மரியம் தாவ்லே
கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பெண்களை துயரப் படுத்தியுள்ளது. ஆனால் நம் நாட்டின் பெண்கள் நிலைமை அதனினும் மிகவும் ஆபத்தானது. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை பாதிப்பை பெண்கள் தாங்குகின்றனர். இந்தக் கடுமையான சூழ்நிலையின் தாக்கம் மிகவும் துன்பகரமானது.
பெண் வேலை பங்கேற்பு விகிதங்கள் குறைதல்:
தொழிலாளர் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவான பெண்கள் இருக்கும் இந்தியா, உலகளவில் மிகக் கடை நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் 49 சதவீதமாக இருக்கும் பெண்கள் பொருளாதார உற்பத்தியில் 18 சதவீதம் மட்டுமே பங்களிக்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பின் உலகளாவிய சராசரி 37 சதவீதம். சராசரியாக அவர்கள் ஆண்களை விட 35 சதவீதம் குறைவாக சம்பாதிக்கிறார்கள். இந்தியாவில் பெண்கள் செய்யும் வேலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஊதியம் பெறாத பணியாகும்.
2018-19 ஆம் ஆண்டின் தேசிய வருமானம் குறித்த அரசாங்கத் தரவுகளின்படி, 1991 முதல் 2019 வரையிலான இந்தியாவின் தனிநபர் வருமானம் மாதம் ரூ. 2,000 லிருந்து ரூ.10,534 ஆகவும், 2019-20 ஆம் ஆண்டில் ரூ.11,254 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், பெண் தொழிலாளர் பங்களிப்பின் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.. 2011-12 ஆம் ஆண்டில் 31.2 சதவீதத்திலிருந்து, 2017-18 ஆம் ஆண்டில் கிடைக்கக்கூடிய சமீபத்திய எண்ணிக்கை 23.3 சதவீதமாக உள்ளது என தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) கூறுகையில், பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய் காரணமாக ஏற்கனவே குறைவாக உள்ள பெண்களின் வேலை பங்கேற்பு வீதம் மேலும் சுருங்கியுள்ளது. இப்போது இது பெண்களுக்கு 11 சதவீதமாக உள்ளது, இதுவே ஆண்களுக்கு 71 சதவீதமாகும்.
இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் பெண்களுக்கு வேலை கிடைக்காததைக் காட்டுகின்றன. இது அவர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் மோசமாக பாதிக்கிறது. அரசாங்க கொள்கைகள் இந்த நிலைமையை பெரிதும் மோசமாக்கியுள்ளன.
சமூக ஆதரவு இல்லை:
இந்தியாவில் 90 சதவீத பெண்கள் முறைசாரா துறைகளில், குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில், குறைந்த அளவு சட்ட பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளுடன், பணிபுரிகின்றனர். விவசாயத் தொழிலாளர்களில் அவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால் 9 சதவீத நிலம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. கிட்டத்தட்ட பாதி பெண்களுக்கு வங்கி கணக்கு இல்லை. 60 சதவீதம் பேருக்கு அவர்களின் பெயரில் மதிப்புமிக்க சொத்துக்கள் இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு செல்போன்கள் இல்லை. 80 சதவீதம் பேருக்கு இணைய வசதி இல்லை.
குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் போன்றவை, வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பதைக் கட்டுப்படுத்துகின்றன. 2017 ஆம் ஆண்டில், இந்தியா மகப்பேறு (திருத்த) மசோதாவை நிறைவேற்றியது. இது வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான உரிமையை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரித்தது. ஆனால் முறை சார்ந்த துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே இது அமலாகிறது. இதேபோன்று, கிராமப்புறங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தை பராமரிப்பு ஏற்பாட்டை மகாத்மா காந்தி தேசீய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம்(MNREGA) வழங்குகிறது, ஆனால் இந்த குழந்தை பராமரிப்பு தளங்கள் பெரும்பாலும் செயல்படாதவை.
உண்மையில், “பணித்திறன் மற்றும் குழந்தை ஆரோக்கியம்: இந்தியாவின் பொதுப்பணித் திட்டத்தின் சான்றுகள்” என்ற தலைப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், மகாத்மா காந்தி தேசீய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத சட்ட(MNREGA) பெண்களின் பணி, குழந்தைகளின் உயிர்வாழும் வீதங்களைக் குறைக்கிறது. ஏனெனில் வருமானம் ஈட்டும் பெண்கள் நடவடிக்கைகள், குழந்தை பராமரிப்புக்கு போதிய நேரத்தை ஒதுக்க இயலவில்லை. இந்த விளிம்பு நிலை பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் இருதலைக் கொள்ளி எறும்பாய் சிக்கிக்கொள்கின்றனர்.- குழந்தை பராமரிப்பு கிடைக்காமல், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்; எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ வேலை செய்யாவிட்டால், அவர்கள் பட்டினி கிடப்பார்கள்! அவர்களின் தேவைகளை, அரசு புறந்தள்ளுவதால், இவ்வாறான இக்கட்டான சூழலை அவர்கள் எதிர் கொள்கின்றனர்.
பெண்கள் சார்ந்த திட்டங்களில் காட்டுமிராண்டித்தனமான வெட்டு குறைப்புகள்:
பல்வேறு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக, பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கான செலவு 60 சதவீதம் குறைந்து 2021-2022 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 22,261 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய திட்டம், ஜன தன் கணக்குகளுக்கான ஆதரவு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ மற்றும் என்.ஆர்.எல்.எம் ஆகியவை அடங்கிய கிராமப்புற மேம்பாட்டுக்கான முழு பாலின வரவு செலவுத் திட்டமும் சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளது.
நகரங்கள் மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகள் ஊரடங்கு நிலையில் மூடப்பட்டபோது, கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட முறைசாரா துறைகளைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், மாஸ்க்குகளை உற்பத்தி செய்தல் போன்றவற்றின் மூலம் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றனர். ஆனால் பொருளாதாரத்தினை உயிர்ப்பிப்பதற்கான ரூ. 20 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பு, முறைசாரா துறையில் பெண்கள் எதிர் கொண்ட முதுகொடிக்கும் வேலைகளை கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது. அவர்களின் வலி மற்றும் துயரத்தை போக்க இந்த ஊக்கத் தொகுப்பில் எதுவும் இல்லை!
தொற்றுநோய் காலத்தில் முன்மாதிரியாக பணியாற்றிய சுய உதவிக்குழுக்கள், பெண் சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அரசாங்கம் பாராட்டியது. துரதிர்ஷ்டவசமாக ஆஷா தொழிலாளர்களுக்கு இன்னும் ஒரு நிலையான சம்பளம் இல்லை. இந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்பு அல்லது சிறப்பு ஏற்பாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.
சுய உதவிக் குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், அவர்களுக்கு பிணை மற்றும் வட்டி இல்லாத கடன்களைக் கொடுப்பதற்கும் பதிலாக, 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண் தொழிலாளர்கள் இருக்கும் பால் மற்றும் மீன்வளம் போன்ற துறைகளில் மைக்ரோ நிதி நிறுவனங்களை நுழைய நிதி அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். இது இரத்தத்தை உறிஞ்சும் எம்.எஃப்.ஐ.க்களை ஊக்குவிப்பதும், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களைக் கொள்ளையடிப்பதன் மூலம், அவர்களின் கொள்ளை லாபத்தை அனுமதிப்பதும் ஆகும்.
நகர்ப்புற பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்கள் இந்த தொற்றுநோயின் போது முன்பு இல்லாத அளவுக்கு தங்கள் சுயநல மற்றும் சுரணையற்ற தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர். அவர்களின் பகட்டு அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்காக உழைத்து, பல தசாப்தங்களாக பணி புரிந்த வீட்டுத் தொழிலாளர்களைப் பற்றி, அவர்களின் உயிர்வாழ்வைப் பற்றி சிந்திக்காமல், அவர்களை பணிநீக்கம் செய்யதனர். சமையல்காரர்கள், ஆயாக்கள், துப்புரவாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் நிலைமைகளும் அவ்வாறே பரிதாபகரமானவை. அவர்களுக்கு மாற்றாக, அண்மைக்கால கருவிகளான தூசி துடைப்பான்கள், குழந்தை மானிட்டர்கள் மற்றும் பாத்திரங்கழுவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
இப்போது லட்சக்கணக்கான வீட்டுத் தொழிலாளர்கள், பெரும்பான்மையான பெண்கள், வரவுக்கும், செலவுக்கும் ஈடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர். பள்ளி மூடல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன்கள் கிடைக்காததால் அவர்களின் குழந்தைகள் படிப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர். தொற்றுநோய்க்குப் பின்னர் கிடைக்கும் சில வேலைகளுக்காக, வேலையற்றோர் பலரும் போட்டியிடுவதால், இவர்களின் கூலி இந்த தொழிலாளர் சந்தையில் இன்னும் குறைவான பேரத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இப்போது பலரும் தங்கள் நெருங்கிய குடும்பங்களின் ஆதரவைப் பெற்று நாட்களை நகர்த்துகிறார்கள். சமூகம் இயல்பு நிலைக்கு திரும்பும்போது கூட இந்த நிலை ஒரே அடியாக மாறாது.
பசி பட்டினி தீவிரமடைகிறது:
வருமானமின்மை, ஏழைக் குடும்பங்களின் உணவுத் தேவைகளில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா தற்போது 112 நாடுகளில் 98 வது இடத்தில் உள்ளது. பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதை தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பு -5, 2020 காட்டுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உணவு நுகர்வு குறைந்து விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. பட்டினியின் மிக மோசமான காலகட்டத்தில், குறிப்பாக புலம்பெயர்ந்தோருக்கு, மக்களும் சமூக அமைப்புகளும்தான் உதவின. பாஜக அரசாங்கம் ஆரம்பத்தில், இந்த துயரமான மக்களின் அழுகையை கேளாக் காதினராயும் பாரா முகத்தோடும்தான் எதிர் கொண்டது. மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, இலவச தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. தொற்றுநோய் தொடர்ந்தாலும் இதுவும் இப்போது முற்றிலுமாக நிறுத்தப் பட்டுவிட்டது.
ரேஷன் கடைகளில் உணவு தானியங்களும் எப்பொழுதும் கிடைப்பதில்லை. அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் பெண்களின் சுமையை பெரிதும் கூட்டிள்ளன. மத்திய பட்ஜெட் உணவுக்கான மானியத்தை 43 சதவீதம் குறைத்துள்ளது. உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் கீழ் மானிய அல்லது இலவச இணைப்புகளுக்கான பட்ஜெட் 52 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள மானியங்கள் கூட பயனாளிகளை அடையவில்லை. இந்தநிலையில், வீடுகளில் அடுப்பு எப்படி எரியும்?
நிலைமையை இன்னும் மோசமாக்குவதற்கு, கறுப்பு விவசாய சட்டங்களில் ஒன்றான அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் 2020 ஐ மத்திய அரசாங்கம் இயற்றியுள்ளது, இது பதுக்கலை சட்டப்பூர்வமாக்கும்; கறுப்பு சந்தையை ஊக்குவிக்கும்; உணவு சந்தையை லாப வேட்டைக்கு திறந்து விடும். இதன் விளைவாக மேலும் உணவு பற்றாக்குறை ஏற்படும். இது இறுதியில் தேசிய உணவு உத்திரவாத சட்டம் பலவீனமடைய வழிவகுக்கும்.
ஐசிடிஎஸ் திட்டம், போஷன் அபியான், இளம் பருவ பெண்கள் திட்டம் மற்றும் தேசிய கிரெச் திட்டத்தை ஒரே திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பதன் மூலம் மிஷன் போஷான் 2.0 ஐ அரசாங்கம் துவக்கியுள்ளது. மிஷன் போஷன் 2.0 க்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 20,100 கோடி. இது 2020-2021 ஆம் ஆண்டில் இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட 20 சதவீதம் குறைவாகும். மதிய உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு 11 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலை பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் இந்த வெட்டுக்கள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை உணர அதிக கற்பனை தேவையில்லை.
பாதுகாப்பற்ற பொது மற்றும் பணி இடங்கள்:
தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2019 ஆம் ஆண்டுக்கான குற்றவியல் அறிக்கையின்படி, 2018 மற்றும் 2019 க்கு இடையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளன. டெல்லியில், 92 சதவீத பெண்கள் பொது இடங்களில் பாலியல் அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாக தெரிவித்தனர். சிறுமிகள் உட்பட கும்பல் கற்பழிப்பு மற்றும் கற்பழிப்பு சம்பவங்களின் அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது. தண்டனை விகிதம் 2017இல் தண்டனை விகிதம் 23 முதல் 24 சதவீதம் வரை உள்ளது. அதுவே 2016 இல் 18.9 சதவீதமாக குறைந்தது. குற்றவாளிகளைப் பதிவுசெய்யத் தவறியது மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை வழங்குவதில் காவல்துறை தவறியதை இது பிரதிபலிக்கிறது.
இத்தகைய நேரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களுக்கு, ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் பெண் நிதியமைச்சர் குறைத்துள்ளார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓரிட மையங்கள், சுதார் திட்டம், பெண்களுக்கான ஹெல்ப்லைன்கள் ஆகியவை சம்பல் எனப்படும் ஒரு குடைதிட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டையும் குறைத்து ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கான நிர்பயா நிதி வேறு பல திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. மேலும் பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்புக்கான திட்டத்தில் 40 சதவீதம் சரிவு. இது மோடி அரசாங்கத்தின் ‘பேட்டி பச்சாவ்’ ஜும்லாவின் பாசாங்குத்தனத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பாதுகாப்பற்ற பொது மற்றும் பணியிடங்கள், பாலின அடிப்படையிலான வன்முறை அல்லது பயம் ஆகியவை, பெண்களை உழைக்கும் மக்கள் திரளுக்குள் நுழைவதற்கான முடிவெடுப்பதை கணிசமாக பாதிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் “ஊடகங்களில் வெளியான வன்முறை மற்றும் தொழிலாளர் வழங்கல் குறித்த அறிக்கை” மேற்கொண்ட ஆய்வில், நகர்ப்புறங்களில், உடல் மற்றும் பாலியல் தாக்குதல்கள் குறித்த ஊடக அறிக்கைகளின் அதிகரிப்பு, ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே வேலை செய்யும் சாத்தியத்தை 5.5 சதவீதம் குறைக்கிறது என்கிறது..
நலத்திட்ட செலவுகள் குறைப்பு
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரழிவை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, நிதியமைச்சர் பட்ஜெட்டை முன்மொழியும் போது, இதற்கு முன் முன்வைக்கப்படாத ஒரு பட்ஜெட்டை அவர் முன்வைப்பதாக குறிப்பிட்டார். அவருடைய வார்த்தையை, அவர் மெய்ப்பித்துள்ளார். ஆம் ! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களின் அடிப்படை உரிமைகளைத் தாக்கும் ஒரு பட்ஜெட்டை அவர் முன்வைத்தார். இது இந்த மனுவாதி அரசாங்கத்தின் பழமைவாத மற்றும் பெண்கள் விரோத அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இது புதிய தாராளமயக் கொள்கைகளை தீவிரப்படுத்துவதற்கும் சுரண்டலுக்கும் வழிவகுக்கும்.
2020-2021 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.4 சதவீதத்திலிருந்து 2021-2022 ஆம் ஆண்டின் திட்டமிடப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் 15.6 சதவீதமாக மத்திய அரசின் மொத்த பொதுச் செலவுகள் குறைந்துவிட்டதால், மக்கள் நலனுக்காக அரசாங்கம் குறைவாகவே செலவிடும். பாலின பட்ஜெட் 2020-2021 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட ரூ. 2.07 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.06 சதவீதத்திலிருந்து ரூ. 1.53 லட்சம் கோடியாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு வெறும் ரூ. 3,310 கோடியாக உள்ளது.
மாபெரும் ஒன்றுபட்ட போராட்டங்கள் தாம் ஒரே வழி:
மொத்தத்தில், பெண்கள் முன் உள்ள சவால்கள் அளவு கடந்தவை. பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சி பெரும்பான்மையான பெண்களின் வாழ்க்கையில் கடுமையான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது. உயிர்வாழ்வதற்கான போராட்டம், உயிருடன் இருப்பதுமே பெண்களுக்கு ஒருபோராட்டம். பெண்களுக்கான பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்திற்கான பாதை ஏற்கனவே ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. தொற்றுநோய் ஒரு மோசமான சூழ்நிலையை ஆபத்தான முறையில் இன்னும் மோசமாக்குகிறது.
கொள்கைகளை,அரசாங்கம் மற்றும் இறுதியில் இந்த அமைப்பையே மாற்றுவதற்கான நிலையான, நீடித்த, ஒன்றுபட்ட மற்றும் தீவிர அரசியல் விழிப்புணர்வுடன் கூடிய மாபெரும் போராட்டங்கள்தான், நம் முன்னால் உள்ள ஒரே வழி.
தமிழில்: ஜி. பாலசந்திரன்.
Leave a Reply