இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்


அன்வர் உசேன்

குரல் : அருந்தமிழ் யாழினி

ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பா.ஜ.க. அரசாங்கம் வேகமாக பாசிச பாதையில் பயணிக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. எனினும் இதற்கு எதிர்வினையும் அதிகரித்து கொண்டே உள்ளது. நவம்பர் 26 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்/விவசாயிகளின் மகத்தான போராட்டம் ஆகியவை இதற்கு சான்று. கேரளம் மற்றும் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வியும் பாசிச சக்திகளை தடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தை பொறுத்தவரை, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மை சக்திகள் இந்த மகத்தான சவாலை சந்திக்க நம்பிக்கையுடன் தயாராக உள்ளனர். இந்துத்துவ சக்திகளும் இந்த தேர்தலை தமது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தி கொள்ள அனைத்து சூழ்ச்சிகளையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை பாண்டிச்சேரி நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. எனினும் ஒரு முக்கியமான அம்சத்தை நாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம். தேர்தல் மட்டுமே இந்துத்துவ சக்திகளின் இலக்கு அல்ல. தேர்தல் களத்துக்கு அப்பாலும் இந்த சக்திகள் தமது நச்சு கொடுக்குகளை பரப்ப இடைவிடாது இயங்குகின்றன.

தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் காலூன்ற துடியாய் துடிக்கின்றன. இதுவரை அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. தமிழகத்தில் என்றுமே இந்த சக்திகள் வலுப்பெற முடியாது என எவரும் நினைத்தால், அது தவறான மதிப்பீடாகவே அமையும். இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து பகீரத முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பதை நாம் உதாசீனம் செய்யக் கூடாது. தமிழகத்தின் தனித்துவ சமூக கூறுகளை வலுப்படுத்தும் அதே சமயத்தில் நாம் விழிப்புணர்வுடன் இருப்பது மிக அவசியம் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் இந்துத்துவா கொள்கைகள் குறித்து நாம் விவாதிக்கும் பொழுது இதனுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்வது அவசியம். ஒன்று, தற்போதைய சூழலில் இந்துத்துவா கொள்கைகளும் நாசகர நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளும் ஒன்று சேர்ந்து ஒரே திசையில் பயணிக்கின்றன. ஒன்றை தவிர்த்துவிட்டு இன்னொன்றை மட்டுமே எதிர்ப்பது என்பது நிரந்தர பலன் தராது. இந்த இரட்டை அபாயங்களையும் ஒருசேர எதிர்ப்பது மிக மிக அவசியம்.

இரண்டாவது அம்சம் சிறுபான்மை மதவாதம் குறித்தது ஆகும். முதன்மை ஆபத்து என்பது ஆர்.எஸ்.எஸ். முன்னிறுத்தும் பெரும்பான்மை மதவாதம்தான். எனினும் சிறுபான்மை மதவாதத்தின் ஆபத்தையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. பெரும்பான்மை மதவாதம் காரணி எனில் சிறுபான்மை மதவாதம் அதன் விளைவு. இரண்டு மதவாதங்களும் ஒன்றுக்கொன்று வளர்வதற்கு உதவிக் கொள்கின்றன என்பது நடைமுறை அனுபவமாகும்.

தமிழகத்தின் தனித்துவம்

தமிழகத்தில் ஏன் இந்துத்துவா சக்திகள் காலூன்ற முடியவில்லை? தமிழக வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் சில காரணங்களை வகைப்படுத்த முடியும்.

1. ஆரிய நாகரிகம் இங்கு வந்தடைவதற்கு முன்பே ஒரு சிறந்த நாகரிகம் இங்கே இருந்தது என்பதை கீழடி/ஆதிச்ச நல்லூர்/கொற்கை ஆகழாய்வுகள் நிரூபிக்கின்றன.

2. வர்ணாசிரமத்துக்கு எதிரான ஒரு வலுவான தொடர்ச்சியான போராட்டம் தமிழகத்தில் இடைவிடாது பல நூற்றாண்டுகளாக நடந்துள்ளது.

3. வட பகுதியுடன் ஒப்பிடும் பொழுது இந்து-முஸ்லீம் அல்லது இந்து-கிறித்துவ முரண்பாடுகள் தமிழகத்தில் குறைவு.

தமிழகத்தில் ஆசிவகம் உட்பட சமணமும் பவுத்தமும் மக்களிடையே வலுவான ஆதரவை பெற்றிருந்தன. வர்ணாசிரமம் தாமதமாகவே தமிழகம் வந்தடைந்தது; ஆனாலும் வந்தது. இங்கு வலுவாக நிலவிய ஆசிவகம்/ பவுத்தம்/ சமணம் அவ்வளவு எளிதாக வர்ணாசிரமத்துக்கு இடம் கொடுக்கவில்லை. எதிர்சமர் புரிந்தன. குண்டலகேசி/ நீலகேசி/ ஒரு பிரிவு சித்தர்களின் படைப்புகள் இதற்கு சாட்சி. வர்ணாசிரமம் வர்ண பேதத்தை முன்வைத்த பொழுது எதிர்வினையாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”என வள்ளுவர் கூறினார். உயர் வர்ணங்களை ஏனைய வர்ணங்கள் அடிபணிய வேண்டும் என்ற பொழுது “எலும்பிலும் தோலிலும் இலக்கம் இட்டு இருக்கோ?” என சித்தர்கள் எதிர்குரல் கொடுத்தனர். பவுத்தத்தை ஆதரித்த களப்பிரர்கள் பிராமணியத்தை ஒடுக்க முற்பட்டனர். முந்தைய ஆட்சியில் பிராமணர்களுக்கு தரப்பட்ட நிலங்களை திருப்பி வாங்கும் அளவுக்கு களப்பிரர்கள் தீவிரமாக செயல்பட்டனர். அதனாலேயே களப்பிரர்களின் ஆட்சி திட்டமிட்டு இருண்ட காலம் என மறைக்கப்பட்டது. இங்கு ஊடுருவ வேண்டும் எனில் சமஸ்கிருதம் பயன்படாது; தமிழை கையில் எடுக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் தமிழை ஆயுதமாக கொண்டு தாக்குதல் தொடுத்தனர். பவுத்தமும் சமணமும் வேட்டையாடப்பட்டன. எனவே பின்வாங்கின. வர்ணாசிரமம் தமிழகத்தில் காலூன்றியது.

இதற்கு எதிரான எதிர்வினையும் உருவான வண்ணம் இருந்தன. வள்ளலார் ஆன்மீக கோணத்திருந்து எதிர்வினையாற்றினார். வர்ணாசிரமத்தின் நீட்சியாக சாதியம் உருவாகி ஒரு பிரிவினரை தள்ளிவைத்த பொழுது அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறுகளை நிறுவினார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் தமிழகத்தில் கிறித்துவம் காலடி எடுத்துவைத்தது. முதலில் உயர்வகுப்பினரிடையே பரவ முயன்று தோல்வி கண்டது. தனது அணுகுமுறையை மாற்றி ஒடுக்கப்பட்டவர்களை அணுகியபொழுது ஒரு பிரிவு மக்கள் கிறித்துவத்தை அரவணைத்தனர். பவுத்தம்/சமணம் காலகட்டத்தில் கிடைத்த கல்வி, பின்னர் வர்ணாசிரமவாதிகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டது. கிறித்துவத்தின் முயற்சியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் கல்வி கிடைத்தது. இது கிறித்துவத்தின் வளர்ச்சிக்கும் வழிகோலியது.

வர்ணாசிரமத்துக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. தமிழகத்தில் அயோத்திதாசரும் ரெட்டை மலை சீனிவாசனும் அடக்கப்பட்டவர்களின் குரலாக முன்வந்தனர். அயோத்திதாசர் திராவிட கருத்தியலின் பிதாமகர் எனில் மிகை அல்ல. இந்த பரிணாமத்தின் ஒரு முக்கிய கட்டமாக பெரியார் களத்துக்கு வந்தார். பெரியாரின் செயல்பாடுகள் தமிழ் சமூகத்தில் ஒரு ஆழமான தாக்கத்தை உருவாக்கியது. இந்தியாவின் விடுதலை குறித்த பெரியாரின் கருத்துகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல என்றாலும், அவரின் தாக்கம் இன்றளவும் மிகப்பெரிய பங்கை ஆற்றிக்கொண்டுள்ளது என்பதை மறுக்க இயலாது. சங்பரிவாரத்துக்கு எதிராக ஒரு வலுவான கேடயமாக பெரியார் இன்றளவும் திகழ்கிறார் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.  இதே காலகட்டத்தில் தஞ்சை தரணி உட்பட பல பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களை சமூக கொடுமை பொருளாதார சுரண்டல் இரண்டுக்கும் எதிராகவும் பொதுவுடமை இயக்கம் அணிதிரட்டியது. இந்த சீர்திருத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் தமிழகத்தின் அரசியலில் இன்றுவரை ஒரு மகத்தான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

தமிழகத்தில் மத ஒற்றுமை

தமிழகம் ஒட்டு மொத்தமாக சுல்தான்கள் அல்லது முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கவில்லை. சுமார் 50 முதல் 60 ஆண்டுகள் பாண்டிய தேசத்தை சில சுல்தான்கள் ஆண்டனர். பின்னர் அவர்கள் விஜயநகர மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டனர். முகலாய பேரரசின் ஒரு பகுதியாக கூட தமிழகம் இருக்கவில்லை. வடபகுதி அளவுக்கு இஸ்லாம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக இந்து முஸ்லீம் முரண்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உருவாகவில்லை.

வட இந்தியாவில் நடந்தது போல வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்கள் தமிழகத்தில் நடக்கவில்லை. பாண்டிய மன்னரின் குடும்பத்தில் உருவான முரண்பாடுகள் காரணமாக அவர்களின் ஒரு பிரிவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாலிக் காபூரின் படைகள் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தன. வழியில் ஓரிரு சிறிய கோவில்கள் மாலிக்கபூரின் படைகளால் தாக்கப்பட்டன. எனினும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலோ அல்லது இராமநாதபுரம் கோவிலோ தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. அவை தாக்கப்பட்டிருந்தால் இன்றளவும் சங்பரிவாரத்தின் பிரச்சாரத்துக்கு அது தீனியாக அமைந்திருக்கும்.

(மத்திய காலத்தில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டது குறித்து சங்பரிவாரம் வரலாற்றை திசைதிருப்பி பிரச்சாரம் செய்கிறது. வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டது உண்மையே! எனினும் முஸ்லீம் மன்னர்களால் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்பட்ட உதாரணங்களும் ஏராளம்! இந்து மன்னர்களும் இந்து கோவில்களை அழித்துள்ளனர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. அதே சமயத்தில் மசூதிகளை கட்டிக்கொடுத்த இந்து மன்னர்களும் உண்டு. சைவமும் வைணவமும் மறுமலர்ச்சி அடைந்த பொழுது ஏராளமான சமண/பவுத்த கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. தமிழகத்தில் இதற்கு பல குறிப்பிடத்தக்க உதாரணங்கள் உண்டு. இவை அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆய்வதற்கு மாறாக முஸ்லீம்களை இந்துக்களின் எதிரிகளாக கட்டமைக்க வரலாற்றின் ஒரு பகுதியை மட்டுமே சங்பரிவாரம் முன்நிறுத்துகிறது.)

1857 கிளர்ச்சி இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே சில முக்கிய கிளர்ச்சிகள் தமிழகத்தில் நிகழ்ந்தன. வேலு நாச்சியார்/மருது சகோதரர்கள்/ தீரன் சின்னமலை ஆகியோர் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போர்களும் வேலூர் கலகமும் தமிழகத்தில் முக்கியமான பிரிட்டஷ் எதிர்ப்பு போராட்டங்கள் ஆகும். இவற்றின் பல்வேறு தகவல்களை ஆய்வு செய்தால் இந்த கிளர்ச்சிகளில் இந்து-முஸ்லீம் ஒற்றுமை வலுவாக இருந்தது புலனாகும். வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியும் சின்னமலைக்கு திப்பு சுல்தானும் உதவியதாக பதிவுகள் உள்ளன. சின்ன மருதுவின் ஆங்கிலேயருக்கு எதிரான “ஸ்ரீரங்கம் பிரகடனம்” இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. சின்ன மருதுவின் தோல்விக்கு பின்னர் அவரின் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும் பலர் மருதுவின் புதல்வர்கள் உட்பட பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதில் முஸ்லீம்களும் அடக்கம். வேலூர் கலகம் திப்புவின் புதல்வர்கள் தலைமையில் இந்துக்கள்-முஸ்லீம்கள் என அனைவரும் சேர்ந்து நடத்தப்பட்டது.

பிரிட்டஷாருக்கு எதிராக நடந்த தமிழக கிளர்ச்சிகளில் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்தே பங்கேற்றனர். வடக்கே இருந்த அளவுக்கு தமிழகம் உட்பட தென்னகத்தில் பாகிஸ்தான் ஆதரவு உணர்வு இருக்கவில்லை. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் பாகிஸ்தானை ஆதரிக்க கடமைப்பட்டவர்கள் என ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் பிரச்சாரம் செய்தது. பாகிஸ்தான் இன்னொரு மெக்கா/மதீனா எனவும் கூறப்பட்டது. எனினும் தமிழக முஸ்லீம்களிடையே இது பெரிய ஆதரவைப் பெறவில்லை. பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக முஸ்லீம்களின் மாநாடுகள் சென்னையிலும் பின்னர் கும்பகோணத்திலும் நடந்தது. பாகிஸ்தான் கோரிக்கையை எதிர்த்தவர்கள் முஸ்லீம் லீகிலிருந்து வெளியேறினர்.

இந்திய விடுதலை தேசப்பிரிவினையுடன் இணைந்து நிகழ்ந்தது. தேசப்பிரிவினையின் பொழுது ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் அங்கிருந்து இங்கேயும் வந்தனர். இதன் விளைவாக வடபகுதிகளில் மதக்கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. காந்திஜி நவகாளியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த சூழலில் தமிழகம் பெரிய அளவில் கலவரங்களை சந்திக்கவில்லை. ஆம்பூரிலும் இராமநாதபுரத்திலும் கலவரங்கள் தோன்றின. அன்றைய முதல்வர் பிரகாசம் அவர்கள் விரைவாக செயல்பட்டு கலவரங்களை அடக்கினார். ஒப்பீட்டளவில் தமிழகம் அமைதியாக இருந்தது என கூறுவது மிகை அல்ல.

இந்த அரசியல் சமூக நீரோட்டங்களின் ஒட்டு மொத்த சூழல் தமிழகத்துக்கு தனித்துவத்தை உருவாக்கியது. ஒரு புறத்தில் வர்ணாசிரமத்துக்கு எதிராக போராட்டங்கள் பல வடிவங்களில் அரங்கேறின. மறுபுறத்தில் இந்து- முஸ்லீம் முரண்பாடுகள் ஒரு வரையறுக்குள் இருந்தது; ஒற்றுமை பாதுகாக்கப்பட்டது. பாசிச சக்திகளுக்கு எப்பொழுதுமே ஒரு கற்பனை எதிரியை கட்டமைக்கும் தேவை உள்ளது. அப்பொழுதுதான் தனது பெரும்பான்மை இனத்தை அணிதிரட்ட இயலும். இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லீம்களையும் சில பகுதிகளில் கிறித்துவர்களையும் ஆர்.எஸ்.எஸ். அவ்வாறு இந்துக்களின் எதிரிகளாக கட்டமைப்பதில் வென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் (ஒரு சில மாவட்டங்கள் தவிர) அதில் இதுவரை பெரிய அளவுக்கு வெல்ல முடியவில்லை. இந்த இரண்டு காரணங்களாலும் ஆர்.எஸ்.எஸ். பெரிய அளவுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.

தமிழகத்தில் இயற்கையாக வளர இயலாத சங்பரிவாரம் வேறு ஒரு உத்தியை கையாள்கிறது. அகில இந்திய அளவில் தனக்கு உருவாகியுள்ள அசுர பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தனது வளர்ச்சியை திணிக்க முனைகிறது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.ன் செயல்பாடுகள்

ஆர்.எஸ்.எஸ்.தமிழகத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு ஆகும். கடந்த சில வருடங்களில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாக்காக்கள் எண்ணிக்கை கீழ்கண்டவாறு அதிகரித்துள்ளன:


பகுதி
20152020
தென் தமிழகம்8401320
வட தமிழகம்515749
மொத்தம்13152069
பங்கேற்பாளர் எண்ணிக்கை10,00025,000
தமிழகத்தில் அர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள்

இந்த ஷாக்காக்களில் 10 வயது முதல் முதியவர்கள் வரை பங்கேற்கின்றனர். இங்கே அளிக்கப்படும் உடற்பயிற்சிகளும் தற்காப்பு கலைகளும் இளைஞர்களுக்கு ஈர்ப்பு சக்தியாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு ஷாக்கா கூட்டத்திலும் தனது விஷ கொள்கைகளை பங்கேற்பாளர்களின் சிந்தனையில் செலுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. தனக்கு என்ன பயிற்றுவிக்கப்படுகிறது என்பதை உணரும் முன்பே, பங்கேற்பாளர் இந்துத்துவாவின் ஆதரவாளராகவும், பின்னர் ஊழியராகவும் மாறிவிடுகிறார். முஸ்லீம்-கிறித்துவ எதிர்ப்பு/கம்யூனிச எதிர்ப்பு/திராவிட எதிர்ப்பு/பெரியார் வெறுப்பு ஆகியவை வலுவாக திணிக்கப்படுகின்றன.

சாதிய வேறுபாடுகள் முக்கியம் அல்ல! மத வேறுபாடுகள்தான் முக்கியமானவை என்பதும் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான தேசம் என்பதும் வலுவாக ஊட்டப்படுகிறது. “நாம் தமிழ் பிராமணராக இருக்கலாம்; அல்லது தமிழ் நாடாராக இருக்கலாம். ஆனால் நாம் அனைவரும் இந்துக்கள் என்பதுதான் முக்கியம்.” என்பது ஷாக்கக்களில் போதிக்கப்படும் முக்கிய கருத்து. வறுமை/வேலையின்மை/விலைவாசி உயர்வு ஆகியவை உருவாக்கும் துன்பங்களைவிட நமது மதம் ஆபத்தில் உள்ளது என்பதும், அதனை நீக்க இயங்குவதும்தான் முக்கியமானது என்பது போதிக்கப்படுகிறது.

460 ஷாக்காக்கள், அதாவது 20% மேற்கு மாவட்டங்களான கோவை/திருப்பூர்/நீலகிரியில் நடைபெறுகின்றன. அதே போல கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்டங்களிலும் அதிக அளவிலான ஷாக்காக்கள் நடக்கின்றன. இதில் ஆச்சர்யம் இல்லை. மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் குறித்த தவறான பிரச்சாரம் ஆர் எஸ் எஸ் காலூன்ற ஒரு வாய்ப்பை அளித்தது எனில், அடுத்து 1982இல் நடந்த மண்டைகாடு கலவரங்களுக்கு (இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே உருவாக்கப்பட்ட மத மோதல்கள்) பின்னர் இந்துத்துவா சக்திகள் தென் தமிழகத்தில் மேலும் தம்மை வலுப்படுத்தி கொண்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ஆர்.எஸ்..எஸ். மற்றும் இஸ்லாமிய மதவாத அமைப்பான அல் உம்மா இடையே தொடர்ந்து முரண்பாடுகள் இருந்து வந்தன. போக்குவரத்து காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து 1997ஆம் ஆண்டு கலவரங்களில் 18 முஸ்லீம்கள் இந்துத்துவா சக்திகளால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கவும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் அல் உம்மா சார்பாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 58 பேர் கொல்லப்பட்டனர். இது அல் உம்மாவின் மேலாதிக்கத்துக்கு உதவவில்லை; மாறாக இந்துத்துவா சக்திகளின் வலுவான தளங்கள் உருவாக காரணமாக அமைந்தது. மேற்கு மாவட்டங்கள் முழுவதிலும் இஸ்லாமிய மக்கள் திடீரென அனைவரின் வெறுப்புகளுக்கு ஆளாயினர். கோவையில் சிதைந்து போன மத ஒற்றுமையை ஓரளவுக்காவது மீட்டெடுக்க, மதச்சார்பின்மை சக்திகளுக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டன. எனினும், இன்றளவும் மேற்கு மாவட்டங்களில் இந்துத்துவா சக்திகள் வலுவாக உள்ளன. அதன் பிரதிபலிப்புதான் அங்கு அதிகமாக நடக்கும் ஷாக்காக்கள்.

எனினும் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வளரமுடியவில்லை எனும் ஆதங்கம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உள்ளது. தென் தமிழக ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் எஸ். ராஜேந்திரன் கூறுகிறார்:

“வளர்ச்சி உள்ளது. ஆனால் கேரளா அளவுக்கு இல்லை. இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.”

இந்துத்துவா சக்திகளின் கல்வி நிலையங்களும் தொழிற்சங்கமும்

இந்துத்துவா சக்திகள் கல்வி நிலையங்கள் நடத்துவதும் அதன் மூலம் மாணவர்களை இளம் வயதிலேயே மூளைச்சலவை செய்வதும் பரவலாக நடக்க்கூடிய ஒன்று. இந்தியா முழுதும் சுமார் 12,000 பள்ளிகள் “வித்யா பாரதி” எனும் பெயரில் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 30 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இந்த அமைப்பு தமிழகத்திலும் பள்ளிகளை நடத்துகின்றனர். அதன் விவரங்கள்:

  • தொடக்கநிலை பள்ளிகள்- 159
  • நடுநிலை பள்ளிகள்- 32
  • உயர்நிலை பள்ளிகள்- 39.
  • உயர்நிலை மேல் பள்ளிகள் – 47.
  • பயிலும் மாணவ/மாணவிகள்- 64,662.
  • மேலும் “ஸன்ஸ்கார் மையங்கள்” என்ற பெயரிலும் 108 கல்வி நிலையங்கள் நடத்தப்படுகின்றன.

இந்துத்துவா தலைவரும் முசோலினியை நேரில் சந்தித்து அந்தவழியில் இந்துக்களை ஆயுதபாணிகளாக்க ஆக்க வேண்டும் என கூறியவருமான முன்ஷி தொடங்கிய “பாரதிய வித்யா பவன்” கல்வி நிலையங்களும் தமிழகத்தில் உள்ளன. சென்னை/கோவை/கொடைக்கானல் ஆகிய இடங்களில் இந்த பள்ளிகள் நடக்கின்றன. இந்த கல்வி நிலையங்களில் என்ன பாடத்திட்டங்கள் என வெளியில் கூறிக்கொண்டாலும், உள்ளுக்குள் இந்துத்துவா நச்சு கருத்துகள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை கூறத் தேவை இல்லை.

சேவா பாரதி எனும் பெயரில் ஏராளமான “கல்வி உதவி நிலையங்களை” இந்துத்துவா சக்திகள் நடத்துகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 9 மாவட்டங்களில் 115 டியூஷன் மையங்கள் இயங்கின. இன்று 20 மாவட்டங்களில் 1,000 மையங்கள் இயங்குகின்றன. பெரும்பாலும் வசதியற்ற இடைநிலை சாதிகள்/தலித் மக்களிடையே இந்த மையங்கள் இயங்குகின்றன. இங்கு பாடங்கள் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. பாடங்களுக்கு முன்பு கோவில் சுத்தம் செய்தல்/இறை வழிபாடு/தியானம் ஆகியவை முன்னெடுக்கப்படுகின்றன. ஆன்மீக அளவில் மனதை தயார்படுத்திவிட்டால், பின்னர் இந்துத்துவ கருத்துகளை உட்செலுத்துவது மிகவும் சுலபமாகிவிடுகிறது. இலவச சேவை என்பதால் பெற்றோர்கள் இந்துத்துவா பின்னணி குறித்து கவலைப்படுவது இல்லை.

ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பான “அகில பாரத வித்யார்த்தி பரிஷாத்’ அமைப்பும் தன்னை வலுப்படுத்திக் கொள்ள முனைப்புடன் செயல்படுகிறது. கோவை/ கன்யாகுமரி/ சிவகங்கை/ சென்னை போன்ற இடங்களில் பள்ளி/கல்லூரிகளில் காலூன்ற முயற்சிகள் நடக்கின்றன. எனினும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற இயலவில்லை.

தமது கால்பதிப்புக்கு இந்துத்துவா சக்திகள் சார்ந்திருக்கும் இன்னொரு அமைப்பு “பாரதிய மஸ்தூர் சங்” எனும் தொழிற்சங்க அமைப்பு ஆகும். அநேகமாக நெய்வேலி/பி.எச்.இ.எல்./ இரயில்வே/போக்குவரத்து/மின்சாரம் போன்ற அனைத்து அணிதிரட்டப்பட்ட தொழில்களிலும் பி.எம்.எஸ். இயங்குகிறது. பி.எச்.இ.எல். திருச்சி ஆலையில் மட்டும் தேர்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 5 சங்கங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற இடங்களில் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. சமீப காலமாக முறைசாரா தொழில்களில் பி.எம்.எஸ். அதிக கவனத்தை செலுத்துகிறது. ஆட்டோ/கட்டிடம்/தரைக்கடைகள் ஆகியவை சில உதாரணங்கள். ஆட்டோ மற்றும் தரைக்கடைகளில் முஸ்லீம் உழைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகம். சில முஸ்லீம் அமைப்புகளும் தொழிற்சங்கத்தை உருவாக்கியுள்ளன. கணிசமான முஸ்லீம் தொழிலாளர்களை தன்பக்கம் இந்த தொழிற்சங்கங்கள் ஈர்த்துள்ளன. இது கவலை தரும் அம்சமாகும். ஒரு புறம் இடதுசாரி/திராவிட/காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் பலவீனம் அடைகின்றன. மறுபுறத்தில் முஸ்லீம் தொழிலாளர்களை எதிரிகளாக கட்டமைத்து இந்து தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பையும் பி.எம்.எஸ்.ஸுக்கு இந்த சூழல் உருவாக்குகிறது. எனினும் மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத கொள்கைகள் காரணமாக பி.எம்.எஸ். எதிர்பார்த்த அளவு முன்னேற இயலவில்லை. ஆனால் அதன் ஒவ்வொரு உறுப்பினரும் இந்துத்துவா ஆதரவாளராக மாறும் ஆபத்து உள்ளது என்பதை மறுக்க இயலாது.

இந்துத்துவாவின் தமிழ் முகமூடி

தமிழகத்தில் காலூன்ற தமிழ் முகமூடி தேவை என்பதை சங் பரிவாரத்தினர் உணர்ந்துள்ளனர். அதற்காக தமிழ்/தமிழ் கடவுள் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். முருகன் தமிழ் கடவுள். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில்தான் முருகன் கும்பிடப்படுகிறார். வடபகுதிகளில் அவ்வாறு இல்லை. இதன் காரணமாக முருகரை கைக் கொள்வது என சங் பரிவாரத்தினர் முடிவு செய்தனர். 2018ஆம் ஆண்டு வேல் சங்கம ரத யாத்திரையை எச்.ராஜா நடத்தினார். அதன் நோக்கங்கள் என்ன?

”நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மீகத் தமிழகத்தை அதன் வழியில் தொடரும் வகையிலும், பிரிவினைவாத பயங்கரவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தை காக்கவும், சாதி, மதம், மொழி வேறுபாடுகள் கடந்து  மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த வேல் சங்கம ரத யாத்திரையை தொடங்கியுள்ளோம்.” 

இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் இவர்கள் மீட்க முயல்வது “”நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மீகத் தமிழ்”. தமிழுக்கு புதிய வடிவமாக “ஆன்மீக தமிழ்” என நாமகரணம் சூட்டுகின்றனர். அப்படியாயின் “ஆன்மீக விரோத” அல்லது “ஆன்மீகமற்ற” தமிழ் என ஒன்று உள்ளதா? அது எத்தகைய தமிழ்? தமிழ் குறித்த புதிய குழப்பத்தை கட்டமைக்க முயலும் முயற்சி இது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்த்தனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழை வளர்த்த மற்றவர்களும் உள்ளனரே!

எனவே சங்பரிவாரம் முன்வைக்கும் “ஆன்மீக தமிழ்” என்பது தமிழின் தொன்மை வரலாற்றின் ஒரு பகுதியை இருட்டடிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது.

இந்த வேல் சங்கம யாத்திரை பெரிய ஆதரவை பெறவில்லை. பா.ஜ.க.வினரே கூட இதனை சீரியஸாக எடுத்துகொள்ளவில்லை. எனினும் 2020ஆம் ஆண்டு கருப்பர் கூட்டம் எனும் அமைப்பு கந்தர்சஷ்டி குறித்து கூறிய கருத்துகளை மையமாக வைத்து, மீண்டும் ஒரு வேல் யாத்திரையை பா.ஜ.க. நடத்தியது. இதுவும் பெரிய ஆதரவை பெறவில்லை என்றாலும், ஒரு சிறிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுக்க முடியாது. பாசிச எதிர்ப்பு சக்திகள் தாம் முன்வைக்கும் கருத்துகள்/சொற்றொடர்கள் குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனும் படிப்பினையை இது முன்வைக்கிறது.

வள்ளுவரை கைப்பற்றுதல்!

சங்பரிவாரத்தினரின் அடுத்த முயற்சி திருவள்ளுவரை சுவீகரிப்பது ஆகும். திருவள்ளுவருக்கு காவிவர்ணத்தை பூசினர். இறுதியாக சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் குடுமியும் பூணுலும் தரித்துவிட்டனர். எனினும் அவர்கள் திருக்குறளை முன்வைப்பதில் ஒரு உள்நோக்கம் உள்ளது. அவர்களின் உண்மையான நோக்கம் கீதையை வலுவாக முன்னெடுப்பதுதான்! எனவேதான் ஆர்.எஸ்.எஸ்.இன் விஜயபாரதம் “பகவத் கீதையும் திருக்குறளும் நமக்கு இரு கண்கள்” என கூறுகிறது. வர்ணாசிரமத்தை நியாயப்படுத்தும் கீதையும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருக்குறளும் எப்படி “இரு கண்களாக” இருக்க இயலும்? இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுபவர்களா என்ன சங்பரிவாரத்தினர்?

“சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்பதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்கள்தானே.” என வள்ளுவர் நால்வர்ணத்தை ஆதரித்துள்ளார் என ஒரே போடாக போடுகிறது விஜயபாரதம்.

தெய்வீக தமிழ் சங்கம்

சமீபத்தில் சங்பரிவாரத்தினர் “தெய்வீக தமிழ் சங்கம்” எனும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்க வேண்டிய அவசியம் ஏன்?

“நாங்கள் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அடையாளத்துடன் வீடு வீடாக சென்றோம். போதிய வரவேற்பு இல்லை. எனவே “தெய்வீக தமிழ் சங்கம்” அமைப்பை உருவாக்கியுள்ளோம்.” என கூறுகிறார் எச்.பி. கார்த்திக் எனும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர். “தேசம் காப்போம்-தமிழகம் காப்போம்” எனும் தலைப்பில் ஒரு பிரசுரம் தயாரிக்கப்பட்டு சுமார் 1.5 கோடி வீடுகளுக்கு தருவதற்கு திட்டமிட்டனர்.

இந்த பிரசுரத்தில் என்ன கூறப்பட்டுள்ளது?

  • தமிழின் மேன்மை
  • மதமாற்ற அபாயம்
  • லவ்ஜிஹாத் ஆபத்து
  • இந்துக்களின் மக்கள் தொகை சரிவு

போன்ற விவரங்கள் இதில் உள்ளன.

“தமிழகத்தில் 13,208 பஞ்சாயத்துகள், 6,872 வார்டுகளில் உள்ள 88,75,932 வீடுகள் தொடர்பு கொள்ளப்பட்டன. இதற்கு, ஆண்கள் 1,08,390 பேரும், 13,952 பெண்களும் இந்த பிரச்சாரத்தில் தங்களின் நேரமளித்து தொண்டாற்றினார்கள்.” என விஜயபாரதம் தெரிவிக்கிறது.

மக்களின் ஆதரவு எப்படி இருந்தது?

“ஆதரவும் ஆதரவற்ற தன்மையும் கலந்து இருந்தது; ஆனால் முந்தைய காலத்தைவிட ஆதரவு கூடுதலாக இருந்தது” என்பது எச்.பி. கார்த்திக்கின் மதிப்பீடு.

இது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

1. சங் பரிவாரத்தின் எதிர்பார்ப்பு தமிழகத்தில் நிறைவேறும் நாள் இன்னும் தூரத்தில் உள்ளது.

2. அந்த நாள் வரும் வரை சங் பரிவாரம் தனது முயற்சிகளை கைவிடப்போவது இல்லை.

வர்ணாசிரமத்துக்கு எதிராக தமிழகம் நீண்ட போராட்டம் நடத்தியிருந்தாலும் அதன் நீட்சியான சாதியத்துக்கு எதிராக அதே வீரியத்துடன் உள்ளதா எனில் அது மிகப்பெரிய கேள்விக் குறியே! தலித் மக்கள் மீதான தாக்குதல்கள்/ ஆணவக் கொலைகள் ஆகியவை தமிழகத்தை ஏனைய மாநிலங்களிலிருந்து வேறுபடுத்தவில்லை என்பது கசப்பான உண்மை. இந்த சாதிய முரண்பாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள இந்துத்துவ சக்திகள் முனைகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

தமிழக அரசியல் களம்

ஆர்.எஸ். எஸ். அமைப்பும் அதன் துணை அமைப்புகளும் பல நகர்வுகளை சமூக தளத்தில் நடத்துகின்றன. இவற்றின் ஒரு முக்கிய நோக்கம் – அரசியல் அரங்கில் இவை பா.ஜ.க.வுக்கு ஆதரவு வாக்குகளாக மாற வேண்டும் என்பதாகும். தமிழக அரசியல் அரங்கில் பா.ஜ.க. ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. அதன் தேர்தல் பலம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திலும், கோவை/திருப்பூர் மாவட்டங்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. அங்கும் கூட திராவிட கட்சிகளின் ஆதரவு இல்லாமல் வெல்வது சாத்தியமல்ல. பெரும்பான்மையான தொகுதிகளில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பா.ஜ.க. பெறுகிறது.

எனினும் தமிழகத்தில் பல கட்சிகள் பா.ஜ.க.வுடன் அரசியல் உறவு வைத்துள்ளன. அநேகமாக இடதுசாரி கட்சிகளும் வி.சி.க.வும் தவிர (வி.சி.க.வையும் கூட பா.ஜ.க. முகாமில் தள்ள முயற்சிகள் நடந்தன. இறுதியில் அது நடக்கவில்லை) ஏனைய அனைத்து கட்சிகளும் பா.ஜ.க.வுடன் குறுகிய காலத்துக்கோ அல்லது நீண்ட காலத்துக்கோ அரசியல் பயணம் செய்துள்ளனர். பா.ஜ.க.வை தமது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தலாம் என இந்த கட்சிகள் எண்ணுகின்றன. ஆனால் உண்மையில் இந்த கட்சிகளை பா.ஜ.க. கபளீகரம் செய்துவிடும் என்பதுதான் அரசியல் அனுபவம். திரிணமூல் காங்கிரஸ்/ ஐக்கிய ஜனதா தளம்/மதச்சார்பற்ற ஜனதா தளம் என பல கட்சிகளின் அனுபவத்தை இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்ட இயலும். சில மாநிலங்களில் காங்கிரசையும் பா.ஜ.க. சிதைத்துள்ளது.

தமிழகத்தில் தனது சூழ்ச்சிக்கு ஜெயலலிதா இல்லாத அ.இ.அ.தி.மு.க. மிகவும் பயன்படும் என பா.ஜ.க. கணக்கு போடுகிறது. அ.இ.அ.தி.மு.க.வின் ஊழல்கள் பற்றிய விவரங்கள் அதன் கையில் உள்ளதால், அ.இ.அ.தி.மு.க.வை தான் இழுத்த இழுப்புக்கு பயன்படுத்துவது என்பது எளிதான ஒரு காரியமாக பா.ஜ.க.வுக்கு உள்ளது. மாநில நலன்களை பலியிட அ.இ.அ.தி.மு.க. துணிந்தது. உதய் மின் திட்டம்/நீட் தேர்வு பிரச்சனை/ 69% இட ஒதுக்கீடு/ சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை என இதற்குப் பல உதாரணங்களை குறிப்பிட முடியும். சமூக தளத்தில் பா.ஜ.க.வின் இந்துத்துவா நடவடிக்கைகளை தடுக்க அ.இ.அ.தி.மு.க.முன்வரவில்லை. ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்துக்கு உருவான எதிர்வினை/ கருப்பர் கூட்டம் கைது/ வேல் யாத்திரைக்கு எதிராக கைது நாடகம் என பல உதாரணங்களை கூற முடியும். பள்ளி பாடங்களில் ஆர்.எஸ்.எஸ்.குறித்து கூறப்பட்ட உண்மையான கருத்துகளை கூட திரும்ப பெறுவதற்கு தமிழக அரசாங்கம் துணிந்தது. இவ்வளவு பெரிய சரணாகதிக்கு பின்னரும் பிரதிபலனாக தமிழகம் மத்திய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடு அல்லது தொழில் திட்டங்களால் பலன் அடைந்ததா எனில் இல்லை என்பதுதான் பதில்!

சமீபத்தில் அ.இ.அ.தி.மு.க. எடுத்த மிக மோசமான பா.ஜ.க. ஆதரவு நிலை என்பது சி.ஏ.ஏ./என்.பி.ஆர்/ என்.ஆர்.சி மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்தது ஆகும். அ.இ.அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டங்கள் மாநிலங்களைவையில் தோற்று போயிருக்கும். ஆனால் இந்த சட்டங்களை ஆதரித்ததன் மூலம் அ.இ.அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்தது எனில் மிகை அல்ல.

தனது பா.ஜ.க. ஆதரவு நிலைபாடு தமிழ் சமூகத்தில் இந்துத்துவா கருத்துகள் ஊடுருவ பயன்படுகின்றன என்பதை உணர அ.இ.அ.தி.மு.க. தயாராக இல்லை. தமது அரசியல் ஆதாயமும் ஊழல் செய்து சேகரித்த செல்வத்தை பாதுகாப்பதும்தான் உடனடி தேவை என அ.இ.அ.தி.மு.க. தலைமை எண்ணுகிறது. எனவே பா.ஜ.க.- அ.இ.அ.தி.மு.க.கூட்டணியை தோற்கடிப்பது மிக மிக அவசியமாகிறது. அந்த வகையில் தமிழக சட்ட மன்ற தேர்தல்கள் வெறும் தேர்தல் சார்ந்த அரசியல் அல்ல! பாசிசத்தின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டிய தேவை உள்ள மிக முக்கிய தேர்தல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. எனினும் தேர்தலுக்கு அப்பாலும் பாசிச எதிர்ப்பு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பதையும் நாம் கவனத்தில் நிறுத்துவது அவசியம் ஆகும்.

-தகவல்கள் மூலம்:
டைம்ஸ் ஆஃப் இண்டியா/பத்திரிக்கை.காம்/விஜய பாரதம்/ தி நியூஸ் மினிட்/விகடன்.காம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s