மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


களப் பலியாகும் கூட்டாட்சி தத்துவம்


வீ.பா.கணேசன்

வணிகம் செய்வதென்ற பெயரில் இந்தியக் கடற்கரையில் வந்திறங்கி, படிப்படியாக நாட்டை கபளீகரம் செய்த பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்த,  இந்தியாவை தங்கள்  பிடிக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையை எட்டுவதற்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆயிற்று. இந்த அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் வேலூர் கோட்டையில் நடைபெற்ற கலகத்திலிருந்து தொடங்கி சிப்பாய் எழுச்சி வரை ஆங்காங்கே தன்னெழுச்சியாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை தனது நேரடி ஆளுகைக்குள் கொண்டு வந்தது.  தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வகைப்பட்ட விடுதலைப் போராட்டங்களின் விளைவாக அடுத்த 90 ஆண்டுகளுக்குள்ளாகவே  தனது ஆதிக்கத்தை கைவிட்டு விட்டு நாட்டிலிருந்தே வெளியேற வேண்டிய நிலை உருவானது.

மாநிலங்களின்  ஒன்றியம்

நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து அரசியல் நிர்ணய சபையில் நடந்த மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு உருவான இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், மாநிலங்களின் ஒன்றியம் என்றே இந்தியாவை வரையறை செய்துள்ளது. இதன்படி அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது பட்டியல் ஒன்றிய, மாநில அரசுகளின் வரம்புகள், பொறுப்புகள், கடமைகள் குறித்து விரிவாக வகைப்படுத்தியிருந்தது.  நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவு, குடியுரிமை போன்றவை ஒன்றிய அரசின் பொறுப்பில் இருந்த அதே நேரத்தில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான மருத்துவம், கல்வி போன்றவை மாநிலங்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. மேலும் மக்களுக்கான இதர பல வசதிகளை வழங்கவேண்டிய கடமையைக் கொண்டதாகவும் மாநிலங்கள் அமைந்துள்ளன.

மேற்கூறிய கடமைகளை மாநிலங்கள் நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கென ஓர் ஏற்பாட்டையும் அதே அரசியல் அமைப்புச் சட்டம் செய்துள்ளது. இதன்படி வருமான வரி, சுங்க வரி போன்ற பல்வேறு வரிகளின் மூலம் ஒன்றிய அரசு பெறும் வருவாயை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு என ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு வருவாய் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 280வது பிரிவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது தளம்

அதேபோன்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் 73 மற்றும் 74வது திருத்தங்களின் மூலம் மாநிலங்களில் மூன்றாவது தளத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி மற்றும் நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டினை வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு வரையறுக்கப்பட்டு, அவற்றுக்கான நிதி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் முறையாக வழங்கப்பட வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் கூட்டாட்சி அமைப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் என்றும் நம்பப்பட்டது. இவையும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முறையே 11வது மற்றும் 12வது பட்டியலாக சேர்க்கப்பட்டிருந்தன. இத்தகைய சட்டரீதியான ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்த போதிலும் நடைமுறையில் மக்களின் அன்றாட, நேரடிப் பார்வையில் செயல்படும் இத்தகைய அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் உரிய கால இடைவெளியில் இவற்றுக்கான  தேர்தல்கள், அவற்றுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஆகிய முயற்சிகளை இடதுசாரிகளின் தலைமையிலான அரசுகளைத் தவிர, கட்சி வேறுபாடின்றி மற்ற முதலாளித்துவ கட்சிகளின் அரசுகள் முன்னெடுக்கவில்லை என்பதே கள நிலைமை ஆகும்.

நிதிப் பரிமாற்றம்

அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் 1951ஆம் ஆண்டு முதல் நிதிக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு வந்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்  ஆளுநரான டாக்டர் ஒய். வி. ரெட்டியின் தலைமையில் அமைக்கப்பட்ட 14வது நிதிக்குழு மொத்த வரிவருவாயில் 42 % மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 15வது நிதிக் கமிஷனும் இந்த விகிதத்தை தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமெனவே பரிந்துரை செய்தது.

நாட்டில் நெருக்கடி நிலை நிலவிய தருணத்தில் மாநிலங்கள் பட்டியலில் இருந்த கல்வியானது 1976ஆம் ஆண்டில் 47வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்தத் திருத்தம்தான் இன்று ‘ஒரே நாடு, ஒரே கல்வி’ என்பதாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், இதுவரை கல்வித் துறையில் சாதனை படைத்து வந்துள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி, சனாதன கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வித்திட்டத்தை நாட்டின் மீது திணிப்பதற்கான வாய்ப்பை பாஜக அரசுக்கு ஏற்படுத்தியது எனலாம். இதுபோக பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையில் மாற்றங்களைக் கொண்டு வர மாநிலங்களோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கூட பாஜக அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் மாநிலங்களின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றத் தேவையான நிதியைக் கோரி ஒன்றிய அரசின் தயவிற்குக் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. மேலே குறிப்பிட்டது போல ஒன்றிய அரசின் மொத்த வரிவருவாயில் 42%-ஐ மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் கூட நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கலால் போன்ற வரிகளை அப்படியே நீடிக்கச் செய்து அவற்றின் மீதான கூடுதல் தீர்வை, உபரி வரி போன்றவற்றின் மூலம்  வருவாயில் கணிசமான பகுதியை தன் வசம் வைத்துக் கொள்ளும் முறையை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது. அனைத்து வகையான சேவைகளுக்கும் வரி விதிப்பது என்ற வகையில் ஒன்றிய அரசின் வருவாயை தொடர்ந்து ஆண்டுதோறும் அதிகரித்து வந்த அன்றைய காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளே இதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்றால் மிகையாகாது.

ஒரே நாடு: ஒரே வரி

இதன் உச்சகட்டமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டு வந்த வணிக ரீதியான வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி (ஜி எஸ் டி) என்ற பெயரில் நாடு முழுவதிலும் ஒரே மாதிரியான வரி என்ற முழக்கத்தை முன்வைத்து, மாநிலங்களின் வரி வருவாய் முழுவதையும் ஒன்றிய அரசு தன் வசம் எடுத்துக் கொண்டதன் விளைவாக மாநிலங்கள் தங்களது செலவினங்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் இவ்வாறு நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வசூலிக்கப்பட்ட வரி வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் ஒன்றிய அரசு காலதாமதம் செய்து வருகிறது. மாநிலங்களுக்கு வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்ட இழப்பீட்டுத் தொகையையும் கூட முழுமையாக வழங்க ஒன்றிய அரசு தவறியுள்ளது.  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தங்கள் நிதித் தேவைகளுக்கு பொதுச் சந்தையில் கடன் திரட்ட  அனுமதிக்கப்பட்டுள்ள மாநில உள்நாட்டு உற்பத்தி அளவில் 3 சதவீதத்திற்கு  அப்பால் மேலும் 2 சதவீத அளவிற்கு  மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்குக் கடன் வாங்கிக் கொள்ளலாம் என மிகுந்த கருணையுடன் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதிலும் கூட மாநில அரசின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் பல நிபந்தனைகள் அடங்கியுள்ளன. 

கொரோனாவும் ஓர் ஆயுதமாய்

ஒன்றிய அரசையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு மாநிலங்களை தள்ளியுள்ள இத்தகைய சூழலில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது என்ற பெயரில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கூட்டாட்சிக் கட்டமைப்பினை மேலும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. நாடு இதுவரை கண்டிராத வகையில் மாநிலங்களின் அதிகார வரம்பில் இருக்கும் வேளாண்மை, தொழிலாளர் நலன் ஆகிய துறைகளில் பெருவணிக நிறுவனங்களுக்கு ஆதரவான வகையில் பாரதூரமான மாற்றங்களையும் ஒன்றிய அரசு மேற்கொண்டது. நாட்டின் உழைப்பாளிகளில் பெரும்பகுதியினரான தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகிய இரு பிரிவினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் விதிமுறைகள் ஆகியவை இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

ஏற்கனவே தமிழக விவசாயிகள் நிவாரணம் கோரி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க புதுடெல்லியில் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தியபோது முற்றிலும் பாராமுகத்தோடு நடந்து கொண்ட அதே மோடி அரசுதான், இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020 ஆகஸ்ட் 9 முதல் இன்று வரை (300 நாட்களுக்கும் மேலாக) எழுப்பி வரும் விவசாயிகளின் ஒன்றுபட்ட உரத்த குரலை செவிமடுக்க மறுத்து, அவர்களின் வீரஞ்செறிந்த இயக்கத்தை கொச்சைப்படுத்தும் முறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிகாரப் பறிப்பு

இவ்வகையில் ஒன்றிய அரசின் அதிகாரங்கள் மேலும் மேலும் ஒன்றுகுவிக்கப்படுகின்றன என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில்தான் மோடி அரசின் சமீப கால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தை வாராது வந்த மாமணியாகப் பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்ற செயல்பாடுகளையே முடக்கி வைத்து, தங்கள் விருப்பம்போல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கி மறைமுகமாக தனது ஆட்சியை அங்கு நிறுவ முற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஆளுநரை பயன்படுத்தி ஆட்சியை சீர்குலைத்ததும் பாஜக அரசுதான். இதே நிலைதான் மத்திய அரசின் துணைநிலை ஆளுகைப் பகுதியான லட்சத் தீவுகளுக்கும் நேர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக அங்கு நியமிக்கப்பட்டுள்ள ப்ரஃபுல் கோடாபாய் படேல் (இவர் குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்தபோது  உள்துறை  துணை அமைச்சராக செயல்பட்டவர்; சொராபுதீன் வழக்கின் காரணமாக அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகியபோது அவரது பொறுப்பில் இருந்த துறைகள் அனைத்தையும் கவனித்தவர் என்பதோடு  சங் பரிவாரத்தின் தீவிர சேவகருமாவார்)  லட்சத் தீவுகள் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள சிறுபான்மை முஸ்லீம் மக்கள் பாரம்பரியமாக கேரள மாநிலத்துடனும், அதன் கலாச்சாரத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அந்த மக்கள் மீது  திணித்துள்ளார்.

பாரபட்சப் போக்கு

கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசுதான்  நாடு முழுவதிலும் காசநோய், ஃபோலியோ, தட்டம்மை, பெரியம்மை  போன்ற நோய்களுக்கென அனைவருக்குமான தடுப்பூசி திட்டங்களை  இதுவரையில் பொறுப்பெடுத்து மாநிலங்களின் மூலம் செயல்படுத்தி வந்தது. இத்தகைய திட்டங்களின் மூலம்தான் இந்த நோய்கள் நம்  நாட்டிலிருந்து அகற்றப்பட்டன என்பதே உண்மை. தடுப்பூசிகள் உற்பத்தியில் உலகத்திலேயே மிகப்பெரும் நாடாக இந்தியா உருவாக வழிவகுத்த பொதுத்துறை மருந்து உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, கொரோனாவிற்கான தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்களே உற்பத்தி செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து இவ்வாறு உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களே தடுப்பூசியின் விற்பனை விலையை தங்கள் விருப்பம்போல் நிர்ணயம் செய்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. இதன் விளைவாக , தடுப்பூசிகளுக்கு  மூன்று வகையான விலைகளை அறிமுகம் செய்து பாரபட்சமான போக்கு மேற்கொள்ளப்படுவதையும் அது அங்கீகரித்துள்ளது.

அதிலும் 2021-22 நிதியாண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கென ரூ. 35,000 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய இந்திய மக்கள் தொகையான 132 கோடி பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இந்தத் தொகையே போதுமானதாக இருக்கும். இந்த நிதி ஒதுக்கீட்டையே மறைத்து விட்டு மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசிகளை அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு ஒன்றிய அரசு மாநில அரசுகளை தள்ளியுள்ளது. இந்தத் தொகை எவ்வாறு செலவு செய்யப்பட உள்ளது? என உச்சநீதி மன்றம் இப்போது கேள்வி எழுப்பியுள்ளது.

முரணான பேச்சு

இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது ஒன்றிய அரசின் எத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து குரல் கொடுத்து வந்தாரோ, அதே பாரபட்சமான கொள்கைகளைத்தான் இப்போது அவரும் பின்பற்றி வருகிறார் என்பதே உண்மை. ஒருவேளை டெல்லி அரியணை விக்கிரமாதித்தன் அரியாசனமோ என்னவோ! படியேறியதும் ஒரு பேச்சு, படியில் இருந்து இறங்கியதும் ஒரு பேச்சு என்பதாகத்தான் அவரது நடவடிக்கை இருக்கிறது.

இவை அனைத்துமே நமக்கு ஒரு விஷயத்தை தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. பாஜகவின் விஸ்வகுருவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைத் தன்மையான அதிகார மையப்படுத்தல் என்பதை நாட்டின் அனைத்து அமைப்புகளின் மீதும் திணிக்கும் வேலையையே  பாஜகவின் தலைமையிலான ஒன்றிய அரசின் மூலம் அது சட்டரீதியாகச் செய்து வருகிறது என்பதே அந்த விஷயமாகும். மொழிரீதியாகவும், பண்பாட்டின் வழியாகவும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட நாட்டின் பல்வேறு  பகுதிகளில் அவற்றின் உள்ளார்ந்த நல்லியல்புகளை எல்லாம் அழித்தொழித்து  தனது மதரீதியான, பிளவுவாத நச்சுணர்வை மேலும் ஆழமாக வேரூன்றச் செய்வதற்கான அனைத்து வழிகளிலும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதையே நாம் காண்கிறோம்.

ஒற்றைத் தன்மை

நாடு விடுதலை பெற்ற பிறகு மொழி வாரி மாநிலங்களை அமைப்பதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் மேற்கொண்டதைத் தொடர்ந்தே இன்றைக்குள்ள பெரும்பாலான மாநிலங்கள் உருவாயின. மொழி மட்டுமின்றி மக்களின் கலாச்சாரமும் இதில் உள்ளடங்கியுள்ளது. எனவே அவற்றை உறுதிப்படுத்துவதாக இந்த மாநிலங்கள் அமைய வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கையை எதிர்த்து அன்று குரல் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். ஸின் மக்கள் விரோத, பிளவுவாத சிந்தனைகள்தான் இன்று பாஜக அரசினால் மிக வேகமாக பல துறைகளிலும் அமலாகிக் கொண்டு வருகின்றன. அரசியல் அமைப்புச் சட்ட ரீதியான அமைப்புகள் ஒவ்வொன்றும் சீரழிக்கப்பட்டு, மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்களின் நலன்களுக்கு அடியொற்றி சேவகம் செய்யும் இன்றைய ஒன்றிய அரசு, மொழி, கல்வி, பண்பாடு ஆகிய அனைத்திலும் ஒற்றைத் தன்மையை புகுத்தி தனது நீண்ட கால கனவான அகண்ட பாரதத்தை உருவாக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் மாநிலங்களின் இறையாண்மை இதில் முதல் களப்பலியாக ஆகியுள்ளது.

இத்தகைய பின்னணியில் உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்க இந்தப் பிரிவினை சக்திகளின் சதித்திட்டத்தை மக்களிடையே அம்பலப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை கம்யூனிஸ்டுகளுக்கு உள்ளது. அவ்வகையில் ஆர் எஸ் எஸ் ஸின் நச்சு சிந்தனைகளுக்கு எதிரான ஒரு பேரியக்கத்தை கட்டமைக்க அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றுபடுத்தி, தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகவும், இந்த பிரிவினை சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்களின் மூலமாகவும், தொடர்ந்த அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை இன்று இடதுசாரி சக்திகளின் முன்னால் உள்ளது.  நாட்டின் இறையாண்மையை, மாநிலங்களின் இறையாண்மையை நிலைநிறுத்தவும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு இந்தக் கடமையை நிறைவேற்றுவோம்.   Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: