– சிந்தன்
கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.
2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”
காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.
புதிய தலைமுறை தலைவர்கள்:
கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.
இளைஞர்களும் புதிய மாற்றமும்:
முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.
திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில் அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.
இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.
8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.
அரசமைப்பில் மாற்றங்கள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.
பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்
கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.
சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.
பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.
உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.
நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’
இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும் அது கூறுகிறது.
பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில் 319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.
முன்னணியினர் குறித்த கொள்கை
“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”
புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.
கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.
கியூபாவின் கடந்த காலம்
கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.
1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.
சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.
உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.
இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.
கட்சியே வழிநடத்துகிறது
கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).
கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.
இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.
மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.
“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”
***
Leave a Reply