அ. பாக்கியம்
பிரிட்டிஷ் அறிவியல் அறிஞர் ஜே. டி. பெர்னால் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பிரபலமானது வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகம். நான்கு பாகங்களை கொண்ட மிகப் பெரிய நூலான இந்தப் புத்தகத்தின் முதல்பாகம் மட்டும் 1400 பக்கங்களைக் கொண்டது. இந்த ஆங்கிலப் புத்தகம் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. இந்தப் புத்தகம் அறிவுலகில் மட்டுமல்ல; சமுதாயம் முழுமைக்கும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய புத்தகம். பெர்னால் புத்தகத்தின் முக்கியத்துவம் கருதி தென்சென்னை சோழிங்கநல்லூர் அறிவியல் இயக்கம் ஏற்பாடுசெய்த கூட்டத்தில் குவாண்டம் இயங்கியல் பேராசிரியர். வி. முருகன் அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார். அந்தச் சொற்பொழிவுகளை பாரதி புத்தகாலயம் புத்தகமாக கொண்டு வந்துள்ளது.
ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.
நாம் அறிவியலின் வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால் வரலாற்றில் அறிவியலின் பங்குபற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை. சமுதாய மாற்றத்தில் அறிவியலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதேபோல் அறிவியல் வளர்ச்சியில் சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. நமது சிந்தனைகளை சமூக கட்டமைப்புதான் தீர்மானிக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. வரலாற்றியலின் வளர்ச்சிவிதிகளை அறிவியல்ரீதியில் அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் வளமிக்க துணையாகும்.
அறிவியல் என்றால் என்ன?
அறிவியல் என்பதற்கான பொருளை நான்கு வரிகளுக்கான விளக்கமாக அளிப்பதை ஜே.டி. பெர்னால் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவியல் என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த விளக்கங்களையும் கடந்து அறிவியலின் வரையறை இருக்கிறது என்பதை அடுக்கடுக்கான விவாதங்களை முன்வைத்துள்ளார். இறுதியாக, அறிவியல் பற்றி அவர் முடிக்கிறபொழுது ஐந்து அம்சங்களை குறிப்பிட்டுவிட்டு கீழ்க்கண்ட பகுதியோடு முடிக்கிறார்.
“அறிவியல் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவியலை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்துப்பார்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் அறிவியலை இன்னதென்று துல்லியமாகவும் சுருக்கமாகவும் வரையறுக்க முடியாது. அறிவியலுக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவை உள்கட்டமைப்பு, வெளியில்உள்ள சமூகத்தின் தாக்கம். இந்த இரண்டு விஷயங்களையும் சேர்த்துப் பார்த்தால்தான் அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த நிலை நமக்கு உணர்த்தும் செய்தி∶ சமுதாயம் மாறிக்கொண்டே இருப்பதால் அறிவியல் என்றால் என்ன என்ற புரிதலும் மாறிக்கொண்டே இருக்கிறது” என்று விடை பகர்கிறார்.
உலகையே அழிக்க வல்லது என்று தெரிந்தும் அணுகுண்டுகளை தயாரித்துக்கொண்டு இருக்கிறோம்? புவி வெப்பமயம் பூமிக்கு ஆபத்து என்று தெரிந்தும் நாம் ஏன் அதை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்?
மேற்கண்ட அம்சங்களை புரிந்துகொள்வதற்கு இன்றிருக்கும் அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்புகளை புரிந்துகொண்டால் மட்டும் போதாது. வரலாற்று ரீதியிலான உறவுகளை புரிந்துகொண்டால் மட்டும்தான் மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண முடியும் என்பதை விளக்குகிறார். அப்படி ஏற்படும் புரிதலின் அடிப்படையில்தான் அறிவியலை மக்களுக்காக பயன்படுத்த தேவையான சூழ்நிலைகள் எவை? அவற்றை உருவாக்குவது எப்படி? என்று சிந்திக்க முடியும்.
வரலாற்றில் அறிவியலின் பங்கை ஆய்வுசெய்து அறிவியலின் சார்புநிலைகளையும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற அல்லது தேக்கத்திற்கு ஏற்ற வகையில் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அவர்கள் விளக்கியுள்ளார்கள். அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்திற்கு பயன்பட்டது என்பதை அறிவியல் பூர்வமான வார்த்தைகளில் விளக்கியுள்ளார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் முதலில் அதை ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் லாபம் ஈட்டும் நோக்கத்தோடுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்சார பல்பை கண்டுபிடித்த உடன் அது பொதுமக்களுடைய வாழ்விடங்களுக்கு செல்வதைவிட இருட்டியபிறகும் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குதான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டது. அதை இலவசமாக பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும். மாறாக, புதிய கண்டுபிடிப்புகள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனைசெய்து சுரண்டப்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக செத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
ஆனால், முதலாளித்துவம் எப்பொழுதுமே நடுநிலை என்ற பதாகையின் பின்னால் ஒளிந்துகொண்டுதான் செயல்படும். மார்க்சிய சித்தாந்தம் வளர்ந்து வரக்கூடிய காலகட்டத்தில் கார்ல் மார்க்ஸ் சித்தாந்தம் வர்க்கச் சார்புடையது என்று ஆதாரங்களை முன்வைத்தார். முதலாளித்துவ அறிஞர்கள் சித்தாந்தத்தின் சார்புநிலை ஆபத்தானது. அது அறிவியலை பாதிக்கும் என்று மார்க்சியத்தை தாக்கிக் கொண்டிருந்தனர். தோழர் லெனின் இதற்கான பதிலை ஆணித்தரமாக எடுத்து கீழ்கண்டவாறு முன்வைத்து
முதலாளித்துவ வர்க்கம் சார்புநிலையற்றது; எந்த வர்க்கத்தையும் சாராதது என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. சிந்தாந்த சார்புநிலை கோட்பாடு விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று முதலாளித்துவவாதிகள் முன்வைக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றவும் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் வலுப்படுத்துவதற்கும் செய்யக்கூடியதாகும். சார்புநிலையை மறைத்து, அதற்கான உண்மையை மறைத்து, விஞ்ஞான நேர்மையற்ற முறையில், அறிவியல் ஆராய்ச்சிகளை தன்னுடைய சுரண்டலுக்கு ஏற்றவகையில் முதலாளித்துவ வர்க்கம் மாற்றி அமைத்துக்கொள்கிறது என்று கடுமையாக சாடுகிறார்.
பொருளாதாரப்போக்குதான் அறிவியல் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் தேக்கத்தையும் தீர்மானிக்கும் மிகமுக்கியமான காரணம் என ஒரு பொதுவான கருத்தை ஜே.டி. பெர்னால் முன்வைக்கிறார். இதற்கான ஆதாரங்களை கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, ரோம, இந்தியா, சீனா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வரலாற்றுரீதியான வளர்ச்சிப்போக்குகளையும் அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக முன்வைக்கிறார். பொருளாதார நெருக்கடிகள் அறிவியல் வளர்ச்சிப்போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்று இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் புரிந்துகொண்டால் தற்போது நமது நாட்டில் நடந்துகொண்டிருக்கக்கூடிய போக்குகளை இணைத்து தெரிந்துகொள்ள முடியும்.
அன்று இருந்த ரோமானிய பொருளாதாரத்தில் செல்வம் ஒரு சிலரிடம்
குவிந்து இருந்தது. அடிமைகளும் மக்களும் ஏழ்மையில் இருந்தனர். சமூகத்தில் ஒரு நெருக்கடி உருவாகியது. அங்கு நிலவிய ஏழ்மையானது சந்தைப்பொருள்களுக்கான தேவையை குறைக்கிறது. வியாபாரிகள் நிலையும் கைவினைஞர்கள் நிலையும் மோசமானது. எனவே அறிவியல் செய்வதற்கான ஊக்கம் இல்லை. ஏற்கனவே செய்துவைத்த அறிவியலின் வளர்ச்சியும் அதன் துடிப்பை இழந்துவிட்டது. இறுதியாக அலெக்சாண்டிரியா நூலகம் எரிந்ததுபோல் அல்லது குளிப்பதற்கு தண்ணீரை சுடவைப்பதற்கு எரிபொருளாக புத்தகங்களை உபயோகிப்பது போன்ற பல வழிகளில் அழிந்து விடும்.
இந்தியாவைப்பற்றி ஜே.டி. பெர்னால் குறிப்பிடும்பொழுது “ஜாதிய கட்டமைப்புகள் நன்றாக வேரூன்றியதால், இந்து மதம் உறைந்து போனது. அது மிகவும் ஸ்திரமான சமுதாயம். ஆனால் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை விலையாக கொடுத்துவிட்டு நன்கு ஸ்திரமாக செயல்பட்ட சமுதாயம். வளர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சாதிய கட்டமைப்பு மாறாமல் தொடரவேண்டும் என்ற கண்ணோட்டம்தான் இருந்தது.”
இன்றைய இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்
தவிக்கிறது.மோடி ஆட்சியில் கார்ப்பொரேட்களிடம் செல்வக் குவிப்பும், மறுபக்கம் வறுமை தாண்டவமாடுகிறது. வகுப்புவாதிகள் அறிவியல் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றனர். ஆய்வுகளைத் தடுக்கின்றனர். மூடப் பழக்கவழக்கங்களை வளர்ப்பது வரலாற்றை திருத்துவது, விஞ்ஞானிகளை, படுகொலை செய்வது, வேதத்தில் அனைத்தும் இருக்கிறது என்று இதர புத்தகங்களை அழிப்பது நமது நாட்டில் அன்றாட காட்சிகளாக மாறிவிட்டன. இந்திய பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
ரோமானிய, கிரேக்க நாகரீகத்திற்கும், அதற்குப் பின்வந்த நாகரிகங்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அது கிறிஸ்தவ மதமும் இஸ்லாமிய மதமும் ஆகும். கடவுள், நம்பிக்கை, மதங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவை எல்லா காலங்களிலும் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மதமும் இஸ்லாமிய மதமும் அவற்றுக்கு முன்பிருந்த மதங்களில் இருந்து மாறுபட்டவை. அவை நிர்வாக அமைப்பில் செயல்பட்டவை. இந்த மதங்களின் நிர்வாக அமைப்புகள் ஒரு அரசியல் நிர்வாக அமைப்பிற்கு இணையானவை. அரசுகளைவிட நிலைத்ததன்மை உள்ளவை. மக்களின் சிந்தனைகளில் மிகப்பெரிய அளவிற்கு ஆட்சிபுரிந்தது. அரசியல்தளத்திலும் மிகுந்த சக்திவாய்ந்தவை. இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் அறிவியல் வளர்ச்சியை தடுத்தன என்று பெர்னால் சுட்டிக்காட்டுகிறார். இந்த மதங்களை பெர்னால் கடுமையாக சாடவில்லை. மாறாக, இந்த மதங்கள் தோன்றியதற்கான பொருளாதார சூழ்நிலைகளை சுட்டிக் காண்பிக்கிறார்.
இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்குகளை தெரிந்துகொள்ள முடியும். கி.பி.1400 ஆண்டுகளுக்கு முன்பு, சீனா, கிரீஸ், இந்தியாவிலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் இங்கெல்லாம் ஏன் தொழில்புரட்சி ஏற்படவில்லை? ஏன் நவீன அறிவியல் வளர்ச்சி ஏற்படவில்லை? ஐரோப்பாவில் மட்டும் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை பல புதிய பரிணாமங்களுடன் அவர் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, கிரீஸ் நாகரீகத்தில் எந்திரஇயலில் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அவர்கள் அடைந்திருந்த அந்த வளர்ச்சியை தொழில்புரட்சியில் பெரும்பங்காற்றிய நீராவி என்ஜின் மற்றும் துணிநெய்வது ஆகிய தொழிலில் ஏற்பட்ட நுணுக்கங்களை அடைவதற்குப் போதுமானது. ஆனாலும் ஏன் அங்கு தொழில்புரட்சி நடைபெறவில்லை? என்பதற்கான பொருளாதார ரீதியிலான விளக்கங்களை அவர் முன்வைத்துள்ளதையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
“தொழில்புரட்சியை நோக்கி போவதற்கான பொருளாதாரத்தேவை அன்று இல்லை. அதனால் தொழில்புரட்சியை நோக்கிப் போவதற்கான ஊக்கமும் ஆர்வமும் அன்று எழவில்லை. பெருமளவில் பொருட்களை உருவாக்கத் தேவையான சந்தை அப்போது இல்லை. செல்வந்தர்களுக்கு கையால் உருவாக்கப்பட்ட பொருட்கள் போதுமான அளவில் கிடைத்தன. ஏழைகளுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லை. அவை இல்லாமலேயே ஏழைகள் வாழ்ந்தார்கள். பொருளாதார சூழ்நிலையின் காரணமாகத்தான் தொழில்புரட்சியை நோக்கி அவர்கள் செல்லவில்லை.
கி.பி. 1000 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றின. குறிப்பாக, சீனா கண்டுபிடித்திருந்த குதிரையின் கழுத்துப்பட்டை, கம்பாஸ் (கப்பல் செல்லும் திசையை சுட்டிக் காட்டும் கருவி) வெடிமருந்து, காகிதம், அச்சுஇயந்திரம் ஆகியவை ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் கண்டுபிடிக்கவில்லை. அவை கிழக்கு நாடுகளிலிருந்தும், சைனாவிலிருந்தும் கிடைத்தவை. இந்தத் தொழில்நுட்பங்களும் அவற்றால் ஏற்பட்ட வியாபாரத்தின் வளர்ச்சியாலும் ஐரோப்பாவின் நிலப்பிரபுத்துவம் உடைந்தது.
இதேபோன்று, கிரேக்க, ரோமானிய நாகரீகம் அழிந்தாலும் அவர்களுடைய அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து எடுத்துச்சென்று செழுமைப்படுத்தியது இஸ்லாமிய நாகரீகத்தின் முக்கிய பங்காகும். ஐரோப்பாவினர்தான், அரபுநாடுகளில் வளர்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் முழுப்பயன்களை அடைந்தவர்கள் என்று பெர்னால் கூறுகிறார்.
தத்துவார்த்த வளர்ச்சியில் கிரேக்க நாட்டில் அயோனி பள்ளியின் வளர்ச்சியை, அதன் சிறப்புகளை, குறிப்பிட்டு விவரிக்கிறார். அதேநேரத்தில், சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இயற்கை தத்துவம், அறிவியல் வளர்வதற்கு எவ்வாறு தடையாக இருந்தார்கள்? முற்போக்கான தத்துவத்தை மடைமாற்றியதில் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் பங்கு பிற்போக்குத்தனமாக இருந்தது என்பதை வலுவான முறையில் எடுத்துரைக்கிறார். சாக்ரடீஸ் இயற்கைஆய்வுகளை மடைமாற்றி வாழ்க்கைக்கான ஆய்வாகக் கொண்டு சென்றார். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதித்தார். பிளாட்டோ ஜனநாயக அமைப்பை வெறுத்ததுடன் அடிமைமுறையை ஆதரிக்கவும் செய்தார்.
அரிஸ்டாட்டிலின் இயற்பியல் அடுத்த 1800 ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தது. அனைத்தும் தவறானவை. அரிஸ்டாட்டில் இயற்பியலை தூக்கி எறிந்ததே கலிலியோ செய்த மாபெரும் சாதனை என்று பெர்னால் கூறுகிறார்.
நகரங்களில் இருந்துதான் நாகரீகங்கள் வந்தன என்ற கருத்தை மறுத்து நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கில் நகரங்கள் உருவாகின என்ற கருத்தை முன்வைக்கிறார். நகரங்களும் அரசு அமைப்பும் தோன்றியதை அளவு மாற்றத்தில் இருந்து உருவான பண்பு மாற்றமாக பெர்னால் குறிப்பிடுகிறார்.
இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் அறிவியலின் பங்கு அதன் நாகரீக காலங்களை தனித்தனியாகப் பிரித்து அதனுடைய வேறுபாடுகளையும் தொடர்புகளையும் ஆய்வு செய்கிறார். வரலாற்றில் அறிவியல் என்ற இந்தப் புத்தகம் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும். முடநம்பிக்கையை மட்டுமல்ல; அறிவியல் தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அகற்றும்.
Leave a Reply