டி.கே.ரங்கராஜன்
தோழர்கள் உமாநாத், ரமணி, வெங்கிடு ஆகிய தலைவர்களுடன் ஒரு முறை பயணிக்கிறபோது கேட்டேன்: “ஆரம்ப காலத்தில் முழுநேர ஊழியர்களுக்கான உதவித்தொகையாக கட்சி என்ன வழங்கியது?” என. உமாநாத் சிரித்துக்கொண்டே சொன்னார்: “தொழிலாளர்கள் ஏதாவது உணவினை தூக்குச்சட்டியில் கொண்டுவந்து, எங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். சாப்பிட்டு விட்டு வேலையைப் பார்ப்போம்”
நான் விடவில்லை தொடர்ந்து கேட்டேன் , “தொழிலாளர்களுக்கு விடுமுறை நாளாக இருந்தால் அப்போது என்ன செய்வீர்கள்?”.
“வேர்க்கடலை வாங்கி சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வேலையைத் தொடர்வோம்” என்றார் மிக இயல்பாக. அந்த வார்த்தைகளும் அதனுள்ளிருக்கும் அர்ப்பணிப்பும் இப்போதும் என்னை உசுப்பிக் கொண்டே இருக்கிறது.
மிகக் கடுமையான காலங்களில் பணியாற்றி, சங்கங்களையும், கட்சியையும் வளர்த்தெடுத்தவர்கள் தோழர் உமாநாத்தும், பாப்பா உமாநாத்தும் ஆவர். அவர்களின் பிள்ளைகள் லட்சுமி நேத்திராவதி (கண்ணம்மா), வாசுகி, நிர்மலா ராணி ஆகியோரை பெரும்பாலான நாட்கள் தோழர்களே பாதுகாத்தனர்.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கம் கண்ட முன்னுதாரண மனிதர்களில் ஒருவரான தோழர் உமாநாத் அவர்களது நூற்றாண்டில், அவரது வாழ்க்கையை கற்போம்.
உமாநாத் நூற்றாண்டு:
1921 டிசம்பர் 21 ஆம் தேதி, துளுவைத் தாய்மொழியாகக் கொண்ட சாதாரண அடித்தட்டு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் உமாநாத். சிறு வயதிலேயே அவருடைய தந்தையார் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் காலமானார். தாயார் பஜனை செய்து கிடைத்த சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.
மாணவர் இயக்கத்தில் இணைந்தார். அன்றைய இளம் கம்யூனிஸ்ட் தலைவர்களான கிருஷ்ணப் பிள்ளை, சுப்பிரமணிய சர்மா ஆகியோரின் தொடர்பு உமாநாத்தை புரட்டிப் போட்டது. ஆம். அவர்களின் தொடர் வகுப்புகளும், விவாதங்களும் உமாநாத்தை ஒரு கம்யூனிஸ்ட்டாக செதுக்கத் துவங்கின. இந்த வகுப்புக்களில் தோழர் வி.பி.சிந்தனும் பங்கேற்றுள்ளார். அதிக கேள்விகளை கேட்கும் மாணவராக சிந்தன் இருந்தார்.
கள்ளிக்கோட்டை கிருத்துவ கல்லூரியில் இண்டர்மீடியட் படித்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது கனன்று கொண்டிருந்த சுதந்திர போராட்ட இயக்கம் அவரை ஈர்த்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், இடதுசாரி இயக்க தளங்களில் ஒன்றாக இருந்தது. ஏ.கே.ஜி. போன்ற தலைவர்கள் மாறு வேடத்தில் வந்து மாணவர்களிடையே பேசியுள்ளார்கள். பாலதண்டாயுதம், கே. முத்தையா, உமாநாத், திரவியம் ஆகியோர் அங்கிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முன்னணிக்கு வந்தவர்கள்ஆவர்.
மெட்ராஸ் ராஜதானி:
காசர்கோட்டில் பிறந்த உமாநாத், துளுவும் மலையாளமும் பேசும் உமாநாத், சென்னைக்கு வந்தது எப்படி ? அதற்குள் செல்லும்முன், அப்போதைய மெட்ராஸ் ராஜதானியை புரிந்து கொள்வது அவசியம்.
இப்போது தனித்தனி மாநிலங்களாக உள்ள தமிழ் நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஒரிசா, லட்சத்தீவுகள் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸ் ராஜதானி என்ற வகையில் ஒன்றாக இருந்தன. அதே சமயத்தில் மைசூர், திருவிதாங்கூர், ஹைதரபாத் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் தனி ராஜாங்கப் பகுதிகளாக இருந்தன. 1793 முதல் 1798 வரையில் ஸ்ரீலங்காவும் கூட மெட்ராஸ் ராஜதானியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. எனவே இப்பகுதியில் பல்வேறு மொழிகளும், இனங்களும், கலாச்சாரங்களும், மத – சாதி அடையாளங்களும் நிலவியதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
அந்த காலகட்டத்தில் கட்சியின் பலமான தளங்களில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கும் ஊழியர்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. தோழர்கள் சேகர், சி.ஹெச்.கணாரன், வி.பி. சிந்தன், பி. சீனிவாசராவ் போன்ற தலைவர்கள் பலரும் அவ்வாறு அனுப்பப்பட்டுள்ளனர்.
தனது 18 வயதில் (1939) ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் உமாநாத், அப்போது தோழர் கே. முத்தையா கிளைச் செயலாளராக இருந்தார். கட்சிப் பணிக்காக உமாநாத்தை சென்னைக்கு அனுப்பினார்கள். அன்றுமுதல் தன் வாழ்வை முழுமையாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். இவர் பட்டம் படித்து,வேலைக்குச் சென்றால் குடும்பம் தலைதூக்கும் என்ற குடும்பத்தின் எதிர்பார்ப்பில் இடி விழுந்தது. கட்டுரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டஉரையாடலை இப்போது நினைத்துப் பாருங்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி அப்போதுதான் வேர் பிடித்துக் கொண்டிருந்த சூழலில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கடுமையான அடக்குமுறைக்கு நடுவில் தனது கட்சி/தொழிற்சங்க பணிகளை மேற்கொண்டார் உமாநாத். பெரம்பூரிலும், தி.நகரிலும் செயல்பட்ட கட்சியின் இரண்டு மையங்களுக்கு இடையில் கூரியர் பணியும், தி.நகர் மையத்தில் பி.ராமமூர்த்திக்கு உதவி செய்ய வேண்டிய பணியும் உமாநாத்திற்கு வழங்கப்பட்டன.
சிறை வாழ்க்கையும், தொழிற்சங்கப் பயணமும்
சென்னை சதி வழக்கில் உமாநாத் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டபோது, காங்கிரஸ் கைதிகளோடு கம்யூனிஸ்டுகள் பேசக் கூடாது என்று பிரித்து வைத்தார்கள். அரசியல் கைதிகளுக்கான நடைமுறை என்பது பின்பற்றப்படவில்லை. கிரிமினல் குற்றவாளிகளைப் போல் நடத்தினார்கள். கம்யூனிஸ்டுகளை கிடையாக படுக்கவைத்து குதிகாலில் லத்தியால் தாக்குவது உட்பட கொடூரமான அடக்குமுறைகள் இருந்தன. இவற்றை எதிர்த்தும் கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இன்றைக்கு சிறை கண்டிருக்கும் பல்வேறு சீர்திருத்தங்களுக்கும் கம்யூனிஸ்டுகள் அன்று நடத்திய போராட்டங்களே காரணம் எனலாம்.
சென்னை சதி வழக்கில், சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் கட்சி அவரை தொழிற்சங்க பணிக்கு அனுப்பியது. அரைப்பட்டினியுடன்தான் பணிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்களை சங்கமாக்குவதும் எளிதான காரியமாக இல்லை. காவல்துறை அடக்குமுறையும், முதலாளிகளால் ஏவப்படும் சமூக விரோதிகளின் தாக்குதல் உட்பட எதிர்கொண்டு, கோவை மண்ணில்தான் அவர் தொழிற்சங்க பால பாடத்தை கற்றார்.
பொன்மலையில்
பொன்மலையில், ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தை அடக்க மலபார் போலீஸ் அனுப்பப்பட்டது. தொழிற்சங்க தலைவர்கள் கல்யாணசுந்தரம், அனந்தன் நம்பியார் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு கட்சியிலிருந்து வழிகாட்டியாக உமாநாத் செயல்பட்டார்.
தொழிலாளர்களிடம் போராட்ட உணர்வு உச்சத்தில் இருந்தது. அத்தையம்மா (பங்காரம்மாள்) என்ற பெண், போராட்டத்தை காட்டிக் கொடுத்த தனது கணவரிடம் தாலியை கழற்றிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
1946 செப்டம்பர் 5 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. (அந்த காலத்தில் ரயில்வே பல கம்பெனிகளாக இருந்தது). துப்பாக்கிச் சூட்டில் ராஜூ, ராமச்சந்திரன், தங்கவேலு, தியாகராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் அத்தையம்மாள் மகனும் ஒருவர். கட்சிதான் அத்தையம்மாவை பாதுகாத்தது. பொன்மலை சங்கத் திடலிலேயே இறுதி மூச்சுவரை வாழ்ந்தார் அத்தையம்மா.
தொழிற்சங்க அரங்கில்
காவேரி சர்க்கரை ஆலையில்பணியாற்றியபோது, தோழர் உமாநாத்தின் பேச்சால் நான் ஈர்க்கப்பட்டேன். 1959ஆம் ஆண்டில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த எனக்கு அவருடைய வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டது. ‘உபரி மதிப்பு’ குறித்து வகுப்பெடுத்தார். ஒரு தொழிலில், தொழிற்சாலையில், ஒரு தொழிலாளியின் உழைப்பு எவ்வாறு உபரியை உருவாக்கிக் கொடுக்கிறது என்பதை அந்த வகுப்பு எனக்குத் தெளிவாக்கியது.
திருச்சி மாவட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் உமாநாத் உடன் செயல்படவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் கரூரில் சோமு,கருப்பய்யா, புதுக்கோட்டையில் பெரி.குமாரவேல், திருச்சி காசிநாதன், மூன்றாவது நிலையில் நான் (டி.கே.ரங்கராஜன்), ரத்தினவேல், சி.கே.ரங்கசாமி, சுப்பிரமணியம் என இயங்கினோம். இப்படியான கூட்டுச் செயல்பாட்டிற்கு உமாநாத் வழிகாட்டினார். பணிகளை திட்டமிட்ட விதத்தில் முன்னெடுப்போம்.
புதுக்கோட்டை காவேரிமில்லிலும், நமனசமுத்திரம் மில்லிலும் தொழிலாளர்கள் கமிட்டி கூட்டங்களில் உமாநாத் மினிட் (கூட்டக்குறிப்பு) எழுதுவது உட்பட பல பணிகளைச் செய்வார். 3 ஷிப்ட் தொழிலாளர்களிடமும் சந்தா வசூலிக்க, காலை, மாலை, இரவு நேரங்களில் நேரில் சென்று தொழிலாளர்களோடு சேர்ந்து உழைப்பார். எந்தவொரு தொழிற்சாலையில் சங்கம் அமைத்தாலும், அங்கு இயந்திரங்கள் செயல்படும் முறை, உற்பத்தியின் அளவு, கம்பெனியின் வரவு செலவு, தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையீடு, தொழிலாளர் நீதிமன்றங்களில் வாதிடுவது, போராட்டங்களுக்கான தயாரிப்பு பணி – ஒவ்வொன்றையும் அறிந்துவைத்து செயல்பட்டார். இவையெல்லாம் அடுத்த நிலை தலைவர்களின் உருவாக்கத்திற்கு உதவி செய்தன. முன்னுதாரணமாகவும் அமைந்தன.
தொழிற்சங்க கோரிக்கைகளில்பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது உமாநாத் சிறப்பான தயாரிப்புகளைச் செய்வார். அவருடைய வாதங்களுக்கு நிர்வாகத் தரப்பினால் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு நிறுவனத்தின் நிலை ஆணையைக் (ஸ்டேண்டிங் ஆர்டர்) குறித்தும் தெரிந்து வைத்திருந்தார். நீதிமன்றத்தில் சென்று வாதாடுவார். இவையெல்லாம் நிர்வாகங்களின் தரப்பில் அவருக்கு மரியாதையை உருவாக்கின. புகளூர் ஆலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது ஆங்கிலேயரான ஆலை நிர்வாகி டி.ஜே.எஃப். கெல்லிக் நேரில் வந்து உமாநாத்திடம் நலம் விசாரித்துச் சென்றார்.
அதே போல, பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன்பும், பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் தொழிலாளர்களுடன் பேசுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். போராட்டக் காலங்களில் தொழிற்சாலை வாசலில் வன்முறைக்கு முயற்சி நடக்கலாம் எனும் சமயத்தில், இவர் தொழிலாளர்களுக்காக அந்த ஆலைகளின் வாசலிலேயே படுத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்.
புதுக்கோட்டை சதி வழக்கில்உமாநாத் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். கம்யூனிஸ்டுகள் மீதான சதி வழக்குகளில் நமக்காக வாதாடியவர்களில் ஜமால் போன்ற கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இருந்தார்கள். அதே சமயம், ஜனநாயக எண்ணம் கொண்ட ரங்கராஜன், விருத்தாச்சல ரெட்டியார்போன்றவர்களும் நமக்காக வாதாடினார்கள். கொள்கை அடிப்படையில் நம்மோடு மாறுபட்டபோதும், ஜனநாயகத்திற்கு கம்யூனிஸ்டுகள் அவசியம் என கருதினார்கள். உமாநாத் இந்த அனைத்து தொடர்புகளையும் பராமரித்தார். எல்லா அனுபவங்களில் இருந்தும் கற்றார்.
மார்க்சிஸ்ட் கட்சி உருவானது
1964 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி உதயமானதை நாம் அறிவோம். அன்றைய திருச்சி மாவட்டத்தில் ( திருச்சி,கரூர், புதுக்கோட்டை) கட்சி பேரவைகளில் தேசிய கவுன்சில் முடிவுகளை விளக்கிய கூட்டங்கள் நடந்தன. தேசிய கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த 32 பேர் சார்பாக உமாநாத் பேசுவார். தேசிய கவுன்சில் முடிவுகளை விளக்கி கல்யாணசுந்தரம் பேசுவார். உமாநாத்தின் வாதத்திறமையின் காரணமாக, நியாயங்களை சிறப்பாக பதிய வைத்தார். இதன் காரணமாக புதுக்கோட்டையில் நடக்கவிருந்த பேரவையை ரத்து செய்துவிட்டனர். இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளை விடவும், திருச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கம் சற்று தாமதமாகவே நடைபெற்றது.
அந்தக் காலகட்டத்தில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் விவாதம் (கிரேட் டிஃபேட்) நடந்துகொண்டிருந்தது. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி அந்த விவாதத்தில் உடனடியாக ஈடுபடவில்லை. 7 வது மாநாட்டில் கட்சியின் திட்டம் விவாதிக்கப்பட்டது.
1964இல் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவாக்கத்திற்கு பின், உடனடியாக முக்கியத் தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். தலைவர்களின் விடுதலைக்குப் பின் 1968 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான பிளீனமும், பர்துவானில் அகில இந்திய அளவிலான பிளீனமும் நடந்தன. உமாநாத் இந்த விவாதங்களிலும் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்.
வேறுபட்ட தத்துவங்களை கொண்ட அரசுகளிடையே சமாதான சகவாழ்வு, சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழிமுறைகள், இந்த சகாப்தத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய பல்வேறு அடிப்படை முரண்பாடுகள், ஏகாதிபத்தியத்திற்கும் பல்வேறு தேசிய இயக்கங்களுக்குமான முரண்பாடு, சோவியத் ஒன்றியத்தின் பாத்திரம் என 12 விதமான தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. புதிதாக உருவாகியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 விதமான போக்குகள் இருந்தன. பிளீனம் அந்த நிலைப்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்தியது. இந்தியாவிற்கான நமது கட்சித்திட்டம் மட்டுமே நமக்கான வழிகாட்டி. வேறு எந்த நாட்டு கட்சியும் அந்தந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கங்களின் நலன்களுக்காக செயல்படுகின்றன. உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு, அவைகளுக்கு உரிய இடத்தை தரும் அதே சமயத்தில், தன்னுடைய தனித்துவத்தை மார்க்சிஸ்ட் கட்சி உயர்த்திப் பிடித்தது.
அதே போல, இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தை முன்னெடுப்பதென்றால் அது வர்க்கங்களை திரட்டுவதே ஆகும். தொழிலாளர்களை ஒரு இலாகாவாகவும், விவசாயிகளை ஒரு இலாகாவாகவும் பார்க்க கூடாது. தனித்தனி நிர்வாக ஏற்பாடுகள் போல அணுகக் கூடாது. 1969-1970 காலகட்டங்களில், தொழிலாளர் – விவசாயி அரங்கங்களில் நமது கடமைகளை விளக்கும் ஆவணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
விவசாய அரங்கில் கம்யூனிஸ்டுகளின் கடமை குறித்த விவாதத்தில் தோழர் உமாநாத்துடன் நானும் பங்கேற்றேன். 3 விதமான அறிக்கைகள் வைக்கப்பட்டன. மத்திய கமிட்டியின் ஆவணம் முன்வைக்கப்பட்டது. அத்துடன் ஹர்கிசன்சிங் சுர்ஜித் மற்றும் ஹரே கிருஷ்ண கோனார் ஆகியோர் உருவாக்கிய ஆவணங்களும் தரப்பட்டன. உமாநாத் அந்த விவாதங்களிலும் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டார். இப்படியான விவாதங்களின் மூலமாகவே மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்கள் வடிவம் பெற்றன.
சி.ஐ.டி.யூ உருவாக்கம்
தொழிலாளர் மத்தியில் வர்க்க ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான தெளிவான நிலைப்பாடாகும். எனவே, ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்திற்கு உள்ளாகவே தொடர்ந்து செயல்படுவதென்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது. ஆனால், அன்று இருந்த ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையானது, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களின் தலைமையில் இயங்கிய சங்கங்களுடைய இணைப்பை தன்னிச்சையாக ரத்து செய்தனர். மத்திய அரசு அமைத்த பல்வேறு ஆணையங்களில் ஏ.ஐ.டி.யூ.சி தலைவர்கள் முன்வைத்த பரிந்துரைகளை நாம் ஏற்கவில்லை.
தொழிற்சங்க தலைவர்கள் 2 ஆயிரத்திற்கும்அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இப்பிரச்சனைகள் ஏ.ஐ.டி.யூ.சி. மாநாட்டில் விவாதத்திற்கு வந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ஒற்றுமையையும், ஜனநாயக முறையிலான செயல்பாடுகளையும் வலியுறுத்தினார்கள். அதற்கு வழி இல்லாதபோதுதான் 1970 ஆம் ஆண்டில் சி.ஐ.டி.யூ உருவாக்கப்பட்டது. ‘ஒன்றுபடு போராடு’ என்ற முழக்கத்துடன் சி.ஐ.டி.யூ. உருவானது. அனைத்து தொழிற்சங்கங்களையும் தொழிலாளர் வர்க்க நலன் அடிப்படையில் ஒரே குடையில் கொண்டுவரும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்படுகிறது. சி.ஐ.டி.யூ. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டபோது கே. ரமணி தலைவர், உமாநாத் பொதுச் செயலாளராக தேர்வாகினர்.
1970 முதல் 1990 வரையில் சி.ஐ.டி.யூ மாநில மையம் என்பது உமாநாத், நல்லசிவன் ஆகியோர்தான். ஸ்தாபன பணிகளில் ஏ. நல்லசிவன் கூடுதலாக கவனம் செலுத்தினார். கே. வைத்தியநாதன், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் கூடுதலான பங்களிப்பைச் செய்தனர். அனைத்து தொழிற்சங்க அரங்கங்களிலும் சி.ஐ.டி.யூ. முத்திரை பதிப்பதற்கு தோழர் உமாநாத் ஆற்றிய பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
போராட்டங்களின் பண்பு மாற்றம்
தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்தது. உமாநாத் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்.
காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த மோதல் காரணமாக ஐ.என்.டி.யூ.சி. அமைப்பில் இருந்த ஒரு பகுதி ஒப்பந்த தொழிலாளர்கள், நம்மிடம் வந்தார்கள். அவர்களுடைய பணி நிரந்தரத்திற்காக போராட்டம் நடைபெற்றது. டால்மியா சிமெண்ட் ஆலை முன்பாக பி. ராமச்சந்திரன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 10 நாட்கள் கழித்து உமாநாத் உண்ணாவிரதம் முன்னெடுத்தார். அன்றைய முதலமைச்சர் அண்ணா, பி. ராமமூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் பிரச்சனைக்கு தான் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்ததை ஒட்டி அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்ட பின்னணியில், ஜனநாயக உணர்வுபெற்ற மக்கள் போராட்டங்களில் கூடுதலாக பங்கேற்றனர். ஜனநாயக அலையடித்தது. அந்தக் காலகட்டத்தில், தொழிலாளர் போராட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு மாற்றம் நடைபெற்றது. தனித்தனியாக ஆலைகளில் போராட்டங்கள் நடந்தது மாறி, தொழில்வாரியாக பல தொழிற்சாலைகளில் போராட்டங்கள் நடக்கும் நிலைமை உருவாகியிருந்தது.
தொழிலாளர் போராட்டங்களைக் குறித்த திமுகவின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டது. அரசிற்கு எதிரானவைகளாக அவற்றை அவர்கள் கண்ணுற்றார்கள். அதுவரை தனக்கென்று தனியாக தொழிற்சங்கம்கொண்டிருக்காத திமுக, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையை உருவாக்கியது. பிரதேச பூர்சுவா நலன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டது.
கிராமங்களில் இருந்துவரும் புதிய தொழிலாளர்கள், தனக்கென ஒரு அரசியல் கட்சியை தேர்வு செய்திருந்தனர். தொழில் நிறுவனங்களிலும் அதன் அடிப்படையில் சங்கங்களில் அவர்கள் சேரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு கட்சியும் தனக்கெனதொழிற்சங்கத்தை உருவாக்கிய பின்னணியில் அது தொழிலாளர்கள் ஒற்றுமையையும் பாதித்தது. மாணவர் இயக்கம் உள்ளிட்ட வெகுஜன இயக்கங்களைஉருவாக்குவதும், கிராமப்புறங்களில் விவசாய/விவசாயத் தொழிலாளர் இயக்கங்களை உருவாக்குவதும் இந்த வகையில் மிக முக்கியமானதாகும்.
விவசாய அரங்கில்
பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் விவசாயிகள் மீது கடுமையான சுரண்டல் நடைபெற்றது. ஜமீந்தார், இனம்தார் என நிலங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் இனாம்தார் நிலங்கள் பிராமணர்களின் வசம் இருந்தன. புதுக்கோட்டையில் 400க்கும் அதிகமான கிராமங்களில் இனாம் நிலங்கள் இருந்தன.
விவசாயிகளை சுரண்டக்கூடிய இந்த முறைக்கு எதிராக அன்னவாசல் ரங்கசாமி போராடினார். ரங்கசாமி, பெரி குமாரவேல் ஆகியோர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி இயல்பாக ஈர்க்கப்பட்டார்கள். உமாநாத்தும் இத்தகைய போராட்டங்களுக்குவழிகாட்டினார்.
தொழிற்சங்கங்களில் திரண்ட தொழிலாளர்கள், தங்கள் ஆலைகளைச் சுற்றி அமைந்த கிராமங்களில் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மேல்வாரம் கொடுக்க முடியாது என்று மாநாடு போட்டு அறிவித்தார்கள் விவசாயிகள்.கடுமையான போராட்ட அலைகளின் காரணமாகத்தான் இனாம் ஒழிப்புச் சட்டம் வந்தது.
காங்கிரஸ் ஆட்சி அகன்று திமுக வந்தபோதும் கூட, ஆட்சியின் வர்க்கத்தன்மையில் மாற்றம் வரவில்லை. எங்கெல்லாம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அங்குதான் நில உரிமையில் மாற்றங்கள் வந்தன. இன்றைக்கும் மாநிலத்தில் பல பகுதிகளில் நிலப்பிரச்சனை தொடர்கிறது.
மராட்டியத்தில் தமிழ் தொழிலாளர்
1960 களில் மராட்டியத்தில் சிவசேனைஉருவானது. மராத்தி தொழிலாளர்களுடைய வேலையை, தென்னக தொழிலாளர்கள்தான் பறித்துக்கொள்கிறார்கள் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தென்னக தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர்.
மண்ணின் மைந்தர்கள் என்ற முழக்கம் கேட்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும். ஆனால் அது இருமுனைக் கத்தி போல் ஆபத்தான ஒன்றாகும். 1967 – 69 காலகட்டத்தில் தென்னக தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பெருமளவிற்கு அதிகரித்தன. இவை குறித்து மராட்டிய காங்கிரஸ் அரசாங்கம் மெளனமாக இருந்தது. தாக்குதல்களை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு பகுதி தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினார்கள். சில தொழிலாளர்களை கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு படுத்தி சிறையிலும் அடைத்தது மராட்டிய அரசாங்கம். தோழர்கள் உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோர் அந்த தொழிலாளர்களை பாதுகாப்பதிலும், வழக்கில் இருந்து விடுவிப்பதிலும் முன்நின்று செயல்பட்டார்கள்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமாக இருந்த சி.என்.அண்ணாதுரை, அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தோழர் உமாநாத் மற்றும் இரா செழியன் ஆகியோரை இருவர் குழுவாக அனுப்பி தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்யச் சொன்னார். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழ் தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சட்டமன்றத்தில் தொழிலாளர் குரல்
1962, 1967 ஆம் ஆண்டுகளில் உமாநாத் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்வானார். பெரும் கோடீஸ்வர வேட்பாளர்களை எதிர்த்தும், தனிப்பட்ட தாக்குதல்கள் பிரச்சாரக் களத்தில் முன்னெடுக்கப்பட்டசூழலிலும், இந்த வெற்றியை அவர் பெற்றார். அதே போல நாகப்பட்டினம் தொகுதியில் 2 முறைகள் போட்டியிட்டு வென்றார்.
பூர்சுவா நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவைகளை ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முறைகளை உணர்ந்து அவர் செயல்பட்டார். அங்கே, ஒரு கம்யூனிஸ்டு தவறு செய்வதற்கும், தடம் மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. (நான் என்றும் மக்கள் ஊழியனே என்ற தலைப்பில் ஏ.கே.கோபாலன் எழுதிய புத்தகத்தை படிப்பது நாடாளுமன்றத்தை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.)
வர்க்க உணர்வு இல்லாமல் நாம் பணியாற்றினால், நம்மை அது நிலை குலைய வைத்து முற்றிலும் பாழ்படுத்தக்கூடும். அதே சமயத்தில் சட்டமன்ற, நாடாளுமன்றங்களை நாம் புறக்கணிக்கவும் முடியாது.
உமாநாத் தனது தொகுதிக்குள் சைக்கிளில் சுற்றுவார். மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொள்வார். யார் கடிதம் எழுதினாலும் அது பற்றி விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக பதில் கடிதமும் போடுவார். அவருடைய அணுகுமுறை விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.நாடாளுமன்றத்தில் விவசாயிகள், தொழிலாளர், கரும்பு உற்பத்தியாளர், சட்டங்களை எதிர்த்து வாதாடியது ஆகியவைகள் தனி புத்தகமாகவே வரவேண்டியவை.
உமாநாத், மாநில சட்டமன்றத்திலும் உழைக்கும் மக்களின் குரலாக ஒலித்தார். திமுகவின் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான கபடி ச.பழனியப்பன் எழுதிய உரிமைக்கு குரல் கொடுப்போம் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “தொழில் தகராறு சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, அதனுடைய ஓட்டைகளைப் பயன்படுத்தி நிர்வாகமும், காவல்துறையும், ஏன் அரசு இயந்திரமும் ஆளும் கட்சியும் செய்யும் தவறுகளை சட்டரீதியாகவும், அதே சமயம் அந்த சட்டத்தில் குறை இருப்பதால் தவறுகள் நடப்பதாகவும், ஆனால் உண்மையில் அந்தச் சட்டம் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற தங்களுடைய இயக்கக் கோட்பாடுகளை வலியுறுத்தியும் ஆணித்தரமாக ஆதாரங்களுடன் வாதிடுவார் (உமாநாத்). அதே சமயம் கண்டிப்பு மிகுந்ததாகவும் இருக்கும்; நகைச்சுவையுடனும் இருக்கும்; உரத்த குரலிலும் இருக்கும். அதற்கு பதில் கூறுவதற்கு பல சட்டப் புத்தகங்களை புரட்ட வேண்டியிருக்கும்.”
சிம்கோ மீட்டர் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் போராட்டம் பல மாதங்கள் நடைபெற்றன. அப்போது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். தினமும் அந்தப் போராட்டம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் எழும். உமாநாத் உள்ளிட்ட நமது உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அந்த கிளர்ச்சியை பிரதிபலிப்பார்கள். அரசின் கொள்கையிலும் அதன் தாக்கத்தை கொண்டுவர போராடுவார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளுக்கு வெளியே நடக்கும் போராட்டங்களை, அவைக்குள்ளேபிரதிபலிப்பதும், முன்னெடுப்பதும்தான் கம்யூனிஸ்டுகளின் கடமை. உமாநாத் இதனை உணர்ந்து செயல்பட்டார்.
சொந்த வாழ்க்கையில்
பிற்போக்குத்தனங்களுக்கு எதிராகவும்,பழமைவாதப் போக்குகளுக்கு எதிராகவும் உமாநாத்தும், பாப்பா உமாநாத்தும் குடும்பமாக போராடினார்கள். அதே போல, தொழிற்சங்க இயக்கத்திலும், அதே போல மாதர் சங்க இயக்கத்திலும் பாலின சமத்துவம் மற்றும் பெண் விடுதலை நோக்கிலான இவர்கள் இருவரின் முன்னெடுப்புக்கள் தனியாக விவரித்து எழுதவேண்டியவை.
இறுதியாக
இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகிறபோதே, அதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, நிலவுடைமை எதிர்ப்பு ஆகிய மூன்று பண்புகளும் இருந்தன. இந்தத் திசையில் எண்ணற்ற தியாகங்களை தொழிலாளி வர்க்கம் செய்துள்ளது. அந்தப் பாரம்பரியத்தை தொடர்வது மக்கள் ஜனநாயக புரட்சியை வலுப்படுத்த உதவி செய்திடும். அது எளிதல்ல. பன்னாட்டு நிறுவனங்களின் உடும்புப்பிடியும், கார்ப்பரேட்டுகளின் இரக்கமற்ற சுரண்டலும், சங்க பரிவாரம் முன்னெடுக்கும் வகுப்பு வெறி அரசியலும் நமக்கு சவாலாக முன்நிற்கின்றன .
20ஆம் நூற்றாண்டு காலத்தின் தொழிற்சங்கங்களும், போராடிப் பெற்ற உரிமைகளும் 1990க்குப் பிறகு நவீன தாராளமய காலத்தில் நெருக்கடிக்கு ஆளாயின. போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவே போராட வேண்டிய நிலைமை இப்போது உருவாகியுள்ளது.
நிரந்தரத் தன்மையுள்ள தொழில்களிலும் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். கருத்தாலும்,கரத்தாலும் பணியாற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். விஞ்ஞான-தொழில்நுட்பத்தின் உதவியோடு சுரண்டல் பல மடங்கு பெருகியுள்ளது. இந்த புதிய சூழ்நிலைமையில் தொழிற்சங்கத்தை நடத்தவும்,செயல்படுத்தவும், போராட்டத்திற்கு தலைமை தாங்கவும் புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன.
மார்க்சிஸ்ட் கட்சி தனது பிளீனத்தில் உருவாக்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சில செயல்பாடுகளை மாற்றியமைக்க முடியும். தொழிலுக்கு தொழில், அணுகுமுறையிலும் செயல்பாடுகளிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கான கூட்டு முயற்சி எல்லா மட்டங்களிலும் தேவைப்படுகிறது. அவ்வாறு செயல்பட, தோழர்கள் உமாநாத், ரமணி, அனந்தன் நம்பியார், வி.பி.சிந்தன், சி. கோவிந்தராஜன் போன்ற தலைவர்களின் மகத்தான தியாக வரலாற்றைக் கற்பது பேருதவியாய், ஆயுதமாய் நிச்சயம் இருக்கும். கற்போம்! வெல்வோம்!
Leave a Reply