மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அறிவியல், வரலாறு மற்றும் சமூகம்


பிரபிர் புர்காயஸ்தா
தமிழில். மோசஸ் பிரபு

இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையானது

1) ஒரு உலகப்பார்வையை

2) இயற்கையையும் சமூகத்தையும் ஆய்வு செய்வதற்கான வழிமுறையை

3) அறிவியலின் தத்துவத்தை

 நமக்கு வழங்கியிருப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம்.

இயக்கவியலானது, அறிவியலின் தத்துவமாக மட்டுமே அறிவியலுக்கு வெளியே நின்றுகொண்டு தன் விதிகளின் மூலமாக அதனை வழிநடத்தவில்லை. அதன் வழிமுறையானது, கண்டுபிடிப்புச் செயல்களில் உதவுகிறது. இயற்கையின் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்டு உணர உதவுகிறது. மார்க்ஸ், இயக்கவியலின் விதிகளை பொருளாதாரத்திற்கு பொருத்தி தன் விளக்கத்தை அடையவில்லை, மாறாக அதன் களத்திலும், வளர்ச்சியிலும் இயக்கவியல் விதிகள் இயங்குவதை கண்டறிந்தார் என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அதே வழிமுறையில்தான், எங்கெல்ஸ் இயற்கையின் இயக்கவியல் நூலில் இயற்கையை ஆராய்ந்தார்.

இயக்கவியலுக்கும் இயற்கைக்குமான உறவு மாறாத ஒன்றல்ல. இதனை நாம் இயற்கையை மென்மேலும் ஆராயும் போது புரிந்துகொள்ளலாம். நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப இயக்கவியலின் தத்துவ சாதனங்களும், சித்தாந்த கட்டமைப்பும் அதன் விதிமுறைகளும் மாற்றமடையும். நாம் அந்த மாற்றங்களையும் உள்வாங்க வேண்டும். சார்பியல், குவாண்டம் இயற்பியல், மரபணுவியல் ஆகிய துறைகள் தத்துவத் துறைக்கு சவாலாகவே அமைந்துள்ளன. மேற்சொன்ன ஒவ்வொன்றினாலும், தத்துவ கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகவேண்டியுள்ளது, புதிய அறிதலுக்கு ஏற்ற விதத்தில் மறுசீரமைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இயற்கையை ஆழமாக ஆராயும் முயற்சியில் இயக்கவியலும் அதேபோல் மாற்றங்களுக்கும் மறு உருவாக்கத்திற்கும் உட்பட வேண்டியுள்ளது. 

மார்க்சிய கட்டமைப்பில், நமக்கு புறத்தே உள்ள பொருளியல் யதார்த்தங்களில் ‘பிரதிபலிப்பவையே’ அறிவியல் விதிகள். மேலும், அவை அந்த பொருளின் பல்வேறு பாகங்களோடும் உறவு கொண்டுள்ளன என்பது மார்க்சிய கட்டமைப்பாகும். சூரியக் குடும்பமும், கிரகங்களும் எப்படி ஈர்ப்பு விசையாலும், சுய இயக்கத்தின் மூலமும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளன என்பதை நியூட்டனிய பொறியமைவியல் (Newtonian mechanics) சொல்கிறது. இந்த உறவுகள் நாம் மனதில் உருவாக்கிக் கொண்ட அக உணர்வு அல்ல; நமக்கு வெளியே தனித்து நிலவக்கூடியவை; நம் அறிவு எல்லைக்கு வெளியே நிலவிக் கொண்டுள்ளன. 

வரலாற்றின் விளைபொருளே அறிவியல்!

இயற்கையில் நிலவும் உறவுகளின் மெய்யான பிரதிபலிப்பே அறிவியல் என்பதை ஏற்றுக் கொள்கிற அதே நேரத்தில், மார்க்சும் பெரும்பான்மையான மார்க்சிஸ்டுகளும், அறிவியல் அறிவு, வரலாற்றியலின் விளைபொருள் என்றும் கூறுகிறார்கள். அறிவியலில் வளர்ச்சி என்பது  மிகச்சிறந்த சில மனிதர்களால் மட்டும் உருவானதல்ல. சமூகத் தேவையே அறிவியல் வளர்ச்சியை உருவாக்குகிறது என்பதை மார்க்சும், பெரும்பாலான மார்க்சியவாதிகளும் முன்மொழிகிறார்கள்.

‘ஃபாயர்பாக் இயற்கை அறிவியலை குறிப்பிட்டு பேசும்போது, இயற்பியலாளர்கள் மற்றும் வேதியியல் அறிஞர்கள் கண்களுக்குத்தான் ரகசியங்கள் புலப்படுகின்றன என்று பேசுகிறார். உற்பத்தி ஆலைகளும், வணிகமும் இல்லாமல் போயிருந்தால் இயற்கை அறிவியல் எங்கே இருந்திருக்கும்? இந்த ‘தூய’ இயற்கை அறிவியலும் கூட, ஒரு நோக்கத்துடனும், மனிதர்களின் அறிவார்ந்த செயல்களின் வழியாக தொழில் மற்றும் வணிகத்தின் மூலமாக பொருளியலைச் சார்ந்தே செயல்படுகிறது’ என்கிறார் மார்க்ஸ்.

‘நுட்பங்கள் பெரிய அளவில் அறிவியலின் நிலையை சார்ந்துள்ளது என்று கூறினால் அறிவியல் அதைவிட அதிகமாக சமூக நிலை மற்றும் புதிய நுட்பங்களுக்கான தேவைகளை சார்ந்துள்ளது. சமூகத்திற்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தேவை இருக்குமாயின் அது பத்து பல்கலைக் கழகத்தை விட மேலாக அறிவியலை முன்னோக்கி நகர்த்தும்’ என்கிறார் எங்கெல்ஸ்.

