அபினவ் சூர்யா
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக இந்தியா இன்று எந்த நாடும் கண்டிராத பெரும் அவல நிலையை சந்தித்து வருகிறது. இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் நடுவண் அரசு தான் என அப்பட்டமாக தெரிகிறது. இரண்டாம் அலை தாக்கும் எனத் தெரிந்திருந்தும் கடந்த ஓராண்டாக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி தயார் நிலையை அடைய எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மூச்சு திணறி சாலையிலேயே மடியும் சோக நிலை உண்டாகியுள்ளது. “நாட்டை சுடுகாடாக மாற்றிவிட்டார்”என்று ஒப்பனையாக கூறி தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மோடி, அமித் ஷா தலைமையிலான பட்டாளம் இதை உண்மையாக்கிவிட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் தொற்றை கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டாமல், விமர்சிப்பவர்களை சிறையிலடைத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, “தடுப்பு மருந்து வந்துவிட்டது”என இந்த தொற்று காலத்திற்கான விடியலை நோக்கி நாம் நம்பிக்கையோடு இருக்கையில், திட்டமிடப்படாத தடுப்பூசி அளிக்கும் “திட்டம்” ஒன்றை அமலாக்கியதன் காரணமாக, இன்று அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில் கூட இவ்வாறு தட்டுப்பாடுகள் ஏற்பட்டால் அரசு தலையிட்டு மக்களுக்கு பயன்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது பொது புத்தி. ஆனால் அதற்கு நேர் எதிராக, “தடுப்பு மருந்து நிறுவனங்கள் மருந்தின் விலையை தாமே நிர்ணயித்துக்கொண்டு தனியார் சந்தையில் விற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்து, நம் அச்சத்தை லாபமாகச் சுரண்டுவதற்கான கதவுகளை திறந்துவிட்டுள்ளது மோடி அரசு.
இவ்வாறு இன்று இந்தியாவின் சுவாசக் குழாயை நெறித்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு கால் மோடி அரசினுடையது என்றால், மற்றொரு கால் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுடையது. ஆம்! இது ஏகாதிபத்திய நாடுகள் இன்று நேற்று செய்வதில்லை. நவீன தாரளமயமாக்கலின் ஆட்சியில் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அறிவுசார் காப்புரிமச் சட்டங்களைக் கொண்டு, பெரும் மருந்து தயாரிப்பு நிறுவங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி, மூன்றாம் உலக வளரும் நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் வேலை பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த அவலம் தொடர்கிறது.
அறிவுசார் காப்புரிமம் – என்ன?
அறிவுசார் காப்புரிமம் என்பது கண்டுபிடிப்பாளர்களுக்கு அவர்களின் புதிய கண்டுபிடிப்பை அங்கீகரித்து, பாதுகாப்பு அளித்து வழங்கப்படும் உரிமம். கண்டுபிடிப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் இருந்தால், கண்டுபிடிப்புகளைக் கொண்டு கண்டுபிடிப்பாளர்கள் செல்வம் ஈட்ட முடியாமல் இருந்தால், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் இருக்காது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சமகாலத்தின் பிரம்மாண்ட, உலகமயமான முதலாளித்துவ சூழலில், அறிவுசார் காப்புரிமங்கள் பெரும் பன்னாட்டு நிறுவங்களின் உழைப்புச் சுரண்டலுக்கான கருவியாகவே உள்ளது. இது போன்ற பெரும் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தில் தான் பணி புரிவதால், கண்டுபிடிப்புகளின் உரிமம் தமக்கு தான் என ஒப்பந்தமிட்டோ, அல்லது வெளியே செயல்படும் கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து உரிமத்தை தட்டிப் பறித்தோ, தனதாக்கிக் கொள்கின்றனர். பின்னர், முதலாளித்துவத்திற்கு சாதகமான அரசியல்-சட்டக் கட்டமைப்பை பயன்படுத்தி, போட்டியாளர்களை மண்ணுக்கு தள்ளி, ஏகபோக சூழலை நிலைநாட்டி, கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதற்கான பிரபலமான எடுத்துக்காட்டு ஐ ஃபோன் (iPhone). ஐ ஃபோன் கைப்பேசியின் உற்பத்தி செலவு அதன் விற்பனை விலையில் நான்கில் ஒரு பங்கு தான். ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான லாபம் அறிவுசார் காப்புரிமத்தைக் கொண்டு ஈட்டப்படுவதே. ஐ ஃபோனின் சிறு சிறு பயன்பாட்டு அம்சங்களுக்கு கூட காப்புரிமத்தைக் கையில் வைத்துக் கொண்டு, போட்டியாளர்கள் எதை உற்பத்தி செய்தாலும் வழக்கு போட்டு அதை தடுத்து நிறுத்தி, ஐ ஃபோனின் அதிக விலையை நீட்டித்து வருகிறது. “மிக்கி மவுஸ்” கதாப்பாத்திரத்தை உருவாக்கிய “வால்ட் டிஸ்னி”நிறுவனமும் இப்படி வளர்ந்ததே. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் காப்புரிமத்தை பாதுகாக்கவே 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்க அரசு பிரத்யேக சட்டங்களை இயற்றியது. நேரடியாக கூற முடியாது என்றாலும், இது போன்ற காப்புரிமங்கள் கொண்டு லாபம் ஈட்டுவது, ‘நிலக்கிழார்கள் ஏதும் விளைவிக்காமல் நிலத்தின் மீது உரிமை உள்ளதாலேயே அதிக குத்தகை வசூலிப்பது’ போன்றது என்ற ஒப்பீடும் நிலவுகிறது.
இதே நிலைதான் மருத்துவ துறையிலும் நீடிக்கின்றது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு காப்புரிமம் பெறும் பெரும் நிறுவனங்கள், அந்த மருந்துகளை அதிக விலையில் விற்று, வியாதிகளில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.
இந்தியாவைப் பொறுத்த வரையில், சுதந்திரம் பெற்ற சமயத்தில் காலனிய ஆட்சி கால அறிவுசார் காப்புரிமை சட்டங்களே தொடர்ந்தன. தெளிவாகவே இந்த சட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டன. இந்த காப்புரிமை சட்டங்களை பயன்படுத்தி, இந்திய நிறுவனங்களிடமிருந்தான போட்டியை முறியடித்து, ஏகபோகத்தை நிலை நிறுத்தி, பன்னாட்டு நிறுவனங்கள் அதிக விலைக்கு மருந்துகளை விற்றன. மக்கள் அறிவியல் இயக்கங்கள் மற்றும் உழைக்கும் மக்கள் ஒருங்கிணைப்புகளின் அழுத்தத்தின் காரணமாக, 1970இல் புதிய “காப்புரிமைச் சட்டம்”இயற்றப்பட்டது. இது ஏகபோகத்தை ஓரளவு முறியடிக்க வழி வகுத்தது. இதில் ஒரு முக்கிய அம்சம், “செயல்முறை காப்புரிமம்” மட்டுமே வழங்குவது என்பது. அதாவது ஒரு பன்னாட்டு நிறுவனம் Y (ஒரு அமிலம்) + Z (மற்றொரு அமிலம்) சேர்த்து X என்ற மருந்தை உருவாக்கினால், ‘X’என்ற மருந்திற்கு காப்புரிமை அளிக்கப்படாது. Y+Z என்ற செயல்முறைக்கு மட்டுமே காப்புரிமை. இதன் காரணமாக, ஒரு இந்திய நிறுவனம் அதே X மருந்தை உருவாக்க P+Q என்ற செயல்முறையை கண்டுபிடித்தால், அதை வைத்து மலிவு விலையில் மருந்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். இதன் விளைவாக, உயிர் காக்கும் பல மருந்துகளில், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்முறையில் சிறு மாற்றத்தை உருவாக்கி, இந்திய நிறுவனங்களால் அதே மருந்துகளை மலிவு விலையில் உருவாக்க முடிந்தது. இப்படி பன்னாட்டு ஏகபோகத்திற்கு எதிராக மக்கள் நலன் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்ததால் தான் இந்திய மருந்து கண்டுபிடிப்பு/உற்பத்தி துறை உலகப் புகழ்பெற்ற துறையாக வளர்ந்தது.
ஆனால் 1980களில் உலக வர்த்தக மையம் (WTO) “தாராள வர்த்தகம்” தொடர்பான ஒப்பந்தங்களை திணிக்கத் துவங்கியது. இதன் தொடர்பாக “வர்த்தகம் தொடர்பான அறிவுசார் காப்புரிமம்” (TRIPs) என்ற ஒப்பந்தத்தை முன் வைத்தது. இதன் விதிமுறைகளுக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்படாவிட்டால் வர்த்தகத் தடைகள் விதிக்கப்படும் என மிரட்டப்பட்டது. ஊகித்தவாறே, விதிமுறைகள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமானவையே. நவீன தாராளமய பாதையை தழுவிய இந்தியா, TRIPsஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அன்றிலிருந்து துவங்கி, முன்பிருந்த “செயல்முறை காப்புரிமம்” கட்டமைப்பு மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டு வருகிறது.
தடுப்பு மருந்துகளும், காப்புரிமங்களும்
அறிவுசார் காப்புரிமங்கள் என்பது பெரும் மருந்து நிறுவனங்களுக்கான லாபம் ஈட்டும் கருவி என அப்பட்டமாக தெரிகிறது. தடுப்பு மருந்து தயாரிப்பில் மேலும் சில “முதலாளித்துவ” சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எப்பொழுதுமே ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்யும் பொழுது, பல ஆண்டுகள் நீடிக்கும் நோய்களில் மட்டுமே அதிகம் செலவிடுவார்கள். தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் தானே அதில் தொடர்ந்து லாபம் உள்ளது? ஆனால் தடுப்பூசிகள் அப்படி இல்லை. ஒரு முறை எடுத்துக் கொண்டால் வேலை முடிந்தது. ஆகையால் தான் நீரிழிவு நோய், இதய நோய் போன்ற “நீண்ட கால” நோய்களின் ஆய்வில் பணத்தை அள்ளி வீச, தொற்று நோய் மருந்து ஆய்வில் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்வதில்லை. அமெரிக்காவில் 1970இல் 20 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தது; இன்று வெறும் நான்காக குறைந்துவிட்டது.
இதற்கு முதலாளித்துவ அரசுகள் கண்டுபிடித்துள்ள அதிபுத்திசாலித்தனமான தீர்வு, தனியார் நிறுவனங்கள் மேல் நன்கொடைகளை அள்ளித் தெளிப்பது! இது போன்ற தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வு பல நேரங்களில் அரசு செலவில் தான் நடக்கின்றன. இப்படி பல நூறு கோடி டாலர்கள் மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மருந்தை உருவாக்கும் தனியார் நிறுவனங்கள், காப்புரிமத்தை மட்டும் தனதாக்கிக் கொள்கின்றன. ஆனால் மக்கள் கேள்வி எழுப்புவதை தவிர்ப்பதற்காக இந்த காப்புரிமை ஒப்பந்தங்களில் ஆய்விற்கான செலவு என்ன, அதில் மக்கள் பணம் எவ்வளவு, அரசுடன் எப்படிப்பட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்ற எந்த விவரத்தையும் அளிப்பதில்லை. மக்கள் வரிப்பணத்தில் உருவான மருந்து, மீண்டும் மக்களிடமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் “கொடை வள்ளல்”களாக இருந்தால், நாம் சற்றே குறைவாக சுரண்டப்படுவோம். ஆனால் தனியாரிடம் கையேந்தி தான் நிற்க வேண்டும்.
2014-18 காலத்தில் உலகளவில் ஆபத்தான தொற்று நோய்கள் பற்றிய ஆய்வுகளுக்கான செலவுகளில் 77% ஐ அரசுகள் மேற்கொண்டது. வெறும் 18% மட்டுமே தனியார் முதலீடு. ஏன், கோவிட்19 தொற்றுக்கு முன்னால் “கொரோனா வைரஸ்”நோய்கள் (SARS, MERS போன்ற நோய்கள்) தொடர்பாக 2016-18 காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 93% செலவுகள் மக்கள் நிதியிலிருந்துதான் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தின் விளைவு தான் இன்று நம்மிடம் உள்ள கோவிட்19 தடுப்பு மருந்து.
கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பலவற்றிலும் கூட மக்கள் நிதியே நிரம்பி உள்ளன. அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள “ஃபைசர்”, “மாடெர்னா”தடுப்பு மருந்துகள் அனைத்திலும் அரசின் செலவு அதிக அளவில் உள்ளது. “மாடெர்னா” தடுப்பு மருந்து ஆய்விற்கு அமெரிக்க மக்கள் பணம் 100 கோடி டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அந்த மருந்தின் மூலக்கூறு அமெரிக்க அரசு ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் காப்புரிமம் தனியார் உற்பத்தியாளர் கையில்.
இதே நிலை தான் இந்தியாவின் “கோவேக்சின்” தடுப்பு மருந்திற்கும். “பாரத் பயோடெக்” தனியார் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஒரு பகுதி ஈடுபட்டு இருந்தாலும், கோவேக்சினின் மூலக்கூறான செயலிழக்கப்பட்ட வைரஸ் (Inactivated Virus) பூனாவில் உள்ள மத்திய வைராலஜி நிறுவனம் (NIV) என்ற அரசு ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது. ஆய்விற்கு அரசு மேற்கொண்ட செலவு எவ்வளவு, காப்புரிமை அரசிடம் உள்ளதா? இல்லை, “பாரத் பயோடெக்” தனியார் நிறுவனத்திடம் உள்ளதா என்ற விவரங்களை அரசு அளிக்கவில்லை. ஆனால் இதில் மக்கள் பணம் உள்ளது என்பது மட்டும் உறுதி.
இதே போல், “கோவிஷீல்ட்”தடுப்பு மருந்தின் மூலக்கூறு “ஆக்ஸ்ஃபோர்ட்” பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்விற்கான 97% நிதி மக்கள் நிதி. இந்த மருந்திற்கான காப்புரிமத்தை முதலில் இலவசமாக வழங்குவதாக கூறிய பல்கலைக்கழகம், பின்னர் பில் கேட்ஸ் வலியுறுத்தியதால் “ஆஸ்ட்ரா செனகா”என்ற தனியார் நிறுவனத்திடம் உரிமம் வழங்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது (பில் கேட்ஸ் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மை தெரியவில்லை. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் உடல்நல பொதுச் சேவை கட்டமைப்பை வலுவிழக்கச் செய்யும் பணியையே “கேட்ஸ் அறக்கட்டளை” செய்து வருகிறது. ஏகாதிபத்திய அடியாளாக பில் கேட்ஸ் செயல்பட்டு வருகிறார்). தனியார் கையில் உள்ளதால், இன்று “கோவிஷீல்ட்”தடுப்பு மருந்தின் அதிக விலைக்கு எதிராக பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் (உரிமம் கையில் உள்ள “ஆஸ்ட்ரா செனகா”நிறுவனம், பின்னர் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து விற்க “சீரம்” நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது).
அறிவுசார் காப்புரிமம் குறித்து பேசும் பொழுது, “மருந்து வேலை செய்யுமா என்று தெரியாது. ஆபத்தை சந்திக்க துணிகிறோம்” என்கின்றன தனியார் நிறுவனங்கள். ஆனால் உண்மையில் ஆபத்தை எதிர்கொள்வது மக்கள் தானே? இது அனைத்தும் மக்கள் பணம்! ஆனால் இறுதியில் லாபம் தனியாருக்கு. ஏனென்றால் இந்த உரிமத்தை வழங்காவிட்டால், தனியார் நிறுவனங்கள் மருந்தை உற்பத்தி செய்ய மறுப்பார்கள்!
காப்புரிமம் ரத்து வேண்டுகோள்
இவ்வாறு தடுப்பு மருந்துகள் பெரும்பாலும் மக்கள் பணத்தில் உருவானது என்பதால், இதன் காப்புரிமம் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற குரல் வலுவாக உள்ளது. அக்டோபர் 2020இல் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து உலக வர்த்தக மையத்தில் “அறிவுசார் காப்புரிமம் (TRIPS) தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தன.
இப்படி நிறுத்தி வைத்தால், தடுப்பு மருந்து உற்பத்தி செய்யும் செயல்முறையை ரகசியமாக வைத்திருக்காமல், நாடுகள் ஒன்றோடொன்று வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியும் (பின்னோக்கி சென்று கண்டறிதல் (Reverse Engineering) செய்யலாம். ஆனால் 2-3 ஆண்டுகள் ஆகும். பெருந்தொற்று காலத்தில் இதற்கு நேரமில்லை). மேலும் “உரிமம்” குறித்த கவலையின்றி, எந்த நாட்டிலும், எந்த உற்பத்தியாளர் வேண்டுமானாலும் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யலாம் (“பிராண்ட்”பற்றி கவலையில்லாமல் பொது மருந்து (Generic Medicine) உருவாக்குவது போல). இதனால் உற்பத்தி பன்மடங்கு பெருகுவது மட்டுமல்லாமல், சொற்ப விலைக்கும் விற்க முடியும். இதனால் ஒன்றரை ஆண்டுகளில் மொத்த உலகிற்கும் தடுப்பு மருந்து வழங்க முடியும் என கணிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கைக்கு சீனா, கியூபா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் (பெரும்பாலும் வளரும் உலக நாடுகள்) ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் இதை கடுமையாக எதிர்ப்பது யார்? அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா. ஆம்! முன்னாள் காலனிய ஆதிக்க, ஏகாதிபத்திய நாடுகள். தனியார் லாபவெறி கொள்ளைக்கு ஏதுவான காப்புரிமச் சட்டங்களை இறுக்கமாக பிடித்து வைத்துள்ளது இந்த ஏகாதிபத்திய அரசுகள்.
அடிபணியும் மோடி அரசு
இந்த கோரிக்கையை இந்தியா முன்வைத்தது என்பதால் மோடி அரசை போற்ற முடியாது. மக்கள் அறிவியல் இயக்கங்களின் அழுத்தம் காரணமாகவே இது முன்வைக்கப்பட்டது. ஆனால் முன்வைத்துவிட்டு ஏதும் செய்யாமல் இருக்கிறது மோடி அரசு.
அமெரிக்கா-இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா நாடுகள் கொண்ட “குவாட்” (Quad) கூட்டமைப்பின் சென்ற கூட்டத்தில் தடுப்பு மருந்து உற்பத்தி பற்றி பேசப்பட்டது. இங்கே காப்புரிமை சட்ட ரத்து குறித்து பேசப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் இது குறித்து வாயடைத்து நின்று கொண்டு, இந்த நாடுகள் “நெருங்கி வருவது”பற்றி மட்டும் மோடி பேசியிருக்கிறார். காப்புரிமை சட்ட ரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதே கூட்டமைப்பில் உள்ள இதர நாடுகள் தான்! பின் எப்படி அவர்களுடன் நட்பு பேண முடியும்?
இன்று பல லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சீனா மற்றும் ரஷ்யா தடுப்பு மருந்துகள் அனுப்புகின்றன. இந்த தடுப்பு மருந்து “போட்டி”யில் சீனா, ரஷ்யாவை முடக்குவதே அமெரிக்காவின் நோக்கம். இது உலக மக்கள் நலனுக்கு எதிரானது. இந்த திட்டத்திற்கு அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறது மோடி அரசு. “குவாட்” கூட்டமைப்பில் இந்தியா சேர்ந்து, தொடர்வதை எதிர்த்து இடதுசாரிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
மேலும் “கோவேக்சின்”மருந்தையே எடுத்துக் கொள்வோம். இதன் காப்புரிமம் யாரிடம் உள்ளது என்று ஏன் மோடி அரசு கூற மறுக்கிறது? மக்கள் நிதியில் உருவான மருந்தின் காப்புரிமம் அரசிடம் தானே இருக்க வேண்டும்? ஏன் “பாரத் பயோடெக்”என்ற தனியார் நிறுவனம் மட்டும் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து, அதை ரூ.1,200 என கொள்ளை லாபத்திற்கு விற்கிறது? நியாயமாக அரசே காப்புரிமத்தை கையகப்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தயாரிப்பு செய்து, உற்பத்தியை பெருக்கி, தட்டுப்பாட்டை நீக்கி, மலிவு விலைக்கு கொள்முதல் செய்து, இலவசமாக மக்களுக்கு அளிக்க வேண்டும் தானே? உலகத் தரம் வாய்ந்த செங்கல்பட்டு “எச்.எல்.எல்”பொதுத்துறை தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம் ஏன் பூட்டப்பட்டு கிடக்கிறது? அப்படியென்றால் மேற்கத்திய நாடுகள் போலவே இங்கும் மோடி அரசு தனியார் கூட்டுக் களவாணிகளுக்கு ஆதரவாக காப்புரிமச் சட்டங்களை நிலைநாட்டுகிறது என்று தானே அர்த்தம்?
எதிர் நோக்கும் ஆபத்து
தடுப்பு மருந்துகள் உருவான காலம் முதலே, பெரும்பாலான உற்பத்தியை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் அபகரித்துக் கொண்டன. உலக உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துகள் கையளவு நாடுகளிடம் சென்று, அவர்களின் தேவைக்கும் அதிகமாக பதுக்கி வைத்துள்ளனர் (மொத்த ஆப்பிரிக்க கண்டத்தை விட அமெரிக்காவிற்கு மட்டும் 14 மடங்கு அதிக தடுப்பு மருந்துகள் சென்றுள்ளன). மேலும் தன் பலத்தைக் கொண்டு, தனியார் நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு பேரம் பேசியதால், இந்த நிறுவனங்கள் வளரும் நாடுகளிடம் அதிக விலையில் விற்கின்றன (“ஆஸ்ட்ரா செனகா” மருந்தின் சோதனைகள் தென் ஆப்பிரிக்காவில் தான் நடந்தன. ஆனால் ஐரோப்பாவை விட தென் ஆப்பிரிக்கா இரு மடங்கு விலை கொடுக்கிறது). இவ்வாறு வளரும் நாடுகளில் தட்டுப்பாடு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தடுப்பு மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களையும் தன் தேவைக்கும் மீறி பதுக்கி வைத்துள்ளன ஏகாதிபத்திய நாடுகள். இவை அனைத்திற்கும் மேலாக, காப்புரிமச் சட்டங்களை தளர்த்த ஒப்புக்கொள்ளாமல், உலகின் பெரும்பாலான உற்பத்தி சக்தியை முடக்கி வைத்துள்ளது இந்நாட்டு அரசுகள்.
கோவிட்-19 பெருந்தொற்றை விரைவில் முடக்குவதற்கு ஒரே வழி அனைவருக்கும் தடுப்பு மருந்து அளிப்பது தான். தாமதம் ஆக ஆக, வைரஸ் பரிணமித்துக் கொண்டே சென்று, மேலும் சக்தி வாய்ந்ததாக மாறும். இதனால் பரவும் வேகம் அதிகரிப்பதோடு, மேலும் புதிய மருந்துகளில் செலவிட நேரிடும். இவை எதைப்பற்றியும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு கவலை இல்லை. எய்ட்ஸ் நோய் மருந்துகளின் காப்புரிமம் மூலம் வளரும் நாடுகளுக்கு விலையை அதிகரித்து, நோயை பரவ விட்டது போலவே, இன்று கொரோனாவிலும் லாப ரத்தம் உறியவே ஏகாதிபத்திய உலக அமைப்பு செயல்படுகிறது. உற்பத்தியை அதிகரிக்க அனுமதித்தால் 2022க்குள் அனைவருக்கும் தடுப்பு மருந்து அளித்து விடலாம். ஆனால் இன்றைய நிலையில் 2025 வரை ஆகலாம். இதனால் மூன்றாம் உலக நாடுகளில் தடுக்கக் கூடிய இறப்புகள் 25 லட்சத்திற்கும் மேல் ஏற்படும் என கணிக்கப்படுகிறது.
1) கோவிட்-19 தடுப்பு மருந்துகள் தொடர்பான அனைத்து காப்புரிமை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் ; 2) பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சனையை லாப நோக்கிலான தனியார் ஏகபோக நிறுவனங்கள் கையில் கொடுக்க முடியாது ; 3) தடுப்பு மருந்து தொடர்பான அனைத்து கட்டமைப்புகளையும் அரசாங்கங்கள் கையகப்படுத்தி, தடுப்பு மருந்து உற்பத்தி, விநியோகம், திட்ட அமலாக்கம் அனைத்துமே பொதுத்துறை கட்டமைப்பைக் கொண்டு மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் ; 4) பொதுச் சுகாதார கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் – இந்த கோரிக்கையை முன்வைத்து சிபிஐ(எம்) உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் கையெழுத்திட்ட அறிக்கை அண்மையில் வெளியானது. இது போன்ற கோரிக்கைகளை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் மற்றும் உலக சுகாதார மைய இயக்குனர் கூட ஆதரித்து வருகின்றனர். ஆனால் மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் ஏகாதிபத்திய நாடுகள், பெருந்தொற்றை பயன்படுத்தி வளரும் நாடுகளை மேலும் சூறையாடவே முனைகின்றன. இந்திய மக்கள் நலனுக்கு எதிரானது என்று தெரிந்தும், முதுகெலும்பற்ற மோடி அரசு அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளை அள்ளித் தழுவி வருகிறது.
Leave a Reply