விஜயன்
அறிமுகம்
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (IPCC) வின் ஆறாவது மதிப்பீடு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம்தேதி வெளிவந்ததிலிருந்து பத்திரிக்கைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடு (COP) இந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. இதிலும் இப்பிரச்சனை விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் கடந்த 30 ஆண்டுகால முயற்சியில் ஏன் துளிக்கூட முன்னேற முடியவில்லை என்பதை பரிசீலிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இதுசம்பந்தமாக வெளிவந்தாலும், இப்பிரச்சனையின் ஆணிவேர் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்யும் கட்டுரைகள் பின்னுக்குபோன நிலையில், அத்தகைய முயற்சியை முன்னெடுத்துச் செல்வதும் இதன் நோக்கமாகும்.
இயற்கையாக நிகழும் நிகழ்வாக அல்லாமல் மனித நடவடிக்கையாலும் புவியின் வெப்பம் உயர்கிறது என்பது அறிவியல் ரீதியாக 1967ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய அமெரிக்கரான சுகுரா மனாபே என்ற அறிவியலாளரால் இது நிறுவப்பட்டது. இவர் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார். இவரது பணியைத் தொடர்ந்த க்ளாஸ் ஹாசல்மேன் என்ற ஜெர்மானிய அறிவியலாளர் இடத்துக்கு இடம் நேரத்திற்கு நேரம் மாறுபடும் வானிலை உருப்படிவம் (Climate Model) உருவாக்கும் வழிமுறையை கண்டறிந்தார். இவரும் இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசில் 25 சதவீதத்தை பெற்றிருக்கிறார்.
மனித நடவடிக்கையால் புவிவெப்பம் எப்படி உயர்கிறது?
சூரியனிலிருந்து உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்கள் மூலமாகவே வெப்பம் பூமிக்கு வருகிறது. அகச்சிவப்புக்கதிர் என்பது கண்ணுறு ஒளியை விட நீண்ட அலை நீளம் கொண்டது. இந்த அகச்சிவப்பு கதிர்களை பெற்றுக்கொண்டு பூமி வெப்பமாகும். அதே வேளையில் அதன் ஒரு பகுதியை பூமியானது வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புகிறது. திருப்பி அனுப்பப்படும் இந்த அகச்சிகப்பு கதிர்களை வளிமண்டலம் மீண்டும் திருப்பி அனுப்புகிறது. இப்படியாக பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி அளவுக்கு இருக்கிறது. ஒருவேளை வளிமண்டலம் இல்லை என்றால் எதிரொளிக்கப்பட்ட அகச்சிவப்புக்கதிர்கள் விண்வெளிக்கு சென்று விடும். இதனால் பூமியின் சராசரி வெப்பநிலை இரவு நேரத்தில் கிட்டதட்ட மைனஸ் 18 டிகிரிக்கு சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நிலவில் வளிமண்டலம் இல்லை. அதனால்தான் நிலவின் இரவு நேர வெப்ப நிலை மைனஸ் 50 டிகிரிக்கு கீழே செல்கிறது. வளிமண்டலம்தான் நமது பூமிக்கு வெப்பப்பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. சூரிய ஒளிக்கதிர்களை உள்ளே அனுமதித்து, பூமியிலிருந்து வெளியேறும் அகச்சிவப்புக் கதிர்களை தடுத்து நிறுத்தும் வளிமண்டலத்தின் இந்த செயலை நாம் பசுங்குடில் விளைவு என்று அழைக்கிறோம். வளிமண்டலம் என்று நாம் சொல்லும் போது அங்குள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற பல்தனிம மூலக்கூறுகளைக் கொண்ட வாயுக்களைத்தான் நாம் அவ்வாறு கூறுகிறோம். ஆக, பசுங்குடில்வாயுக்கள் குறைவாக இருந்தால் வெப்பம் வீழ்ச்சியடைந்துவிடும் மனிதர்கள் வாழமுடியாது. பசுங்கூட வாயுக்கள் அதிகமாக இருந்தால் வெப்பம் அதிகரித்து விபரீதமான காலநிலை மாற்றம் ஏற்பட்டு மனிதர்கள் வாழும் நிலப்பகுதி தண்ணீரில் மூழ்குதல், கடும் வெள்ளம், கடும் வறட்சி என்று மனிதர்கள் பெருந்துயரத்திற்கு ஆளாவார்கள்.
இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஹாசல்மானின் முக்கியமான பங்களிப்பு என்பது புவி வெப்பமயமாதலில் மனிதனின் பங்கு என்ன என்பதைக் கண்டறிந்ததுதான். பூமியின் வெப்பமயமாதல் என்பது இயற்கையாகவும் நடக்கலாம்; அல்லது மனிதனின் நடவடிக்கைகளாலும் நடக்கலாம். இங்கே இயற்கையாக நடப்பது என்றால் எரிமலை வெடிப்பின் மூலம் கார்பன்-டை-ஆக்சைடு மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, அல்லது சூரிய வெப்பம் அதிகரிப்பு. செயற்கையாக என்றால் மனிதனின் நடவடிக்கைகளில் மூலமாக (தொழிற்சாலை வெளியிடும் வாயுக்கள், வாகனங்கள் வெளியிடும் வாயுக்கள்) என கார்பன்-டை-ஆக்சைடு வாயு எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஹாசல்மான் தனது ஸ்டோகாஸ்டிக்ஸ் கோட்பாட்டு உருப்படிவம் மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு மனிதனின் நடவடிக்கைகளால் எவ்வளவு அதிகரித்தது; இயற்கையான சீற்றங்களால் எவ்வளவு அதிகரித்தது என்று பிரித்து எடுத்து சொன்னார். இது மிகப்பெரிய சாதனை.
சுற்றுச்சூழல் பிரச்சனையும் புவிவெப்பமாகும் பிரச்சனையும்
பசுங்குடில் வாயுக்கள் வகையினத்தைச் சாராத, மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் இதர வாயுக்களும் உள்ளன. இவற்றை நாம் மாசுக்கள் (Pollutants) என்கிறோம். உதாரணமாக கந்தக அமில உற்பத்தியில் வெளியேற்றப்படும் கந்தக-டை-ஆக்ஸைடு என்ற வாயு அமிலமழை உருவாவதற்கு காரணமாகிறது. மனித நடவடிக்கைகள் என்று கூறப்படும் பெருவீத பொருள் உற்பத்தியில் பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. இவ்வாயுக்கள் மனிதர்களுக்கு பொதுவாக நேரடியாகத் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் இவற்றின் வெளியேற்றம் புவி வெப்பமடைவதற்கு சுற்றடியாக காரணமாக்குகிறது. முதலாவது வகை வாயுக்கள் உண்டாக்குவது சுற்றுச்சூழல் பிரச்சனை. இது பிரதேசம் சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. இரண்டாவது, புவிவெப்பமயமாகும் பிரச்சனை. பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வானது உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கு காரணமாவதால், இது உலகளாவிய பிரச்சனையாகும். எனவே இது உலக சமூகம் முழுவதும் கட்டாயம் தலையிட வேண்டிய பிரச்சனையாகும்.
இதேபோல் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்தது வளிமண்டல ஓசோன் படல தேய்மானம். குளிர்ச்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரா கூட்டுப்பொருட்கள் வளிமண்டல ஓசோன் படலத்தை அரிப்பதால் இந்தப் படலம் மெலிந்து கொண்டே வந்தது. பூமியின் மீது விழும் புறஊதாக் கதிர்களை தடுக்கும் பணியை ஓசோன் படலம் செய்து வருகிறது. இது மெலிந்து போனால் புறஊதாக்கதிர்களை தடுக்க முடியாமல் போய், உயிரினங்கள் புறஊதாக்கதிர்களின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனவே ஓசோன் படல தேய்மானம் உலகளாவிய பிரச்னையாகும். 1987ஆம் ஆண்டு உலகநாடுகளுக்கிடையே கையொப்பமிட்ட மாண்டிரியல் ஒப்பந்தத்தின் மூலமாக இதற்குத் தீர்வு காணப்பட்டது. இதேபோல் இப்பொழுதும் ஒரு உலகளாவிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது. உமிழப்படும் பசுங்குடில் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தி 1990ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்து கொண்டே வரும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் நிறுத்த வேண்டும். இது முடியாது என்று இப்பொழுது ஆகிவிட்ட நிலையில் 2 டிகிரிக்குள்ளாவது நிறுத்த வேண்டும் என்பதே IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது. பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இரண்டையும் போட்டுக் குழப்பி தவறாக வழிகாட்டுகின்றனர். சிலர் காற்றுமாசுதான் வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என்கின்றர். சிலர் ஓசோன் படலம் தேய்ந்துபோன நிகழ்வையும் புவிவெப்பத்தையும் இணைத்துப் பேசுகின்றனர். இரண்டும் தவறு.
