மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை


பிரகாஷ் காரத்
[இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. - ஆசிரியர் குழு]
பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம்.
நன்றி: ஃப்ரண்ட்லைன்

இந்திய சமூகத்தில் நிகழ்ந்த சமூகஅரசியல் மாற்றங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்களிப்பு குறித்து தங்களின் கருத்து என்ன?

இரண்டு வரலாற்று நிகழ்வுகளின் விளைவாகவே இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானது. முதலாவது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம்; இரண்டாவது, 1917 அக்டோபரில் நடந்த ரஷ்யப் புரட்சியின் தாக்கம். (டொமினியன் அந்தஸ்து என்பதற்கு மாறாக) ‘முழுமையான விடுதலை’ என்ற முழக்கத்தை கம்யூனிஸ்டுகள்தான் முதன்முதலாக 1921ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வருடாந்திர மாநாட்டில் எழுப்பினர். அதைப்போன்றே தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காகப் போராட வர்க்க அடிப்படையிலான அமைப்புகளை முதலில் உருவாக்கியவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

விடுதலைப் போராட்டத்தின்போது ‘விடுதலை’ என்ற அரசியல்ரீதியான சொல்லில் இந்திய மக்களின் பொருளாதாரரீதியான, சமூகரீதியான விடுதலையும் அடங்கியுள்ளது என அதன் முழுமையான சித்திரத்தையும் கம்யூனிஸ்டுகள்தான் வழங்கினர்.

சிறப்பாகக் குறிப்பிடத்தக்க மற்றொரு பங்களிப்பு என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தோடு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும் கம்யூனிஸ்டுகள் இணைத்தது ஆகும். நாடு விடுதலைபெற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மட்டுமின்றி, உள்நாட்டில் உள்ள அவர்களது ஆதரவாளர்களான சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், கிராமப்புற நிலப்பிரபுக்கள் ஆகியோரையும் எதிர்த்துப் போராடவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில்தான் கம்யூனிஸ்டுகள் இத்தகைய நிலைபாட்டை மேற்கொண்டனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்குவந்த காலத்தில் இந்தியாவில் வெடித்தெழுந்த மிகப்பெரும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில், அதாவது தெலுங்கானா, தேபகா, புன்னப்புரா-வயலார் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக எழுந்த நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகளே தலைமைப்பாத்திரம் வகித்தனர். நாட்டின் விடுதலைக்குப் பிறகு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இந்த நிகழ்ச்சிநிரல்தான் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம், உச்சவரம்பிற்கு அதிகமாக உள்ள நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்வது, குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற கோரிக்கைகளின்மீதான போராட்டங்களின் வழியாக நிலம் குறித்த பிரச்சனையை கம்யூனிஸ்ட் கட்சி நாடுதழுவிய அளவில் முன்வைத்தது.

நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவது; நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான நிகழ்ச்சிநிரல் ஆகியவை ஜனநாயகப் புரட்சியின் நிறைவேற்றப்படாத கடமைகளில் ஒரு பகுதி என்பதையும், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதை நிறைவேற்றத் தவறிஉள்ளனர் என்பதையும் கம்யூனிஸ்டுகள் கண்டனர்.

கம்யூனிஸ்டுகளின் மற்றொரு முக்கியமான பங்களிப்பு 1950களில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டமாகும். அரசின் கட்டமைப்பினை ஜனநாயகப்படுத்துவதில் இது முக்கியமானதொரு விஷயம் ஆகும். கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுகுறித்த கருத்தாக்கங்களை உருவாக்கி, விசாலாந்திரா, ஐக்கிய கேரளா, சம்யுக்த மகாராஷ்ட்ரா, மகாகுஜராத் போன்ற பல வெகுஜன இயக்கங்களின்மூலம் அவற்றைச் செயல்படுத்தினர்.

தொழிலாளர்-விவசாயிகள் பிரச்சனைகளையும் கம்யூனிஸ்டுகள் தேசிய அரசியல்மேடைக்குக் கொண்டுவந்து, பொருளாதார-சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வர்க்க அடிப்படையிலான இயக்கங்களை வளர்த்தெடுத்தனர். இந்தியாவில் செயல்பட்டுவந்த முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஒரு இடதுசாரி-ஜனநாயக மாற்றையும் அவர்கள் வளர்த்தெடுத்தனர்.

பல்வேறு பிரிவு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், அரசியலில் மக்கள் பெருமளவில் பங்கேற்கவும் என, வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்ததன்மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், கம்யூனிஸ்டுகள் முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்தியா பிளவுபடுவதற்குக் காரணமாக இருந்த வகுப்புவாத அரசியலின் நீட்சியை நன்கு உணர்ந்திருந்த நிலையில், மதச்சார்பின்மையை இடைவிடாது முன்வைக்கும் சக்தியாகவும் அவர்கள் எப்போதும் இருந்து வந்துள்ளனர். அரசில் இருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும் என்ற மதசார்பற்ற குறிக்கோளை அவர்கள் எப்போதும் உயர்த்திப் பிடித்து வந்தனர். எனினும், ஆளும் வர்க்கக் கட்சிகள் இந்தக் குறிக்கோளை நடைமுறையில் மோசமானவகையில் திருத்திச் செயல்பட்டனர்.

நாடு விடுதலைபெற்ற தொடக்க ஆண்டுகளிலேயே விடுதலைக்குப் பிந்தைய இந்தியஅரசு ஒரு முதலாளித்துவநிலப்பிரபுத்துவ அரசு என்று கம்யூனிஸ்டுகள் அடையாளம் கண்டனர். ஆளும் வர்க்கத்தின் தாராளமயம், தனியார்மயக் கொள்கைகளோடு இந்தியாவில் முதலாளித்துவம் வலுப்பெற்றுள்ளது. நிலச்சீர்திருத்தம்கூட, பெயரளவிற்கு, ஒரு சில மாநிலங்களில் மட்டுமே, நிகழ்ந்துள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவில் முதலாளித்துவத்தின் தற்போதைய நிலை மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தன்மை ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு காண்கிறது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் இந்திய அரசு பெருமுதலாளிகளின் தலைமையிலான ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கூட்டணியாகவே அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் நடைபெற்ற முதலாளித்துவ வளர்ச்சியானது மூலதனம் மேலும் குவியவும், அரசின்மீதான பெருமுதலாளிகளின்பிடி மேலும்இறுகவும் இட்டுச்சென்றுள்ளது. தாராளமயக்கொள்கைகளின் விளைவாக இந்தப்போக்கு மேலும் அதிகரித்துள்ளது.

இதனோடுகூடவே, விவசாயத்திலும் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றுள்ளது. இப்போது நாம் நிலப்பிரபுக்கள் என்று குறிப்பிடும்போது முதலாளித்துவ தன்மைகொண்ட நிலப்பிரபுக்களையே குறிப்பிடுகிறோம். நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், கிராமப்புற தொழில்முனைவர்கள் ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய கிராமப்புற பணக்காரர்களின் கூட்டணிஒன்றும் உருவாகியுள்ளது. இந்திய ஆளும்வர்க்கங்களின் தன்மை இப்போதும் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ தன்மைகொண்டதாகவே உள்ளது. இதில் நிலப்பிரபுக்கள் இப்போது முதலாளித்துவவகைப்பட்ட நிலப்பிரபுக்களாக மாறிஉள்ளனர். இந்த முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ ஆளும்வர்க்கம் அந்நிய நிதிமூலதனத்துடன் மிகுந்த இணக்கத்தோடு செயல்பட்டு வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள் செயல்படுவதில் இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு மிக நீண்டதொரு அனுபவம் உள்ளது. மேற்குவங்கம், கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகளை உருவாக்கி அவற்றை நடத்திய அனுபவமும் அவர்களுக்கு உள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளே உள்ள சூழ்நிலையில், இந்த அனுபவத்தையும் சாதனைகளையும் நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் செயல்பட்டு வருவதன்மூலம் இந்திய கம்யூனிஸ்டுகள் தனித்துவமானதொரு அனுபவத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். எதேச்சாதிகாரத்திற்கு எதிராகவும், காலனிய அல்லது அரைக்காலனிய ஆட்சிக்கு எதிராகவும் புரட்சிகள் நடைபெற்ற ரஷ்யா, சீனா அல்லது வியட்நாம் கட்சிகளின் அனுபவங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும்.

1948 முதல் 1951 வரை (கட்சிக்குள்) நிகழ்ந்த இடதுசாரி பிளவுவாதப்போக்கிற்குப் பிறகு, வெகுஜன இயக்கங்களையும் புரட்சிகரப் போராட்டங்களையும் வலுப்படுத்துவதற்காக கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற அமைப்புகளில் செயல்படுவதெனத் தீர்மானித்தனர். 1957ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி, முதலாவது கம்யூனிஸ்ட் அமைச்சரவை உருவானது ஆகியவை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஆகும். மாநில அரசுகளில் பங்கேற்பது என்பதற்கான வரையறைக்கு அது அடித்தளமிட்டு உருவாக்கியது. இதன் அடிப்படையில்தான் பின்னர் மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் அரசுகள் அமைந்தன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் உருவான எழுச்சிகளுக்குத் தலைமைதாங்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் 1952இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் மிகப்பெரும் எதிர்க்கட்சிக் குழுவாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதை உறுதிப்படுத்தினர். நாடாளுமன்ற அரசியலில் முழுதாகப் பங்கேற்பது மாயைகளுக்கும், சீர்திருத்தவாதப் போக்குகள் வளர்வதற்கும் வழிவகுத்தபோதிலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெறும் இயக்கங்களை வலுப்படுத்த நாடாளுமன்ற அமைப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்ற சரியான புரிதலும் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளை இணைப்பதென்பது தொடர்ச்சியானதொரு போராட்டமே ஆகும்.

இடதுசாரிகளின் தலைமையிலான அரசாங்கங்களைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்தத்தில், அது ஒரு நேர்மறை அனுபவமாகவே இருந்தது. 1957ஆம் ஆண்டில் கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையிலிருந்து தொடங்கி நிலச்சீர்திருத்தம், பஞ்சாயத்துராஜ்ய அமைப்பின்மூலம் ஜனநாயகரீதியான அதிகாரப்பரவல், உழைக்கும் மக்களுக்கான சமூகப்பாதுகாப்பு வசதிகளை வழங்குவது, மதநல்லிணக்கம் ஆகியவற்றை எவ்வாறு அமலாக்குவது என்பதற்கு கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வழிகாட்டி வந்தனர். இவை அனைத்துமே இடதுசாரிகளின் தலைமையிலான அரசாங்கங்களின் சாதனைகள் ஆகும்.

எனினும், புதிய தாராளமயக் காலகட்டம் செயலுக்கு வந்தநிலையில் மாற்றுக்கொள்கைகளுக்கான வெளி குறைந்துகொண்டே வருவதை இடதுசாரிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் எதிர்கொண்டன. மத்தியஅரசின் நிதியுதவி மற்றும் முதலீடுகள் வெட்டிக் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவான வளர்ச்சிக்கு மிகமோசமான தடைகள் உருவாயின. நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததும், அதிலும் குறிப்பாக, கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் இது அடிமட்டநிலைக்குச் சென்றுள்ளதும் உண்மைதான். இந்திய அரசியலில் வலதுசாரி திருப்பம், புதிய தாராளமய சந்தையின் கொள்கைகள், தேர்தல்களில் செலவிடப்படும் அபரிமிதமான பணம், அரசியலுக்கும் வர்த்தகத்திற்கும் இடையில் உருவாகியுள்ள கூட்டணி ஆகிய இவைஅனைத்துமே கம்யூனிஸ்டுகளும் இடதுசாரிகளும் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பை மிகப்பெருமளவில் பாதித்துள்ளன.

“ஜனநாயகத்திற்கும் நாடாளுமன்ற அமைப்பிற்குமான அச்சுறுத்தல் என்பது இப்போது இருப்பதைப்போல் வேறுஎப்போதுமே இவ்வளவு மோசமாக இருந்ததில்லை” என நீங்கள் சமீபத்தில் எழுதியிருந்தீர்கள். 1975ஆம் ஆண்டின் அவசரநிலையைவிட தற்போதைய சூழ்நிலை மிகமோசமாக இருக்கிறது என்று கூறுகிறீர்களா? நாம் இப்போது எதைநோக்கிச் செல்கிறோம்?

இந்த அச்சுறுத்தல் மிகவிரிவானதாக, ஆழமானதாக உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்துகின்ற, அரசின் நிறுவனங்களை உள்ளுக்குள்ளாகவே சீர்குலைக்கின்ற செயல்பாட்டை திட்டமிட்டவகையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு எதேச்சாதிகார, இந்துத்துவ ஆட்சிதான் இப்போது நிறுவப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு இந்துத்துவ குடியரசை கொண்டு வருவது என்ற ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம், மோடிஅரசு இரண்டாவதுமுறையாக ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு வெளிப்படையாகத் தென்படத் தொடங்கியுள்ளது. இந்த எதேச்சாதிகார நடவடிக்கைக்கு எதிரான மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் அனைத்துமே ஒரு பாசிஸ முறையில் கையாளப்பட்டு வருகின்றன. 1975ஆம் ஆண்டின் அவசரநிலையைவிட நிலைமை மிக மோசமாக உள்ளது. இவை இரண்டையும் ஒப்பிடவே முடியாது. இந்திய அரசமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கவும், ஒரு இந்து ராஷ்ட்ராவினை திணிக்கவும் படிப்படியான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றில் மிகவும் சவாலான நிகழ்வுப்போக்கு குறித்து சுயவிமர்சனத்தோடு பார்க்கையில், நீங்கள் அறிந்து கொண்ட பாடங்களை சுட்டிக்காட்ட முடியுமா? சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு புதிய தாராளமய முதலாளித்துவத்தின் எழுச்சிக் காலமா? அல்லது பாஜக மற்றும் வலதுசாரி சக்திகள் மேலாதிக்கம் பெற்றுள்ள தற்போதைய காலமா?

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட நீரோட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் முக்கியமான ஒன்றாக இருந்தபோதிலும், அது மிகச் சிறிய ஒன்றாகவே தொடர்ந்து நீடித்தது. தேசவிடுதலைக்கான இயக்கத்தின் தலைமையை அது எப்போதுமே எட்டிப் பிடித்திருக்க முடியாது. அந்தத் தலைமை காந்தி தலைமையிலான காங்கிரஸின் கைகளில்தான் இருந்தது. இதுதான் தங்களது நாடுகளில் தேசவிடுதலை இயக்கத்திற்குத் தலைமைதாங்கிய சீன அல்லது வியட்நாம் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்டுகளுக்கும் இடையேஇருந்த மிகப்பெரும் வேறுபாடாகும்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது உலகம் முழுவதிலும் இருந்த கம்யூனிஸ்டுகளுக்கு மிகப்பெரும் சவாலாகவே இருந்தது. எனினும் உலகத்திலுள்ள மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளைவிட இந்தியாவில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் இந்தச் சவாலை எளிதாகச் சமாளிக்க முடிந்தது. இந்தக் கட்சிகளைப்போல் அல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனை கண்மூடித்தனமாக நம்பவோ அல்லது போற்றிப் புகழவோ இல்லை. உள்ளார்ந்த வகையிலும் வெளிப்படையாகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அது தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய தத்துவத்திலிருந்து பிறழவில்லை. ஏனெனில் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலேயே இந்தியாவின் நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சிய-லெனினியத்தைப் பொருத்திப் பார்த்து தங்களுக்கேயான பாதையை வகுத்துக்கொள்ள இந்தியாவிலுள்ள மார்க்சிஸ்டுகள் தகுதியானவர்கள் என்றும் அது அறிவித்திருந்தது.

எனினும், இந்த அனுமானம் முழுவதுமே சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் மாறியது. இந்தியாவில் புதிய தாராளமய காலகட்டமும் இந்துத்துவ சக்திகளின் எழுச்சியும் 1991க்குப் பிறகுதான் நிகழ்ந்தன. 20ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருணத்தில் ஏற்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளின் மோசமான விளைவுகளை கம்யூனிஸ்டுகளும் இடதுசாரி இயக்கமும் உணர்ந்திருந்தன. இந்தியாவின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் சவால்கள் நிரம்பிய காலமாகவே நான் இதைக் கருதுகிறேன்.

இந்திய சமூகத்திலும் வர்க்கங்களிலும் மாற்றங்கள் பலவற்றையும் கொண்டுவந்து வெறிபிடித்து அலையும் முதலாளித்துவத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது குறித்த நமது புரிதலையும் நடைமுறைஉத்திகளையும் மாற்றி அமைத்துக்கொள்ள எங்களுக்கு சற்றுநேரம் பிடித்தது என்பதை சுயவிமர்சன ரீதியாகவே நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். நவீன, மதசார்பற்ற, ஜனநாயக குடியரசில் அடங்கியுள்ள குறைகளையும் திரிபுகளையும் காணாமல் இந்தியாவின் வலுவான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற நெறிமுறைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த தாராளவாத இடதுசாரிகளின் கதைகளையும் நாங்கள் நம்பிக் கொண்டிருந்தோம்.

இதுவே ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சக்திகள் மேலாதிக்கமான சக்தியாக மாறுவதற்கான திறமையையும் ஆதாரவளங்களையும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுத்தது. இவற்றில் இருந்து பெற்ற பாடங்கள் கம்யூனிஸ்டுகளும் இடதுசாரி ஜனநாயக சக்திகளும் புத்துயிர் ஊட்டப்பட்டதொரு மேடையை வடிவமைக்க உதவும்.

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா பெருந்தொற்றின் பின்னணியில் பொதுத்துறையின் மூலமாக அரசுகள் வலுவாகத் தலையீடு செய்வது குறித்த ஒரு கருத்து மக்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கான சூழ்நிலை சோஷலிசம் என்ற கருத்தாக்கம் மக்களின் கவனத்தைக் கவர மேலும் வழிவகுக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுசுகாதார அமைப்புகளின் உயிரோட்டமான முக்கியத்துவத்தை கொரோனா பெருந்தொற்று நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. மிகப்பெரும் அளவிற்கு தனியார் மயமாக்கப்பட்ட சுகாதார அமைப்பைக் கொண்ட அமெரிக்காவிற்கும் வலுவான பொதுசுகாதார அமைப்பைக் கொண்டுள்ள சீனா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளுக்கும் இடையேஉள்ள முரண்பாட்டை மக்கள் காண்கின்றனர். இத்தகைய பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பொதுசுகாதார அமைப்பும் கூட்டுச்செயல்பாடும் தேவை என்பது சோஷலிசத்தின் நன்மைகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உதாரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு கோடியே 60 லட்சம் நோயாளிகளும், இதனால் உலகில் இறந்துபோனவர்களில் 20 சதவீதம் பேரையும் கொண்ட ஒரு நாடாக அமெரிக்கா இருப்பது மக்களின் உடல்நலன்கள்மீது முதலாளித்துவம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்த கடுமையான எச்சரிக்கையே ஆகும். கொரோனாவை கடந்த ஒரு உலகத்தில் இந்தப் பாடத்தை நாம் பெரியஅளவில் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழில்: வீ. பா. கணேசன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: