(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து)
ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் அடிப்படையாகவும், அதன் உள்வாழ்வை வழிநடத்துவதாகவும் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகள் உள்ளன.
ஜனநாயக மத்தியத்துவத்தின் பொருள், உட்கட்சி ஜனநாயகத்தின் அடிப்படையிலான மையப்படுத்தப்பட்ட தலைமை என்பதாகும். கட்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து பிரச்சனைகள், அதன் கொள்கைகள், பணிகள் மீது கட்சி அமைப்புகளில் சுதந்திரமான, வெளிப்படையான விவாதங்களை நடத்துவது உட்கட்சி ஜனநாயகத்தின் சாரமாக அமைய வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயகம் என்பது தீவிரமான பொது செயல்பாட்டுக்கான ஜனநாயகமாகும். அதாவது தலைமையைத் தெரிவு செய்வதிலும், கொள்கைகளை உருவாக்குவதிலும் மட்டுமன்றி கட்சியின் செயல்பாட்டில் முனைப்போடு கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதுமான ஜனநாயக கடமையாகும். இவ்வகையில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஜனநாயகமும், மத்தியத்துவமும் இரண்டற இணைந்த செயல்முறை.
* குழுவாத போக்குகள், பதவி ஆசை, பிராந்திய வாதம், தனிநபர் போக்கு, அதிகார வர்க்க அணுகுமுறை, கூட்டுச்செயல்பாட்டை தவிர்த்தல், கீழ்மட்டத்திலிருந்து எழும் விமர்சனங்களை ஊக்குவிக்காத ஆகியவை பலவீனங்கள் ஆகும். இதன் விளைவாக எழும் சிக்கல்கள், குழுவாத விசுவாசத்தோடு நபர்களைத் தேர்ந்தெடுத்தல், கோஷ்டிகளுக்காக தகுதியற்ற நபர்களைத் தேர்ந்தெடுத்தல், குழுவாத நோக்கங்களுக்காக தோழர்களின் தவறுகளை காணாமல் விடுவது, கட்சி கமிட்டிகளில் குழுவாத பிளவுகள் ஆகியன…
* குழுவாத மனப்பான்மைகள் கட்சியின் கூட்டுச் செயல்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. பதவிகளுக்கான மோதல்களோ அல்லது கட்சியின் மேல் மட்டத்திற்கான போட்டிகளோ ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இயைந்தவை அல்ல.
* மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுக்குமான தகவல் அளிப்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டுச் செயல்பாட்டை பலப்படுத்துவதற்கு அவசியமாகும்.
* மேலிருந்து கீழும், கீழிலிருந்து மேலுமாக எடுத்துரைப்பதில் உள்ள பலவீனங்கள் திட்டவட்டமாக அடையாளம் காணப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். கட்சியின் கூட்டான செயல்பாட்டை வலுப்படுத்தவும், திறமைமிக்க செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் இதனைச் செய்ய வேண்டும்.
* ஜனநாயக மத்தியத்துவத்தின் அமலாக்கத்திலுள்ள குறைபாடுகள், பலவீனங்கள், மீறல்கள் அனைத்தும் கட்சியின் ஒவ்வோர் மட்டத்திலும் அடையாளம் காணப்பட்டு பொருத்தமான வழிமுறைகளால் களையப்பட வேண்டும்.
* கட்சி மையமும், மாநிலக்குழுக்களும் பிரதான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகள் மற்றும் முக்கியமான கட்சி முடிவுகளை கட்சிக் கடிதங்களாக்கி அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றுக்கு விட வேண்டும். இது கீழ்மட்ட கிளைகளில் விவாதிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்பட வேண்டும்…
அகநிலை உணர்வு:
* அகநிலை உணர்வின் அடிப்படையிலான புரிதல் நமது வலிமையைக் குறித்தும், எதிரியின் வலிமையைப் பற்றியுமான தவறான மதிப்பீடுகளுக்கு இட்டுச் செல்கிறது. அகநிலை உணர்வு தனிநபர்வாதத்திற்கு இட்டுச் செல்கிறது. கட்சியின் வெவ்வேறு மட்டங்களில் அகநிலை உணர்வு மேலோங்கியிருக்கிறது. தேர்தல்களில் போட்டியிடுவது பற்றிய முடிவுகள் அல்லது மக்களின் மனநிலை, தேர்தல் முடிவுகள், சில நேரங்களில் ஊழியர் பற்றிய மதிப்பீடுகள் யதார்த்தங்களின் அடிப்படையில் அல்லாது அகநிலை உணர்வு அடிப்படையில் செய்யப்படுகின்றன.
தாராளவாதத்தை எதிர்கொள்ளுதல்
* தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதப் போக்கு ஆகும். அது ஜனநாயக மத்தியத்துவத்தைப் பலவீனப்படுத்தி அரசியல், தத்துவ, அமைப்புரீதியான பிரச்சனைகளில் கோட்பாடற்ற சமரசங்களுக்கு வழி வகுக்கிறது. கட்சி உறுப்பினர் எப்போதும் அரசியல், தத்துவார்த்த நிலைபாடுகளை, ஸ்தாபனக் கோட்பாடுகளை, கட்சியின் நடைமுறைகளை பற்றி நிற்க வேண்டும். தவறான கருத்துக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி கட்சியின் கூட்டு வாழ்வை சரியான அரசியல், தத்துவார்த்த நிலைபாடுகள், ஸ்தாபனக் கோட்பாடுகள், நடைமுறைகளின்பால் உறுதிப்படுத்திட வேண்டும்.
* தாராளவாதம் தத்துவார்த்தப் போராட்டத்தை நிராகரித்து அரசியல் சீரழிவைக் கொண்டு வருகிற கோட்பாடற்ற சமாதானத்தை முன்னிறுத்துகிறது. தவறான கருத்துக்களையும், கம்யூனிச எதிர்ப்பு விமர்சனங்களையும் மற்றவர்கள் முன் வைக்கும் போது அவற்றை மறுதலிப்பதற்கு கட்சி உறுப்பினர் எப்போதுமே முன்வர வேண்டும். சில தோழர்கள் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளத் தவறுவதோடு எதுவுமே நடக்காதது போல தாராள அணுகுமுறையோடு இருக்கிறார்கள். கட்சியின் அரசியல் தத்துவ நிலைபாடுகளை உயர்த்திப் பிடிப்பது ஒவ்வொரு கட்சி உறுப்பினரின் கடமையாகும்.
* கட்சியின் எல்லா மட்டங்களிலுமுள்ள அனைத்து வகையிலான தாராளவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியான போராட்டம் நடத்தப்பட வேண்டும்.
பிராந்திய வாதம்
* இந்தியா போன்று பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் … முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை எதிர்கொள்வதற்கு ஒருமித்த அரசியல் நிலைபாடும், அமைப்பு ரீதியான ஒழுங்கிணைவும் கொண்ட மையப்படுத்தப்பட்ட ஒரு கட்சி அவசியம். அப்படியொரு கட்சியைக் கட்டுகிற முயற்சி பிராந்தியவாதத்தால் பலவீனம் அடைகிறது. கட்சிக்குள் பிராந்தியவாதப் போக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சால்கியா பிளீனம் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைத்தது.
நாடாளுமன்றவாதம்
* தேர்தலிலும், கட்சிகளை நடத்துவதிலும், கார்ப்பரேட் வடிவ முறையில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் மிகப்பெருமளவில் பணம் பயன்படுத்தப்பட்டது; இது மார்க்சிஸ்ட் கட்சி, இடதுசாரி கட்சிகளின் தேர்தல் களச் செயல்பாட்டை மிகவும் சுருக்கி விட்டது. பெருமளவில் பணம் விளையாடுவதும், முதலாளித்துவ வர்க்கம் முதலாளித்துவ வர்க்க கட்சிகளுடனும், மேலிருந்து கீழே பஞ்சாயத்து தேர்தல் வரை உள்ள அதன் வேட்பாளர்களுடனும் பின்னி பிணைந்திருப்பதும் நமது கட்சியின் அரசியல் முன்னேற்றத்துக்கு கடுமையான பிரச்சனைகளை முன் வைக்கிறது. அத்தகைய சூழலில் நாடாளுமன்ற வாதத்திற்கு இரையாவது கட்சி ஸ்தாபனத்தை மேலும் அரித்து வலுவிழக்கச் செய்யும்.
* நாடாளுமன்றவாதம், மத்தியக்குழுவின் 1996 ஆம் ஆண்டின் நெறிப்படுத்தும் ஆவணம் கூறுவது போல, விரிந்த கோணங்களைக் கொண்டதாக உள்ளது.
* “நாடாளுமன்றவாதம் ஒரு திருத்தல்வாதக் கண்ணோட்டம் உடையதாகும். அது கட்சியின் நடவடிக்கைகளை தேர்தல் பணிகளோடு சுருக்குவதோடு, தேர்தல்களில் போட்டியிடுவதன் வாயிலாகவே கட்சியின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியுமென்ற பிரமையை உருவாக்குவதாகும். இது வெகுமக்கள் போராட்டங்களுக்கான திரட்டல்களை, கட்சி கட்டுவதை, தத்துவார்த்த போராட்டங்களை நடத்துவதை புறந்தள்ளுவதற்கு இட்டுச் செல்வதாகும். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயுமான பணிகளை ஒருங்கிணைத்து வெகுமக்கள் இயக்கங்களையும் அரசியல் போராட்டத்தையும் வலுப்படுத்த வேண்டும்.”
* எங்கெல்லாம் நாடாளுமன்றவாதப் போக்கு தென்படுகிறதோ அதை கவனத்துடன் கண்டறிந்து எதிர்த்து போராடுவது என்பது மிகவும் தேவையான ஒன்றாகும்.
* நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் நாம் மேற்கொள்ளும் இணை நடவடிக்கைகள் தற்போது உள்ள முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு மாற்றாக இடது ஜனநாயக அமைப்பினை கட்டுவதற்கான ஒரு சக்திமிக்க இயக்கத்தை உருவாக்க உதவிட வேண்டும்.
கட்சி தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி வலுவான பிரச்சார இயக்கத்தை கட்ட வேண்டும்; அதில் விகிதாச்சார பிரதிநிதித்துவ அமைப்பு வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருத்தல் வேண்டும். கார்ப்ரேட்டுகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களின் தாக்கத்தை எதிர்கொள்ள சமூக ஊடகங்களை பயன்படுத்துவதுடன் களத்திலேயே அதை எதிர்கொள்கிற புதிய புதிய பிரச்சார வழிமுறைகளை கண்டறிதல் வேண்டும்.
நெறிப்படுத்தும் பணி
* ஆண்டுதோறும் உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் பணியோடு இணைத்து நெறிப்படுத்தும் இயக்கம் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சி கமிட்டியும் மேல் கமிட்டிக்கு அதன் அறிக்கையினைக் கொடுக்க வேண்டும்.
* கட்சி உறுப்பினர்கள் முற்போக்கான விழுமியங்களை ஏற்றுக் கொண்டு பழமைவாதப் போக்கு, சாதிப்பற்று, ஆணாதிக்கப் போக்கு ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கம்யூனிச மாண்புகளை மீறிச் செயல்படுவோர், லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் கால கட்டத்தில் நெறிப்படுத்தும் இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
Leave a Reply