பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
1945 முதல் 1970களின் நடுப்பகுதிவரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஆண்டுக்கு 5% என்ற விகிதத்தில் உலக முதலாளித்துவ அமைப்பு வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டது. இதனால் குவிக்கப்பட்ட பெரும் கம்பெனிகளின் சூப்பர் லாபத்தொகைகளும், மேலைநாடுகளின் உழைப்பாளி மக்களின் ஓய்வுகாலத்துக்கான வாழ்நாள் சேமிப்புகளும், 1970களில் ஏற்பட்ட பெட்ரோலியம் கச்சா எண்ணெய்விலையின் பன்மடங்கு அதிகரிப்பில் குவிந்த பணம் மேலை நாடுகளின் பன்னாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டதும், பன்னாட்டுப் பொருளாதாரத்தில் நிதி மூலதன ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது. இப்படி குவிந்த நிதி மூலதனத்தை மேலும் லாபம் ஈட்ட, உலகெங்கும் தங்கு தடையின்றி இவற்றை முதலீடு செய்வதற்கு ஏதுவாக, பன்னாட்டுப் பொருளாதார விதிமுறைகளையும், அனைத்து நாடுகளின் விதிமுறைகளையும் மாற்றுவதை ரீகன் அமெரிக்க அதிபராகவும் தாட்ச்சர் பிரிட்டிஷ் பிரதமராகவும் இருந்த 1980களில் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் அஜெண்டாவாக கொண்டிருந்தன. வளரும் நாடுகளை கடன் வலையில் சிக்க வைத்து, “கட்டமைப்பு சீர்திருத்தங்கள்” மூலம் நிதி மூலதனங்களின் கட்டற்ற உலக சுழற்சியை, நாடுகளுக்குள் தம் விருப்பப்படி நிதி மூலதனங்கள் உள்ளேயும் வரலாம்; வெளியேயும் போகலாம் என்ற நிலைமையை அவர்கள் சாதித்து விட்டனர்.
இந்த நிதிமூலதன ஆதிக்கமும், பன்னாட்டு நிதியம், உலகவங்கி, பின்னர் 1990களில் ஏற்படுத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் மூலம் ஏகாதிபத்திய நாடுகள் உலகளவில் திணித்த புதிய தாராளமய கொள்கைகளும் நடப்பு நூற்றாண்டில் உலக முதலாளித்துவ அமைப்பை கொடிய ஆதிக்க அமைப்பாக ஆக்கியுள்ளன. சோசலிச முகாமின் பின்னடைவும் ஏகாதிபத்திய முகாமின் வலிமையை பன்மடங்கு கூட்டியுள்ளது. ஆனாலும் இன்று உலக முதலாளித்துவத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகியுள்ளது. இதுதான் முதலாளித்துவ அமைப்பின் சமகால நெருக்கடியின் மையமான இலக்கணம் ஆகும். இது எவ்வாறு நிகழ்ந்தது?
முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்
2008இல் உலக முதலாளித்துவ பொருளாதாரம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது பலருக்கும் நினைவிருக்கும். பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கத்தின் விளைவாக அந்த நெருக்கடி வெடித்தது. ஆனால் அந்த நெருக்கடி வெறும் நிதி நெருக்கடி மட்டுமல்ல; முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு சார்ந்த நெருக்கடியும் ஆகும். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு அதன் வரலாறு நெடுகிலும் மீண்டும் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வந்துள்ளது. இதற்கான மூன்று அடிப்படை காரணங்களை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார்.
முதலாவதாக, முதலாளித்துவம் திட்டமிடப்படாத, அராஜக தன்மையிலான பொருளாதாரத்தை கொண்டது. இதனால் ஒவ்வொரு துறையிலும் கிராக்கிக்கும் அளிப்புக்குமான சமன்பாடு இயல்பாக அமைந்துவிடாது. எடுத்துக்காட்டாக, ஒரு முக்கிய துறையில் கிராக்கிக்கும் அளிப்புக்கும் இடையே ஏற்படும் இடைவெளி மிகவும் அதிகமானால், அத்துறையின் லாப விகிதம் கடுமையாக பாதிக்கப்படும். இது அத்துறைக்கு மட்டுமின்றி, அத்துறையுடன் உற்பத்தியை சார்ந்து நெருங்கிய உறவு கொண்டுள்ள துறைகளையும் பாதிக்கும். இது பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளில் பாதிப்பு ஏற்படுத்தினால் அதுவே ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி, கிராக்கியை வீழ்த்தி, மந்தநிலையை ஏற்படுத்தும். முதலீடு – உபரி –மேலும் முதலீடு என்ற மூலதன சுழற்சி அறுபட்டுப் போகும்.
இரண்டாவதாக, மேற்கூறிய பொதுவான காரணம் மட்டுமின்றி முதலாளித்துவ அமைப்பில் லாபம் மட்டுமே இலக்கு என முதலாளிகள் செயல்படுவதால், சுரண்டலை அதிகப்படுத்துவதும், இயந்திரமயமாக்கலால் வேலையின்மை அதிகரித்துக்கொண்டே போவதும், முதலாளிகளுக்கு இடையிலான போட்டியில் பல முதலாளிகள் காணாமல் போவதும் அன்றாட நிகழ்வுகளாகின்றன. இதன் விளைவு முதலாளித்துவ சமூகத்தின் உற்பத்தி சக்திகள் வேகமாக வளர்வது ஒருபுறமும், பெரும் பகுதி மக்களின் நுகர்வு சக்தி ஒப்பீட்டளவில் மிக குறைந்த வேகத்தில் நிகழ்வது மறுபுறமும் என்ற முரண்பாடு தீவிரமடைந்துகொண்டே இருக்கும். இந்த முரண் மீண்டும் மீண்டும் கிராக்கி பிரச்சினை வெடிப்பதற்கும், அதன் விளைவாக விரிவடைந்த மறு உற்பத்தி சுழற்சி அறுபட்டு மந்தநிலை ஏற்படுவதற்கும் இட்டுச் செல்லும்.
மூன்றாவதாக, முதலாளித்துவ வளர்ச்சியில் லாப விகிதம் அவ்வப்பொழுது சரிவது தவிர்க்க முடியாதது. முதலாளித்துவ அமைப்பில் தொடர்ந்து நிகழும் இயந்திரமயமாக்கல் ஒரு குறிப்பிட்ட மூலதன பயன்பாட்டில் நேரடி உழைப்பின் பங்கை குறைக்கிறது. இயந்திரங்களின் பங்கை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு உபரி மதிப்பை உருவாக்கும் நேரடி உழைப்பின் பங்கு குறையும் பொழுது, உற்பத்தி திறன் உயர்வின் காரணமாக உபரி மதிப்பு விகிதம் கூடினாலும், தொழிலில் போடப்பட்டுள்ள மொத்த மூலதனத்தின் (உழைப்பு சக்தி வடிவிலான மூலதனம்+உழைப்பு சக்தி அல்லாத, இறந்த உழைப்பு வடிவிலான மூலதனம்) விகிதமாக உபரி மதிப்பு குறையும். காரணம், நேரடி உழைப்பு மட்டுமே உபரி மதிப்பை உருவாக்குகிறது. இயந்திரம் (“செத்த உழைப்பு”) உபரி மதிப்பை உருவாக்காது. லாபவிகிதம் என்பது மொத்த மூலதனத்திற்கு கிடைக்கும் உபரியை மொத்த மூலதனத்தின் மதிப்பால் வகுத்தால் கிடைக்கும் விகிதம்தான். மூலதனத்தின் கட்டமைப்பில் செத்த உழைப்பின் விகிதப்பங்கு அதிகரிக்கும்பொழுது, நேரடி உழைப்பின் விகிதப்பங்கு குறையும்பொழுது, அவ்வப்போது லாபவிகிதம் சரியும் போக்கு வெளிப்படும். இயந்திரமயமாக்கலில் வரும் புதிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் உற்பத்தி திறனை உயர்த்தும். ஆனால் நேரடி உழைப்பின் பங்கு குறைவதால் ஏற்படுகின்ற உபரி மதிப்பு இழப்பை இதன்மூலம் ஈடு கட்டுவது என்பது தொடர்ந்து நிகழும் என்ற உத்தரவாதம் கிடையாது. முதலாளித்துவம் ஒரு திட்டமிடப்படாத அமைப்பு. சில நேரங்களில் புதிய தொழில்நுட்பங்கள் அதிவேகமாக உருவாகி, தற்காலிகமாக சராசரி லாபவிகிதத்தை உயர்த்துவது கூட நிகழலாம். ஆனால், இதுவே நிரந்தரப் போக்காக இருக்க முடியாது. நீள் பார்வையில், அவ்வப்போது சுரண்டல் விகிதம் அதிகரித்தாலும் லாப விகிதம் சரிந்திடும். இந்தப் போக்காலும் முதலாளித்துவ அமைப்பில் அவ்வப்போது மூலதன மறுசுழற்சி அறுபட்டு நெருக்கடி வெடிக்கும்.
சமகால பொருளாதார நெருக்கடி
முதலாளித்துவத்தின் நெடிய வரலாற்றில் கிராக்கி பிரச்சினையாலும், லாபவிகிதத்தின் சரியும் போக்கு என்ற விதியாலும், பொருளாதார வீழ்ச்சியும் மந்த நிலையும் நெருக்கடியும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து வந்துள்ளன. இந்த வரலாற்றில் 2008ஆம் ஆண்டில் வெடித்த நெருக்கடியும் அடங்கும். இதற்கு சில புதிய அம்சங்கள் இருந்தன. ஒன்று, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டற்ற முதலாளித்துவ உலகமய பாய்ச்சலாலும், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களின் அசாத்திய வளர்ச்சியாலும், குறிப்பாக இணையதள புரட்சியாலும் உலகெங்கும் நாடுகளின் நிதிச்சந்தைகள் இணைக்கப்பட்டு விட்டதாலும், 2008நெருக்கடி ஒரு நாட்டின் அல்லது பகுதியின் நெருக்கடியாக இல்லாமல், உலக அளவிலான நெருக்கடியாக மிக வேகமாக மாறியது.
இரண்டு, நெருக்கடியில் இருந்து மீண்டு அடுத்த சுற்று மூலதன விரிவாக்கத்திற்கு செல்வதை நிலவும் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கம் மிகவும் கடினமாக்கியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்வந்த பல மந்தநிலை/ சரிவுகளை அந்தந்த நாட்டின் அரசின் தலையீட்டின் மூலம், அரசுகள் கிராக்கியை உயர்த்த கூடுதல் செலவுகள் மேற்கொள்ளுவதன் மூலம் தற்காலிகமாக (அதாவது, அடுத்த சரிவு வரும் வரை) சமாளிப்பது வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்கு 1980களுக்கு முன்பு ஓரளவு சாத்தியமாக இருந்தது. மேலை நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சரிந்து மந்த நிலை தலை தூக்கினால், அரசுகள் கூடுதல் செலவு செய்வதால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்தாலும் பரவாயில்லை; மீட்சி நிகழ்ந்து நிலைமை சரியாகிவிடும் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 2008 நெருக்கடிக்குப் பின் வந்துள்ள கடந்த 12 ஆண்டுகளில் முன்னணி முதலாளித்துவ நாடுகள் பலவும் முழு மீட்சி அடையவில்லை. உற்பத்தியில் சிறிது மீட்சி ஏற்பட்டாலும் வேலையின்மையில் மீட்சி பெரும்பாலான மேலை நாடுகளில் ஏற்படவில்லை. இதனை நாம் எப்படி புரிந்துகொள்வது?
நெருக்கடியும் பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கமும்
நிதி மூலதன ஆதிக்கம் முதலாளித்துவநாட்டு அரசுகளின் கிராக்கி மேலாண்மை முயற்சிகளை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. நிதி மூலதனம் பொருளாதாரத்தில் அரசுகள் பங்கெடுப்பதை, “தலையிடுவதை” விரும்புவதில்லை. அனைத்து நடவடிக்கைகளும் முதலாளி வர்க்கத்தின் லாபத்திற்கான வாய்ப்புகளாக ஆக்கப்படவேண்டும் என்பதே நிதி மூலதனத்தின் அஜெண்டா. நிதிமூலதன ஆதரவாளர்களான தாராளமயவாதிகள் அரசு தனது வரவுக்கு மீறி செலவழிப்பதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், தனது வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை அரசு கடன் வாங்கி எதிர்கொள்ள முயற்சிப்பதால், வட்டி விகிதம் உயருமென்றும், இருக்கும் நிதிவளங்களில் ஒருபகுதியை அரசு இவ்வாறு கைப்பற்றுவது முதலீட்டுக்கான வளங்களை தனியார் பெற இயலாமல் ஆக்கி விடும் என்றும், இதனால் நாட்டின் வளர்ச்சி சரியும் என்றும் வாதிடுகின்றனர். மேலும், பணவீக்கம் அதிகரிக்கும்; நாணய மதிப்பு சரியும்; இதனால் அயல் நாட்டு நிதி மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறும் என்றும், அவர்கள் வாதிடுகின்றனர். நிதி மூலதன ஆதிக்கம் முதலாளித்துவ அரசுகள் தனியார்மய, தாராளமய கொள்கைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்துகின்றது. இக்கொள்கைகளின் ஒரு மையமான அம்சம் “சிக்கன நடவடிக்கை”. இதன்படி, அரசுகள் தங்கள் வரவு-செலவு இடைவெளியை செலவைக் குறைத்து மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதாகும். செல்வந்தர்கள் மீதும், பெரும் கம்பெனிகள் மீதும் வருமான வரியைக் குறைக்க வேண்டும்; அரசின் வரி வருமானத்தில் பெரும் பங்கு சரக்கு மற்றும் சேவைகள் மீதான வரிகள் மூலமாகவே பெறப்பட வேண்டும்; அனைத்து இயற்கை வளங்களும் பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவற்றை லாப நோக்க அடிப்படையில் பயன்படுத்த சூழல்சார் நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளும் அமைய வேண்டும் ஆகியவை உள்ளிட்ட கொள்கை சட்டகத்திற்குள் அரசு செயல்படவேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால், பொருளாதார மந்தநிலை வெடிக்கும் பொழுதும் சிக்கனமய கொள்கைகளை அரசுகள் பின்பற்றுவதால் கிராக்கியை உயர்த்தி பொருளாதார மீட்சியை சாதிப்பது முடியாமல் போகிறது. அரசு கூடுதல் செலவுகளை மேற்கொள்ளாமல் பணப்புழக்கத்தை அதிகரித்து வட்டிவிகிதங்களை கட்டுப்படுத்தி மீட்சியை சாதிக்க இயலாது என்பதே இதுவரை பெற்றுள்ள அனுபவம்.
1990களில் நிதி மூலதனம் மேலை நாடுகளில் வலுவாக வளர்ந்து உலகம் முழுவதும் கட்டற்ற வகையில் நாடு விட்டு நாடு பாய்ந்து, சுழன்று செயல்பட்டு வரும் நிலைமை உருவானது. பெரும்பாலான வளரும் முதலாளித்துவ நாடுகள் பன்னாட்டு வர்த்தகத்திற்கு கதவுகளை திறந்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால் இறக்குமதி இந்நாடுகளின் ஏற்றுமதியை விட வேகமாக அதிகரித்தது. எனவே இந்நாடுகளுக்கு அந்நியச்செலாவணி பற்றாக்குறை என்பது நிரந்தர பிரச்சினையானது. இதனால் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அரசின் வரவு செலவு கொள்கைகள் பிரதானமாக அந்நிய நிதி மூலதனத்தை தக்க வைத்துக்கொள்வதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தன. அரசின் செலவுகளை உயர்த்த இயலாத நிலையில், பங்கு சந்தை உள்ளிட்ட நிதி சந்தைகளிலும் சரக்கு சந்தைகளிலும் ஊக வணிகத்தை ஊக்குவித்து, அதன் மூலம் இவற்றில் பங்கேற்று பெரும் லாபம் ஈட்டுவோரை மையமாக வைத்து, அவர்களின் நுகர்வு சக்தியை சார்ந்த தற்காலிக மீட்சியை சாதிக்க அரசுகள் முயன்றன. 1990களின் பிற்பகுதியில் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்வந்த சில வாய்ப்புகளை பயன்படுத்தி அமெரிக்க பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இது குறைந்த காலமே நீடித்தது. பின்னர் ரியல் எஸ்டேட், வீட்டு வசதி போன்ற துறைகளில் ஏராளமான கடன்களை தகுதி கூட பார்க்காமல் போட்டி போட்டுக்கொண்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்கி இதனால் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடியை நாம் அறிவோம். கிராக்கியை சரிய விடக்கூடாது. அதே சமயம் கிராக்கியை தக்கவைக்கும்/அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் அரசு செலவுகளை மேற்கொள்ளுவதன் மூலம் நிகழக்கூடாது. மாறாக, நிதி சந்தைகளிலும் சரக்கு சந்தைகளிலும் ரியல் எஸ்டேட் சந்தைகளிலும் நிதி மூலதனம் தங்கு தடையின்றி ஊகவணிகம் செய்வதன் மூலம் நிகழ வேண்டும். நிதி மூலதனத்தின் கட்டற்ற சுழற்சியை கட்டுப்படுத்தக்கூடாது என்ற அம்சங்களைக் கொண்ட பொருளாதார கொள்கை நிலைப்பாடுதான் 2008 நெருக்கடி வெடிக்க முக்கிய காரணங்களாக அமைந்தது.
இத்தகைய நிதிமூலதன ஆதிக்கத்தின் இன்னொரு வர்க்க அம்சமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிச அமைப்புகள் சிதைக்கப்பட்ட பின்புலத்தில், ஒரு துருவ உலகம் உருவாகியிருந்த நிலையில், மேலை நாட்டு தொழிலாளி வர்க்கத்தின் மீதும், வளரும் நாடுகளின் மீதும், வலுவான தாக்குதலை ஏகாதிபத்தியம் பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு சாதகமாக தொடுக்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் ஒருபுறம் ஏகாதிபத்தியம் உலக வளங்களின் மீதும், தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராகவும், தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளித்தாலும், மறுபுறம் கிராக்கி அதிகரிப்பிற்கு முட்டுக்கட்டைகளாக அமைந்தன என்பதும் உண்மை.
முதலாளித்துவத்தில் நிரந்தரமாக உள்ள கிராக்கி பிரச்சினை அவ்வப்பொழுது பின்னுக்குப் போகலாம். உதாரணமாக, முதலாளிகளுக்கிடையேயான போட்டியிலும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாகவும், முதலாளிகள் லாபத்தை எதிர்நோக்கி கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் காலங்களில், உற்பத்தி சக்திகளின் அதிவேக உயர்வு உபரி மதிப்பை கணிசமாக உயர்த்தி லாப விகிதங்களை தற்காலிகமாக அதிகரிக்கும் காலங்களில் கிராக்கி பிரச்சினை பின்னுக்குப் போகும். பணிகளில் உள்ளவர்களில் ஒருபகுதியினரின் வருமானம் கூட உயரலாம். ஆனால் இதுவே நிரந்தர நிலைமையாக இருக்க முடியாது. போட்டியிலும் வர்க்கப் போராட்டத்தின் பகுதியாகவும் உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கும். மீண்டும் மீண்டும் வேலையில்லா பட்டாளத்தை பெரிதாக்கிக்கொண்டே செல்லும். ஏகாதிபத்திய ஆதிக்கம் காரணமாக உலகெங்கும் உழைக்கும் மக்களின் – தொழிலாளிகள், விவசாயிகள் – வருமானம் சரிவதும் அல்லது மிக மந்தமாக ஆங்காங்கு ஓரிரு இடங்களில் சிறிதளவு உயர்வதும் என்றே இருக்கும். இது தவிர, நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், முதலாளித்துவ விதியான லாப விகிதம் சரியும் போக்கும் அவ்வப்பொழுது முன்னுக்கு வரும். ஆக, எப்படியிருந்தாலும், அவ்வப்பொழுது முதலாளித்துவ அமைப்பில் மறு உற்பத்தி சவாலுக்கு உள்ளாகும். இதுதான் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக உலக முதலாளித்துவ அமைப்பின் அனுபவம்.
தாராளமய கொள்கைகளின் திவால் தன்மை
2008 நெருக்கடிக்குப்பின் வந்துள்ள கடந்த 12 ஆண்டுகளில் முன்னணி முதலாளித்துவ நாடுகள் பலவும் முழு மீட்சி அடையவில்லை என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். தொடரும் மந்தநிலை கோவிட் பெரும் தொற்று கடந்த ஆண்டில் பரவத் துவங்கிய பிறகு மேலும் தீவிரமாகியுள்ளது. உலகவங்கி ஜனவரி 2021 இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் 4.3 % சரிந்ததாக குறிப்பிடுகிறது. இத்தகைய ஆழமான பின்னடைவு இரண்டு உலகப்போர்களின் பொழுதும் 1930களில் வெடித்த பெரும் வீழ்ச்சி காலத்திலும் தவிர, கடந்த 150 ஆண்டுகளில் நிகழவில்லை என்றும் அது கூறுகிறது. அமெரிக்க பொருளாதாரம் 3.6 சதவிகிதமும் ஐரோப்பிய ஒன்றிய மண்டலம் 7%க்கு அதிகமாகவும் 2020 இல் சரிந்துள்ளன. 2021இல் நான்கு சதவிகித வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் அது உறுதியில்லை. தொற்றுப் பரவலையும் முன்னணி நாடுகளின் செயல்பாடுகளையும் பொறுத்து வளர்ச்சி அமையும். சரிவுக்கும் வாய்ப்பு உண்டு. இந்திய பொருளாதாரம் நமது அரசின் நம்பகத்தன்மையற்ற விவரப்படியே 2020-21இல் 7.7% சரிந்தது. சோசலிச நாடுகளான மக்கள் சீனம் மற்றும் வியத்னாம் முறையே 2.6.%, 2.9% என்ற வேகத்தில் வளர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மிகப்பெரிய நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளார். 2020இல் ட்ரம்ப் ஆட்சி 900 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி)மதிப்புக்கு குறுகிய கால நிவாரண திட்டத்தை அமலாக்கியது. பிடன் புதிதாக 1900 பில்லியன் டாலர் செலவு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நிவாரணத்தொகை அமெரிக்க நாட்டின் உற்பத்தி மதிப்பில் 13% ஆகும். தாராளமய கொள்கைகளை நிதிமூலதனம் மூர்க்கத்தனமாக பரிந்துரைத்து/திணித்துவரும் சூழலில் இது ஆகப்பெரிய செய்தியாக பார்க்கப்படவேண்டும். தாராளமயம் நிர்ப்பந்திக்கும் அரசு செலவில் சிக்கனம் என்ற கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது. பிடன் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பொருளாதார மீட்சி மற்றும் உழைக்கும் மக்களுக்கு ரொக்கம் உள்ளிட்ட நிவாரணம், வேலை வாய்ப்புகள் என்பதாகும். நிதிமூலதனத்தின் எதிர்ப்பையும் மீறி இன்று இது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
2008 நெருக்கடியின் பொழுது அரசின் செலவுகளை உயர்த்துவதற்கு நிதிமூலதனம் வலுவான எதிர்ப்பை காட்டியது. நெருக்கடியில் இருந்து பொருளாதார மீட்சியை சாதிக்கும் பொறுப்பு முழுக்க அமெரிக்காவின் மத்திய வங்கியிடம் தரப்பட்டது. அரசாங்கம் மக்களுக்கு தேவையான பொது முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் கிராக்கியை உயர்த்தி மீட்சியை சாதிப்பதற்குப் பதிலாக அமெரிக்காவின் மத்திய வங்கி பணப்புழக்கத்தை அதிகரித்தும், வட்டிவிகிதங்களைக் குறைத்தும் நிதி மூலதன சூதாட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டியது. இதுவே மீட்சிக்கான வழியாக பார்க்கப்பட்டது. திவாலாக இருந்த பெரும் தனியார் நிதி நிறுவங்களை அமெரிக்க அரசு காப்பாற்றியது (உதாரணம் AIG என்ற அமெரிக்க இன்சூரன்ஸ் கம்பனி). இதனால் அரசுக்கு ஏற்பட்ட வரவு-செலவு நெருக்கடியை காரணம் காட்டி மக்களின் சமூக பாதுகாப்பு செலவுகளில் அரசு சிக்கனம் கடைப்பிடித்தது.. உழைக்கும் மக்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டனர். மீட்சி குறுகிய வரம்பிற்குள் நின்றுவிட்டது. ஆனால் 2021இல் தாராளமயவாதிகளின் எதிர்ப்பையும் மீறி அரசின் செலவுகள் உயர்த்தப்பட்டு, கிராக்கியை மேம்படுத்தவும் மீட்சியை உறுதிப்படுத்தவும் அரசே களம் இறங்குவது என்பது புதிய அம்சம். இன்று உலக முதலாளித்துவ அமைப்பின் தலைமையில் உள்ள அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருப்பது 70% மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக ஒரு பிரபல கள ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் தாராளமய தத்துவமும் நடைமுறையும் இன்று உலகெங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் தோல்வி கண்டுவரும் சமகால முதலாளித்துவம், வேலையின்மை, வறுமை ஆகிய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாத நிலையில் உள்ளது. உழைப்போருக்கும் பெரும் செல்வங்களை தம்வசம் குவித்துள்ள ஏகபோக உடைமையாளர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து இந்த அமைப்பில் அதிகரித்து வருகின்றன. லாபவெறி அடிப்படையில் இயங்கும் கட்டற்ற சமகால தாராளமய முதலாளித்துவம் இயற்கையையும் மானுட இனத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இவையும் சமகால முதலாளித்துவ நெருக்கடியின் முக்கிய அம்சங்களாகும்.
இக்கட்டுரை சமகால முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு சில முக்கிய அம்சங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறது. இப்பிரச்சினையின் இதர பல அம்சங்கள் குறித்து எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து பேசுவோம்.
Leave a Reply