சர்வதேச அமைப்புகள்
காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச நிபுணர்குழு (Inter-governmental Panel on Climate Change – IPCC) என்ற அமைப்பானது பன்னாட்டு அரசுப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகும். இக்குழுவானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உபகுழுவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Program – UNEP) என்ற அமைப்பும் உலக வானிலை அமைப்பும் (World Meteorological Organization – WMO) இணைந்து 1988ஆம் ஆண்டு இக்குழு ஏற்படுத்தப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் துவங்கியது. இதில் இந்தியா உள்ளிட்ட 195 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த அமைப்பானது காலநிலை மாற்றத்தை அவ்வப்போது அறிவியல் அடிப்படையில் ஆய்வுசெய்து மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியிடும். கடந்த ஆகஸ்ட்டில் வெளியான அறிக்கை உள்ளிட்டு இதுவரை ஆறு அறிக்கைகளை இக்குழு வெளியிட்டிருக்கிறது. இதன் அறிக்கைகள் மீது அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது மதிப்பீட்டு அறிக்கை க்யூட்டோ ஒப்பந்தத்துக்கு வழிகோலியது. 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின் விளைவாக பாரிஸ் ஒப்பந்தம் ஏற்பட்டது.
காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework on Climate Change – UNFCC) என்ற அமைப்பு 1992ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது பிரேஸில் நாட்டின் ரியோ-டி-ஜெனரியோ நகரில் நடைபெற்ற புவிமாநாட்டில் (Earth Summit என்று சொல்லப்படும் United Nations Conference on Environment and Development – UNCED) அமைக்கப்பட்டது. இது ஜெர்மனியில் உள்ள பான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1994லிருந்து செயல்பட ஆரம்பித்தது. இதில் இந்தியா உள்ளிட்டு 197 உறுப்புநாடுகள் உள்ளன. இந்த 197 உறுப்பு நாடுகளும் ஆண்டுக்கொருமுறை கூடி காலநிலைமாற்றம் பற்றி இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பரிசீலித்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கும். ஆண்டுக்கொருமுறை கூடும் இக்கூட்டத்தை உறுப்பு நாடுகள் மாநாடு (Conference of Parties – COP) என்று அழைக்கின்றனர். பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடைபெறும். 1995 ஆண்டு முதல் இதுவரை 25 மாநாடுகள் நடைபெற்றுவிட்டன. 2020இல் பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இப்பொழுது 26வது மாநாடு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. IPCC காலநிலை மாற்ற ஆய்வறிக்கைகள் வெளியிடும் அமைப்பு என்றால் UNFCC காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் செயல்திட்டத்தை மேற்கொண்டுவரும் அமைப்பாகும்.
முயற்சிகளும்முறியடிப்புகளும்
IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை நாம் இங்கு விவாதிக்க வேண்டியதில்லை. இது ஒரு நீண்ட நெடிய அறிக்கை. 3,949 பக்கங்களைக் கொண்டது. விரிவான, ஆழமான, ஆய்வு முடிவுகள் இதில் உள்ளன. இதை ஆங்காங்கே பிய்த்து எடுத்து ஏராளமான கட்டுரைகள் வந்துவிட்டன. இந்தியா எப்படி பாதிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இவ்வறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை படிக்கவும். முழுக்க முழுக்க இது அறிவியல் அறிக்கை. தொழில்நுட்ப அடிப்படையிலானது. நோபல் அறிஞர்கள் மனாபே, ஹாசல்மேன் கோட்பாடுகளை பயன்படுத்தி தயார் செய்த அறிக்கையாகும். காலநிலை அறிவியலில் ஓரளவு ஞானம் உள்ளவர்கள் மட்டுமே முழுமையாக புரிந்து கொள்ள முடியும். இந்த அறிக்கையின் மூலம் புவியின் வெப்பமானது 1990இன் அளவை விட 2 டிகிரி உயர்ந்தால் கடுமையான தீய விளைவுகள் ஏற்படப்போவது உறுதி என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
IPCCயின் முதல் அறிக்கை 1990ஆம் ஆண்டு வெளிவந்ததிலிருந்தே சர்ச்சை துவங்கிவிட்டது. பசுங்குடில் வாயுக்கள் ஒரு நூற்றாண்டில் எவ்வளவு வெளியிடப்பட்டிருக்கிறது; யார் வெளியிட்டார்கள் என்ற விபரங்களை இந்த அறிக்கை போட்டு உடைத்துவிட்டது. புவிவெப்பமயமாவதற்கு வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகள் அதிகப் பொறுப்பு ஆகும் என்ற உண்மையை இது தெள்ளத் தெளிவாக்கியது. பொதுவாக அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒன்று கேள்விக்குள்ளாகாது. உதாரணமாக, பூமி சூரியனைச் சுற்றுகிறது போன்றவை கேள்விக்குள்ளாவதில்லை. ஆனால் அறிவியல் அடிப்படையில் மதிப்பிட்ட இந்த அறிக்கையின் அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. கேள்வியை எழுப்பியவர்களில் மிகவும் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்களும் அடங்குவர்.
அறிவியலில் நிறுவப்பப்பட்ட ஒன்று தூய்மையான அறிவியலாக இருக்கும்வரை அது கேள்விக்குள்ளாகாது. ஆனால் அது பொருளியல் சம்பந்தப்பட்டால் அது கேள்விக்குள்ளாகும் என்பது தெளிவு. அறிவியல் பாதையில் பயணித்து வந்த அரசியல்-பொருளாதாரம், மார்க்ஸ் காலத்தில் உபரி மதிப்பு எப்படி தோன்றுகிறது, உண்மையான செல்வ உற்பத்தியாளர்கள் யார் என்பதை இனம் கண்டவுடன், அந்த முடிவுகள், ஆதாயம் அடைபவர்களை அடையாளம் காட்டியதால் போலி அறிவியல் அரசியல்-பொருளாதாரத்திற்குள் புகுந்து அதை கொச்சைப் பொருளாதாரம் ஆக்கிவிட்டது. காலநிலை அறிவியல் மீதும் இதே போன்று தாக்குதல் தொடுக்கப்பட்டது. புவியின் வெப்பம் மனித நடவடிக்கையால் உயரவில்லை என்ற கருத்தும் தற்போது நாம் காணும் உயர்வு இயற்கையானதுதான் என்றொரு கருத்தும், வெப்பம் உயரவேயில்லை என்று சாதிக்கும் மற்றொரு கருத்தும், பரவலாக உலா வந்தன. இக்கருத்துகளுக்குச் சொந்தக்காரர்களில் பலர் மதிப்பு வாய்ந்த அறிவியலாளர்கள் ஆவார்.அடுத்தடுத்த IPCCயின் மதிப்பீட்டு அறிக்கைகைகள் வெளிவந்த நிலையில் இனிமேலும் உண்மை என்ற சூரியனை போலி அறிவியல் கொண்டு மறைத்துவிட முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
க்யூட்டோஉடன்படிக்கை
முதலாம் அறிக்கையின் தாக்கமே 1992ஆம் ஆண்டு நடைபெற்ற புவிமாநாடு. அதையொட்டி அமைக்கப்பட்டதே UNFCC. அதன் ஏற்பாடுதான் ஆண்டுதோறும் நடைபெறும் உறுப்பு நாடுகள் மாநாடுகள். மூன்றாவது உறுப்பு நாடுகள் மாநாட்டில் எற்டப்பட்டதுதான் க்யூட்டோ உடன்பாடு. இந்த உடன்படிக்கையானது ஜப்பான் நாட்டின் க்யோட்டோ நகரில் 1997ஆம் ஆண்டு டிசம்பரில் எட்டப்பட்டது. மார்ச் 16, 1998 முதல் மார்ச் 15, 1999 வரை நாடுகள் கையொப்பமிட அவகாசம் கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 16, 2005 முதல் அமலுக்கு வந்தது. இந்த உடன்படிக்கையானது “உச்சவரம்பு மற்றும் வணிகம்” (Cap and Trade) என்ற அணுகுமுறையில் அமைந்தது. இந்த உடன்படிக்கையின்படி தொழில்வள நாடுகள் (உடன்படிக்கையில் அட்டவணை ஒன்று நாடுகள் – இதில் இந்தியா, சீனா கிடையாது) தாங்கள் உமிழும் பசுங்குடில் வாயுக்களை 1990இன் அளவில் 5.2 சதவீதம் குறைவாக உமிழ்வது என்ற உச்சவரம்பிற்கு ஒப்புக் கொண்டன. இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் 8 சதவீதமும் அமெரிக்கா 7 சதவீதமும் ஜப்பான் 6 சதவீதமும் ரஷ்யா 0 சதவீதமும் 1990ஆம் ஆண்டைவிட குறைக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த உடன்படிக்கையானது ஆஸ்திரேலியாவிற்கு 1990ஆம் அளவைவிட 8 சதம் அதிகமாகவும் ஐஸ்லாந்திற்கு 10 சதம் அதிகமாகவும் நிர்ணயித்தது. பிப்ரவரி 2009 வரை 183 நாடுகள் இந்த உடன்படிக்கையின் அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. உச்சவரம்பைவிட குறைவாக உமிழ்பவர்கள் சான்றிதழ் பெறுவார்கள்; அதிகமாக உமிழ்பவர்கள் சான்றிதழ் உள்ளவர்களிடம் விலைகொடுத்து வாங்கி மொத்த உமிழ்வை ஒரு எல்லைக்குள் நிறுத்த வேண்டும்.
கோபன்ஹேகன்உடன்படிக்கை
“உச்சவரம்பு மற்றும் வணிகம்“ அணுகுமுறையானது உமிழ்வு வணிகத்தையும் அதையொட்டிய ஊகவணிகத்தையும் திறந்துவிட்டது. அத்துடன் 2001ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான புஷ் இந்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்து இதை உடைத்தெறிந்தார். இதன் மூலமாக அமெரிக்கா இதுவரை உமிழ்ந்ததற்கு மற்றவர்கள் செலவழிக்க வேண்டும் என்று மறைமுகமாக வாதிட்டது. இந்தக் கொள்கை சர்வதேச அளவில் கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்தது. இழுபறி நிலையே நீடித்தது. பின்தங்கிய நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்கள் அளவிற்கு வளரும் வரை இதில் பங்கெடுக்க முடியாது என்று வாதிட்டு வந்தன. எனினும் இந்த தேக்க நிலையில் ஒரு மாற்றம் 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற 15வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் வந்தது. இந்த மாநாட்டில் பின்தங்கிய நாடுகளும், உமிழ்வு குறைக்கும் முயற்சியில் பங்கெடுப்பது என்று ஒரு அடி முன்வைத்து உடன்பாட்டுக்கு வந்தன. ஆரம்ப கட்டமாக ஒவ்வொரு நாடும் அதன் மொத்த உமிழ்விற்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் (Emission/GDP Ratio) உள்ள விகிதத்தை சரிசமமாக பராமரிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது பின்தங்கிய நாடுகள் கோரிய தனிநபர் உமிழ்வு என்பது கைவிடப்பட்டு Emission/GDP Ratio வந்துவிட்டது. இதன் பிரச்சனை என்னவென்றால் அதிக GDP உள்ள நாடுகள் அதிகமாக உமிழலாம்; அதாவது அதிக GDP உள்ளவர்களுக்கு மட்டும் தனிநபர் உமிழ்வு அதிகமாக வைத்திருக்க உரிமை உண்டு. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள், அதாவது அதிக GDP உள்ள நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன. இதை அடைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் பின்தங்கிய நாடுகளுக்கு தொழில்நுட்பத்தை வழங்குவது என்றும், மூலதனத்தை வழங்குவது என்றும், 2020க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்டி பின்தங்கிய நாடுகளுக்கு உதவுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இப்படிச் செய்தால் தொழிற்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையில் 2 டிகிரி செல்ஷியஸ் மட்டுமே உயரும் என்றும் கணக்கிடப்பட்டது.
டர்பன்திட்டம்
குட்டித் தீவு நாடுகளுக்கு கோபன்ஹேகன் உடன்பாட்டில் திருப்தி ஏற்படவில்லை. அவர்கள் வாழும் பகுதி வேகமாக மூழ்கிவந்த நிலையில் அவர்கள் தீவிர நடவடிக்கை கோரி கூக்குரலிட்டு வந்தனர். எனவே டர்பன் நகரில் 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற 17வது உறுப்பு நாடுகள் மாநாட்டில் காரசாரமான விவாதம் முன்னுக்கு வந்தது. குட்டித் தீவு நாடுகளின் அச்சத்தை முன்வைத்து பருவநிலை பிரச்சனையை சரி செய்ய வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு அதிக கடப்பாடு இருக்கிறது என்ற கொள்கையை ஒழித்துக் கட்டினர். இந்தக் கொள்கை இருப்பதால்தான் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை என்ற வாதத்தை முன்வைத்து இதை நீக்குவதற்கு கோரி வந்தது. அழியும் நாடுகளின் கூக்குரலுக்கு எல்லாரும் செவிசாய்க்க வேண்டும் என்ற நிலையில் பின்தங்கிய நாடுகள் இக்கொள்கையை வலியுறுத்துவதை நிறுத்த ஒப்புக் கொண்டன. அத்துடன் இக்கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டால் ஓராண்டுக்குள் உருப்படியான நடவடிக்கை எடுக்கும் உடன்பாட்டுக்கு வழிகோல முடியும் என்றும் வாக்குறுதியளித்தன. அப்படி நடக்காவிட்டால் 2015க்குள் கண்டிப்பாக உருப்படியான உடன்படிக்கை எட்டுவது என்ற இலக்கிற்கு ஒப்புக்கொண்டது. உருப்படியான நடவடிக்கை என்றால் ஒவ்வொரு உறுப்பு நாடும் சட்டரீதியாக உமிழ்வு குறைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் அதீத வலதுசாரி குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் இது சாத்தியப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர்கள் பெரும்பான்மையாக இருந்தபொழுதுதான் க்யோட்டா உடன்படிக்கையை சட்ட ரீதியாக ஏற்றுக் கொண்டதை ரத்து செய்தார்கள்.
22வதுஉறுப்புநாடுகள் (பாரிஸ்)மாநாடு
2015ஆம் ஆண்டு நெருங்கி வந்ததையொட்டி அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில் சீனாவும், அமெரிக்காவும் 2014ல் ஒரு பருவநிலை உடன்பாடு செய்து கொண்டன. இதன்படி 2030க்குள் சீனா அதன் உமிழ்வின் உச்சத்தை அடைந்துவிடும் என்றும், அதன் பிறகு அது படிப்படியாக குறைக்கத் துவங்கிவிடும் என்பதும் அந்த உடன்பாட்டில் கூறியிருக்கிறது. அத்துடன் படிம எரிபொருட்களின் உபயோகத்தை 20 சதவிதம் குறைப்பதாகவும் கூறியிருந்தது. படிம எரிபொருட்கள்தான் பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன இதுவே புவிவெப்பமயமாவதற்கு காரணம். தன்னுடைய தரப்பில் அமெரிக்காவானது 2005ஆம் ஆண்டு உமிழ்வில் 26-28 சதவீதத்தை 2025க்குள் குறைப்பதாக ஒப்புக் கொண்டது. எனினும் குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் இது சாத்தியப்படாது என்பதால் அதிபர் ஒபாமா அவர்கள் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சுற்றறிக்கை மூலம் அமல்படுத்த முயன்றார். விஷயம் நீதிமன்றம் சென்று நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவும், ஃபிரான்சும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டன. இதன்படி அதே ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெறும் மாநாட்டில் இரண்டும் இணைந்து செயல்பட்டு ஒரு உடன்பாடு உருவாவதை வெற்றிகரமாக்க முயற்சிக்கும் என்று அறிவித்தன. எப்படிச் செய்யப்போகின்றன என்று அறிவிக்கவில்லை.
பாரிஸ் மாநாட்டிற்கு முன்பாக ஒவ்வொரு நாடும் தன்னால் எவ்வளவு உமிழ்வை குறைக்க முடியும் என்பதும், அதற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு என்பதும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மிகவும் பின்தங்கிய நாடுகளை நெருக்கி அவர்களிடம் வாக்குறுதியைப் பெற்றுவிட்டன. சில நாடுகள் தங்களின் வளர்ச்சித் திட்டத்தில் சமரசம் செய்து கொண்டு உடன்படிக்கைக்கு முன்வந்தன. இவர்களை அணிசேர்த்துக் கொண்டு வளர்முக நாடுகளை, குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் நெருக்கி வந்தன. பாரிஸ் மாநாட்டில் உடன்படிக்கை என்பது ஒருவழியாக எட்டப்பட்டுவிட்டது. வளர்ந்த நாடுகளின் கோரிக்கையான பருவநிலை மாற்றத்தினால் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதும், பின்தங்கிய நாடுகளின் கோரிக்கையான பொதுவான ஆனால் வித்தியாசமான பொறுப்பு (Equity or Common but differentiated Responsibilities) என்ற கோரிக்கையும் உடன்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றன. நாடுகளின் வாக்குறுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் எதுவும் சட்டரீதியானது கிடையாது. ஐந்தாண்டுக்கொருமுறை பரிசீலனை செய்து உமிழ்வுகுறைப்பில் மாற்றங்கள் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதும் உடன்பாட்டில் உண்டு. இந்த உடன்பாட்டிலிருந்து பின்வாங்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். வெற்றி பெற்றபின் சொன்னதைச் செய்தும் காட்டினார்.
முதலாளித்துவம் இருக்கும்வரை புவிவெப்பமயமாக்கலுக்குத் தீர்வு கிட்டாது
இந்தப் பின்னணியில்தான் 26வது உறுப்பு நாடுகள் மாநாடு கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இது அபாயச்சங்கு ஊதும் IPCCயின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின் பின்னணியில் நடைபெற்று வருகிறது. எதிர்பார்த்ததைப் போல் எந்த உருப்படியான முடிவும் எட்டப் போவதில்லை. மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டியபடி 2030க்குள் 2 டிகிரி செல்ஷியஸுக்குள் வெப்பஉயர்வை நிறுத்துவதற்கு ஒவ்வொரு நாடும் குறைக்க வேண்டிய உமிழ்வின் இலக்குகள் என்று எதுவும் நிர்ணயிக்கப் போவதில்லை. காடுகள் அழிப்பை குறைக்கப் போகிறார்களாம். பசுங்குடில் வாயுக்களில் பிரதான வாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை குறைப்பது பற்றி எதுமில்லை. ஆனால் சிறிய அளவு பங்கு வகிக்கும் மீத்தேன் உமிழ்வைக் குறைக்கப் போகிறார்களாம். மாநாடு நவம்பர் 12ஆம்தேதி முடிவடைகிறது.
ஓசோன்படலம் தேய்மானப்பிரச்சனை முன்னுக்கு வந்த பொழுது மாண்டிரியல் உடன்படிக்கை மூலம் தீர்வு எட்டப்பட்டது. இந்த தீர்வின் விளைவாக குளோரோபுளோரா கூட்டுப்பொட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக வேறு குளிர்விப்பு ஊடகம் புழக்கத்திற்கு வந்துவிட்டது. குளோரோஃபுளோரா கூட்டுப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட மூலதனதனமானது ஒட்டுமொத்த உலக மூலதனத்தின் சிறுபகுதியே. எனவே அதன் வலிமையும் குறைவு. முதலாளித்துவ உற்பத்திமுறையில் பல்வேறு உற்பத்திக் கிளைகளுக்குள் முரண்பாடுகள் எப்பொழுதுமே இருந்துவரும். இதில் நெருக்கடி கட்டத்தை ஏட்டும்பொழுது சிறுமூலதனம் நசுங்கிச் செத்துவிடும். குளோரோஃபுளோரோ கூட்டுப்பொருளுற்பத்தியில் ஈடுபட்ட மூலதனம் இப்படித்தான் மறைந்து போனது. ஆனால் புவிவெப்பப் பிரச்சனையில் நிலைமை வேறு. படிமஎரிபொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் மூலதனமும் அவற்றின் உற்பத்திப் பொருட்களை கச்சாப் பொருட்களாக கொண்டு செயல்படும் மூலதனமும் உலக மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றது. எனவே இந்த மூலதனத்தின் வலிமையை குறைந்தது மதிப்பிட முடியாது. அத்துடன் வளரும் நாடுகள் படிம எரிபொருளையே தங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சார்ந்திருக்கின்றன. எனவே வளரும் நாடுகளின் மூலதனமும் படிம எரிபொருளை முடக்க அனுமதிக்காது.
முதலாளித்துவ உற்பத்திமுறை அதற்கே உரித்தான இயங்குவிதிகளுடன் இயங்கிவருகிறது. இவ்வுற்பத்திமுறை இருக்கும் வரை அதன் இயங்குவிதிகளில் யாரும் தலையிட முடியாது. முதலாளித்துவ உற்பத்திமுறை ஏற்படுத்திவரும் நெருக்கடிக்குத் தீர்வாக அரசு செலவீனத்தின் மூலம் செய்யப்படும்அரசு தலையீடு ஒரு ஒழுங்குக்கு கொண்டுவரும் என்ற கோட்பாட்டை ஜான் மோனார்டு கீன்ஸ் முன்மொழிந்தார். ஆனால் அவருடைய கோட்பாட்டை அமல்படுத்த முடியவில்லை. அவ்வப்போது அமல்படுத்தப்பட்டாலும், ஒரு குறுகிய காலத்திற்குள் அமலாக்கம் பின்வாங்கப்பட்டுவிடுகிறது. ஏனென்றால் முதலாளித்துவத்தின் இயங்குவிதியானது கீனிஸியத்தை ஒருபோதும் அனுமதிக்காது. அதேபோல்தான் புவிவெப்ப பிரச்சனையிலும் அரசுகளின் தலையீட்டை அனுமதிக்காது. ஒருபுறம் வளர்ச்சியை கோரி நிற்கும் பின்தங்கிய நாடுகள், இன்னொருபுறம் அதிக உமிழ்வைச் செய்து வளர்ந்துவிட்ட நாடுகள். வளரும் நாடுகளின் கோரிக்கைகளை சுட்டிக்காட்டி இவை தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முனைகின்றன.
எப்படிப்பட்ட சமூகப் பிரச்சனைகள் இருந்தாலும் உற்பத்திமுறைக்குள்ளோ உற்பத்தியமைப்புக்குள்ளோ தலையீடு செய்வதை முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் ஒருபோதும் அனுமதிக்காது. கடந்த முப்பது ஆண்டுகளாக வரவிருக்கும் ஆபத்தை எவ்வளவுதான் உரக்கக் கூறி எத்தனை கிரேட்டா தன்பெர்க்குகள் போராட்டம் நடத்தினாலும் முதலாளித்துவத்தை அதனது லாப நோக்க செயல்பாட்டிலிருந்து விடுவித்து ஒட்டுமொத்த சமூக நோக்க செயல்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாது. “முதலாளித்துவமானது, அதனளவில் அதன் உற்பத்தித்தளத்தில் ஒரு கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் கொண்டுவருகிறது. அதே நேரத்தில், உற்பத்தித்தளத்திற்கு வெளியே ஒழுங்கின்மையையும், அராஜகத்தையும் ஏற்படுத்துகிறது” என்று மூலதன நூலில் வலியுறுத்திக் கூறும் மார்க்ஸின் கூற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நெருக்கடிகள் முற்றுவதால், பேச்சுவார்த்தைக்கு பல்வேறு மூலதனத்தின் பிரதிநிதிகள் மேஜைக்கு வந்திருக்கிறார்கள். என்ன மாதிரியான முடிவெடுத்தாலும் அது மூலதனத்தின் இயக்கப் போக்கில் தலையிடுவதாகவே வருகிறது. எனினும் பேச்சுவார்ததை மேஜையில் அமர்ந்திருப்பவர்கள் கறாராக முதலாளித்துவ கோட்பாடுகளை இம்மி பிசகாமல் அமல்படுத்த முயன்று வருகிறார்கள். எப்பொழுதெல்லாம் சூழலைக் கெடுக்கும் இந்த அராஜக உற்பத்திமுறையில் மனிதத் தலையீடு வேண்டும் என்ற கோஷம் வலுக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சந்தை வழியில் தீர்வு என்பதாக திசை திருப்பப்பட்டு, சந்தைதான் திசைவழியைத் தீர்மானிக்கும்; மனிதத் தலையீடு தீர்மானிக்க முடியாது என்று நிறுவுவதற்கு கறாராக முயல்கிறார்கள்.
முதலாளித்துவம் ஏற்படுத்தும் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சியானது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். ஆனால் அதன் அராஜக உற்பத்தியமைப்பு முறை மனிதர்களுக்கு சொல்லொண்ணாத் துயரத்தையும் கொண்டுவரும். அது மனிதர்களுக்கு கொண்டுவரும் துயரங்களிலிருந்து மானுடம் பாடம் கற்றுக்கொண்டு புதிய சமூக அமைப்பாக தன்னை தகவமைத்துக் கொள்ளும். அப்புதியவகை சமூக அமைப்பே சோசலிச சமூகம்; அது லாபத்திற்காக உற்பத்தி என்பதை கைவிட்டு மனிதத் தேவைக்கான உற்பத்தி என்பதை மையமாக வைத்து செயல்படும். இயற்கையான இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். அதுவரை இயற்கை வளங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலை பற்றியும் ஒட்டுமொத்தமாக இந்த புவி பற்றியும் கவலைப்படாமல் அராஜக உற்பத்திமுறையை முதலாளித்துவம் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. லாபவெறியில் இயங்கும் முதலாளித்துவம் புவியை காப்பாற்ற அனுமதிக்காது. எத்தனை சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், உறுப்பு நாடுகள் மாநாடு எத்தனை நடைபெற்றாலும், மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடுகளை முதலாளித்துவ உற்பத்திமுறை அனுமதிக்காது. மூலதன இயங்குவிதிகளை மீறும் தலையீடு இல்லாமல் புவிவெப்ப பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாது. படுவேகமாக அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் புவியைக் காப்பாற்றவேண்டுமானால் முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டு அதனிடத்தில் மானுடத்தில் அக்கறையுள்ள சமூக அமைப்பான சோசலிசம் வரவேண்டும் என்பதே மானுடம் முன் உள்ள முன்னுரிமை என்பதை புவிவெப்பமயப் பிரச்சனை வலியுறுத்துகிறது.
Leave a Reply