பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு 2011 இல் பதவி ஏற்றது. அச்சமயம் காங்கிரஸ் தலைமையிலான “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” (யூபிஏ)அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறியுள்ளது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அதன் அதிதீவிர தாராளமய கொள்கைகள், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரங்களை மையப்படுத்துவது, அதன் வெறுப்பு உமிழும் மதவாத அரசியல் ஆகியவை இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களாகியுள்ளன. தமிழகத்தின் அரசியல் களத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ஜெயலலிதாவின் மறைவும், அதன் பின்பு அஇஅதிமுகவின் மீதான பாஜகவின் கிடுக்குப்பிடி ஆதிக்கமும் அடங்கும். இத்தகைய அரசியல் பின்புலத்தில், தமிழகம் சட்டப்பேரவை தேர்தல்களை சந்திக்கவுள்ள தருணத்தில், கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம் பற்றிய சில முக்கிய அம்சங்களை பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
அரசுகளின் கொள்கைகளும் உழைப்பாளி மக்களும்
தமிழகத்தின் அரசியல் பொருளாதார போக்குகள் அகில இந்திய பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் பன்னாட்டு முதலாளித்துவ மந்தநிலையின் பின்புலத்திலும், இந்திய ஆளும் அரசுகளின் தாராளமய கொள்கைகளின் விளைவாகவும் குறைந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. 2011 –14 காலத்தில் இரண்டாம் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இது துவங்கி விட்டது. மோடி அரசின் 2016 ஆம் ஆண்டு செல்லாக்காசு (பணமதிப்பிழப்பு) நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீர்குலைத்தது. இந்த நடவடிக்கையும் தொடர்ந்துவந்த குளறுபடியான, மக்களுக்கும் மாநிலங்களுக்கும் விரோதமான ஜிஎஸ்டி அமலாக்கமும் நிலைமையை மேலும் மோசமாக்கின. இந்தியாவின் முறைசாராத்துறை கடும் பாதிப்புக்கு உள்ளானது. வேளாண்துறை தாராளமய கொள்கைகளால் 1990களின் இறுதியிலிருந்தே பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இடது சாரிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி நடத்திய நான்காண்டு காலத்தில் இடதுசாரிகளும் மக்கள் இயக்கங்களும் வலுவாக தலையிட்டு வேளாண் நெருக்கடிக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க ஓரளவிற்கு மத்திய அரசை நிர்ப்பந்திக்க முடிந்தது. ஆனால் 2008 இல் உலக முதலாளித்துவ நெருக்கடி வெடித்தது. பன்னாட்டு பெரும் கம்பெனிகளும் செல்வந்தர்களும் கொண்டுவரும் சூதாட்ட நிதி மூலதன சுழற்சி சரிந்தது. இது இந்திய பொருளாதார வளர்ச்சியை சிக்கலுக்கு உள்ளாக்கியது. இடையிடையே சிறிதளவு மீட்சி வந்து போனாலும் நெருக்கடி மேலும் ஆழமடைந்தது. இதையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மோடி அரசு செல்லாக்காசு, ஜிஎஸ்டி நடவடிக்கைகள் மூலம் முறைசாராத்துறையை அழித்தொழித்தது. இதன் மூலமும் தனது வரவு-செலவு-வரி கொள்கைகள் மூலமும் சராசரி உழைப்பாளி மக்களின் -தொழிலாளிகள், சிறு குறு விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர், விவசாயத் தொழிலாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் – வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் முற்றிலுமாக சீரழித்தது. மோடி அரசின் ஆட்சிக்காலத்தில் சாதாரண மக்களின் வருமானம் சரிந்ததோடு, அவர்கள் மீதான மறைமுக வரிச்சுமை பன்மடங்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கும் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும் தொடர்ச்சியாக வரிச்சலுகைகளை மோடி அரசு அளித்து வருகிறது. தமிழக மாநில அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசின் அதிதீவிர தாராளமய கொள்கைகளை உறுதிபட அமலாக்கி வருகிறது. அதற்கு முன்பும் இதுதான் நிலைமை என்றாலும், மத்திய மாநில முரண்பாடுகள் தொடர்பாகவாவது சில சமயங்களில் எதிர்ப்புக்குரலை அஇஅதிமுக பதிவு செய்ததுண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில்தான் மோடி அரசு மிக வேகமாக மாநிலங்களின் உரிமைகள் மீதும், வருமான வாய்ப்புகள் மீதும், கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. இதுவும் சமகால தமிழக அரசியல் பொருளாதாரத்தின் ஒரு அம்சமாகும். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கோவிட் பெரும்தொற்றுகாலத்தில் மாநிலங்களுக்கு உரிய உதவி அளிக்க மறுத்த மத்திய அரசை எதிலும் எதிர்க்காத மாநில அரசுகளில் பாஜக ஆட்சியில் இல்லாத ஒரே அரசு தமிழக அரசு தான்.
தமிழக பொருளாதார வளர்ச்சியின் சரிவு
அகில இந்திய பொருளாதார வளர்ச்சி சரிவு என்பது கடந்த ஏழு ஆண்டு பாஜக ஆட்சிக்காலத்தில் – குறிப்பாக 2016க்குப்பின் – தீவிரமடைந்ததை குறிப்பிட்டோம். தமிழகத்தின் சில புள்ளிவிவரங்கள் தமிழகத்திலும் இதுபோன்றே நிகழ்ந்தது என்பதை தெரிவிக்கின்றன. அகில இந்திய அளவில் உள்ளதைப்போல், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதன் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. வேளாண் மற்றும் வேளாண் சார் துறையின் பங்கு 12% என்ற அளவிலும், ஆலை உற்பத்தி மதிப்பின் (manufacturing) பங்கு 20% ஐ ஒட்டியும்,சேவைத்துறையின் பங்கு 55% என்ற அளவிலும் உள்ளன. வேளாண் துறை வருமானத்தை பிரதானமாக சார்ந்து நிற்கும் குடும்பங்களின் சதவிகிதம் குறைந்துள்ள போதிலும், இன்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலான குடும்பங்கள் தங்களது மொத்த வருமானத்தில் ஓரளவாவது சாகுபடி அல்லது கூலிவேலை மூலம் வேளாண்துறை சார்ந்ததாக உள்ளன. ஆனால் தாராளமய கொள்கைகள் வேளாண்துறையை கடுமையாக பாதித்துள்ள நிலையில் – குறிப்பாக, பயிர் சாகுபடியில் நிகர வருமானம் பெறுவது சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு மிகவும் கடினமாகியுள்ள பின்னணியில் – மாநில மொத்த உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும் பொழுதும் பெரும்பாலான கிராமப்புற மக்களுக்கு பொருளாதார நிலைமை உயர்வதில்லை. கள ஆய்வுகளும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் அனுபவமும் தமிழக கிராமங்களில் கிட்டத்தட்ட அனைத்து உழைப்பாளர் குடும்பங்களும், சிறு உடமையாளர் மற்றும் உற்பத்தியில் ஈடுபடுவோர் என்று மட்டுமின்றி பல துறைகளில் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளை தேடிக் கண்டுபிடித்து கூலி / சம்பளத்திற்கு கடுமையாக உழைத்தால்தான் தங்கள் குடும்பங்களை பராமரிக்க முடியும் என்ற இடத்தில் உள்ளதை நமக்கு தெரிவிக்கின்றன. அண்மையில், வெண்மணி, பாலகுறிச்சி ஆகிய காவிரி டெல்டா பகுதி கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஏழை விவசாயிகளும், குறைதொழில்திறன் (unskilled/semiskilled) சார்ந்த உடல் உழைப்பு பணிகளில் ஈடுபட்டு கடும் உழைப்பை செலுத்திவரும் உழைப்பாளி மக்களும் கிராமப்புற குடும்பங்களில் கிட்டத்தட்ட சரி பாதி என்ற அளவில் உள்ளனர். இந்த உழைப்பாளிக் குடும்பங்களின் மாதாந்திர தலா வருமானம் இரண்டாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவோ, அல்லது சற்றுக் கூடுதலாகவோதான் உள்ளது.
நகர்ப்புற ஆலை தொழிலாளர்களின் நிலைமையும் மோசமாகத்தான் உள்ளது. ஆண்டுதோறும் மத்திய புள்ளியியல் நிறுவனம் மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் பற்றிய ஆய்வு (Annual Survey of Industries)- 2018-19இன்படி, தமிழ்நாட்டில் 38,131 ஆலைகள் இருந்தன. அவற்றில் 21,12,058 தொழிலாளிகள் பணிபுரிந்தனர். அவர்களது சராசரி ஆண்டு வருமானம்ரூ. 1.5 லட்சம் தான். (மாதம் 12,500 ரூபாய்). நமது அமைப்புகள் கோரிவரும் குறைந்தபட்ச தினக்கூலியைக் கூட இது எட்டவில்லை. இந்த 21 லட்சம் தொழிலாளிகள் முதலாளிகளுக்கு ஒரு ஆண்டில் ஈட்டிக்கொடுத்த லாபம் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்களாகும்!
ஆனால் மத்திய, மாநில அரசுகளுக்கு இதைப்பற்றி எல்லாம் அக்கறை இல்லை. அவர்கள் முன்வைக்கும் கதையாடல்படி பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவது என்ற பெயரில் பன்னாட்டு இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் வரி மற்றும் இதர சலுகைகளை அளித்து அவர்களை முதலீடுகள் மேற்கொள்ள “ஊக்குவிப்பது” தான் அரசின் கடமை. மேலும் “முதலீட்டாளர்களின்” களத்தை விரிவுபடுத்த பொதுத்துறை நிறுவனங்களை வேகமாக பெருமுதலாளிகளுக்கு விற்பது என்பதும் அவர்கள் கொள்கைகளின் முக்கிய அம்சம். முதலாளிகளின் லாப வேட்டை சிக்கலின்றி நடந்திட உழைக்கும் வர்க்கம் போராடிப் பெற்ற குறைந்தபட்ச உரிமைகளையும் அழிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்ததும், அவற்றை நிறைவேற்ற தமிழகத்தை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுஆதரவு அளித்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது மத்திய அரசு பாராளுமன்ற நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் தமிழக ஆளும் கட்சியும் அரசும் ஆதரவு அளித்து வருவது அவர்களின் தாராளமய அணுகுமுறையை வெட்டவெளிச்சமாக்குகிறது. இந்த பின்புலத்தில் தான் மாநில அரசு ஆண்டு தோறும் பட்ஜெட் மூலமாகவும் பிற வழிகளிலும் அறிவிக்கும் “நலத்திட்ட” நடவடிக்கைகளையும் “சலுகைகளையும்” நாம் பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் வேளாண்துறை
கடந்த பல ஆண்டுகளாக தமிழக விவசாய உற்பத்தி மதிப்பு தேக்கத்தில்/சரிவில் உள்ளது. பெரும் ஏற்ற இறக்கங்களை கொண்டதாகவும் உள்ளது. நெல் மற்றும் உணவு தானியங்கள், சர்க்கரை பயிர்கள் மற்றும் எண்ணெய்வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி மதிப்பு சரிந்துள்ளது. பருப்புவகைகள் மற்றும் பைபர்கள் (Fibers) ஏற்ற இறக்கம் காட்டுகின்றன. கனி மற்றும் காய்கள் மட்டுமே மதிப்பு வளர்ச்சி காட்டுகின்றன. இக்காலத்தில் நெல் மற்றும் தானியங்களின் மகசூல் அளவிலும் ஏற்ற இறக்கம் அதிகமாக உள்ளது. தொடர்ச்சியான உயர்வு இல்லை. விவரங்களை www.tn.gov.in/crop என்ற இணையதளமுகவரியில் காணலாம்.
2015-16 ஆம் ஆண்டு வேளாண் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சாகுபடி செய்பவர்களில் 93% பேர் இரண்டு ஹெக்டேர்கள் அல்லது குறைவாக சாகுபடி செய்கின்றனர். இவர்களது சாகுபடி பரப்பளவு மொத்த சாகுபடி பரப்பளவில் 62% ஆகும். மீதம் உள்ள 7% சாகுபடியாளர்கள் கையில் மீதம் 38% உள்ளது. ஆகவே, தமிழக விவசாயத்தில் கணிசமான வருமானம் பெறும் இடத்தில் இருப்பவர்கள் மொத்த சாகுபடியாளர்களில் ஒரு சிறிய பகுதியினர் தான். அரசின் பல வேளாண்சார் சிறப்பு திட்டங்களும் முனைவுகளும் பெருமளவிற்கு இந்த சிறிய வசதியான பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. அரசின் பல மானியம் சார்ந்த திட்டங்கள் பெரும்பாலும் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதாகவும் வசதியான தனிநபர் சார்ந்த பாசன ஏற்பாடுகளை வலுவாக்கும் வகையிலும் அமைகின்றன. பெரும்பகுதி விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பயன் அடைவதில்லை. முழுமையான நிலச்சீர்த்திருத்தங்கள் தமிழகத்தில் நடைபெறாத சூழலில் இதில் வியப்பு இல்லை. ஊரக வேலை உறுதி திட்டம் மட்டுமே ஏழை விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளிகளுக்கும் ஓரளவாவது வருமானம் தரும் திட்டமாக உள்ளது. அதிலும் மோடி ஆட்சி ஒதுக்கீடுகளை குறைத்தும், நெறிமுறைகளை மாற்றியும் இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்களை சுருக்கியுள்ளது.
தமிழக விவசாயத்தின் தேக்கத்தை உடைக்க மத்திய மாநில அரசுகளின் கொள்கைகளில் பெரும் மாற்றம் தேவை. தாராளமய கொள்கைகளை கைவிடாமல் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பது இயலாதது. நில உறவுகளில் அனைத்து ஏழை உழைப்பாளிகளுக்கும் சாதகமான மாற்றங்கள் தேவை.
தொழில் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி கொள்கைகள்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகவே தனியார் முதலாளிகளை, குறிப்பாக அந்நிய மற்றும் இந்தியப் பெரும் கம்பெனிகளை, தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்ளவைக்கும் வகையில் அவர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் தமிழக மாநில அரசுகளால் அளிக்கப்பட்டன. மேலும் இக்கம்பெனிகள் தங்கு தடையின்றி உற்பத்தியை மேற்கொள்ள வசதியாக, அவர்களுக்கு நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துணை வசதிகளும் உத்தரவாதமாகவும், சலுகை விலையிலும் அளிக்கப்பட்டன. உற்பத்தி தங்கு தடையின்றி நடந்திட தொழிலாளிகளின் தொழிற்சங்க உரிமைகளும் இதர ஜனநாயக உரிமைகளும் குறுக்கப்பட்டன. இது தான் ஹூண்டாயிலும் நோக்கியாவிலும், ஃபாக்ஸ்கானிலும் இன்ன பிற பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கம்பெனிகளின் ஆலைகளிலும் நாம் காண முடிந்தது. அந்நிய, இந்திய கம்பனிகளுடன் முதலீட்டுக் கொள்கை என்ற பெயரில் அரசுகள் போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கே வரவில்லை. இவை பற்றி வெள்ளை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் கோரினர். இன்றுவரை அத்தகைய எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவரும் அஇஅதிமுக அரசு தொழில் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி என்பதை தனியார்துறை பெருமுதலாளிகள் மூலம் அரசின் மான்யங்களுடன் அமலாக்கவேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளது. அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் தமிழகத்தில் மாநில அரசின் முழு ஆதரவுடன் வலுவாக களம் இறங்கியுள்ளனர். உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் பல அறிவிப்புகள் வந்துள்ளன. இதில் ஒருவிஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள்/ ”“ஊக்கங்கள்” வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன் இணைக்கப்படுவதில்லை.
உள்நாட்டு சிறுகுறு தொழில்முனைவோர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அரசின் உதவி கிடைப்பதில்லை. மறுபுறம் தாராளமய கொள்கைகளின் கீழ் சிறுகுறு தொழில்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஏறத்தாழ அனைத்து துறைகளும் பெரும் கம்பனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. கடன் வட்டி விகிதங்கள் உயர்வு, மின்சார பற்றாக்குறை உள்ளிட்ட தாராளமய கொள்கைகளின் விளைவுகள் சிறுகுறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளன. இது வேலை வாய்ப்பையும் பாதித்துள்ளது. பொதுத்துறை முதலீடுகள் வெட்டப்பட்டு கட்டமைப்பு வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் தொழில் துறை வளர்ச்சியையும் அதன் தன்மையையும் பாதித்துள்ளது. அஇஅதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து துறை உள்ளிட்டு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் தொழிலாளர் விரோதப்போக்கும் மக்கள் விரோதப்போக்கும் வலுப்பெற்றுள்ளன.
தமிழக தொழில் வளர்ச்சியிலும், குறிப்பாக ஆலை உற்பத்தியிலும், கடந்த பத்து ஆண்டுகளில் உற்பத்திவளர்ச்சி விகிதம் சரிந்து வந்தாலும் உற்பத்தி பெருக்கம் நிகழ்ந்துள்ளது. நவீனமயமாக்கல் தொடர்கிறது. உற்பத்தியின் கட்டமைப்பு மாறியுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆலை தொழிலாளிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் மிகவும் குறைவாகவும் உறுதியற்றதாகவும்தான் உள்ளது. ஆலை உற்பத்தி துறையின் கடந்த பத்தாண்டு கால வளர்ச்சி உழைப்பாளி மக்களுக்கு வேலை இழப்பையும் அதிகமான சுரண்டலையுமே பரிசாக அளித்துள்ளது. தொழில் துறையின் இதர பகுதிகளான கட்டுமானம், மின்சாராம், எரிவாயு மற்றும் தண்ணீர் வழங்கல் ஆகியவற்றை பொறுத்தவரையில் கட்டுமானம் மட்டுமே வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. அங்கும் இயந்திரங்கள் வேகமாக நுழைந்தபின் வேலை வாய்ப்புகள் சுருங்கிவருகின்றன.
மின் உற்பத்தி துறை நெருக்கடியில் தொடர்வதை நாம் அறிவோம். 1990களிலேயே பொதுத்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு மின் உற்பத்தி திறனை பெருக்குவதற்குப் பதில் இத்துறையை தனியாருக்கு திறந்துவிட்டு அவர்களிடம் இருந்து காசு கொடுத்து மின்சாரம் வாங்கும் தாராளமய கொள்கைகள் துவங்கின. அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் கடந்த பத்து ஆண்டுகளாக இவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன..
சேவைத்துறை
தமிழக உள்நாட்டு உற்பத்திமதிப்பில் சேவைத்துறையின் பங்கு சுமார் 55%. கடந்த பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பொருளுற்பத்தித் துறைகளான வேளாண்மை மற்றும் தொழில் துறைகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. ஆனால் இத்துறையில் வங்கி, இன்சூரன்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஒரு சிறியபகுதியில் மட்டுமே உழைப்பவர்களின் ஊதியம் ஓரளவு சுமாராகவாவது உள்ளது எனலாம். பிற சேவைத்துறைகளில் உழைப்பாளர் நிலைமை குறைந்த வருமானம், பணிபாதுகாப்பற்ற தன்மை என்றுதான் உள்ளது. ஆளும் தமிழக அரசு மிகக்குறைந்த ஊதியம் பெற்று அரும்பணியாற்றிவரும் அங்கன்வாடி, மதிய உணவு திட்டம் உள்ளிட்ட அரசின் மக்கள்சார் சமூகநல திட்ட ஊழியர்களுக்கு நியாயம் வழங்க மறுத்துவருவதை நாம் அறிவோம். சேவைத்துறை என்பது பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிபுரியும் உழைப்பு நிலைமைகள் கொண்டதாகவே உள்ளது.
வேலையின்மை
கடந்த பத்தாண்டுகளில் தமிழக வளர்ச்சியில் ஆகப்பெரிய பிரச்சினையாக முன்வந்திருப்பது வேலையின்மை பிரச்சினை ஆகும். இதை எதிர்கொள்ள ஆளும் அரசு எந்த முனைவையும் எடுக்கவில்லை. மாறாக, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதில் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தும் தனியார்மய நடவடிக்கைகள் மூலமும் எதிர்த்திசையில் பயணிக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. எடுத்துக்காட்டாக, தமிழக அரசு வெளியீடான மாநில புள்ளிவிவர கையேட்டின் (Statistical Handbook, 2019) படி, 20௦16 இல் இது 17,66,889 ஆக இருந்தது. ஆனால் 2017 இல் 16,60,603 ஆக குறைந்துள்ளது. ஒருலட்சத்திற்கும் அதிகமான சரிவு ஒரு ஆண்டில் நிகழ்ந்துள்ளது. மாநில ஆளும் கட்சியும் அரசும் வேலையின்மையை பெரிய பிரச்சினையாக கருதவில்லை.
இயற்கை பேரிடர்கள் மற்றும் சூழல் பிரச்சினைகள்
அண்மைக் காலங்களில் புயல்கள், அதிதீவிர மழைபொழிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் தமிழகத்தை பாதித்துள்ளன. இவற்றை எதிர்கொள்ள உதவி செய்வதில்மத்திய அரசின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. மாநிலத்தின் தேவைகளை மத்திய அரசுடன் போராடிப்பெற மாநில அரசு முன்வருவதில்லை. மத்திய அரசால் உதவி மறுக்கப்படும் மாநில அரசு வளங்களை திரட்டும் வாய்ப்புகளை கண்டறிந்து செயல்படுவதில் முனைப்பு காட்டுவதில்லை. இதனால் தமிழக விவசாயிகளும் மீனவர்களும் இதர விளிம்புநிலை மக்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். மாநில அரசு கடன் ரத்து உட்பட சில நடவடிக்கைகளை அரசியல் அவசியம் கருதி மேற்கொண்டாலும் தேவைக்கு மிகவும் குறைவாகவே இவை அமைகின்றன. பெரும் பகுதி விளம்பரமாகவே முடிந்துவிடுவதும் உண்டு.
