என். குணசேகரன்
1990ஆம் ஆண்டின் துவக்கத்தில் சென்னையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவராக தோழர் மைதிலி சிவராமன் பொறுப்பேற்று செயலாற்றினார்.
மாநாட்டில் தோழர் மைதிலி சிவராமன் ஆற்றவேண்டிய வரவேற்புரை வழக்கமாக பேசப்படுகிற வரவேற்புரையாக இல்லாமல், மாணவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை குறிப்பதாகவும், மாணவர் இயக்க வரலாறு பற்றியதாகவும் அமையவேண்டும் என்று கேட்டிருந்தோம். குறிப்பாக சென்னை நகர மாணவர் இயக்க வரலாறு சுருக்கமாக இடம் பெறவேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
அவர் அந்த உரைக்காக ஏராளமான தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். இதுகுறித்து மாதர் சங்க அலுவலகத்தில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட பல தலைவர்களோடு தொலைபேசியில் பேசி விவரங்கள் சேகரித்தார். அவரது டைரியில் இதற்காக எழுதப்பட்ட குறிப்புகள் ஒரு நூல் எழுதும் அளவுக்கு வந்திருக்கும்.
மாநாட்டில் அவரது உரை மிகச்சிறந்த உரையாக அமைந்தது. இருபது நிமிடம் உரையாற்றும் வகையில் சுமார் நான்கு பக்க அளவிற்கு தயாரிக்கபட்ட அந்த குறிப்பிற்காக அவர் மேற்கொண்ட முயற்சி பிரமிப்பை ஏற்படுத்தியது.
அவரது அனைத்து எழுத்துக்கள், கட்டுரைகளிலும் அவரது கடும் முயற்சிகளும், ஆழமான சிந்தனையும் வெளிப்படும். அவரது எழுத்துக்கள் துல்லியமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் மார்க்சிய தர்க்கத்துடனும் இருக்கும்.
அன்றைக்கு மாணவர் இயக்கத்திற்கு அறிவாற்றல் நிறைந்த தரவுகளை வளங்கும் மையமாக (intellectual resource centre) அவர் திகழ்ந்தார். ஏராளமான வகுப்புகள், கலந்துரையாடல்கள் என மாணவர்களுக்கு வழிகாட்டினார்.
மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டு பல கட்டுரைகளை வழங்கினார். ஒருமுறை ஆசிரியர் குழு கூட்டத்தில் குறைந்த படிப்பறிவு உள்ள தோழர்களுக்கு நமது எழுத்துக்கள் சேர்வதில் சிரமம் இருக்கிறது என்று ஒரு கருத்து வந்தது .அதற்கு அவர் அளித்த விளக்கம் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தோழரின் தேவைக்கு ஏற்ப நமது பத்திரிக்கைகள், கட்டுரைகள் பிரசுரங்கள் கொண்டு சேர்க்க திட்டமிட வேண்டும். ஆனால் இயக்கத்திற்கு தலைமை தாங்குகிற, வழிகாட்டுகிற தோழர்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் தத்துவார்த்த மட்டம் உயரும் வகையில் படைப்புக்களை எளிமையாகவும், அதே நேரத்தில் தரத்தில் சமரசம் செய்யாமலும் அளிக்க வேண்டும் என்றார். இதுபோன்று பல பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வுகளை முன் வைத்தார்.
“மார்க்சியமும் பெண்ணுரிமை இயக்கமும்” என்கிற தலைப்பில் அவர் உருவாக்கிய பாடக்குறிப்பு கட்சி கல்விப் பணிக்கு பெரிதும் உதவியது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த நூலில் ஒரு கட்டுரையை நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தோழர் கருணாகரன் அவர்கள் தேடிக் கண்டுபிடித்து நம்மிடம் அளித்திருந்தார்; அதனை கடந்த ஆண்டு மார்சிக்சிஸ்ட் இதழில் வெளியிட்டிருந்தோம். தஞ்சை பகுதியின் நில உடைமை உறவுகள் பற்றி அவர் எழுதிய சிறந்த ஆய்வுக் கட்டுரை வெண்மணியின் பொருளியல்-சமூக வேர்கள் அவரது கள ஆய்வில் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அவரது மார்க்ஸிய நெறியிலான ஆய்வு திறன் மிக நுட்பமானது; மிக மேன்மையானது. அவரது எழுத்துக்கள் அனைத்தும் இந்த மேன்மையை உள்ளடக்கியதாகவே இருந்தது.
2003இல் பேராசிரியர் கே என் பணிக்கர் அவர்களோடு கோயம்புத்தூரில் வகுப்புவாத பயிலரங்கம் இரண்டு நாள் அமர்வுகளாக நடைபெற்றபோது தோழர் மைதிலி சிவராமன் அந்த இரண்டு நாட்களும் எங்களோடு இருந்தார்.தமிழகத்தில் வகுப்புவாத சவாலை எதிர்கொள்வது குறித்த கலந்துரையாடலில் அவர் மிகச் சிறந்த பங்களிப்பினை நிகழ்த்தினார்.
சிறந்த களப் போராளியாகவும், உயரிய மார்க்சிய கருத்தியல் போராளியாகவும் ஒரு தோழர் செயல்படுவது அரிதானது. அப்படிப்பட்ட அரிதான தோழர் மைதிலி சிவராமன் அவர்கள்.. !
Leave a Reply