திக்கெந்தர் சிங் பன்வர்
நகரமயமாக்கல் நடவடிக்கை குறித்து மார்க்சீய பார்வையில் எழுதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் குறித்தும், அதன் பரிமாணங்கள் குறித்தும், இதில் தலையிடுவதற்கான நமது பணிகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் மார்க்சீய அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.
முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை உபரியை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உபரி பின்னர் கைப்பற்றப்பட்டு, அந்நடைமுறையில் மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எந்தவொரு மார்க்சீயவாதியைப் பொறுத்தவரையிலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட உபரி மீண்டும் தொழிலாளிக்கே பகிர்ந்தளிக்கப்படுவதை உத்திரவாதம் செய்திடப் பணியாற்றுவது முக்கியமாகும். அதேநேரத்தில் முதலாளி களைப் பொறுத்தவரையிலும், முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும், மேலும் அதிக அளவில் உபரி உற்பத்தி செய்யப்படுவதையும், அதை பெருமளவில் தனதாக்கிக் கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும். 200 ஆண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், இந்த அடிப்படைக் கோட்பாடு எவ்வாறு மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும், பெருமுதலாளிகளின் வளர்ச்சி எவ்வாறு பெருகியுள்ளது என்பதையும் நாம் கண்டு வருகிறோம். உலகிலுள்ள மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரான 4.6 பில்லியன் மக்களின் சொத்துக்களின் மதிப்பைவிட கூடுதலான சொத்துமதிப்பு கொண்டவர்களாக கிட்டத்தட்ட 2000 பில்லியனர்கள் (ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் சொத்துடையவர்கள்) உள்ளனர் என்பதிலிருந்து இதை உணரமுடிகிறது.
குவியலுக்கான மையமாக மாறும் நகரம்
நகரம் என்பது உபரியை உருவாக்கி, மறுபங்கீடு செய்யும் ஒரு தொழிற்சாலையைப் போன்றதல்ல என்றாலும், மேற்கூறப்பட்ட வடிவத்திலான சொத்துக் குவியலுக்கு நகரம் துணைபோகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இத்தாலிய நகரவாதிகளைப் பொறுத்தவரை “முதலாளித்துவ உற்பத்தி அதிக அளவில் ஆழமாக ஊடுருவி, விரிவாக்கத்தை விறுவிறுப்பாகத் துவங்குகிறபோது ஒட்டுமொத்த சமூக உறவுகள், உற்பத்தியோடு முழுமையாக ஒத்திசைந்த சமூகமாகவும், உற்பத்தியானது சமூகத்தின் தனித்துவமாகவும் தோற்றமளிக்கிறது.” முதலாளித்துவ உற்பத்தியின் சமூக உறவுகளில் உற்பத்தியை பொதுமைப்படுத்துவதே சமூகத்தின் உன்னத நிலையாக தெரியப்படுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. மேலும் இது ஒன்றிணைந்து சமூக உறவுகளின் வலைப்பின்னலுக்கு – ஒரு பொதுவான சமூக உறவுக்கு – வழிவகுக்கிறது. ஒட்டுமொத்த சமூகமும் உற்பத்தியின் வெளிப்பாடாக மாற்றப்படுகிறது. அதாவது, ஒட்டுமொத்த சமூகமும் தொழிற்சாலையின் செயல்பாடாக உள்ளது. மேலும், தொழிற்சாலை என்பது அதன் பிரத்தியேக ஆதிக்கத்தை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவுபடுத்துகிறது.
எளிமையாகச் சொல்வதானால், முதலாளித்துவ உற்பத்தியின் சமூகஉறவுகள், சமூகத்தை உற்பத்திக்கான ஒரு வழிமுறையாகவும், உற்பத்தியை அதன் இறுதிநிலையாகவும் பார்க்கிறது. அதே சமூக சார்பு தனிப்பட்ட முறையிலான பங்கீட்டிற்கான வழிமுறையாகிறது. எனவே, சமூக உறவானது ஒருபோதும் உற்பத்தி உறவுகளிலிருந்து பிரிக்கப்படுவதில்லை என்பதோடு, தொழிற்சாலையின் சமூக உறவுகளோடே உற்பத்தி உறவுகள் அடையாளம் காணப்படுகின்றன. மேலும், தொழிற்சாலையுடனான உற்பத்திஉறவுகள் ஒவ்வொரு முறையும் பெருமளவிலான, நேரடியான அரசியல் உள்ளடக்கத்தைப் பெறுகின்றன.
உழைக்கும் வர்க்கமானது அரசு என்பதை சமூகக் கண்ணோட்டத்திலிருந்தும், சமூகத்தை தொழிற்சாலையின் கண்ணோட்டத்திலிருந்தும், தொழிற்சாலையை தொழிலாளியின் கண்ணோட்டத்திலிருந்தும் புரிந்துகொள்வது அவசியமாகும். உண்மையில் சொல்லப்போனால், நகரம் என்பது உபரியை உற்பத்தி செய்வதற்கும், பெருமளவிலான பங்கீட்டிற்குமான மற்றொரு தளம் எனவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியின் சட்டங்கள் அதில் மர்மமானவையாக உள்ளன. “நகரம் குறித்து திட்டமிடுபவர்கள் அதனை காகிதத்திலான வெறும் திட்டமாகத் தீட்டுவதில்லை. அவர்கள் வங்கிகளுடன், முதலாளிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்” என ‘தி கேப்பிடல் சிட்டி’ என்ற தனது புத்தகத்தில் சாமுவேல் ஸ்டெயின் குறிப்பிடுகிறார்.
மிகச்சிறந்த மார்க்சீயவாதியான லெஃபெப்வ்ரே நகர்ப்புறம் என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை அளித்தார். தொழில்துறையில் கவனம் செலுத்துவதைப் போலவே மார்க்சிஸ்டுகள் நகர்ப்புறத்திலும், தொழிற்சாலைகளைப் போலவே தெருக்களிலும் கவனம் செலுத்தவேண்டுமென அவர் கூறினார். நகரமயமாக்கல் என்பது முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதோடு, சமூகக் கட்டுப்பாட்டிற்கான ஒரு வழிமுறையும் ஆகும். அரசு சார்ந்த செயல்பாடுகள், வேலைப்பங்கீடு, சந்தையின் தொடர்ச்சியான செயல்பாடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் சமூகப் போராட்டங்கள் ஆகியவற்றை நகர்ப்புறப் பகுதிகள் உருவாக்குகின்றன.
இறுதியாக, நகரமயமாக்கல் என்பது வர்க்கங்களின் பிரிவை இடமாற்றம் செய்வதற்கான ஒரு செயல்முறையைக் குறிக்கிறது. மேலும், இது ஃபிரெட்ரிக் எங்கெல்சால் வீட்டுவசதி குறித்து என்ற புத்தகத்தில் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இடம் சார்ந்த வடிவங்கள் சமூக செயல்முறைகளை உள்ளடக்குகின்றன என்பதோடு, அனைத்து செயல்முறைகளும் இயல்பாகவே இடம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.
எனவே, நகரம் என்பது மூலதனத் திரட்டலுக்கும், உபரியை பங்கீடு செய்வதற்குமான மிக முக்கியமான களங்களில் ஒன்றாக ஆகிறது.
ஆண்டாண்டு காலமாக, குறிப்பாக 1980களின் பிற்பகுதியிலிருந்து, மிகப்பெரிய அளவிலான உபரியை உருவாக்குவது என்பது நகரங்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது. மூலதனம் பறிக்கப்பட்டுள்ளதோடு, உபரியை உற்பத்தி செய்யும் வழக்கமான முறை கடந்த 40 ஆண்டுகளில் உருமாற்றம் பெற்றுள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உபரியை உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை. இறுதியில், அதுவே (உபரியை உருவாக்குவதும், பயன்படுத்துவதும்) அதன் உந்துசக்தியாகத் திகழ்கிறது.
ஆனால் சமீபகாலமாக நடைபெற்று வருபவை பற்றி முதலாளித்துவ பொருளாதாரத்தில் இதற்குமுன் கேள்விப்படாத ஒன்றாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடைமுறையில் சொத்துக்களின் உபரி உருவாக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பரிமாற்ற மதிப்பு உள்ளது. சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் ‘பயன்மதிப்பு’ கொண்டவையாகக் கருதப்படும் சில பொருட்களை பண்டமாக்க முடியவில்லை. உதாரணமாக, தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் என்பது உரிமையா அல்லது தேவையா? வாஷிங்டன் ஒப்பந்தத்தின்படி, தண்ணீர் என்பது ‘தேவை’ ஆகும். எனவே, அதனை மக்களுக்குக் கிடைக்கச் செய்வது ‘அரசு’ மற்றும் அதன் கருவிகளின் கடமையல்ல. சந்தையில் உள்ள பகாசுர கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பலரால் இந்தத் தவையை பூர்த்தி செய்ய முடியும்.
கல்வி, சுகாதாரம், தகவல்தொழில்நுட்பம் போன்ற அடிப்படை சேவைகள் பண்டமாக்கப்படுவதை நாம் கண்டு வருகிறோம். இந்த நடைமுறையில் உபரிமதிப்பு பறிமுதல் செய்யப்படுவதும், தனதாக்கிக் கொள்ளப்படுவதும் பெருமளவில் நடைபெறுகிறது. (2019ல் சோஷியலிஸ்ட் ரெஜிஸ்டரின் பக்கம் 65ல் உர்சுலா ஹ்யூஸ்). இத்தகைய குவிப்பு நடைமுறை விரைவுபடுத்தப்படுகையில், உண்மையில் புதிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் மந்தநிலை உருவாகிறது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் உற்பத்தியின் காரணமாக அதிகரிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை முழுமையாக உறிஞ்சும் வகையில் பயன்படுத்துவதாலேயே அவர்களது லாபம் தொடர்ந்து நீடிக்கிறது.
2006ம் ஆண்டில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய 100 பன்னாட்டு நிறுவனங்களில், 20% சேவைத்துறையில் இருந்தன. 1997ம் ஆண்டில் இது வெறும் 7% மட்டுமே இருந்தது. நவீன தாராளவாதத்திற்குப் பிந்தைய யுகத்தில் முதலாளித்துவத்தின் தன்மை மாறியுள்ளது. இதில் உற்பத்தியின் காரணமாக லாபம் அதிகரிக்கவில்லை. மாறாக, வீட்டுக்கடனை தொகுப்பது, சேவைகளை சரக்காக்குவது போன்ற நிதி சம்பந்தமான மூலதனத்தின் இதர சூறையாடல்களால் இது ஏற்பட்டது.
நிக்தியோடர், ஜேமீபெக் மற்றும் நீல் ப்ரென்னர் சுட்டிக்காட்டியுள்ளதைப் போன்று, “தொழில்துறை மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்குதல், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், கார்ப்பரேட்டுகள் மீதான வரிகளை குறைப்பது, மக்களுக்கான சேவைகளையும், சொத்துக்களையும் தனியார்மயமாக்குவது, சமூக உதவித் திட்டங்களை நீக்குவது, சர்வதேச மூலதனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது மற்றும் பகுதிகளுக்கு இடையேயான போட்டிகளைத் தீவிரப்படுத்துவது” ஆகியவற்றையே நவீன தாராளவாதம் குறிப்பதாக அமைகிறது. (http://www.blackwellreference.com/public/tocnode?id= g9781405189811_ chunk_ g97814051 898112).
நகர்ப்புற இந்தியா
இந்தியாவில் நகரமயமாக்கல் என்பது ஹரப்பா நாகரீகத்தைப் போன்று பழமையானது. அதன்பின்னர், வளர்ச்சிப் போக்கின் பிந்தைய கட்டத்தில் உருவாக்கப்பட்ட சில புராதன நகரங்களும், சில பெரிய முகலாய நகரங்களும், மாநகர்களும் உள்ளன. காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய காலம் குறித்து, அதுவும் குறிப்பாக 1990கள் துவங்கி நவீன தாராளவாத கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட காலம் குறித்தே நாம் அதிகம் கவனம் கொள்கிறோம். விடுதலைக்குப் பிந்தையரஇந்தியாவில், திறன்களை நினைவூட்டுபவையாக மட்டுமின்றி, பெருமளவில் அனைத்தையும் உள்ளடக்கிய வடிவங்களை கொண்ட நகரங்களை நிர்மாணிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுமையான கண்ணோட்டத்தோடு நிர்மாணிக்கப்பட்ட சண்டிகர் மற்றும் இதர நகரங்கள் போன்றவை பின்னால் நாம் கைவிட்டு விட்ட மற்றொரு மாதிரியாகும்.
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்ந்தனர். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம், கிராமப்புற மக்கள்தொகையை விட கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் நகர்ப்புறபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமான எண்ணிக்கையை குறிக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீதம் நகர்ப்புறங்களில் இருந்து வருகின்றன. அரசின் வருமானத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நகர்ப்புற இந்தியாவிலிருந்து வருகிறது. பெருநகரங்களில், 40 சதவீதத்திற்கும் கூடுதலான மக்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். நகர்ப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் ஒற்றை அறையில் வசித்து வருகின்றனர். 75 சதவீதத்தினர் இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அணிதிரட்டப்பட்ட உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வீழ்ச்சி காரணமாக உழைக்கும் மக்களின் பேரம்பேசும் திறன் குறைந்துவருவதால், நகரங்கள் தொடர்ந்து வாழத்தகுந்த இடங்களாக நீடிக்கமுடியாமல் போயுள்ளன. குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவை சரக்காக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றிற்கான பெரும்செலவை மக்கள்ஏற்க வேண்டியுள்ளது. மேலும், ஏழைகளுக்கான, கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கங்களுக்கான வீட்டுவசதி என்பது கூட எட்டாக்கனியாகி உள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 50 மில்லியன் பேர் தங்குமிடம் எதுவுமின்றி இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
விலக்கின் மற்றொரு வடிவம்
இன்றைய நகர திட்டமிடல் மற்றும் வளர்ச்சியானது, ஏழைமக்கள் வசித்துவந்த நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதிகளை மேம்படுத்தி புதிய வர்த்தகங்களை ஈர்த்து, அங்கு அதுவரை வசித்துவந்த ஏழைமக்களை அங்கிருந்து வெளியேற்றி, வசதிபடைத்தவர்களை அங்கே குடியேறச் செய்கிறது. மேலும், சாதாரண மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை எட்டாக்கனியாக்குகிறது. குறிப்பாக முறைசாரா துறையை சார்ந்தவர்களின் இருப்பிடம் வீடு என்ற தகுதியே இல்லாத ஒன்றாக உள்ளது. பிரதானமாக இதன் காரணமாகவே குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.
நகரங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன – ஏழைகளின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி வசதிபடைத்தவர்களை அங்கு குடியேறச் செய்வது (gentrification) அல்லது முதலீட்டைத் திரும்பப் பெறுவது அல்லது குறைப்பது என்பதே அந்த இரண்டு வாய்ப்புகளாகும். நகர்ப்புற பகுதிகளில் மூலதனத்தை மறுமுதலீடு செய்து அங்கு ஏற்கனவே வசித்துவரும் ஏழைகளையும், அவர்களது கலாச்சார தயாரிப்புகளையும் அங்கிருந்து இடம்பெயரச் செய்து, அவ்விடங்களை வசதிபடைத்தோரையும், அவர்களுக்குப் பிடித்தமான அழகியல் மற்றும் வசதிகளைக் கொண்டு நிரப்புவதே ஜென்ட்ரிஃபிகேஷன் என்பதாகும்.
இந்திய நகரங்களின் கதையானது அமெரிக்காவின் வீட்டு வசதி மேம்பாடு மற்றும் செயல்முறைகளிலிருந்து சற்றே மாறுபடுகிறது. இருந்தபோதும், இந்தியாவில், உடைமைப்பறிப்பின் வாயிலாகவே மூலதனத் திரட்டல் நடைபெறுகிறது. குடிசைப்பகுதிகளிலிருந்து ஏழைமக்களை வெளியேற்றி, பொதுவான தேவைகளுக்காக மாற்றியமைக்க வேண்டிய அவ்விடங்களை ரியல்எஸ்டேட் மேம்பாட்டிற்கானவையாக மாற்றுவது முக்கியமான பிரச்சனையாகும்.
இத்தகையதொரு சூழலில், வலுவான உறுதியான நடவடிக்கைகள் எதுவுமின்றி, நகரத்தின் நிலைத்தன்மை ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ஒருபோதும் யதார்த்தத்தில் அது நடப்பதில்லை. நகரங்களை வாழத் தகுதியான இடங்களாக ஆக்கிட உபரியை ஜனநாயகமாக்குவது மிக அவசியமாகும். உழைப்பாளி மக்களின் கூட்டு வலிமையின் மூலமாகவோ அல்லது நகர, மாகாண மற்றும் தேசிய அளவிலான கொள்கைரீதியிலான தலையீடுகள் மூலமாகவோ உபரியை ஜனநாயகமாக்குவது நடைபெறலாம்.
உறுதியான நடவடிக்கையையும், உபரியை ஜனநாயகமாக்குவதையும் எட்டுவதற்கான ஒரு கருவியாக நகரக் கவுன்சில் இருக்கக்கூடும். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள், நகரத்தை சுதந்திரமாகவும், ஜனநாயக பூர்வமாகவும் நிர்வகிக்கக்கூடிய திறன் சூறையாடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மாகாண அரசுகளின் இணைப்புகளாக அவை மாறிவருகின்றன.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நகர வளர்ச்சியின் பரிணாம வரலாற்றில் சமூகங்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை குறிக்கிறது. காவல், போக்குவரத்து, எரிசக்தி போன்ற நகரம் முழுவதற்குமான பொறுப்புகளை தானாக இயங்குபவையாக ஆக்கிடுவதற்கு தரவுப்புள்ளிகளை பயன்படுத்துகிற நகர்ப்புற வளர்ச்சித் திட்டமே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும். முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது கைமாற்றுவதோடு, பாரம்பரியமாக நகராட்சி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் பல நகர்ப்புற சேவைகளை இத்திட்டங்கள் தனியார் மயமாக்குகின்றன. தொழில்நுட்பம் நிரம்பிய ஸ்மார்ட் சிட்டியானது தனிநபர் சுதந்திரங்களையும், உரிமைகளையும் வெட்டிச் சுருக்குவதோடு, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய “1984” எனும் நாவலில் விவரிக்கப்பட்டதைப் போன்ற – மக்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அரசு கட்டுப்படுத்த முயல்கிற அரசியல் நடைமுறையைக் கொண்ட எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஸ்மார்ட் நகரங்கள் என்பவை வெறுமனே தகவல்களையும், தகவல்தொடர்பு தொழில்நுட்ப குவியல்களும், நகரத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும் கொள்கைகளும் அல்ல. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, அரசு, தனியார் மற்றும் சமூக துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கக்கூடிய வகையிலானதொரு சமூக அமைப்பை நகரமோ அல்லது நகராட்சியோ உருவாக்கிட வேண்டும். இதில் பங்கேற்பவர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்களது பங்களிப்பை அளித்து, அதற்குப் பதிலாக மதிப்பைப் பெறுகின்றனர்.
இதற்குப் பல பங்கேற்பாளர்கள் உள்ளனர். உதாரணமாக, ஜிஇ, ஐபிஎம், க்வால்காம், மாஸ்டர்கார்ட், ஆல்ஸ்ட்ராம், வெரிசான், சிஸ்கோ, எனெல், மைக்ரோசாப்ட் மற்றும் தாம்சன் ராய்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை தனது பல்வேறு பிரிவுகளிலான ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு சேவைகளை அளிப்பவர்களாக இந்திய ஸ்மார்ட் சிட்டி கவுன்சில் பட்டியலிடுகிறது. (http://india.smartcitiescouncil.com/member-levels/lead-partners).
ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்ப சேவை அளிப்பவர்களாக உள்ள மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான நிறுவனங்கள் பலவும், நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் பணியை எடுத்துக் கொண்டுள்ளன; அல்லது இத்திட்டத்தின் முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பவர்களோடு இணைந்து செயல்படுகின்றன. இயல்பாகவே இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துதல், கொள்கைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் மீதான மேற்கூறப்பட்ட பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரின் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கிறது(http://www.slideshare.net/FrostandSullivan/smart-cities-from-concept-to-reality).
இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் பெரும்பாலான தொகை உண்மையில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 3 சதவீத அளவில் உள்ள தொழில்துறை (ப்ரொஃபெஷனல்) மற்றும் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கான ஸ்மார்ட் என்க்ளேவ்களை(பெரும் குடியிருப்பு வளாகங்கள்) உருவாக்கவும், நகரத்தின் இதர பகுதிகளிலிருந்தும், அதன் வறுமையிலிருந்தும், அசௌகரியங்களிலிருந்தும் பிரிக்கவே செல்கிறது. திறன்மிக்க மின் விநியோகக் கட்டமைப்பு, சூரிய எரிசக்தி திட்டங்கள், திறன்மிகுந்த அளவீட்டுமுறை, மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, மின்ஆளுமை, நிறுவப்பட்ட சாலைஇணைப்புகள், நடைபாதைகள், மிதிவண்டிக்கான தனி வழித்தடங்கள், திறன்மிக்க வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சொர்க்கபுரியாக இந்த என்க்ளேவ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள்
இதற்குமுன்னெப்போதும் இருந்ததைவிட இன்றைக்கு சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சியானது, தொழிலாளர்களை புறநிலைப்படுத்தியதோடு மட்டுமின்றி இயற்கையையும் கூட பண்டமாக்கியுள்ளது. இதனால், பூமிப்பந்தில் உயிரினம் வாழ்வதற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், பண்டமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள பூமியிலுள்ள பல்லுயிர்களின் மீதான அச்சுறுத்தலுக்கும் கரியமில வாயுக்கள் உமிழ்வுகள் காரணமாகும். மனித குலத்தின் வரலாற்று பூர்வமான பரிணாம வளர்ச்சியின்போது இருந்ததைவிட கடந்த 40 ஆண்டுகளில் (சுற்றுச்சூழல் பேரழிவிற்கு அப்பால்) கரியமில வாயு உமிழ்வுகள் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளன.
முதலாளித்துவ உற்பத்திமுறையானது, தனியுடைமை மூலமாகவும், வளங்களை சுரண்டுவதன்மூலமும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மிகப்பெரிய அளவிலான இடமாற்றங்களும், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் இயற்கையான குவியல்களையும், ஓட்டங்களையும் சீர்குலைக்கிறது. இரண்டாவதாக, உழைப்புச் சுரண்டலின் மூலம் இணைபிரியாத உழைப்பையும், இயற்கையையும் மாற்றி, வளங்களின் தொகுப்பை மனிதகுலத்தைச் சுரண்டிட புறநிலைப்படுத்தப்படுவதை உத்திரவாதம் செய்கிறது. போட்டி மற்றும் பண்டமாக்கல் மூலம் மனிதரல்லாத வாழ்க்கை வடிவங்களின் நிலைகளையும், மனிதர்களுக்குத் தேவையானவற்றையும் ஆக்கிரமிக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் எப்போதும் அதிகரித்துவரும் கழிவுப்பொருட்களின் உற்பத்தியின் மூலம் வளர்சிதை மாற்றத்தை மறுவடிவமைப்பு செய்கின்றன என உலகை மிகச்சிறந்ததொரு இடமாக உருவாக்குவது என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் பார்பரா ஹாரிஸ் எழுதுகிறார்.
இத்தகைய நிலைமைகளில் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு செயல்படவேண்டும்? பொருள்உலகத்துடனான உறவில், இவ்வுலகை குறைந்தபட்சம் மேலும் சீரழிக்காது, அதனை மேம்படுத்த முயற்சித்திடும் சோசலிச சமூக அமைப்பை உருவாக்கி, பராமரிக்கிற மறுசீரமைப்பை மார்க்ஸ் முன்மொழிந்தார். எனினும், இதுவும் ஒரு கற்பனாவாதமே. குறிப்பாக, சோசலிச சக்திகள் இல்லாதபோதும், அச்சுறுத்தலின் காலஅளவிலும் இது ஒரு கனவேயாகும். (சோஷியல் ரெஸ்டிட்யூஷன், பக்கம் 12).
கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகள்
கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில், நகரமயமாக்கலின் தற்போதைய வடிவங்கள் நீடிக்க இயலாதவை என்பதை அது நமக்கு நினைவூட்டி வருகிறது. இந்நிலையில், நகர வளர்ச்சியின் எதிர்காலத்திற்காக பலவகையான வடிவமைப்புகளை அல்லது கடந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றை நாம் காண வேண்டியது அவசியம்.
நகரத்தின் கட்டிடக் கலை வடிவமைப்பு எவ்விதத்தில் செயல்பட வேண்டும் என்பதை கட்டிட வடிவமைப்புக் கலை வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக பல பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நகர மேம்பாட்டிற்கான மூலதனத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் தொழில்நுட்பங்களில் நவீன தாராளவாத முன்னுதாரணம் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, கண்ணாடியும், செங்குத்து வளர்ச்சியும் மூலதனத்தின் ஆற்றலை நிரூபித்திட பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சுகாதாரத்திற்கான அளவுகோல்களின்படி, இத்தகைய கட்டிடங்கள் இன்னமும் பாதுகாப்பானவையா என்பது குறித்தும் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுகிறது.
குடியிருப்புகளுக்கு அருகில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதை விட விளையாட்டு அரங்கங்களை அமைக்கவே நவீன தாராளவாத கட்டமைப்பு கூடுதலாக முனைப்பெடுக்கும். அதேபோன்று, சமூக சுகாதார மையங்களுக்குப் பதிலாக பல்சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதிலேயே அது அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இதன் காரணமாக, மருத்துவ சேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன.
புதுமையான, சோதனை முயற்சி மிக்க கட்டிடக் கலை குறித்து விமர்சனங்கள் இருந்தபோதிலும், சோவியத்துகள் மேற்கொண்ட பரிசோதனைகள் கட்டிட வடிவமைப்புக் கலைகளை வர்ணிக்கின்றன. தாராளமாக பொது இடங்களை உருவாக்குவதன் மூலம் சினிமா, சமூகக் கூடம், உடற்பயிற்சி நிலையம், நூலகம், வானொலி நிலையம் போன்ற பல்வேறுபட்ட பொதுச்செயல்பாடுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒன்றாகக் கொண்டு வரப்படும்.
2010ஆம் ஆண்டில் ஜூரிச் நகரில் ‘எதிர்காலத்தை நோக்கி ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தான் உருவாக்கியிருந்த கண்காட்சியில் பாட்ரிக் ஷூமாச்சர் இவ்வாறு விளக்கியிருந்தார்: “ 90 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் புரட்சி புதியதொரு சமூகத்திற்கான திட்டத்திற்காக உணர்ச்சிக் கொந்தளிப்புமிக்க வகையில் அளவற்ற படைப்புக்கத்தினை கிளர்ந்தெழச் செய்தது. அதுவும் மிக மோசமான பொருள்தட்டுப்பாடுகளுக்கு இடையிலேயே அது நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் கலை மற்றும் கட்டிடக் கலையினை வரையறுக்கும் ஒன்றாகவும் அது திகழ்ந்தது. கலை, அறிவியல், வடிவமைப்பு ஆகிய துறைகளில் அளவிலும் தரத்திலும் அப்போது வெளிப்பட்ட படைப்பூக்கத் திறன் பிரமிக்கத்தக்க ஒன்றேயாகும். உலகத்தின் மற்ற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிப்பட்ட இத்திறனை கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னறிவிப்பு செய்வதாகவும் அது திகழ்ந்தது.”
21ஆம் நூற்றாண்டில் சாத்தியமாகக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் துயரமும் அநீதியும் நிரம்பிய ஒரு சமூகத்திற்கும், கற்பனை உலகிற்கும் இடையே ஓர் உரையாடல் என்ற வகையில் ‘பேழையை உருவாக்கப்போவது யார்?’ என்ற தலைப்பில் மைக் டேவிஸ் எழுதிய ஒரு கட்டுரையில் சோஷலிசத்தையும் அதே நேரத்தில் சூழலியல் தன்மையையும் சுட்டிக் காட்டுகின்ற ஒரு நவீன நகரத்தினை உறுதிசெய்ய முயற்சித்தபோது, அவர் சோவியத் நாட்டின் முற்றிலும் புதுமையான சோதனை முயற்சிகளை நோக்கியே திரும்பினார்.
தொடக்க காலத்தில் சோவியத் நாட்டின் நகர்ப்புறப் பகுதிகளில் நிலவிய துயரம், பொதுமுதலீட்டிற்கான கடுமையான பற்றாக்குறை ஆகியவற்றால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புத்திசாலித்தனமான சோஷலிஸ்ட் வடிவமைப்புக் கலைஞர்கள் சந்தடிமிக்க அடுக்குமாடி வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்க முடிவெடுத்தனர். அதன் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கான கேளிக்கை விடுதிகள், மக்களுக்கான மிகப்பெரும் பொது அரங்குகள், விளையாட்டு வளாகங்கள் ஆகியவற்றை மிகச் சிறப்பான வகையில் அவர்கள் வடிவமைத்தனர். மேலும் பொதுவான சமையலறைகள், பகல்நேர குழந்தைக் காப்பகங்கள், பொதுக் குளியல் கூடங்கள் மற்றும் அனைத்துவகையான கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் பாட்டாளிவர்க்கப் பெண்களின் விடுதலைக்கும் அவர்கள் முன்னுரிமை அளித்தனர்.
நகர வாழ்க்கையின் சமத்துவ அம்சங்கள் வளங்களைப் பாதுகாக்கவும், கார்பன் இடப்பெயர்வுக்குமான சிறந்த சமூகவியல் மற்றும் ஸ்தூலமான ஆதரவினை தொடர்ச்சியாக அளிக்கின்றன. ஒருவேளை அவையே உண்மையான எதிர்காலமாகவும் கூட இருக்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, புலம்பெயர்தல் என்பது நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பிரச்சனையாக உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய, சமத்துவமான எதிர்கால வாழ்விடம் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். கூடுதலான வாடகை வீடுகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள், அதிக அளவிலான திறந்தவெளிகள் ஆகியவை மக்களுக்குத் தேவைப்படுகின்றன.
நகர்ப்புற இந்தியாவில் திட்டமிடலுக்கான நடைமுறைகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடமே குறுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் திட்டமிடுவதற்குப் பதிலாக, மக்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லாத, மேம்பாட்டு அதிகாரிகளாலேயே இது செய்யப்படுகிறது. இவ்வாறு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெரும் நிறுவனங்களின் ஆலோசகர்களை சார்ந்தே இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் மூலதனம் தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்காகவே நகரங்களை திட்டமிடுகின்றனர். இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மேலும் திட்டமிடலுக்கான நடைமுறை பரவலாக்கப்பட்டு, மேலும் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்.
கூடுதல் ஜனநாயகமாக்கலுக்கான குரல் உரத்து எழுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதும், மக்களின் சுய ஆளுமையை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். குடியிருப்பு மட்டத்தில் திட்டங்களை தயாரிப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்திடலாம். தங்களுக்கான இடங்களை மீண்டும் கோரவும் மக்களும், தொழிலாளி வர்க்கமும் தலையீடு செய்யவும் கூடுதல் வாய்ப்பை இது அளிக்கக் கூடும்.
பல்வேறு வழிமுறைகளை அளிக்கிற நகரமானது கார்ப்பரேட்டுகளுக்கு அதிகபட்ச லாபங்களை அளிப்பதற்கான இடமாகவும் இருக்கிறது. பெருமளவிலான அசமத்துவத்தையும் இது ஏற்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களை தொழிற்சாலைகளிலிருந்து நகரத்தோடு இணைப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை வஞ்சித்து பெருமளவில் மூலதனத் திரட்டல் நடத்தப்படும் தொழிற்சாலைகளாக நகரங்களைக் கருதுவதன் மூலமும் இந்தப் பிரச்சனையை நம்மால் எதிர்கொள்ள முடியும்.
தமிழில்: எம். கிரிஜா
Leave a Reply