மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை


பேரா. ஆர். சந்திரா.

(கடந்த இதழில் பால்மிரோ டோக்ளியாட்டி எழுதிய “பாசிசம் குறித்த விரிவுரைகள்” எனும் நூல் அறிமுகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்நூல் குறித்த சமகால பொருத்தப்பாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது.)

சமீபகாலமாக உலகின் பலபகுதிகளிலும், பாசிச சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இவை, 1930களில் ஐரோப்பிய நாடுகளின், குறிப்பாக , ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக உள்ளன. பாசிச அரசு ஏகபோக முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தி, முழுமையாக அதற்கேற்ப செயல்படும் தன்மை கொண்டது. இந்தியாவில் தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாசிச அரசா, இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில்,1930களில் இத்தாலிய  கம்யூனிஸ்ட் தலைவர்களில் முக்கியமான ஒருவரான பல்மிரோ டோக்ளியாட்டி  பாசிசம் பற்றி 1935ஆம் ஆண்டு மாஸ்கோவில் லெனின் பள்ளியில் ஆற்றிய விரிவுரைகள் பாசிசம் பற்றிய புரிதலுக்கு உதவும். அது மட்டுமல்ல. பாசிசம் என்பது முறியடிக்க முடியாத ஒன்று இல்லை.  பாசிச சக்திகளை முறியடிக்க கம்யூனிஸ்டுகள் எத்தகைய நிலைபாடுகளை எடுக்க வேண்டும் என்பதை ஜெர்மனி மற்றும்  இத்தாலிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அவர் விளக்கி இருப்பதை புரிந்து கொண்டு, அப்புரிதலின்  வெளிச்சத்தில், நமது கட்சி திட்டத்தின் மீது நின்று, சமகால இந்திய சூழலையும் கணக்கில் கொண்டு, தக்க செயல் திட்டங்களை உருவாக்க இந்த வாசிப்பு உதவும்.

பாசிசம் என்பது என்ன?

பாசிசம் என்பதற்கு பல வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “பாசிசம் என்பது நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ஆம்  ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த அறிக்கையில் தோழர். ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறியதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார். இங்கு மாமேதை  லெனின் அவர்கள் “ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது“ என்று கூறியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால், ஏகாதிபத்தியம் என்பது ஏகபோகமூலதனம் ஆதிக்கம் செலுத்தும் கட்டம்.

பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

பாசிசத்தின் முக்கிய அம்சங்களும்  இந்திய சூழலும்

பாசிசத்தின் முக்கிய அம்சங்கள் சமகால இந்திய சூழலுக்கு எப்படி பொருந்துகின்றன என்று பார்க்கலாம்.

பாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்தால் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளை முழுமையாக முன்பின்முரணின்றி அமலாக்கும். பா.ஜ.கவிற்கு முந்தைய  காங்கிரஸ் தலைமையிலான அரசு நவீன தாராளமயக் கொள்கைகளை அமுலாக்கியது. இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களின் விளைவாக, கிராமப்புற வேலை உறுதி சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வன உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டு  அமலுக்கு வந்தன. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட 2004-2008 காலத்தில் வேளாண் மற்றும் ஊரக கட்டமைப்புகளில் ஒன்றிய அரசு முதலீடுகள் நிகழ்ந்தன. 2009லிருந்து இது நீர்த்துப் போனது. பின்னர் 2014இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், நவீன தாராளமயக் கொள்கை மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக, நெருக்கமாக இருந்து ஒன்றிய அரசு செயல்பட்டுவருகிறது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டம், விவசாயத்தை கார்பரேட்மயமாக்கி, விவசாயிகளை நிர்க்கதியாக தவிக்க விடும் சட்டம், லாபம் ஈட்டும்  நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், ஆதிவாசிகள், பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழக்கும்  வகையில்  இயற்கை வளங்களை கார்பரேட்டுகள் கைவசப்படுத்தி லாபம் ஈட்டும் சட்டம்  என பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றை எதிர்ப்போர் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். இச்சட்டங்களை மோடி எப்படி நியாயப்படுத்துகிறார்? பெரு முதலாளிகள்தான் “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்கிறார். மோடி அரசின் பொருளாதார  கொள்கைகளால் வேலை இழப்பு, கடும் விலை வாசி உயர்வு, விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவோர்  எண்ணிக்கை அதிகரிப்பு  போன்றவற்றை பற்றி எந்த கவலையும் ஒன்றிய அரசுக்கு கிடையாது என்பதே யதார்த்தம்.

பாசிச கட்சி ஆட்சிக்கு வந்தால்

டோக்ளியாட்டி இந்த அமசத்தை பின்வருமாறு விளக்குகிறார்? “அரசியல் விவாதங்கள் நடைபெறாது. பாசிச கட்சி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தால் கூட, அக்கட்சியின் உறுப்பினர்கள் இதர குடிமக்களை போல, செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். கட்சி உறுப்பினர்களுக்கு  அதன் கொள்கை உருவாக்கத்தில் பங்கு இருக்காது. உட்கட்சி  ஜனநாயகம் என்பது  இருக்காது. அதிகார வர்க்க பாணியில், கட்சி மேலிருந்து கட்டப்படும்… ஆண்டுக்கொருமுறை கூட்டப்படும் கூட்டங்களில் தலைவர் ஆற்றும் உரைகளை கேட்பதுடன், தலைமை எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜனநாயக அடிப்படையில்  கட்சிக்குள் தேர்தல் என்பது கிடையாது ..”

கடந்த ஏழு ஆண்டுகளில் மோடி அரசின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? ஆகப்பெரிய நாசம்  விளைவித்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட நிதித்துறையும்  ரிசர்வ் வங்கியும் கலந்து முன்மொழிவு உருவாக்கப்பட்டு விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை. திடீரென மோடியால் அறிவிக்கப்பட்டது. இதனால் சிறுகுறு தொழில்களும் விவசாயமும் இதர முறை சாரா தொழில்களும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின. மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை. மிஞ்சியது உயிரிழப்பு உட்பட கடும்பாதிப்பு மட்டுமே. சென்ற ஆண்டு  பெரும்தொற்று  பரவிய பொழுது எந்த மாநிலத்தையும் கலந்தாலோசிக்காமல், திடீரென சர்வாதிகார பாணியில் பிரதமர் நாடு தழுவிய முழு ஊரடங்கு  கொண்டு வந்தார். மக்கள் பெரும் துயருக்கு உள்ளாயினர். ஆனால்  இந்திய பெரு முதலாளிகளின் சொத்துக்கள் பெரும் தொற்று காலத்தில் பல்கிப்பெருகியுள்ளன. பெரும் தொற்று கால நிலைமைகளை பயன்படுத்தி விவசாயிகள், தொழிலாளிகள், கிராமப்புற ஏழைகள் ஆகியோருக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி ஒன்றிய அரசு  நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் மறுக்கப்பட்டு சர்வாதிகார போக்குகள் மேலோங்கி வருவதை இந்நிகழ்வுகள்  காட்டுகின்றன .  

ஜனநாயக அரசு நிறுவன அமைப்புகள் அழிப்பு

பாசிச கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது, அரசின் நிறுவனங்கள் ஜனநாயக அடிப்படையில் செயல்படுவது படிப்படியாக அழிக்கப்படும்.. “GLEICHSHALTUNG” என்ற ஜெர்மானிய வார்த்தையின் அர்த்தம் ஒன்றிணைந்து செயல்படுதல் என்பதாகும். இது அபாயகரமான வார்த்தை அல்ல. ஆனால், நாஜிக்கள் அந்தச் சொல்லை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை டொக்ளியாட்டி விளக்குகிறார். நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்கள், பொது வாழ்வுடன் தொடர்புள்ள அனைத்து அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை தங்களின் – பாசிஸ்டுகளின் –  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதே பாசிஸ்டுகளின் நோக்கமும் நடைமுறையுமாக நாஜி ஆட்சியில் இருந்தது. எதுவுமே அவர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். தற்போதுள்ள இந்திய ஒன்றிய அரசும் பாஜகவும் இதேபாணியில் செல்ல முயல்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் சாசன அடிப்படையில் அமைக்கப்பட்ட நிறுவனங்களின் சட்டப்படியான செயல்பாடுகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. நீதிமன்றங்கள் சுயமாக செயல்பட முடிவதில்லை. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, அரசின் வரி வசூல் அமைப்புகள், நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்ட நிறுவன அரசு அமைப்புகள் அச்சமின்றி நேர்மையாக செயல்பட முடியாத நிலை உருவாகிவருகிறது. பாராளுமன்றத்தில் நெறிமுறைகளை மீறி அரசியல் சாசனத்திற்கு புறம்பான  சட்டங்கள் இயற்றப்படுகின்றன. விவாதத்திற்கு இடமே இல்லை

கம்யூனிஸ்டுகளே பிரதான எதிரிகள்

தனது உரைகளில் டொக்ளியாட்டி பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் முற்போக்குவாதிகளையும் தான் தனது முக்கிய எதிரிகளாக பார்க்கும் என்பதை வலியுறுத்துகிறார்.

பாஜகவும் சங்க பரிவாரும் யாரை  தங்கள் எதிரிகளாக கருதுகின்றனர்? அவர்களின் குருவாக கருதப்படும் கோல்வால்கர் கூறுகிறார்: ”நமது மூன்று பிரதான எதிரிகள் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள். இவர்கள் அந்நிய சக்திகளை விட அபாயகரமானவர்கள்.” ஒன்றிய அரசின் செயல்பாடுகளும் பாஜக சங்க பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளும் கோல்வால்கர் கருத்துக்களின் அடிப்படையில் இருப்பது தெளிவு.  கடந்த ஏழு ஆண்டுகளில் முற்போக்குவாதிகள், கம்யூனிஸ்டுகள் குறி வைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். இடதுசாரிகளின் தலைமையில் செயல்படும் மாநில அரசுகளும் வர்க்க வெகுஜன அமைப்புகளும் சங்க பரிவாரத்தின் அன்றாட தாக்குதலை எதிர்கொள்கின்றனர். இடதுசாரிகள் நாட்டின் ஒற்றுமையை குலைக்கின்றனர்; நாட்டை பலவீனப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டப்படுகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் கூட  இந்த தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

பாசிசத்தின் அணுகுமுறை

பாசிசம் அதனுடன்  இணையாதவர்களை/எதிராகப் பேசுபவர்களை தண்டிக்கும் நோக்குடன் செயல்படும். டோக்ளியாட்டி இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார். இத்தாலியின் கூட்டுறவு அமைப்பு போன்ற ஒன்றின் பணியாளர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி தோழரிடம் அழுதுகொண்டே கூறினார்: “நான் பாசிச கட்சியில் சேர நாற்பது லிரா கொடுக்கவேண்டும், ஆனால் என்னிடம் பணம் இல்லை. கட்சியில் சேராவிட்டால் நான் பணியில் இருக்கமுடியாது.” இவ்வாறு மிரட்டி கட்சிக்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்த்தனர் அன்றைய இத்தாலிய பாசிஸ்டுகள்.  சமகால இந்தியாவில் பாஜக மிரட்டியும் ஆள் சேர்க்கிறது. காசு கொடுத்தும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது. ஊழல் செய்ததாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்டவர்களை மிரட்டி கட்சிக்குள் சேர்த்துக்கொள்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மைய புலனாய்வுத்துறை என்று அரசு நிறுவனங்கள் அனைத்தையும் இவ்வாறு ஆள் சேர்க்க பயன்படுத்துகிறது.

இராணுவமய இந்து சமூகமே  இலக்கு

பாசிச கட்சி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்று அன்றைய இத்தாலிய நிலைமை பற்றி டோக்ளியாட்டி கூறுகிறார். அங்கும் ஜெர்மனியிலும் பாசிஸ்டுகள் வேலையில்லா இளைஞர்களை திரட்டுவதில், அவர்களை ‘ராணுவமயமாக்குவதில்’ தீவிரமாக செயல்பட்டனர். இந்த இளம் படைகள் தொழிலாளர்களையும் கிராமப்புற மக்களையும் திரட்டவும் உதவினர். ஆர் எஸ் எஸ் இளைஞர்களை ஈர்த்து அவர்களை ராணுவபாணியில் பயிற்சி அளிக்க முற்படுகிறது என்பது இன்று நேற்றல்ல. 1920களின் பிற்பகுதியில் ஆர் எஸ் எஸ். முன்னோடித் தலைவர் மூஞ்சே, இத்தாலி சென்று முசோலினியை சந்தித்தார். மூஞ்சே இத்தாலியின் ராணுவ கல்லூரிக்கும் பயிற்சி கூடங்களுக்கும் சென்று வந்தபின், இது போன்ற அமைப்புகள் இந்தியாவிற்கு மிகவும் தேவை; இந்து சமூகம் ராணுவமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். மராத்திய ஊடகங்கள் 1925 முதல் 1935 வரை பாசிசத்தையும் முசோலினியையும் பெருமைப்படுத்தி முன்னிறுத்தின என்பதை வலதுசாரி ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ராகேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். இன்றும் இத்தகைய   பயிற்சிகள் தொடர்கின்றன. இந்திய பிரதமர் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் தலைவர்கள் இப்பயிற்சிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

பன்முகத்தன்மை மறுப்பு

பாசிசம் பன்முகத்தன்மையை ஏற்பதில்லை. ஒரு நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றைத்தன்மையை திணிக்கும் தன்மை கொண்டது பாசிசம். இதனை டோக்ளியாட்டி நினைவுபடுத்துகிறார்.

இந்தியா இந்துக்கள் நாடு என்று கூறுகிறது ஆர் எஸ் எஸ். பிற மத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ மட்டுமே அனுமதி என்கிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசீய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றிற்குப்பின் உள்ள நிகழ்ச்சி நிரல் இதுவே.

அதேசமயம், இந்து மதத்தையும் அதன் ஜாதி அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்பதே ஆர் எஸ் எஸ் நிலை. பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகிய மக்கள் திரள்கள் மீது கட்டவிழ்க்கப்படும் சமூக ஒடுக்குமுறையை ஆர் எஸ் எஸ் எதிர்ப்பதில்லை என்பது மட்டுமல்ல; சனாதனம் என்ற பெயரில் சாதி ஒடுக்கு முறைகளையும் படிநிலைகளையும் அது நியாயப்படுத்துகிறது. தேசீய கல்விக்கொள்கையில் கூட இவற்றை மறைமுகமாக கொண்டு வந்துள்ளது. தனியார் மயமாக்கல் என்பதும் சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நீதிமறுக்கும் செயலாகும். ஆர் எஸ் எஸ் தனது கனவு இலக்கான இந்து ராஷ்டிரத்தை நோக்கி நாட்டை இழுக்க முயன்றுவருகிறது.

கலாச்சாரம் என்ற பெயரில்

பாசிச கட்சி கலாச்சார தளத்தை குறிவைத்து பயன்படுத்தும். அது வரையறுக்கும் தேசீய கலாச்சாரம் என்பதற்கு மாற்றாக உள்ள எதையும் ஏற்காது. “ஐரோப்பாவில் உள்ள 16 தீவிர வலதுசாரி கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை  பொருளாதார கொள்கை பற்றி எதுவுமே குறிப்பிடாமல் ஐரோப்பாவில் தேசீய கலாச்சாரம் எப்படி பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கை மத சிறுபான்மையினரை தாக்கும் வகையில் அமைந்துள்ளது.” என்று பேராசிரியர் பிரபாத் பட்நாயக் அண்மையில் எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் கலாச்சார தளத்தில் கடுமையான தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளன. மதம், மொழி, உணவு, உடை என பலவற்றிலும் வேறுபாடுகளைக் கொண்டுள்ள இந்தியர்களை பாஜக அரசு ஒற்றை (இந்துத்வா) கலாச்சாரத்தை நோக்கி நகர்த்த பெரிதும் முனைந்துள்ளது. சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்றன. இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்கள் மீது பாஜக அரசு திணிக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடை சட்டம் மூலம் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் மற்றும் தலித்துகளின் உணவு பழக்கங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் உணவில் மட்டுமின்றி மாட்டுக்கறி வணிகம், மாடுகளின் சந்தை போன்றவற்றில் பொருளாதார ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. லவ் ஜிஹாத் என்ற பெயரில் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள்  திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. உபி மாநிலத்தில் ஒரு இந்து முஸ்லிமை திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சமீபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற இயலாது; தேர்தலில் போட்டியிட முடியாது என்பது போன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டத்தை உ பி அரசு கொண்டுவந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் தொடுப்பது என்ற உள்நோக்கமும் இச்சட்டத்தில் உள்ளது. முஸ்லிம்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் எண்ணிக்கை இந்துக்களைவிட அதிகமாகிவிடும் என்ற பொய்யான பிரச்சாரத்தை பாஜக கட்சியும் அதன் அரசுகளும் செய்துவருகின்றன.

கல்வித்துறையிலும் கலாச்சார தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.  வரலாறு திரித்து எழுதப்படுகிறது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை திரித்து எழுதி பாட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பிஞ்சு நெஞ்சங்களில் வகுப்புவாத நஞ்சை புகுத்தும் பணியை ஆர் எஸ் எஸ் பாஜக அரசுகள் முனைப்புடன் செய்து வருகின்றன. நோக்கம் முற்போக்கு வர்க்க அமைப்புகளை அழிப்பதே!

தொழிலாளர் நலன் காக்கும் வர்க்க அமைப்புகளுக்கெதிராக பாசிசம் போட்டி அமைப்புகளை அரசு ஆதரவுடன் உருவாக்கி செயல்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பல பகுதி மக்களுக்கான அமைப்புகளை பாசிஸ்டுகள் உருவாக்குவதன் நோக்கம், இவை மூலம் தனக்கென்று ஒரு படையை திரட்டிக்கொண்டு தனது பாசிச பிரச்சாரத்தை விரிவாக மக்களிடம் கொண்டுசெல்ல அவற்றை பயன்படுத்தவே. இதனை டொக்ளியாட்டி வலுவாக எடுத்துரைக்கிறார். நமது நாட்டில் இத்தகைய முனவுகளில் ஆர் எஸ் எஸ் பாஜக ஈடுபட்டிருப்பது கண்கூடு.

பாசிசமும் “தேசீயவாதமும்”

பாசிசம் தேசீயவாதம் என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது என்கிறார் டோக்ளியாட்டி. பாசிச கட்சி தேசப்பற்று என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை தனக்குப்பின் திரட்ட முயலும். இந்தியாவில் பாஜக பொருளாதார பிரச்சினைகள் தீவிரம் அடையும் பொழுதெல்லாம் தேசப்பற்று, தேசப்பாதுகாப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறது. பாஜக அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு புறம்பானவை;  அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்றவை; அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று கூறுவோரை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி தேசத் துரோக வழக்கில் கைது செய்து சிறையில் தள்ளுகிறது.

பாசிசம் தனது அடிப்படை இலக்கை கைவிடாமல் தந்திரங்களையும் அணுகுமுறைகளையும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டே இருக்கும் என்பது இத்தாலிய அனுபவம். சொல்லாடல்களையும் சூத்திரங்களையும் அது பச்சோந்தி போல் மாற்றிக்கொள்ளும். பொய்களை கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கும். இதுவே கடந்த ஏழு ஆண்டுகால இந்திய அனுபவம்.

ஜனநாயக அமைப்புகளை பயன்படுத்தியும் தாக்கியும் பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையும். 1930களின் துவக்கத்தில் ஜெர்மனி நாட்டில் அன்றைய ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்களை ஈர்த்து பாசிச கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேசப்பற்று, நாட்டின் சுய மரியாதை, மாபெரும் ஜெர்மானிய தேசம் போன்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் ஆதரவை திரட்டியது. ஆட்சியை கைப்பற்றும் பயணத்தில் எதிர்க்கட்சிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்தியது. தொழிற்சங்கங்களையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைத்து தாக்கி, அவர்களுக்கெதிராக பெரும் பொய்பிரச்சாரம் செய்தும் வன்முறையில் ஈடுபட்டும் அவர்களை முற்றிலுமாக அழிக்க முயன்றது. அதில் ஓரளவு வெற்றி பெற்றபின் முதலாளித்துவ கட்சிகளை அழித்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மோடி அரசு இந்தியாவில் வளர்ச்சி, தேசப்பற்று, தேசீயம், வல்லரசு போன்ற முழக்கங்களை முன்வைத்து தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொண்டுள்ளது. இதனுடன் அரசு இயந்திரத்தையும் பெருமுதலாளிகளின் ஆதரவையும் பயன்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. இடதுசாரிகளை குறிவைத்து தாக்கிவருகிறது. பாசிசம் ஏகபோக மூலதனத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதை மோடி ஆட்சி எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட் ஹிந்துத்வா என்பது அதன் சிறப்பு முத்திரை.

பாசிசத்தை வீழ்த்துவது பற்றி டோக்ளியாட்டி

பாசிச சக்திகள் மேலோங்கி இருக்கும் பொழுது அவற்றை வெல்ல முடியாது என்ற பிம்பம் உருவாகும். ஆனால் இத்தாலிய அனுபவமும் பிற நாடுகளின் அனுபவமும் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நமக்கு கற்றுத்தருகின்றன என்பதை டோக்ளியாட்டி வலியுறுத்துகிறார். “பாசிசத்தால் முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளில் இருந்து மீள முடியாது. அவை தொடரும். இந்த முரண்கள் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு வழிவகுக்கும். திட்டமிட்ட, ஒருங்கிணைந்த மக்கள் போராட்டங்கள் மூலமே பாசிசத்தை வெல்ல முடியும்” என்று டோக்ளியாட்டி தெளிவுபடுத்துகிறார். அவர்: “பாசிச கட்சியில் இருப்பவர்கள், அதன் ஆதரவாளர்கள், தொழிலாளிவர்க்க புரட்சியை நோக்கி வந்து விடுவார்கள் என்று நம்பிவிடக்கூடாது.” என்று எச்சரிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் கொள்கை சார்ந்த நிலைப்பாடு எடுத்து, பிரச்சனைகளை துல்லியமாக கணித்து அதற்கு ஏற்ப உரிய தீர்வுகளை நோக்கி நமது தந்திரங்கள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். சந்தர்ப்ப வாதங்களுக்குப் பலியாகிவிடக்கூடாது என்கிறார்.

பாசிசம் தனது உள்முரண்பாடுகளால் தானே வீழ்ந்துவிடாது. ஆனால் இந்த உள்முரண்பாடுகளை தக்கவகையில் பயன்படுத்தி பாசிசத்தை வீழ்த்த முடியும் என்றும் டோக்ளியாட்டி கூறுகிறார்.

சம கால இந்தியாவில்

டோக்ளியாட்டி முன்வைத்துள்ள பல கருத்துக்களும் அவர் அளித்துள்ள வெளிச்சமும் நமக்கு உதவும். எனினும், இன்று இந்தியாவில் பாசிசத்தன்மை கொண்ட ஒன்றிய அரசும் அதன்பின் உள்ள ஆர் எஸ் எஸ் என்ற பாசிச அமைப்பும், இந்தியாவை பாசிசத்தின் பிடியில் கொண்டு செல்ல நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான அரசியல் சக்திகளும் களத்தில் உள்ளன என்பது பாசிச இத்தாலிக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. அரசியல் சாசனத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களையும் பாஜக ஆர் எஸ் எஸ் பலவீனப்படுத்தியுள்ள போதிலும், இந்தியாவின் ஆட்சி அமைப்பு பாசிஸ்ட் ஆக மாறிவிட்டது என்ற வரையறையை நாம் ஏற்கவில்லை. ஆட்சி அமைப்பு யதேச்சாதிகாரத்தன்மை நிறைந்துள்ளதாக இருக்கிறது; அத்திசைவழியில் பயணிக்கிறது என்பதை நாம் குறிப்பிடுகிறோம். ”இந்தியப் பெருமுதலாளிகள் தலைமையில் இந்திய அரசு செயல்படுகிறது. இதில் முதலாளி வர்க்கமும் நிலப்பிரபுக்களும் இடம்பெறுகிறார்கள். ஆளும் வர்க்க கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெருமுதலாளிகள் இன்று மேலும் மேலும் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் இணைந்துவருகிறார்கள்” என்ற கட்சி திட்டத்தின் வெளிச்சத்தில் நின்று, சமகால இந்திய அரசியல் களத்தைப்  பரிசீலிக்கும் பொழுது  ஆர் எஸ் எஸ் பாஜகவின் கார்ப்பரேட் ஹிந்துத்வா கொள்கைகளையும் எதேச்சாதிகார முனைவுகளையும் வலுவான வர்க்க வகுஜன போராட்டங்கள் மூலமே பின்னுக்கு தள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். டோக்ளியாட்டி தந்துள்ள வெளிச்சத்தில், கட்சி திட்ட நிலைபாட்டில் நின்று, ஆர் எஸ் எஸ் -பாஜக பாசிச முனைவுகளை நாம் வர்க்க வெகுஜன திரட்டல்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் தக்க அரசியல் நடைமுறை தந்திரங்கள் மூலமும் முறியடிப்போம்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: