எஸ். கண்ணன்
இந்திய நிர்வாகத்தில் தன்னாட்சி அமைப்புகளாக இருந்துவந்த நீதித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, வரலாற்று ஆய்வு உள்ளிட்டவைகளை வகுப்புவாத அபாயம் நிறைந்த இந்துத்துவா அமைப்புகளின் கைப்பாவையாக இயக்கும் பணியை பாஜக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்பதை மறந்து, சர்வ அதிகாரம் கொண்ட அரசாக மத்திய பாஜக ஆட்சி தன்னை முன்னிறுத்துவதை காணமுடிகிறது. இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை அபகரிக்கும் அனைத்து பணிகளிலும் ஆர்.எஸ்.எஸ் கொள்கை அமலாக்கம் என்ற முறையில் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. தமிழக அதிமுக ஆட்சி அதிதீவிர கைப்பாவை ஆட்சியாக பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு உடந்தையாக மட்டுமே செயல்பட்டது. எனவே தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு கண்டு தேர்தல் களம் கண்டது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் இந்துத்துவா அகண்ட பாரதம் என்ற நோக்கத்தில் செயல்படும் அதே வேளையில், நவதாராளமய கொள்கையை தீவிரமாக அமலாக்கி வருகிறது. இரண்டின் நோக்கமும் பன்முகத் தன்மையை சிதைத்து, ஒரே பண்பாட்டை நிலை நிறுத்துவதாகும். பாஜக – ஆர்.எஸ்.எஸ் பழமைவாத நோக்கம் கொண்டதுதான் என்றபோதிலும் நவதாராளமயம் என்ற ஏகாதிபத்திய உலகமயமாக்கலும், ஆர்.எஸ்.எஸ் என்ற அடிப்படை வாதமும் ஒன்றுக்கு ஒன்று துணை புரிவதாக இந்திய மண்ணில் செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், சாதி அல்லது குறிப்பிட்ட அடையாள ரீதியிலான ஒடுக்குமுறைகளுக்கு இந்துத்துவா அடிப்படை வாதம் உதவுகிறது என்றால், அதை எதிர்த்த போராட்டங்களுக்கு, ஒரு சில இடங்களில் சில அமைப்புகள் மூலம் தாராளமய ஆதரவு சக்திகளின் ஜனநாயகம் என்ற பெயரில் உதவுகிறது. இந்த புரிந்துணர்வு அடிப்படையிலேயே தாராளமயமும், ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதமும் துணைசெய்கிறது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதைப் போல், பாஜக தாராளமய கொள்கைக்கு தோழனாகவும் சாதிய மத பழமைவாதத்திற்கு காவலனாகவும் செயல்படுகின்றது.
இந்த பின்னணியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டில்லியில் 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த மதிப்பீட்டை செய்துள்ளது. அதன் வர்க்கத் தாக்கம் குறித்தும் குறிப்பிட்டுள்ளது. ஒன்று, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு. இரண்டு, இந்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான முரண்பாடு. மூன்று, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் தலையெடுக்கும் முரண்பாடு என குறிப்பிடுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களின் முடிவு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்பாட்டை தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததை காணமுடியும்.
மாநில உரிமை மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள்
தமிழகம் மாநில உரிமைக்கான போராட்டத்தில் முன்னோடியாக இருந்துள்ளது. எனவே அந்த பாரம்பரியத்தை, தற்போதைய சூழலுக்கு ஏற்ப உயர்த்தி பிடிக்கும் அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. கேரளம் உள்ளிட்ட பிஜேபி ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநில அரசுகளையும் தமிழக அரசு இணைத்து கொண்டு செயல்படுவது பயனளிக்கும். ஜி.எஸ்டி, நிதி வருவாய் பங்கீடு, பேரிடர் காலத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பாரபட்சமான நிதி, ஆளுநர் மூலம் மாநில அரசை ஆட்டுவிக்கும் தன்மை ஆகியற்றில் இந்த மாநிலங்களுக்கும், பாஜகவிற்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை, அரசியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அதிகரித்துள்ளது. இது மாநில உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கையாக இருக்கும். இந்த அரசியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் இளைஞர்களில் ஒருபகுதியினர் மத்திய அரசின் மீதான வெறுப்பை, தமிழ் தேசியம் என்ற பேச்சிற்கு ஆட்பட்டு வாக்களித்திருப்பதையும் காணமுடிகிறது. நவதாராளமயம், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அடையாள சுய பெருமிதங்களுக்கு முலாம் பூசி ஈர்ப்பு தன்மை உருவாக வழிவகை செய்து வருகிறது. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற அங்கீகாரத்துடன் செயல்படுவதற்கு பதிலாக, ஒருவரின் பெருமை மற்றொருவரின் அடையாளத்தை இகழ்வதாக மாற்றப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமைக்கு பதிலாக, வேற்றுமையில் இருந்து வெறுப்பு அரசியலாக வளர்க்க படுகிறது. இதில், மொழிவாரி மாநிலங்கள் உருவான வரலாறு குறித்தும், ஆட்சி, நிர்வாகம் மற்றும் போதனை ஆகியவற்றில் தாய் மொழி வழியில் அமைவதை வலியுறுத்திய போராட்ட வரலாறும் தெரியாத தலைமுறை அதிகம். எனவே இந்த மொழி மற்றும் பண்பாடு குறித்த கடந்த கால, நிகழ்கால பிரச்சனைகளில் வகுப்புவாத மற்றும் ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தை அம்பலபடுத்த வேண்டியுள்ளது.
சாதி ரீதியிலான மேலாதிக்கம், கல்வி, வேலை வாய்ப்பில் நீடிப்பதை ஏற்க முடியாது என்ற நியாயத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்றதே நீதிக் கட்சியும், சுயமரியாதை முழக்கமும். அதுவே பின்னாளில் பிராந்திய வளர்ச்சிக்கான முழக்கமாகவும், அரசியல் அதிகாரமாகவும் மேலோங்கியது. இந்த வரலாற்றின் நீட்சி சாதி ரீதியிலான ஒடுக்குமுறையை நிறுத்துவதில் பிரதிபலிக்கவில்லை. உற்பத்தி உடமை, யாருக்கு என்ன பணி என்பதை மட்டும் தீர்மானிப்பதில்லை. யார் என்ன என்ன வாழ்வியல் நடைமுறைகளை (பண்பாட்டை) பின்பற்றலாம் என்பதையும் தீர்மானிக்கிறது. நிலப்பிரபுத்துவ மன்னராட்சி இதற்கான சட்டங்களை வகுத்தது. இன்றைய மக்களாட்சி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற போதிலும், நிலப்பிரபுத்துவ விழுமியங்களையே சிந்தனைகள் தாங்கி நிற்கிறது.
ஐந்தாண்டுகள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலாளித்துவ அரசு, பன்னெடும் காலமாக நீடிக்கும் இந்த செயலுக்கு முடிவுரை எழுதும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஜனநாயகம் அனைவருக்கும் பொதுவானதே போன்ற முழக்கங்கள் தீவிரமாக வேண்டும். தலித் மற்றும் நிலமற்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான நிலச் சீர்திருத்தம் அமலாவதற்கான போராட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. கடந்த காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது 2 ஏக்கர் நிலம் என அறிவித்தது. 2006 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத் தொடரில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி 110 விதியின் கீழ் உரையாற்றினார். அதில் 1.95 ஏக்கர் தரிசு நிலம் மேம்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்டவையாக உள்ள 7 லட்சம் ஏக்கர் நிலம் சிறு குறு விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படும் என்றும் பேசியுள்ளார். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். ஆனாலும் மேலே கூறியவாறு மேலாதிக்கம் சார்ந்த விழுமியங்களை உடைக்கும் சீர்திருத்தங்களாக அந்த அறிவிப்பு முழுமை பெறவில்லை. எனவே இந்த பிரச்சனைகள் மீதான ஈர்ப்பை உருவாக்கும் பிரச்சாரமும் அதைத்தொடர்ந்து முன்னெடுப்பதில் மக்களை ஈடுபடுத்தும் செயலும் தேவைப்படுகிறது.
மற்றொன்று சமூக விழுமியங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த தேவைப்படும் நடடிக்கைகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதைப் போல் தமிழகத்தில், சாதிக்கலவரங்கள் நடைபெறவில்லை. ஆனால், தனிநபர் கொலைகள் சாதிய கண்ணோட்டத்தில் நடைபெறுகிறது. இதில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் இளைஞர்கள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது அதிகமாக வெளிப்படுகிறது. தருமபுரி போன்ற மாவட்டங்களில் சில தலித் கிராமங்கள் மொத்தமாக தாக்கப்படும் சம்பவங்கள் நடந்தேறின. இதை தடுக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் இயற்றுவது அவசியம். இது பிற்போக்கு கருத்துக்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். பாஜக வின் ‘லவ் ஜிகாத்’ முழக்கம் போல் தமிழகத்தில், ஒரு பகுதியினர் முன்வைப்பதை பெரும்பான்மையான ஜனநாயக சக்திகள் ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இதில் சமூக ஒடுக்குமுறை ஒரு அம்சம் என்றால், மற்றொன்று பெண்ணடிமைத் தனம் ஆகும். பெண் உரிமைக்கான போராட்டத்துடன் இணைந்த ஒன்றாக இந்த சமூக பிரச்சனையை கையாள வேண்டியுள்ளது.
மானுடவியல் அறிஞர்கள் சமஸ்கிருதமயமாக்கல் (மேல்நிலை ஆக்கிக் கொள்ளுதல்) குறித்து விவாதம் நடத்துவதை கவனிக்க வேண்டும். ஏற்கனவே இந்திய சாதிய படிநிலை, புனிதம் மற்றும் தீட்டு என்ற தன்மையில் கட்டமைத்துள்ளது. சமஸ்கிருதமயமாக்கல் என்ற பண்பாட்டு நடவடிக்கை தனக்கு மேலே உள்ளோர் பின்பற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை உள்வாங்கி, புனிதப்படுத்தியும், மற்றவரை தீட்டானவராகவும் நடத்தும் நிலை வளருகிறது. இதன் விளைவே இன்றைய பிற்படுத்தப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் உருவாகி வளர்ந்து வரும் மேல்நிலை ஆதிக்க உணர்வு ஆகும். இதன் காரணமாக, திராவிட இயக்கத்தின் சுயமரியாதை, சமூக நீதி மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய முழக்கங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த வளர்ச்சியை எட்டாமல், தேக்கநிலையை அடைந்திருக்கிறது. குறிப்பாக 1990களுக்கு பிந்தைய நவதாராளமய கொள்கை அமலாக்கம், ஒரு பக்கம் பெரும் கொள்ளை சுரண்டலுக்கும், மற்றொரு புறம் அடையாள அரசியல் என்ற சமூக போராட்டங்களின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்துள்ளது. தமிழகத்திலும் இந்த முப்பது ஆண்டுகள் தீவிரமான தாராளமய கொள்கை தாராளமாகவே அமலாகியுள்ளது. எனவே சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கான செயல்பாடுகள் தேவைப்படுகிறது.
மனித முகம் பொருந்திய சீர்திருத்தம் சாத்தியமா?
தற்போதைய சூழலில் எந்த ஒரு மாநில அரசும் பொருளாதார சீர்திருத்தம் எனக் கூறினால், அது அச்சமூட்டும் வரிகளே. மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மனித முகம் பொருந்திய பொருளாதார சீர்திருத்தம் எனக் கூறினார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரசு சொத்துக்களை அபகரித்து குவிப்பது மட்டுமல்ல. நீர், மின்சாரம் போன்ற பொது பயன்பாட்டு பணிகளும், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொதுபணிகளும் தனியாரின் மூலதனக் குவிப்பிற்கான களமாக மாறி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானம் குறிப்பிடும் உண்மையை கணக்கில் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல. நாம் மேலே குறிப்பிட்ட தொடர வேண்டிய சமூக சீர்திருத்தத்தை, ஏகாதிபத்திய உலகமயமாக்கல் அழிக்கவும் செய்கிறது. அதாவது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை கூட அனுமதிக்க இன்றைய நிதிமூலதனமும் ஏகபோக தொழில் மூலதனமும் அனுமதிக்கவில்லை. இதை ஆளும் வர்க்கம் நன்கு அறிந்திருக்கிறது. ஒருபுறம் சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு முழக்கங்களை முன் வைப்பது; மற்றொரு புறம் இடஒதுக்கீடு பலன்களை சிறந்த முறையில் வழங்கி வந்த அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது நடைபெறுகிறது. இரட்டை தன்மை வாய்ந்த இந்தச் செயலை அம்பலப்படுத்துவதும், அதை எதிர்த்துப் போராடுவதும் சமூக சீர்திருத்தங்களை பாதுகாத்து அடுத்த கட்டத்திற்கு நகர பயனளிக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. ஆனால் அவற்றோடு மட்டும் திருப்தியடையவில்லை. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் சொத்தை சூறையாடுவதை முற்றாக ஏற்கவில்லை. அதேநேரம் முதலாளித்துவ தாராளமய கொள்கைகளை அமலாக்கும் அரசியல் கட்சிகள் சமூக சீர்திருத்தங்களை முன்வைத்து கொண்டே, மக்கள் சொத்தான பொதுத் துறை நிறுவனங்களை சூறையாட அனுமதிக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி சமூக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் காரணத்தால்தான், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் பொருள் தனியாருக்கு பொதுத் துறையை தாரைவார்ப்பதற்கான சம்மதம் அல்ல. மாறாக, தனியார்மயம் என்கிற பெயரில் சமூக நீதி என்ற இடைக்கால நிவாரணம் பறிபோகாமல் இருக்கவே இக்கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது. மேலும், அரசின் பல்வேறு சலுகைகளையும் பொதுச் சொத்துக்களையும் பயன்படுத்தி கொள்ளும் தனியார் நிறுவனங்கள், சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை தங்கள் நிறுவனங்களில் வழங்குவது மக்களின் உரிமை சார்ந்ததே எனவும் மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. தனியார் துறைக்கான கேம்பஸ் நேர்முக தேர்வுகளின்போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவிக்கும் நடவடிக்கையை வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகள்:
கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் ஏகபோக நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக அவற்றை வணிகமயமாக்குவது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மற்றும் காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளோடு, காட்டை ஆன்மீகத்தின் பேரில் ஆக்கிரமிக்கும் கார்ப்பரேட் செயல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில் வளர்ச்சி பெற்ற விவசாயத்திலும் முதலாளித்துவ அணுகுமுறை வளர்ச்சி பெறத் துவங்கியுள்ள. மேற்கு மாவட்டங்களில் இந்த பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளது. சூயஸ், பெக்டெல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட இருப்பதாக சொல்லப்படுகிறது. சாதி ரீதியில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்ட பொது குழாயின் குடிநீர் இப்போது எல்லோருக்கும் வணிகமயம் ஆகியுள்ளது. பெப்சி மற்றும் கொக்கோ கோலா நிறுவனங்கள் உறிஞ்சிய நிலத்தடி நீரின் மிச்சத்தை, சூயஸ் மற்றும் பெக்டெல் விநியோகிக்க வருவதை எதிர்க்க பொலிவியா போன்ற பிற நாட்டு அனுபவங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சுற்றுசூழல் பாதிப்பு தற்போது முன்னுக்கு வந்துள்ள கவலை தரும் பிரச்சினை ஆகும். உலகில் அனைத்து நாடுகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், காடுகளை குறிவைப்பது நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஜக்கி வாசுதேவின் ஆக்கிரமிப்பு, தேனி மாவட்டம் குரங்கணி பகுதி சுற்றுலா என்ற பெயரில் அழிக்கப்பட்டு வருவது போன்றவை, இயற்கையை மாசு படுத்தும் செயல்களாகும். காடுகளை, தனியார் ஆக்கிரமிக்க உதவியாக மத்திய அரசு சுற்றுசூழல் சட்டம் 2020 ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன்மீது பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். படித்த நடுத்தரவர்க்கம் மற்றும் மாணவர்கள், விதை பந்து தூவுவது ஒரு புறம் என்றால், மறுபுறத்தில் தனிநபர்களுக்கு காடு அழிப்புக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதை அரசு கொள்கையாக கொண்டுள்ளதை கவனிக்க வேண்டும்.
சென்னையை ஒட்டிய பழவேற்காடு பகுதியில், காட்டுப் பள்ளி துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில், அதானி 2,000 ஏக்கர் நிலத்தை வாரிச் சுருட்ட வாய்ப்பளிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் இந்த துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். குடிநீர், மாசுக் கட்டுப்பாடு, மற்றும் சூழலியல் சார்ந்த கோரிக்கைகளின் மீது இளைஞர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தமிழக மக்களின் பிரச்சனைகளாக நீடிக்கும் வாய்ப்பு கொண்ட இவை குறித்த மாற்றுக்கான செயல் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளை மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகுமக்கள் அமைப்புகள் தொடர்ந்து செய்து வரும் போதிலும், அது இப்போது தீவிர முன்னுரிமை சார்ந்த ஒன்றாகவும், பெரும் அணிதிரட்டல் சார்ந்ததாகவும் அமைய வேண்டியுள்ளது.
தொழிலாளி – விவசாயி ஒற்றுமை:
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானங்கள், உலகில் வலது சாரி திருப்பம் என்ற ஆளும் வர்க்கத்திற்கு சாதமான மனநிலை அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிடுகிறது. மேலும் சில தத்துவார்த்த பிரச்சனைகள் எனும் தீர்மானத்தில், உலகம் முழுவதும் வர்க்க பலாபலன்கள் வலதுசாரி முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக உள்ளது. இதை இடதுசாரிகளுக்கு ஆதரவாக மாற்றுவது மிகப்பெரிய அரசியல் தத்துவார்த்த போராட்டமாக இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறது. இந்தியாவிலும் கூட இந்த போக்கு அதிகரித்ததை பார்க்க முடியும். இதன் விளைவாக, மேலும் மேலும் ஏகாதிபத்திய உலகமயமாக்கல், தனக்கு கிடைத்த தாராளமய கொள்கையை பயன்படுத்தி, மேலும் மேலும் இயற்கை மற்றும் பொதுச் சொத்துக்களை சூறையாடுவதுடன், இந்தியாவில் விவசாயம் மற்றும் தொழிலாளர் சட்டங்களையும் திருத்தி வருகிறது. இதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் நீடித்த மற்றும் உறுதியான போராட்டம் பெரும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சிறு,குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முரண்பட்டு நிற்பது என்பதை மார்க்சிஸ்ட் கட்சி மேற்படி போராட்டத்தின் வர்க்கத் தாக்கம் என கூறுகிறது.
மேலே விவாதித்த சீர்திருத்தம், மக்கள் கோரிக்கைகள் ஆகியவற்றுடன், விவசாயி தொழிலாளி ஒன்று பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை வாய்ப்புக்கான கொள்கைகளை எதிர்த்த போராட்டத்தையும் கூட்டாக நடத்தும் போதுதான், வர்க்க பலாபலன்களை இடதுசாரிகளை நோக்கி சற்றேனும் திருப்ப முடியும். இது வார்த்தைகளில் குறிப்பிடுவது போல் அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் உணர முடிகிறது. தமிழகத்தில் ஒருபகுதி தொழில் வளர்ச்சி பெற்ற நகர்ப்புறமாகவும், மற்றொரு பகுதி விவசாயம் செழித்த கிராமப் புறமாகவும் உள்ளது. இரண்டும் இணைந்த பகுதியாக மேற்கு மாவட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு காவிரி, அமராவதி, பவானி உள்ளிட்ட பாசன வாய்ப்பு நிறைந்த விவசாயத்தையும், தொழில் வளர்ச்சியையும் ஒரு சேர மேம்படுத்தியுள்ளது. மற்றொரு புறம் சென்னை, சென்னை புற நகர் பகுதியில் இருந்து நூறு கி.மீ தொலைவு பாலாறு, ஆரணி, கொசஸ்தலை, தென்பெண்ணை, ஆறுகளின் பாசன நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதை காணமுடியும். எனவே வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இந்த வர்க்க ஒற்றுமை சார்ந்த கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு அதிகம்.
கொல்கத்தாவில் கடந்த 2015 டிசம்பர் இறுதியில் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஸ்தாபன சிறப்பு மாநாட்டை நடத்தியது. அதில் கிராம புற தொழிலாளர் மற்றும் கிராமப்புற நிலைகள் குறித்தும் ஆய்வறிக்கை முன்வைத்தது. அதேபோல் தொழிலாளர் மற்றும் நகர்புறம் சார்ந்த ஆய்வறிக்கையை முன் வைத்தது. மேலும் பகுதி மட்டத்தில் உள்ள திட்டவட்டமான நிலைமையுடன் இந்த ஆய்வுக் கண்ணோட்டத்தை இணைப்பது தேவைப்படுகிறது. அதைச் செயல்படுத்தும் வகையிலும் பணிகளை தீர்மானித்திட வேண்டும். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிற சொந்த பலத்தை உயர்த்தும் நடவடிக்கையாகவும் அது அமையும். அதன் மூலம் மேலே குறிப்பிட்ட செயல்களுக்கு வழிவகை காண முடியும்.
Leave a Reply