இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
மகாத்மா காந்தியைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்திற்கு வர இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்துமே துரதிர்ஷ்டவசமாக, ஒன்று மிக எளிமையாகவும் அவரை ஒருதலைப்பட்சமாகப் பாராட்டுவதாக இருக்கின்றன; அல்லது மிக எளிமைப்படுத்தி, அவரை ஒருதலைப்பட்சமாக விமர்சிப்பதாக இருக்கின்றன. எனினும் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்ப்பதாக இருக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கான ஒரு பங்களிப்பாகவே காந்தியின் வாழ்க்கையிலிருந்து இந்த எழுத்தாளருக்குத் தோன்றுகின்ற முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
முதலில் கவனிக்கப்பட வேண்டியது காந்தி ஒரு கருத்துமுதல்வாதி என்பதுதான். அவரை வழிநடத்திய உலகக் கண்ணோட்டம் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கு எதிரானது என்ற பொருளில் மட்டுமல்ல; தன் முன்னால் அவர் வைத்துக் கொண்டிருந்த சில கொள்கைகளை தனது வாழ்க்கையின் இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார் என்பதாலும்தான். உண்மை, அஹிம்சை, வாழ்க்கையின் இன்பங்களைத் துறத்தல் போன்ற தார்மீக நெறிகள்; சுதந்திரம், ஜனநாயகம், அமைதி போன்ற அரசியல் கருத்துக்கள்; மதங்கள் மற்றும் சமூகங்களின் ஒற்றுமை போன்ற சமுதாயக் குறிக்கோள்கள் ஆகிய இவை அனைத்தும் அவரது வாழ்வு மற்றும் போதனைகளின் பிரிக்கமுடியாத பகுதிகள். இத்தகைய சில சிறப்பான கொள்கைகளை பற்றி நின்றதே அவரை தன் பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக இயக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபடச் செய்தது. இதுவே அவரை தேசத்தின் விடுதலைக்காக ஒத்துழையாமை மற்றும் இதர இயக்கங்களை வகுக்க உதவியது. இதுவே அவரை எண்ணற்ற ஜனநாயக நோக்கங்களுக்காகப் போராடுபவராகவும் ஆக்கியது. இறுதியாக, அவரை தேச ஒற்றுமை எனும் உயரிய லட்சியத்திற்காக உயிர்நீத்த தியாகியாகவும் ஆக்கியது.
இரண்டாவதாக, அதுவரை தூங்கிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான கிராமப்புறத்து ஏழைகளை தட்டி எழுப்புவதில் அவரது கொள்கைகள் மிகப்பெரும் பங்காற்றின. அவர்களோடு பேசும்போது அவர் பயன்படுத்திய அரை மதத்தன்மை கொண்ட மொழி; அவர் வாழ்ந்த எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கை; அவர்களின் கோரிக்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் காட்டிய ஆர்வம். இவையெல்லாம் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகளை அவர் பால் ஈர்த்தன. தங்களை ரட்சிக்க வந்தவராகவும், கடவுளின் அவதாரமாகவும், தாங்கள் இருந்த பரிதாப நிலையிலிருந்து தங்களை மீட்க வந்தவராகவும் அவர்கள் அவரைக் கண்டனர்.
பிற்போக்கான சமூகக் கண்ணோட்டம் கொண்டிருந்த காந்தியே நவீன தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை ஈர்க்கும் ஆழமான புரட்சிகர அற்புதத்தை உருவாக்கிய காரணகர்த்தா என்று எவரேனும் கூறினால் அது சுயமுரண்பாடு போலத் தோன்றக் கூடும். எனினும், இந்த சுயமுரண்பாடு, தேசிய ஜனநாயக இயக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் தொடர்புள்ள முதலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது என்ற உண்மையிலிருந்து எழுகின்ற நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.
மூன்றாவதாக, தேசிய இயக்கத்தில் கிராமப்புற ஏழைகளை ஈர்ப்பதில் அவர் மிக முக்கிய பங்காற்றினார் என்ற போதிலும், முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்திய மிகப் பிரம்மாண்டமான விழிப்புணர்விற்கும் அவர்தான் காரணம் என்பதும் தவறாகும். ஏனெனில், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளின் விளைவே அந்த விழிப்புணர்வு. இந்திய தேசிய இயக்கத்திற்குள் வளர்ந்து வந்த தீவிரவாதப் பிரிவு சில பகுதிகளில் விவசாயிகளையும் தொட்டது. துருக்கி, சீனா , எல்லாவற்றிற்கும் மேலாக ருஷ்யப் புரட்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் ஆசிய மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவை இந்திய விவசாயிகளின் மனசாட்சியின்மீது செயல்படத் தொடங்கிய சில அடிப்படையான காரணங்களாகும். காந்தி அந்த சித்திரத்திற்குள் வந்திருந்தாலும் அவை செயல்பட்டிருக்கும். ஒருவேளை அதேமாதிரியாக இருந்திருக்காது.
இதைச் சொல்வது இந்திய விவசாயிகளின் விழிப்புணர்விற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியான குணாம்சத்தைக் கொடுத்ததிலும், புதிய எழுச்சி, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான அரசியல் இயக்கத்தோடு இணைக்கப்பட்டதிலும் தனிநபர் என்ற முறையில் காந்தி ஆற்றிய பங்கை மறுப்பதற்காக இல்லை. கிராமப்புற மக்களை ஈர்த்ததிலும் அதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயக இயக்கத்தை பலப்படுத்தியதிலும் காந்தியின் பங்கை மறுப்பது , மக்களிடம் ஏற்பட்ட அந்த விழிப்புணர்விற்கு முழுக்க முழுக்க காந்தியே காரணம் என்பது போன்றே ஒருதலைப்பட்சமானதே ஆகும்.
நான்காவதாக, இவ்வாறாக தேசிய இயக்கத்தின் பெரும் பலவீனத்தைப் போக்கியதில் பங்காற்றியவர் என்ற பாராட்டுதலுக்கு காந்தி தகுதியுடையவர் ஆகிறார். அதாவது, இதுவரை அணிதிரட்டப்படாமல் இருந்த பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை இயக்கத்திற்குள் கொண்டு வந்தததன் மூலம் இயக்கத்தை உண்மையிலேயே ஒரு தேசிய இயக்கமாக, அனைத்து வர்க்கங்களும் கலந்து கொண்ட இயக்கமாக அவர் ஆக்கினார். அதேவேளையில், கிராமப்புற ஏழைகள் சுயேச்சையான ஒரு சக்தியாக செயல்பட்டு விடுவார்களோ என்று எப்போதும், தன் இறப்பு வரைக்கும், அவர் பயந்து கொண்டே இருந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் அவர்களை அணிதிரட்ட வேண்டும் என்று விரும்பியபோதிலும், அவர்கள் அவருடைய சொந்த வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழேதான் செயல்பட வேண்டும் என்பதிலும் அவர் குறிப்பாக இருந்தார்.
சவுரிசவ்ரா நாட்களிலிருந்து தன் இறுதி வரை, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளி வர்க்கத்திற்குப் பாதுகாப்பானது என்று கருதப்பட்ட வரம்பிற்கு உள்ளேயே கிராமப்புற ஏழைகளை வைத்திருக்க அனைத்துவகையான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். இந்த உண்மையைக் காண மறுக்கும் எவரும், முதல் உலகப் பெரும்போர் காலகட்டத்தில் ஏகாதிபத்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் ஒரு தளபதியாகச் செயல்பட்ட அவர், ஏன் ஏகாதிபத்தியத்திற்கும் அதன் முகவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் மக்கள் அகிம்சையையே கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் என்பதை விளக்க முடியாது.
ஐந்தாவதாக, கிராமப்புற ஏழைகள் விஷயத்தில் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் விஷயத்திலும் அவரது அணுகுமுறையும் செயல்பாடும் முதலாளி வர்க்கத்திற்கு உதவுவதாகவே இருந்தது. அவரது ’தர்மகர்த்தா’ முறை பற்றிய கொள்கை, அரசியல் செயல்பாட்டின் வழிகாட்டியாக சில ஒழுக்க நெறிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, தனது தளபதிகளின் பாராளுமன்ற நடவடிக்கைகளோடு ஆக்கபூர்வத் திட்டம், சத்தியாகிரகம் போன்ற பாராளுமன்றத்திற்கு வெளியிலான தனது சொந்த செயல்பாடுகளை சாமர்த்தியமாக இணைத்த விதம், எதிரிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற பிரத்தியேகமான காந்திய வழிமுறை இவை எல்லாமே நடைமுறையில் (அ) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்பாட்டிற்காக மக்களை திரட்டுவதில் (ஆ) அவர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதிலிருந்து தடுப்பதில் முதலாளி வர்க்கத்திற்கு அளவற்ற உதவி புரிந்தன.
மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை தொடங்குவதிலும், அதே நேரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதிலும் அவருக்கு இருந்த தனித்திறன் அவரை முதலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவராக ஆக்கியது. அந்த வர்க்கத்தின் அனைத்து குழுக்களும் கோஷ்டிகளும் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தன. எனவே அவரால் முழு வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி, செயல்பட வைக்க முடிந்தது.
இறுதியாக, வரலாற்றில் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான தலைவர் என்ற பாத்திரத்தை காந்தி வகித்தார் என்பதைக் கொண்டு அவர் எப்போதும், எல்லா விஷயங்களிலும் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றுபட்டார் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மறுபுறத்தில், நண்பராகவும், தத்துவவாதியாகவும் வழிகாட்டியாகவும் அவர் இருந்து தலைமை தாங்கிய முதலாளி வர்க்கத்தினுடைய, அவருடைய சிறப்பியல்பிற்கு ஏற்ற வகையில் பல தருணங்களிலும், பல விஷயங்களிலும் காந்தியின் குரல் தன்னந்தனியான ஒன்றாக இல்லை எனினும், ஒரு சிறுபான்மைக் குரலாக இருந்திருக்கிறது. அத்தகைய தருணங்கள் அனைத்திலும் அவரும் அவர்களும் தற்காலிகமாக வேறு வேறு பாதைகளில் செல்வது என்று தங்களுக்குள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். முதலில் சுயராஜ்யவாதிகளுக்கும் மாற்றத்தை விரும்பாதவர்களுக்கும் இடையிலான வேலைப் பிரிவினையாக, பின்னர் 1932-33 ஆண்டுகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிந்தைய வருடங்களில், இரண்டாம் உலகப் பெரும்போரின்போது பல சந்தர்ப்பங்களில், இறுதியாக சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய மாதங்களில் இந்த அதிசயம் மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
அவருடைய இறுதிநாட்களில் அவருக்கும், அவரது சகாக்களுக்கும் இடையில் அதிகரித்துவந்த இந்த இடைவெளியை ஆராயும்போதே அவரைப் பற்றிய, அவரது குறிக்கோள்கள் பற்றிய உண்மையிலேயே பாரபட்சமற்ற பல கோணங்களிலான மதிப்பீட்டிற்கு நாம் வர முடியும். ஏனெனில், சில தார்மீக விழுமியங்களை காந்தி வலியுறுத்தியதானது ஒரு சமயம் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக இருந்து, பின்னர் அவரது இறுதி நாட்களில் அதற்குத் தடையாக ஆனதன் வெளிப்பாடே அதிகரித்து வந்த இந்த இடைவெளி ஆகும்.
முதலாளி வர்க்கம் இரண்டு முனைகளில் போராட வேண்டியிருந்த நாட்களில் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்காக நமது நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளை அது திரட்ட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருந்த புரட்சிகரப் போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தபோது, காந்தியால் உருவாக்கப்பட்ட வன்முறையற்ற போராட்ட உத்தியை மேற்கொள்வது அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டது. இருந்தபோதிலும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, அரசு அதிகாரத்தைப் பெற்ற பிறகு, அது இரு முனைகளில் போராட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தாலும் அது அரசு மட்டத்திலேயே நடத்தப்பட்டது. அதற்காக மக்களை செயலில் இறக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
மேலும் முதலாளி வர்க்கம் தன் கைக்கு வந்த அரசு அதிகாரத்தை தனது வர்க்க நலன்களை காப்பதற்காகவே பயன்படுத்தும். எனவே அரசு அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தும். அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததன் மற்றொரு விளைவு என்னவெனில், முதலாளி வர்க்கத்தின் தனிநபர் பிரதிநிதிகள் (சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள்) தங்களையும், தங்கள் உறவினர்கள், நண்பர்கள், அடிவருடிகளை அரசு மற்றும் மக்களின் செலவில் செல்வந்தர்களாக ஆக்கிக் கொள்ளத் தொடங்கினர். இதற்காக எந்த வகையான ஊழலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
முதலாளி வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் தான் போதித்து வந்த கருத்துக்களை இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த காந்தியோடு அதை முரண்படச் செய்தது. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் அவர் போதித்து வந்த தார்மீக நெறிகள் அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகளுக்குத் தடையாக ஆயின. மறுபக்கமோ காந்தி அவற்றுக்கு உண்மையாக இருந்தார். தனது சகாக்கள், தளபதிகள் ஆகியோரிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தோடு அவரால் ஒத்துப்போக முடியவில்லை. குறிப்பாக, இந்து-முஸ்லீம் ஒற்றுமை மற்றும் காங்கிரசார் மத்தியில் ஊழல் ஆகிய பிரச்சனைகளில் நிலைமை இவ்வாறே இருந்தது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட வருடங்களில் அவர் கடைப்பிடித்து வந்த உயரிய கொள்கைகளுக்காகவே – குறிப்பாக அவை முதலாளி வர்க்கத்தின் கைகளில் பயனுள்ள ஆயுதமாக நடைமுறையில் இருந்ததாலேயே – காந்தி தேசத் தந்தை ஆனார். மேலும், தன்னுடைய பிந்தைய நாட்களில் அவர் முதலாளி வர்க்கத்திலிருந்து கிட்டத்தட்ட தனிமைப்பட்டதற்குக் காரணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய நாட்களில் அவருடைய உயரிய கொள்கைகள் முதலாளி வர்க்கத்தின் சுயநலனுக்குத் தடையாக இருந்ததே ஆகும். உண்மை, அகிம்சை, அறம் போன்ற காந்தியின் போதனைகளை அரசியல் அதிகாரத்தை அடைவதற்காகத்தான் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இன்றும் கூட கடுமையான எதார்த்தவாதிகள் என்ற வகையில், சமூக-பொருளாதார மாற்றத்திற்கான எந்த ஒரு இயக்கத்தின் வெற்றியும் தோல்வியும் அரசியல் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதையும், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமைகிறது. இதனாலேயே அவர்கள் அதிகாரத்தையும் அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் துறக்கத் தயாராக இல்லை.
இவ்வகையில் காந்தியிசத்தை மதிப்பிடுகையில், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தின் தத்துவம், நடைமுறை என்ற வகையில் அதன் சாதக-பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் சரி, அல்லது பூதான இயக்கத்தின்போது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பானாலும் சரி, அல்லது 1970களில் எதேச்சாதிகாரத்திற்கு எதிரான காலத்திலும் சரி, காந்தியிசம் என்பது முறையே நாட்டு விடுதலை, விவசாய சீர்திருத்தம், ஜனநாயக பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது. அதே நேரத்தில் மறுமலர்ச்சி மற்றும் இருண்மைவாத சமூக-கலாச்சார கண்ணோட்டத்தின் காரணமாக மக்கள் இயக்கத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அது இடையூறான ஒன்றாக ஆனது.
இங்கொன்றும் அங்கொன்றுமாக தனிநபர்கள், வினோபா பாவே அல்லது வேறு லட்சியவாதிகளின் போதனையை கேட்டு அதிகாரத்தையோ உடமையையோ துறக்கலாம். ஆனால் நிலப்பிரபுக்களும் முதலாளி வர்க்கத்தினரும், இதர சுரண்டும் வர்க்கங்களும் ஒரு வர்க்கம் என்ற வகையில், தீர்க்கதரிசிகள் கனவு கண்ட, நடைமுறை புரட்சியாளர்கள் எதற்காகப் போராடினார்களோ அத்தகைய சமூக மாற்றங்களுக்கு விருப்பத்துடன் உடன்பட மாட்டார்கள். அவ்வகையில்தான் வினோபா பாவேயையும் அவரது சகாக்களையும் அவர்கள் நிச்சயமாக வாழ்த்துவார்கள். கிராமதான இயக்கத்தை தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்வதற்கு உதவுவார்கள். ஆனால் அரசியல் அதிகாரத்திற்கான தங்களது போராட்டத்தை அவர்கள் எப்போதும் கைவிட மாட்டார்கள்.
கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், மற்ற இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் சமூக-பொருளாதார மாற்றத்திற்கான போராட்டத்தில் அரசியல் அதிகாரம் அவசியமான ஓர் அம்சம் என்பதில் அவர்கள் தெளிவாகவே இருந்தனர். இரு நூற்றாண்டிற்கு முன்பாகவே, மார்க்சிய மூலவர்கள் பிரகடனம் செய்ததைப் போல, எந்தவொரு ஆளும் வர்க்கமும் தானாகவே அரசியல் அதிகாரத்தை விட்டுவிடுவதில்லை.
(தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய மகாத்மாவும் அவரது இசமும் என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்)