மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?


பேரா. ஜவகர்நேசன்
தமிழில்: அ.அன்வர் உசேன்

கல்வி என்பது இன்று மிகவும் உற்று கவனிக்கப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற அம்சமாக மாறியுள்ளது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தமது குறுகிய மற்றும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் எனும் இறுதி நோக்கத்துடன் கல்வி மீது தமது மேலாதிக்கத்தை செலுத்த முனைகின்றனர்.

அரசாங்கங்கள் அதீத அதிகாரங்களை கொண்டிருக்கலாம்; சந்தை சக்திகள் நிதி அதிகாரத்தை பெற்றிருக்கலாம்; சமூகத்தின் பல தரப்பினரை பிரதிநித்துவப்படுத்தும் பிரிவுகள் சமூக மேலாதிக்கத்தை பெற்றிருக்கலாம் (இந்திய சூழலில் சமூக அமைப்பில் சில விசேட அதிகாரங்களை பெற்றுள்ள சமூக பிரிவுகள் உட்பட); இத்தகைய அதிகாரங்கள் கொண்ட ஒவ்வொரு பிரிவும் தமது சொந்த நலன்கள் மற்றும் தேவைகளை மட்டுமே நிறைவேற்றிகொள்ள முயல்கின்றார்கள். ஆனால் கல்வி இத்தகைய பழமையான மாறாத இரும்பு பிடியை கொண்டுள்ள சக்திகளை தனது பரிசுத்தமான வடிவத்தின் வரம்பிற்குள் இணைத்துகொள்ளாது. அதன் பரிசுத்த வடிவத்தின் மூலம் கல்வி கற்கப்படுமானால், சமூகம் தனது பகுத்தறிவின் மூலம் கூட்டு மனசாட்சியாகப் பரிணமிக்கிறது. அப்பொழுது மேற்கண்ட எத்தகைய சக்தியின் தாக்கமும் இல்லாமல் அது இருக்கும்.

எனவே மேற்கண்ட சக்திகள் எப்பொழுதுமே “கல்வி கொள்கையை” தமது சொந்த நலன்களுக்கு உகந்ததாக வடிவமைக்க கடுமையாக முயற்சிக்கின்றார்கள். அதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், கோட்பாடுகள்/ வரையறைகள்/ விதிகள்/ சட்டங்கள் /வழிகாட்டல்/ நெறிமுறைகள்/அளவுகோள்கள்/விழுமியங்கள்/நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளவையே கொள்கைகள் ஆகும். எனவே, கல்வி எப்படி இயங்க வேண்டும் என்பதை இவை கொள்கைகள் கட்டுப்படுத்துகின்றன.

எனவே, இதன் விளைவு, மேற்சொன்ன சக்திகளின் நலன்களை மையக் கருவாகக் கொண்டுதான் கொள்கைகளின் பல்வேறு அம்சங்களும் உருவாக்கப்படுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, பரிசுத்தமான கல்வியின் அம்சங்களை உத்தரவாதப்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டால், சமூகத்தின் அனைத்து பிரிவினரும் உண்மையான கல்வியை பெற்றிருப்பார்கள். கல்வி பெறுவதில் ஏற்றத்தாழ்வுகளும், குறுகிய முனைப்புகளும் இல்லாமல் போயிருக்கும். மனிதகுலம் பரிணமித்த காலத்திலிருந்து கல்வி இதற்காகவே பயன்பட்டிருக்கும்.

சுதந்திர இந்தியாவில் இந்த இலக்கை எட்ட முடிந்துள்ளதா? இல்லையா? 1949ம் ஆண்டு மாண்புமிகு முனைவர் ராதாகிருஷ்ணன் குழுவிலிருந்து 2020ம் ஆண்டு புதிய கல்வி கொள்கை முன்வைக்கப்பட்டது வரை இத்தகைய கொள்கைகள் கல்வியில் ஆக்கபூர்வமான வளர்ச்சியை உருவாக்கவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் உருவாகியிருக்கலாமே தவிர, அடிப்படை வளர்ச்சியை முன்னேற்றத்தை இந்த கொள்கைகள் கொண்டுவரவில்லை.

இந்திய கல்வி கொள்கைகளின் புதிர்களும் குறைகளும்

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என அழைக்கப்பட்ட உயர் கல்வி ஆணையம்(1949) பல்கலைக்கழக கல்விக்கு ஒரு கட்டமைப்பு/ பாட பிரிவுகளுக்கான உள்ளடக்கம்/தேர்வு சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்வைத்தது. சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகளை முன்மொழிந்தது; இந்திய அரசியல் அமைப்பு/கலாச்சாரம்/மதம்/இந்திய விழுமியங்கள்/ சமத்துவம்/ சமூக நீதி ஆகியவற்றுக்கு இசைந்த முறையில் கல்விமுறையை மாற்றியமைத்திட பல ஆலோசனைகளை முன்வைத்தது.

முதலியார் ஆணையம் என அறியப்பட்ட பள்ளி கல்வி ஆணையம் (1952) ஒரே மாதிரியான சீரான பாடத்திட்டம்/மும்மொழி கொள்கை/தொழில் கல்வி/ தேர்வு சீர்திருத்தம் மற்றும் போதனை முறைகளை ஆய்வு செய்தது.

கல்வியின் அனைத்து பிரிவுகள் குறித்தும் ஆய்வு செய்த முதல் ஆணையம் கோத்தாரி ஆணையம் என அறியப்பட்ட இந்திய கல்வி ஆணையம்தான்(1964-66). இந்த ஆணையம் 4 படிநிலைகள் கொண்ட சீர்திருத்த கடமைகளை முன்மொழிந்தது:

1) கல்வியின் திறன் நிலையை அதிகரிப்பது;
2) சமூக/தேசிய ஒருங்கிணைப்பை சாதிப்பது;
3) நவீனமயத்தை விரைவுபடுத்துவது;
4) தார்மீக மற்றும் ஆன்மீக விழுமியங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை வலுவாக்குவது.

அது முன்வைத்த சில குறிப்பான நடவடிக்கைகள்: பொதுவான பள்ளி கல்விமுறை/ தொழில் கல்வி/ பணி அனுபவம்/மும்மொழிக் கொள்கை/ கல்வி பெறுவதில் சம வாய்ப்பு/ கல்வி கட்டமைப்பு/ பாடத்திட்டம் மேம்படுத்துதல்/ போதனை முறைகள்/ தரமான பாட புத்தகங்கள்/ ஆசிரியர்கள் பிரச்சனைகள்/ பள்ளி வளாகங்கள்/ மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு/ வயது வந்தோர் கல்வி/ தொலைதூர கல்வி ஆகியவை ஆகும்.

கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1968ம் ஆண்டு இந்திய அரசாங்கம் “தேசிய கல்வி கொள்கையை” உருவாக்கியது. இதில் முன்வைக்கப்ட்ட ஆலோசனைகள்:

• 14 வயது வரை கட்டாய கல்வி;
• கல்விக்கு நாட்டு வருவாயில் 6% செலவிடுதல்

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் 1986ம் ஆண்டு “கல்வி பற்றிய தேசிய கொள்கை” உருவாக்கப்பட்டது. இரண்டு முறை இந்த கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1992ம் ஆண்டு “செயல்பாட்டுக்கான திட்டம்” உருவானது. இந்த திட்டத்தில் சமத்துவத்துக்கான கல்வி; பொதுவான பள்ளி கல்வி முறை; ஆசிரியர்கள் நியமனம்; கணிணி கல்வி; பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள்/பிற்படுத்தப்பட்ட மக்கள்/ பெண்கள் ஆகிய பிரிவினரின் கல்வி முன்னேற்றம் குறித்த அம்சங்கள் இடம் பெற்றன.

இறுதியாக 2020ம் ஆண்டு “தேசிய கல்வி கொள்கை 2020” அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை சொல்வது என்ன? இந்திய அதீத தேசிய வெறி/ இந்திய தற்பெருமை/ கல்வி காவிமயம் ஆகியவை தவிர வேறு எதுவும் இந்த கொள்கையில் இல்லை.

இந்த கொள்கை “தேசிய அரசை” ஒரு முற்றிலும் முடிவான, சர்வ அதிகாரங்களையும் கொண்ட அதிகார மையமாக முன்வைக்கிறது. கல்வியை வரையறுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இரும்புக் கரம் கொண்டு செயல்பட முயல்கிறது. இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை குறித்தோ, பல மாநிலங்களை கொண்ட ஒன்றியமே இந்தியா என்பது குறித்தோ, அது இம்மியளவும் கவலைப்படவில்லை. இது இட்லரின் நாசிசம் அல்லது முசோலினியின் பாசிசம் முன்வைத்த “தேசிய கல்வியின்” அப்பட்டமான பிரதி அல்லாமல் வேறு இல்லை. நாசிசமும் பாசிசமும் பொதுவான கலாச்சார மற்றும் இன ரீதியியிலான விழுமியங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அதே போல நாசிசமும் இந்துத்துவாவும் பொதுவான கலாச்சார மற்றும் இன அடிப்டையிலான விழுமியங்களை கொண்டுள்ளன.

இந்துத்துவாவும் பாசிசமும் வெவ்வேறு அல்ல; ஒன்றுதான் எனும் முடிவுக்கு இரு கோட்பாடுகளை ஆய்வு செய்யும் எவர் ஒருவரும் அறிய முடியும். “தேசிய கல்வி கொள்கை 2020”ன் அடிப்படை தத்துவம் இந்துத்துவாதான்! இந்துத்துவாவை கழித்துவிட்டால், இப்போதைய கல்விக் கொள்கைக்கும் இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. மையப்படுத்தப்பட்ட கல்வி முறை/ மும்மொழி கொள்கை/சமமான கல்வி வாய்ப்புகள்/ கல்விச் சேர்க்கையின் முக்கியத்துவம் ஆகியவைதான் முன்வைக்கப்படுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகிற்கு தத்துவத்தையும் மருத்துவத்தையும் அறிவியலையும் கொடுத்த ஒரு நாடு, இப்போது சுதந்திரத்தின் 70 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல், சேர்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை பேசும் சூழலிலேயே இருப்பது பரிதாபத்திற்குரியதுதான். அனைவருக்கும் தரம் மிக்க கல்வியை கொடுப்பதைக் குறித்து விவாதிக்க வேண்டிய நேரத்தில் நாம் விடுதலையின் போது முன்னுக்கு வந்த கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

எது சாதிக்கப்பட வேண்டுமோ அதில் ஒரு மிகச்சிறிய பகுதிதான் இந்த 70 ஆண்டுகளில் கல்வியில் சாதிக்கப்பட்டுள்ளது. பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலை! கல்வி கொள்கைகள் என எவை பரிந்துரைக்கப்பட்டனவோ அவை சமூகத்துக்கும் தேசத்துக்கும் பொருத்தமற்றவையாகவே இருந்தன.

1949ம் ஆண்டு சூழலுடன் ஒப்பிடும் பொழுது சில முக்கிய அளவுகோள்களான கற்றல் விகிதம்/பள்ளி, கல்லூரி, பல்கலை கழகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை/ பள்ளி மற்றும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை/ கல்வி பெறும் வாய்ப்பு (ஆனால் சமத்துவ வாய்ப்பு அல்ல) ஆகியவை சமீப காலம் வரை அதிகரிக்கும் போக்கை காண முடிகிறது என்பது உண்மைதான்! பல கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் பயனாக ஒரு பகுதியளவான முன்னேற்றம் சாதிக்கப்பட்டுள்ளது. பல ஏற்றத்தாழ்வுகள் பாரபட்சங்கள் இருந்தாலும் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மிகப்பெரிய அளவுக்கு கூடுதலாக சாதிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்தனைக்கு பிறகும் எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், பல்வேறு கல்வி கொள்கைகளின் வினைப்பொருளாக கல்வி தனது இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்திருக்கிறதா! இல்லை என்பதே சரியான பதிலாக இருக்க இயலும். கல்வியின் உண்மையான இலக்குகள் என்பது என்ன? அது என்ன செய்திருக்க வேண்டும்? ஜனநாயக பூர்வமான/ நியாயமான/ நாகரீகம் நிறைந்த /சுய சிந்தனையாற்றல் கொண்ட ஒரு சமூகத்தை அது பரிணமிக்க செய்திருக்க வேண்டும். சமூக ரீதியாக/அரசியல் ரீதியாக/பொருளாதார ரீதியாக சமத்துவம் கொண்டதாக சமூகம் இருந்திருக்க வேண்டும். அறிவு திறன்/படைப்பாற்றல் ஆகியவை மூலம் சமத்துவம் அடிப்படையிலான பொருளாதார திறன் உருவாகியிருக்க வேண்டும். இந்த சாதனைகள் என்பது சாதி/இனம்/பாலினம் ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிகழ்ந்திருக்க வேண்டும். இவைதான் கல்வி கொள்கைகள் எந்த ஒரு தேசத்திலும் கண்ணுக்கு தெரியும் அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் ஆறு முக்கிய கொள்கைகள் கல்வி குறித்து உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கொள்கைகள் சில சிறிய முன்னேற்றங்களை உருவாக்கியிருந்தாலும் அடிப்படை மாற்றத்தை உருவாக்கவில்லை. உதாரணத்திற்கு மனித வளம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் உலக குறியீடு பட்டியலில் இந்தியாவின் இடம் பல சிறிய நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியுள்ளது. மனிதவள மேம்பாடு குறியீடில் 131வது இடம்; சமூக முன்னேற்ற குறியீடில் 117வது இடம்; புதிய கண்டுபிடிப்பு படைப்பாற்றல் குறியீடில் 48வது இடம்; என சீனாவுடன் ஒப்பிடும் பொழுது மோசமாக உள்ளது. சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்ட பட்டியலில் 2009ம் ஆண்டு இறுதியாக பங்கேற்ற பொழுது 72வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன.

ஆனால் அவர்கள் கல்வியின் உண்மையான தத்துவம் என்ன என்பதை உணர முற்படவில்லை. இந்தியாவில் நீண்ட காலமாக உள்ள தனித்துவமான பிரச்சனைகளான சமத்துவமற்ற சமூகம்/ அடக்குமுறைகள்/ சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட பொருளாதார வறுமை/ சமூக வன்முறைகள்/ மனித உரிமைகள்/ சகிப்பற்ற தன்மை/ சமூக மேலாதிக்கம்/ அதிகரிக்கும் காட்டுமிராண்டித்தனம்/ சமுதாய வளர்ச்சியில் சரிந்துவரும் அறிவியல் விழுமியங்கள் ஆகியவை அகற்றப்படும் வகையில் கல்விகொள்கைகள் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தப்படவில்லை. மேலே கண்ட கொள்கைகள் எதுவும் இந்தியாவின் இத்தகைய தனித்துவ பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சனைகள்தான் இந்தியாவின் அறிவுசார்/அறிவியல் பூர்வமான முன்னேற்றம் மற்றும் பொருளாதார உற்பத்தி திறன் மிக குறைந்த அளவு இருப்பதற்கு அடிப்படை காரணம் என்பது உணரப்படவில்லை.

இதற்கு மாறாக இந்தியாவின் கல்வி குறித்து திசைவழியை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட முதல் ஆணையமான டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆணையம் தனது கொள்கையை இந்திய சூழலுக்கு ஏற்ப தகவமைக்க முற்றிலும் தவறிவிட்டது. அந்த ஆணையத்தின் கால கட்டத்திலேயே அதன் பரிந்துரைகள் குறிப்பாக கலாச்சாரம்/மதம்/சமூகம் குறித்து பொத்தாம் பொதுவாக இருந்தன என விமர்சனங்ககள் எழுந்தன.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் நமது கல்விமுறை “இந்தியத் தன்மையற்று” உள்ளது எனவும், அதனை “இந்திய மயமாக்க” வேண்டும் எனவும் ஆலோசனையை முன்வைத்தது. பிரிட்டஷ் ஆட்சியால் கல்வி “இந்தியத் தன்மையற்றதாக” ஆக்கப்பட்டது என ஆணையம் கருதியது. இந்திய பாரம்பரியம்/கலாச்சாரம்/மதங்கள் மற்றும் விழுமியங்கள் ஆகியவை மூலம் இந்திய மயமாக்கப்பட வேண்டும் என கருதிய ஆணையம் அவற்றை துல்லியமாக வரையறுக்க தவறியது. இதற்கு பிறகு உருவான ஆணையங்களும் “இந்திய மயம்” என்பது என்ன என்பதை வரையறுப்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் தேசிய கல்வி கொள்கை 2020 “இந்திய மயம்” என்பது இந்துத்துவாதான் என முன்னெடுக்கிறது. இந்திய தேசியம்/இந்திய பாரம்பரியம்/ இந்திய கலாச்சாரம்/ இந்திய பெருமை/ இந்திய முதன்மை/ இந்திய தத்துவம் என இவற்றின் பெயரால் இந்துத்துவா கருத்துகளை கல்வி கொள்கையில் முன்வைக்கிறது.

இப்பொழுது நாம் ஒன்றை எளிதாக புரிந்துகொள்ளலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் தொடங்கி பின்வந்த பல ஆணையங்களும் தமது அணுகுமுறைகள் அல்லது இந்திய மயம் என்ன என்பதை தெளிவாக வரையறுக்காத காரணத்தால் 2020ல் “இந்திய மயம்” என்ற பெயரில் இந்துத்துவா கொள்கைகள் கல்விமுறையில் புகுத்தப்படுவதற்கு வழிவகை செய்துவிட்டன.

உண்மையில் வருத்தம் அளிக்கும் ஒன்று என்னவெனில் சமூக அமைப்பு முறையில் கல்வியின் பங்கு குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என்ன கூறுகிறது என்பதுதான்: “நமது சமூக அமைப்பு முறைக்காக கல்வி (மாணவர்களை) தயார்ப்படுத்துகிற படியால், நமது கல்விமுறை தனது வழிகாட்டல் கோட்பாடுகளை சமூக அமைப்புமுறை கொண்டிருக்கும் குறிக்கோள்களிலிருந்தும், அது கட்டமைக்க இருக்கும் நாகரீகத்தின் தன்மையிலிருந்தும் கண்டுகொள்ள வேண்டும்” என சொல்கிறது.

ஆணையம் நமது அரசியல் அமைப்பு விழுமியங்களான சுதந்திரம்/ சகோதரத்துவம்/ சமத்துவம்/மதச்சார்பின்மை ஆகியவற்றை கல்விமுறை வலுப்படுத்த வேண்டும் என கூறினாலும் சமூக அமைப்பின் மீதே கூடுதலான நம்பிக்கையை வைத்தது. சமூக அமைப்பிலிருந்துதான் வழிகாட்டல் கோட்பாடுகளை கல்விமுறை கண்டெடுக்க வேண்டும் என கூறியது. அப்படியானால் அனைவருக்கும் சமமான, நியயமான கல்வி என்பதை எப்படி வென்றெடுக்க முடியும்?

மாநில அடிப்படையில் கல்விக் கொள்கை ஏன் தேவை?

கல்வி கொள்கையின் சட்டரீதியான அதிகார எல்லை, நாம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம். அதிகார எல்லை என்பது வெறும் பூகோள எல்லைகள் மட்டுமல்ல; அது தனது குணாம்சத்தை தேசம் எனும் கோட்பாடிலிருந்து பெறுகிறது. தேசம் என்பது பூகோளம்/அரசியல் சட்டம்/விதிகள் ஆகியவற்றால் உருவாகியது அல்ல; மாறாக அங்கு வாழும் மக்களால்; சமூகத்தில் அந்த மக்கள் அங்கம் வகிக்கும் தனித்துவத்தால் தேசம் என்பது உருவாகிறது.

தேசம் எனும் கருத்தியல் என்பது சமூகத்தின் (மக்களின்) சமூக பொருளாதார – அரசியல் தேவைகளின்படி அரசு (மாநிலம்) தன் தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதும் அல்லது அதன்பால் வடிவெடுப்பதும் தவிர வேறல்ல. பன்மைத்தன்மை கொண்ட பிரதிநிதித்துவத்துடன் சமூகங்கள் இருக்கும் பொழுது அவை வெவ்வேறு தனித்துவம் கொண்ட கருத்தியலை பிரதிபலிக்கின்றன. அதன் பொருள் என்னவென்றால் அரசியல் சட்ட அடிப்படையில் ஒரே தேசமாக இணைந்து இருந்தாலும் அவை பல்வேறு தேசங்களாக உள்ளன.

“அரசியல் சட்ட அடிப்படையில் உள்ள தேசம் (தேச – அரசு)” என்பதும் “கருத்தியல் அடிப்படையில் உள்ள தேசம்” என்பதும் வெவ்வேறு ஆகும். அரசியல் சட்ட அடிப்படையிலான தேசம் என்பது பல்வேறு சட்டங்களால் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையிலான தேசம் என்பது அங்கீகரிக்கப்படுகிற சமூகத்தால் அதன் சமூக உட்கூறுகளால் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது.

கல்வியின் சட்ட எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்க வேண்டும். அரசியல் அடிப்படையிலான தேசத்துக்கு அல்ல! ஒரே கல்வி கொள்கை பல கருத்தியல் தேசங்களுக்கு பொருந்த முடியாது. இந்திய அரசு-தேசம் என்பது பல கருத்தியல்கள் கொண்ட தேசங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ் தேசம்/மலையாள தேசம்/ தெலுகு தேசம்/வங்காள தேசம்/இந்தி தேசம் என பல மொழிகள்/ கலாச்சாரம்/ இனம் கொண்டதாக உள்ளது.

இந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனி கருத்தியல் கொண்ட தேசம் ஆகும். ஒவ்வொரு தேசத்துக்கும் தனி கலாச்சாரம்/பாரம்பரியம்/அறிவியல் தேவைகள்/சமூக குணங்கள்/ உள்ளூர் அறிவு/அனுபவம் என தனித்தனியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே கல்வி கொள்கை என்பது இருக்க இயலாது. இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் அமெரிக்கா/ ரஷ்யா/ பிரிட்டன்/ஐரோப்பா போன்ற முற்போக்கான நாடுகள் தமது தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி கொள்கை என்பதை உருவாக்கவில்லை.

இது குறித்து தீர்மானகரமாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் கல்வி கொள்கையின் எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். இது இந்திய சூழலில் மாநிலங்களே ஆகும். கல்வி என்பதும், கல்வி கொள்கை என்பதும், முற்றிலும் மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவே பார்க்கப்பட வேண்டும்.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை எதுவும் இந்த பிரச்சனையை புரிந்துகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மாநில அளவில் உருவான கல்வி கொள்கைகள் கூட கல்வி சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் சில பிரச்சனைகளை பேசியதே தவிர கல்வியின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆய்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இதனால்தான் சமூகத்தின் அடித்தட்டில் கல்வி தனது இலக்குகளை செயல்பட வைப்பதில் இதுவரை உருவாக்கப்பட்ட கொள்கைகள் எதுவும் வெற்றி அடைய இயலவில்லை போலும். இங்கும் அங்குமாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான கல்வி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இன்னும் உள்ளது.

கல்வி உருவாக்கல்- கொள்கை தேவைகள்

மேலும் கல்வியின் மீதான மாநில அரசின் சட்ட வரம்பினைக் குறித்த மேற்கண்ட வாதங்கள் மட்டுமின்றி தனிமனிதர்களின் மட்டத்திலும் கல்வி செயல்பட வேண்டும். ஏனெனில் கல்வி தனி மனிதர்களிடத்தில்தான் மாற்றத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றம் என்பது என்ன? கல்வி தனிமனிதனை சிந்திக்க வைக்க வேண்டும்; அந்த தனி மனிதனை சுய உணர்வு மற்றும் சுய அறிதல் கொண்டவராக ஆக்க வேண்டும்; அதன் விளைவாக அந்த தனி மனிதர் சுயமாக ஆய்வு செய்து சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும். இது இரண்டு விளைவுகளை உருவாக்குகிறது. ஒன்று தனி மனிதரை சுயமாக சிந்திக்க வைக்கிறது. இரண்டு அதன் மூலம் உண்மையை (அறிவை) அறிய/உருவாக்க வைக்கிறது.

எனினும் கல்வியாளர்கள் மற்றும் கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இப்பொழுதும் கூட அறிவு பெறும் முறையை அங்கும் இங்கும் மாற்றுவதன் மூலம் சிந்தனையை மேம்படுத்த முடியும் எனும் பிரமையில் கல்விக்கான நிகழ்ச்சி நிரலையும் பாடத்திட்டங்களையும் உருவாக்கி கொண்டுள்ளனர். ஆனால் நரம்பியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்தனை என்பது அறிவாற்றலைச் சாராதது, சுயேச்சையாக உள்ளது என்பதை நிரூபித்துவிட்டனர். மூளையின் வெளிப்பகுதியாகிய புறணிதான் சிந்தனையின் மையம் என நம்பப்பட்டு வந்தது. இப்பொழுது சிந்தனை என்பது புறணியை சார்ந்தது இல்லை என்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

தனி நபர்கள் கல்வி நிகழ்வில் கற்பித்தலில்/கற்றலில்/பாடத்திட்டங்கள் உருவாக்குவதில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் என்பது குறித்த மறுசிந்தனை அவசியம். இதனை கல்வி கொள்கைகள் ஆய்வு செய்ததே இல்லை.

சிந்தனை என்பது உள்ளார்ந்ததாகவும், புறச்சூழலிலும் சமூகத்திலும் இருந்து விடுபட்டும் சுயேச்சையான ஒன்றாகவும் இருக்கிறதா?

டெஸ்கார்ட்டஸ்/கான்ட்/ஹெகல் போன்ற பல தத்துவ ஆசிரியர்கள் சிந்தனைதான் புற உலகு; புற உலகுதான் சிந்தனை எனும் முடிவுக்கு பரிணாம ரீதியாக வந்தனர். இந்த கருத்தினை நவீன நரம்பியல் அறிவியலும், அளவு இயங்கியலும் (quantum mechanics) உறுதிபடுத்தியுள்ளன.

சிந்தனை என்பது பெருமளவில் புற உலகத் தன்மை கொண்ட சுயநினைவாற்றலால் விளையும் நிகழ்வாகும். அது உண்மையின் சாம்ராஜ்யத்துக்குள் பயணிக்கும் அனுபவமாகும். புற உலகின் அனுபவமும் அதன் விளைவாக உருவாகும் காரண காரியங்களும் அல்லது கேள்விகளும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில்தான் நிகழ்கின்றன. தங்களது சுயசிந்தனையை சுதந்திரமாக செயல்படுத்தும் வாய்ப்பினை, தனி மனிதர்களும், சமூகமும் பெற்றிருந்தால்தான் அங்கே உண்மையான சிந்தனைகள் வருவது சாத்தியமாகும்.

இந்த சாத்தியத்தை ஏற்படுத்த மிக முக்கிய தேவை “ஜனநாயகமும் சமத்துவமும்” ஆகும். இந்த குணாம்சம்தான் சமூகத்தில் உள்ள தனிநபர்களை சிந்திக்கவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் அவை குறித்து ஆய்வு செய்யவும் வாய்ப்பினை உருவாக்குகின்றன. இதன் மூலம்தான் சுயசிந்தனை நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக நடக்கின்றது. இவ்வாறு உருவாகும் அறிவு பொதுவானதாகவும் சமூகத்தின் கூட்டு சிந்தனையாகவும் அமைகிறது. நாளடைவில் இந்த அறிவு சமூகம் முழுமைக்கும் பொதுவானதாகிறது. இதன் பொருள் என்னவென்றால், அந்த சிந்தனை சமூக அங்கீகாரம் பெறுகிறது. எனவே சிந்தனைக்கு சொந்தமான சமூகப் பிரிவு அதிகாரம் கொண்டதாகிறது. சமூக அடக்குமுறையால் அடக்கப்படுபவர்களை விடுதலை செய்ய இது முக்கியமான வழியாகும். அத்தகைய கல்விமுறையை கட்டமைப்பது என்பது அடக்கப்பட்டவர்களுக்கு சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற, சமூக முறையை எதிர்கொள்ள ஆற்றலை தர உதவும். இவ்வாறு அது சாதிய முறைகளை அழிக்க வழிகோலும்.

கல்வியின் உண்மையான நோக்கங்கள் நிறைவேற வேண்டுமெனில், இந்த மனித சிந்தனை அதன் அனைத்து அம்சங்களிலும் ஒன்றிணைந்து பரிணமிக்கும் வகையில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய குணாம்சம் இந்திய சமூகத்தில் இல்லை. இந்திய சமூகம் பெருமளவு சமத்துவமற்றதாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் உள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும். சமூகம் முரண்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும்பொழுது, கல்வி பற்றிய எதிரெதிர் கண்ணோட்டங்களை கொண்டிருக்கும்பொழுது, கல்விமுறையை எப்படி நியாயமாக வடிவமைப்பது என்பது மிக முக்கியமான சவால் ஆகும்.

கல்வி கொள்கையை வகுப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை கைக்கொள்வதன் மூலம் கல்வி செயல்பாட்டினை மேம்படுத்த வேண்டும். சமூக கட்டமைப்பை கருத்தில் கொண்டதாக அதனை முடுக்கிவிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசதிபடைத்த மேல்தட்டு சமூகத்துக்கு சாதகமாக இல்லாமல், எந்த பிரிவும் ஒதுக்கப்படாமல், எவ்வித பாரபட்சமும் இன்றி, மனித அனுபவத்தை மொத்தமாக உள்வாங்குவதற்கு தேவையான காரணிகளை பெற்றிருக்குமாறு கல்வி செயல்பாடு உருமாற வேண்டும். அத்தகைய மனித அனுபவமே பாடப்பிரிவுகளாகவும் கற்பிக்கும் விடயங்களாகவும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் எந்த பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.

அனைத்து சமூக கூறுகளும் கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொள்வதற்கும் தமது அனுபவங்கள்/நம்பிக்கைகள்/விழுமியங்களை பதிவு செய்வதற்கும் ஏதுவாக போதுமான இடமும் வாய்ப்பும் ஒருங்கே பெற்றிருப்பதே உதாரண சமூகமாகும். பரந்துபட்ட பிரிவினரின் அந்த கூட்டு அனுபவங்களை கற்பவருக்கு மடைமாற்றம் செய்கிற பணியை கல்வியின் மூலம் திறம்பட செய்வதற்கு இந்த உதாரண சமூகமே ஏதுவாக இருக்கும்.

சமூக பிரிவினர்களுக்கு நடுவில் அனுபவப் பகிர்வு அதிகமாக நடக்கும்போது கற்றல் திறன் அதிகமாக இருக்கும். கற்றல் திறன் என்பது சமூகத்தின் தடைகளை தாண்டும் திறன் ஆகும். அறிவாற்றலை – உள்ளூர் அறிவாற்றலை- தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்வதாகும். ஒரு சமூகம் தனக்குதானே உகந்த முறையில் செயல்பட்டு அறிவு வளர்ச்சியின் மூலம் தொடர்ந்து தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதாகும். இதை செய்வதற்கு கருத்துகள்/தகவல்/அனுபவம்/கலாச்சாரம் போன்றவைகளை பல்வேறுபட்ட சமூக கூறுகள் நன்கு பரிமாறிகொள்வதற்கு உகந்த சமூக கட்டமைப்பும் ,சமூக முறையையும், பிணைப்பினையும் கொண்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்வது கல்விக் கொள்கையின் இலக்காக இருக்க வேண்டும். மேலும், சர்வதேச அறிவாற்றல்கள் மூர்க்கத்தனமாக உலா வரும் வேளையில், உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பாதுகாக்கவும், முன்னெடுக்கவும் மேற்சொன்ன அமைப்பு தேவை.

அறிவாற்றல் என்பதில் சர்வதேச அல்லது உள்ளூர் என வித்தியாசம் உண்டா என்று கேட்டால், அறிவாற்றல் என்பது உலகம் முழுமைக்கும் உரியதுதான்! உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என குறிப்பிடுவது அடக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவம் ஆகும். பொதுவாக அது சமூக அங்கீகாரம் பெறுவது இல்லை. இத்தகைய அங்கீகாரம் இல்லையெனில் அவர்களது அறிவு கூட்டாக பிரதிபலிக்கப்படும் ஒட்டுமொத்த சமூக சிந்தனையில் இடம் பெறுவது இல்லை.

மறுபுறத்தில் உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது தனிச்சிறப்புடன் விளங்கும் சமூக கூறுகளால் கொண்டாடப்படும் பழங்கால அறிவாற்றலை தூக்கி பிடிப்பது என்று பொருள் அல்ல. பழங்கால அறிவாற்றல் என்பது சமூகத்தில் சில மேல்தட்டு பிரிவினரின் அறிவாற்றலாக மட்டுமே இருந்தது. அந்த மக்களின் அனுபவத்திற்கு அதில் இடமில்லை. எனவே உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனை. அவர்கள் எப்படி பல்வேறு சமூக சூழல்களை எதிர்கொண்டார்கள் எனும் அனுபவத்தின் கூட்டு சிந்தனையாகும். அதுவே அறிவாகும்.

உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பயன்படுத்த கல்வி முறை தவறுமென்றால், அந்தக் கல்வியின் விளைவாக உருவாகும் மனித ஆற்றலில் அவ்வறிவு புலப்படுவதும் இல்லை. எனவே அத்தகைய அறிவாற்றலை வென்றெடுப்பது என்பது அனைத்து மக்களின் அறிவாற்றலின் அனைத்து அம்சங்களையும் – கலாச்சாரம்/ விழுமியங்கள்/மொழி/இயற்கை வளங்கள்/சுற்று சூழல் – உள்ளடக்கியதாக இருப்பதாகும்.

கல்வியை பொறுத்தவரை தனிநபரும் சமூகமும் பிரிக்க முடியாதவை. இரண்டுமே முக்கியம். இவை இரண்டும் கல்வி உருவாவதில் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. ஏனைய பிரிவுகளான மைய அரசு/சந்தை சக்திகள்/கல்வி அமைப்புகள் கல்வியை உருவாக்க வழிகோலும் பங்கை மட்டுமே செலுத்துகின்றன. கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்கள் இதனை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

இந்த அடிப்படை அம்சத்தை இந்திய கல்வி உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உகந்த வழியில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்தது? அரசாங்கங்கள் தனக்கு விசுவாசமான குடிமக்களை உருவாக்க முயன்றன; சந்தை சக்திகள் தமக்கு தேவையான மனித வளத்தை உருவாக்க முயன்றன; சமூகத்தின் மேல் தட்டில் இருந்தவர்கள் அவர்களின் இடத்தை தக்க வைத்து கொள்ளவும், தமது அதிகாரத்தை வலுவாக்கவும் முயன்றனர். இந்த இலக்குகளை நோக்கிதான் கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

கல்வியும் சந்தை சக்திகளும்

உலக வர்த்தக அமைப்பு / நவீன தாரளமய சந்தை சக்திகள்/ அரசு ஆகிய மும்மூர்த்திகள் உருவாக்கிய நவீன நுகர்வு கலாச்சாரம் கல்வியில் செலுத்தும் தாக்கம் கவலை தருகிறது. கல்விக்கு அவசிய தேவைகளாக உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுடைய சுதந்திர விருப்பத்தை/ உரிமையை இந்தச் சக்திகள் உதாசீனம் செய்துவிட்டார்கள். கல்வியின் கவனக் குவிப்பினை மக்களிடமிருந்து சந்தைக்கும், அறிவாற்றலிருந்து உற்பத்தி பொருட்களுக்கும் இவை மடைமாற்றிவிட்டன.

இவை கல்வியை சந்தை சூழலில் தனிநபர்களை விருப்பம் போல பயன்படுத்தும் ஒரு கருவியாக மாற்றிவிட்டன. அவர்களை வேலை தேடுபவர்களாகவும் தொழில் முனைவர்களாகவும் மாற்றிவிட்டன. இதன் விளைவாக கல்வியின் இலக்கு என்பது வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவது என்பதாக, கல்வியின் பரந்த நோக்கத்துக்கு எதிரான ஒரு புதிய அணுகுமுறை உருவாகியது. தனி நபர்கள் ஒன்றும் சந்தை பொருள்கள் அல்ல; விருப்பம் போல அவர்களை பயன்படுத்த! ஆனால் கல்வியின் விளைவுகளில் ஒன்றாக, ‘வேலைக்குத் தயாரான நிலைமை’யும் ஆகிப்போனது. இந்தப் போக்கு கல்வியுடைய தத்துவத்தை மீறும் செயலாகும். ஏனெனில் சந்தையின் இசைவுப்படி மாணவர்கள் மிகக்குறுகிய திறன் தொகுப்புகளுடன் உருவாக்கப்படுகின்றனர். இது கல்வியே அல்ல.

கடந்த கால/ நிகழ்கால கல்விக் கொள்கைகள் மேற்சொன்ன கருத்துகளுக்கே அழுத்தம் கொடுத்தன. அதனை எட்டுவதற்கு பல பரிந்துரைகளை முன்வைத்தன. அவை பெரும்பாலும் சந்தையின் தேவைகளை கல்வியின் வழியாக அடைவதும், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட தனிநபர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நோக்கியுமே இருந்தன. சந்தையின் தேவைக்கு ஏற்ப கல்வி உருவானது. கல்வியின் உண்மையான தேவை பின்னுக்குத் தள்ளப்பட்டது. வேலை வாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அல்லது தொழிற்கல்விக்கான அதிக பரிந்துரைகள் ஆகியவை கல்வியை சந்தையின் தேவைக்கு ஏற்ப தகவமைக்கும் முயற்சிகளின் பல வெளிப்பாடுகள் ஆகும்.

அதற்கு அப்பாற்பட்ட மற்றொரு பெரிய பாரபட்சம், பரம்பரை அடிப்படையிலான தொழிற்கல்வி தருவதைப் பற்றிய கொள்கைகள் ஆகும். தொழில் மற்றும் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் அத்தகைய கல்வி பாரபட்சமாகவும் பரம்பரை அடிப்படையிலும் இருக்க கூடாது.

இந்திய பொருளாதார சமூக சூழல்கள்/ நவீன நுகர்வு கலாச்சாரம்/ நவீன தாராளமய சந்தைகள் ஆகியவை அறிவாற்றலை உருவாக்குவதிலும், மனித சிந்தனை போக்கிலும் பாதகமான பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அதே சமயத்தில் இன்னொரு புறம் பல பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பாதகமான தாக்கத்தை உருவாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு/ ஆழ் கற்றல்/இயந்திர கற்றல்/சைபர் இயற்பியல் முறைகள்/ கணிணி செயல்பாடுகள் ஆகியவையும் கூட அறிவாற்றல் உற்பத்தியில், சிந்தனை உருவாக்கத்தில், சில மேல்தட்டு சுயநல சக்திகளுக்கு சாதகமான தாக்கத்தை விளைவித்துள்ளன.

ஏற்கனவே ஜனநாயகமற்று உள்ள அறிவாற்றல் சூழலை மேலும் கூடுதலாக ஜனநாயகமற்றதாக ஆக்கும் நிலைமையே இதன் விளைவாக உருவாகும். இத்தகைய நவீன தொழில் நுட்பங்களின் பாதக அம்சங்களை தடுக்கும் அதே சமயத்தில், அதன் சாதக அம்சங்களை முன்னெடுக்கும் பெரிய பங்கு கல்விக்கு இருக்கிறது. அவ்வாறான கல்வியின் மூலம் இந்த தொழில்நுட்பங்களை கொண்டு அறிவினை பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கவும், சமூக பொருளாதார மாற்றங்களை பெற்றிடவும் முடியும்.

சமீபத்திய இந்திய கொள்கைகள் இவற்றை கணிக்கவே இல்லை. எதையுமே சொல்லவில்லை. குறிப்பாக நவீன இயற்பியல் விதிகள், குவாண்டம் மெகானிக்ஸ் போன்றவை அதி வேக கணிணி செயல்பாடுகளுக்கும், தொலைதூரங்களுக்கு அதிவேகத்தில் தகவல் சென்றடையும் சாத்தியங்களுக்கும், தகவல் உருவாக்க பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றன. இவை மனித சிந்தனை ஆற்றலில் ஊடுருவும் பொழுது நமது வாழ்வு முறையும் சமூகம் இயங்கும் தன்மையும் கூட பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும்.

நமது பொருளுலகுக்கு அப்பாலும், ஆன்மீகம் என்ற பெயரிலும் உருவகப்படுத்திவந்த கருத்தியல்கள் இல்லாமல் போகின்றன. அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய இடத்துக்கு அறிவியலே முன்னேறியுள்ளது. இதற்கு முன்னால் மனித மூளையினால் விடை காண முடியாது என கருதப்பட்ட கேள்விகள் கூட இன்றைக்கு அறிவியல் ஆய்வுகளின் மூலமாக பதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே தார்மீக மதிப்பீடுகளுக்காக ஆன்மீகம் அல்லது மதம் எனும் வரையறைக்குள் சிந்திக்க நிலை இல்லை. மாறாக அவை அறிவியலாலும், மனித சிந்தனையினாலும் வரையறுக்கப்படும். இதற்குத்தான் கல்வி வழிவகுக்க வேண்டும். கல்வி என்பது அறிவியலிற்கும், மனித சிந்தனைக்கும் மட்டுமே உட்பட வேண்டும். அதனைக் கடந்து மதம் அல்லது ஆன்மீகம் பக்கம் செல்லக்கூடாது.

இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் பாதகமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனில் கல்வி கொள்கைளை முன்னெடுக்கும்போது மேற்சொன்னவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இருபத்தொன்றாம் நூற்றாண்டையும், அதற்கு பிறகு வரவுள்ளதுமான சூழ் நிலைமைக்கு இசைந்ததாக கல்வியை உருவாக்கிட வேண்டும்.

தமிழகத்தின் கல்வி கொள்கைகள் வகுப்பதற்கான சில முக்கிய கருத்துகளும் கோட்பாடுகளும் மேலே முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கணக்கிலெடுத்து செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் கல்வி ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் சமூகத்தை பிரதிபலிப்பதாகவும் உருவாக்கப்பட வேண்டும். ஒரு பரந்துபட்ட தளத்தில் கல்வியின் பல்வேறு அம்சங்களுக்காக பன்முக தலையீடுகளும் தீர்வுகளும் உருவாக்குவதற்கு மேற்சொன்ன கோட்பாடுகள் முனைகின்றன.

தமிழ்நாடு ஒரு முக்கிய தேசியத்தைக் கொண்ட மாநிலம் என்ற முறையில் தனித்துவமான சமூக கூறுகள் கொண்டுள்ளது. எனவே தமிழகத்துக்கென தனியான ஒரு கல்வி கொள்கை தேவைப்படுகிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவைகள்/சமூக மாற்றம்/பொருளாதார அமைப்பு/ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/சூழலியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக தேவைப்படும் புதிய அறிவாற்றல் தேவைகளையும், திறன் மேம்பாட்டினையும் கணக்கில் கொண்டு, இந்த நூற்றாண்டுக்கும், பின்னர் வரவுள்ள சூழ்நிலைமைகளையும் எதிர்கொள்ளும் வகையில், கல்வி கொள்கையை உருவாக்கிட வேண்டும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: