சுபாஷிணி அலி
மே 12ஆம் தேதி தோழர் ஆர்பி முரேயின் நினைவுதினம். 1972இல் அவர் இறந்த போது மகாராஷ்டிரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். அப்போது அவருக்கு நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்லாது, அம்பேத்கரிய இயக்கத்தின் தலைவர்கள் ஞான்ஷியாம் தல்வாட்கர், பாஸ்கர் கேத்ரேகர் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கரின் மகன் யஷ்வந்த்ராவ் அம்பேத்கர் அவர்கள் தலைமை தாங்கினார். அம்பேத்கரியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான உறவு என்பது மகாராஷ்டிராவில் பல நேரங்களில் தவறான புரிதல்களால் பகைமையுடன் கூடிய சிக்கல் மிக்கதாக அந்த நேரத்தில் இருந்தது. ஆனாலும், தோழர் முரே பற்றுறுதி மிக்க கம்யூனிஸ்டாக வாழ்ந்த அதே நேரத்தில், தலித் மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவராக, அவர்களில் இருந்து பிரிக்கமுடியாதவராகவும் இருந்தார். அதனை அங்கீகரிக்கக் கூடிய வகையில் அமைந்த நினைவஞ்சலி கூட்டமாக அது அமைந்தது.
ராமச்சந்திரா பி. முரே 1903இல் மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் ஓரளவு வசதியான மஹர் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய குடும்பத்தில் பலர் ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு பெரிய வீட்டில் ஒன்றாக வாழ்ந்தார்கள். பக்கத்து வீட்டுக்காரரர்களின் மரியாதையை பெற்றவர்களாக வாழ்ந்தார்கள். துரதிருஷ்டவசமாக, அவருடைய தந்தையார் தொடர்ந்து கடனாளியாக இருந்தார். அதனால் அவரது வருமானத்தின் பெரும்பகுதியையும் சொத்தையும் இந்தக் கடனிலேயே இழந்தார். அவர் இறந்த போது ராமச்சந்திராவின் வயது 11 மட்டுமே. ஒரு கவளம் உணவிற்குக் கூட கஷ்டப்படும் நிலை தான் இருந்தது. ராமச்சந்திராவின் அம்மா, அவருடைய மாமனார் மாமியாரிடம் தாங்கமுடியாத அவமானங்களை சந்தித்ததையும், அந்த குடும்பத்திற்காக கடுமையாக உழைத்ததையும் ராமச்சந்திரா பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்
இந்தத் துயரத்தை சந்தித்த ஒரு வாரத்தில், ஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் நுழைவுத் தேர்வு எழுத மஹட் -க்கு அவரும் அவருடைய மாமாவும் போகும் போது வழியில் எந்த சத்திரத்திலும் அவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அப்போதுதான் அவர் முதன்முதலாக தீண்டாமைக் கொடுமையை உணர்கிறார். இந்த துயரங்களுக்கு மத்தியில் அந்தத் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அந்த பள்ளி இருந்த இடத்தின் சொந்தக்காரர் ஒரு பிராமணர். தாரப் என்ற பெயருடைய அவர் ஒரு தீண்டத்தகாத மாணவன் அந்த பள்ளியில் படித்தால் தன்னுடைய சொத்து தீட்டுப்பட்டுவிடும் என்று அவரை அனுமதிக்க மறுத்துவிட்டார். இதை கேள்விப்பட்ட அவருடைய அண்டை வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் அவரை அழைத்து பகுஜன்களின் (சாதிய அடுக்கின் கீழ் அடித்தட்டில் வைக்கப்பட்டிருப்பவர்கள்) பிரச்சினைகளை பேசக் கூடிய ஒரு மராத்தி செய்தித்தாளுக்கு ஒரு அஞ்சல் அட்டையில் விஷயத்தை எழுதி அனுப்பச் சொன்னார். அந்த விஷயம் பத்திரிக்கையில் வந்தவுடன் பள்ளி நிர்வாகம் மனதை மாற்றிக் கொண்டு ராமச்சந்திராவை பள்ளியில் சேர்த்துக் கொண்டது. அது முதல் ராமச்சந்திரா எப்போதெல்லாம் அநீதி நடந்ததோ அப்போதெல்லாம் குரல் எழுப்பத் தவறவில்லை.
