செவ்வியல் நூல்அறிமுகம்: “கூலி, விலை, லாபம்”
ச.லெனின்
1865ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் மார்க்ஸ் ஆற்றிய உரையே “கூலி, விலை, லாபம்” எனும் இந்நூலாகும்.
தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்தி வழங்குவதன் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை உயர்த்துவர். பெறப்பட்ட கூலி உயர்வு இந்த விலையேற்றத்தின் மூலம் தொழிலாளர்கள் கையைவிட்டுப் போய்விடும் என்று பொதுக்குழு உறுப்பினரான ஜான் வெஸ்டன் தெரிவித்தார். இது இயல்பாகவே கூலி உயர்வுக்காகப் போராடுவது வீண் என்றும், அதன் மூலம் பெறப்படும் ஊதிய உயர்வால் தொழிலாளிக்கு எவ்வித பயனும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. இக்கருத்தை மார்க்ஸ் தனது ஆணித்தரமான வாதங்களின் மூலம் அந்தப் பொதுக்குழுவில் சிதறடித்தார்.
“முதலாளியின் விருப்பம் நிச்சயமாக, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். நாம் செய்ய வேண்டியது என்னவெனில், முதலாளியின் விருப்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதல்ல; அவரின் அதிகாரம் பற்றியும் அந்த அதிகாரத்தின் வரம்புகள் பற்றியும், அந்த வரம்புகளின் தன்மை பற்றியும் கேள்வி எழுப்புவதே ஆகும்.”
தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் ஒரு முதலாளிக்கு 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தொழிலாளர்களின் போராட்டத்தின் மூலம் அவர் 20 ரூபாயைக் கூடுதலாகக் கூலியாகக் கொடுக்கவேண்டி வருமெனில், முதலாளிக்கு அவரது லாபத்தின் ஒரு சிறு பகுதி குறைகிறதே தவிர, அவருக்கு அது நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை என்பதே எதார்த்தம். நஷ்டம் ஏற்படாத போது விலை உயர்வுக்கான அவசியமே எழவில்லை என்றார் மார்க்ஸ்.
ஒரு கிண்ணத்தில் குறிப்பிட்ட அளவு சூப் இருக்கிறதெனில் அந்த சூப்பை வேறு ஒரு கிண்ணத்தில் ஊற்றுவதால் அதன் அளவு கூடி விடாது என்று வெஸ்டன் கூறினார். உண்மைதான், சூப்பின் அளவு அப்படியேதான் உள்ளது. ஆனால், சூப்பை எடுத்து அருந்துவதற்கு முதலாளியிடம் உள்ள கரண்டியின் அளவை விடத் தொழிலாளிக்கு வழங்கப்படும் கரண்டியின் அளவு சிறியதாக உள்ளது. இங்கு உணவுக்கு பற்றாக்குறை நிலவவில்லை; அதை எடுத்து உண்பதற்கான வாய்ப்பு தொழிலாளர்களுக்கு சுருக்கப்படுகிறது என்பதுதான் மேலும் திட்டவட்டமான உண்மை என்றார் மார்க்ஸ்.
“கூலி வீதத்தில் ஏற்படும் பொதுவான உயர்வு, சந்தை விலைகளில் தற்காலிக குழப்பத்துக்குப் பிறகு, சரக்குகளின் விலைகளில் எவ்வித நிரந்தர மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், லாப வீதத்தின் பொதுவான வீழ்ச்சியில்தான் முடியும்.”
உழைப்பு சக்தி
1848இல் வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையில் “உழைப்பின் விலையானது, அதன் உற்பத்தி செலவுக்குச் சமம் ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1856இல் எழுதப்பட்ட இந்நூலில்தான் முதன் முதலாக ‘உழைப்பின் விலை‘ என்பதற்குப் பதிலாக ‘உழைப்புச் சக்தியின் விலை’ என்று கூறப்படுகிறது.
முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலவுடைமை சமூகத்திலும் ஆண்டான் அடிமை சமூகத்திலும் மனிதன் தனது உழைப்பைத் தான் விரும்பிய இடத்தில் செலுத்தி அதற்கான ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அடிமை சமூகத்தில் தனது உடைமையாளர் கூறுவதை எவ்வித கேள்வியுமின்றி செய்து முடிப்பவராகவும், நிலவுடைமை சமூகத்தில் குறிப்பிட்ட நேரம் இலவச உழைப்பை பண்ணையாரின் நிலத்தில் செலுத்துவதும் கட்டாயமாக இருந்தது.
முதலாளித்துவ சமூகத்தில் தொழிலாளி சுதந்திர தொழிலாளியாக இருக்கிறார். அவர் இந்த நிறுவனத்தில்தான் வேலை செய்யவேண்டும் என்கிற எந்த கட்டாயமும் இல்லை. ஆனால், தனது வாழ்வாதாரத்திற்காக எங்காவது ஒரு இடத்தில் தனது உழைப்பை விற்றாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தனது உழைப்பை எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கான உரிமை தொழிலாளிக்கு உள்ளதே தவிர, அதை விற்றே ஆகவேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம் இங்கு நிலவும். இப்படியான நிலையில் தொழிலாளி தனது உழைப்பு சக்தியை விற்கிறாரே தவிர தனது உழைப்பை விற்கவில்லை.
உழைப்பை விற்பதற்கும் உழைப்பு சக்தியை விற்பதற்கும் ஒரு சிறு வேறுபாடு உள்ளது. ஒரு தொழிலாளி மயங்கி விழுந்து மடியும்வரை தொடர்ந்த உழைப்பது உழைப்பை விற்றல் என்று பொருள்படும். ஆனால் தொழிலாளி அவ்வாறு பணியாற்றுவதில்லை. குறிப்பிட்ட கூலிக்குக் குறிப்பிட்ட நேரம் (ஒரு வேலை நாள்) உழைப்பது என்கிற ஒப்பந்தப்படியே அவர் உழைக்கிறார். எனவே அவர் தனது உழைக்கும் திறனை, அதாவது அவரது உழைப்பு சக்தியைக் குறிப்பிட்ட நேரத்திற்கு விற்கிறார்.
அப்படி உழைத்து மடிந்தால் குறிப்பிட்ட வேலையை நன்கு அறிந்த ஒரு தொழிலாளியை முதலாளி இழப்பார். அடுத்தடுத்த நாள் அத்தொழிலாளியின் ஆற்றல் மிகுந்த உழைப்பை முதலாளி இழக்க நேரிடும். முதலாளிக்கு, தனது வேலை தடைப்படாமல் தொடர்ந்து நடக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆகவேதான் தொழிலாளியின் ஆற்றல் மிகுந்த உழைப்பைப் பெறுவதற்கான வழிவகைகளை உருவாக்கிக் கொள்கிறார். தொடர்ந்து வெகு நேரம் உழைக்கும்போது சோர்வால் வேலை செய்பவரின் ஆற்றல் குறையும். இதுவும் உற்பத்தியைப் பாதிக்கும்.
குறிப்பிட்ட வேலை நேரத்தில் தான் செலுத்தும் உழைப்பின் விளைவாக ஒரு தொழிலாளி தனது சக்தியை இழக்கிறார். தான் இழந்த சக்தியை மறு உருவாக்கம் செய்துகொண்டு மீண்டும் தொழிற்சாலைக்கு வந்து தனது உழைப்பை ஆற்றலோடு செலுத்தவேண்டும் என்ற நோக்குடன்தான் தொழிலாளிக்குக் கூலியும் ஓய்வும் வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் இருத்தலையும் மறு உற்பத்தியையும் (குழந்தைகள் / வருங்கால தொழிலாளர்கள்) உள்ளடக்கியே ஊதியம் வழங்கப்படுகிறது. அது தனக்கும் தனது குடும்பத்திற்கும் தேவைப்படும் குறிப்பிட்ட பண்டங்கள் மற்றும் சேவைகளை பராமரித்து கொள்வதற்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்படுகிறது.
“உழைப்பு சக்தியின் மதிப்பானது, அந்த உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்யவும், மேம்படுத்தவும், பராமரிக்கவும், நீடித்து நிலைக்கச் செய்யவும் தேவைப்படுகிற அத்தியாவசிய பொருள்களின் மதிப்புகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.” இப்படித் தீர்மானிக்கப்படும் அளவைவிடக் கூலி குறையும்போது தவிர்க்க முடியாதவகையில் கூலி உயர்வுக்கான கோரிக்கையும் போராட்டமும் எழுகிறது.
உபரி உழைப்பு
ஒரு தொழிலாளி எட்டு மணிநேரம் உழைக்கிறார் எனில் அதற்கு இணையான ஊதியத்தை அவர் பெறுவதில்லை. அவருக்கான (குடும்பத்திற்கான) பராமரிப்பு செலவு மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. “ஒரு தொழிலாளி தன் உழைப்புச் சக்தியின் மதிப்பை மறு உற்பத்தி செய்வதற்கு அல்லது தன் கூலியை ஈடு செய்வதற்கும் மட்டும் எவ்வளவு நேரம் உழைத்தால் போதுமோ அந்த வரம்புக்கு மேலாகவும் கூடுதலாகவும் வேலைநாள் ” நீட்டிக்கப்படும் நேரமே உபரி உழைப்பாகும். அதுவே உபரி மதிப்பை உருவாக்குகிறது.
ஒரு தொழிலாளி தான் வேலை செய்த வேலை நேரத்தில் பத்து செல்ஃபோன்களை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஐந்து செல்ஃபோன்களை உற்பத்தி செய்கிறபோது அத்தொழிலாளிக்கு வழங்கப்பட்ட கூலிக்கு ஈடாகி விடுகிறதெனில் மீதம் ஐந்து செல்ஃபோன்களை தயாரிக்க அவர் செலுத்தும் உழைப்பு நேரம், உபரி உழைப்பு நேரமாகும். உபரி உழைப்பு நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து செல்ஃபோன்கள் உபரி உற்பத்தியாகும். அத்தொழிலாளி உற்பத்தி செய்த மொத்த உற்பத்தியோடு இதைச் சராசரியாகப் பிரித்தால் ஒவ்வொரு செல்ஃபோனிலும் 50 சதம் உபரி உழைப்பில் உருவான உபரி உற்பத்தியாகும். இந்த உபரி உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெறுவதே லாபமாகும்.
“ஒரு சரக்கின் (உழைப்பைச் செலுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள்) மதிப்பு அதில் செயல்படுத்தப்பட்டுள்ள உழைப்பின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.” அந்த உழைப்பிற்கு ஏற்ற வகையில் கூலி வழங்காமல், அத்தொழிலாளியின் உழைப்பை சூறையாடியே முதலாளித்துவம் தனது மூலதனத்தை (லாபத்தை) திரட்டுகிறது.
கூலி அமைப்புமுறை ஒழிக
“நவீனத் தொழில் துறையின் வளர்ச்சி, நிலைமையை மேலும் தொழிலாளிக்கு எதிராகவும் முதலாளிக்குச் சாதகமாகவும் திருப்பிடவே செய்யும். அதன் விளைவாக, முதலாளித்துவ உற்பத்தியின் பொதுவான போக்கு, கூலியின் சராசரி மட்டத்தை உயர்த்துவதாக இல்லை என்பதோடு தாழ்த்துவதாகவே உள்ளது. அதாவது, உழைப்பின் மதிப்பை, ஏறத்தாழ அதன் குறைந்தபட்ச வரம்புக்குத் தள்ளுவதாகவே உள்ளது.”
எனவே கூலி உயர்வுக்கான போராட்டத்தை மட்டும் நடத்துவதால் என்ன விளைந்துவிடப் போகிறது என்கிற கேள்வியை எழுப்பும் மார்க்ஸ் அதை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்று வழிகாட்டினார். கூலி உயர்வுக்கான போராட்டங்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டுவது சரியே. ஆனால், தொழிலாளர்களின் போராட்டம் தங்களின் உழைப்பின் மதிப்பைத் தக்கவைத்துக்கொண்டு தங்களின் உழைப்பை விலைக்காக விற்கும் நிலையைத் தொடர்வதாக இருந்துவிட முடியாது. நியாயமான கூலிக்கான போராட்டம் என்பது ஒட்டுமொத்த கூலி அமைப்பு முறையை ஒழிப்பதற்கான இலக்கை உள்ளடக்கியது.
கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளுக்கு எதிரான போராட்டம்தானே அன்றி, விளைவுகளுக்குக் காரணமான முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டமல்ல. “கீழ்நோக்கி செல்லும் இயக்கத்தைத் தடுத்து நிறுத்துகிறார்களே தவிர, அதன் திசையை மாற்றவில்லை. நோய்க்கு நிவாரணம் அளிக்கிறார்களே தவிர நோயைக் குணப்படுத்திவிடவில்லை”
“நியாயமான நாள் வேலைக்கு நியாயமான நாள் கூலி எனும் பழமையான குறிக்கோளுக்கு பதிலாக, ‘கூலி அமைப்புமுறை ஒழிக’ எனும் புரட்சிகர முழக்கத்தைத் தொழிலாளி வர்க்கத்தினர் தங்கள் பதாகையில் பொறித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டத்தைக் கடந்த வர்க்கப் போராட்டத்தை நோக்கிப் பயணிக்க அவர் அறைகூவினார். முதலாளித்துவ கூலி உழைப்பு முறைக்கு முடிவு கட்டுவது என்பது, உழைப்பை விற்பதற்கான விடுதலை என்பதை கடந்து, உழைப்பை விற்க வேண்டும் என்கிற கட்டாயத்திலிருந்தே விடுதலை எனும் நிலையை எட்டுவதாகும்.