நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி வருகிறது.

கொரோனா பெரும்தொற்று மக்களின் வாழ்க்கைகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த வக்கற்ற மத்திய அரசு, தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தையும் வேலைகளையும் இழந்து பரிதவிக்கும் புலம்பெயர் தொழிலாளிகள், சிறுகுறு விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர், சிறுகுறு வணிகர்கள், இதர அனைத்துவகை கூலி சம்பள தொழிலாளிகள் ஆகிய அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் உரிய நிவாரணம் தரவில்லை. ஒரு குடும்பத்திற்கு ஆறுமாத காலத்திற்கு மாதம் 7500 ரூபாய் பணமும், நபர் ஒருவருக்கு 10 கிலோ தானியமும் அளிக்கக் கோரி கோடானுகோடி மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் கையில் பணமும் தானியங்களும் சென்று சேர்ந்தால், நாட்டில் கிராக்கி உயரும்; அது பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும் என்று அனைத்து பொருளாதார அறிஞர்களும் பல முறை எடுத்துச்சொல்லியும் மக்களுக்கு அத்தகைய நிவாரணத்தை அளிக்க மத்திய அரசு மறுக்கிறது.

மக்களுக்கு நிவாரணம் அளிக்க மறுக்கும் மத்திய அரசு இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு, முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும், இவர்களிடம் இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களை – விவசாயிகளையும் தொழிலாளிகளையும் – மொத்தமாக ஒப்படைக்கும் வகையில், பாராளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து மூன்று விவசாயிகள் விரோத சட்டங்களையும் அதேபோல் தொழிலாளர் உரிமைகளைப்பறித்து, அவர்களை கூலி அடிமைகளாக ஆக்கும் சட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி போராட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விவசாயிகளும், கிராம, நகர தொழிலாளிகளும் அவர்களது அமைப்புகளும் ஒன்றிணைந்து களம் இறங்கியுள்ளனர். அதன் ஒரு மகத்தான பகுதிதான் தில்லியில் நடைபெற்றுவரும் வரலாற்றுச்சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டம். இதில் தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக களம் இறங்கியுள்ளன.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி அரசு தரும் விவரங்களே பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில், ஐ சி யு வில், உள்ளதை தெளிவுபடுத்துகின்றன. 2019 – 20 நிதி ஆண்டிலேயே பொருளாதார மந்தநிலை தெளிவாக தெரிந்தது. 2020 ஜனவரி இறுதியில் கொரோனா பெரும் தொற்று நுழையும் காலத்திலேயே மத்திய அரசின் கடந்த ஆறு ஆண்டு காலக் கொள்கைகளின் காரணமாக மக்களின் வாங்கும் சக்தி அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. அதிலும் குறிப்பாக, 2016 நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதனை தொடர்ந்த குழப்பம் நிறைந்த, கொடிய வரிவிகிதங்களைக் கொண்ட ஜி எஸ் டி வரிவிதிப்பு, பல ஆண்டுகளாக மக்கள் மீது மறைமுக வரிகளை சுமத்தி (எடுத்துக்காட்டாக, பெட்ரோல் டீசல் கலால் வரிகளை அடிக்கடி மோடி அரசு ஏற்றி வருவது), பணக்காரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகள் அளித்து வரும் அரசின் வரிக்கொள்கைகள் – ஆகியவற்றால், இந்தியா மூன்று பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்துள்ளது: தொடரும் வேளாண் நெருக்கடி, பூதாகர வேலையின்மை பிரச்சினை, மக்களின் வாங்கும் சக்தியில் பெரும் சரிவு. இவ்வாறு கிராக்கி இழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்த பொருளாதாரத்தின் மீது கொரோனா பெரும் தொற்று காலத்தில் மத்திய அரசு பின்பற்றி வந்துள்ள கொள்கைகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

நடப்பு நிதி ஆண்டின் (2020 ஏப்ரல் 1 துவங்கி 2021 மார்ச் 31 முடிய என்பதே நடப்பு நிதி ஆண்டு) முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல், மே, ஜூன்) மட்டும் 2019 -20 இன் அதே மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது, இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு சரிந்தது. இத்தகைய சரிவு இந்தியாவில் இதற்கு முன்பு நிகழ்ந்ததே இல்லை. உலக நாடுகளில் ஆகப்பெரிய தேச உற்பத்தி மதிப்பு வீழ்ச்சியை இக்காலத்தில் சந்தித்தது இந்தியாதான். இதில் பிரதமர் மோடிதான் நம்பர் 1 என்று பெருமை கொள்ளலாம்!! பெரும்பாலான துறைகளிலும் பெரும் சரிவு. விவசாயிகளின் கடும் உழைப்பாலும் பருவ மழை உரிய அளவில் இருந்ததாலும் விவசாயத்தில் மட்டும் வளர்ச்சி நிகழ்ந்தது. இந்த வளர்ச்சியும் கூட சராசரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவில்லை. இவ்வாறு அதல பாதாளத்தை நோக்கி பயணித்த தேச உற்பத்தி அடுத்த ஆறு மாதங்களிலும் ஒப்புநோக்கில் தொடர்ந்து சரிந்துள்ளது. ஆனால் மீட்சி வெகு தூரமில்லை என்று நிதி அமைச்சரும் அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும் கதையளக்கின்றனர். உண்மை என்னவென்றால் இந்த முழு நிதி ஆண்டுக்கும் வளர்ச்சி விகிதம் மைனஸ் தான். மொத்த ஒரு ஆண்டு வீழ்ச்சி 10 % ஐயும் தாண்டக்கூடும். இத்தகைய சூழலில் தான் மத்திய பட்ஜெட் 2021-2022 பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களையும் நாட்டையும் மேலும் துயரில் ஆழ்த்தும் வண்ணம் அது அமைந்துள்ளது.

பட்ஜெட்டின் சாராம்சம்

‘வரலாறு காணாத’ பட்ஜெட், ‘நூற்றாண்டிற்கு ஒருமுறை’ என்ற தன்மையிலான பட்ஜெட் என்றெல்லாம் பட்ஜெட்டின் முன்னோட்டச் செய்திகளில் கார்ப்பரேட் ஊடகங்களும் ஆளும் கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில் அதிதீவிர தாராளமயமாக்கலும் தனியார்மயமாக்கலும், இந்தியாவின் உற்பத்தி சொத்துக்களின் பெரும்பகுதியை பயன்படுத்திக் கொள்ளையடிக்க பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு வாய்ப்பளிப்பதும்தான் இந்த பட்ஜெட்டின் சாராம்சம். இந்திய உழைப்பாளி மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளான வாழ்வாதார, வேலை வாய்ப்பு, விவசாய நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும்வண்ணம் பட்ஜெட் அமைந்துள்ளது. கடுங்குளிரில் இந்தியாவின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாக்க போராடிவரும் விவசாயிகளுக்கும், அரசின் முற்றிலும் தொழிலாளர் விரோதமான சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் தொழிலாளிகளுக்கும், இந்த பட்ஜெட் அளிப்பது கூடுதல் மறைமுக வரிகளும் கடும் சுமை ஆகும்.

பட்ஜெட் தொடர்பாக பாஜக அரசு தரும் புள்ளிவிவரங்கள் அனைத்துமே நம்பகத்தன்மையற்றதாக உள்ளன. இது ஏழாண்டுகால மோடி ஆட்சி முழுமைக்கும் பொருந்தும் அனுபவம். மேலும், பிப்ரவரி 1க்கு முன்பே பட்ஜெட் ஆவணம் தயாரிக்கப்படுகையில் அரசின் கையில் 2020 டிசம்பர் 31 வரையிலான விவரங்கள்தான் இருக்கும். நடப்பு நிதி ஆண்டின் மீதம் மூன்று மாதங்களில் (ஜனவரி – மார்ச், 2021)செலவுகள் பற்றிய மதிப்பீடுகளை அரசு மிகைப்படுத்திக் காட்டியுள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த பட்ஜெட் தரும் விவரங்களை பரிசீலிப்போம்.

2019-20 இல் மத்திய அரசின் மொத்த பட்ஜெட் செலவு ரூ. 26.86 லட்சம் கோடியாக இருந்ததென பட்ஜெட் ஆவணம் கூறுகிறது. 2020-21க்கான மொத்த செலவின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 30.42 லட்சம் கோடி. பெரும்தொற்று மற்றும் நாட்டடங்கு விளைவாக அரசின் செலவு தவிர்க்க முடியாத வகையில் சற்று உயர்ந்துள்ளது. 2020-21க்கான மொத்த செலவின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 34.5 லட்சம் கோடி என பட்ஜெட் ஆவணம் கூறுகிறது. இது மிகை மதிப்பீடு. மேலும் பட்ஜெட் மதிப்பீட்டின்படி வரும் 2021-22க்கான மொத்த செலவு ஒதுக்கீடு ரூ 34,83,000 கோடிதான். அதாவது, வரும் ஆண்டில் அரசின் செலவு அதிகரிக்காது! பண அளவில் சொற்பம் அதிகரித்தாலும், பணவீக்கத்தை கணக்கில் கொள்கையில் அரசின் மொத்த செலவு குறையும்.இந்திய பொருளாதாரம் கடும் மந்த நிலையில் உள்ளது. பங்குச்சந்தை புள்ளி மட்டும்தான் ஆகாயத்தில் உள்ளது. பெரும் வரிச்சலுகை பெற்றுள்ள செல்வந்தர்களும் கம்பெனிகளும் உற்பத்திசார் முதலீடுகளை மேற்கொள்ளவோ, வேலை வாய்ப்புகளை பெருக்கவோ தயாராக இல்லை. கடும் துயரில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கவில்லை. அரசும் செலவுகளை உயர்த்த, முதலீடுகளை மேற்கொள்ள மறுக்கிறது. எனவே கிராக்கி படுபாதாளத்தில் உள்ளது. கிராக்கியை மேம்படுத்தி, பொருளாதார மந்தநிலையைப் போக்க இந்த பட்ஜெட் சுத்தமாக உதவாது.

ஒதுக்கீடுகள்: சுகாதாரம், கல்வி, வேளாண்மை, ஊரக வளர்ச்சி

பெருமளவிற்கு சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை கூட்டியுள்ளதாகவும் மூலதனச் செலவுகளை பெரிதும் உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறுவது உண்மையல்ல. நடப்பு ஆண்டிற்கான மத்திய அரசின் சுகாதாரத்துறையின் செலவு திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ. 82,445 கோடி. வரும் ஆண்டிற்கான ஒதுக்கீடு ரூ. 74,602 கோடிதான். அதாவது, கிட்டத்தட்ட 10% குறைவு. வேறு பல துறைகளின் நிலைமையும் இவ்வாறே. வேளாண் துறைக்கான 2020-21 பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 1,54,775 கோடி இந்த ஒதுக்கீட்டில் துண்டு விழுந்து, திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 1,45,355 கோடியாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்ல. 2021-22க்கான ஒதுக்கீடு ரூ. 1,48,301 கோடி தான். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது நடப்பு ஆண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட குறைவு. கல்விக்கான செலவு 2019-20 இல் ரூ. 89,437 கோடி. 2020-21 பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ. 99,312 கோடி என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி, இது ரூ. 85,089 கோடி தான். அதாவது, உண்மையளவில் கடும் சரிவு. 2021-22க்கான பட்ஜெட் ஒதுக்கீடு கல்விக்கு ரூ. 93,224 கோடி என்று பட்ஜெட் உரை கூறுகிறது. இது நடப்பாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட குறைவு என்பது மட்டுமல்ல; இதுவும் நிறைவேறாது என்பதுதான் கடந்தகால அனுபவம். ஆற்றல் துறையின் கதையும் இதுதான். ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கீடு என்று பட்ஜெட்டில் படம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை வேறு. இது 2019-20 இல் ரூ. 1,42,384 கோடி. 2020-21 பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 1,44,817 கோடிதான். பெரும் தொற்று -நாட்டடங்கு சூழலில் ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்ததால் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 2,16,342 கோடியாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் வரும் 2021-22க்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 1,94,633 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மந்த நிலை, பெருந்தொற்று, நாட்டடங்கு சூழலில் கிராமப்புறங்களும் விவசாயமும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளின் அளவை கணக்கில் கொண்டால், இது யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது விளங்கும். கல்வி, சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளுக்குமான ஒதுக்கீடுகள் எல்லாமே இவ்வாறுதான் அமைந்துள்ளன.

அரசின் வரவுகள்

நடப்பு ஆண்டில் கார்ப்பரேட் கம்பனிகள் செலுத்தும் வருமான வரி ரூ. 6,81,000 என்பது பட்ஜெட் மதிப்பீடு. ஆனால் ரூ. 4,46,000 கோடி தான் என்பது திருத்தப்பட்ட மதிப்பீடு. தனிநபர் வருமான வரி வசூல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ. 6,38,000 கோடி. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 4,59,000 கோடிதான். இவ்வாறு செல்வந்தர்களும் கம்பெனிகளும் செலுத்துவார்கள் என்று நம்பிய தொகையில் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பள்ளம் விழுந்துள்ளது. ஆனால் யூனியன் அரசின் கலால் வரி மூலம் அரசு ரூ. 2,67,000 கோடி பெறும் என்ற பட்ஜெட் மதிப்பீட்டை விட மிகவும் கூடுதலாக திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 3,61,000 கோடி ஆகியுள்ளது. அதாவது, பன்னாட்டு சந்தைகளில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதும் கலால் வரியைக் கூட்டி கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் மீது அரசு பளுவைச் சுமத்தியுள்ளது. பெரும் தொற்றுகாலத்தில் அரசின் மோசமான சிக்கன நடவடிக்கைகளாலும் தொற்றின் பாதிப்பாலும் ஜி எஸ் டி வரிவசூலும் கணிசமாக குறைந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை பெரிதும் அதிகரித்துள்ளதற்கு இதுதான் காரணம். அரசு மக்கள் நலனுக்காகவும் நாட்டு வளர்ச்சிக்காகவும் கூடுதலாக செலவு செய்துள்ளதால்தான் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்ற வாதம் முற்றிலும் தவறானது. மோடி அரசு தாராளமய அணுகுமுறையிலும் சிக்கன நடவடிக்கைகளிலும் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதே உண்மை.

மானியங்கள் வெட்டு

மோடி அரசின் ஆறு ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகிய மூன்று முக்கிய மானியங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டின் பிரத்தியேக சூழலால், உரம் மற்றும் உணவு மானியம் அதிகரித்துள்ளது. ஆனால் பெட்ரோலியம் மானியத்தில் ரூ. 38,529 கோடி என்ற 2019-20 தொகைக்கும் ரூ. 38,790 கோடி என்ற 2020-21 திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் மிகக் குறைவான வித்தியாசமே உள்ளது. மேலும் அதிர்ச்சி ஊட்டுவது 2021-22க்கான பெட்ரோலியம் மானியம். இதில் மூன்றில் ஒரு பங்கு அளவில் ரூ. 12,995 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகும். சராசரி ஆண்டுகளில் இந்த உணவு, உரம் மற்றும் எரிபொருள் ஆகிய மூன்று முக்கிய மானியங்களின் மொத்தத்தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2%க்கும் குறைவாகவே இருக்கும். ஆனால் மறுபுறம், செல்வந்தர்களுக்கும் பெருமுதலாளி கம்பனிகளுக்கும் வரிச்சலுகைகளை அள்ளி வீசிவிட்டு, அவர்களிடமிருந்தே தனது பத்திரங்கள் மூலம் தன் செலவுகளுக்கு அரசு வாங்கும் கடனுக்கு ஆண்டுதோறும் கட்டுகின்ற வட்டி தேச உற்பத்தி மதிப்பில் கிட்டத்தட்ட நான்கு சதவீதமாகும். வேறுவகையில் சொல்வதானால், நாட்டின் செல்வங்களை உற்பத்தி செய்து தரும் உழைப்பாளி மக்கள் மீது கடுமையான மறைமுக வரிகளைப் போட்டு,அவ்வாறு கிடைக்கின்ற வரியில் கணிசமான பகுதியை விரல்விட்டு எண்ணக்கூடிய பணமுதலைகள் கையில் கொடுப்பதுதான் அரசின் வரவு செலவு கொள்கையின் மையமான அம்சம். நடப்பு ஆண்டில் மட்டும் அரசின் வட்டி செலவு கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. 2019-20 ஆண்டில் மூன்று மானியங்களால் அரசுக்கு செலவு ரூ 2, 30,000 கோடிக்கும் குறைவு. அதே ஆண்டில் அரசு (பெரும்பாலும் செல்வந்தர்களுக்கு) செலுத்திய வட்டி தொகை ரூ 6, 12,000 கோடியாகும்.

மாநிலங்களுக்கு வஞ்சனை

கார்ப்பரேட்டுகளுக்கும் செல்வந்தர்களுக்கும் மத்திய அரசு வழங்கும் வரி சலுகைகள் மாநில அரசுகளின் வரி வருமானங்களை பெரிதும் பாதிக்கிறது. வரிப் பகிர்வில் கிடைக்கும் தொகை சரிந்து கொண்டே போகிறது. பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளும் மாநில அரசுகளின் அதிகாரங்ககளையும் நிதி ஆதாரங்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன. நேர்முக வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள சரிவின் கணிசமான பகுதியை மாநில அரசுகள் சுமக்க வேண்டியுள்ளது.இது போதாதென்று cess மற்றும் சர்சார்ஜ் மூலம் திரட்டும் நிதிகளை மத்திய அரசு மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த யுக்தியை மத்திய அரசு மேலும் மேலும் – இந்த பட்ஜெட்டிலும் – பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களின் வரிவிதிக்கும் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டுள்ள மத்திய அரசு, ஜிஎஸ்டி நட்ட ஈட்டு தொகையைக்கூட மாநிலங்களுக்கு தர மறுக்கிறது. இதன் மூலமும் வேறு வகைகளிலும் நடப்பு நிதி ஆண்டில், பெரும் தொற்று காலத்தில் மாநில அரசுகளை அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.

ஒட்டுமொத்த தனியார்மயம்

1991இல் இருந்து தாராளமய கொள்கைகள் வேகமாக அமலுக்கு வரத்துவங்கின. அப்பொழுதுகூட முதலில் பொதுத்துறை கூடாது என்ற கருத்து முன்வைக்கப்படவில்லை. தனியாருக்கு கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றுதான் துவக்கத்தில் பேசப்பட்டது. பின்னர் தனியார் துறைதான் சிறந்தது; பொதுத்துறை நட்டத்தில் ஓடுகிறது என்பது போன்ற வாதங்கள் களம் இறக்கப்பட்டன. ஆனால் தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றிய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கூட பொதுத்துறை நாட்டுக்கு தேவையில்லை என்ற நிலைபாட்டை எடுக்கவில்லை. தனது நிறுவனங்களின் பங்குகளை அரசு தனியாருக்கு விற்பது என்பதை நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு துவக்கி வைத்தது என்றாலும், பன்மடங்கு அதிகப்படுத்தியது பாஜக தலைமையிலான அரசுகள் தான்.

மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-19 ஆகிய ஐந்து ஆண்டு காலத்தில் ரூ. 2,96,713 கோடி அளவிற்கு பொதுத்துறை பங்குகளை விற்றது. அதாவது, சராசரியாக, ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட ரூ. 60,000 கோடி அளவிற்கு “கனஜோராக” பொதுத்துறை பங்குகள் விற்கப்பட்டன. 2019-20க்கு அரசின் பொதுத்துறை பங்கு விற்பனைஇலக்கு ரூ. ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி, 2020-21க்கு ரூ. 2,10,000 கோடி என அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலக்குகள் எட்டப்படாவிட்டாலும் தனியார்மய கொள்கை நிலைபாடும் அதன் வேகமான அமலாக்கமும் நிகழ்ந்து வருகின்றன.வரும் ஆண்டில் ரூ. 1,75,000 என்ற அளவிற்கு பொதுத்துறை பங்குகளின் விற்பனை இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. நடைமுறை செயல்பாடாக மட்டுமின்றி பொதுத்துறை அழிப்பு அரசின் கொள்கையாகவும் அறிவிக்கப்பட்டு வேகமாக அமலாகிவருகிறது. பட்ஜெட்டின் அடிநாதமாக அமைந்துள்ளது மோடி அரசின் தனியார்மயமாக்கல் வெறி. நாட்டை விற்பதற்கு “சுய சார்பு” என்று அரசு பெயர் சூட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை.

மக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனம்

மத்திய அரசின் இந்த பட்ஜெட் மக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனம். கடந்த ஒரு ஆண்டாக உழைப்பாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமான மாற்றங்கள், விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை துறை சம்பந்தப்பட்ட மூன்று புதிய சட்டங்கள், மின்சார சட்ட திருத்தம் என்று தொடரும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மேலும் முதன்முறையாக, எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் பொதுத்துறை மூடப்படவேண்டும் என்று பட்ஜெட் உரையில் அறிவிப்பதும், இந்நிறுவனங்களில் அந்நிய மூலதனம் ஆதிக்கப்பங்கு வகிக்கலாம் என்று பச்சைக்கொடி காட்டுவதும், நாட்டின் கேந்திரமான நிதித்துறையையும், கனிம வளங்களையும் பாதுகாப்புத் துறையையும் கூட அந்நிய முதலாளிகளிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலைபாட்டை எடுப்பதும், இந்த பட்ஜெட் யாருக்கானது என்பதை தெளிவாக தெரிவிக்கின்றன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ஏதும் பட்ஜெட்டில் இல்லை என்பது மட்டுமல்ல; மறைமுக வரிகளை மேலும் உயர்த்தியும் , அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தை நீர்த்துப் போகும் வண்ணம் திருத்தியும் மோடி அரசு பணவீக்கத்தை பகிரங்கமாக ஊக்குவிக்கிறது.

கிராக்கியை அதிகரிக்கவோ, வேலை வாய்ப்புகளை பெருக்கவோ, கிராமப்புற – நகர்ப்புற உழைப்பாளி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவோ, நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான முதலீடுகளை மேற்கொள்ளவோ பட்ஜெட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை. சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கவுள்ள மாநிலங்களில் நெடுஞ்சாலை திட்டங்களை அறிவித்துள்ளது நடப்பாண்டில் கிராக்கியை உயர்த்த உதவாது. பன்னாட்டு பொருளாதாரத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களும், உலக முதலாளித்துவ அமைப்பின் ஆழமடைந்துவரும் நெருக்கடியும், பெரும்தொற்று தொடரும் சூழலும் இந்திய பொருளாதாரத்தை மேலும் சிக்கல்களுக்கு உள்ளாக்கும். அவற்றை எதிர்கொள்ள இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் எந்த வகையிலும் பயன்படாது. நாட்டையும் உழைப்பாளி மக்களையும் இந்திய, அந்நிய ஏகபோக முதலாளிகளின் அடிமைகளாக ஆக்கும் அரசின் கொள்கைகளைத்தான் பட்ஜெட் பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s