மஹட் உடன் ராமச்சந்திராவிற்கு இருந்த உறவு நீண்ட நெடியது. அவருடைய பள்ளிக் காலம் தொட்டு தொடர்ந்த உறவிது. அவர் பக்கத்து கிராமங்களில் இருநது அங்கு சந்தைக்கு வந்து விறகு மற்றும் காய்கறிகளை விற்கக்கூடிய தலித் மக்களுடன் நெருங்கிய உறவினை கொண்டிருந்தார். அவர்கள் அங்கு வரும் போது மஹட் -இல் குடிக்கும் தண்ணீருக்குக் கூட அங்கிருக்கும் ஏரியை பயன்படுத்த முடியாது என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை கேட்டறிந்தார். அதனால் அதற்கு முடிவு கட்ட தீர்மானித்த ராமச்சந்திரா இன்னொரு தலித் நண்பரை அங்கு டீக்கடை துவங்கச் சொல்லி அந்த கடைக்கு வருபவர்களுக்கு தண்ணீர் வழங்கும் ஏற்பாட்டினை செய்தார். அவர் அங்கேயே தன்னுடைய நேரங்களை கழிப்பார். அங்கு வரும் மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்காக பல்வேறு துறைகளுக்குக் கடிதம் எழுதுவார். கூடிய விரைவில் அந்த டீக்கடை ஒரு சிறிய ஹோட்டல் ஆகியது. அங்கு தலித் மக்கள் இரவில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அம்பேத்கருடன் சந்திப்பு
பள்ளிக்கல்வியை முடித்த பிறகு, ராமச்சந்திராவின் வாழ்க்கை ஒரு நாடோடியின் வாழ்க்கை போலானது. அவர் மும்பைக்கு சென்று அவருடைய ராய்கண்ட் பகுதியில் இருந்து மும்பையில் உள்ள டெக்ஸ்டைல் மில்களில், கப்பல் கட்டுமிடங்களில் வேலை பார்த்த மற்றும் தூய்மைப் பணியாளர்களாக வேலை பார்த்த தலித் மக்கள் வாழ்ந்த பகுதியில் அங்குள்ள தொழிலாளி வர்க்கத்தினருடன் ஒருவராக தங்கியிருந்தார். அங்கு அவர்களோடு ஒருவராக மாறிப்போனார். அவர்களுடைய கலாச்சார வாழ்க்கையுடன் ஒன்றிப் போனவராக அனைத்துவிதமான கரத்தாலும் கருத்தாலும் ஆன வேலைகளையும் செய்பவராக வாழ்ந்தார். அப்போதுதான் அவர் டாக்டர் அம்பேத்கரை ஒரு முறை சந்தித்தார். பின்னர் அவரைப்பற்றி நிறைய படித்தார். அவருடைய எழுத்துக்களை படித்தார்.
1923இல் மும்பை சட்டசபை ஒரு முக்கியமான தீர்மானத்தை வெளியிட்டது. அதன்படி அனைத்து சாதியைச் சேர்ந்த அனைத்து இன மக்களும் பொதுஇடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் உந்தப்பட்ட ராமச்சந்திரா மஹட்-இல் இருந்த உபசாதிப்பிரிவில் உள்ள அனைத்து தலித் இன மக்களையும் திரட்டி டாக்டர் அம்பேத்கர் தலைமையில் ஒரு தலித் மாநாட்டினை நடத்தலாம் என திட்டமிட்டார். அந்த பேரணி மாநாட்டுத் திடலில் கிளம்பி மஹட்-இன் ஏரிக்கரையில் தலித் இன மக்கள் தண்ணீர் அருந்துவதுடன் முடியும் என்பது அவரது திட்டம்.
ராமச்சந்தர் மும்பைக்கு போய் டாக்டர் அம்பேத்கரைப் பார்த்து மஹட் மாநாட்டிற்கு தேதியினை கேட்டார். டாக்டர் அம்பேத்கர் அவருக்கு நிச்சயமற்ற ஒரு பதிலை அளித்தார். ராமச்சந்தரும் மும்பையில் உள்ள ”பஷிக்ரித் பாரத்” என்ற பத்திரிக்கை வெளி வரும் டாக்டர் அம்பேத்கரின் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றார். அதே நேரத்தில் மஹட்-இல் தனது அணிதிரட்டலையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். 1925இல் அவர் அனைத்து தலித் இன மக்களின் கூட்டத்தை நடத்தினார். அம்பேத்கர் அந்த கூட்டத்திற்கு அவருக்கு பதிலாக அவருடன் இணைந்து பணியாற்றிய நபர் ஒருவரை அனுப்பி வைத்தார். ராமச்சந்தருக்கு மக்களோடு இருந்த தொடர்பு பற்றியும், அவருடைய அணிதிரட்டும் திறமை பற்றியும், டாஸ்கனில் ஊர் பொதுக் குளத்து நீரினை எடுத்து அருந்தும் பேராட்டத்தை மிகத் திறமையாக செய்தது பற்றியும் அதன் பிறகு அறிந்து கொண்ட டாக்டர் அம்பேத்கர் ராமச்சந்தரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
மார்ச் 19, 1927 அன்று டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். டாக்டர் அம்பேத்கர் இந்த மாநாட்டில் துவக்கவுரையாற்றினார். மறுநாள் காலை அவரது தலைமையில் ஊர் பொதுக்குளத்திற்கு போகும்போது, எதிர் தரப்பின் தூண்டுதலின் காரணமாக திடீரென சாதி இந்துக்களால் அவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அப்போது டாக்டர் அம்பேத்கரை பத்திரமாக பாதுகாத்து மும்பைக்கு திருப்பி அனுப்பினர்.
இத்தாக்குதலில் ஏராளமானவர்கள் மிக மோசமாகக் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காக டிசம்பர் 25இல் மீண்டும் ஒரு மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ராமச்சந்தர் பம்பாயில் உள்ள தொழிலாளர்களில் இருந்து சில பேரை வாலன்டியர்களாக அழைத்து வந்திருந்தார். அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டு, தற்காப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு அம்பேத்கார் சேவா தள் என்று பெயருமிடப்பட்டது. மாலேகன் கப்பற்கட்டும் தளத்தில் இருந்து மஹட்-க்கு ராமச்சந்தருடன் படகொன்றில் கிளம்பிய டாக்டர் அம்பேத்கருக்கு அவர்கள் வழியனுப்பி வைத்தனர். (இந்த அம்பேத்கர் சேவா தளம் பின்னாளில் நாக்பூர் போன்ற நகரங்களில் சமதா சேவா தளம் என்ற பெயரில் துவங்கப்பட்டது. நாக்பூரில் ஆர்எஸ்எஸ் கும்பலிடமிருந்து பாதுகாக்கும் முக்கிய பணியினை அவர்கள் செய்து வந்தனர்)
மனுஸ்மிருதி எரிப்பு
இந்த நேரத்தில், தாரப் நீதிமன்றத்திற்கு போய் அந்த குளத்தை தனியார் சொத்தென்று தடை வாங்கி வைத்திருந்தார். அதனால் டாக்டர் அம்பேத்கர் மஹடுக்குப் போனவுடன் கைது செய்யப்பட்டார். ராய்கட் முழுவதிலுமிருந்து 15000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்தனர். டாக்டர் அம்பேத்கர் அதிகாரிகளை சமாதானப்படுத்தி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மாநாட்டை துவக்கிவைத்தார். மனுஸ்மிருதியை எதிர்த்து அந்த மாநாட்டில் ஒரு தீர்மானத்தை இயற்றினார். “மதப் புத்தகம் என்று கூறப்படுவதற்கு மனுஸ்மிருதி தகுதியற்றது என்று இந்த மாநாடு உறுதியாக கருதுகிறது. மேலும் இந்த கருத்தை வெளிப்படுத்தும் பொருட்டு மக்களை அழிக்கும் மற்றும் மனிதகுலத்தை அவமதிக்கும் இந்த புத்தகத்தை எரிப்பதற்கான அறைகூவலை விடுக்கிறது” என்று அம்மாநாடு அறைகூவியது. வந்திருந்த அனைவரையும் பொது இடத்தில் சிதை மூட்டி அந்தத் தீயில் மனுஸ்மிருதியை எரிப்பதற்கான வேண்டுகோளை அவர் விடுத்தார். பிராமணியத்தின் புனித புத்தகத்தை எரிக்கும் இந்த துணிச்சலான செயல் தலித்துகளுக்கு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ஒரு அழியாத தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வின் ஆண்டுவிழா இன்றும் அனுசரிக்கப்படுகிறது.
மாநாட்டின் சூழலே மகிழ்வானதாக மாறிப் போனது. அடுத்த நாள், பிரிட்டிஷ் கலெக்டர் அவர்கள் மத்தியில் உரையாடும்போது, சாவத் ஏரியில் தண்ணீர் குடிக்க அவர்கள் ஒவ்வொருக்கும் உரிமை இருப்பதாகவும், வழக்கு முடிந்தவுடன், யாரும் அவர்களின் உரிமையை தடுக்க மாட்டார்கள் என்றும் உறுதி கூறினார். தங்கள் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் திரும்பிய ஆயிரக்கணக்கான மக்களும், தங்களால் வெறுக்கப்பட்ட மனுஸ்மிருதியை எரித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்த வரலாற்று புகழ்மிக்க இயக்கத்தின் தலைவராக ராமச்சந்தர் அங்கீகரிக்கப்பட்டார். அவர் டாக்டர் அம்பேத்கருடன் பம்பாய்க்கு போய், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். ராய்காட் பகுதியில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களை அணிதிரட்டி கூட்டங்கள் மற்றும் இயக்கங்களை நடத்தி வந்தார். அவருக்கு ஷியாம்ராவ் பருலேக்கர் மற்றும் பிறருடன் தொடர்பு ஏற்பட்டது. பம்பாயில் இருந்தபோது, தொழிலாளி வர்க்க அமைப்புடனும் அவர்களுடைய போராட்டங்களிலும் அவரது ஈடுபாடு அதிகரித்தது. இதனால் தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்த பல கம்யூனிஸ்டுகளுடன், குறிப்பாக ஜவுளித் தொழிலில் இருந்த கம்யூனிஸ்டுகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. ராமச்சந்தருக்கு வர்க்க அமைப்பு மற்றும் போராட்டம் குறித்த புரிதல் இந்த ஆண்டுகளில் ஆழமடைந்தது. மேலும் தலித் விடுதலை பிரச்சினையில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த மையமான கருத்தின் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அது முதல், அவர் தெளிவான புரிதலுடன் வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டார். சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கட்டாயமாக வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு அவற்றையும் முன்னெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அதற்காக வாதாடினார்.
இணைப்புப் பாலமாக
1930இல் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் இந்த செய்தியை முதலில் அம்பேத்கரிடம் தான் தெரிவித்தார். அதற்கு அவர் தன்னை பின்பற்றும் மிக நெருங்கிய நபர் கருத்துறுதிப்பாட்டுடன் தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறி பாராட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அவர் சோர்வறியாத போர்க்குணம் மிக்க தொழிற்சங்க தலைவராகத் திகழ்ந்தார். அவர் படிப்பு வட்டங்களில் பங்கேற்றார். பல தலித் எழுத்தாளர்களை, கவிஞர்களை, தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுரண்டப்படுகிற தொழிலாளி வர்க்கத்திலும் விவசாயக் குடிமக்களிடையேயும் தலித்துகள்தான் மிகப் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் என்று உறுதியாக நம்பினார். இந்தப் பகுதியினர் மனிதத்தன்மையற்ற சமூக ஒடுக்குமுறையை பல நூற்றாண்டுகளாக சந்தித்து வருகின்றனர் என்றும், இந்த சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமை என்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக மேலும் மேலும் அதிக தலித் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இயக்கங்களுக்கு வர ஆரம்பித்தனர். இதனால், அதிக பலத்தினையும் வீச்சினையும் கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றது. 1954இல் இந்த புரிதலுடன் கூடிய ஒரு முக்கியமான குறிப்பினை தயாரித்து அளித்தார். 1964இல் புதிதாக உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தன்னுடைய குறிப்பினை மேலும் விரிவுபடுத்தி புதிய தலைமைக்கு அனுப்பினார். இது புதிய கட்சித் திட்டத்திலும், தோழர்கள் ஈ.எம்.எஸ் மற்றும் பி.டி.ஆரின் சாதி மற்றும் வர்க்கத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளிலும் ஆழமாகவும் முழுமையாகவும் எதிரொலித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுழலில், தோழர் முரே தலைமறைவாக வாழ்ந்துவந்தார். அப்படியான நிலையிலும் ‘ஜீவன் மார்க்’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழை அவர் அப்போது வெளியிட்டார். இது பின்னர் மஹாராஷ்டிரா மாநிலக் குழுவின் மூலம் மாதம் இரு இதழாக வெளிவந்தது. அந்த பத்திரிக்கையின் எடிட்டராக அவர் இருந்தார். ஏப்ரல் 14, 1965 அன்று வெளியான முதல் இதழின் முதல் பக்கத்தில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை தன்னுடைய அஞ்சலியுடன் வெளியிட்டது. மேலும். அந்த முதல் பக்கம் பல வழிகளில் தோழர் முரேயின் இரண்டு கொள்கைகளிலும் இருந்த அரசியல் உறுதிப்பாட்டினை அடையாளப்படுத்தியது.
தோழர் மோரின் மகன் சத்யேந்திர மோர் எழுதிய அவருடைய முடிக்கப்படாத நினைவுக் குறிப்புடன் கூடிய அவரது சுயசரிதை சில ஆண்டுகளுக்கு முன்பு மராத்தியில் வெளியிடப்பட்டது. வருங்காலத்திற்கு பாடம் கற்பிக்கும் விதத்திலான அந்த புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு சமீபத்தில் இடதுசாரிகளால் வெளியிடப்பட்டது. இந்த வெளியீடுகள் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வாசிப்பவர்களுக்கு மத்தியில் அவரது அரசியல் வாழ்க்கை வரலாறு ஒரு புதிய உத்வேகத்தினை அளிக்கிறது. கூடுதலாக இதன் மொழிபெயர்ப்பினை வேறு பல மொழிகளிலும் வெளியிட்டால் மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
தோழர் முரேயின் வாழ்க்கை பல்வேறு கஷ்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. மிகுந்த வறுமைக்கிடையிலும் அவரது குடும்பம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்தது. அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன் என அனைவருமே கட்சி உறுப்பினர்கள். தான் முழுமையான விசுவாசம் வைத்திருந்த இரண்டு இயக்கங்களையும் இணைப்பதற்காக பாலம் போன்று அவர் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு வந்தார். பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இயக்கம் மற்றும் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இயக்கம் ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு உறுதிமிக்க பாலமாக அவர் வாழ்ந்துள்ளார்.
தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம்
Leave a Reply