மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தேர்தல்களும், மார்க்சியவாதிகளும் …


பிரகாஷ் காரத்

(சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல்களை ஒட்டி, மார்க்சிஸ்ட் இதழில் ஆசிரியர் குழு முன்வைத்த கேள்விகளுக்கு, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பதில்கள்)

  • இன்றைய காலகட்டத்தில் தேர்தல்களில் பணபலம் முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது.  இந்நிலையில் தேர்தல்களில் தங்களது இருப்பை காட்டுவது என்பது இடதுசாரிகளுக்கு மிகுந்த சிரமமான ஒன்றாக ஆகிவிடுகிறது.  இந்நிலையை எப்படிக் கையாள்வது? தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு பணம் கொடுப்பது என்ற நடைமுறைக்கு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் பழகிவிட்டனர்.  இதன் காரணமாக பணம் கொடுக்காமல் அவர்களை தேர்தல் வேலைகளில் நடைமுறையில் ஈடுபடுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையை எவ்வாறு கையாள்வது?

முதலாளித்துவ சமூக அமைப்பில் தேர்தல்களில் எப்போதும் பணம் பெரும் பங்கை ஆற்றிடும்.  எனவேதான், மக்களின் அரசியல் புரிதலை உயர்த்துவது அவசியமாகிறது.  தேர்தல்களில் பணத்தை பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன என்பதை நாம் வற்புறுத்த வேண்டும்.  சில வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.  முழுமையாக இல்லை என்றாலும் கூட அவை ஓரளவிற்கு பலனளிக்கின்றன.  பூர்ஷ்வா கட்சிகளின், குறிப்பாக ஆளும் கட்சிகளின் பணபலத்தை எதிர்கொள்வது என்பது இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை மிகக் கடினமான காரியமாகும்.  வலுவான அரசியல் பிரச்சாரத்தை மக்களிடையே நடத்துவதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிந்திட வேண்டும்.  இத்தகைய பிரச்சாரங்களுக்கு நிதியாதாரம் தேவையாகும்.  கம்யூனிஸ்ட் கட்சியானது தனது நிதியாதாரத்தை மக்களிடமிருந்தே திரட்டிட வேண்டும்.  இவ்வாறு திரட்டிய நிதியைக் கொண்டே நம்மால் பிரச்சாரத்தை நடத்த இயலும்.  இதைத் தவிர வேறு வழி ஒன்றும் இல்லை.  பூர்ஷ்வா கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் பிரச்சாரங்களுக்கு பணம் கொடுத்து மக்களை/ஊழியர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  இப்படி கம்யூனிஸ்ட் கட்சியால் செய்யமுடியாது,  அது அப்படி செய்யவும் செய்யாது. மக்களிடையே அரசியல் வேலைகளில் ஈடுபடுவது என்ற கருத்துக்கு எதிரானது என்பதால் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய செயல்களில் ஈடுபடாது.  எனவே, தேர்தல் நேரங்களில் மக்களிடையே செயல்படுவதை நிறைவேற்ற வேண்டிய அரசியல் கடமையாக எண்ணி அரசியல் அர்ப்பணிப்போடும், உணர்வுமட்டத்தோடும் செயல்படும் தொண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும்.  பிரதானமான அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மால் முடிகிறபோதே இது சாத்தியமாகும்.  அப்போதுதான் கட்சிகளோ அல்லது தொண்டர்களோ பணம் கொடுத்தால்தான் வேலை செய்வது என்றில்லாமல் தாமாக முன் வந்து வேலை செய்யும் கலாச்சாரம் உருவாகும். 

தமிழகத்தில் இன்றைக்கு இக்கேள்வி முன்னுக்கு வந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், இன்றைக்கு நாட்டில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவிற்கு பணபலம் இங்கு பயன்படுத்தப்படுகிறது.  ஆந்திராவிலும், வேறு சில இடங்களிலும் மட்டும்தான் இவ்வாறு பணபலம் பயன்படுத்தப்படுகிறது.  வாக்காளர்களுக்கே பணம் பட்டுவாடா செய்யப்படுவது என்பது ஊழலின் சில்லறை வடிவமாகும். சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின்போது சில பிரதான கட்சிகள் தங்களது பொதுக்கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மக்கள் கலந்து கொள்ள எவ்வாறு பணத்தை மக்களுக்கு விநியோகித்தது என்று பார்த்தோம்.  எனவே, இத்தகைய பிரச்சனையை இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் சந்தித்து வருகின்றன.  தன்னலம் பாராது மக்களிடையே செயல்படுவதோடு, அரசியல் பிரச்சனைகளை எழுப்பி, அவற்றின்பால் மக்களை ஈர்த்து அல்லது இத்தகைய அரசியல் பிரச்சனைகளில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் தேர்தல்களின் போது இலக்கை உயர்த்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் என நான் கருதுகிறேன். 

மேலும், பணபலத்தைக் கொண்டு வரம்பிற்கு உட்பட்ட செல்வாக்கினையே  மக்கள் மீது செலுத்த இயலும்.  ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக பல கோடிக்கணக்கான ரூபாய்களை சட்டமன்ற தேர்தல்களில் செலவு செய்தது.  இருந்தபோதும், அவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

  • வழக்கமான பிரச்சார வடிவங்கள் மூலம் தொகுதியில் வாக்காளர்களை சென்றடைவது சிரமமாகிறது.  நவீன வடிவங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏராளமான வளங்கள் தேவைப்படுகின்றன.  இத்தகைய மாற்றங்களுக்கு இடதுசாரிகள் ஈடுகொடுக்க வேண்டியுள்ளது.  இதனை எவ்வாறு செயல்படுத்துவது?

ஆம். இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய தள, சமூக ஊடக யுகத்தில் வழக்கமான வடிவங்களிலான பிரச்சாரங்கள் போதுமானவையல்ல.  எனவே, நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  மேலும், சமூக ஊடகங்களை பயனுள்ள வகையில் உபயோகித்திட வேண்டும்.  தொழில்நுட்பத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் பெரிய அளவிற்கு பயன்படுத்திட வேண்டும்.  இவற்றை ஜனநாயக ரீதியாக, கூட்டாக செயல்படுத்தினோமேயானால்,  அதிக அளவில் பணத்தை கொடுத்து தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருந்து உங்களது பிரச்சாரத்தை நடத்திட வேண்டியிருக்காது.  இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடிய, மக்களிடையே பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதுமையான உள்ளடக்கத்தை உருவாக்கிடும் குழுக்களை நாம் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்சாரங்களுக்கு ஊழல் பணத்தையும், வாக்காளர்களுக்கு பணத்தை அளிக்க வேண்டியும் இருக்காது.

  • தேர்தல் ஆணையம் அதிகாரம் இல்லாது இருக்கிறது.  அவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகளுமே கூட, பிரச்சாரம் செய்யும் இடங்கள், பிரச்சார வடிவங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையே ஏற்படுத்துகின்றன.  அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை அவர்கள் அளிப்பதில்லை.  இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவது, மட்டுப்படுத்துவது, கட்டுப்படுத்துவது ஆகியனவற்றை செய்வதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்பதை பரந்துபட்ட கோணத்தில் பார்க்க வேண்டும்.  தேர்தல் செலவுகளுக்கான நிதியை அரசு அளிப்பது என்பது குறித்து நாம் பேசி வருகிறோம்.  இன்றைய சூழலில் தேர்தல்களில் பணம் கோலோச்சி வருவதை தடுப்பதில் தேர்தல் ஆணையத்தால் அதிகளவில் செயல்பட முடியாது. ஆனால், தேர்தலுக்கான நிதியை அரசு அளித்தால் அதன் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத் தேவையான வளங்களையும்ம், ஆதரவையும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளித்திட இயலும்.  இவ்வாறு செய்வதன் மூலம் தேர்தல்களில் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதை பெருமளவில் தடுத்திடலாம்.  அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், தன்னாட்சியையும் பாதுகாத்திடவும், அரசியலமைப்புச் சட்டம் அதற்கு அளித்துள்ள கடமைகளை நிறைவேற்றிடவும் சில விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவது மட்டும் போதாது.  மாறாக, தேர்தல் ஆணையத்தின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் செய்யப்பட வேண்டும்.  உதாரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையரும், இதர இரண்டு தேர்தல் ஆணையர்களும் அதிகாரத்தில் இருக்கும் அரசாலேயே நியமிக்கப்படுகிறார்கள்.  இதனாலேயே அவர்கள் அரசுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறார்கள்.  தேர்தல் ஆணையரை நியமிப்பதில் கூடுதல் சுயேச்சையான வழிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.  சீர்திருத்தம் என்பது தேர்தல் ஆணையத்திலிருந்தே துவங்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

  • வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிடுவது என்பது ஒரு நல்ல நோக்கமே.  ஆனால், அதனை பத்திரிகைகள்/ஊடகங்களில் வெளியிடுவதற்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டுமென்பது அடித்தட்டு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளுக்கு மிகப் பெருஞ்சுமையாக ஆகிவிடுகிறதே.  இதற்கு நம் தரப்பிலிருந்து எத்தகைய ஆலோசனைனை முன்வைத்திடலாம்?

இது ஒன்றும் மிக முக்கியமான விஷயமல்ல.  வேட்பாளரின் குற்றப் பின்னணி எனும் சொற்றொடரே தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒன்றாகும்.  குற்ற வழக்குகள் எனக் கருதப்படக் கூடிய வழக்குகள் எந்தவொரு அரசியல் செயல்பாட்டாளர் அல்லது தலைவரின் மீதும் இருக்கும்.  நீங்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்து, பிரிவு 144ஐ மீறியிருந்தால், உங்களுக்கு எதிராக குற்ற வழக்கு இருக்கும்.  பல்வேறு வடிவங்களிலான போராட்ட இயக்கங்களை நடத்தும் போது நீங்கள் சட்டத்தை மீறியிருந்தால் உங்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கும்.  எனவே, இது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும் சொற்றொடராகும்.  குற்ற வழக்குகள் என்றால் எத்தகைய குற்றங்கள் என்று குறிப்பிடப்பட வேண்டும்.  பாலியல் வல்லுறவு, கொலை அல்லது இதர மிகக் கொடூரமான குற்றங்கள், பெருமளவில் பணமோசடியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் ஏதேனும் செய்துள்ளாரா?  எனவே, உச்சநீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேட்பாளரின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும் என்று மட்டும் சொல்வது அர்த்தமற்றது என நான் கருதுகிறேன். ஆனால் அப்படி வெளியிடும்போது, அதற்கான செலவுகளை வேட்பாளரின் மீது திணிக்கப்படக் கூடாது என்பது சரியானதே.  இதற்கான செலவுகளை அரசு ஏற்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட வேண்டும்.

  • மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி சந்தேகங்கள் உள்ளன.  விவிபேட் இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.  நாடாளுமன்ற தேர்தல்களின்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்து சர்ச்சை ஏற்பட்டது.  அது இன்னமும் தீர்க்கப்படாமலும் உள்ளது.  தேர்தல்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் ஏன் முன்வைக்கக் கூடாது?

என்னைப் பொறுத்தவரை மின்னணு வாக்கு இயந்திரம் என்பது முந்தைய வாக்குச் சீட்டு முறையிலிருந்து ஒரு படி முன்னேற்றம் ஆகும்.  அது ஒரு சிறந்த முறையாக இருக்கக் கூடும்.  அதே நேரத்தில், மின்னணு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சந்தேகங்கள் உள்ளன.  ஒரு சில ஆண்டு காலமாக, மின்னணு வாக்கு இயந்திரங்களிலும், அவற்றின் செயல்பாடுகளிலும் முன்னேற்றங்களை நாம் கோரி வருகிறோம்.  இத்தகைய விவாதங்களின் அடிப்படையிலேயே வாக்காளர் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார் என்பதை தாளில் பதிவு செய்யும் விவிபேட் நடைமுறை ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது.  ஆனால் தற்போதும் வாக்கு இயந்திரத்தின் தொழில்நுட்ப நடைமுறையின் வரிசைக்கிரமம், அதாவது முதலில் வாக்காளர் இயந்திரத்தில் பொத்தானை அழுத்துவது, பின்னர் விவிபேட் வழியாக தாளில் அதை பதிவு செய்வது, அதன் பின்னர் இறுதியாக அவரது வாக்கு திரையில் பதிவது என்று உள்ளது.  நம்மைப் பொறுத்தவரை இந்த வரிசைக்கிரம் மாற்றப்பட வேண்டும்.   அதாவது இந்த வரிசைக்கிரமத்தில் மத்தியில் உள்ள விவிபேட் பதிவு இறுதியில் இருந்திட வேண்டும்.  இதன் மூலம் வாக்காளர் பொத்தானை அழுத்தியவுடன், அவரது வாக்கு திரையில் பதிவு செய்யப்பட்ட வின்னர், விவிபேட் இயந்திரத்தில் தோன்றி அதன் பின்னர் அவரது வாக்கு பதிவு செய்யப்பட்ட தாள் முத்திரையிடப்பட்ட வாக்குப் பெட்டிக்குள் செல்கிறது.  மின்னணு வாக்குப் பதிவின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது இரண்டாவது அம்சமாகும்.  இது குறித்தே பெரும்பாலான அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின.  ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 10 சதவீத வாக்கு சாவடிகளை மாதிரியாக எடுத்துக் கொண்டுஅவற்றின் 10 சதவீத வாக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டது.  பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும் இயந்திரத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டால் அந்த குறிப்பிட்ட வாக்கு சாவடியில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  ஆக, மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  அவ்வாறின்றி மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறைக்கே திரும்புவது என்பது தீர்வாகாது.  இப்பிரச்சனைக்கு தீர்வென்பது மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது என்ற தொழில்நுட்ப நடைமுறையை குறைபாடுகள் இல்லாததாக செய்வதிலேயே உள்ளது.  துரதிர்ஷ்டவசமாக, மின்னணு வாக்கு இயந்திர செயல்பாடுகளின் வரிசைக்கிரமத்தில் மாற்றத்தைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளவில்லை.  இத்தகைய நடவடிக்கைகளுக்கான கோரிக்கை அதிகளவில் முன்னுக்கு வரும் என்றே நான் நினைக்கிறேன்.  மின்னணு வாக்கு இயந்திர நடைமுறையில் முன்னேற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

  • ஒவ்வொரு முறை தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நாம் பேசுகிறோம்.  ஆனால், இது மக்களிடையே இன்னமும் வேகம் பெறவில்லை.  இப்பிரச்சனையில் குறிப்பிட்ட வடிவங்களில், அறைகூவல்களில் நாம் ஏன் இயக்கங்களை மேற்கொண்டு மக்களின் கருத்தைத் திரட்டிடக் கூடாது?

விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பது நல்ல கருத்தாகும்.  இது தொடர்பாக உலக அரங்கில் ஏதேனும் சிறந்த முன்னுதாரணங்களைக் குறிப்பிட இயலுமா?

நம்மைப் பொறுத்தவரை தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது அடிப்படையான ஒன்றாகும்.  தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பின்னர் மட்டுமே நாம் இப்பிரச்சனையை எழுப்புவதில்லை.  இதன் அடிப்படை அம்சமாக இருப்பது தேர்தல் நடைமுறையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பகுதி பட்டியல் நடைமுறையோடு (partial list system) கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தையே எப்போதும் பரிந்துரைத்து வருகின்றன.  விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றால் என்ன பொருள்?  அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடும்.  அதன் பின்னர் மக்கள் சம்பந்தப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பதே அதன் பொருளாகும்.  மக்கள் கட்சிக்கே வாக்களிப்பார்களேயன்றி, தனிப்பட்ட வேட்பாளர்களுக்கல்ல.  ஒரு கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலிருந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  உதாரணத்திற்கு, ஒரு மாநில சட்டசபையில் 100 இடங்கள் உள்ளன.  இந்த 100 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் ஒரு கட்சிக்கு 10 சதவீத வாக்குகள் கிடைத்தன என்றால், மொத்த 100 இடங்களிலிருந்து அக்கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும்.  விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படை அம்சம் இதுவேயாகும்.  ஆனால், பகுதி பட்டியல் நடைமுறையோடு கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்று நாம் குறிப்பிடுவதன் பொருள், விகிதாச்சார பிரதிநிதித்துவம் மற்றும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் கலவையாகும்.  அதாவது,  பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் இருக்கும்.  இத்தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் அத்தொகுதிகளின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  அதனுடன் கட்சியின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சட்டமன்ற இடங்களும் இருக்கும்.  ஆக, மொத்த இடங்களில் 50% இடங்களுக்கு பிராந்திய அடிப்படையிலான தொகுதிகளிலிருந்தும், மீதி 50% இடங்களுக்கு கட்சியின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யும் நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.  இந்நடைமுறையின் கீழ், வாக்காளர் ஒருவர் இரண்டு வாக்குகளை அளிப்பார்.  ஒரு வாக்கை பிராந்திய அடிப்படையிலான தொகுதியின் வேட்பாளருக்கும், மற்றொரு வாக்கை கட்சிக்கும் அளிப்பார்.  இது ஒரு வகையான கணக்கீடாகும்.  இது போன்ற பல்வேறு வகையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறையின் சேர்க்கைகள் உள்ளன.  தற்போது, இதுபோன்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளதோடு, சிறந்த முறையில் செயல்பட்டும் வருகிறது. உலக நாடுகளில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய நாடுகளில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை முழுமையாகச் செயல்படுத்துவது சுலபமான ஒன்றாகும்.  ஆனால் பெரிய நாடுகளுக்கு, கட்சியின் பட்டியல் மற்றும் பிராந்திய அடிப்படையிலான தொகுதிகள் என சேர்த்து செயல்படுத்துவது சரியானதாக இருக்கும்.  நமது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் போன்றவற்றில் கூட பலதரப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

  • நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதானமான காரணமாகும்.  தேர்தலின் போது நமது கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இத்தகைய மோசமான நடைமுறைகளில் ஈடுபடுவதால், நமது ஐக்கிய முன்னணி தந்திரம் நமது நம்பகத்தன்மையில் அரிப்பை ஏற்படுத்தி விடாதா?

நம்பகமான மாற்று இல்லாததே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு பிரதான காரணம் என்று சல்வது சரியல்ல என நான் கருதுகிறேன்.  அரசியலில் வலதுசாரி சாய்மானம் என்பது மிகவும் சிக்கலானதொரு நிகழ்வாகும்.  உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரி மற்றும் வலதுசாரி சக்திகளும், தத்துவங்களும் எழுச்சி பெற்றதை நாம் கண்டோம்.  குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகும், சோசலிசத்திலிருந்து பின்வாங்கிய பிறகும் இதனை நாம் கண்டோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னரே கூட, அதாவது 1980களில் முதலாளித்துவ சமூக அமைப்பின் உள்ளேயே நவீன தாராளவாத முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது.  இதுவே அரசியலில் வலதுசாரி சாய்மானத்திற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.  ஏனெனில், இது மிகவும் வலதுசாரி சாய்மானம் கொண்ட முதலாளித்துவ வளர்ச்சிப் போக்காகும்.  மேலும், இது வலதுசாரி அரசியலில் பிரதிபலித்தது.  ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது வேகம் பிடித்தது.  அத்தோடு உலகம் முழுவதிலும், வலதுசாரி சக்திகளின் தத்துவங்கள் வேரூன்றி, வலதுசாரி அரசியலும் வேரூன்றி, வர்க்க அரசியலின் இடத்தில் அடையாள அரசியல் தோன்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்தியாவிலும் கூட, இதன் பிரதிபலிப்பை நாம் பார்த்தோம்.  குறிப்பாக 1990களிலிருந்து, முதலாளித்துவத்தின் தாராளமயமாக்கல் அல்லது நவீன தாராளவாத கொள்கைகள் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  அதோடு அடையாள அரசியலின் ஒரு பகுதியான இந்துத்துவா மதவாதமும் வளர்ச்சியடைந்ததைக் கண்டோம்.  இவ்விரு காரணிகளே இந்தியாவில் அதிதீவிர வலதுசாரி அரசு – தற்போது ஆட்சியதிகாரத்தில் உள்ள மோடி அரசு வருவதற்கு காரணமாக அமைந்தன.  எனவே, வலதுசாரி சக்திகள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பது உண்மையாகும்.  மேலும், இந்துத்துவா தத்துவம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க சித்தாந்தமாக மாறி வருகிறது.  இவர்களுக்கு எதிரானதொரு மாற்றே தேவைப்படுகிறது.  அந்த மாற்று என்பது, தத்துவார்த்த அடிப்படையில், அரசியல் அடிப்படையில், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.  எனவே, இடதுசாரிகளைப் பொறுத்தவரையில், இது மிக முக்கியமான விஷயமாகும்.  அன்றாட அரசியலான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் தேர்தல் உத்திகளைக் கொண்டு மட்டுமே வலதுசாரி சாய்மானத்தையும், இந்துத்துவா தத்துவத்தையும் எதிர்த்திட முடியாது.  ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றை முன் வைக்க வேண்டும்.  மேலும், அதனைச் சுற்றி மாற்று கொள்கையை, மாற்று திட்டத்தை, மாற்று மேடையை கட்டமைக்க வேண்டும்.  இத்தகைய மாற்று கொள்கையை கொண்ட மேடையை ஒட்டி வர்க்கப் போராட்டங்களை நடத்துவது, வெகுமக்கள் இயக்கங்களை கட்டுவது, மக்களைத் திரட்டுவது என்பதன் மூலமே ஒத்திசைவானதொரு கருத்தியல் மாற்றத்தை உருவாக்கிட இயலும்.  இதன் வாயிலாக இடதுசாரி, ஜனநாயக மாற்று மக்களிடையே வலுப்பெறும்.  எனவே, இன்று நம்முன் உள்ள பிரதானமான இயக்கம் இதுவேயாகும்.  ஐக்கிய முன்னணி தந்திரத்தைப் பொறுத்தவரை, வலதுசாரி இந்துத்துவா சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக-ஆர்எஸ்எஸ் எனும் பொதுவான எதிரி நம்முன் உள்ளது.  அவர்களை எதிர்த்துப் போராட, நமக்கு ஐக்கிய முன்னணி தந்திரம் தேவைப்படுகிறது.  அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து, அணி திரட்டி, மோடி அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக சக்திகள் விடுக்கும் யதேச்சதிகார அபாயத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையைக் கட்ட வேண்டும்.  இதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.  இப்போராட்ட இயக்கத்தில் நமது கூட்டாளிகளை அணி திரட்டிட வேண்டும்.  ஆனால் இந்த முன்னணி என்பது தேர்தல்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல.  ஐக்கிய முன்னணி என்பது தேர்தல் சமயங்களில் மட்டுமே தேவைப்படுகிற ஒன்று என்ற கருத்து கேள்வியில் பிரதிபலிக்கிறது.  ஆனால், ஐக்கிய முன்னணி என்பது மாற்று அரசியல் மேடைக்கு தேவைப்படுகிற ஒன்றாகும்.  வலதுசாரி சக்திகளுக்கான மாற்றாகும்.  வெகுமக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் இத்தகைய மாற்று உருவாக்கப்பட்டு, அது தேர்தல்களிலும், தேர்தல் அரசியலிலும் தானாகவே பிரதிபலித்திடும். இவ்வாறாக, அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைக் கொண்டு நாம் உருவாக்கும் ஐக்கிய முன்னணியானது, தேர்தல் நடைபெறும்போது நாம் நிறைவேற்றிடும் ஐக்கிய முன்னணி தேர்தல் உத்திகளிலும் பிரதிபலிக்கும்.  அந்தந்த மாநிலத்தின் அரசியல் அணி சேர்க்கைக்கு ஏற்ப இத்தகைய ஐக்கிய முன்னணி தந்திரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.  அகில இந்திய அளவிலான அரசியல் சக்திகளின் அணிசேர்க்கையைப் பொறுத்து அகில இந்திய அளவில் இந்த ஐக்கிய முன்ணனியின் தன்மை அமைந்திடும்.  ஆனால், தேர்தல் உத்தியானது ஒட்டு மொத்த அரசியல் உத்தியாகிய, நமது நாட்டிலுள்ள வலதுசாரி யதேச்சதிகார பாஜக அரசுக்கு எதிராக அனைத்து இடதுசாரி, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்டி ஒற்றுமையைக் கட்டுவது என்பதற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  எனவே, ஐக்கிய முன்னணியை நாம் அமைக்கும்போது அல்லது தேர்தல் கூட்டணி அல்லது முன்னணியை நாம் ஏற்படுத்தும்போது, அது ஓர் குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் நாம் ஒத்த கருத்துடன் இருக்க இயலாது.  தேர்தலை எதிர்கொள்ளவோ அல்லது பரந்த இயக்கத்தை கட்டவோ நாம் அணி திரட்டும் கட்சிகள் சிலவற்றின் கொள்கை நிலைபாடுகளோ அல்லது இதர அம்சங்களோ நமக்கு உகந்ததாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கக் கூடும்.  ஆனால், பொதுவான கடமையை முன்னிறுத்தி, இத்தகைய வேறுபாடுகளை பின்னுக்கு வைத்து, அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நமது சுயேட்சையான நிலைபாட்டை பராமரித்துக் கொண்டே செயல்பட வேண்டும்.  இது மிக முக்கியமான விஷயமாகும்.

  • நமது பிரதான எதிரியை எதிர்கொள்ள நமது அணியிலுள்ள அரசியல் கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது என்பது தவிர்க்க இயலாததாகிறது.  அப்போது தேர்தல் களத்தில் நமது மாண்புகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொண்டு, மற்றவர்களிடமிருந்து இடதுசாரிகள் தங்களை எவ்வாறு வேறுபடுத்திக் காட்ட என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ஐக்கிய முன்னணியின் அனைத்து நடவடிக்கைகளின்போதும், கூட்டாக இயக்கங்களை மேற்கொள்கிற அதே நேரத்தில் நாம் நமது சுயேட்சையான நிலைபாடுகளையும், செயல்பாடுகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.  போராட்டங்களிலும் இயக்கங்களிலும் கூட, ஒத்த கருத்து கொண்டுள்ள விஷயங்களில் கூட்டுப் போராட்டங்கள், கூட்டியக்கங்களை நடத்துகிறோம்.  நமக்கு இதர முக்கியமான அரசியல் நிலைபாடுகளும், பிரச்சனைகளும் இருப்பதால், அவற்றை நாம் சுயேட்சையாக கையிலெடுக்கிறோம்.  இவற்றில் நமது நிலைபாட்டை நாம் அணிதிரட்டியுள்ள இதர கட்சிகள் உடன்படாது போகலாம் அல்லது அவற்றை கையிலெடுக்காதும் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சியாகிய நாம், உழைக்கும் வர்க்கத்தின், விவசாயிகளின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.  இதர வர்க்கங்களின் நலன் சார்ந்திருக்கும் இதர சில கட்சிகளையும் நாம் அணி திரட்டுகிறோம்.  எனவே, நமக்கிடையே பொதுவாக உள்ள விஷயங்களை நாம் அதிகப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.  அதே நேரத்தில் நாம் நமது அரசியல் நிலைபாடுகளை, நமது வர்க்க நிலைபாடுகளை, தத்துவார்த்த நிலைபாடுகளை வேறுபடுத்திக் காட்டி, அதனைத் தொடர்ந்து வலியுறுத்துவதோடு அத்தகைய நிலைபாட்டின் பால் மக்களை அணிதிரட்ட வேண்டும்.  எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் சுயேட்சையான செயல்பாடுகளும், இயக்கங்களும் போராட்டங்களும் இன்றியமையாதவையாகும்.  இவற்றைச் செய்யாது நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள முடியாது.  ஐக்கிய முன்னணி தந்திரத்தின் மூலம் மட்டுமே நாம் நம்மை வலுப்படுத்திக் கொள்ள இயலாது.  நமது சுயேட்சையான அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன நடவடிக்கைளை, நமது சுயேட்சையான இயக்கங்களை முன்னெடுத்துச் செல்லாமல், ஐக்கிய முன்னணி தேர்தல் நடவடிக்கைகளை மட்டும் நாம் செயல்படுத்தினால், இடதுசாரி சக்திகள் வளர்ச்சியடைய முடியாது.  இடதுசாரிகள் வளர்ச்சியடையாமல், மாற்றுக் கொள்கையையும் வளர்த்தெடுக்க இயலாது.  இத்தகைய அணுகுமுறையையே நாம் கையாள வேண்டும். 

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு குறிப்பிட்ட அணி சேர்க்கை ஏற்படும்.  இவையெல்லம் நிலையானவை அல்ல.  ஆனால், நமது சுயேட்சையான வேலைகள், செயல்பாடுகள் மற்றும் இடதுசாரி, ஜனநாயக மாற்றை கட்டமைக்க செயல்படும் வர்க்க அடிப்படையிலான நமது ஐக்கிய முன்னணி ஆகியவையே நமது அடிப்படை நோக்கமாக, செயல்பாடாக இருக்க வேண்டும்.  தேர்தல் கூட்டணி மற்றும் ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது முழுக்க முழுக்க தேர்தல் நேரத்தில் செய்யப்படும் தற்காலிக நடவடிக்கையாகவே இருக்க வேண்டும்.  நமது கட்சியின் சுயேட்சையான நடவடிக்கைகளையும், வர்க்க மற்றும் வெகுமக்கள் அமைப்புகளின் கூட்டியக்கங்களையும், வர்க்க அடிப்படையிலான நமது அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டங்களையும் நாம் கைவிடவோ அல்லது பின்னுக்குத் தள்ளவோ இயலாது.

தமிழில்: கிரிஜா



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: