மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சீய -லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்: சில குறிப்புகள்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கார்ல் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய மார்க்சீயத்தை மேலும் செழுமைப்படுத்தி, சமகாலப்படுத்தினார் தோழர் லெனின். மார்க்சீயம் சமகாலத்தில் மார்க்சீய- லெனினியமாகவே பொது உடமை இயக்கத்தில் கருதப்படுகிறது. பொது உடமை இயக்கங்களை நிராகரிக்கும் பல ஆய்வாளர்களும் அறிவுஜீவிகளும் மார்க்சீயத்தையும் லெனினியத்தையும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இவர்களில் சிலர் மார்க்சீயத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனால் லெனினியத்தை நிராகரிப்பதாகவும் பிரகடனம் செய்கின்றனர். வேறு சிலர், லெனினியம் என்பது ஜார் கால ரஷ்யாவிற்கு, அன்று நிலவிய சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராட பயன்பட்ட தத்துவம் என்றும், இன்றைய உலகிற்கு – பல ஜனநாயக மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சமகால உலகிற்கு – லெனினியம் பொருந்தாது என்றும் கூறுகின்றனர். இன்னும் பலர் மார்க்சீயம்/லெனினியம் உலகளாவிய சமூக ஆய்வுக்கான அணுகுமுறையாகவோ சமூக மாற்றுக்கான கருவியாகவோ  இருக்க முடியாது என்றும் நாட்டுக்கு நாடு மார்க்சீயம் வேறுபடும்; வேறுபடவேண்டும் என்றும் கூறுகின்றனர்.  இவர்கள் அனைவரும் இணையும் புள்ளி பொது உடைமை இயக்க எதிர்ப்பு, நிராகரிப்பு என்பதாகும். இப்பார்வையை நாம் முழுமையாக நிராகரிக்க வேண்டும். இப்பார்வை பல வரலாற்றுக் கட்டங்களில், நாட்டுக்கு நாடு வெவ்வேறு வடிவங்களில் தலைதூக்கிக் கொண்டே இருக்கிறது. இதில் வியப்பு ஒன்றுமில்லை. ஏனெனில் இத்தகைய தவறான பார்வைகள் பொது உடைமை எதிர்ப்பு, நிராகரிப்பு தன்மையில் உள்ளதால் முதலாளித்துவ நாடுகளில் ஆளும் வர்க்கங்களுக்கு இவை சாதகமானவை; எனவே ஊக்குவிக்கப்படுபவை. இந்தியாவிலும், தமிழகத்திலும் வேறுபல அந்நிய தத்துவப் பார்வைகள் வலுவாக உள்ள சூழலில் மார்க்சீய அணுகுமுறையை பின்பற்றுவதாக தங்களை கருதிக்கொள்ளும் அறிவுஜீவிகளிடம் இங்கு நாம் குறிப்பிட்டுள்ள போக்கு காணப்படுகிறது. ஆகவேதான் அனைத்து சமகால மானுட சமூகங்களுக்கும் மார்க்சீய-லெனினிய அணுகுமுறை பொருந்தும் என்ற புரிதலை நிராகரித்து, நாட்டுக்கு ஏற்ற, இடத்துக்கு ஏற்ற பல ‘மார்க்சீயங்கள்’ தேவைப்படுவதாக இவ்வகை அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பிரச்சினை பற்றி மேலும் புரிந்துகொள்ளவும், ஒரு அறிமுக விளக்கம் அளிக்கவும் இக்கட்டுரை முற்படுகிறது. இக்கட்டுரையில் ஒவ்வொரு முறையும் மார்க்சீயம்-லெனினியம் என்ற சொற்றொடர் சுருக்கமாக மார்க்சீயம் என்றே இடம் பெறுகிறது.

தத்துவமும் நடைமுறையும் இணைந்ததே மார்க்சீயம்

மார்க்சீயம் மானுட சமூக வரலாற்றையும் மானுட சமகால சமூக வாழ்வையும் அறிவியல் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறையின் தத்துவ அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம். இதில் இயக்கவியல் என்பதும் முக்கியம்; பொருள்முதல்வாதம் என்பதும் முக்கியம். இருப்புதான் உணர்வை நிர்ணயிக்கிறது (Being determines consciousness) என்பதை பொருள்முதல்வாதம் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எந்த சமூகத்தை மார்க்சீய அணுகுமுறையில் ஆய்வு செய்வதானாலும் இந்த அடிப்படை கோட்பாட்டை பின்பற்றியே ஆக வேண்டும். இதில் “நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் வேறுபடுவது” என்ற கருத்துக்கே இடம் கிடையாது.  இயக்கவியல் இடைவிடா இயக்கமும் மாற்றமும் தான் பொருளின், இருப்பின் இயல்பு என்பதை பால பாடமாக நமக்கு அளிக்கிறது. இது நமக்கு அளிக்கும் முக்கிய பாடம் மாறாத “நாடு” இல்லை; மாறாத “மண்’ இல்லை என்பதாகும். ஆக, மார்க்சீய தத்துவ நிலைபாட்டில் இருந்துதான் அனைத்து சமூகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். தத்துவ நிலைபாட்டில், அணுகுமுறையில், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் என்ற அம்சங்களின் அடிப்படையில் வேறுபாடு இருக்க இயலாது.

மார்க்சீயத்தின் இன்னொரு முக்கிய அம்சம் – பிற தத்துவங்களிருந்து மார்க்சீயத்தை அடிப்படையில் வேறுபடுத்துவது  – மார்க்சீயத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை என்பதாகும். ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர் தொடர்பான தனது 13 கருத்துருக்களில் மார்க்ஸ் முன்வைத்த ஒரு மிக முக்கியமான கருத்துரு, “ இதுவரை மெய்யியலாளர்கள் உலகை வியாக்கியானம் செய்வதில் தான் முனைந்தனர். ஆனால், விஷயம் என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பது தான்” என்பதாகும். இந்த அடிப்படையில் தனது தத்துவ நிலைபாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின் வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளை மார்க்சீய தத்துவத்தை வலுப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் பயன்படுத்துவதும் மார்க்சீய அணுகுமுறையின் இன்றியமையாத அம்சங்கள் ஆகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும் செழுமை அடைவதும் இணைந்தது தான் மார்க்சீயம்.

மார்க்சீயம்: திட்டவட்டமான பிரச்சினையின் மீதான திட்டவட்டமான ஆய்வு

தோழர் லெனின் கூறியிருப்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் பல வடிவங்களில் வலியுறுத்திய கருத்து இது தான்: “திட்டவட்டமான பிரச்சினையை திட்டவட்டமாக ஆய்வது மார்க்சீயம்.” ஆகவே, ஆய்வு திட்டவட்டமாக இருக்கவேண்டும், திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட பிரச்சினை பற்றியதாக இருக்கவேண்டும். பிரச்சினைகள் இடம், காலம் பொறுத்து வேறுபடும். ஆனால் ஆய்வுக்கும் அதன் அடிப்படையில் செயல்பாட்டுக்கும் வழிகாட்டும் தத்துவ  அணுகுமுறை பிரச்சினைக்குப் பிரச்சினை, நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் மாறிக்கொண்டு  இருக்காது.

இங்கு நாம் விவாதிக்கும் பிரச்சினை தொடர்பாக மானுட வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் நாம் கண்ட புரட்சிகர இயக்கங்கள் நமக்கு பல படிப்பினைகளை தருகின்றன. சீனப்புரட்சியின் நடைமுறை கள செயல்பாடுகளும் உத்திகளும் சீனத்தின் திட்டவட்டமான களநிலைமைகளை கணக்கில் கொண்டதாக இருந்தது. அதேபோல் ரஷ்ய புரட்சியின் நடைமுறை அங்கிருந்த திட்டவட்டமான கள நிலைமைகளை கணக்கில் கொண்டது. ஆனால் இரண்டிற்கும் பொதுவான தத்துவ அணுகு முறையாக இருந்தது மார்க்சீயம் தான். வர்க்கப்பார்வைதான். இந்தப்பார்வை, இந்த அணுகுமுறை, இயக்கவியல், வரலாற்றியல்  பொருள்முதல்வாத அணுகுமுறை சீனாவிற்கு ஒன்றாகவும் ரஷ்யாவிற்கு வேறாகவும் இல்லை.

மார்க்சீயத்தில் தத்துவம் நடைமுறை மூலம் வலுப்படுத்தப்படுகிறது என்பதற்கும் பல உதாரணங்களை கூறலாம். 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் அனுபவங்கள் ஜனநாயக புரட்சிகளில் விவசாயிகள்  எத்தகைய பங்கு ஆற்றக்கூடும் என்பது பற்றிய புதுவெளிச்சத்தை கொடுத்து மார்க்சீய தத்துவ அடிப்படையிலான  வர்க்கப் பார்வையை செழுமைப்படுத்தியது. சீன புரட்சி விவசாயிகளை மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கு திரட்டுவது தொடர்பான படிப்பினைகளைக் கொடுத்தது போலவே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலை போராட்டத்தை தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் நலனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் நடத்துவது தொடர்பாக வியத்னாம் புரட்சி பல படிப்பினைகளை கொடுத்தது. இந்த படிப்பினைகள் குறிப்பிட்ட இடம், காலம் சார்ந்தவையாக மட்டுமின்றி, மானுட வரலாற்று, சமூக வளர்ச்சி பற்றிய மார்க்சீயப் புரிதலை செழுமைப்படுத்தியவையாக உள்ளன. “மண் சார்ந்தது” என்று உலகளாவிய மார்க்சீய தத்துவத்தை சுருக்குவது பொருத்தமல்ல என்பதை  இப்படிப்பினைகள் நமக்கு கற்றுத் தருகின்றன.

இந்திய நிலைமைகளையும் சாதிய சமூக கட்டமைப்பையும் மார்க்சிய நோக்கில் ஆய்ந்தே இந்திய கம்யூனிஸ்டுகளும் திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகின்றனர். அனுபவங்களின் வழியே அதை பல்வேறு வகைகளில் மேம்படுத்தி களமாடி வருகின்றனர். சாதியும் வர்க்கமும் இங்கு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை இந்திய மார்க்சிஸ்டுகள் மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளனர்.  மண்ணின் தனித்தன்மை எனும் பெயரில் மார்க்சிய நோக்கை கைவிடுவது  ஆளும் வர்க்க அரசியலுக்கே வலுசேர்க்கும்.

ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காலத்தில் இருந்து இன்றுவரை உலகில் பல புரட்சிகர இயக்கங்கள் மார்க்சீய தத்துவ அணுகுமுறையை பின்பற்றி சமூக மாற்றங்களுக்கான பயணங்களை நடத்தியுள்ளன. இதில் நடைமுறையில் இருந்து பொது உடைமை இயக்கம் பெற்றுள்ள பல படிப்பினைகளில் அமைப்புசார் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்று கட்சி அமைப்பில்  ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு. எதிரி வர்க்கத்தின் வலுவை அறிந்து அதனைப் பாதுகாக்கும் அரசு இயந்திரத்தையும் அதன் அடக்குமுறை கருவிகளையும் அரசியல்-தத்துவ உத்திகளையும் சாகசங்களையும்  எதிர்கொண்டு புரட்சிகர சமூக மாற்றத்திற்காக பாடுபடும் பொது உடைமை அமைப்பிற்கு ஜனநாயக மத்தியத்துவம் என்ற அமைப்புசார் கோட்பாடு இன்றியமையாதது. இந்த கோட்பாட்டை கட்சி அமைப்பில் அமலாக்குவது என்பது இந்தியா போன்ற, பல தேசீய இனங்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நாம் எதிர்கொள்ளும் ஒரு சவால்.

இந்தியாவின் மாநிலங்கள் பெரும்பாலும் தேசீய இன அடிப்படையில் அமைந்துள்ளதால் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம், அதிகபட்சமான மாநில தன்னாட்சி போன்ற கோரிக்கைகளை நமது கட்சி முன்வைக்கிறது;ஆதரிக்கிறது. இது தேசீய இன பிரச்சினை தொடர்பான மார்க்சீய அணுகுமுறையில் இருந்து நாம் எடுக்கும் நிலைப்பாடு.

கட்சியின் அமைப்புச் சட்டம் அனைத்து மாநிலங்களில் உள்ள கட்சி உறுப்பினர்களின் சம உரிமைகளை உறுதிப்படுத்துகிறது. கிளை மாநாடுகளில் துவங்கி அகில இந்திய மாநாடுவரை ஜனநாயக அடிப்படையில்தான் பிரதிநிதிகளும் அந்தந்த மட்டங்களில் கட்சி கமிட்டிகளும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மாநில மாநாடுகளில் தேர்வு செய்யப்படும் மாநிலக்குழுக்கள், கட்சியின் அகில இந்திய நிலைபாட்டில் நின்று, மத்தியக்குழுவின் உதவியுடன் அவரவர் மாநிலம் சார்ந்த அரசியல் உத்திகளை மாநிலத்தின் திட்டவட்டமான நிலைமைகளைப் பரிசீலித்து முடிவு செய்கின்றனர். கட்சியின் அகில இந்திய தலைமையும் அகில இந்திய மாநாட்டில் ஜனநாயகபூர்வமாக தேர்வு செய்யப்படுகிறது.

ஜனநாயக மத்தியத்துவம் என்ற கட்சி அமைப்பு கோட்பாடு, மார்க்சீய நடைமுறை மார்க்சீய தத்துவத்தை செழுமைப்படுத்தும் என்ற புரிதலுக்கு வலு சேர்க்கும் கோட்பாடு. இத்தகைய கட்சி அமைப்புக் கோட்பாடு, 19 ஆம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளிலும் கிடைத்த பொது உடைமை இயக்க அனுபவங்களில் இருந்து உருவானது. அதற்குப்பின் ஒரு நூறு ஆண்டுகளின் அனுபவம் ஜனநாயக மத்தியத்துவம் பொது உடைமை கட்சிக்கு பொருத்தமான கோட்பாடு என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் இரண்டு அம்சங்களும் – ஜனநாயகமும், மத்தியத்துவமும் – முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை 1992 இல் சென்னையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அகில இந்திய பதினான்காவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சினைகள் குறித்த தீர்மானமும் பின்னர் 2000ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி திட்டமும் வலியுறுத்தியுள்ளன.

நிறைவாக

மார்க்சீயம் சமகால மானுட சமூகங்களை ஆய்வு செய்து அவற்றை சோசலிச திசைவழியில் மாற்றுவதற்கான தத்துவ ஆயுதம். மார்க்சீயத்தில் தத்துவமும் நடைமுறையும் ஒன்றுக்கொன்று வலு சேர்க்கும். இத்தத்துவம் உலகளாவிய தத்துவம். ஊருக்கு ஒரு மார்க்சீயம்; நாட்டுக்கு ஒரு மார்க்சீயம்; மண்ணுக்கு ஏற்ற மார்க்சீயம் போன்ற சொல்லாடல்கள் குழப்பத்தை விதைத்து எதிரி வர்க்கங்களுக்கு உதவும் அபாயம் உள்ளது. இதனை முறியடித்திட கட்சி அணிகளுக்கு மார்க்சீய தத்துவத்தை முழுமையாக கொண்டுசெல்ல வேண்டிய அரசியல் பணி நம் முன் உள்ளதுLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: