வெங்கடேஷ் ஆத்ரேயா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் மைதிலி சிவராமன் 2021 மே 30 அன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக இயக்கமும் வர்க்க சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வந்த ஓர் அர்ப்பணிப்புமிக்க போராளியை இழந்திருக்கின்றனர்.
மைதிலி சிவராமன் ஜனநாயக இயக்கத்தில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்பட்டு வந்தார். குறிப்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும், சிஐடியு-விற்கும் பல பத்தாண்டுகள் சிறந்த பங்களிப்பினைச் செய்திருக்கிறார். அவரது அயரா உழைப்பு, எளிமை, அனைவரையும் எளிதில் அரவணைத்துக் கொள்ளும் பண்பு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் பேசக்கூடிய வல்லமை ஆகியவை மூலமாக, கட்சி மற்றும் அதனுடைய வர்க்க, வெகுஜன அமைப்புகளில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி, அதற்கும் அப்பால் உள்ள வெகுஜன மக்களின் அன்பையும், மரியாதையையும் பெற்றிருந்தார்.
பொது உடைமை இயக்கத்தில் இணைந்த மைதிலி
தோழர் மைதிலி, 1960களின் முற்பகுதியில் முதுநிலை பட்டப்படிப்பைத் தொடர அமெரிக்கா சென்று 1968இல் சென்னைக்குத் திரும்பினார். மைதிலி அமெரிக்காவில் வசித்தபோது அங்கே நிறவெறிக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அலை அலையாக அதிகரித்துக் கொண்டிருந்தன. மேலும் சின்னஞ்சிறிய சோசலிஸ்ட் கியூபா, பலம்பொருந்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியுடன் நின்ற காலம் அது. (இப்போதும் அது நிற்கிறது) அமெரிக்கா, 1960களின் மத்தியில் வியட்நாமிற்கு எதிராக மிகவும் கொடூரமான முறையில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஏவியது. அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக, அமெரிக்கப் பல்கலைக் கழக வளாகங்களில் யுத்த எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. ஐ.நா. மன்றத்திலும் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும், சோசலிச நாடுகளும் அணிசேரா இயக்கமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் தங்கள் குரல்களை எழுப்பின. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமத்துவம் மற்றும் நீதிக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வலுவான இயக்கங்களால் மைதிலி ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, கியூபா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ அவருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் முக்கியம். தோழர் மைதிலி, தன் படிப்பை முடித்தபின் சிறிது காலம், ஐ.நா.வின் காலனி ஆதிக்க எதிர்ப்பு குழுவில் ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். அமெரிக்காவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கல்வியாளரான இளம் மைதிலியை முற்போக்கான முறையில் சமூக மாற்றத்திற்கான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுக்க உதவின.
மைதிலி சென்னை திரும்பியபோது தமிழ்நாட்டிலும் சென்னையிலும் தீவிரமடைந்து வந்த வர்க்கப் போராட்ட அலைகள் அவரை களப்போராளியாக ஆக்குவதில் பெரும் பங்காற்றின. காவேரி டெல்டா பகுதியில் உள்ள கீழவெண்மணி கிராமத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 44 விவசாயத் தொழிலாளர்களை, கூலி உயர்வு கேட்டார்கள் என்பதற்காகவும், செங்கொடியை இறக்க மறுத்த காரணத்திற்காகவும், நிலப்பிரபுவின் குண்டர்கள் குடிசைக்குள்ளிருந்த அவர்களை வெளியே வரமுடியாமல் வெளியில் பூட்டிவிட்டு தீ வைத்துக் கொளுத்திக் கொன்றார்கள். கீழ வெண்மணி சம்பவம் தொடர்பாக அவர் மிகவும் கவனத்துடன் மேற்கொண்ட ஆய்வுகள், அவருக்கு விவசாயப் பிரச்சனை மீது ஓர் ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. கீழவெண்மணி படுகொலைக்கு முன்பும் பின்பும் கட்சி மற்றும் அதன் விவசாய அரங்கப் பணிகளில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராகவும் மேற்கொண்ட வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை மிகவும் விரிவான அளவில் எடுத்துச் செல்வதில் அவர் முக்கியமான பங்கினை ஆற்றினார். 1970களில் சிஐடியு-வின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்தின் தீரமிகு போராட்டங்கள் பல, குறிப்பாக சென்னையைச் சுற்றி, நடந்துகொண்டிருந்தன. இவை அனைத்தும் தோழர் மைதிலியை உடனடியாகப் போராட்டப் பாதையில் இறங்க வைத்தது.
கீழ வெண்மணி சம்பவம் குறித்து மைதிலி எழுதிய ஒரு கட்டுரையை சென்னையில் தொழிலாளர் வர்க்கத்தின் முதுபெரும் தலைவராக இருந்த தோழர் வி.பி. சிந்தன் படித்தவுடன் மைதிலியைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக ஒரு விவாதத்திற்காகத் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். விரைவில் மைதிலி வி.பி.சி-யைச் சந்தித்தார். எந்தப் பாதையில் செல்வது என்பதை விரைந்து முடிவெடுக்கும் தருணமாக இந்தச் சந்திப்பு அவருக்கு அமைந்தது. அதன்பின்னர் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். வெகுவிரைவிலேயே அதன் முழுநேர உறுப்பினராகவும் மாறினார். கட்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவரை கட்சியின் சென்னை மாவட்டக் குழு உறுப்பினராகவும், பின்னர் இருபதாண்டுகளுக்கும் மேலாக மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றுவதற்கு இட்டுச்சென்றன.
