பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக, கடும் குளிரையும், பின்னர் கூடிவரும் வெப்பத்தையும், பரவும் பெரும் தொற்றையும், அடக்குமுறை அரசையும் மிகுந்த வீரத்துடனும் விவேகத்துடனும் எதிர்கொண்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றுபட்ட, நாடு தழுவிய கிளர்ச்சியை அமைதியாக, அதேசமயம் வியக்கத்தக்க ஒற்றுமையுடனும் உறுதியுடனும் நடத்திவருகின்றனர். இந்தியாவில் தேச விடுதலை போராட்டத்திற்குப்பின் இத்தகைய மிகப்பெரிய அளவிலான, உறுதியான, நீண்ட போராட்டத்தை நாடு கண்டதில்லை. அதுமட்டுமல்ல. அகில இந்திய அளவில் இத்தகைய வலுவான விவசாயிகளின் போராட்டம் நடந்துவருவதுபோல் சமகால உலகில் வேறு எங்கும் கடந்த பல பத்தாண்டுகளில் வெகுமக்கள் போராட்டம் நடக்கவில்லை என்றே கூறலாம்.
போராடும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் என்ன?அண்மையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பாராளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை புறம் தள்ளி நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இச்சட்டங்களில் ஒன்று, விவசாயிகளுக்கு ஓரளவாவது விளைபொருளுக்கு விலை கிடைப்பதற்கு உதவும் வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் குழுக்கள் (ஏ பி எம் சி – APMC)தொடர்பான சட்டத்தை விவசாயிகளுக்கு விரோதமாகவும் பெரு வணிகர்களுக்கு சாதகமாகவும் திருத்தியுள்ளது. இன்னொரு சட்டம், ஒப்பந்த விவசாயம் தொடர்பாக பன்னாட்டு – இந்நாட்டு பெரும் வேளாண் வணிக கம்பனிகளுக்கு சாதகமான மாற்றங்களை செய்துள்ளது. மூன்றாவது சட்டம், அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் திருத்தங்களை அமலாக்கியுள்ளது. இந்த மூன்று திருத்தப்பட்ட சட்டங்களுமே வேளாண்துறையில் அந்நிய, இந்திய பெருமுதலாளிகள் வேகமாக ஆதிக்கம்பெற வழிவகுக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதே இச்சட்டங்களின் இலக்காகும். இவற்றால் விவசாயிகளில் ஆகப்பெரும் பகுதியினருக்கு நன்மை ஏதும் இருக்காது என்பது மட்டுமல்ல; கடும் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பும் உண்டு என்பதே உண்மை. இவற்றின் பாதிப்பு விவசாயிகள் என்ற வகையிலும், நுகர்வோர் என்ற வகையிலும் ஏற்படும். மின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான சட்ட திருத்தங்களும் விவசாயிகளுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பதையும் விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். இந்த நான்கு சட்டங்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது போராட்டத்தின் மையமான கோரிக்கையாகும். இன்னொரு மிக முக்கியமான கோரிக்கை, வேளாண் விளைபொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானதாகும். 2006 ஆம் ஆண்டு நடுவண் அரசிடம் அன்றைய அரசால் அமைக்கப்பட்ட, பேராசிரியர் மா. சா. சாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான சூத்திரம் அமலாக்கப்படவேண்டும் என்பதும், இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதும் போராடும் விவசாயிகளின் கோரிக்கை ஆகும்.
மிகக்கடினமான சூழலில் சளைக்காமல் நடைபெற்றுவரும் இத்தகைய வீரம் செறிந்த வேளாண் கிளர்ச்சியைப் பற்றிய மார்க்சீய புரிதலை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு துவக்கம் தான் இந்தக்கட்டுரை.
மார்க்சீய பார்வையில் இந்தியாவின் வேளாண் பிரச்சினை
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் திட்டம் வேளாண் பிரச்சினை பற்றி பின்வருமாறு கூறுகிறது:
- இந்திய மக்கள் முன் உள்ள பிரதான தேசீய பிரச்சினை வேளாண் பிரச்சினை ஆகும். இப்பிரச்சினையைத் தீர்க்க புரட்சிகர மாற்றம் தேவை. கிராமப்புறங்களில் நிலவும் நிலப்பிரபுத்துவம், வர்த்தக மற்றும் வட்டி சுரண்டல், சாதி மற்றும் பாலின ஒடுக்கு முறை ஆகியவற்றை அழித்தொழித்தலை இலக்காகக் கொண்ட முழுமையான, தீவிரமான வேளாண் சீர்திருத்தம் இப்புரட்சிகர மாற்றத்தின் பகுதியாகும். வேளாண் பிரச்சினையை முற்போக்கான, ஜனநாயக முறையில் தீர்க்காதது மட்டுமல்ல; இப்பிரச்சினையை எதிர்கொள்ளவே இயலவில்லை என்பது இந்தியாவின் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆட்சியின் கையாலாகாத்தனத்தை பறைசாற்றுகிறது. (பத்தி 3.15)
- வேளாண் உறவுகளை பொறுத்தவரையில், கிராமப்பகுதிகளில் முதலாளித்துவ உறவுகளின் வளர்ச்சி பிரதான அம்சமாக உள்ளது. இதன் தன்மை கிராமப்புற உழைக்கும் மக்களில் கணிசமான பகுதியினர் கூலி தொழிலாளிகளாக மாறியுள்ளதும், ஊரக மக்கள் தொகையில் விவசாயத்தொழிலாளர்களின் சதவிகிதம் பெரிதும் அதிகரித்திருப்பதும், சந்தைக்கான உற்பத்தியும் விவசாயிகள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் வேகமாக உயர்வதும் ஆகும். மேலும் பாரம்பர்யமாக குத்தகை செய்துவரும் விவசாயிகள் நிலவெளியேற்றம் செய்யப்படுவது; கிராமப்புற பெரும் செல்வந்தர்கள் – குறிப்பாக நிலப்பிரபுக்கள் – வேளாண் மற்றும் அத்துடன் தொடர்புகொண்ட நடவடிக்கைகளில் அதிக அளவில் மறுமுதலீடு செய்வதன் மூலம் முன்பு இல்லாத அளவிற்கு பெருமளவிலான மூலதன மறு உற்பத்திக்கான அடித்தளம் போடப்படுவது ஆகியவையும் நிகழ்கின்றன.(பத்தி 3.18)
கட்சி திட்டம் இவ்வாறு நிலப்பிரபுத்வத்தையும் நிலக்குவியலையும் தகர்க்க வேண்டியதன் அவசியத்தையும் இதனை பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ இந்திய அரசு செய்திட முற்றிலும் தவறியுள்ளதையும், விடுதலைக்குப்பின் வந்த ஐம்பது ஆண்டுகளில் கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் கணிசமாக வளர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், தாராளமய கொள்கைகள் அமலாகி வரும் கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் உற்பத்திக்கு அரசு முன்பு அளித்துவந்த இடுபொருள் உள்ளிட்ட மானியங்கள், விவசாய உற்பத்திக்கு உதவும் பொதுத்துறை முதலீடுகள், விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை, வேளாண் விரிவாக்க அமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு மூலம் மகசூல் உயர்வு, நிறுவனக்கடன் வசதி, உறுதியான கொள்முதல் உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளும் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. நில உச்ச வரம்பு சட்டங்கள் நீர்த்துப்போகும் வண்ணம் திருத்தப்பட்டது மட்டுமின்றி, பல மாநிலங்களில் பன்னாட்டு, இந்நாட்டு பெரும் ஏகபோகங்களின் கைகளில் நிலங்கள் மிகக்குறைந்த தொகைக்கு நீண்டகால பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. விதைகள், உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள், அனைத்து வேளாண் உபகரணங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள் என அனைத்து வேளாண்சார் துறைகளிலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு ஏகபோக பெரும் கம்பெனிகள் நுழைவதற்கும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் தாராளமய கொள்கைகள் ஊக்குவிக்கின்றன. 1990களின் இறுதியிலிருந்து உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வேளாண் பொருட்களின் மீதான இறக்குமதி அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அவை வரம்பின்றி இந்தியாவிற்குள் இறக்குமதியாகலாம் என்ற நிலை உருவாகி, விவசாய விளைபொருட்களின் விலைகள் பெரும் வீழ்ச்சியையும், அதிகமான ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. ஆக, ஒருபுறம் இடுபொருட்களின் விலை உயர்வு, மறுபக்கம் விளைபொருட்களின் விலை வீழ்ச்சி, அரசின் ஆதரவு விலகலால் பொது முதலீடுகள் வெட்டப்பட்டு, மகசூல் உயர்வு வேகம் குறைவது, அதிகரித்துவரும் பெரும் வேளாண் வர்த்தக கம்பனிகளின் ஆதிக்கம் ஆகியவை இந்தியாவின் கிராமங்களில் புதிய முரண்களையும் ஏற்படுத்தியுள்ளன.
கொல்கத்தா சிறப்பு மாநாட்டிற்குப் பின்
வேளாண் வர்க்க உறவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை 2014இல் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாடு சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் மத்தியக்குழு 2017 ஜனவரியில் கூடி, வேளாண் அரங்கப்பணிகள் குறித்து நிறைவேற்றிய ஆவணத்தில் சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தது:
- கிராமப்பகுதிகளில், நிலப்பிரபுக்கள், பெரும் வேளாண் முதலாளிகள், பெரும் காண்டிராக்டர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய செல்வந்தர்களின் கூட்டணிதான் ஆதிக்க வர்க்கமாக உள்ளது. வேளாண் இயக்கம் மற்றும் கிராமப்புற வர்க்க போராட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி இந்த நிலப்பிரபுக்கள் – கிராமப்புற செல்வந்தர்கள் கூட்டுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் தான் நிகழும்.
- ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளில் பலர் வேளாண் மற்றும் இதர துறைகளில் கூலி வேலை செய்கின்றனர். கிராமப்புற உழைப்புப்படையில் கணிசமான பகுதியினர் கரத்தால் உழைப்பவர்கள். கிராமப்புற செல்வந்தர் கூட்டத்தை எதிர்த்துப் போராட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், வேளாண் அல்லாத துறைகளில் பாடுபடும் கரத்தால் உழைப்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் இதர கிராமப்புற ஏழைகளை உள்ளடக்கிய விரிவான ஒற்றுமையை கட்ட வேண்டும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவான பிரச்சினைகளான விளைபொருளுக்கு தக்க விலை மற்றும் கொள்முதல், கடன் நிவாரணம் போன்றவை மீதான இயக்கங்கள் நடத்தப்படவேண்டும். மறுபுறம், விவசாயத்தொழிலாளிகள், ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், இதர உழைக்கும் மக்கள் நலன்களை மையப்படுத்தியதாக நமது பணிகளின் தன்மை ஆக்கப்படவேண்டும். நிலப்பிரபுக்கள்மற்றும் பெரிய முதலாளித்துவ விவசாயிகளின் கோரிக்கைகளில் இருந்து நமது கோரிக்கைகள் தெளிவாக வேறுபடுவதோடு, இந்த கிராமப்புற பணக்கார வர்க்கத்திற்கு எதிரான கோரிக்கைகளையும் நாம் முன்வைக்கவேண்டும். சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட வேண்டும். இதில் விவசாய சங்கமும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் முன்னணியில் இருக்க வேண்டும். பெண்விவசாயிகள் மற்றும் பெண் விவசாயத் தொழிலாளர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவும், பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்க முறைமையையும் எதிர்த்தும் போராட வேண்டும். அரசின் நல திட்டங்களின் பயன் உழைப்பாளி மக்களை முழுமையாக சென்றடைவதற்கும் கூட்டுறவு அமைப்புகளை ஜனநாயகப்படுத்தி வலுப்படுத்துவதற்கும் நாம் செயலாற்ற வேண்டும்.
- மாநில நிலைமைகளுக்கு ஏற்றவாறு, விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு மட்டுமின்றி அனைத்து கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கான அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கம், ஊரக தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் ஆகியவை இணைந்து பொது பிரச்சினைகளின் மீது ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்த வேண்டும். இது கிராமப்புற செல்வந்தர் வர்க்கத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.
- தாராளமய கொள்கைகளையும் ஆளும் வர்க்கங்களையும் எதிர்த்த வர்க்கப் போராட்டங்களை வலுப்படுத்துவதுடன், வகுப்புவாத அபாயத்தை எதிர்ப்பதும் விவசாயிகள் மற்றும் இதர அனைத்து கிராமப்புற உழைக்கும் மக்களின் ஒற்றுமையைக் கட்ட அவசியம் ஆகும் .
மார்க்சீயப் பார்வையில் வேளாண் கிளர்ச்சி
புதுதில்லியின் எல்லைப்பகுதியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி இந்திய விவசாய இயக்கத்தின் வரலாற்றில் என்றென்றும் நீங்காப்புகழ் பெற்றதாகத் திகழும். அமைதியான இக்கிளர்ச்சி சாதனைகள் பலவற்றை செய்துள்ளது. சாதி, மதம், மொழி, இனம் தாண்டிய விரிவான ஒற்றுமையை கோடிக்கணக்கான விவசாயிகள் மத்தியில் இக்கிளர்ச்சி சாதித்துள்ளது. வடமாநிலங்களில் மதவெறி அரசியலை தற்காலிகமாகவாவது பின்னுக்குத் தள்ளியுள்ளது. பெருமளவில் பெண்விவசாயிகளின் பங்கேற்பை பெற்றுள்ளது. கிளர்ச்சியை வழிநடத்தும் கூட்டுத் தலைமை தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து கூட்டு இயக்கங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளது. எல்லையற்ற பணபலம் கொண்ட ஆர்எஸ்எஸ் – பாஜக அமைப்புகளும், அவற்றின் தலைமையில் இயங்கும் மத்திய அரசும் அதன் அடிமையாக செயல்படும் ஊடகங்களும் கிளர்ச்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நடத்திய அவதூறு பிரச்சாரங்களையும் அடக்குமுறைகளையும் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் இன்றுவரை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது அரசுக்கும் பெரும் சவாலாக இக்கிளர்ச்சி அமைந்துள்ளது. தற்பொழுது உள்ள அரசுக்கு மிக நெருக்கமாக உள்ள அம்பானி மற்றும் அதானி ஆகிய இரு பெரும் ஏகபோக முதலாளிகளை பெயர் சொல்லி இவர்கள் நலனுக்காக மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பகிரங்கமாகவே கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இவ்விரு பெருமுதலாளிகள் தங்களுக்கும் இச்சட்டங்களுக்கும் தொடர்பில்லை என்று சொன்னாலும், இச்சட்டங்களால் பெரும் பயன் அடையக்கூடிய இடத்தில் இம்முதலாளிகள் உள்ளனர் என்பதை ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரைகள் மற்றும் இதர தரவுகள் மூலமாக அறிய முடிகிறது. கிளர்ச்சியின் ஆகப்பெரிய சாதனை கொரோனா பெரும் தொற்று உருவாக்கியுள்ள மிகக்கடினமான சூழலிலும், மிகப்பெரிய அளவிற்கு விவசாயிகளைப் பங்கெடுக்க வைத்ததும் நாட்டு மக்களில் பாதிப்பேருக்கு இன்றளவும் வாழ்வாதாரமாக உள்ள வேளாண் துறை மீதும், அத்துறையில் பெரும் சேதம் விளைவித்து வரும் அரசின் தவறான தாராளமய கொள்கைகள் மீதும், நாட்டு மக்களின் கவனத்தைத் திருப்பி அதனை அன்றாடப் பேசுபொருளாக ஆக்கியதும் ஆகும்.
எனினும், மார்க்சீயப் பார்வையில் இப்பிரச்சினைகளை பரிசீலித்தால், நடப்பு நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்களுடன் நெருக்கமான தொடர்புடையவை என்பது தெளிவாகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதாரம் எதிர்கொண்டுவரும் நெருக்கடி மேலும் மேலும் ஆழமடைந்துவருகிறது. முப்பது ஆண்டுகளாக அமலாக்கப்பட்டுவரும் தாராளமய கொள்கைகள் இந்தியாவின் வேளாண் நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என்பது உண்மை. வேளாண் நெருக்கடி பெரும் பகுதி விவசாய குடும்பங்களையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதும் உண்மை. இவற்றின் மிகத்துயரமான வடிவம்தான் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருப்பது. அதேசமயம் இக்காலத்தில் முதலாளித்துவ உறவுகள் வேளாண் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பெருமளவு வளர்ந்துள்ளன என்பதும் உண்மை. இதனால் நிலபலமும், பணபலமும், சமூக ஆதிக்க வலுவும் கொண்ட ஒரு சிறுபகுதியினர் – பெரும் செல்வந்தர்கள் – முதலாளித்துவ நிலப்பிரபுக்களாகவும் நவீன முதலாளித்துவ விவசாயிகளாகவும் வளர்ந்துள்ளனர். கிராமத்தின் பொருளாதாரம், சமூகம், அரசியல்,கல்வி, ஆரோக்கியம் என அனைத்துத் தளங்களிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள் தங்கள் உபரிகளை விவசாயத்தை நவீனப்படுத்தவும், இயந்திரமயமாக்கவும், மகசூலை உயர்த்திக்கொள்ளவும், விவசாயம் சார்ந்த, சாராத லாபம் தரும் பல நடவடிக்கைகளை (பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், ரியல் எஸ்டேட் தொழில், அரவை ஆலைகள், பால் பண்ணைகள், வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி விற்பது போன்ற) துவக்கி நடத்தவும், கடந்த இருபதுக்கும் மேலான ஆண்டுகளில் களமிறங்கியுள்ளனர். கணிசமான பகுதி விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டாலும், இந்த செல்வந்தர் கூட்டத்திடம் செல்வங்கள் குவிகின்றன. நவீன வேளாண்மை நிகழ்கிறது.
பாஜக ஆட்சியில் வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுவந்த சலுகைகள் முந்தைய ஆட்சிகளை விட அசுர வேகத்தில் பறிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து உருவாகும் அனைத்து இடுபொருட்களின் விலைகள் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளன. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், குளறுபடியானதும் விலை உயர்வை தீவிரப்படுத்தியதுமான ஜி எஸ் டி அமலாக்கமும், முறைசாராத்துறைகளை பெரிதும் பலவீனப்படுத்தி, மக்களின் வாங்கும் சக்தியை சுருக்கி, கிராக்கியை சரிய வைத்துள்ளன; வேலையின்மையை பெரிதும் அதிகரித்துள்ளன. இத்தகைய நெருக்கடியான சூழலில் விளைபொருட்களுக்கு தக்க விலை மற்றும் முழுமையான கொள்முதல் என்ற கோரிக்கைக்கும் கடன் ரத்து என்ற கோரிக்கைக்கும் விவசாயிகள் மத்தியில் வலுவான ஆதரவு உருவாகியுள்ளது. பொருளாதார மந்தம் தீவிரமாகியுள்ள நிலையில் விவசாயத்திற்கு வெளியே வாழ்வாதாரம் காண்பதும் கடினமாகியுள்ள சூழலில், வேளாண்குடியினருக்கு விரோதமான சட்டங்களை மிகுந்த அவசரத்துடன், ஜனநாயக விரோதமான முறையில் மத்திய அரசு இந்தக் கொடிய கொரோனா காலத்தில் நிறைவேற்றியது விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. விவசாயத்தை முழுமையாக முதலாளித்துவ சந்தையின் திருவிளையாடல்களுக்கு விட்டுவிடுவோம்;பெருமுதலாளிகளின் ஆடுகளமாக ஆக்கிடுவோம் என்பதே இச்சட்டங்களின் உள்ளடக்கம் என்பதை பணக்கார விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் புரிந்துகொண்டனர். நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு இந்நாட்டு பெரும் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு படிப்படியாக ஆட்படுத்தும் என்ற உணர்வு போராடும் விவசாயிகள் மத்தியில் வலுவாக உள்ளது. இக்காரணங்களால் பணக்கார விவசாயிகளும், ஒருபகுதி பெரிய முதலாளித்துவ விவசாயிகளும் கூட இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். இக்கிளர்ச்சி பெரும்பகுதி விவசாயிகளின் நலனைக் காக்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதால் இடதுசாரி விவசாய அமைப்புகள் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றுமையைக் கட்டவும், விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லவும், தொழிலாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், இக்கிளர்ச்சியில் இடதுசாரி சக்திகள் ஆக்கபூர்வமான பங்காற்றி வருகின்றனர். விவசாயிகள் மீதும் தொழிலாளிகள் மீதும் பொதுத்துறை மீதும் ஒரே நேரத்தில் ஆட்சியாளர்கள் கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள இன்றைய அரசியல் சூழலில் விவசாயிகளின் கிளர்ச்சியும் அதனை விவசாயி-தொழிலாளி கூட்டணி என்ற திசைவழியில் கொண்டு செல்ல இடதுசாரி சக்திகள் முனைவதும் வரவேற்க வேண்டிய, முற்போக்கான அம்சங்கள்.
மார்க்சீய நிலைபாட்டில் இருந்து பரிசீலிக்கும் பொழுது, இக்கிளர்ச்சி முற்போக்குத்தன்மை கொண்டது; நமது புரட்சிப்பயணத்திற்கு சாதகமானது என்பதை அங்கீகரிக்கலாம். . விவசாயிகளின் பரந்துபட்ட ஒற்றுமை ஒரு சில பிரச்சினைகள் மீது இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ளது. விவசாயி-தொழிலாளி கூட்டணியை நோக்கி பயணிக்க இக்கிளர்ச்சி உதவும். அதேநேரத்தில் கிராமப்புற செல்வந்தர்களுக்கெதிரான வர்க்கப் போராட்டத்திற்கு இக்கிளர்ச்சி மாற்று அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலச்சீர்திருத்தம், விவசாயத் தொழிலாளர்களின், கிராமப்புற உடல் உழைப்பு தொழிலாளிகளின் பிரச்சினைகள், சமூக ஒடுக்குமுறை ஒழிப்பு, பாலின சமத்துவம், பொருளாதாரச் சுரண்டல் ஒழிப்பு, பழங்குடி மக்களின் உரிமைகள், ஏழை-நடுத்தர விவசாயிகளின் நலன் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் களப்போராட்டங்கள் நடத்தி தொழிலாளி-விவசாயி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்தி பயணிப்பது வேளாண் பிரச்சினைக்கு கட்சி திட்டம் முன்வைக்கும் தீர்வு ஆகும். இது ஒரு நெடிய பயணமும் ஆகும்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளாண் கிளர்ச்சி நமது நெடிய பயணத்தில் முக்கியமான, சாதகமான திருப்பம். அரசின் அடக்குமுறைகளை முறியடித்து இக்கிளர்ச்சியை வெற்றி பெறச் செய்வது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமைகளில் ஒன்றாகும். இக்கிளர்ச்சியில் கட்டப்பட்டுள்ள மக்கள் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. ஆர் எஸ் எஸ் – பா ஜ க தலைமையிலான மத அரசியல் நடத்தி மக்களை பிளவுபடுத்திவரும் சக்திகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையைக் கட்டவும் இக்கிளர்ச்சி மகத்தான பங்கு ஆற்றியுள்ளது. இக்கிளர்ச்சியில் இடதுசாரிகள் முக்கிய பாத்திரம் வகித்து ஒற்றுமையைக் கட்டிக் காப்பதுடன், தாராளமய கொள்கைகள் பற்றிய மாயைகளை கிழித்தெறியவும், வகுப்புவாதத்தை முறியடிக்கவும், சுருங்கச் சொன்னால் கார்ப்பரேட் ஹிந்துத்வாவை அம்பலப்படுத்தவும் திறமையாக செயல்பட வேண்டும்.
Leave a Reply