ரொமிலா தாப்பார்
பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.
நன்றி: ஃப்ரண்ட்லைன்
கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இஸ்லாமிய தன்மை குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.
இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி, அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:
- அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள் வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
- ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.
இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.
- இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.
அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.
- ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.
இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.
மதரீதியான சகிப்புத் தன்மை
பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?
மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.
எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும். இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.
சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.
இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம் என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.
குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது தொடர்ந்து நீடிக்க முடியாது.
இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.
இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.
ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள் இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?
கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள் கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!
தமிழில்: வீ.பா.கணேசன்
Leave a Reply