சமூகம் எவ்வாறு அறிவியல் தேவையை நோக்கி நகர்கிறது என்பதை குறிப்பிடும் போதும், அறிவியலின் பல்வேறு நிலைகளை பற்றி குறிப்பிடும் போதும் எங்கெல்ஸ் கவனமாக பேசுகிறார். அவர் அறிவியல் துறை எப்படி வானவியலிலுருந்து இயக்கவியல், பின்னர் வேதியியல் மற்றும் இறுதியாக உயிரியல் அறிவியலுக்கு மாற்றமடைகிறது என்பதை விவாதிக்கிறார். அறிவியலின் உட்பிரிவுகளில் வேதியியல் மற்றும் உயிரியல் கூடுதல் சிக்கலான பரிமாணங்களை சேர்க்கிறது என்பதை பெர்னல் தன்னுடைய வரலாற்று அறிவியல் புத்தகத்தில் இதை ஏற்றுகொள்கிறார். அவர் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த அறிவுடனே வாதிடுகிறார், உதாரணமாக, இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுடைய ஆரம்பநிலை வளர்ச்சி இல்லாமல் மரபணுவியலின் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்க முடியாது என்கிறார். எனவேதான் மார்க்சியமானது, சமூகமும் அதன் தேவைகளுமே அறிவியலை இயக்குகின்றன; கண்டுபிடிப்புகளை அவற்றின் விருப்பங்களுக்கு ஏற்ப முன்னெடுப்பதில்லை என விளக்குகிறது. கண்டுபிடிப்புகளுக்கு சில உட்காரணங்களும் இருக்கின்றன, ஒரு குறிப்பிட்ட கால சூழலில் எந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கேள்விகளுக்கு தீர்வு காணமுடியுமோ அவைகளைத்தான் தீர்க்க முடியும். 

1931இல் லண்டனில் நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றின் இரண்டாவது உலக மாநாட்டில், புகாரின் தலைமையில் கலந்துகொண்ட தலைசிறந்த சோவியத் அறிஞர்கள் முன்வைத்த வாதங்களை தெரிந்துகொள்ளாமல் இன்றைய காலகட்டத்தில் அறிவியல் வரலாற்றின் மீதான மார்க்சியத்தின் தாக்கத்தை புரிந்துகொள்வது கடிமானதாகும். 

போரிஸ் ஹெசன் எழுதிய ‘நியூட்டன் பற்றிய ஆரம்ப மதிப்பீட்டில் நியூட்டன் பிரின்ஸ்பியா’ என்ற நூலில், ‘நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கும், அவரின் பணிகளின் தோற்றம், மேம்பாட்டிற்கும் இருந்த தொடர்புகளுக்கு மார்க்சிய ஆய்வு முறையை, இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுச் செயல்முறைகளை பொருத்தி’ எழுதியிருந்தார். அது பெரும் தாக்கத்தை உருவாக்கியது. முதல் முறையாக, அறிவியலின் வரலாறு, தனிமனித செயல்பாடாக அல்லாமல் சமூக செயல்பாடாக முன்வைக்கப்பட்டது. பெர்னால், நீதம், ஜே.பி.எஸ் ஹலண்டே, லேன்செலலோட் ஹாக்பென் ஆகிய இளம் அறிஞர்கள் உள்ளடக்கிய விஞ்ஞானிகள் அறிவியலை புதிய முறையில் பார்க்க துவங்கினார்கள். 

அறிவியலின் உருவாக்கம் வரலாற்று ரீதியானது என விளக்கும் போது அது முதலாளித்துவ அறிவியலா? பாட்டாளி வர்க்க அறிவியலா? என்கிற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதில் குறித்து இப்போது நாம் கொண்டிருக்கும் தெளிவு ஆரம்பத்தில் இல்லை. அறிவியல் விதிகளை கண்டறியக்கூடிய பல்வேறு பிரிவுகளும், கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக அமைந்த சமூக நிகழ்முறைகளால் எத்தகைய தாக்கத்திற்கு ஆளாகின்றன? என்பதே கேள்வி. வேறு வார்த்தையில் கூறினால், அறிவியலுக்கு வர்க்கம் உண்டு எனில், அறிவியலில் இருந்து தத்துவத்தை பிரித்துப் பார்க்க வேண்டுமா?

இந்த வாதங்களில் பலவும் சார்பியல், குவாண்டம் பொறியமைவியல் பின்னர் லைசென்கோ மற்றும் மரபணுவியல் வழியே வெளிப்படுகிறது. பெரும்பாலும் கோபன்ஹேகனில் பயின்ற, அறிவியலாளர்களில் மிக முக்கியமான ஒரு பகுதியினர், சார்பியல் மற்றும் குவாண்டம் பொறியமைவியல் ஆகிய கருத்தாக்கங்களின் விளைவுகளை எடுத்துக் காட்டி, உலகத்தின் பொருளாயத தன்மையை மறுக்கிறார்கள். அவர்களை பொருத்தமட்டில், அறிவியலின் விதிகள் அனைத்துமே, சோதனைகளுக்காக, விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த அறிவியல் விதிகளுக்கு பொருளியல் அடிப்படை உண்டா இல்லையா என கேட்பதே தவறு என்கிறார்கள். எனவே, அறிவியலில் பொருள்முதல்வாதமும், கருத்துமுதல்வாதத்திற்கு எதிரான போராட்டமும், அறிவியலாளர்களுக்கு உள்ளாகவே பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றன. இதிலிருந்து, அறிவியலை இரண்டு விதமாக பார்க்கிற போக்கும் எழுந்தது – ஒன்று முதலாளித்துவ பார்வை மற்றொன்று பாட்டாளி வர்க்க பார்வை. 

அறிவியலாளர்கள், தங்களுடைய சித்தாந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் அறிவியல் விதிகளை விளக்குவதும், ஒரு அறிவியல் விதியை கண்டுபிடித்த அறிஞரின் சித்தாந்த நம்பிக்கையின் காரணமாக அந்த விதியையே கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என வாதம் செய்வதும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாகும். 

லேசென்கோ பிரச்சனையில் இருந்துதான் இந்த வாதம் தலையெடுக்கிறது. [லேசென்கோ பிரச்சனை என்பது என்ன?] (இன்றைக்கும் கூட) தனி மனிதர்களின் பண்பு நலன்களில் பரம்பரைக்கும், சூழலுக்கும் உள்ள பங்கு என்ன என்பது அறிவியலின் முக்கிய விவாதமாக இருந்தது; இப்போதும் இருக்கிறது. மரபணுவியலின் தொடக்க நிலையில், சூழலை விடவும் பரம்பரைக்கே கூடுதலான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதாக தோன்றியது. அதனால் பரம்பரையாகவே ஒருவருக்கு உள்ள உயர்ந்த நிலையின் காரணமாகத்தான் சமூக அதிகாரப் படிநிலை உருவாகியுள்ளது என்ற வாதத்திற்கு உதவி செய்வதைப் போல தெரிந்தது. மேலும், மரபணுவியலின் அப்போதைய ஆய்வுகள், பழ வண்டுகளைக் குறித்ததாகவும், உடனடிப் பயன்பாடு இல்லாததாகவுமே தோற்றம் தந்தன. இப்படியான சூழலில், மிகச் சிறந்த தாவர வளர்ப்பாளரான லேசென்கோ மரபணுவியலின் மீது தாக்குதல் தொடுத்தார், அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளித்தது. இந்த துறையில் சோவியத் அறிவியலின் முன்னேற்றத்தை பல பத்தாண்டுகளுக்கு இது தடுத்துவிட்டது. எது முதலாளித்துவ அறிவியல்? எது பாட்டாளி வர்க்க அறிவியல்? என்ற பார்வையுடன் செய்யப்படும் தலையீடானது எப்படிப்பட்ட ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதை 1960களின் பசுமைப் புரட்சி, விவசாயத்துறையில் தந்த முன்னேற்றமானது, மரபணுவியலின் புரிதல் இல்லாமல் நடந்திருக்க முடியாது என்ற உண்மையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சோவியத் வேளாண் துறையின் உடனடித் தேவைகள் காரணமாக, நல்ல அறிவியல் வளர்ச்சியை அலட்சியம் செய்ததானது சோவியத் ஒன்றியத்தின் வேளாண் துறைக்கும், அறிவியலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு உதாரணமாக இது அமைந்துள்ளது.

அறிவியலை முன்னோக்கி நகர்த்தும் சமூகத்தின் தேவைகள் என்று குறிப்பிடும்போது அந்த தேவைகள் ஆளும் வர்க்கத்தின் தேவைகளே என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, ‘சமூகம்’ என்ற சொல் ஒட்டுமொத்த சமூகத்தையும் குறிக்கக் கூடியதாக இல்லை. எனவே அறிவியலின் புற உந்து விசை என்பதும் கூட சமூகத்திற்குள் இருந்துதான் பெறப்படுகிறது. அது ஆளும் வர்க்கத்தின் தேவையாகவும் அல்லது பெரும் சமூகத்தின் விருப்பங்களாகவும் இருக்கிறது.

சமூகத்தின் தேவைகள் ஒரு சமுதாயத்தை உந்தினால், அது உற்பத்தி சக்திகளில் ஒரு பகுதி என்கிற முறையில், ஆளும் வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுகின்றன (அந்த தேவைகள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான இராணுவ தேவையாகவும் உள்ளன). இதனை ஏன் நாம் வர்க்கச் சார்பு அறிவியல் என்று அழைக்கக் கூடாது? அறிவியல் என்பது வரலாற்றின் விளைபொருள் என்ற பார்வையையும், புறநிலை அறிவை உருவாக்குவது அறிவியல் என்ற பார்வையையும் நாம் எப்படி இதனடிப்படையில் புரிந்துகொள்வது? இறுதியாக,  ஆளும் வர்க்கங்களின் சித்தாந்தங்களுடைய ஒரு பகுதியாகத்தான் அறிவியல் அமைந்துள்ளதா? 

மேற்சொன்ன கேள்விகளுக்கு நாம் பதில் தேட வேண்டும். இயற்பியல் மற்றும் வேதியியலின் சில பகுதிகளில் அறிவியலுக்கும், சித்தாந்தத்திற்கும் இடையிலான உறவினை விளக்குவது எளிதாக உள்ளது. அதே சமயம் சமூகம் மற்றும் உயிரியல் உட்கூறுகளை விளக்கக் கூடிய உளவியல் குறித்து பேசும்போது அது சிக்கலாகிறது, சித்தாந்தத்திற்கு கூடுதலான வேலை எழுகிறது.  

இங்கே எழும் முதல் கேள்வி, வரலாற்றின் விளைபொருளாக அறிவியல் உள்ளதென்றால், அதன் நோக்கங்கள் எங்கிருந்து எழுகின்றன?. இதில் நாம் ஒரு விசயத்தை ஏற்க வேண்டும். அறிவு எந்தச் சார்பும் இல்லாமல் சுதந்திரமாக உருவாக்கப்பட்டது என்ற கருத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சமூகத்தின் தேவைகளே அதனை உருவாக்குகிறது. பண்டைய – இந்தியா, எகிப்து மற்றும் பாபிலோனியாவில் – எந்தக் காலத்தில் விதைக்க வேண்டும், எப்போது அறுவடை செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கான தேவை எழுந்தது. அதுதான் நாட்காட்டியின் அவசியத்தை உருவாக்கியது. அது, வானியல் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் வானவியல் துறையின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. இருந்தாலும், சமூகத்திற்கு தேவைப்பட்டிருக்காத, வான்வெளியில் நகர்ந்துகொண்டிருக்கும் பல்வேறு பொருட்களைக் குறித்த புறவய அறிவினை அடிப்படையாகக் கொண்டுதான் வானவியல் அறிவு எழுந்தது.

இயற்கை அறிவியலில், அறிவியலைத் தூண்டுவதாக சமூகத் தேவைகள் இருந்தபோதிலும், இயற்கையின் பல்வேறு பகுதிகளின் உறவுகளின் ஊடாகத்தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. நியூட்டனிய அறிவியல், ஐன்ஸ்டீனிய சட்டகத்தினால் மாற்றீடு செய்யப்பட்டன. எனவே இந்த விதிகளை மாறாமல் நீடிக்கக் கூடியவை என்று எப்படி பார்க்க முடியும்? என்ற கேள்வி எழும்போது, அதற்கான பதில், ஐன்ஸ்டீனிய அறிவியலை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு உட்படுத்தும்போது நியூட்டனிய அறிவியல் வருகிறது என்பதாக சொல்ல முடிகிறது. அதாவது, ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளால் நியூட்டனின் அறிவியல் காலாவதியாகி விடவில்லை. இப்போதும் நாம் அன்றாட வேலைகளில் சில கணக்கீடுகளை செய்வதற்கு 

நியூட்டனை பயன்படுத்துகிறோம். இந்த வகையில் நியூட்டன் இயற்பியலும் தவறான ஒன்றல்ல; அது முழுமையற்றது எனலாம். அது உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு உண்மையாக இருந்தது; போதுமானதாக இருந்தது. எந்த அறிவியலிலும், இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே விளக்கப்படுகிறது. அறிவியல் எப்போதும் முழுமையடைவதில்லை. இயற்கை, முழுமையாக விவரிக்க முடியாத ஒன்று. இதனாலெல்லாம் அறிவியல் தவறாகி விடுவதோ அதன் மதிப்பை இழந்துவிடுவதோ இல்லை. 

அறிவியல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சிந்தனை வகைப்பாடுகளில் இருந்து, சிக்கல்களின் இரண்டாவது தொகுப்பு எழுகிறது. இவை வரலாற்றியலாக எழுந்திருக்கும் காரணத்தினால், சித்தாந்தம் என்பது அறிவியலின் பிரிக்க முடியாத பகுதியாக அமையவில்லையா? அறிவியல் வளர்ச்சிப்போக்குகளை கண்டறிவதற்காக நாம் பயன்படுத்தும் பலவகைப்பட்ட சிந்தனைகள், மனிதர்களின் சமூக விழிப்புணர்வில் இருந்துதான் நிச்சயமாக பெறப்படுகின்றன. இருந்தாலும் – நிறை, இயக்க விசை அல்லது சக்தி – ஆகிய வகைப்பாடுகளுக்கும் சித்தாந்தத்திற்குமான தொடர்பு மிகவும் குறைவே.

அதுவே நாம் மனிதர்களைக் குறித்த அறிவியலைப் பார்க்கும்போது, நம் சிந்தனையின் வகைகள் நம் சமூக உணர்வோடு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளன. இதனால்தான், ‘அறிவியல் பூர்வமான’ இனவாதம், புனிதவாதம் ஆகியவை அறிவியலை வித்தியாசமான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றன. உளவியலை விவரிக்கும் எந்த அறிவியலும் சார்புகளுக்கு அப்பாற்பட்டதாக இல்லை. எனினும் இந்த பகுதியிலும் கூட, அறிவியலும், சித்தாந்தமும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தாலும், இதற்குள்ளாகவே ஒரு அறிவியல் வகைப்பட்ட போராட்டம் நடத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

ஒரு துறையில், அறியப்பட்ட விசயங்களிலும் அதன் விளக்கங்களிலும் சித்தாந்த சார்பு தென்படுகிறபோதும், அந்த துறையை ஒதுக்குவது சரியானதல்ல. போராட்டம் அறிவியலுக்குள் மட்டும் நடக்கவில்லை; சமூகத்திலும் இந்த போராட்டம் நடந்துவருகிறது என்பது உண்மை. வர்க்க ஆட்சிக்கான வரலாற்று சூழல் நிலவக்கூடிய மட்டிலும், அந்த ஆட்சி நிலவக்கூடிய பகுதிகளில் ஒன்று என்கிற வகையில், அறிவியலிலும் அதனை எதிர்த்த சித்தாந்த போராட்டத்தை முன்னெடுத்தாக வேண்டும். 

ஆளும் வர்க்கம் அறிவியல் மீது தன்னை எப்படி திணிக்கிறது? இது மூன்று வழிகளில் நடைபெறுகிறது. முதலில் எந்த வகையான பிரச்சனைகளை விஞ்ஞானிகள் ‘தேர்ந்தெடுக்க’ வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. நிதி வழங்குவது மற்றும் கொடையளிப்பதன் மூலமாக, அறிவியலின் எந்த துறையில் நடக்கவுள்ள ஆராய்ச்சிக்கு, அதிகமான விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கவனிக்கிறது. எனவே, அறிவியலாளர்கள் எடுத்துக்கொள்ளும் பிரச்சனைகள் அல்லது தேர்வுகள் ஆகியவை, மூலதனத்திற்கோ அல்லது ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கோ எழும் தேவைகளை கணக்கில் கொண்டவையாக உள்ளன. அணு ஆயுதத்தை உற்பத்தி செய்த ‘மான்ஹாட்டன் திட்டம்’ இந்த சகாப்தம் பெரிய அறிவியலுக்கானது என்பதை எடுத்துக் காட்டியது. அந்த பெரிய அறிவியல், விளைவுகளையும் உருவாக்கியது.

இரண்டாவதாக, பிற வர்க்கங்களின் மீதும், இயற்கை வளங்களின் மீதும் மூலதனத்தின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலான அறிவியலே பின்பற்றப்பட்டது. உற்பத்தியின் ஒரு பகுதியாக அறிவியலும் அமையும்போது அது மூலதனத்தை மேலும் வலுவாக்குகிறது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, உழைப்பாளர்களை அதிகம் சுரண்டுவதற்கான வழிவகைகளை உருவாக்குவதோடு நிற்கவில்லை. விவசாயிகள் மற்றும் பாட்டாளிகள் மீதான கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான கருவிகளையும் உருவாக்குகிறது. மான்சாண்ட்டோ நிறுவனத்தின் பி.டி விதைகள் இதற்கான ஒரு உதாரணமாகும். மான்சாண்டோ நிறுவனம் விதைகளின் மீது கொண்ட கட்டுபாடு என்பது விவசாயிகளின் மீதான கட்டுப்பாடாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட விதையில் என்ன விதமான மரபணு மாற்றம் செய்யப்படவேண்டும் என்பதும், அதன் விளைவுகளும் என அனைத்துமே மான்சாண்ட்டோ பெருநிறுவனத்தின் நோக்கத்திற்காக ஆளுகை செய்யப்பட்டன. விவசாயிகள் தேவையிலிருந்தோ, நுகர்வோரின் தேவையிலிருந்தோ அல்ல.

மூன்றாவதாக, பல்வேறு துறைகளில், அறிவியலும் சித்தாந்தமும் நெருக்கமாக கலந்திருக்கின்றன. அவற்றை பிரித்து அறிவதே கடினமாக உள்ளது. அறிவியலும், உண்மையும் வர்க்க ஆட்சிக்கு ஆபத்தாக எழக்கூடிய துறைகளில் இது நடக்கிறது. உதாரணமாக, டார்வினின் கோட்பாட்டை எடுத்துக் கொண்டால், வெள்ளை ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்காகவும், ஐரோப்பிய ஆதிக்கத்தை நியாப்படுத்துவதற்காகவும் இந்தக் கோட்பாடு இனவெறி நோக்கில் பயன்படுத்தப்பட்டது. பின்நாட்களில் அதே காரணத்திற்காக IQ அறிவியல்

பயன்படுத்தப்பட்டது. சமூகம் குறித்த அறிவியலும், உயிரியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டவையாகும். 

வர்க்க தேவைகளால் மேலாண்மை செய்யப்படும் அறிவியலின் நிலைமைக்கும், உலகத்தின் உண்மைகளை கண்டறிவதற்கும் இடையிலான முரண்பாடு, கருத்து மோதல்களாலேயே தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. ‘மனித அறிவின் வளர்ச்சிக்கான கருவியாக அறிவியல் அமைவதற்கும், ஒடுக்குமுறைக்கான கருவியாக அறிவியல் அமைவதற்கும் இடையிலான முரண்பாட்டிற்கு தீர்வு காண்பது ஒரு அரசியல் புரட்சியால் மட்டுமே சாத்தியம்’. அறிவியலின் ஊடாக எழக்கூடிய சமூக முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதன் வழியாக மட்டுமே நம்மால் அறிவியலுக்கும் சித்தாந்தத்திற்கும் இடையிலான முரண்பாட்டை தீர்க்க முடியும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆலை உற்பத்தி

உற்பத்தி குறித்து பேசும்போது, நமக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் ஒன்றுபோல் தோற்றமளிக்கின்றன. உருவாக்கப்பட்ட பொறியமைவுகளை (அதாவது கருவிகள், இயந்திரங்கள் போன்றவை) நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அவை உற்பத்தி சக்திகள் மற்றும் அறிவினுடைய இணைந்த வெளிப்பாடுகளாக அமைந்திருக்கின்றன. மனித அறிவுதான் இப்படிப்பட்ட கருவிகளின் உருவாக்கத்திற்கு துணையாக இருக்கிறது. இங்கே மறுபடியும், அறிவியல் அறிவும் – இயற்கையின் விதிகளும் என இரண்டுமே பொறியமைவுகளை உருவாக்கிடும் மனித அறிவின் பகுதிகளாக அமைகின்றன. அறிவுத்துறையின் ஒரு பகுதியாக நுட்பமும் அமைந்திருப்பதை புரிந்துகொள்வது மிக முக்கியம். அந்த நுட்ப அறிவின் பகுதிகளாக இயற்கையின் விதிகள் மட்டும் செயல்படுவதில்லை; அனுபவ அறிவும், அனுபவ உறவுகளும், பாதுகாப்பு காரணிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களின் கடந்த கால படிப்பினைகள் ஆகியவையும் இணைந்து செயல்படுகின்றன. பல்வேறு சமகால எழுத்துக்களைப் போலவே, அறிவியல் அறிவும், தொழில்நுட்ப அறிவும் மார்க்சோடு மெல்ல பிணைந்துள்ளன. அறிவியல் அறிவு உருவானவுடனே அது ஒரு பகுதிக்கானதாகவோ, சமூகத்திற்கானதாகவோ தங்கிவிடுவதில்லை என்பதால்தான் அறிவை மேற்சொன்ன வகையில் வேறுபடுத்த வேண்டியுள்ளது. புவியீர்ப்பு விதிகள் எல்லா இடத்திலும் எந்த நேரத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. அதே சமயம், ஒரு பொறியமைவிலோ, கருவியிலோ பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப அறிவானது ஒப்பீட்டளவில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கானதாகும் – பூகோளவியல் அடிப்படையிலும், வரலாற்றியலாகவும் – மேலும், அது மாபெரும் உற்பத்தி அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. எனவே தொழில்நுட்ப அறிவு என்பது அறிவியல் அறிவை மட்டுமல்லாமல், சமூக உறவுகளையும் பிரதிபலிக்கிறது.

ஒரு எளிய உதாரணம் என்னவென்றால் மின்சார கேபிள் (வடம்) உருவாக்க தங்கம் தான் சிறந்த கடத்தியாக இருந்தாலும் நாம் தாமிரத்தையும், ஈயத்தையும் பயன்படுத்துகிறோம். தங்கத்தின் விலை குறித்த அறிவு தொழில்நுட்ப அறிவின் ஒரு பகுதியாக இருப்பதாலும், அந்த அறிவு பெரும் உற்பத்தி அமைப்பின் பகுதியாக இருப்பதாலும் இவ்வாறு முடிவு செய்கிறோம். இந்த அறிவு மிக அவசியமானது. 

அறிவியல் அறிவும், தொழில்நுட்ப அறிவும் ஒன்றல்ல என்பதைக் காட்டும் இரண்டாவது உதாரணம், மனிதர்கள் உருவாக்கும் பொறியமைவுகள் எப்போதுமே ஒரு காரணத்திற்காகத்தான் தொடங்கப்படுகின்றன. ஒரு கருவியை உருவாக்குவதற்கான நோக்கம் அந்த கருவியிலே பொதிந்துள்ளது. நிலவக்கூடிய சமூக உறவுகளுக்கு உதவாவிட்டால், அந்த கருவியோடு இணைந்துள்ள பயன்பாடு பொருளற்றதாகிவிடுகிறது. கருவிகள்/பொறியமைவுகள் உருவாக்கத்தில் சமூகம் குறித்தான அறிவும் இணையாவிட்டால், அந்த கருவியினால் பயன் எதுவும் இருக்காது.

அறிவியலுக்கும், உற்பத்திக்கும் இடையிலான இணைப்பை ஏற்படுத்தும் பாலமாக தொழில்நுட்பமே அமைகிறது. மூலதனம் குறித்தான மார்க்சின் ஆய்வானது, குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தில், தொழில்நுட்பங்களின் வரலாற்றைக் குறித்த அவருடைய ஆழமான அறிவை எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொழில்நுட்பம் முக்கிய சக்தியாக இருப்பதை அவர் கண்டார். அதே நேரத்தில் அவர், முதலாளித்துவம் முதலில் உற்பத்தி தேவைக்கான நிலையை உருவாக்கியது. அதற்கு பிறகு தான் எந்திர உற்பத்திக்கு சென்றது என்பதிலும் தெளிவாக இருந்தார். மூலதனத்தினால் தொழிலாளர்களுடைய செயல்முறைகள் பிரிக்கப்பட்டன. கைவினைஞர்கள் முன்பு செய்துவந்த திறன் மிக்க பணிகளை இயந்திரங்கள் எடுத்துக்கொண்டன. இயந்திரங்களின் மூலம் தொழிலாளர்களுடைய செயல்முறையை வேகப்படுத்துகிற பணியை மட்டும் மூலதனம் செய்யவில்லை. அது இயந்திரங்களையே இயந்திரங்களைக் கொண்டு உருவாக்குகிறது என்பதையும் கூடுதலாக மார்க்ஸ் விளக்கினார். தொழில்நுட்பமும், இயந்திரங்களும் முதலாளித்துவத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தின, அந்த மாற்றம் மேலும் மேலும் இயந்திர வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த செயல்முறை தொடர்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதுகுறித்து மார்க்சும் எங்கெல்சும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள்கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில், இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில், மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல், எந்திர சாதனங்கள், தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல், நீராவிக் கப்பல் போக்குவரத்து, ரயில் பாதைகள், மின்சாரத் தந்தி, கண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல், கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல், மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?”

அறிவின் விதிகளாலோ, அனுபவத்தாலோ மட்டும், இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களின் எழுச்சி நிகழ்ந்திடவில்லை என்று மார்க்ஸ் மேலும் தெளிவுபடுத்தினார். இந்த நிகழ்வுப்போக்கில் அறிவியல் அறிவின் பங்கினை ஒதுக்க முடியாது. “இயந்திரங்களின் வடிவத்தில் மனித உழைப்பை செயல்படுத்தும்போது, இயற்கை சக்திகளை மனித சக்தியின் இடத்தில் மாற்றீடு செய்கிற தேவை எழுகிறது, அனுபவ அறிவிற்கு பதிலாக அறிவியல் அறிவினை மிகுந்த கவனத்தோடு அமலாக்கிட வேண்டியுள்ளது.’ என்கிறார் கார்ல் மார்க்ஸ். மேலும் அவர், ‘உற்பத்தி குறித்தான அறிவாற்றல் ஒரு திசையில் முன்னேறுகிறது, இன்னும் பல துறைகளில் மங்கி மறைகிறது. நுட்பமான ஒரு பாட்டாளியிடம் எது மறைகிறதோ, அது அவரை வேலைக்கு அமர்த்தும் மூலதனத்திடம் குவிகிறது…. நவீன ஆலைகள், அறிவியலை ஒரு உற்பத்தி சக்தியாக மாற்றி, மூலதனத்திற்கு சேவையாற்றச் செய்கிறது.’ என குறிப்பிடுகிறார்.

அறிவியலை குறித்து மார்க்ஸ் பேசும்போது அனைத்து உழைப்பு (Universal Labour) என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வகையில், மூலதனமானது உடல் பயிற்சியாளர்கள், கலைஞர்கள், கவிஞர்களை போலவே விஞ்ஞானிகளையும் கூலி உழைப்பாளர்களாக மாற்றுகிறது.

நாம் ஏற்கனவே கூறியது போல், உழைப்பின் மற்ற பண்டங்களைப் போல அல்ல அறிவியல். அதன் கண்டுபிடிப்புகள் உள்ளூர் அளவிலோ, சமூகத்திற்கு ஏற்றாற்போலவோ மாறுவதில்லை. இந்த வகையில் பார்க்கும்போது, அறிவியல் உழைப்பானது – மார்க்ஸ் தனது உழைப்பின் மதிப்பு குறித்த தத்துவத்தில் விளக்கும் அனைத்து உழைப்பிற்கும் மிக நெருக்கமாக உள்ளது. மேலும் அவர் தனது மூலதனம் நூலின் 3 வது பகுதியில் அறிவியல், அனைத்து உழைப்பினை கூட்டுறவு உழைப்பில் இருந்து வேறுபடுத்துகிறார்.  

“அனைத்து உழைப்பு என்பது, கண்டுபிடிப்புகள், புதிய ஆக்கங்கள் போன்ற அறிவியல் உழைப்பாகும். இந்த உழைப்பானது வாழும் மனிதர்கள் மற்றும் முன்பு உழைத்துச் சென்ற உழைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பிலிருந்து விளைகிறது. மறுபக்கம், கூட்டுறவு உழைப்பானது வாழும் தனி மனிதர்களின் நேரடியான ஒத்துழைப்பில் இருந்து விளைகிறது.”

மார்க்சின் இந்த கூற்றின்படி, அறிவியல் அறிவும் தொழில்நுட்ப அறிவும் மனிதர்களுடைய சிந்தனை உழைப்பின் பகுதிகளாக அமைந்தவையாகும். எனவே அவை அனைத்து உழைப்பின் பகுதிகளாகவும் உள்ளன. அறிவியல் அறிவிற்கும் தொழில்நுட்ப அறிவிற்குமான உறவைக் குறித்த ஆய்வுகளுக்குச் செல்லாமல் இந்த இரண்டு வகைப்பட்ட அறிவினையும் உற்பத்தி சக்திகளின் வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தோடு இணைத்துப் பார்ப்போம். இயந்திரங்களை கட்டமைக்கும் தொழில்நுட்பங்களில் உள்ள அறிவியலினைக் குறித்து மார்க்ஸ் மிகையாக பேசுவதாக ஒருவர் வாதிடக்கூடும், அந்தக் காலகட்டத்தில் கைவினை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கட்ட இயந்திரங்களைப் பற்றியே மார்க்ஸ் பேசுகிறார். இதுவும் கூட விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதுதான்.

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் குறித்த மார்க்சின் அணுகுமுறையில் மிக முக்கியமாக குறிப்பிடவேண்டிய பகுதி என்னவென்றால் அவர் மூலதனத்தை கவனப்படுத்துகிறார். லாபத்தை நோக்கிய அதன் தேடலில், உற்பத்தி சக்திகளை அது நவீனப்படுத்துகிறது. உற்பத்தி சக்திகளில் ஏற்படும் மாற்றம் முதலாளித்துவத்தின் ஒரு பகுதியாக உள்ளது. (முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த தன்மை) உற்பத்தி சக்திகளின் மாறாத தன்மையை காப்பதையே தங்கள் நோக்கமாக கொண்ட பிற ஆளும் வர்க்கங்களில் இருந்து வேறுபட்டதாகும். இந்தியாவுடைய சாதி அமைப்பு, மேற்சொன்ன மாறாத தன்மைக்கு உதாரணங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு முறைக்குள்ளாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரே வழிமுறையாக, மதத்தை மாற்றிக் கொள்வதே இருக்கிறது. இஸ்லாமின் வழியாக புதிய தொழில்நுட்பங்கள் வந்து சேர்ந்ததும், கைவினைஞர்கள் தங்கள் கைவினை திறனை பயன்படுத்துவதற்காக பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமிற்கு மாறியதும் தன்னிச்சையாக நடந்தவை அல்ல.

இங்கிலாந்தில் குறிப்பாக ஜவுளி ஆலைகளில் நடந்த எந்திரவியல் வளர்ச்சியால், எந்திரப் பொறிகள் குறித்த அறிவியலில் பெரும் வளர்ச்சி உருவாகியது. இதனால் அறிவியலாளர்களுக்கு ஆய்வு செய்ய பல விசயங்கள் கிடைக்கின்றன என்பது மட்டுமல்ல; தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி புதிய கண்டுபிடிப்புகளுக்கான புதிய கருவிகளையும் தருகிறது. பிரான்சில் வேதித் தொழிற்சாலைகள் உருவாகின. வேதியியல் மற்றும் சாய ஆலைகள், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான புதிய ஊக்கத்தையும் அளித்தன. 

16-17 ஆம் நூற்றாண்டில் நடந்த அறிவியல் புரட்சியானது இந்த மறுமலர்ச்சியின் விளைவே ஆகும். பல்வேறு கூறுகளை இது ஒன்றாக கொண்டுவந்தது – உதாரணமாக, பல்வேறு கைவினைத் திறன்கள் இணைந்தன. கணிதத்தின் வளர்ச்சியோடு கைவினைஞர்களின் அறிவு ஒருங்கே இணைந்தது. பூதக் கண்ணாடி, தொலைநோக்கி ஆகிய புதிய கருவிகளின் மேம்பாடு, இதில் புதிய வளர்ச்சியை கொண்டுவந்தது. இறுதியாக, அச்சு இயந்திரத்தின் உருவாக்கம் காரணமாக, அறிவினை அணுகுவது கூடுதலாக சாத்தியமானது. கலை/பண்பாடு மற்றும் அறிவியல் என அனைத்திலும் இது மறுமலர்ச்சியை உருவாக்குவதில் முடிந்தது.

அறிவியல் புரட்சியைத் தொடர்ந்து தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. அறிவியல் புரட்சியானது, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடைய வளர்ச்சியோடு இணைந்து உருவாவதாகும், தொழில்நுட்ப புரட்சி – மார்க்ஸ் சொல்லும் எந்திரமயம் – 18 வது நூற்றாண்டில் இதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றதை முதன் முதலில் அடையாளம் கண்ட காலமாக 20 ஆம் நூற்றாண்டைக் கூற முடியும். இந்த நூற்றாண்டில் நடக்கிற புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் குறித்து பெர்னல் எழுதிய ‘வரலாற்றில் அறிவியல்’ என்ற புத்தகம் பேசுகிறது. அறிவியலும், தொழில்நுட்பமும் கூட்டாக இணைந்து உற்பத்தி துறையில் ஈடுபடுவதை பல்வேறு கருவிகள் நிறுவனமயப்படுத்துகின்றன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான  ஆய்வகங்களும், பொது நிதியால் உருவாக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளின் பகுதிகளாகும். போட்டிகளில் நாடுகள் முந்தியிருப்பதற்கான வாய்ப்பை அறிவியல் வழங்குகிறது. பிரான்சும், ஜெர்மனியும் இந்த நோக்கத்துடன் தங்களுடைய கல்வி அமைப்பை அமைத்துக்கொண்டன.

தொழில் உற்பத்தியோடு அறிவியல் நேரடியாக தொடர்பு பெற்றுள்ளது. அதன் ‘உற்பத்தியோடும்’ ‘மறு உற்பத்தியோடும்’ தொடர்புடையதாக உள்ளது. அறிவியலின் மறு உற்பத்திக்கான அமைப்பு – புதிய அறிவியலாளர்களையும், அறிவியல் பணியாளர்களையும் படைக்க வேண்டிய தேவை – பல்வேறு பல்கலைக் கழகங்களையும் ஆய்வகங்களையும் உருவாக்கியது. 20 ஆம் நூற்றாண்டின் கல்வி நிறுவனங்கள் இதன் பகுதியாகவே உருவாகின.

பெர்னல் எழுதிய புத்தகம் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. ‘அறிவியலின் சமூக செயல்பாடுகள்’ என்ற அவரின் புத்தகம், அறிவியலின் உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் திட்டமிடல் அவசியம் என்பதைச் சொல்கிறது. அறிவியல் வளர்ச்சிக்கு திட்டமிடலும், நிதியும் அவசியம். மேலும் அவர், இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளை குறித்து எழுதினார். இதுதான் அங்கே பல்வேறு துறைகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சிகள் பற்றிய முதல் ஆய்வாகும். இறுதியாக, சோவியத் ஒன்றியத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டபோது, சமூகத்தின் தேவை அதிகமாக இருந்த நிலையில், அதை பூர்த்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்கான செலவுகள் 10 மடங்கு அதிகமாக செய்வதை அவர் குறிப்பிடுகிறார்.

விஞ்ஞானம், பொது நன்மைக்காக பயன்படுத்தப்படுவதற்கு பதிலாக, போர்களின் தேவைக்காகவும், தனியார் லாபத்திற்காகவும் தவறாக பயன்படுத்தப்பட்டதை பெர்னல் தன்னுடைய நூலில் கவனப்படுத்துகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடைய மகத்தான ஆற்றல் மக்களுடைய நன்மைக்காக அல்லாமல், முதலாளிகளின் லாபத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டு அறிவியலை வளர்த்தெடுத்து அதன் மூலம் லாபத்தை பெருக்குவதற்கான தன்மை, அராஜகத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ அமைப்பில் இல்லை என்று பெர்னல் உணர்ந்தார். சோவியத் அமைப்பின் அறிவியலைத் திட்டமிடும் தன்மையானது போட்டிக் களத்தில் நீண்டகால நன்மையை வழங்கும் என்று அவர் கருதினார். அதன் மூலம் மக்களின் விருப்பங்களை மட்டும் நிறைவேற்றுவதல்லாமல், முதலாளித்துவ உற்பத்தி முறையிலிருந்து உற்பத்தியை மீட்கவும் அது உதவும் என்றும் அவர் நினைத்தார். 

பெர்னலின் காலத்தில் வாழ்ந்த மார்க்சிஸ்டுகளைப் போலவே அவரும் முதலாளித்துவத்தின் தாக்குப்பிடிக்கும் தன்மையை குறைத்தே மதிப்பீடு செய்தார்கள் என தோன்றுகிறது. ‘பெரும்’ அறிவியலின் – அணு சக்தி அறிவியலின் – வெற்றியைத் தொடர்ந்து, முதலாளித்துவமானது பெர்னல் குறிப்பிட்ட விதத்தில் அறிவியலை மறு ஒருங்கிணைப்புச் செய்துகொண்டது. அதில் பொது நன்மை மட்டும் விடுபட்டிருந்தது. அதே சமயம் சோவியத் அறிவியல், அதிகாரத்தன்மை உடையதாகி அதில் மாற்றத்திற்கான வாய்ப்பு தடைபட்டது. நவீன அறிவியலை திட்டமிடுவதில் உள்ள அபாயமாக பெர்னல் எச்சரித்தது இங்கே நடந்தது.

அறிவியலை திட்டமிட வேண்டும் என்ற பெர்னலுடைய கருத்து,  செல்வாக்கு மிகுந்த அறிவியலாளர்கள் சிலரால் எதிர்க்கப்பட்டது. அறிவியல் வளரக்கூடிய திசையை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது என்கிற போது அதனை முன்கூட்டியே திட்டமிடுவது சாத்தியமில்லை என்பதால் அதனை திட்டமிட முடியாது என அவர்கள் வாதம் செய்தார்கள். அறிவியலாளர்களுடைய சுதந்திர செயல்பாட்டை திட்டமிடலுக்கு எதிராக நிறுத்தி வாதம் செய்தார்கள். அது சோசலிசத்தின் பிரிக்கமுடியாத பகுதி என்று அவர்கள் நினைத்தார்கள். 

போருக்கு பிறகான காலகட்டத்தில், அறிவியல் திட்டமிடலை வலியுறுத்திய பெர்னலுடைய கருத்து, முதலாளித்துவ நாடுகளிலும் கூட வெற்றியைக் கண்டது. அவர் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒரு நாடு தன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% ஒதுக்க வேண்டும் என்கிறார். 20 ஆண்டுகளில், வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் இந்த அளவினை எட்டிவிட்டார்கள். பனிப்போர் நடந்துகொண்டிருந்தபோதிலும் கூட, அதற்கு முரணாக, அறிவியலை திட்டமிடுவதன் அவசியத்தை உணர்ந்து அதனை பின்பற்றவும் தொடங்கிவிட்டார்கள்.

சோவியத் ஒன்றியம், ஒரு பின் தங்கிய பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து, அறிவியலை திட்டமிட்டு வளர்த்ததன் மூலமும், அறிவியல் நிறுவனங்களையும், அதற்கான நிதியாதாரத்தையும் அதிகப்படுத்தி, தன்னுடைய வளர்ச்சியை சாதித்ததை பெர்னல் எடுத்துக்காட்டினார். பெர்னல் குறிப்பிடுகிற இந்த சோவியத் உதாரணம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் குறிப்பிட்ட தாக்கம் செலுத்தியது. பெரும்பான்மையான வளரும் நாடுகள், அரசினை வளர்ச்சிக்கான கருவியாக பார்த்தன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசின் வேலையாகியது. இந்தியாவில் சி.எஸ்.ஐ.ஆர் உட்பட பல்வேறு அறிவியல் நிறுவனங்களை உருவாக்கிட காரணமாக அமைந்த, நேருவிய கொள்கைகளின் ஒரு பகுதியாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் இருந்ததில், பெர்னலின் தாக்கம் ஒரு காரணமாக அமைந்தது. ஜே.பி.எஸ் ஹலண்டே மற்றும் பெர்னல் ஆகியோர் இந்தியாவுடைய அறிவியல் கட்டமைப்பை உருவாக்குவதில் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தார்கள்.

பெர்னல் எழுதிய ‘அறிவியலின் சமூக செயல்பாடுகள்’ என்ற புத்தகம், அது தொழில்நுட்பத்தை அணுகும் விதத்திலும் மிக ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஆலை உற்பத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்படுவது அவசியம் என்பதை குறிப்பிடுகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் ஆகியவைகளில் செலுத்தப்படும் உழைப்பானது அனைத்து உழைப்பு என்பதை முன்கூட்டியே பார்த்தோம். உழைப்பாளர்கள் மூலதனத்தை உற்பத்தி செய்கிறார்கள் எனில், அதிலும் உற்பத்தி சக்தி என்ற முறையில் அறிவு உற்பத்தியாகிறது. நாம் ஒரு வகையில் இந்த அறிவினை, மூலதனத்தைப் போலவே ‘இறந்த’ உழைப்பு எனலாம். மார்க்ஸ் மூலதனத்தை எப்படி விளக்குகிறாரோ அதே வகையில்தான் பெர்னல் முன்வைக்கும் பொருளுள்ள தொழில்நுட்பம் என்ற கருத்தும் அடங்குகிறது. பணம் ஒரு குறிப்பிட்ட அளவில் திரண்டால்தான் அது மூலதனமாகும் என்பதை மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதே போல, தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை சாதித்தால்தான் அது பயனுள்ள தொழில்நுட்பமாக ஆகிறது என்கிறார். மூலதனத்தின் பொதுவான இந்த பண்புகளை பணமும், தொழில்நுட்பமும் கொண்டுள்ளன. 

மூலதனத்தின் இதர வடிவங்களிடமிருந்து, அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட தன்மையில் வேறுபடுகின்றன. பண வடிவத்திலான மூலதனத்தின் மாறா வடிவங்களான ஆலையும், இயந்திரங்களும் பயன்படுத்தும் போது தேய்மானம் அடைகின்றன. மூலதனத்துடைய அறிவு வடிவம் தேய்மானம் அடைவதில்லை – எந்த இழப்பும் இல்லாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட முடியும். அறிவினை எந்த இழப்பும் இல்லாமல் மீண்டும் பயன்படுத்துவதற்கும், காப்புரிமை மற்றும் பதிப்புரிமையில் மூலதனம் கொண்டிருக்கும் சட்டப்படியான ஏகபோகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைக் குறித்து பிறகு பார்ப்போம்.

முதல் உலகப்போர் காலகட்டம், நவீன அறிவியலில் இருந்து விலகி நவீனத்தை எதிர்ப்பதற்கான வாதங்களுக்கு முதல் உலகப்போர் காலம் ஊக்கமளித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். விஷ வாயு – நேரடியாகவே ‘நவீன’ அறிவியலின் விளைவாகும் – ஹிரோசிமா நாகசாகி நிகழ்வுக்கு சமமான பாதிப்பை அது ஏற்படுத்தியது. முதல் முறையாக, அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேற்றத்திற்கானவை மட்டுமல்ல; அழிவுக்கான சக்திகளும் கூட என்று முதல் முறையாக உணரப்பட்டது. கருத்தியலாக இந்த காலகட்டம், அறிவியலில் சில அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை முன்னணி செயல்பாட்டாளர்களே முன்வைத்த காலமாகவும் இருந்தது.

இருப்பினும், ஒரு காரணி மட்டும் முந்தைய காலங்களில் இருந்து இப்போதைய காலத்தை வேறுபடுத்துகிறது. முந்தைய காலகட்டத்தில், மனித குலத்திற்கு தனது சூழலில் இருந்தே பல ஆபத்துக்கள் வந்தன. அதனால் நாகரீகங்களையும், நிலவும் உயிர்க் கோளத்தையும் அழிக்க முடியாது. இன்றோ வளரும் தொழில்நுட்பங்களின் அழிவுத்தன்மை – அணு ஆயுதங்கள், பருவநிலை மாற்றம், உயிரி ஆயுதங்கள் – ஆகியவை நாம் இப்போது அறிந்துள்ள நாகரீகத்தில் தாக்கம் செலுத்துவதுடன் தாக்கி அழிக்கவும் முடியும் என்ற நிலை வந்துள்ளது.  தொழில்நுட்பத்தின் மீது சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முடிவுகளை மேற்கொள்வதில் மக்களாட்சித்தன்மையை கடைப்பிடிப்பது ஆகியவற்றிற்கு புதிய பரிணாமத்தைக் கொடுக்கின்றன. அனைத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து நன்கு அறிந்தவர்கள் என்பதற்காக மட்டுமே, அதன் வளர்ச்சியில் அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமே அதற்கு பொறுப்பாளர்கள் என முழுமையாக அவர்களிடம் விட்டுவிடுவது என்பது எவரும் ஏற்பதற்கு கடினமானதாகும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: