என்.குணசேகரன்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் அவ்வப்போது நிலவுகிற நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டு கம்யூனிஸ்டுகள் நிலை எடுக்கின்றனர். இன்றைய சூழலில் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற கொள்கைகள், வகுப்புவாதம் போன்ற உழைக்கும் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்ற பிரச்சனைகளை மையமாக வைத்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கிற நோக்கத்துடன் பொருத்தமான அரசியல் சக்திகளோடு அணி சேர்ந்து கம்யூனிஸ்டுகள் தேர்தலை சந்திக்கின்றனர்.
கம்யூனிஸ்டுகளின் தொலைநோக்கு இலக்கு, தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் அல்ல; தேர்தலுடன் கம்யூனிஸ்ட்களின் கடமை முடிவடைவதில்லை. காலம் காலமாக அடிமைப்பட்டு, சுரண்டலுக்கு ஆளான அடித்தட்டு, விளிம்புநிலை, உழைக்கும் வர்க்கங்கள் அரசு அதிகாரத்தை கைப்பற்றி தங்களுக்கான அரசினை நிறுவிட வேண்டும். இந்த இலட்சியத்தை கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ளனர்.
அந்த தொலைநோக்குப் பயணத்தில் இடை இடையே வருகிற சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, தொலைநோக்கு இலக்கை நோக்கிய பயணத்தில் முன்னேறுவதற்கு பயன்படுகிற வகையில் கம்யூனிஸ்டுகள் தேர்தல் நிலைபாடு மேற்கொள்கின்றனர். உழைக்கும் வர்க்க அதிகாரம் நிறுவிட தற்போது தடையாக இருப்பது மூலதன சுரண்டலுக்கு வழிவகுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகள், மக்கள் ஒற்றுமையை கட்டுவதற்கு சாதி மத உணர்வுகளை தூண்டிவிட்டு, அடையாள அரசியலை நடக்கும் அரசியல் சக்திகள் ஆகியவற்றை அரசியலில் இருந்து அகற்றவும், அவற்றை வீழ்த்தவும் கம்யூனிஸ்டுகள் தேர்தலில் முயற்சிக்கின்றனர். இந்தக் கடமையை நிறைவேற்ற உகந்த அரசியல் சக்திகளோடு கம்யூனிஸ்டுகள் அணி சேர்க்கை காண்கின்றனர்.
யாருக்கான ஜனநாயகம்?
தேர்தல்களில் வாக்களித்து மாற்றம் ஏற்படுத்துவது “ஒருவிரல் புரட்சி” என்று அமர்க்களமாக பேசப்படுகிறது. அதேபோன்று பிரபலமானவர்கள் வாக்களிக்கும் போது தங்களது “ஜனநாயக கடமையை” ஆற்றினார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இப்படிப்பட்ட சொற்றொடர்கள் தேர்தல் வழியாக அனைத்தையும் சாதிக்க இயலும் என்றும், அதுவே முதல் கடமையும் முடிவான கடமையும் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்.
உண்மையில், முதலாளித்துவ அமைப்பில் அரசு அதிகாரம் முதலாளித்துவ வர்க்க ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, அந்நிய மூலதன சக்திகள் அதிகார பீடத்தில் இருக்கும்வரை, அடித்தட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு விடியல் சாத்தியமாகாது. இந்த சக்திகள் ஆளும் அதிகார சக்திகளாக இருப்பதால், உண்மையான ஜனநாயகம் என்பது மக்களுக்கு கிட்டாது. அதனால்தான், லெனின் ஜனநாயகம் என்று பேசும்போது, அது யாருக்கானது என்பதையும் இணைத்து பேச வேண்டும் என்கிறார்.
மேற்கண்ட வர்க்கங்கள் அதிகாரத்தில் இருக்கும்வரை பாராளுமன்ற, சட்டமன்றங்களில் சில இடங்களை கம்யூனிஸ்டுகள் பெறுவதன் மூலம் அடிப்படை மாற்றம் எதையும் செய்திட முடியாது. எனவே, தேர்தல்தான் ஒரே நோக்கம் என்கிற பார்வையுடன் செயல்படுவது மிகவும் தவறானது. தற்போதைய முதலாளித்துவ அரசை அகற்றி சோசலிசத்தை அமைப்பதே எட்டவேண்டிய இலக்கு. இதில் அசையாத நம்பிக்கையும் உறுதிப்பாடும் அவசியம். இதற்கு, வலுவான புரட்சிகர வெகுமக்கள் கட்சியை கட்டுவது மிக முக்கியமானது.
இன்றைய நிலையில் ஆளும் வர்க்கங்களால் தற்போதுள்ள எல்லைக்குட்பட்ட ஜனநாயகத்திற்கும் ஆபத்து உள்ளது. அதனை பாதுகாப்பதற்கு ஏற்ற சக்திகளுடன் தேர்தல்களின் போதும், தேர்தல் அல்லாத காலங்களிலும் கம்யூனிஸ்டுகள் செயல்படுவது அவசியம்.
மக்களை அரசியல்படுத்தும் கடமை
மக்களை அரசியல்படுத்துவதற்கான ஒரு தருணமாக கம்யூனிஸ்டுகள் தேர்தல்களை பயன்படுத்துகின்றனர். மக்கள் விரோதப் பாதையில் செல்லுகிற ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை அம்பலப்படுத்துகிற வாய்ப்பாக தேர்தல்கள் அமைகின்றன. அத்துடன் ஒரு மாற்று நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதற்கான வாய்ப்பாகவும் கம்யூனிஸ்டுகள் தேர்தலை பயன்படுத்துகின்றனர்.
தேர்தல் செயல்பாடுகள் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பல் வகை செயல்பாடுகளில் ஒரு முக்கிய செயல்பாடாக அமைகிறது. இதனை குறைத்து மதிப்பிடக் கூடாது. மார்க்சும் எங்கெல்சும் பல்வேறு புரட்சிகர செயல்பாடுகளின் அங்கமாக தேர்தல்களை கண்டனர். மக்களை புரட்சிகர அரசியல் நோக்கி திருப்புவதற்கான பல நடைமுறைகளில் முக்கியமான நடைமுறையாக தேர்தல் நடைமுறையும் உள்ளது. அந்த வகையில் விரிந்து பரந்த மக்களோடு மேலும் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையிலான தேர்தல் பணிகளை மேற்கொள்வது அவசியம்.
உழைக்கும் வர்க்கங்களை அரசியல்படுத்துவது, வர்க்கப் போராட்டங்களை மக்கள் பங்கேற்புடன் முன்னெடுப்பது போன்ற நடவடிக்கைகள் முக்கியமானவை. இவற்றைத் தவிர்த்துவிட்டு, தேர்தல்களும், அவற்றில் வெற்றி பெற்று பதவிகள் பெறுவதும்தான் ஒரே இலக்காக கருதுவது மோசமான சீர்திருத்த வாதமாகும்.
ரஷ்ய புரட்சியின் வரலாற்றை ஆழமாகப் பயில்கிறபோது லெனின் தலைமையில் அன்றைய போல்ஷ்விக் கட்சி தேர்தலை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை அறியமுடியும். மக்களின் ஆளும் வர்க்க எதிர்ப்பு கொதிநிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்கிற ஒரு வாய்ப்பாக தேர்தலை அவர்கள் பயன்படுத்தினார்கள். மக்களின் உணர்வு மட்டத்தை புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களுடைய நடைமுறை உத்திகளை தகவமைத்து, புரட்சியை நோக்கி முன்னேறினார்கள். மக்களின் அரசியல் உணர்வை மேம்படுத்தி, புரட்சிகர செயல்திட்டத்திற்கு ஆதரவாக மக்களை வென்றெடுப்பதற்கு அவர்கள் தேர்தலை பயன்படுத்தினார்கள்.
மார்க்சின் எச்சரிக்கை
கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதிப்பகுதியில் மார்க்ஸ் பல நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளோடு உறவு கொள்வதை பற்றி பேசுகிறார். அதில் பிரான்சில், அன்றைய நிலையில் கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய நிலை பற்றி ஒரு வழிகாட்டுதலை அவர் அளிக்கின்றார். அன்று பிரான்சில் இயங்கி வந்த பிற்போக்கு, பழமைவாதிகள், தீவிரவாத முதலாளித்துவவாதிகள் போன்றவர்களுக்கு எதிராக பிரெஞ்சு சமூக ஜனநாயகவாதிகளுடன் அணி சேர வேண்டுமென மார்க்ஸ் வலியுறுத்துகிறார்.
அதே சமயத்தில் ஒரு எச்சரிக்கையையும் அவர் அழுத்தமாக எடுத்துரைக்கின்றார். பல்வேறு பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டுகள் விமர்சன நிலைபாடுகளை மேற்கொள்கிற உரிமையை விட்டுத்தரக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்துகிறார். “…..பாரம்பரியமாகப் பெறப்பட்டு வந்துள்ள சொற்கோவைகள், பிரமைகள் குறித்து ஒரு விமர்சன நிலைபாட்டை மேற்கொள்ளும் உரிமையை விட்டுவிடாமல் அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) தம் கையில் வைத்துள்ளனர்.” என்பது அவரது பொன்னான வரிகள்! (அத்தியாயம்-4 தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு). இந்த அறிவுரை இன்றளவும் பொருத்தமானது. இதர கட்சிகளோடு கூட்டு சேருகிறபோது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அணுகுமுறை.
முதலாளித்துவக் கட்சிகள் பல தங்கள் தலைமையில் அணிகள் உருவாக்கி, தேர்தல் போட்டி நடக்கிற நிலையில் அனைத்து அணிகளுமே எதிர்காலத்தில் வானத்தை வில்லாக வளைக்கும் வாக்குறுதிகளை வழங்குவதுண்டு. ஜனநாயகத்தை பாதுகாப்பது உள்ளிட்ட குறைந்தபட்ச நோக்கங்களுக்காக ஒரு கட்சியோடு உடன்பாடு கொண்டுள்ள கம்யூனிஸ்டுகள், இந்த சொற்போரில் வழங்கப்படும் வாக்குறுதிகளால் மக்களிடையே ஒரு மாயை ஏற்படும் நிலையை கவனிக்க தவறக்கூடாது. தேர்தலின்போது ஒரு அணியில் உடன்பாட்டுடன் இயங்கி வருகிற போதே, மாற்றத்திற்கான பாட்டாளி வர்க்க நலன் என்கிற நோக்கில் மாற்று நிகழ்ச்சி நிரலை முன்வைத்து, கம்யூனிஸ்டுகள் தங்களது தனித்த பார்வையை பிரச்சாரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
மற்றொன்றையும் கம்யூனிஸ்டுகள் மனதில் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பிட்ட நோக்கத்திற்காக அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டாலும், முதலாளித்துவ கட்சி அணியின் தலைமையில் இருக்கிற போது அவர்கள் கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சியை விரும்புவதில்லை; அவர்களதுவர்க்கத் தன்மை காரணமாக கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் புரட்சிகர பார்வை மக்கள் மத்தியில் பரவுவதை எக்காலத்திலும் முதலாளித்துவ சக்திகள் அனுமதிப்பதில்லை; இந்த அம்சத்தையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உக்கிரமான தேர்தல் பிரச்சாரத்தில் தனது அணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தும் வாய்ப்பு குறைவு என்றாலும் கூட, தேர்தல் முடிந்த பிறகாவது தங்களது பார்வையை விளக்கி, மக்கள் அடிப்படை மாற்றத்திற்கு தயாராக வேண்டும் என்கிற பிரச்சாரத்தை கம்யூனிஸ்டுகள் அவசியம் கொண்டு செல்ல வேண்டும். விமர்சன நிலைப்பாடுகளை கம்யூனிஸ்டுகள் கைவிடக் கூடாது என்பதே மார்க்ஸ் – எங்கெல்ஸின் வழிகாட்டுதல்.
அரசியலற்ற உணர்வு
இதே கருத்தோட்டத்தில் லெனினும் பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். 1912ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலைப் பற்றி லெனின் எழுதுகிறபோது தெளிவாகக் குறிப்பிடுகின்றார். “நவீன அடிமை எஜமானர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் வரை எந்த சீர்திருத்தமும் ஏமாற்று வேலைதான்” என்கிறார் லெனின்.
அதனால்தான் 1917 பிப்ரவரியில் நடந்த ஜனநாயக புரட்சியோடு அவர்கள் நின்றுவிடவில்லை; அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கி பயணித்து 1917 நவம்பரில் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை நிறுவினார்கள். எனவே, தேர்தலின் போது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு அணி சேர்க்கையில் கம்யூனிஸ்டுகள் இருந்தாலும், தங்களது இறுதி இலக்கை கைவிடக்கூடாது. அந்த இறுதி இலட்சியத்தை நோக்கி வர்க்கங்களை திரட்டும் பணியும், வர்க்கங்களை உணர்வு ரீதியாக அரசியல்படுத்தும் பணியும் மிக முக்கியமானது.
லெனினது எழுத்துக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென வாதிட்டு, தேர்தல்களில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை மறுத்து வந்த பிரிவினரின் கருத்துக்களை ஒரு புறத்தில் எதிர்த்துப் போராடினார்; மறுபுறத்தில், தேர்தல் வெற்றி,தோல்வி பற்றிய அதீத முக்கியத்துவம் அளிக்கிற கருத்தோட்டங்களையும், சீர்திருத்தவாத நிலைபாடுகளையும் எதிர்த்துப் போராடினார். “இடதுசாரி கம்யூனிசம்:இளம்பருவக் கோளாறு”, “சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” போன்ற நூல்கள் மற்றும் பல கடிதங்கள், குறிப்புகளில் அவர் மார்க்சிய நிலைப்பாட்டை விளக்கினார். அவரது பொதுவான அந்த கோட்பாடுகள் கம்யூனிஸ்டுகளுக்கு இன்றளவும் வழிகாட்டுவதாக அமைந்துள்ளன.
வர்க்கப் போராட்டம், வர்க்கங்களை அரசியல் படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தேர்தலை மட்டுமே முன்னுரிமை கடமையாக கருதுகிற பார்வையை லெனின் கடுமையாக கண்டித்தார். இது முதலாளித்துவத்தோடு சமரசம் செய்துகொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்தார். தேர்தலே பிரதானம் என்ற சந்தர்ப்பவாத மனோபாவத்திற்கு ஆளானவர்கள் ,ஓட்டுக்கு பணம் உள்ளிட்ட பல நடைமுறைகளை பின்பற்றும் நிலையைப் பார்க்கின்றோம். இது மக்களை அடிப்படை மாற்றம் நோக்கிய அரசியலுக்கு கொண்டு செல்லாமல் அரசியலற்ற உணர்வுக்கு பின் தள்ளிவிடும்.
சோஷலிச மாற்று நிகழ்ச்சிநிரலில் அடங்கியுள்ள சில கருத்துக்களை பிரச்சாரத்தில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்பது லெனின் அறிவுரை; பெருந்திரளான மக்களை இந்த தேர்தல் திருவிழா ஈர்க்கிற காரணத்தினால், கம்யூனிஸ்டுகள் தங்களது பார்வையை பெருந்திரளான மக்களிடம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை தவற விடக்கூடாது என்று லெனின் கருதினார்.ஆனால் முதலாளித்துவ ஜனநாயகத்தில் வாக்களிப்பது என்பது மக்களிடம் உள்ள மிகப் பெரிய அதிகாரம், உரிமை என்ற மாயைகளை தகர்க்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளிடம் அரசு அதிகாரம் இருக்கும் வரை வாக்களிப்பது என்பது ஒரு குறைந்தபட்ச ஜனநாயக வாய்ப்பு தானே தவிர அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் கருத்தோட்டத்திலிருந்து மக்களையும் விடுவிக்க வேண்டும்.
இந்திய தேர்தல்களில் பல மோசமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.ஆளும் கட்சிக்கு எதிரான தீர்ப்பை (anti-incumbency) மக்கள் எப்போதுமே வழங்குவார்கள் என்று கருத இடமில்லை; இதனை இந்திய தேர்தல்களின் போக்கினை ஆய்வு செய்து எழுதிய பிரணாய் ராய் ஆதாரங்களுடன் தனது நூலில் விளக்குகிறார். (The Verdict: Decoding India’s Elections)நூறு தேர்தல்கள் நடந்தால், அதில் ஐம்பது தேர்தல்களில் மட்டுமே மக்கள் தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு எதிராக செல்லும் வாய்ப்பு உள்ளது என்கிறார்பிரணாய் ராய்.
இதன் உண்மையான பொருள் என்ன? கடந்த காலங்களை விட மக்கள் மத்தியில் பொய்மைகளை கட்டவிழ்த்துவிடும் திறன் முதலாளித்துவ கட்சிகளுக்கு அதிகரித்துள்ளது. அதே போன்று சமீப காலங்களில் இவிஎம் இயந்திரங்களில் தில்லுமுல்லு போன்ற நூதன தேர்தல் மோசடிகள் அதிகரித்துள்ளன. சாதிய, மத பிடிமானங்களை கிளறிவிட்டு வாக்குகளை பெறுகிற நடைமுறைகளும் அதிகரித்துள்ளன. பெரும் கார்ப்பரேட்களின் பணம், ஊழல் பணம் அனைத்தும் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கம்யூனிஸ்டுகள் தேர்தல் பணிகளை தங்களது மக்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து வழுவாமல் தேர்தலில் பங்கேற்று செயலாற்ற வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் மேற்கொள்ளும் பணிகள் முக்கியமானவை. குறிப்பாக சமூக அரசியல் பொருளாதார பிரச்னைகளை வர்க்க நலன், வர்க்கப்புரட்சி நோக்கிலிருந்து இடையறாமல் பிரச்சாரம் செய்வதும், இந்தப் பிரச்சாரத்தை மக்களின் உள்ளூர் வாழ்தளத்தில் மேற்கொள்வதற்கு இலட்சக்கணக்கான மார்க்சிய ஊழியர், இளைஞர் பட்டாளத்தை உருவாக்குவதும் அவசிய அவசர கடமைகளாக முன்னிற்கின்றன.
Leave a Reply