ஆர். பத்ரி
வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பம் உலக அளவிலானதொரு சந்தையை உருவாக்கி இருக்கிறது. சந்தையை தேடி அலையும் மூலதனம் புவிப்பரப்பின் அனைத்து இடங்களிலும் தனக்கான உறைவிடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும் என்பதோடு எல்லா இடங்களிலும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
–கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
172 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுப் படைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மூலதனத்தின் தன்மை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் வரிகளே இவை. அபரிமிதமான அளவில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டியிருக்கும் இன்றைய நிலைமைகளுக்கும் அறிக்கையின் மேற்குறிப்பிட்டுள்ள நிர்ணயிப்பு பொருத்தமான ஒன்றாகவே இருக்கிறது. அபரிதமான லாபத்தை தேடி அலையும் மூலதனமானது, பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் முதுகில் ஏறி புவிப்பரப்பு முழுவதும் செல்கிற காட்சியை இன்று நாம் காண்கிறோம்.
மூலதனமும் நவீனமயமும்
மிகவும் நவீனமான 5G எனும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தை யார் விரைந்து கைப்பற்றுவது என்பது தான் தற்போது உலக அளவிலான முக்கிய கேள்வியாக முன்னுக்கு வந்துள்ளது. இரண்டாம் தலைமுறை (2G), மூன்றாம் தலைமுறை (3G), நான்காம் தலைமுறை (4G) என இதுவரையிலும், இதுவரை பயன்படுத்தி வந்த தொழில்நுட்பங்களை விட, அளவிலும் பயன்பாட்டிலும் மிகவும் விரிவானது இந்த 5G தொழில்நுட்பமாகும். செயற்கை நுண்ணறிவையும் (Artificial Intelligence), கருவிகளை இணைக்கும் இணையதளம் (Internet of Things) என்பதையும் அடிப்படையாக கொண்டு இந்த ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் மனிதர்களையும் இயந்திரங்களையும் பல முனைகளில் இணைக்கும் தன்மையிலும், மனிதர்களின் நேரடியான பங்கேற்பின்றி செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான உற்பத்தி முறையை சாத்தியமாக்குவதையும் உள்ளடக்கியதாக இந்த தொழில்நுட்பம் என்பது இருக்கிறது.
உற்பத்தித்துறை, கட்டுமானம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் இந்த 5G தொழில்நுட்பத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல இயந்திரங்களுக்கு ஒரே நேரத்தில் நாம் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் பல உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். இதன் தாக்கத்தை புரிந்து கொள்ள ஒரு சில உதாரணங்களை காண்போம். கணிணிகளின் மூலம் பெறப்படும் உத்தவுகளை பெற்று இயங்கும் அதிநவீன இயந்திரங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகிற போது, இதுவரையிலும் இருந்த ஒரு பொருளுக்கான சராசரி உற்பத்தி நேரமும், உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு இயந்திரங்களே உத்தரவை பிறப்பிக்கும் என்பதோடு, உற்பத்தியின் தரமும் (Quality Control) இயந்திரங்களாலேயே கண்காணிக்கப்படும். கட்டுமானத்துறையிலும் பெருமளவு புகுத்தப்படும் நவீனமயத்தால் மிகப்பிரமாண்டமான கட்டுமானங்களை குறைவான கால அளவில் நிறைவேற்ற முடியும் என்பதோடு, நேரடி மனித உழைப்பும் பெருமளவில் குறைக்கப்படும்.
மருத்துவத்துறையிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் உருவாகும். உதாரணமாக, நோயை கண்டறிவதற்காக நோயாளி ஒருவருக்கு, செரிமானமடையும் தன்மையுள்ள ஒரு திறன் மாத்திரை (Smart Pills) அவரது உடலுக்குள் செலுத்தப்படும். அது அவரது உடலுக்குள் சென்ற குறுகிய நேரத்திலேயே உடல் நிலை குறித்து சேகரிக்கப்படும் சோதனை விபரங்கள் அனைத்தும் அவரின் திறன்பேசிக்கு (Smart Phone) உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் உடனடியாக அவரது உடல் நிலை குறித்த விபரங்கள் அனைத்தையும் எளிதாக பெற முடியும். இத்தகைய முறையின் மூலம் குறைந்தபட்சம் பத்துவிதமான சோதனைகளையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். வாகனங்களின் பயன்பாட்டிலும். இயக்குவதிலும் இதன் தாக்கம் பெருமளவில் இருக்கும். கார் ஓட்டுபவர்கள் தங்கள் நகரத்தின் வீதிகளில் உள்ள நெரிசல் குறித்தும், நாம் செல்ல வேண்டிய இடங்களில் உள்ள கார் பார்க்கிங் விபரம் குறித்தும் தெரிந்து கொள்ளவும், ஒட்டுநர் இல்லாமலேயே வாகனங்களையும் இயக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை வைத்துதான் ஸ்மார்ட் நகரங்கள் எனும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி உள்ளிட்ட இதர துறைகளிலும் இன்றைய நிலைமைகளை விட மேலும் நவீன முறையிலான மாற்றங்கள் உருவாகும். இத்தகைய அதிநவீன தொழில்நுட்பமென்பது கையிருந்தால் தங்களது லாபத்தை அதிகரித்துக் கொள்வதோடு, தங்களுக்கான அதிகார எல்லையையும் விரிவாக்கிக் கொள்ளமுடியும் என்பதால், இத்தொழில்நுட்பத்தை பெறுவதில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியும் கடுமையாக மாறியிருக்கிறது.
5Gதொழில்நுட்பமும் சந்தை போட்டியும்
5G எனும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை விரைந்து வழங்குவதற்கான போட்டியில் பெரும்பாலான நிறுவனங்கள் முனைப்பாக ஈடுபட்டுள்ளன. சீனாவிலுள்ள ஹூவாவே மற்றும் ZTE, தென்கொரியாவிலுள்ள சாம்சங், பின்லாந்திலுள்ள நோக்கியா, ஸ்வீடனிலுள்ள எரிக்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவாக முன்னேறி வருகின்றன. உலகில் மிகவும் வளர்ந்த நாடு என வர்ணிக்கப்படும் அமெரிக்கா இதில் பின் தங்கியே உள்ளது. அமெரிக்காவில் உள்ள கம்பில்லா தொலைத்தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் குவால்காம், திறன்பேசிகளை (Smart Phone) தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனங்கள் இதர நாட்டின் நிறுவனங்களுடம் போட்டிபோட முடியவில்லை. இதனால்தான் அமெரிக்கா ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் மிக வேகமாக முன்னேறி வரும் சீனாவின் தயாரிப்புகளை இதர நாடுகள் வாங்கக் கூடாது என கடுமையாக நிபந்தனை விதிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தில் சீனா முன்னேறி விட்டால் பொருளாதார ஆதிக்கத்திலும் சீனா மேலோங்கிவிடும் எனும் பதற்றம் அமெரிக்காவிற்கு உள்ளது. 5G தொழில்நுட்ப பயன்பாடு அமலுக்கு வருகிறபோது அதில் சீனாவின் பங்கு மட்டுமே 45.3 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
உலக அளவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் நுகர்வோர் எண்ணிக்கையிலும் சீனாவே முதலிடத்தில் உள்ளது. இந்த சேவையில் உள்ள முதல் பத்து நிறுவனங்களை பட்டியலிட்டால் முதல் மூன்று இடங்களை சீனாவின் நிறுவனங்களே பெற்றுள்ளது. சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களே இவையாகும். உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மூன்றில் ஒரு பங்கு (அதாவது 1.5 பில்லியன்) சீன நிறுவனங்களின் பங்காகும். இவ்வளவு பெரிய சந்தையில் அதிநவீன 5G தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தால், அதன் வர்த்தகம் என்பது துவக்க நிலையிலேயே பில்லியன் டாலர்களிலும், அந்த தொழில்நுட்பத்தின் மூலமாக நடைபெறும் இதர வர்த்தகத்தின் அளவு ட்ரில்லியன் டாலர்களிலும் இருக்குமென மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவேதான் இத்துறையில் மிக அதிகமான முதலீட்டையும் மேற்கொள்ளவும், சந்தையை கைப்பற்றவும் ஆர்வம் காட்டுகிறது சர்வதேச நிதி மூலதனம். ஆகவே, இது தொழில்நுட்பங்களை கைப்பற்றுவதற்கான போட்டி மட்டுமல்ல. மாறாக சோஷலிச பொருளாதார முறையை சந்தைகளுக்கும் பொருத்தி வெற்றி பெற்று முன்னேறி வரும் சீனாவை பின்னுக்கு தள்ளுகிற முதலாளித்துவத்தின் முயற்சியாகவும் அமைந்துள்ளது.
லாபம்.. மேலும் மேலும் லாபம்
தனக்கு கிடைக்கும் லாபத்தின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க மூலதனம் தனது குணாம்சத்தை பல வகைகளிலும் மாற்றிக் கொள்ளும். . நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் கைப்பற்றுவதன் மூலமாக மூலதனம் அபரிமிதமான லாபத்தை அடைகிறது. உதாரணமாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் (iPhone) ஒன்றை நாம் வாங்க வேண்டுமெனில், அதற்காக 600 பவுண்டுகளை அளிக்க வேண்டும் என வைத்துக் கொண்டால், அதில் 150 பவுண்ட் மட்டுமே அதை தயாரிப்பவர்களுக்கு போய்ச் சேரும். மீதமுள்ள 450 பவுண்டுகள் தொகையை அறிவுசார் காப்புரிமை (Intellectual Patent Right) எனும் பெயரால் ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு ஐ போன் வாங்கப்படும் போதும் இத்தகைய கொள்ளை லாபம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு போவதை வைத்தே, மூலதனத்தின் மூர்க்கமான லாபவெறியை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். நாம் தற்போது பயன்படுத்தும் மருத்துவ சோதனைக்கான உபகரணங்களுக்கும் இத்தகைய உதாரணம் பொருந்தும். சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் உடல் பரிசோதனை செய்யப்படும்போது வசூலிக்கப்படும் மிக அதிகமான கட்டணங்களும் இத்தகைய அறிவுசார் காப்புரிமை எனும் தன்மையிலிருந்தே மிக மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. வளர்ச்சியடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனித சமூகத்திற்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட வேண்டும் ஆனால், தனது மூலதனக் குவிப்பிற்கு இடையூறாக இருக்கும் என்பதால் முதலாளித்துவம் அதை தடுத்து விடுகிறது.
இந்திய அனுபவம்
கட்டமைப்பு மாற்றத்தை (Structural Changes) அடிப்படையாக வைத்து அமலாக்கப்படும் நவ தாராளவாத பொருளாதார கொள்கைகளால் இந்தியாவில் பொது முதலீடு என்பது பெருமளவு சுருக்கப்பட்டு, தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இத்தகைய ஊக்குவிப்பு கொள்கைகளால் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள தனியார் நிறுவனங்கள் 5G தொழில்நுட்பத்தையும், அதற்கான சந்தையையும் கைப்பற்ற கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஒருபுறத்தில் பி.எஸ்.என்.எல் எனும் அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு 4G தொழில்நுட்பத்தைக் கூட மறுத்து, அந்த நிறுவனத்தின் பொருளாதார வலிமையை தகர்த்து. திறன் பெற்ற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரால் வேலையிழக்கச் செய்வதையும், மறுபுறத்தில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்து, 5G தொழில்நுட்பம் கிடைப்பதற்கான உதவியை அரசே முன்னின்று மேற்கொள்வதையும் நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல தனியார் நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு (Reliance Jio) மட்டுமே மொத்த சந்தையும் (Monopoly) ஏகபோகமாக கிடைப்பதற்கான ஏற்பாட்டை இந்திய அரசாங்கம் மிகவும் வெளிப்படையாகவே செய்து வருகிறது.
அமெரிக்காவிலிருந்து செயல்படும் பேஸ்புக் நிறுவனம் அண்மையில் ரிலையன்ஸ் ஜியோவில் எனும் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் ஜியோ நிறுவனத்திற்கு கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியிருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ மார்ட் எனும் செயலி ஒன்றை அண்மையில் துவக்கி அதன் மூலம் மூன்று கோடி சிறு வணிகர்களையும், கோடிக்கணக்கான மக்களையும் தனது வர்த்தக வலைப்பின்னலில் இணைத்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜியோ நிறுவனம் பல்லாயிரக்கணக்கான கோடி லாபத்தை பெறப் போகிறது. நவீன தொழில் நுட்பத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் மூலதனம் தன்னை பல மடங்கு பெருக்கிக் கொள்கிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் மட்டும் ஜியோ நிறுவனத்தின் வணிகம் 7% அளவில் உயர்ந்து அதன் வருவாய் 2.9 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.
நவீனமயம் – சுரண்டல் – நெருக்கடி
கடந்த காலங்களை ஒப்பிடும்போது இன்றைக்கு நிதி மூலதனம் என்பது உள்ளடக்கத்திலும், செயல்படுகிற முறையிலும் பெருமளவு மாறுபட்டிருக்கிறது. நிதி மூலதனம் என்பது தேசம் என்ற எல்லையை கடந்து சர்வதேச அளவில் செல்வாக்கு செலுத்துவதாக அது மாறியிருக்கிறது. இதனால் தான் விரும்புகிற எந்தவொரு இடத்திலும் முதலீட்டை மேற்கொள்ள முடியும். இத்தகைய சர்வதேச உள்ளடக்கத்தை பெற்றுள்ள நிதி மூலதனம் வங்கிகளிலும், தொழில்களிலும் முதலீடு செய்யப்படுவதை விட ஊகவணிகத்தில் முனைப்பாக ஈடுபட்டு லாபம் பெறுவதையே பெரிதும் விரும்புகிறது. இத்தகைய ஊகவணிக முதலீட்டிற்கு வளர்ந்துள்ள நவீன தொழில்நுட்பமும் பெரிதும் உதவுகிறது.
இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒருபுறத்தில் வேகமான மூலதனக் குவிப்பு நடைபெறுவதும் மறுபுறத்தில் சுரண்டல் அதிகரிப்பதுமான இரு நிகழ்வுகளும் ஏக காலத்திலேயே நடைபெறுகின்றன. வளரும் நவீனமயத்தால் மக்களின் நுகர்வுத் தேவைகள் அதிகரித்துள்ளது.. மூலதனத்தின் பெருக்கத்தால் நவீன முதலாளித்துவம் வெற்றி பெற்றிருக்கிறது என தம்பட்டமும் அடிக்கப்படுகிறது. தற்போதைய நிலையை ”கணிணி கால முதலாளித்துவம்” என வரையறை செய்கிறார்கள் முதலாளித்துவ பொருளாதாரவாதிகள். மார்க்சியத்தின் வரையறையின்படி நேரடியான உழைப்பு சுரண்டல் என்பதெல்லாம் தற்போது இல்லை. ஏனெனில் நேரடியான உழைப்பு (Work) முறை என்பது முடிவிற்கு வந்து விட்டது. தற்போது பெருமளவில் அமலில் இருப்பது பின் உழைப்பு (Post Work) முறையாகும்.
நேரடியான உழைப்பு இருக்கிறபோதுதான் சுரண்டல் இருக்கும். தற்போதைய பின் உழைப்பு முறையில் சுரண்டல் என்பதே இல்லை எனும் வாதம் முதலாளித்துவ வாதிகளால் முன் வைக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல என்பதை பின்வரும் மூன்று விஷயங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் 1. முதலாளித்துவம் தனது லாபத்தை அதிகரிக்கச் செய்வதற்காக ஓரிடத்தில் உற்பத்தி (Centralised) என்பதை பல்வேறு இடங்களில் சிறு சிறு உற்பத்தி அலகுகள் (Outsource Units) ஆக மாற்றியுள்ளது. இருப்பினும் நவீனத் தொழில்களின் வளர்ச்சியையொட்டி, உழைப்பாளர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதே உண்மை. எனவே சுரண்டல் என்பது பரவலாக்கப்பட்டு, தீவிரமாக்கப்பட்டு வருகிறது. 2. குறைந்த அளவிலான தொழிலாளர்களும் அதிகரிக்கும் நவீன சாதனங்களும் இணைந்து மேற்கொள்ளப்படும் நவீன உற்பத்தி முறைகளால் ஒட்டு மொத்த வருமானத்தில் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு பெருமளவு குறைக்கப்படுகிறது. நவீன இயந்திரங்களின் உரிமையாளர்களுக்கே அதிக பங்கு கிடைப்பது உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டல் தீவிரமாதலால்தான் நிகழ்கிறது.. 3. நவீன இயந்திரமாக்கலால் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் வருமானத்தின் அளவு குறைகிறது. பெருமளவு நுகர்வோராக இருக்கும் இவர்களின் வருமானம் குறைந்து வாங்கும் சக்தி குறைவதால், சந்தையிலும் கிராக்கி குறைகிறது. இதனால் பெருமளவு அதிகரிக்கும் பொருட்களை நுகர்வதற்கான சந்தை சுருங்குகிறது. இத்தகைய காரணங்களால் முதலாளித்துவ அமைப்பு மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்கிறது.
”அதீத லாபத்தை தேடியலையும் முதலாளித்துவம் தனது தனித்த விசேஷசமான இயல்பினால் வர்க்கப் பகைமைகளை எளிமையாக்கியுள்ளது. சமுதாயம் முழுவதும் இருபெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமாய், இருபெரும் வர்க்கங்களாய் முதலாளி வர்க்கம் – நவீன பாட்டாளி வர்க்கம் எனும் வகையில் பிளவுபட்டு நிற்கிறது. இதனால் ஒன்றின் மீது மற்றொன்று என இரு முனைகளிலிருந்தும் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டங்கள் கூர்மையடையும்.”
என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உயிர்த்துடிப்போடு விவரிக்கப்பட்டிருக்கும் அம்சமே இன்றைக்கும் யதார்த்தமான நிலைமையாக உள்ளது.
ஏகபோகமும் சோஷலிசமும்
முதலாளித்துவ சமூக அமைப்பில் சேவைத்துறைகள் அனைத்தும் வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், பொதுப்போக்குவரத்து என ஒவ்வொன்றாக அனைத்து சேவைகளையும் தனியாரின் கைகளுக்கு தாரை வார்த்துவிட்ட முதலாளித்துவ அரசுகள் தற்போது இந்த நவீன தொழில்நுட்பத்தையும் பெரும் கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைத்திருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது அரசின் பணியல்ல. அதை தனியார் மேற்கொள்ளட்டும். காசு கொடுத்து தங்களுக்கு தேவையான சேவையை மக்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று அரசாங்கம் ஒரு மேற்பார்வையாளரின் பணியை செய்து கொண்டு முதலாளித்துவ கொள்ளையை வேகப்படுத்தும் கருவிகளாக செயல்படுகின்றன.
அரசுகளின் இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் சேவைகள் அனைத்தையும் வணிக நடவடிக்கைகளாக மாற்றுகிற பெருமுதலாளித்துவ பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் தத்தம் துறைகளில் ஏகபோகமாக மாறுகின்றன. ஏகபோகமாக மாறும் நிறுவனங்கள் அபரிமிதமான லாபத்தை பெறுவதற்காகவே, அரசுகளும் சட்டங்களை மேலும் மேலும் அவர்களுக்கு சாதகமான முறையில் எளிமையாக்குகின்றன. ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில் பொருளாதாரமே அரசியலை தீர்மானிக்கிறது என்பதை தற்போதைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆனால், மறுபக்கத்தில் உற்பத்தி கருவிகளை சமூகமயமாக்குவதே ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் பலனளிக்கும் எனும் சோஷலிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அரசுகள், நவீன கண்டுபிடிப்புகளை ஏகபோக மூலதனத்தின் கைகளுக்கு செல்வதை தடுத்து, சமூகமயமாக்குமிற பாதையில் உறுதியாக பயணிக்கின்றன. வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பத்தில் சீன சோஷலிச அரசின் அனுபவமும் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. பெருமுதலாளித்துவ அரசுக்கு மாற்றாக ஒரு பாட்டாளி வர்க்க அரசு அமைவதே இந்தியாவிற்கு சரியான தீர்வாக அமையும்.