எஸ். கண்ணன்
இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்? என்ற கேள்வி அதிக பிரசங்கித்தனமாகப் பார்க்கப்படுகிறது.
மாஜிக் நிபுணர் பணம் வர வைப்பார்; ஆனால் அவரால் அதை பயன்டுத்தி பெரும் பணக்காரராக முடிவதில்லை. அடுத்தவருக்கு ஜோதிடம் மற்றும் பரிகாரம் சொல்பவர், தனக்கு அதை செய்து முன்னேற முடிவதில்லை. அதுபோல்தான் முதலாளித்துவம் சமூகத்தின் மீது திணிக்கும் மாஜிக் வித்தைகளும் உள்ளது. வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும், வளர்ந்த நாடுகளால், வளரும் நாடுகளில் தங்கள் வணிகத்தை தக்க வைக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டும் பிழைப்பு நடத்தும் அளவிற்கே, வேலை தேடுவோருக்கு அல்லது தொழிலாளருக்கு பயன்படுகிறது. சில நேரங்களில் நீர்க்குமிழி போல் மறைந்து போவதும் நடக்கிறது.
மூலதனம் வரும்போது, செழித்து வளரும் பல்வேறு உள்கட்டமைப்புகள், ஏற்கனவே இருந்த ஏரி, குளம், இதர நீர்நிலைகள் மற்றும் வேளாண் நிலங்கள் மீது கட்டமைக்கப் படுகிறது. ஏற்கனவே இருந்த நிலத்தை சார்ந்த வேலைவாய்ப்புகளையும், தொழில்நுட்பத்தையும் ஒழித்து, உற்பத்தி மற்றும் சேவைத்துறை மூலதனத்தை சார்ந்து நிற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கியது முதலாளித்துவம். அதே முதலாளித்துவம் தாராளமய கொள்கை அமலாக்கத்திற்குப் பின் அந்நிய நேரடி முதலீடுகள் என்ற பெயரில், உள்நாட்டு தொழில், தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை முடக்கி, அந்நிய மூலதனத்தை சார்ந்து நிற்கும் சூழலை உருவாக்குகிறது. தற்போது நமது நாட்டில் நோக்கியா, ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி அல்லது அண்மையில் பெங்களூர் அருகில் விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவை இதற்கு உதாரணங்களாக உள்ளன.
அந்நிய நேரடி முதலீடு குறித்த ஆசை வார்த்தைகளில், உலக வர்த்தக மையம் குறிப்பிட்ட வரிகள் முக்கியமானது. அதாவது, உலகத் தரத்தில் வேலைவாய்ப்பு. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதற்கு உரிய தரத்தில் வேலை வாய்ப்பையும், ஊதியத்தையும் வழங்கும் என்ற பிரச்சாரத்தை, மேற்கொண்டது. அதுவும் மாயாஜால வார்த்தைகள் என்பதை விஸ்ட்ரான் நிரூபணம் செய்துள்ளது.
அந்நிய மூலதனம் வந்ததும், செய்ததும்:
தாராளமய கொள்கை, தொழிலாளர் சட்டங்களில், நலத்திட்ட அரசு என்ற செயல்பாட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. அந்நிய மூலதனம் வருவதற்கும், எடுத்துச் செல்வதற்கும் கூட தாராளமய கொள்கை வசதிகளை உருவாக்கித் தருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 500.12 பில்லியன் அமெரிக்க டாலர் (37,00,888 கோடி ரூபாய்) அளவிற்கு, அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. பொது முடக்க காலமான 2020 ஏப்ரல் துவங்கி, செப்டம்பர் வரை, 30 பில்லியன் டாலர் (2,22,000 கோடி ரூபாய்) வரவாகியுள்ளது.
அடுத்ததாக, இந்தியாவில் குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, டில்லி, தமிழ்நாடு, தெலுங்கானா என்ற வரிசையில் இந்தியா அந்நிய நேரடி மூலதன ஈர்ப்பை செய்து வருகிறது. மேற்படி மாநிலங்களைக் கடந்து, பிற மாநிலங்களில் ஏன் மூலதனத்தின் கவனம் இல்லை? மேக் இன் இந்தியாவின் ஈர்ப்பு அவ்வளவுதான் என முடிவுக்கு வர முடியாது. பிற மாநிலங்களில் குறைந்த பட்ச கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை ஆக்கிரமிக்கும் வேலையில்தான், அந்நிய நேரடி முதலீடு கவனம் செலுத்துகிறது.
பாஜக மோடி தலைமையில் ஆட்சியமைத்த பின், 2015 ஏப்ரல் துவங்கி இன்று வரை மேக் இன் இந்தியா மூலம் 48 சதம் அந்நிய நேரடி முதலீடு, கடந்த காலங்களை விட கூடுதலாக வரவாகியுள்ளது. பாதுகாப்பு துறை உள்ளிட்டு முக்கிய துறைகளிலும் 49 சதத்தில் இருந்து 74 சதம் வரை, அந்நிய நேரடி முதலீடுகளின் வருகைக்காக, தாராளமய கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா, வழிவகுத்துள்ளது. அதாவது, இந்தியாவின் பொதுத்துறை மற்றும் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அச்சத்தை விளைவிக்கும் அளவிற்கு மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக, சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர். இதன் காரணமாக மூலதனம் மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் முதலீடு செய்த நோக்கியா நிறுவனம், 600 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்து, இரண்டே ஆண்டுகளில் அதை, மதிப்பு கூட்டு வரி (VAT) மூலம் கிடைத்த சலுகை மூலம் மட்டும் திரும்ப எடுத்துச் செல்ல முடிந்தது. இவை அல்லாமல், இதர வரி சலுகை பெரும் உதவியாக இருந்தது, மேலும் சாஃப்ட்வேர் இறக்குமதி அரசுக்கு தெரியாமலேயே செய்து, சுமார் 21,000 கோடி ரூபாய் அரசுக்கு வரிபாக்கி வைத்தது. மேற்படி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என நெருக்குதல் தரும் வேளையில், ஆலையை மூடிவிட்டுப் பறந்து விட்டது. கிடைத்து வந்த வேலை வாய்ப்பு அழிந்து போனது. இதுபோல் பல உதாரணங்கள் பல மாநிலங்களில் காண முடியும்.
Trading Economics என்ற இணைய இதழ், சீனா குறித்து பதிவிட்டுள்ள விவரங்களையும், நாம் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருவதாக கூறுகிறது. அமெரிக்கா உள்ளிட்டு உலகின் பல நாடுகள் சீனா மீது கோவிட் 19 காரணமாக, முதலீடுகளை திரும்ப பெறுவதாக கூறப்பட்ட 2020 இல் மட்டுமே, 144.37 பில்லியன் டாலர் (10,90,538 கோடி ரூபாய்), முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதாவது இந்தியாவை போல் ஐந்து மடங்கு. காரணம் சீனாவின் உள்நாட்டு சந்தை மிக அதிக அளவில் விரிவடைந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறிய, நல்ல விகிதாச்சாரத்தில், ஊதிய உயர்வு அளித்த நாடாக, சீனா இருப்பதும், தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதும் ஆகும்.
புதிய தொழில் நுட்பம் நமக்கு கிடைத்ததா?:
ஏங்கெல்ஸ் கம்யூனிச கோட்பாடுகளில் குறிப்பிடுவது போல், பெருவீத தொழில்களின் வளர்ச்சி, சிறு, குறு தொழில்களையும், கைவினைஞர்களையும் படிப்படியாக அழிக்கும் என்ற நிலை இப்போது இந்தியாவில் அரங்கேறி வருகிறது. அந்நிய நேரடி முதலீடு இதற்கு வழிவகுக்கிறது. பெரும் கார் தொழில் நிறுவனங்களான மாருதி, ஃபோர்டு, ஹூண்டாய் ஆகியவை இந்தியாவிற்கு வரும் போது, இங்கிருந்த அம்பாசிடர் அல்லது ஸ்டாண்டர்ட் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தின. புதிய ஆலைகளின் வருகையால், உதிரிபாக உற்பத்தியாளர்களான சிறு குறு தொழில் உற்பத்தியாளர்களும் பாதிப்படைவர் என்ற மார்க்சிஸ்ட் கட்சி போன்ற சக்திகளால் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உதிரிபாக உற்பத்தியாளர்களை உருவாக்குவர் என்ற வாதம் ஏற்கப்படவில்லை.
ஆனால் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உதிரிபாக உற்பத்தியாளர்களையும் இறக்குமதி செய்து கொண்டனர். உள்நாட்டு உதிரிபாக உற்பத்தியாளார்கள் மூடுவிழாவை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தொழில் நுட்ப உதவி என்ற தனது பொறுப்பை, பன்னாட்டு நிறுவனங்கள் நிறைவேற்றாதது காரணம் ஆகும். முதலில் இருந்த முழுபொருள் உற்பத்தி முறை மறைந்து, ஆங்காங்கு உற்பத்தி செய்து அசெம்பிள் செய்து கொள்ளும் முறை வளர்வதும், அதற்கான நிபுணத்துவம் உயர்வதும் மூலதன வளர்ச்சிக்கு பங்காற்றும் செயல் ஆகும். இது தொழில் நுட்ப பகிர்வுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.
இந்தியாவில் கணிணி சார்ந்த சேவைத் தொழில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் கூட இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் கணிணி சார்ந்து, 2.25 பில்லியன் டாலர் (16,650 கோடி ரூபாய்) வரவாகியுள்ளது. ஏப்ரல் 2000 முதல் ஜூன் 2019 வரை 39.47 பில்லியன் டாலர் (2, 92,078 கோடி ரூபாய்) அந்நிய நேரடி முதலீடு, கணிணி சார்ந்து வரவானதாக, தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாடுக்கான துறை சொல்கிறது. ஐ.டி நிர்வாக தொழில் முறையின், (IT Business Process Management) சந்தை 2019 இல் 177 பில்லியன் டாலராக (13,09,800 கோடி ரூபாய் )உயர்ந்தது, என்றும் மேற்படி அலுவலகம் கூறுகிறது. 2025 ல் இது 350 பில்லியன் டாலராக (25,90,000 கோடி ரூபாய்), அதாவது இரு மடங்காக, உயரும் என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது தற்போது உள்ள 7.7 சதத்தில் இருந்து, 10 சதமாக உயரும் என்றும் தெரிவிக்கிறது.
இந்த விவரங்கள், மற்றொரு இடத்தில் முரண்படும் உண்மையையும் காணமுடியும். அதாவது 2015 நிதியாண்டில், 10 சதமாக இருந்த சேவைத்துறை வளர்ச்சி விகிதம் 2019 ல் 6.9 சதமாக குறைந்துள்ளது. உற்பத்தி துறையில் இதன் தாக்கம் இருக்கிறதா? என்ற கேள்விக்கான விளக்கம் பதிவு செய்யப்படவில்லை. அதாவது கணினி உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பம் இந்தியாவிற்கு கிடைத்ததா? போன்ற கேள்விகளை நமது அரசுகள் புறக்கணித்தே வருகின்றன. இந்தியாவில் உற்பத்தி நடந்தாலும், அதன் தொழில்நுட்பங்கள் நமக்கு பகிரப்படுவதில்லை. நமது இந்தியர்கள் கல்வி மற்றும் திறன் காரணமாக, தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருப்பதை, நாட்டின் பயனாக கருத முடியாது.
அடுத்து, அந்நிய நேரடி முதலீடு, நமது பொதுத்துறைகளை குறி வைத்து வரவேற்கும் பணியை ஆட்சியாளர்கள் செய்கின்றனர். மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரிகள், முன்மாதிரி வேலை வழங்கும் நிறுவனங்களாக உள்ள பொதுத்துறை நிறுவனங்களை அரசு அந்நியருக்கு தாரை வார்க்கும் செயலை துரிதப்படுத்த, தொழில் நுட்பம் போன்ற வார்த்தைகளைப் பயன் படுத்துகிறது. உண்மையில் தொழில்நுட்பம் நமக்கு வழங்கப்படுவதை விட, நமது பொதுச் சொத்துக்களை அபகரிப்பதே அதிகம் நடக்கும் என விமர்சித்தனர். இப்போது, வங்கி, காப்பீடு, எண்ணெய் போன்ற பல்வேறு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த அணுசக்தி, விண்வெளி போன்றவற்றிலும், தனியார் ஈடுபடுத்தப்படுவது, மேற்படி துறைகளில் இந்தியா சாதித்த தொழில்நுட்பம் சார்ந்த தன்நிறைவு முயற்சிகளையும், அரசின் இறையாண்மை கொள்கையையும் அழிக்கும் செயல் ஆகும்.
வேலைவாய்ப்பிலும் ஏமாற்றமே:
அண்மையில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலுரைத்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், 2014-15இல் 18,900 கோடி ரூபாய்க்கான செல்போன் உற்பத்தி, 2018-19இல் 1,70,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்ததாக கூறியுள்ளார். ஆனால் இதே காலத்தில் தமிழகத்தில் நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட ஆலைகள் மூடப்பட்டு சுமார் 26 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். உற்பத்தியும், விற்பனையும் உயர்ந்தாலும் கூட வேலைவாய்ப்பு உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது, உற்பத்தியில் ஆட்டோமேஷன் அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது. அதாவது தொழில் நுட்பம் அதிகரிப்பு ஒருபக்கம் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேநேரம் குறிப்பிட்ட தொழில்நுட்பம் கருவிகள் உற்பத்தியை தங்கள் நாடுகளிலேயே தக்கவைத்துக் கொள்வதையும் காணமுடிகிறது. இதன் காரணமாக நியாயமாக உயர வேண்டிய வேலை வாய்ப்பை, அந்நிய நேரடி முதலீடு செய்த நாடுகளே தக்க வைத்துக் கொள்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும், அந்நிய நேரடி முதலீட்டில் உயர்வு இருந்தாலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதில் இது பெரிய பிரதிபலிப்பை ஏற்படுத்தவில்லை. 2000ஆம் ஆண்டில், 5.66 சதமாக இருந்த வேலையின்மை, 2020இல் 5.4 ஆக உள்ளது, எந்தவகையிலும் மூலதன குவிப்பின் காரணமாக வேலையின்மை குறையவில்லை. வழங்கிய வேலைவாய்ப்பிலும் முழுப்பாதுகாப்புடன் வழங்கிய வேலை வாய்ப்பு குறைவாகவும், ஒப்பந்த வேலைவாய்ப்புகளை அதிகமாகவும் உருவாக்கியுள்ளது. பெருவீத தொழில்களின் வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும், உழைப்பு சக்திக்கான விலை அல்லது கூலி மிகக்குறைந்ததாக, குறைந்த பட்ச பராமரிப்புக்கு தேவையான கூலியை அளிக்கும், என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. பிக்ஸட் டெர்ம் எம்ப்ளாய்மெண்ட் போன்ற அரசு நடவடிக்கைகளும் இதற்கு உதவுகிறது.
கர்நாடகா மாநிலம் விஸ்ட்ரான் நிறுவனம் மேற்குறிப்பிட்ட வகையில்தான், மிகக் குறைந்த ஊதியத்திற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. நிறுவனம் அளித்த வாக்குறுதியைக் காக்க கூடியதாகவும் இல்லை. உண்மையில், விஸ்ட்ரான் நிறுவனம் கோவிட் 19, பொது முடக்க காலத்தில் 4 மாதங்களாக குறைவாக தீர்மானித்த ஊதியத்தையும் வழங்கவில்லை. அதேபோல் உயர்த்தி வழங்க தீர்மானித்த தொகையையும் வழங்கவில்லை. இந்த பின்னணியில் நியாயம் கேட்ட தொழிலாளர்கள் தாக்கப்படுவதும், திருப்பித் தாக்குவதும் நடைபெற்றது. எனவே வேலைவாய்ப்பு உயரவில்லை என்பது மட்டுமல்ல. கண்ணியமான வேலை மற்றும் ஊதியம், அணுகுமுறை பன்னாட்டு நிறுவனங்களால் பின்பற்றப்படவில்லை என்பதும் அப்பட்டமான உண்மையாக வெளிப்பட்டுள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனத்தின் நடவடிக்கையை, அதன் வாடிக்கையாளர் என்ற பெயரில், காண்ட்ராக்ட் அளிக்கும் நிறுவனமான, ஆப்பிள் (I Phone) கண்டித்துள்ளது. சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் மரியாதை குறையும், கண்ணியமற்ற வேலை வாங்கும் முறை என பல காரணங்கள் இருக்கலாம். இது பெயரளவிலான கண்டிப்பு அவ்வளவே. ஏனென்றால், பல்வேறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் கைபேசிகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் இலச்சினைகளுடன் (லேபிள்) சந்தைக்கு வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா ஆலைமூடல் காரணமாக, ஃபாக்ஸ்கான் உற்பத்தியை நிறுத்தி வேலைவாய்ப்புகளை பறித்தது. விஸ்ட்ரான் என்பதும், ஃபாக்ஸ்கான் போன்ற ஒரு நிறுவனமே. இது பல கைபேசிகளை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனங்கள் தங்களின் லேபிளை கொண்டு விற்பனை செய்வர். ஃபாக்ஸ்கான் போல விஸ்ட்ரான் எப்போது வேண்டுமானாலும் பறக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்பு நிரந்தரமற்றதாக இருப்பதுடன், வேலைவாய்ப்பு சந்தையில் வேலை அனுபவம் கொண்டவரும் போட்டியிடும் நிலை அதிகரிக்கும்.
உலக வர்த்தக மையத்தின் வார்த்தைகள் எங்கே?
இந்தியாவை நிர்ப்பந்திக்க கிழக்கு ஆசிய புலிகள் என சொல்லப்பட்டு, இந்தோனேசியா, தென்கொரியா போன்ற நாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன. இந்தியா போன்ற வளரும் நாடுகளை உறுப்பினராக்க, உலக வர்த்தக நிறுவனம் குறிப்பிட்டவை அனைத்தும், ஏற்கும்படியானதல்ல என்று, மார்க்சிஸ்ட் கட்சி, 1986-94 கட்டங்களில் நடந்த உருகுவே, சியாட்டில் மாநாடுகளின் தீர்மானங்களின் மீது விமர்சனங்களை முன்வைத்தது. குறிப்பாக உலக வர்த்தக மையம், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும். தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு இவை குறித்து உலக வர்த்தக மையம் குறிப்பிட்ட எதுவும் இன்று வரை அமலாகவில்லை என்பதைப் பார்க்க முடியும். இந்தியாவிற்கு இத்தகைய உலகாளாவிய ஒப்பந்தங்கள் பலனளிக்காது என மார்க்சிஸ்ட் கட்சி கூறியது உண்மை என்பதே நிருபணம் ஆகியுள்ளது.
தென்கொரியாவின் வேலையின்மை 2001ஆம் ஆன்டில் இருந்து 4 சதம் என்பதாக இருந்தது. தற்போது 4.6 சதமாக 2020 டிசம்பரில் கணக்கிடப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில், 2000இல் 6.08 சதமாக இருந்த வேலையின்மை விகிதாச்சாரம், 2020இல் 4.84 சதமாக உள்ளது. அதாவது உலக வர்த்தக மையம் சுட்டிக்காட்டிய கிழக்கு ஆசிய புலிகளின் நிலை, வேலை வாய்ப்பை பொருத்த அளவில், முன்னேற்றம் இல்லாத ஒன்றாக உள்ளது.
எனவே இந்தியாவிலும், உலகின் பிற வளரும் நாடுகளிலும் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் வேலைவாய்ப்பு அல்லது தொழில் நுட்பம் வளரவில்லை. முதலாளித்துவம் வேலையின்மையைத் தக்கவைக்கவே செய்யும் என்பது நிரூபணமாகியுள்ளது. அதேபோல் தொழில் நுட்பம் என்பதும் வளரும் நாடுகளுக்கு கிடைப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி மூலதன குவிப்பிற்கான ஒரு கருவி என்று அரசியல் பொருளாதாரம் கூறுகிறது. மூலதனம் மேலும் மேலும் தன்னை விரிவாக்கிக் கொள்ள, மூலதன உடைமையாளர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குகின்றனர். அத்தகைய உடைமையாளர்கள், வளரும் நாடுகளுக்கு அதை பகிர்ந்து கொள்ள ஒரு போதும் விரும்புவதில்லை என்பதையும் காணமுடிகிறது.