இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்


அ.சவுந்தரராசன்

பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய முதல் முழுமையான புத்தகம் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்’ ஆகும். இந்த புத்தகத்தை எழுதுகிறபோது அவருக்கு வயது 24 மட்டுமே. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் லீக் மற்றும் முதலாம் அகிலம் போன்ற அமைப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க பதிப்பாக ஆங்கிலத்திலும் வெளியானது.

மிக இளம் வயதிலேயே இந்த புத்தகத்தை எங்கெல்ஸ் எழுதினார் என்பது மட்டுமே அதன் சிறப்பிற்கு காரணம் அல்ல. தொழிலாளி வர்க்கம் ஒரு தனித்துவமான வர்க்கமாக உருவாகிவிட்டது என்பதையும், அது முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடியே தீரும் என்பதையும், அமைதி வழியிலோ அல்லது ஆயுதம் ஏந்தியோ முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதையும் இந்த புத்தகத்தில் எங்கெல்ஸ் வரையறுத்துச் சொல்கிறார்.

கார்ல் மார்க்ஸ் இந்தப் புத்தகம் பற்றி குறிப்பிடும்போது,தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் சுரண்டல் குறித்தும், வர்க்கப் போராட்டங்கள் குறித்தும், உபரி மதிப்பு மற்றும் அரசியல் பொருளாதாரம் பற்றியும் முழுமையான ஆய்வை நடத்தும் முடிவிற்கு வருவதற்கு இந்தப் புத்தகம் என்னை உந்தியது என்று கூறுகிறார்.

கொந்தளிப்பான காலகட்டம்

லண்டனைச் சுற்றி அமைந்த நகரங்களான மான்செஸ்டர் உள்ளிட்டு சிறிதும் பெரிதுமான நகரங்களில் 21 மாதங்கள் செய்த நேரடி ஆய்வுகள் மற்றும் அரசு அவ்வப்போது அமைத்த ஆணையங்கள் கொடுத்த அறிக்கைகள், நாடாளுமன்ற விவாதங்கள் ஆகியவைகளை வாசித்து, அவற்றிலிருந்து எடுத்த தரவுகளை இந்தப் புத்தகத்தில் எங்கெல்ஸ் விரிவாகப் பயன்படுத்துகிறார்.

அந்த காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சுற்றி ஜெர்மனி மற்றும் பிரான்சில் மிகுதியான எழுச்சிகள் நடந்தன. அந்த கிளர்ச்சிகள் அடக்கி ஒடுக்கவும் பட்டன. ஃபாயர்பாக், ஹெகல், காண்ட் போன்ற சிந்தனையாளர்களின் தத்துவ விளக்கங்களும் அவை தொடர்பான விவாதங்களும் நடந்துகொண்டிருந்தன. அரசியல் தளத்தில் பிரான்சு நாட்டில் 1789 ஆம் ஆண்டிலேயே முதலாளித்துவ புரட்சி நடந்திருந்தது. 1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூன் சோசலிச எழுச்சி நடைபெற்றது. இவை இரண்டிற்கும் முன் அங்கே ஏராளமான கிளர்ச்சிகள் நடைபெற்றன. ஐரோப்பா முழுவதும் கிளர்ச்சிகளின் மையமாக இருந்தது.

தொழிற்புரட்சியின் தொடக்கம்

18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் நவீன தொழில் உற்பத்தி முறை உருவாகி வேகமெடுத்தது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, நீராவி இயந்திரங்கள்,சமூகத்தில் பல முக்கியமான விளைவுகளை நீராவி இயந்திர கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தின. தொழிலாளி வர்க்கத்தின் உருவாக்கம் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய உடன்விளைவாகும். அதற்கு முன்பு நிலவிய கைவினைத் தொழில் உற்பத்தியிலிருந்து இயந்திர உற்பத்தி மிகவும் மாறுபட்ட சமூக விளைவுகளை உண்டாக்கியது. அதன் காரணமாக முந்தைய உற்பத்தி முறைகள் காலாவதியாகின. கைவினைத் தொழில்கள் நசிந்து அழிந்ததால் ஏராளமானோர் செய்த தொழிலை இழந்து நிர்க்கதியாகினர்.

உதாரணமாக நூல் நூற்றலைப் பார்க்கலாம். கை ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்த நிலையில், அப்பணியில் ஜின்னிங் இயந்திரம் புகுத்தப்பட்டது. முந்தைய உற்பத்தியை விட இது 6 மடங்கு திறனை அதிகரித்தது. பருத்தியில் இருந்து பஞ்சைப் பிரிக்கவும், அதனை நூலாக்கவும் துணி உற்பத்தியிலும் நவீன கருவிகளின் பயன்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக கை நெசவு முறை முற்றிலும் நசிந்து அழிந்தது. கை நெசவில் ஈடுபட்டுவந்தவர்கள் தங்கள் உடமைகளை இழந்தார்கள்.

முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக மக்களில் ஒரு பகுதியினர் ஏதுமற்றவர்களாக ஆகிறார்கள், அதிலிருந்தே நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகிறது. “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்”என்ற புத்தகம், உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு இந்தப் போக்கிற்கு அடிப்படையாக அமைகிறது என்பதை விளக்குகிறது. மேலும் சில நகரங்களில் இதே வடிவத்தில் கம்பளி மற்றும் பட்டு உற்பத்தி நவீன வடிவம் பெறுகிறது. செபீல்ட் என்ற நகரத்தில் உருக்கு சார்ந்த உற்பத்திகள் நடக்கின்றன. சுரங்கத் தொழிலில் நவீன இயந்திரம் புகுத்தப்படுகிறது.

இயந்திர உற்பத்தி முறை வளர்ச்சியின் தொடர்ச்சியாக, இயந்திரங்களை உற்பத்தி செய்வதே ஒரு பெரும் தொழிலாகிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளின் நாட்டுப்புறங்களில் இருந்து சிறு நிலவுடைமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்தார்கள். அப்பகுதிகளில் விவசாயத்திலும் நவீன முதலாளித்துவ உற்பத்தி முறை உருவானது. 1830 வாக்கில், இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்த தொழிலாளர்களாக, அயர்லாந்தைச் சேர்ந்த 3 லட்சம்பேர் ஆலைகளில் வேலை செய்தார்கள் என்பதிலிருந்து இதன் தீவிரத்தை உணரலாம்.

பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்ள நேர்ந்த மிகக் கடுமையான சுரண்டல் நிலைமையினை எங்கெல்ஸ் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார். முதலாளிகளைச் சார்ந்து மட்டுமே வாழ முடியும் என்ற நிலைமையில், மிகக் கொடூரமான நிலைமைகளை அவர்கள் எதிர்கொண்டார்கள். ‘என்னுடைய வாணலியில் நீ வறுபட விரும்பவில்லை என்றால் நெருப்பில் நடக்கக் கடவாயாக’ என்ற முதலாளியின் திமிரான வார்த்தைகள் மூலம் அன்றைய சூழலை எங்கெல்ஸ் விவரிக்கிறார். இங்கே கூறப்படுவது பசி நெருப்பு, வறுமைச் சாவு.

நேரம் காலமற்ற சுரண்டல்

1844 ஆம் ஆண்டு வரையிலும் கூட வேலை நேரத்தில் மிகக் கடுமையான சுரண்டல் நடந்துவந்தது. 18 மணி நேரம் வரையில் இரவு, பகலாக தொழிலாளர்கள் சுரண்டப்பட்டனர். இத்தனை கடுமையான சுரண்டல் காரணமாக கொடூரமான உடல் உபாதைகள் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டன. பல தொழிலாளர்களுக்கு கால் எலும்புகள் உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் k வடிவத்தில் வளைந்திருந்தன என்கிறார். முதுகெலும்பு கூன் விழுந்தும், இடுப்பு பலவீனமாகியும் நெஞ்சுக்கூடு ஒடுங்கியும் கடும் சூழலில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இளைஞர்களாக ஆகாமலே முதியவர்களாகிவிட்டார்கள் என்கிறார் எங்கெல்ஸ்.

40 வயதுக்கு பின் உழைக்கத் தகுதியில்லாதவர்களாக ஆக்கப்படும் தொழிலாளர்கள், அதற்குப் பின் பிழைக்க எந்தவழியுமில்லாமல் பிச்சையெடுத்துப் பிழைக்கும் நிலைமைதான் நிலவுகிறது. தொழிற்சாலை சுரண்டலின் காரணமாக குடும்ப உறவுகளும் சிதைந்து சின்னாபின்னமாகிய காரணத்தால், பலரும் கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டது. 32 சதவீதமான மக்கள் தொகையினர் 45 வயதிலேயே இறந்துவிடும் நிலைமை ஏற்பட்டது என ஒரு ஆணையத்தின் அறிக்கையில் தெரியவருகிறது.

உண்மையில் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் வேலையை நேசித்துச் செய்யும் நிலைமையில் இல்லை. முதலாளியின் மீது எந்த விசுவாசமோ பற்றோ இல்லை. அந்த முதலாளிகளும் கூட கடுகளவிற்கான இரக்கத்தைக் காட்டுபவர்களாக இல்லை.

உணவிலும்,தங்குமிடத்திலும் சுரண்டல்

வேலை இடத்தில் நடைபெற்ற சுரண்டல் அடுத்த நிலையிலும் தொடர்ந்தது. தொழிலாளர்களின் கையில் 40 சதம் சம்பளப் பணத்தை மட்டுமே முதலாளிகள் வழங்கினார்கள். மீதத் தொகையில் உணவுப் பொருட்களை, முதலாளியிடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதற்குப் பெயர் “டிரக் சிஸ்டம்” என்று வைத்து பொருள் விற்பனை செய்தனர். குடியிருப்பு வசதியும் முதலாளியிடமே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பெயர் காட்டேஜ் சிஸ்டம் என்று வைத்து பன்றித் தொழுவம் போன்ற தகரக் கொட்டகைகளில் வாடகைக்கு விட்டார்கள். இந்த இரண்டையும் தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். கூலியை முழுமையாக கையில் கேட்டார்கள்.

முதலாளிகள் விற்ற உணவுப் பொருட்கள் வெளிச்சந்தையை விடவும் தரம் குறைவாக இருந்தன. அதிக விலைவைத்து விற்கப்பட்டன. இதனால் திறன் மிக்க தொழிலாளர்கள் சிலருக்கும்,மேற்பார்வையாளார்கள், மேஸ்திரிகள் ஆகிய மிகச் சிலருக்கும் தவிர மற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் இழந்த சக்தியை மீட்கக் கூடிய அளவிற்கான உணவும் கூட கிடைக்கவில்லை. ‘நாங்கள் இறைச்சியைப் பார்த்து மாதக் கணக்காகிவிட்டது. அதன் சுவையைக் கூட மறந்துவிட்டோம்’ என்ற தொழிலாளியின் வாக்குமூலத்தை ஒரு ஆணையத்துடைய பதிவில் இருந்து எங்கெல்ஸ் எடுத்தாள்கிறார்.

தங்குமிடம் என்ற பெயரில் முதலாளிகள் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாத, காற்றோட்டமில்லாத சிறு அறைகளைக் கட்டி அதற்கு கடுமையான கட்டணம் போட்டு எடுத்துக்கொண்டார்கள். ஒரு அறையில் 16 பேர் வரை படுத்துறங்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தது. அழுக்கும் பிசுக்குமான வைக்கோல்களின் மேல் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் ஒருவர் மேல் ஒருவர் படுத்துக்கிடப்பது போன்ற நிலை இருந்தது. திருமணமானவன் தன் மனைவியுடனும் மனைவியின் வயதுவந்த தங்கையோடும் ஒரே படுக்கையில் படுத்தனர். இவ்வாறான கொடுமையான வாழ்நிலைகள் தனிமனித வாழ்க்கையையும் சீரழித்தன. குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்பட்டது. ஒழுக்கச் சீரழிவுகள் பெருகின. பசியால், வறுமையால் திருட்டும், விபச்சாரமும் பெருகியது.

சிதைக்கப்பட்ட வாழ்வு

பெண்களுக்கு விடுமுறை என ஏதுமில்லை. பலர் வேலைத்தளத்திலேயே குழந்தை பெற்றார்கள். குழந்தைப் பேறுக்கு பின் மூன்று நாட்களில் வேலைக்கு திரும்பிவிட கட்டாயப்படுத்தப்பட்டார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கொடூரமாக இருந்தது. தொழிலாளிக்குத் திருமணமானால் மணப்பெண்ணின் முதலிரவு முதலாளியோடு என்றிருந்தது.

குழந்தைகளுக்கென்று நேரம் ஒதுக்குவதற்கெல்லாம் சாத்தியமே இருந்திருக்கவில்லை. கவனிப்பார் இல்லாததால் விபத்தில் சாகும் குழந்தைகள் மரணம் மிக அதிகமாகியது. குழந்தைகள் கிழிந்த கந்தைகளை அணிந்துகொண்டு, கிடைத்ததை உண்டு கவனிப்பாரற்று திரிந்தார்கள்.

5 கோடி பவுண்ட் (பிரிட்டிஷ் நாணயம்) அளவு பட்ஜெட் போட்ட சமயத்தில் கூட கல்விக்கு 40 ஆயிரம் பவுண்ட் மட்டுமே ஒதுக்கியது இங்கிலாந்து அரசு. கல்விக்கூடம் என்பது பெயரளவுக்கே நடந்தது. 14 வயதான குழந்தைகளுக்கு மிகச் சாதாரண விசயங்கள் கூட தெரியாத நிலைமை இருந்தது.

குழந்தை தூங்கிக் கொண்டே இருக்கட்டும் என மயக்கத்தில் வைத்திருக்கக் கூடிய மதுவை சில பெற்றோர் புகட்டினார்கள். இப்படி குழந்தை என்பதற்கான எந்த அடிப்படையான உரிமைகளையும் குழந்தைகள் அனுபவிக்கவில்லை.

சுரண்டலும் மனித வதையே

தொழிலாளர்கள் உழைக்க மறுத்தால் பட்டினியால் சாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் நிலவிக் கொண்டிருந்தது. வியாதிகளுக்கு ஆளானாலும் அதனோடே வேலைக்குச் செல்ல வேண்டும். இருப்பினும் முதலாளிகளுக்காக சுகாதார மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர்களிடமிருந்து முதலாளிகளுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது என்பதால், ஏழைகளுக்கான மருத்துவம் என்பதும் வழங்கப்பட்டது. குளிர் காலத்தில் கூட கம்பளி ஆடையோ, காலணியோ அணியாமல் வேலை செய்கிற நிலைமைதான் பரவலாக இருந்தது. பருத்தி ஆடை மட்டுந்தான் தொழிலாளர்களுக்கு என்கிற நிலை இருந்தது.

ஒரு மனிதரை யாராவது கொலை செய்தால் அதனை மனித வதை என்கிறீர்கள். அதே சமயம் முதலாளி வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டலின் காரணமாக படிப்படியாக நோயுற்றும், கடின வேலைச் சூழலிலும் வறுமையிலும் தொழிலாளர்கள் மரணிக்கிறார்கள் என்றால் அதை என்னவென்கிறீர்கள்? என எங்கெல்ஸ் கேள்வி எழுப்பிவிட்டு, அது சமூகப் படுகொலை என்ற முடிவிற்கு வருகிறார்.

இத்தனை கடினமான சூழலை தொழிலாளர்கள் எப்படி தாங்கிக் கொண்டார்கள் என கேட்டால் உடல் உறவு மற்றும் சாராயம் ஆகிய இரண்டில் மட்டுமே,து துன்பங்களை மறப்பதற்கு தொழிலாளர்கள் முயன்றார்கள் என்கிறார் எங்கெல்ஸ். மகிழ்ச்சிக்குஅவர்களுக்குவேறொன்றுமில்லை.

இங்கிலாந்தில் முதலாளித்துவம் உருவான காலத்தில் நிலவியதாக எங்கெல்ஸ் வர்ணிக்கும் பல்வேறு கொடூர சுரண்டல் முறைகள் இன்றைக்கும் நடப்பில் உள்ளன என்பதுதான் நமது அனுபவம். சென்னையில் மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணிகளில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மோசமான தங்குமிடங்களை எதிர்த்து சி.ஐ.டி.யு களம் கண்டது. பல உணவு விடுதிகளில் பணியில் அமர்த்தப்படும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவ்வாறே சுரண்டப்படுகின்றனர். இந்திய அனுபவத்தில் உரசிப்பார்க்கும் ஒருவருக்கு இந்தப் புத்தகம் கடந்த கால கதையல்ல என்பது புரியும்.

தொழிலாளர்கள் சங்கமாதல்

இந்த நூல், தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு போராடிய அனுபவங்களையும் நமக்கு சாரமாக தருகிறது. தொழிலாளர் இயக்கம் என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதும்போது, “தொழிற்சாலைகள் தோன்றிய உடனேயே எதிர்ப்பு பல வடிவங்களில் தொடங்கியது.” என்கிறார்.

தொழிற்சங்கம் என்ற சிந்தனை வருவதற்கு முன்பு தொழிலாளர்கள் எப்படி இருந்தார்கள்? எதிர்ப்புணர்வுகளுக்கு எப்படி வடிவம் கொடுத்தார்கள்?. ஆங்காங்கே ஒன்றுகூடி தன்னெழுச்சியாக எந்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். அவைகளை உடைத்து நாசம் செய்யதார்கள். சில சமயங்களில் முதலாளிகளை கொன்று தீர்த்தார்கள். தொழிற்சாலைகளை தீ வைத்து கொளுத்தினார்கள். இதுபோல பலவிதமான வன்முறைகளும், கலகங்களும் நடந்தன.

ஒரு செங்கல் சூளையில் தொழிலாளர்கள் நடத்திய ஆயுத தாக்குதலை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு போராடுகிறார்கள். முதலாளி வெளியில் இருந்து ஆட்களை கொண்டுவந்து உற்பத்தி செய்வேன் என தொடங்குகிறார். அந்த உற்பத்திக்கு காவலாக காவலர்கள் துப்பாக்கி சகிதம் நிற்கிறார்கள். உடனே தொழிலாளர்கள் தாங்களும் ஆயுதம் ஏந்தி படையெடுப்பு போல சென்று சூளையை தாக்கி அழித்துவிடுகிறார்கள். கடைசியில் இப்பிரச்சனையில் ராணுவம் நுழைகிறது. தொழிலாளர்கள் தேடித் தேடி கைது செய்யப்படுகிறார்கள். அன்றைக்கு நடந்த வன்முறை வெற்றியைத் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியாக, நிதானமாக போராட வேண்டும், உற்பத்தி உனக்கு கிடைக்காது என உணர்த்தும் வகையில் போராட வேண்டும் என்ற முடிவிற்கு தொழிலாளி வருவதற்கே இதுபோல பல அனுபவங்கள் தேவைப்பட்டன. இப்படித்தான் கூட்டாக இணைந்து உற்பத்தியை நிறுத்துவது, அதன் வழியாக கூட்டு பேரம் செய்வது என்ற அனுபவத்திற்கு தொழிலாளி வர்க்கம் வந்து சேர்கிறது. அடக்குமுறையால் மட்டும் தொடர்ந்து பிரச்சினையில்லாமல் உற்பத்தியை பெற்றுவிட முடியாது என்ற அனுபவம் முதலாளிகளுக்கும் வருகிறது. இதன் காரணமாகவே சங்கம் அமைக்கும் உரிமை சட்டமாக்கும் வாய்ப்பு கிட்டியது.

ஏதுமற்ற வர்க்கமாக உருவான தொழிலாளி வர்க்கம், தங்களுக்குள் இருக்கக் கூடிய போட்டியை ஒழித்து தொழிற்சங்கமாக ஆனது. அதுதான் தொழிற்சங்கம் செய்த முதல் சாதனை என்கிறார் எங்கெல்ஸ்.

அரசியல் போராட்டங்கள்

முதலாளிகளும் கூட பிரபுத்துவ ஆட்சியாளர்களுடன் தங்கள் நலனுக்கான மாற்றங்கள் கோரி போராடும் நிகழ்வுகள் நடக்கின்றன. இத்தகைய போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தையும் ஈடுபடுத்துகிறார்கள். குறிப்பாக அரசியல் உரிமைப் போராட்டங்களில், சாசனவாத இயக்கத்தின் முழக்கங்களை முன்னெடுப்பதில் இவை நடக்கின்றன. அனைவருக்கும் வாக்குரிமை என்ற முழக்கத்தில் பல லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட போராட்டங்கள் நடந்தன. சாசன இயக்கத்தில் எங்கெல்ஸ் நேரடியாக பங்கெடுத்தவர்.

எங்கெல்ஸ் சாசனவாத இயக்கத்தின் (Chartist movement) தோற்றம் மற்றும் விளைவுகளை இந்த நூலில் ஆய்வு செய்கிறார். சாசனவாத இயக்கம் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என போராடியது, 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இரவுப் பணி வேண்டாம் என்றது. மற்றவர்களுக்கு 12 மணி நேர வேலை. 2 மணி நேரம் ஓய்வு, 10 மணி நேர உழைப்பு என கோரிக்கைகள் முன்னேறின. சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, வாக்குரிமை என பல வெற்றிகள் கிடைத்தன. ஹவுஸ் ஆப் காமென்ஸில் தொழிலாளர் பிரதிநிதிகளாக 6 பேர் உறுப்பினர்கள் ஆனார்கள். தொழிலாளர் நலனுக்கான குரல் பல உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்திற்குள் எதிரொலித்தது.

அனைவருக்கும் வாக்குரிமை என்பதை சாதித்த பின் நடுத்தரவர்க்கத்தில் ஒரு பகுதியினர் அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறினார்கள். அவ்வளவுதான் சாசன இயக்கம் தோற்றுவிட்டது என்ற கொக்கரிப்புகள் எழுந்தன. இத்தகைய வாதங்களை எங்கெல்ஸ் மறுக்கிறார்.சாசனவாத இயக்கம் முன்வைத்த பல முழக்கங்கள்தான். அந்த அழுத்தங்கள்தான் பிற்காலத்தில் சட்டங்களாகின என்பதை குறிப்பிடுகிறார். நாம் நடத்தும் போராட்டங்களுக்கு கைமேல் பலன் உடனடியாக கிடைத்துவிடும் என்பதில்லை, ஆனால் போராட்டங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், பாதிப்புகளும் நிச்சயம் தொடர்ந்து இருக்கும். எனவே, எதிர்ப்பு இயக்கங்களும், போராட்டங்களும் ஒருபோதும் வீணாவதில்லை.

இங்கிலாந்தில் அப்போது நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தங்களில் பத்தில் ஒன்பது தோல்வியில் முடிந்தன. தொழிலாளர்களுக்கு எந்த உடனடி பலனும் கிடைக்கவில்லை. போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டார்கள். ஆனால் போராட்டங்களின் அலை ஓயவில்லை. அதன் பொருள், தொழிலாளி வர்க்கம் தன் மீதான சுரண்டலை மெளனமாக ஏற்றுக்கொண்டிருக்காது என்பதை எங்கெல்ஸ் நிறுவுகிறார்.

இங்கிலாந்திலிருந்து நீராவி இயந்திரங்கள் அமெரிக்கா, பெல்ஜியம், பிரான்சு என பல நாடுகளுக்கும் சென்றன. அது நாள் வரை விவசாய உலகத்தின் ஒரே தொழிற்சாலை இங்கிலாந்து என்றிருந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. ஏகபோகமாக இருந்த இங்கிலாந்து கடும் போட்டியை எதிர்கொண்டது. தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை தக்கவைக்க வேண்டுமானால் அதற்கான சமரசங்களைச் செய்துகொண்டாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டது. இப்படியான சூழலில், தொழிலாளர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு வெற்றிக் கனிகள் கிடைக்கத் தொடங்கின.

சோசலிசத்தை முன்வைத்தல்

நல்ல வீடு, நல்ல உணவு, நல்ல வேலை, குறைவான வேலை நேரம் போன்ற முழக்கத்தை முன்வைத்த சாசனவாத இயக்கத்தின் தலைவர் ஸ்டீஃபன், அரசியல் முழக்கமாக அவைகளை முன்வைக்கவில்லை. எனவே சாசன இயக்கத்தை முதலாளிகள் தம் வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதனை சுட்டிக்காட்டும் எங்கெல்ஸ் தொழிலாளர்கள் தங்களுடைய சாசனமாக சோசலிசத்தை முன்வைக்க வேண்டும் என்கிறார். அக்காலத்தில் சோசலிசம் இங்கிலாந்திற்கு புதிதல்ல. அவற்றின் குறைபாடுகளையும் எங்கெல்ஸ் இடித்துரைக்கிறார்.

தொழிலாளர்கள் சங்கமாக திரண்டபோது, அதற்கென தனியாக ஊழியர்கள் தேவை இருந்தது. பழிவாங்கப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சங்கங்களின் ஊழியர்களானார்கள். சங்கம் நிதி வசூல் செய்து அவர்களைக் காத்தது. போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உதவிகளை திரட்டிக் கொடுத்தது. உடனே முதலாளிகள் அவற்றை அவதூறு செய்தார்கள். தொழிற்சங்க ஊழியர்களை சோம்பேறிகள், முட்டாள்கள், துரோகிகள், வாய்ஜாலக்காரர்கள், போக்கிரிகள், போராட்டங்களைத் தூண்டி அதில் பிழைப்பு நடத்துபவர்கள், வசூலித்து சாப்பிடுபவர்கள் என்று ஏசிப் பேசினார்கள். இதே அவதூறுகளை இன்றும் காண்கிறோம்.

சங்க அனுபவங்கள்

ஆனால் எங்கெல்ஸ் சங்கங்கள் நடந்த விதத்தை, அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளார். வரவு செலவு முதல், ஆவணங்கள் பராமரிப்பு வரையில் அனுபவத்தில் கற்று அவர்கள் தேர்ச்சியடைந்து வந்தார்கள் என்பதைக் கூறுகிறார். சங்கத்தை அமைப்பாக நடத்த வேண்டிய முறையை வலியுறுத்துகிறார்.

அரசியல், பொருளாதார, சமூக கல்வி தொழிலாளிகளுக்கு கிடைக்கச்செய்யும் வகையில்வாசகர் வட்டங்களை உருவாக்கி தொழிலாளி வர்க்கத்தைக் குறிப்பான புத்தகங்களை வாசித்து விவாதிக்க வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ். அந்த காலத்தில் பல்வேறு மத விவாதங்களில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் தொழிலாளர்களோ மதச்சார்பற்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். அது அவசியம் என்கிறார், படிப்பகங்கள் அதே தன்மையில் நடக்க வேண்டும் என்றார்.

மாதக்கணக்கில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள் கருங்காலிகளால் தோற்கடிக்கப்பட்டன எனினும் தொழிற்சங்கங்கள் இடைவிடாமல் இயங்கின. பல போராட்டங்கள் தோற்றாலும் மீண்டும் மீண்டும் வேலைநிறுத்தங்கள் வெடித்தன. இந்த வேலைநிறுத்தங்களை ராணுவப் பயிற்சிப் பள்ளி என்கிறார் எங்கெல்ஸ். யுத்தம் பயிலும் பள்ளி என்றும் அழைக்கிறார். இந்த வேலை நிறுத்தங்கள் மூலம் நடந்தே தீர வேண்டிய இறுதிப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் தயாராகிறார்கள் என்கிறார். தொழிலாளி வர்க்கம் சுரண்டலை மவுனமாக ஏற்றுக் கொண்டிருக்காது என்கிறார்.

எங்கெல்சின் எதிர்பார்ப்பு

இந்தப் புத்தகத்தை எழுதிய இளம் எங்கெல்ஸ், ஆயுதப் புரட்சியின் வழியாக மட்டுமே இந்த வர்க்கப் பிரச்சனைகளுக்கு தீர்வை உண்டாக்க முடியும் என்ற முடிவிற்கு வருகிறார்.பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகள் முன்னெடுக்கும் போர், இதுவரை காணாத துயரங்கள் நிறைந்த போராகவும் பெரும் குருதி சிந்தும் போராகவும் இருக்கும் என்கிறார். மேலும் இங்கிலாந்தில் வெகு விரைவில் சமூக புரட்சி வரும் என்ற எதிர்பார்ப்பையும் முன்வைக்கிறார்.

1892 ஆம் ஆண்டில், அதாவது நுல எழுதி 47 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த அடுத்த பதிப்பிற்கு முன்னுரை எழுதும்போது புத்தகத்தில் மேற்சொன்ன ஆருடம் அப்படியே தொடரும் என்கிறார். அதேசமயம் தனது நிர்ணயிப்பு தவறு என்பதையும் எழுதியுள்ளார். தனது எதிர்பார்ப்பு தவறாகிவிட்டதற்கான காரணம் என்ன என்றுசொல்லும்போது, உலகம் முழுவதும் காலனி ஆதிக்கச் சுரண்டலில் குவித்த செல்வத்தில் ஒரு பகுதி, தொழிலாளி வர்க்கத்திற்கு பலனாகச் சேர்ந்ததை குறிப்பிடுகிறார். தனது இளமை துடிப்பும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார். தவறான தனது நிர்ணயிப்பை அடுத்த பதிப்புகளில் திருத்தாமல் விட்டதன் மூலம் தனது அறிவு நேர்மையை வெளிப்படுத்துகிறார்.

இந்த நூலுக்கு பின் எழுதப்பட்ட கம்யூனிசத்தின் கோட்பாடுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஆகிய நூல்களில் முன்வைக்கும் பல முடிவுகளுக்கு அடிப்படையாக அமைந்த தரவுகள் இதிலே கிடைக்கின்றன. மொத்தமாக தொகுத்துப் பார்த்தால், இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம் குறித்த எங்கெல்சின் இந்த ஆய்வு, கம்யூனிசத்தை நோக்கிய, மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவரின் சிந்தனை வளர்ச்சிப் போக்கிற்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். இந்நூல் இப்போதும் எல்லா முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளிகளின் நிலையோடும் பொருந்துவதாகவே நீடிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s