மறுபுறம் சுற்று சூழல் பிரச்சினைகளில் மக்கள் நலனை முன்வைத்து மாநில அரசு செயல்படுவதில்லை. தாராளமய கொள்கையின்படி, கம்பனிகளின் லாபக்கணக்கு மட்டுமே முதன்மையாக கருதப்படுகிறது. காவிரி டெல்டா பகுதி பிரச்சினைகள், எட்டுவழிச் சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, கடலோரப்பகுதி சூழல் மேலாண்மை, வனப்பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில் அரசு சூழல் பாதுகாப்பின் அவசியத்தைவிட கம்பனிகளின் லாப நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. சூழல்பாதுகாப்பு என்ற பெயரில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் எதிர்ப்பது தவறு. ஆனால் ஜனநாயக நெறிமுறைகளையும் அறிவியல்பூர்வமான ஆய்வுகளையும் புறந்தள்ளி, கம்பனிகளின் லாபம் மட்டுமே இலக்கு என்ற பார்வை சூழலுக்கும் மக்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும். தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இத்தவறான பாதையில் பயணிக்கிறது.
கல்வி, ஆரோக்கியம், சமூக பாதுகாப்பு
இத்துறைகளில் கடந்த காலங்களில் தமிழகம் குறிப்பிடத்தக்க அளவு செயல்பட்டது. ஆனால் தற்போதைய மாநில அரசின்கீழ் கல்வியும் மக்கள் நல்வாழ்வும் வேகமாக தனியார் மற்றும் வணிக மயமாகி வருகின்றன. மாநில அரசின் சிக்கன நடவடிக்கைகள் சமூக பாதுகாப்பு திட்டங்களையும் பாதித்துள்ளன. கல்லூரி செல்லும் வயதில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் உயர்கல்வி நிலையங்களில் படிப்பதாக மார் தட்டிக்கொள்ளும் மாநில அரசு பள்ளிக்கல்வியை தனியார் கொள்ளைக்கு தாரை வார்த்து வருகிறது. நீட் தேர்வை உறுதிபட எதிர்க்க மறுக்கிறது. கல்விப்புல அதிகாரங்களை மைய அரசு அபகரிப்பதை எதிர்க்க மறுக்கிறது.
அரசின் நிதி நெருக்கடி
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் வரி மற்றும் வரவு செலவு கொள்கைகள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மாநிலங்களின் வரி வருமானத்தை வீழ்ச்சி அடைய செய்தது. ஜிஎஸ்டி மாநிலங்களின் வரி போடும் அதிகாரத்தையே கிட்டத்தட்ட முற்றிலும் பறித்து மாநில அரசின் நிதிஆதாரங்களை மேலும் சுருக்கியது. மீண்டும் மீண்டும் மாநில அரசுகளை கலந்துகொள்ளாமல் கார்ப்பரேட் கம்பனிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் மைய அரசு அளித்துவரும் வரி சலுகைகள் மாநில-மைய வரிப்பகிர்வு ஏற்பாட்டின் கீழ் மாநிலங்களுக்கு வரவேண்டிய வரிவருமானத்தை குறைத்துவிடுகின்றன. மைய அரசின் கெடுபிடியால் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கொரோனா கால செலவுகளை மாநில அரசு சமாளிக்க வேண்டியிருந்தது. மாநிலத்திற்கு மைய அரசு தர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வரவில்லை. இவற்றோடு மாநில அரசும் தாராளமய கொள்கைகளை பின்பற்றுவதால் அதன்பங்கிற்கு முதலாளிகளுக்கு சலுகை அளிக்கிறது. இயற்கை வளங்களை மிகக்குறைவான தொகைகளுக்கு அவர்களுக்கு அளிக்கிறது. இதில் பெரும் ஊழலும் நிகழ்கிறது. மைய அரசின் நிதி மற்றும் அதிகாரம் சார்ந்த அடாவடி செயல்பாடுகளை எதிர்க்க பிற மாநிலங்களுடன் இணைந்தோ தானாகவே போராடவோ மாநில அஇஅதிமுக அரசு மறுக்கிறது.
நிறைவாக
மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான, பாஜகவும் இடம் பெற்றுள்ள கூட்டணியை தோற்கடிப்பது மிகவும் அவசிய அவசர அரசியல் கடமை.
Leave a Reply