழன்று விழுந்து கொண்டிருக்கின்றன.
சர்வதேச நிதி மூலதனம் தன் மூலதனத் திரட்டலுக்கு அடித்துப் பிடுங்கும் பாணியையும், அபகரிப்பையும் கையாண்டு கொண்டுள்ள காலம் இது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் டாலர் கோடீச்வரர்கள் தங்கள் சொத்தினை அதிகப்படுத்திக் கொண்ட புள்ளி விவரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதன் மறு பக்கம் என்ன? உழைப்பாளி மக்களின் மீதான கடும் சுரண்டல், நெருக்கடியின் சுமையை அவர்கள் தலையில் சுமத்துவது என்பதுதான்.
இதற்கான எதிர்ப்புகளும் போராட்டங்களும் வெடிக்கும்போது, அவற்றை அடக்குவதும், ஒடுக்குவதும்தான் இந்த அரசின் முன்னே உள்ள பாதையாக இருக்க முடியும்; இருக்கிறது. ஓரளவு நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயகம் கூட நீர்த்துப் போகிறது. விவசாயிகளின் போராட்டம் குறித்த டைம்ஸ் ஆப் இந்தியாவின் தலையங்கத்தில், அரசு எங்காவது விட்டுக் கொடுத்து விடப் போகிறதே என்ற கார்ப்பரேட் ஆதரவு கவலை தெரிகிறது. விவசாயிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அரசு பணிந்து விடக் கூடாது என்று அந்தத் தலையங்கம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
மறுபுறம், சமூகத்தளத்தில் உயர்சாதிய ஆணாதிக்கக் கோட்பாடுகள் வலுவாக வெளிப்படுகின்றன. தமிழகத்தில் மனுவின் கோட்பாடுகள் குறித்த சர்ச்சை எழுந்ததை இந்தப் பின்புலத்தில் பார்க்க வேண்டும். பெண் எந்த சாதியில் பிறந்தாலும் சூத்திரருக்கு சமம் என்று கூறும் மனு ஸ்மிருதி, சூத்திரருக்கு கல்வி கற்கும் உரிமை, சொத்து வைத்துக் கொள்ளும் உரிமை, ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை இல்லை என்றும் திட்டவட்டமாக வரையறுக்கிறது. பிராமணரின் சொத்தை அபகரிக்கலாம் என நினைத்தாலே தண்டனை என்று குறிப்பிடுகிறது.
பெண் கல்விக்காக குரல் கொடுத்த சமூக சீர்திருத்தவாதிகள் அனைவரும் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது தற்செயலானதல்ல. பெண்ணுக்கு சொத்துரிமை கொடுத்த இந்து கோட்பாடு மசோதாவை நிறைவேற்ற நான்கு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது என்பதும், மனு கோட்பாட்டின் நீட்சியே. வருண பாகுபாடு நிலவிய சமூக அமைப்பில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலுக்கு முட்டுக் கொடுக்கும் விதத்தில், பாகுபாடுகளை நிறுவனமயமாக்கும் நோக்குடன் எழுதப்பட்டதே மனு ஸ்மிருதி.
1800 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூலை எதிர்ப்பதும், எரிப்பதும் மட்டும் எதிர்பார்க்கும் பலனைத் தராது. இந்தியக் குடியரசின் அடிப்படை குணாம்சத்தைப் பிரதிபலிக்கக் கூடிய அரசியல் சாசனத்தைப் புறம் தள்ளி, சமத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்ற விழுமியங்களைத் தகர்த்து, பாகுபாடு, சாதியம், ஆணாதிக்கம் போன்றவற்றை மனுவின் வழியில் இன்றைக்கு முன்னெடுக்கத் துடிக்கும் பாஜக/ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியலையும், சித்தாந்தத்தையும் அம்பலப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய பணி. பாகுபாடுகளை நியாயப்படுத்தும் அல்லது விளைபொருளாக்கும் சமூக, பொருளியல் கோட்பாடுகளை, முறைமைகளை அம்பலப்படுத்தி, மாற்றி அமைப்பதே இன்றைய தேவை.
எனவே, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளின், அமைச்சர்களின் குரல்களில் சாதியமும், ஆணாதிக்கமும் பிரதிபலித்துக் கொண்டிருப்பது வியப்புக்குரியதல்ல; அது அவர்கள் சித்தாந்தத்தின் வெளிப்பாடு. உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஓர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடுமையில் முன்னுக்கு வரும் அம்சங்கள் என்ன? சாதி – வர்க்கம் – பாலினம் என்ற மூன்றும் ஒரு புள்ளியில் சந்தித்தன.
அந்த இளம்பெண்ணுக்கு இது ஏன் நடந்தது என்பதற்கான காரணங்களை நோக்கும்போது, ஏழை என்பது ஒரு காரணம். வருமானத்துக்கு அங்குள்ள வால்மீகி குடும்பங்கள் சாதி ஆதிக்க சக்திகளை சார்ந்து உள்ள நிலைமையும் ஒரு காரணம். பெண் என்பது ஒரு காரணம். சாதி என்பது முக்கிய காரணம். டாக்டர் அம்பேத்கர் சொன்னதைப் போல், இந்திய சுதந்திரம், ’ஒரு மனிதர் ஒரு வாக்கு’ என்பதை நிதர்சனமாக்கி விட்டாலும், ’ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்பது கனவாகவே நீடிக்கிறது. எனவே பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவரின் உயிருக்கு மதிப்பில்லை, பெண் என்றால் கண்ணியத்துக்கு இடமில்லை.
பெண் ஆணின் உடமை என்ற கண்ணோட்டமும், குலப் பெருமையின் பாதுகாவலர் பெண் என வகுத்திருப்பதும்தான் சாதி ஆணவ கொலைகளில், காப் பஞ்சாயத்துக்களின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கின்றன. கெட்டியான அகமண முறை சாதிய கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. பெண்ணின் பாலியல் சுதந்திரம், வாழ்க்கை இணையைத் தேர்வு செய்யும் உரிமை போன்றவை மறுக்கப்படுகின்றன. பெண்ணை உடமையாகக் கருதும் கண்ணோட்டம் இதில் வெளிப்படுகிறது.
இன்னொரு சாதியின், குறிப்பாக பட்டியல் சாதிகளின் வாரிசைப் பெறுபவராக இதர சாதி பெண் இருப்பது, சாதிய படிநிலைக்கு விடப்படும் கடுமையான சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தலித் இளைஞர்கள் காதல் நாடகம் நடத்தி, இதர சாதி பெண்களுக்கு வலை வீசி, கர்ப்பமாக்கி கைவிடுகிறார்கள் என்ற பாமகவின் நிலைபாடு, வட இந்தியாவில் சிறுபான்மை இளைஞர்கள் மீது தொடுக்கப்படும் லவ் ஜிஹாத் தாக்குதலின் நகல்தான். இரண்டுமே சாதிய/வகுப்புவாத ஆணாதிக்க குரல்களே.
உபி முசாபர்நகர் மதவெறி தாக்குதலில், இந்து பெண்களை இசுலாமிய இளைஞர்கள் பாலியல் சீண்டல் செய்தார்கள் என்பது காரணமாக முன்வைக்கப்பட்டது. பாலியல் சீண்டல் என்பது பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் குற்றம். அதில் சாதி, மதம் வரவேண்டிய அவசியமே இல்லை.ஆனால் மகளையும் மருமகளையும் பாதுகாப்போம் என்ற முழக்கமாக அது உருவாக்கப்பட்டது. மகளின் உரிமைகளும், மருமகள் மீதான வரதட்சணை கொடுமையும் இதில் சேராது.
பேச்சாகவும், அச்சுறுத்தலாகவும், தாக்குதலாகவும், கொலைகளாகவும் நிகழ்ந்தவை இன்று சட்டரீதியான அந்தஸ்தைப் பெறும்படி நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உத்திரப்பிரதேசத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்டுள்ள லவ் ஜிஹாத் தடுப்பு சட்டம் அரசியல் சாசனத்துக்கும் உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளுக்கும் எதிரானது. இது மோசடி, நிர்ப்பந்தம் மூலமாகவும், பலன் கிடைக்குமென ஆசை காட்டியும் மதம் மாற்றுவது மற்றும் திருமணம் என்னும் நோக்கத்துடன் மதம் மாற்றுதல் போன்றவற்றைக் கிரிமினல் குற்றமாக்குகிறது.
ஏற்கனவே கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டம் உள்ளபோது, இப்புதிய சட்டத்துக்கு தேவையே இல்லை. அவசர சட்டம் கொண்டு வரும் அளவுக்கு, கட்டாயப்படுத்தி, மதம் மாற்றி வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்ததான தகவல்கள் இல்லை. விருப்பமான மதத்தைப் பின்பற்ற, மதப் பிரச்சாரம் செய்ய, நிலவுகிற உரிமைகள், வழிபாட்டு உரிமை, சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்யும் உரிமை போன்றவை நசுக்கப்படுகின்றன. காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் அதீத தலையீட்டுக்கு இது வழிவகுக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரே தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். லவ் ஜிஹாத் என்பதற்கு நிரூபணம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிறகும் இதுதான் நிலை.
இது ஹிட்லர் கொண்டு வந்த நியூரம்பர்க் சட்டங்களை நினைவூட்டுகிறது. 1935இல் நாஜி அரசாங்கம் நிறைவேற்றிய இரண்டு சட்டங்களில் ஒன்று, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கும் இடையே நடக்கும் திருமணத்தையும் , பாலியல் உறவையும் தடை செய்ததாகும். அத்துடன் 45 வயதுக்குட்பட்ட ஜெர்மானிய பெண்கள் யூதர்களின் வீடுகளில் வேலை செய்வதும் தடுக்கப்பட்டது. அடுத்தது, ஜெர்மானியர்கள் மட்டுமே குடிமக்கள் என்ற சட்டம். பாஜக ஆட்சியின் நடவடிக்கைகள் நாஜி ஆட்சியின் அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. இனத்தூய்மை என்பது இங்கு மதத் தூய்மை, சாதி தூய்மை என்ற வடிவங்களில் வருகின்றன.
சங் பரிவாரத்தின் பெண்கள் அமைப்பினர் மதச்சார்பின்மை என்ற கருத்தியலுக்கு மட்டுமல்ல; அந்த சொல்லுக்கே எதிரானவர்கள். 1990களில் பாஜக வலுவான அரசியல் சக்தியாக வளர்ந்தபோது நடத்தப்பட்ட இந்து முன்னணி மகளிர் மாநாட்டில், மதச்சார்பின்மை என்ற சொல்லுக்குத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும், அதற்காகப் பெண்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என அறைகூவலே விடப்பட்டது. உண்மையில் அரசாங்கம் மத சார்புடன் இருப்பது பெண்களுக்கு உதவுமா? இந்து ராஷ்டிரத்தில் மதம் சார் சட்டம் இந்துத்வ கோட்பாடுகளின்படியே அமையும். அகமண முறை, குழந்தை திருமணம், சொத்துரிமை மறுப்பு, கல்வி, வேலை வாய்ப்பு பாதிப்பு, பெண் சமத்துவம் ஒழிப்பு போன்றவை அதன் அம்சங்களாக வரக்கூடும்.
பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் வெவ்வேறு காலத்தில், பெண்கள் வேலைக்குப் போவதால் வேலையின்மை, பெண்ணுரிமை கோருவதே குடும்பங்கள் பிளவுபடக் காரணம் போன்ற பிற்போக்கு கருத்துக்கள் பாட நூல்களிலேயே இடம் பெற்றன என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். தீண்டாமையும், சாதிய ஒடுக்குமுறையும் மதம் சார் சட்டத்தின் ஒரு பகுதியாக நிச்சயம் அமையும். பல நூற்றாண்டுகாலப் போராட்டங்கள் நிராகரிக்கப்படும். அதன் முன்னோட்டங்களையே பாஜகவின் குரலில், நடவடிக்கையில் நம்மால் காண முடிகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்துவ அமைப்புகளின் ஒட்டு மொத்த இருப்பே ஆபத்தானது. அவர்களது சித்தாந்தம் மற்றும் கொள்கைகள், மத்திய மாநில ஆட்சியில் அவர்கள் இருக்கும் வரை நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பு கதவுகள் திறந்து கொண்டே இருக்கின்றன. எனவே விளைவுகளை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், அதன் மூலாதாரமாக இருக்கக் கூடிய சித்தாந்தத்தை எதிர்த்த போராட்டத்தையும் நாம் வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
Leave a Reply