- ஜி. ராமகிருஷ்ணன்
தோழர் ஏ. நல்லசிவன் அவர்கள் 1940இல், தனது 18ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்ஆகி, 57 ஆண்டுகள் கட்சியிலும் தொழிற்சங்கத்திலும் பல பொறுப்புகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டிருக்கிறார். தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர்கள் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம், பி. சீனிவாசராவ், எம். ஆர். வெங்கட்ராமன் போன்ற முதல் தலைமுறைத் தலைவர்களோடு சேர்ந்து இயக்கப் பணியாற்றிய அடுத்தத் தலைமுறைத் தோழர்களில் ஒருவர் அவர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் 1930களிலும் 40களிலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள்,தொழிலாளர்கள்,மாணவர் இயக்கம் பரவலாக எழுச்சி பெற்றது. இத்தகைய போராட்டங்களை ஆங்கிலேய அரசாங்கம் ஒடுக்க முற்பட்டது. இந்தப் பின்னணியில், மக்கள் கோரிக்கைக்களுக்கான போராட்டங்கள் எல்லாம் காலனியாதிக்க அந்நியராட்சிக்கு எதிரான போராட்டமாகவும் உருவெடுத்தன. பூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இத்தகைய இயக்கங்களில் பங்கேற்ற, தலைமைதாங்கிய கம்யூனிஸ்ட்கள் பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களாக பரிணமித்தார்கள்.
ஒரு தலைவர் உருவானார்
1940இல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த தோழர் ஏ. நல்லசிவன் 1941இல் விக்கிரம சிங்க புரத்தில்அமைந்த ஹார்வி பஞ்சாலையில் தனது தொழிற்சங்க வேலையைத் துவக்கினார். அது ஆங்கிலேயருக்கு சொந்தமான கம்பெனி. ஆங்கிலேயர் ஆட்சி கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய காலம். இப்படியான சவாலான சூழலில்தான் இளைஞர் நல்லசிவன் பணிகளை தொடங்கினார்.
தொழிற்சங்கம் புரட்சிக்கான பயிற்சிப்பள்ளி என்றார் லெனின். அடிப்படை வர்க்கமான தொழிலாளர்கள் மத்தியில் வேலைசெய்திட தோழர் நல்லசிவத்திற்கு நல்ல வாய்ப்பு. அதுவும் 19 வயதில்! ஹார்வி பஞ்சாலையில் 6000 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் மத்தியில் தோழர். ஏ.நல்லசிவன் சங்கப் பணியையும் கட்சிப் பணியையும் சேர்த்தே செய்தார்.
அந்த ஆலையில் இயங்கிவந்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளரானார். அக்காலத்திலேயே அந்தக் கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு வரவு-செலவு ரூபாய் ஒன்றரை கோடிக்கு மேல் இருந்தது. அடுத்து தோழர் ஏ. நல்லசிவன் கட்சியின் முழுநேர ஊழியராக ஆனார். ஹார்வி மில், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராக தோழர் பி. ராமமூர்த்தியும் உதவிச் செயலாளராக தோழர் ஏ.என்-னும் செயல்பட்டனர். ஒருகட்டத்தில் தோழர் ஏ.என். சங்கத்தின் பொதுச்செயலாளரானார். 1946இல் ஆலையில் நடைபெற்ற சங்க அங்கீகார தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சங்கம் வெற்றிபெற்றது. இதை ஆலை நிர்வாகமும் விரும்பவில்லை; ஆங்கிலேய அரசும் விரும்பவில்லை. எப்படியாவது சங்கத்தை பழிதீர்க்க வேண்டுமென்று நிர்வாகம் காத்திருந்தது.
மில்லுக்குள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி இறந்து போனார். பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்து தொழிற்சங்கம்போராடியது. இந்தப் போராட்டத்தை காரணமாக வைத்து மில் நிர்வாகம் ஆயுதப் போலீசைக் கொண்டுவந்து, தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 4 தொழிலாளர்கள்கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இத்தகைய போராட்டங்களில் தோழர் ஏ.என். முக்கிய பங்காற்றினார்.
நல்லசிவனுடைய தீவிரமான வேலை, அவருடைய அறிவார்ந்த மேடைப்பேச்சு ஆகியவற்றால் ஆத்திரம் கொண்ட காவல்துறையினர் ஏதாவது வழக்கில் சிக்கவைத்து, அவருடைய வேலையை முடக்கிவிட முடிவெடுத்தனர். தோழர் நல்லசிவனுக்குத் தொடர்பில்லாத போட்டி தொழிற்சங்கத் தலைவர் ஒருவருடைய கொலைவழக்கில் நல்லசிவன் மற்றும் 17 தொழிலாளர்கள் மீது வழக்கு தொடுத்தது காவல்துறை. தோழர் ஏ.என். உள்ளிட்ட அனைவரும் 10 மாதம் காவலில் வைக்கப்பட்டனர். 1946ஆம் ஆண்டுதான், அந்த வழக்கில் இருந்து தோழர் ஏ.என். உள்ளிட்ட அனைவரும் விடுதலையானார்கள். கட்சியில் சேர்ந்த சில ஆண்டுகளில், கைது, கொலை வழக்கு, சதி வழக்கு, சிறை, தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு, தலைமறைவுப் பணி என்று அடக்குமுறைகளை எதிர்கொண்ட, போர்க்குணமிக்க கம்யூனிஸ்ட் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக தோழர் ஏ.என். உருவானார்.
தென் மாவட்டங்களில்…
1950களில் கட்சியின் மாநிலக்குழு கேட்டுக் கொண்டதற்கிணங்க தோழர் ஏ.என். குமரி மாவட்டத்தில் தொழிற்சங்கங்களை உருவாக்கும் பணிக்குச் சென்றார். நாகர்கோவில் நாகம்மை பஞ்சாலையில் தொழிற்சங்கத்தை உருவாக்கி, தோழர் ஏ.என். தலைவராகவும், ஜே.ஹேமச்சந்திரன் பொதுச் செயலாளராகவும்செயல்பட்டனர். ஆத்தூரில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) 4000 தொழிலாளர்கள் வேலை செய்த ரசாயனத் தொழிற்சாலையில் சங்கத்தைத் துவக்கினார். நெல்லை மாவட்ட மோட்டார் சங்கத்தைத் துவக்கி அதனுடைய தலைவராகவும் பொறுப்பேற்றார். ஒரு மோட்டார் நிறுவனத்தில் 11 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தோழர் ஏ.என். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி, 11ஆவது நாளில் முடித்தார்.
சி.ஐ.டி.யூ தலைவராக
1970இல் சி.ஐ.டி.யூ உருவானது. தோழர் ஆர். உமாநாத் மாநிலப் பொதுச்செயலாளராகவும், தோழர் கே. ரமணி மாநிலத் தலைவராகவும், தோழர் ஏ.என். இணைச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்குப் பிறகு,மாநிலத்தில் பல மாவட்டங்களுக்குச் சென்று தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டினார். சேலம் மாவட்டத்தில் மேக்னசைட் தொழிலாளர் போராட்டம், பள்ளிப்பாளையம் காகித ஆலைத் தொழிலாளர் போராட்டம் உள்ளிட்டு பல மாவட்டங்களுக்குச் சென்று, வேலைநிறுத்தம், பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் போன்ற பல அம்சங்களில் நேரடியாக சங்கங்களுக்கு வழிகாட்டினார்.
கட்சிப் பணி
விக்கிரமசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியிலும் தென்மாவட்டங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் கட்சி கட்டும் பணியையும் செய்தவர் தோழர் ஏ.என்.
மதுரை சதிவழக்கில் கைதான பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா உள்ளிட்டவர்கள் 1947 ஆகஸ்ட் 14 அன்று விடுதலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் தோழர் ஏ.என் இருந்தாலும் கைதாகாமல் தப்பித்து கட்சிப் பணியாற்றினார்.
நாடு விடுதலையடைந்த பிறகு 1948இல் அன்றைய மத்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தது. மதுரை சதிவழக்கில் கைது செய்யமுடியாத தோழர் நல்லசிவன், தோழர்ஆர். நல்லக்கண்ணுஉள்ளிட்ட 94 கம்யூனிஸ்ட்கள் மீது நெல்லை சதி வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது காவல்துறை நல்லசிவனைப்பற்றி குறிப்பிட்டது முக்கியத்துவம் வாய்ந்தது. “நல்லசிவன் கட்சியின் மூளை, அவருடைய மண்டைஓடு உடைக்கப்பட வேண்டும்.” இதிலிருந்தே தோழர் ஏ.என். போர்க்குணமிக்க முறையில் செயல்பட்டதை உணரலாம். நெல்லை சதிவழக்கு விசாரணை நடந்து அவ்வழக்கில் இருந்தும் தோழர் ஏ.என். விடுதலை ஆனார். கம்யூனிஸ்ட் கட்சி மீது தடைநீக்கப்பட்டபிறகு, மீண்டும் மாவட்ட அளவில் தோழர் ஏ.என். இயக்கப் பணியைத் தொடர்ந்தார்.
1952இல் கட்சி மாநிலக்குழு முடிவின் அடிப்படையில் நெல்லை மாவட்ட அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. தோழர் எம்.ஆர்.வியை அமைப்புச்செயலாளராகக் கொண்ட அக்குழுவில் சு.பாலவிநாயகம், ஏ.என். உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர். 1953இல் மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் தோழர் ஏ.என். பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1954இல் மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஜில்லா போர்டுகளுக்கான தேர்தலில் தோழர் ஏ.என். போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
விக்கிரசிங்கபுரம் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய அதே நேரத்தில் தோழர். ஆர்.நல்லக்கண்ணுவோடு இணைந்து நெல்லை மாவட்டம் முழுவதும் விவசாயசங்க அமைப்புகளை உருவாக்குவதிலும் விவசாயிகள் கோரிக்கைகளுக்கான போராட்டங்களிலும் தோழர் ஏ.என். முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.
கட்சியில் அகில இந்திய அளவில் தத்துவார்த்த உட்கட்சி போராட்டம் நடந்து, 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. மதுரையில் நடந்த மாநில மாநாட்டில் தோழர் ஏ.என். மாநிலக்குழு உறுப்பினராகத் தேர்வானார். மார்க்சிஸ்ட் கட்சி உருவானபோதே நாடு முழுவதும் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தோழர் ஏ.என்.னும் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறை அடைக்கப்பட்டார். 1968இல் கோவையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வானார்.
மாநிலச் செயலாளராக
1978ஆம் ஆண்டு அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் ஏ.என்.1981இல் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு1994வரை அப்பொறுப்பில் இருந்தார். 1992இல் சென்னையில் நடைபெற்ற கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தோழர் ஏ.என். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேலவை உறுப்பினராகவும், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது அவரது முயற்சியால் தமிழில் தந்தியைக் கொண்டு வந்தார். இதற்காக அவருக்கு சென்னையில் அஞ்சல் துறை அதிகாரிகள் கலந்துகொண்ட பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
போராட்ட வாழ்க்கை தரும் பாடம்…
1940லேயே தோழர் ஏ.என். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, லெனின் எழுதிய ‘செய்ய வேண்டியது என்ன?’ உள்ளிட்டு பல மார்க்சிய-லெனினிய நூல்களைப் படித்தார். கட்சியில் சேர்ந்தவுடனே அவர் தொழிலாளர்களின் தோழனாகிவிட்டார். 1941ஆம் ஆண்டு துவங்கி அடுத்து 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்கப் பணியும் கட்சிப் பணியும் ஆற்றியதில் ஏராளமான அரசியல் மற்றும் ஸ்தாபன அனுபவங்களைப் பெற்றார்.
வர்க்க-வெகுஜன அமைப்புகளை வளர்த்திடாமல் கட்சியை பலப்படுத்திட முடியாது என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வர்க்க-வெகுஜன அமைப்பில் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவார். செய்ய வேண்டியது என்ன? நூலில் இருந்து பல அம்சங்களை தோழர் ஏ.என். அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பின்தங்கிய உழைப்பாளி மக்களை வர்க்க-வெகுஜன அமைப்புகளில் சேர்த்து, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்க வைத்து, அதனூடே கம்யூனிசக் கொள்கையை அவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களைக் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை தனது அனுபவத்தில் இருந்து சுட்டிக்காட்டுவார்.
1982ஆம் ஆண்டு நான் (ஜி.ராமகிருஷ்ணன்) நெய்வேலியில் கட்சிப்பணியும் தொழிற்சங்கப் பணியும் செய்துகொண்டிருந்தபோது, அவ்வாண்டில் நடைபெற்ற நெய்வேலி சிஐடியூ சங்க ஆண்டு பேரவையில் கலந்துகொண்டு துவக்க உரையாற்றினார் தோழர்.ஏ.என். (அந்தப் பேரவைக் கூட்டத்தில் நெய்வேலி சி.ஐ.டி.யு சங்கத்தின் பொதுச்செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்). கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ.என். சி.ஐ.டி.யு மாநில நிர்வாகியாகவும் இருந்தார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகிறபோது நெய்வேலி தொழிலாளர்களுக்கு மின்வெட்டு, குடிநீர்ப் பற்றாக்குறை என்பது தெரியாது. நெய்வேலி டவுன்ஷிப்பிற்குள் அந்தப் பிரச்சனையே இல்லை. நெய்வேலிக்கு வெளியே தென்னாற்காடு மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறையும் மின்வெட்டும் மிகப்பெரும் பிரச்சனையாக மக்களை பாதித்து வருகிறது. சிஐடியூ தொழிற்சங்கம் கிராமப்புற மக்களின் அத்தகைய கோரிக்கைகளுக்காகவும் போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1940களில் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளைத் திரட்டுவதற்கு தொழிற்சங்கம் எவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டது என்பது பற்றியும் குறிப்பிட்டார். தொழிற்சங்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடும். நிர்வாகத்துக்கு எதிராக அரசுக்கு எதிராக அடக்குமுறைகளை எதிர்த்து தொழிற்சங்கம் வீரமிக்க போராட்டங்களை நடத்தினாலும் அவர்களுக்கு அரசியல் உணர்வூட்டுவது தொழிற்சங்கங்களுக்கு வெளியே இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிதான் செய்ய வேண்டும்; செய்ய முடியும் என்பதை ‘செய்ய வேண்டியது என்ன?’ நூலில் இருந்து மேற்கோள் காட்டி அவர் வலியுறுத்துவார்.
“வர்க்க அரசியல் விழிப்புணர்வு என்பது தொழிலாளர்களுக்கு பொருளாதாரப் போராட்டங்களுக்கு வெளியில் இருந்துதான் ஊட்டப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டிட சமூக ஜனநாயகவாதிகள் (கம்யூனிஸ்ட்கள்) சமூகத்தின் அனைத்து உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் பணியாற்றிட வேண்டும்” என்ற லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் கட்சி கட்டும் பணியை சுட்டிக் காட்டுவார் தோழர் ஏ.என். இத்தகைய பணியில் ஈடுபடும்போது தொழிற்சங்கம் சுயேச்சையாக, ஜனநாயக பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதையும்,கட்சிக்கும் தொழிற்சங்கத்துக்கும் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தனது அனுபவ ரீதியாக உணர்த்துவார்.
துவக்க காலத்தில் ஆலைமட்ட தொழிலாளர்கள் மத்தியிலும், கிராமப்புற விவசாயிகள் மத்தியிலும், கட்சி மற்றும் வெகுஜன அரங்கங்களிலும் பணியாற்றி, ஸ்தாபன செயல்பாட்டில் பல அம்சங்களை நுட்பமாக உள்வாங்கிக் கொண்ட அவர், மாநிலக் குழு துவங்கி கட்சியின் அனைத்து அமைப்புகளும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டினார்.
1978இல் சால்கியாவில் (மேற்குவங்கம்) ஸ்தாபன சிறப்பு மாநாடு நடைபெற்றது. வெகுஜன புரட்சிகரக் கட்சியைக் கட்ட வேண்டும் என்ற அம்மாநாட்டின் முடிவினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு தோழர் ஏ.என். முக்கியப் பங்காற்றினார். அவரோடு தோழர் ஏ. பாலசுப்ரமணியம், தோழர் சங்கரய்யா உள்ளிட்ட மாநில செயற்குழு தோழர்கள் மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டக்குழுக்கள் மற்றும் கட்சியின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் சால்கியா பிளீனத்தின் முடிவை அமல்படுத்துவதற்கும் வழிகாட்டினர்.
1981இல் தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்குப் பிறகு மாநிலச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் ஏ.என். 14 ஆண்டுகள் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் ஸ்தாபனக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்கும் மாநில செயற்குழு சார்பில் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டார்.
கமிட்டி கூட்டங்களிலும் மாநாடுகளிலும் விவாதங்களைக் கூர்ந்து கவனிப்பார். அரசியல் சூழல், கட்சியின் நிலைபாடு, ஸ்தாபனக் கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குவார். ஏ.என். தொகுப்புரை என்றால் தோழர்கள் அனைவரும் அவரது உரையைக் கூர்ந்து கவனிப்பார்கள்.
கட்சி கமிட்டிகளில் தோழர் ஏ.என். பேசுகிறபோது,செயலாளர்கள் உள்ளிட்டு கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்கள்; அதே நேரத்தில் செயலாளர் முதன்மையானவர் என்பார். இதன் பொருள் எல்லா அம்சங்களிலும் செயலாளர் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான். இது அமைப்புச் சட்டத்தில் எழுதப்படாத விதி. நடைமுறையில் நமக்கு அவர் கற்பித்த பாடம்.
கிளைச் செயலாளர், இடைக்குழு செயலாளர், மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர், உபகுழு கன்வீனர், இவர்கள் எல்லாம் சமமானவர்களிலேயே முதன்மையானவர்கள் என்பார். அது எப்படி என்பதை நடைமுறையில் செய்தும் காட்டியவர் தோழர் ஏ.என். தோழர்கள் என். சங்கரய்யா, ஆர். உமாநாத், கே. ரமணி, கே. முத்தையா, பி. ராமச்சந்திரன், அப்துல் வகாப், பி.ஆர். பரமேஸ்வரன், ஜி. வீரய்யன் போன்ற ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாநில செயற்குழுவில், மாநிலக் குழு செயலாளராக தோழர். ஏ.என். பணியாற்றினார். அவருடைய தலைமைப் பண்பை இதிலிருந்து நாம் உணரலாம்.
பரந்த வாசிப்பு
கட்சியின் மாநிலச்செயலாளராக இருந்தபோது தோழர் ஏ.என் காலையில் இருந்து இரவு வரை தோழர்களோடு இணைந்து அரசியல் ஸ்தாபன பணிகளில் ஈடுபடுவார். மற்ற அனைவரும் உறங்கச் சென்ற பிறகு, அவர் விழித்திருந்து நூல்களை அதிகாலை 1 அல்லது 2 மணி வரை வாசிப்பார். மார்க்சிய நூல்களுக்கும்அப்பாலும் பல்வேறு நூல்களைப் படிக்கும் பரந்த வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தார்.
அரவணைப்பு
தோழர்களுடைய செயல்பாடுகள் பற்றி கட்சிக்கமிட்டிகளுக்குள் விவாதிப்பதோடு தனிப்பட்ட முறையிலும் பல மணிநேரம் விவாதித்து செயல்பாட்டை செழுமைப்படுத்த முயற்சி எடுப்பார். கட்சியில் ஊழியர்களை மதிப்பீடு செய்வதில் அவருக்கு நிகர் அவரே. ஊழியர்களைப் பாதுகாப்பதிலும் அவருடைய அணுகுமுறை நமக்கு வழிகாட்டியாகஅமைந்துள்ளது. கட்சிக் கமிட்டி கூட்டங்களில் கடுமையாக வாதம் செய்வார். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட தோழர் உடைந்து விடாமலும் பார்த்துக்கொள்வார். பணிச் சுமைகளுக்கிடையே தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்திட நேரம் ஒதுக்கிடுவார்.
நடுத்தர விவசாயக் குடும்பத்திலிருந்து…
தோழர் ஏ.நல்லசிவன், 1922இல் நெல்லை மாவட்டம் பிரம்மதேசத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆழமான கடவுள் பக்தி கொண்டவர். தனது மகன் படித்து ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கருதினார். நெல்லையில்இன்டர்மீடியட் படிக்கிற காலத்தில் நாட்டு நடப்பையும், காங்கிரஸ் போராட்டங்களையும்அறிந்துகொள்வதில் தோழர் ஏ.என். ஆர்வம் காட்டினார். சுபாஷ் சந்திர போசின் பக்தராக ஆனார்.
கல்லூரியில் கால்பந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டபோது, வலது கையில் அவருக்கு முறிவு ஏற்பட்டது. இதனால் படிப்பை தொடர முடியவில்லை. அக்காலத்தில் அப்பகுதியில் பிரபலமாக விளங்கிய தேசிய வாலிபர் சங்கத்தில் சேர்ந்ததோடு, தனது ஊரிலும் அச்சங்கத்தைத் துவங்கினார். 1940இல் காங்கிரஸ் தலைவர் நேரு கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து அம்பாசமுத்திரம் நகரில் மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார். அப்போது ஏ.என். வாழ்க்கையில் சுவாரஸ்யமான திருப்புமுனை ஏற்பட்டது.
காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த ஏ.என்., மார்க்சியம் பேசிவந்த செல்வராஜ் என்பவரை சந்தித்து காந்தியமே சிறந்தது என வாதிட்டு அவரை காங்கிரஸ் பக்கம் இழுக்க வேண்டும் என்ற நோக்கில் முயற்சியை தொடங்கினார். சமுதாய மாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும், மார்க்சிய தத்துவத்தால் மட்டுமே உலகை மாற்றியமைக்க முடியும் என்றும் அடுக்கடுக்காக செல்வராஜ் முன்வைத்த வாதத்தை தோழர் ஏ.என். ஏற்றார். தோழர் செல்வராஜ் அளித்த பல நூல்களையும் படித்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அந்த மார்க்சிஸ்ட் செல்வராஜிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அதே காலத்தில் சென்னை சதி வழக்கில் தோழர் பி.ஆர், ஆர். உமாநாத் போன்ற தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப்பிரகடனப்படுத்தியது தோழர் ஏ.என்னை உற்சாகப்படுத்தியது.
1943இல் அவருக்குத்திருமணமானது. மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் சென்னையில் மாநிலக்குழு அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார். அவரது குடும்பம் சொந்த கிராமத்தில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்று வருவார்.
அவருடைய போராட்ட வாழ்க்கையில் ஐந்தே முக்கால் ஆண்டு சிறையிலும், மூன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கையும் அனுபவித்தவர். அந்த மகத்தான தோழருக்கு நூற்றாண்டு விழா. அவருடைய அர்ப்பணிப்பை மக்களுக்கு எடுத்துச் செல்வோம். அவர் வழிநடப்போம்!