தொழிற்சங்க அரங்கில் மைதிலி
1970களில் தோழர் மைதிலியின் பிரதானமான பணி தொழிற்சங்க அரங்கில் இருந்தது. அந்த சமயத்தில் சென்னையைச் சுற்றிலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் ஏராளமாக இருந்தன. அவற்றில் பலவற்றில் பெண்கள் அதிக அளவில் தொழிலாளர்களாக இருந்தார்கள். இவர்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கினை மைதிலி வகித்தார். சிஐடியு தலைவர் என்ற முறையில் தோழர் மைதிலி பல தொழிலாளர் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கவை டேப்ளட் (Tablet) என்னும் மருந்து நிறுவனத்தில் நடத்திய போராட்டம், பாலு கார்மெண்ட்ஸ் (Balu Garments) மற்றும் பல்வேறு ஆயத்த ஆடைகள் நிறுவனங்களில் நடத்திய போராட்டங்களைக் குறிப்பிடலாம். மைதிலி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குவாரி தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் தலைமை வகித்தார். அவர் தன் வேலைகளை ஒருசில சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளுடன் சுருக்கிக் கொள்ளவில்லை. யூனியன் கார்பைடு, மெட்டல் பாக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட பல பெரிய நிறுவனங்களின் சங்கங்களிலும் தலைவராகவும், துணைத் தலைவராகவும் செயல்பட்டார். 1975-1977 காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த பொழுது வி.பி.சி. போன்ற முன்னணித் தலைவர்கள் தலைமறைவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, தோழர் மைதிலி கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவற்றையும் அவர் சிறப்புற நிறைவேற்றினார். பல தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில் அவரை பேச அழைப்பார்கள். அவரும் போராடும் தொழிலாளர்கள் மத்தியில், போராட்டம் நியாயம் என்றும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் உணர்த்தி நம்பிக்கையை உருவாக்கும் விதத்தில் பேசுவார்.
1979இல் சென்னையில் சிஐடியு-வின் தேசிய மாநாடு நடைபெற்றபோது, அகில இந்திய உழைக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக்குழு உருவானது. தோழர் மைதிலி அதன் தேசியத் தலைமையில் ஓர் அங்கமாக மாறினார். அவர், தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழுவின் கன்வீனராகப் பல ஆண்டுகள் இருந்தார். பல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்களில் சிஐடியு-வின் பதாகையின் கீழான ஒருங்கிணைப்புக் குழுவை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர் வெற்றி பெற்றார். சிஐடியு-வின் செம்பதாகையின்கீழ் வருவதற்குத் தயங்கிக்கொண்டிருந்த பல மத்திய தர ஊழியர் சங்கங்களை தன்னுடைய இதமான, ஆனால் உறுதியான பேச்சுத் திறமையினால் வெற்றிகொண்டார்.
மாதர் அரங்கில் தோழர் மைதிலியின் மகத்தான பங்கு
தோழர் மைதிலி, 1974இல் தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும், தலைவர்களில் ஒருவராகவும் இருந்து முதுபெரும் தலைவர்களான கே.பி.ஜானகி அம்மா மற்றும் பாப்பா உமாநாத் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உருவானபோது, தமிழ்நாட்டின் ஜனநாயக மாதர் சங்கம் அதன் ஒரு பிரிவாக மாறியது. தோழர் மைதிலி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய அளவிலும், மாநில அளவிலும் முக்கியமான தலைவராக வெகு காலம் செயல்பட்டார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் செயல்பட்டபோது தோழர் மைதிலி செலுத்திய பங்களிப்புகள் மிகவும் விரிவான அளவில் அங்கீகாரத்தைப் பெற்று, பாராட்டப்பட்டன. மைதிலி ஜனநாயக மாதர் இயக்கத்தில் ஆற்றிய பங்களிப்புகள் நிகரற்றவை. குறிப்பாக, தமிழ்நாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெண் சமத்துவத்திற்கான பணிகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேசுபொருள் ஆகியதிலும், குறிப்பிட்ட பாலினப் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கண்ணோட்டங்களுடன் வரும் மாதர் அமைப்புகளின் கூட்டு மேடைகளை உருவாக்கியதிலும், ஆக்கபூர்வமாக அவற்றை செயல்பட வைத்ததிலும் அவர் பணி முத்திரை பதித்தது. அவர் ஆற்றிய உரைகளும் அவரது அணுகுமுறையும் பலதரப்பினராலும் வரவேற்கப்பட்டு ஜனநாயக மாதர் சங்கத்தின் செயல்பாடுகளை அளவிலும் சரி, குணாம்சத்திலும் சரி விரிவான அளவிற்குக் கொண்டு செல்வதற்கு உதவியது. எனினும், தோழர் மைதிலி எந்தச் சமயத்திலும் தன் தெளிவான வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து நழுவியது கிடையாது. பாலின சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய இரண்டிலுமே, கட்சித் திட்டத்தின் புரிதலுடன் அவர் ‘ஐக்கிய முன்னணி’ உத்திகளை மிகச்சிறந்த முறையில் முன்னெடுத்துச் சென்று நடைமுறைப்படுத்தினார்.
ஜானகி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவுகளையும் தியாகத்தையும் செயல்பாடுகளையும் போற்றும் விதமாக கே பி ஜானகி அம்மா பெண்கள் குழந்தைகள் நல அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதனை செயல்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட்டார். பெண் சிசுக்கொலை அன்றைய காலகட்டத்தில் அதிகமாக நடைபெற்ற மதுரையில் கருவேப்பிலை கிராமத்தில் விவசாய தொழிலாளி குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பணியிலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குழந்தை தொழிலாளர்களுக்கான பகுதிநேர கல்வி அளிக்கும் பணியிலும் அறக்கட்டளையை செயல்படுத்தினார். அரசிடம், நிர்வாகத்திடம் கோரிக்கைகளை ஒருபுறம் வைத்து போராடிக் கொண்டே மறுபுறம் ஆக்கப்பூர்வமான சேவைசார் பணிகளை நடத்துவதில் இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை மைதிலி வலியுறுத்தினார்.
பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களில் நீதிக்காக பெருமளவு களப்போராட்டங்களை ஜனநாயக மாதர் சங்கம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சட்ட, நீதிமன்ற தலையீடுகளிலும் இயக்கத்தின் பார்வையை திருப்பினார். மாநில மையத்தில் சட்ட உதவி மையம் உருவாகி செயல்படுவதற்கான அடித்தளத்தை அவர் அமைத்தார்.
தலித் மற்றும் பழங்குடி பெண்கள்
தலித் பெண்கள் பிரச்சனைகளுக்கான மண்டல வாரியான சிறப்பு மாநாடுகள் நடத்தியதும் அதற்கு முன்னதாக கள ஆய்வுகளை உறுதிப்படுத்தியதுமான செயல்பாட்டில் மைதிலியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதே போல் அரசு வன்முறையான வாச்சாத்தி பிரச்சினையில் உடனடியாக தோழர் பாப்பாவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் சொன்னதோடு மட்டுமல்லாமல், கிடைத்த விவரங்களை ஆவணப்படுத்தி மாநில எஸ். சி. & எஸ். டி கமிஷனிடம் அளித்த அந்த நடவடிக்கை, பின்னர் கமிஷன் அறிக்கையாக வந்து நீதிமன்ற வழக்காகவும் மாறியதில் முக்கிய பங்கு வகித்தது. ஆவணப் படுத்துவதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து மைதிலி வலியுறுத்தினார்.
எழுத்தும் பேச்சும்
தோழர் மைதிலி ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். பொதுக்கூட்டங்களில் அவர் தான் கூறவரும் விஷயங்களை கூட்டத்தில் குழுமியிருக்கும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் எடுத்துச் செல்லும் திறமை பெற்றவர். அவருடைய பேச்சில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும், வாக்கியங்களும் மிகவும் எளிமையாக இருப்பதுடன், அவற்றை அவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமும் அனைவரையும் ஏற்கச்செய்யும் விதத்தில் அமைந்திடும். மென்மையாகப் பேசினாலும் மைதிலி உருக்கு போன்று மிகவும் உறுதியான தோழர். அதேபோன்று கொள்கை சார்ந்த அனைத்துக் கேள்விகள் குறித்தும் அவரது உரைகள் தெள்ளத் தெளிவாகவே இருக்கும். அவர் கூட்டத்தினரிடையே கொண்டுசெல்லும் செய்தியில் எவ்விதமான சந்தேகமும் ஏற்படாது. கட்சிக் கல்விக்காக அவர் பல முக்கியமான குறிப்புகள் (எடுத்துக்காட்டாக, பெண்கள் பிரச்சனை குறித்து, கட்சி வகுப்புகளில் பயன்படுத்துவதற்காக அவர் எழுதியுள்ள குறிப்புகள்) எழுதியிருக்கிறார். இத்துடன் கிளர்ச்சிப் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதற்காகவும் பல சிறுபிரசுரங்களையும் அவர் எழுதியிருக்கிறார். அதேபோன்று ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல கட்டுரைகளும் அவர் எழுதியிருக்கிறார். மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று தோழர்களின் தத்துவார்த்த தரத்தை மேம்படுத்தும் பணியையும் மைதிலி செய்தார்.
செவ்வணக்கம் தோழர் மைதிலி!
(தரவுகள் தந்து உதவிய தோழர்கள்: வாசுகி, சந்திரா, A. K. பத்மநாபன், வே. மீனாட்சிசுந்தரம்)
Leave a Reply