மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சமரசமற்ற சித்தாந்த போராட்டம்


“என்ன செய்ய வேண்டும்?” : செவ்வியல் நூல் அறிமுகம்

ச.லெனின்

பெரும்பாலான உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த வலது மற்றும் இடது திரிபுவாதங்களை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் எதிர்கொண்டது. அவைகளுக்கு எதிரான கருத்துப் போராட்டமாகவும் ரஷ்யப் புரட்சிக்கு வழிகாட்டும் வகையிலான, இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் கூடிய சித்தாந்த தெளிவை வழங்கும் படைப்பாகவும் லெனினின் “என்ன செய்ய வேண்டும்?” நூல் விளங்கியது. இந்நூல் 1902 –ம் ஆண்டு வெளியானது.

ரஷ்யாவில் வெளிவந்த ரபோச்சியே தேலோ, ரபோச்சியே மிசல் போன்ற பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் மற்றும் பல தனிநபர்கள் முன்வைத்த கருத்துகள் மீது மார்க்சிய நோக்கிலான லெனினின் எதிர்வினையே இந்நூலின் உள்ளடக்கமாகும்.

ரஷ்யாவில் அக்காலத்தில் நிலவிய பொருளாதார வாதம், பொருளாதார வாதத்திற்கு வந்து சேரும் தொழிற்சங்கவாதம், தன்னெழுச்சி இயக்கங்கள், தீவிரவாதப்போக்கு போன்ற முதலாளித்துவத்திற்கு ஆதரவான கருத்துநிலைகளை மறுத்து லெனின் அளிக்கும் விளக்கங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது. “ சமூக ஜனநாயகவாதம் (ஜார் ஆட்சியின் அடக்குமுறையால் கம்யூனிஸ்டுகள் என்று வெளிப்படையாகச் செயல்பட முடியாத நிலை இருந்தது. எனவே ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகவாதிகள் என்ற பெயரில்தான் செயல்பட்டு வந்தனர்.) சமுதாயப் புரட்சிக்கான கட்சியாக இருப்பதை விட்டொழித்துச் சமுதாயச் சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக கட்சியாக மாறித் தீரவேண்டுமாம். சோஷலிசத்தை விஞ்ஞான அடிப்படையில் வைத்திடும் சாத்தியப்பாடு மறுக்கப்பட்டது. சோஷலிசத்தின் அவசியமும் அதன் தவிர்க்கமுடியாத தன்மையும் வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையிலிருந்து நிதர்சனப்படுத்தும் சாத்தியப்பாடும் மறுக்கப்பட்டது. வளர்ந்துவரும் வறுமையும் பாட்டாளி மயமாக்கும் நிகழ்வும் முதலாளித்துவ முரண்பாடுகள் கடுமையாவதும் மறுக்கப்பட்டது. ‘இறுதி லட்சியம்’ (புரட்சி) எனும் கருத்துருவமே தவறானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் கருத்து முற்றாக நிராகரிக்கப்பட்டது. கோட்பாட்டளவில் மிதவாதத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையேயான எதிர்நிலை மறுக்கப்பட்டது. வர்க்கப் போராட்டம் பற்றிய தத்துவம் மறுக்கப்பட்டது.” இது மார்க்சியத்தின் எல்லா அடிப்படை கருத்துக்களையும் முதலாளித்துவ விமர்சன கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என்றும், அவை சிறு நூல்களாகவும் புலமைமிக்க தன்நூலாகவும் பல்கலைக்கழகங்களில் நெறிப்படுத்தப்பட்டும் திட்டமிட்டும் வளர்க்கப்படுகிறது. அப்படி வளர்க்கப்பட்ட கருத்துக்கள் இதுபோன்ற சிந்தனை போக்கிற்கு வழிவகுக்கிறது என்கிறார் லெனின்.   

சோஷலிசத்திற்கு எதிரான அத்தகைய திரிபுகள் நிறைந்த கருத்துக்களை உடைத்து நொறுக்கும் வகையில் சுமார் 121 ஆண்டுகளுக்கு முன்பு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதலாளித்துவம் எல்லா காலத்திலும் மார்க்சியத்திற்கு எதிரான கருத்துருவை வளர்த்தெடுப்பதைச் செய்து வருகிறது. இன்றைய காலப்பகுதியில் மார்க்சியத்தைச் சிதைக்கும் நோக்குடன் முதலாளித்துவம் உருவாக்கி வளர்க்கும் சித்தாந்தங்களை அடையாளம்கண்டு எதிர்கொள்ள இந்நூல் ஒளி பாய்ச்சுகிறது.

 விமர்சன சுதந்திரம்

விமர்சன சுதந்திரம் என்பதிலிருந்துதான் நூல் துவங்குகிறது. மாற்றுக் கருத்துக்களும் அதன் மீதான விவாதமுமே மார்க்சியத்தை வளர்த்தெடுக்கிறது. அப்படியான விவாதங்களை மார்க்சிய இயக்கங்கள் எப்போதும் மறுத்ததில்லை. பலர் ஜனநாயகம் என்றும் முழங்குகின்றனர். யாருக்கான சுதந்திரம், எப்படியான ஜனநாயகம் என்பதை லெனின் கவனத்தோடு முன்வைக்கிறார். வர்க்க ஆதிக்கத்தை ஒழிக்காத ஜனநாயகம் எத்தகைய ஜனநாயகம்? எவ்வளவு விரிவுபடுத்தப்பட்டாலும், வர்க்க ஆதிக்கத்தை ஒழிக்காத, போராடும் தொழிலாளர்களை சுட்டுவீழ்த்துகிற முதலாளித்துவ ஜனநாயகத்துடன் உடன்படமுடியுமா? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பெரும்பகுதி மக்களுக்கான (உழைக்கும் வர்க்கத்திற்கான) ஜனநாயகம் என்பதையும், முதலாளித்துவ சுரண்டும் வர்க்கத்திற்கு எதிரான சர்வாதிகாரம் என்பதையும் லெனினின் எழுத்துக்கள் தீர்க்கமாகப் புரியவைக்கும்.

சித்தாந்த தெளிவும் உறுதிமிக்க ஸ்தாபனமும் கொண்டதாக இருக்கவேண்டிய சமூக ஜனநாயக அமைப்பை “விமர்சன சுதந்திரம்” என்பது என்னவாக இருக்கச்சொல்கிறது. “விமர்சன சுதந்திரம் என்பதன் பொருள், சமூக ஜனநாயகவாதத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு வேண்டிய சுதந்திரம். சமூக ஜனநாயக வாதத்தைச் சீர்திருத்தத்துக்காக நிற்கும் ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம். சோஷலிசத்தில் முதலாளி வர்க்க கருத்துக்களையும் முதலாளிவர்க்கப் போக்குள்ள நபர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம்”

“சுதந்திரம் என்பது ஒரு மேன்மையான சொல். எனினும் தொழில்துறைக்கு சுதந்திரம் என்கிற பெயரில் மிகவும் கொள்ளைக்காரத்தனமான போர்கள் நடத்தப்பட்டுள்ளன. உழைப்புச் சுதந்திரம் என்கிற பெயரில் உழைப்பாளி மக்கள் சூறையாடப்பட்டுள்ளனர். நவீனகாலத்தில் பயன்படுத்தப்படும் “விமர்சன சுதந்திரம்” என்கிற சொல்லும் இதே உள்ளார்ந்த பொய்யைத்தான் தன்னகத்தே கொண்டுள்ளது.”

மேற்கண்ட லெனினின் விமர்சனத்தை தற்போதைய பின்நவீனத்துவ போக்கோடு நம்மால் ஒப்பிட்டுப்பார்க்க முடியும். மார்க்சியம் என்பது ஒரு பெரும் கதையாடல் என்றும், அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கவில்லை என்றும், அனைத்தையும் கட்டுடைப்போம் என்றும் பேசும் பின்நவீனத்துவம், எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவத்தைக் கட்டுடைக்காது. மார்க்சியம் மிகக் கச்சிதமாக முதலாளித்துவத்தைக் கட்டுடைத்துவிட்டது. கட்டுடைக்கப்பட்ட முதலாளித்துவம் தன்னை தற்காத்துக்கொள்ளவே, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அனைவரும் ஒன்றிணைந்துவிடாத வகையில், அவர்களை பின்நவீனத்துவ அடையாள அரசியலின் கைக்கொண்டு பிரித்தாளுகிறது. மார்க்சியத்தை வளர்க்கிறோம் என்றும், அதையும் கட்டுடைக்கிறோம் என்றும் மார்க்சியத்திற்கும் மேலான ஒரு புதிய தத்துவம்தான் பின்நவீனத்துவம் என்றும் கூறிக்கொண்டது. இறுதியில் அத்தத்துவம் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான தத்துவமாகவே நிலைத்துப்போனது. விளிம்பு நிலை மக்களை தனித்தனி தீவுகளாக நிற்க வைத்து பொது எதிரிக்கு (முதலாளித்துவத்திற்கு) எதிராக அனைவரும் அணிசேர்வதற்கு அது அணை போட்டது. மார்க்சியத்திற்கு மேலான தத்துவம் என்பதாக அது தன்னை கூறிக்கொண்டாலும், முதலாளித்துவ நலனுக்குச் சேவகம் செய்யும் வேலையையே அது செய்தது.

தன்னியல்பான எழுச்சிகள்

“தன்னியல்பான அம்சம் என்பது கரு வடிவத்திலே இருக்கும் உணர்வைக் காட்டுவதே தவிர வேறில்லை. கலவரங்கள் வெறுமே ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பாக இருந்தன, ஆனால் முறையாக வகுக்கப்பட்ட வேலை நிறுத்தங்கள் கரு வடிவத்திலுள்ள, கரு வடிவத்தில் மட்டுமே உள்ள வர்க்கப் போராட்டத்தைக் காட்டின. தம்மளவில் இவ்வேலை நிறுத்தங்கள் வெறுமே தொழிற்சங்கப் போராட்டங்களோ, இன்னமும் சமூக ஜனநாயகப் போராட்டங்களோ இல்லை. வேலைநிறுத்தங்கள் “கலவரங்களோடு” ஒப்பிடும்போது மாபெரும் முன்னேற்றத்தைக் குறித்தபோதிலும், வெறுமே ஒரு தன்னியல்பான இயக்கமாகவே இருந்துவிட்டன” என்கிறார் லெனின்.

முதலாளிக்கும் தொழிலாளிக்குமான முரண், முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமான போராட்டமாக வளர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் புரட்சியாக எழும் என்கிறார் மார்க்ஸ். ஆனால் இவை தன்னியல்பாக, தானாக நடந்து விடுவதில்லை.

கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி, தன்னை பணி நீக்கம் செய்த மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் 1200 கணக்குகளை நீக்கிய ஊழியருக்கு கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியதாகச் செய்தியானது. கடந்த ஜனவரி மாதம் மெர்சிடாஸ் பென்ஸ் நிறுவனத்திலிருந்து தன்னை திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டதற்காக எதிர்வினையாக, விலை உயர்ந்த 50 க்கும் மேற்பட்ட கார்களை சேதப்படுத்தியதும் செய்தியானது. இப்படியான எதிர்வினைகளும. அமைப்பாகத் திரண்டு நடத்தப்படும் வேலை நிறுத்தங்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளும் சில இடைக்கால நிவாரணங்களை வழங்கக்கூடும். அந்த நிவாரணங்களோடு சமூக ஜனநாயகவாதிகள் நின்றுவிடுவதில்லை.

“பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே – அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது; முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது; அவசியமான தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவதற்கான துணிவை மட்டுமே வளர்த்துக்கொள்ள முடிகிறது.” தொழிற்சங்கவாதம் அரசியலை முற்றாக விலக்குவதில்லை. அது கொஞ்சம் அரசியல் கிளர்ச்சியும் போராட்டமும் நடத்திவந்துள்ளன. ஆனால், அதற்கும் சமூக ஜனநாயகவாத அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார் லெனின்.

வேலை நிறுத்தங்கள் என்பது சுரண்டலை ஒழிப்பதற்கான போராட்டமல்ல; அவை சுரண்டலின் அளவை குறைப்பதற்கான போராட்டம்தான் என்பதையும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சுரண்டலை ஒழிப்பதற்கான சோஷலிச உணர்வை தானாகப் பாட்டாளிகள் பெறுவர் என்று தொழிற்சங்க வாதம் முன்வைத்தது. அதன் மீதான விமர்சனத்தை முன்வைத்த லெனின், “முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை உயர்த்த உயர்த்த, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மேன்மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறது…. தத்துவம் என்ற வகையில் சோஷலிசம் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே தற்கால பொருளாதார உறவுகளில் வேர்கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும், மக்களின் துன்ப துயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித்தோன்றுவதும் உண்மைதான். ஆனால், சோஷலிசமும் வர்க்கப்போராட்டமும் அக்கம் பக்கமாக உதிக்கின்றன; அதேநேரம் ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கிறது. நவீன சோஷலிச உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே உதிக்கமுடியும்.” 

அந்தவகையில் “தொழிலாளி வர்க்கத்துக்குத் தனது நிலை பற்றிய உணர்வை, தனது பணிகள் பற்றிய உணர்வை ஊட்டுவது, உண்மையில் நிரப்புவது சமூக ஜனநயாகவாதத்தின் பணியாகும்.” அந்த உணர்வு தானாக போராட்டங்களிலிருந்து கிடைக்கப்பெறுவதில்லை என்கிறார் லெனின். அவ்வாறான பணிகளை சமூக ஜனநாயகவாதம் செய்யத் தவறினால், தன்னியல்பான இயக்கம், குறைந்தபட்ச எதிர்ப்புடைய பாதையில் போகிற இயக்கம் உள்ளிட்டவை முதலாளித்துவ சித்தாந்தத்தின் பின் சென்று சேர்ந்துவிடுகிறது. ஏனெனில் “சோஷலிஸ்ட் சித்தாந்தத்தைவிட முதலாளித்துவச் சித்தாந்தம் எவ்வளவோ பழைமையானது; அளவிடற்கரிய வகையில் பிரச்சார சாதனங்களைப் பெற்றிருக்கிறது என்பதையும் லெனின் குறிப்பிடுகிறார்.

தன்னியல்பான மக்கள் திரள் இயக்கம் மிக முக்கியமான நிகழ்வு தோற்றம் என்பது மறுக்கமுடியாத அம்சம்தான். ஆனபோதும் சமூக ஜனநாயகவாதத்தின் பாத்திரத்தை அதற்கு கீழானதாகத் தாழ்த்துவது தவறு. “அரசியல் போராட்டத்தைப் பற்றி முன்கூட்டி உருவாக்கிக் கொண்ட திட்டத்தாலோ வழிமுறையாலோ சமூக ஜனநாயக வாதம் தன் கைகளை கட்டிப்போட்டுக்கொண்டு தன் நடவடிக்கைகளை குறுக்கிக்கொள்வதில்லை. கட்சியின் வசமுள்ள சக்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும் அனைத்து போராட்ட சாதனங்களையும் அது அங்கீகரிக்கிறது”

அதேநேரம் “எல்லாச் சூழ்நிலைமைகளிலும், எல்லாக் காலங்களிலும் அரசியல் போராட்டம் நடத்தும் திறனுள்ள பலமான அமைப்பு இல்லாமல், உறுதியான கோட்பாடுகளின் ஒளியிலே விடாமுயற்சியுடன் நிறைவேற்றப்பட்டு வரக்கூடிய, போர்த் தந்திரம்,… முறைமையுள்ள செயல் திட்டம் எனும் பிரச்சனைக்கே இடமிருக்கமுடியாது” இத்தகைய திட்டவகைப்பட்ட போர்த்தந்திரமே மார்க்சியத்தின் சாராம்சமாகும் என்று லெனின் பேசுகிறார்.

தமிழகத்திலும் இந்தியாவிலும் சமீப காலங்களில் நடந்த பெருந்திரள் தன்னெழுச்சி மக்கள் இயக்கங்களை மேற்கண்ட புரிதலோடு உரசிப்பார்ப்பது நமக்கு பல்வேறு தெளிவை வழங்கும்.

சித்தாந்தம் போராட்டம்

முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோஷலிச சித்தாந்தம் என இவ்விரண்டில் ஏதேனும் ஒரு சித்தாந்தத்தையே தொழிலாளி வர்க்கம் கைக்கொள்ள வேண்டும். இதில் நடுநிலை என்று எதுவும் கிடையாது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார். “வர்க்கப் பகைமைகளால் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில் வர்க்கத்தன்மையற்ற சித்தாந்தமோ, வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்கமுடியாது. எனவே சோஷலிச சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும், முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே அமையும்.” இது இந்த நூல் அறிமுகத்தின் துவக்கத்தில் சொன்ன பின் நவீனத்துவம் போன்ற முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கும் மய்யம், நடுநிலை என்று முன்வரும் அனைவருக்கும் தற்காலத்திலும் பொருத்தமுடையதாகும்.

“மற்றெல்லா சித்தாந்தங்களையும் எதிர்த்து விட்டுக் கொடுக்காத போராட்டமே சமூக ஜனநாயக சித்தாந்தத்தை மேலான நிலையில் சாதிக்கமுடிந்தது. நீடிக்க வைத்திருக்கவும் முடியும்” “சோஷலிஸ்ட் அல்லாத சித்தாந்தங்களை வேரூன்றச்செய்யும் முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடவேண்டும்” தமிழகத்தை பொறுத்தவரை, அது திராவிட சித்தாந்தமானாலும், அதன் உள்ளடக்கத்தில் உள்ள முற்போக்கு பாரம்பரியத்தை எடுத்துக்கொண்டு சோஷலிச சித்தாந்தத்தை வளர்த்தெடுக்கவும், நிலைக்கச்செய்யவும் வேண்டும் என்பதாகக் கொள்ளவேண்டும்.

“லட்சியத்திற்குத் தகுதியுள்ள மிகப் பல நபர்களைச் சமுதாயம் உண்டாக்கித் தருகிறது. நாம்தான் அவர்கள் அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறோம். ஊழியர்கள் இல்லை, எனினும் ஊழியர்கள் திரள் திரளாக இருக்கவே செய்கிறார்கள்.” ஆண்டுதோறும் தொழிலாளி வர்க்கமும் இதர பிரிவினரும் எதேச்சாதிகார ஆட்சி முறையை எதிர்த்து நடக்கிற போராட்டத்தில் தம்மாலான உதவிகளை வழங்குவதோடு, பலர் உள்ளூற அதன் தேவையை உணர்ந்தும் வருகின்றனர். இதுவே ஊழியர்கள் திரள் திரளாக இருப்பதற்கான காரணமாகும். இவற்றைச் சமச் சீராகவும் இசைவாகவும் ஒழுங்குபடுத்தியும் கொண்டுசெல்லும் தலைமையும் அமைப்பாளர்களும் இல்லாதபோது ஊழியர்கள் இல்லாத நிலை உருவாகிறது. இதை சீராக்கும்போதே தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது, இதர ஜனநாயக இயக்கத்தின் வளர்ச்சியும் சாத்தியப்படும் என்கிறார் லெனின்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: