சி.பி.நாராயணன், ஆசிரியர், சிந்தா இதழ்.
(மலையாளத்தில் வெளியாகும் மார்க்சிய தத்துவ இதழான ‘சிந்தா’-வில் இடம்பெற்ற கட்டுரை தமிழில்)
மொழியாக்கம்: ஆர்.சுரேஷ்
இந்த ஆண்டு தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. தமிழ்நாடு பல மாநிலங்களுக்கும் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நாராயண குருவை மையப்படுத்திய அலங்கார ஊர்தி என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சங்கராச்சாரியாரை மையமாக கொண்டு அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தியுள்ளது. அதாவது நாராயண குருவை வைத்தால், சங்கராச்சாரியாரையும் வைக்க வேண்டும் என்றுள்ளது ஒன்றிய அரசு. ஆனால் கேரள மாநில அரசு அந்த வற்புறுத்தலை ஏற்கவில்லை. எனவே கேரள மாநில அரசின் ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறவில்லை.
நாராயணகுருவும், சங்கராச்சாரியாரும்:
நாராயண குருவும், சங்கராச்சாரியாரும் கேரளம் கொடுத்த இரண்டு ஆன்மீக தலைவர்கள். ஆனால் இந்தியாவின் மத நல்லிணக்கத்தையும், ஜனநாயகத்தையும் ஆராய்ந்து பார்த்தால், இந்த சமூகத்தில் சாதி வேற்றுமையையும், நால்வர்ணங்களையும் மக்களிடையே பரவலாக்குவதில், குறிப்பாக கேரளாவில் பரப்புவதில் சங்கராச்சாரியார் பிரதான பங்கினை வகித்துள்ளார். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தில் சாதி வேறுபாடுகளும், மத வேற்றுமைகளும் மேலோங்கி நின்றிருந்தன. ஆனால் வேதங்களையும், உபநிடதங்களையும் நன்கு படித்து ஆராய்ந்து அதற்கு எதிரான கராரான நிலைப்பாட்டை மேற்கொண்டவர் நாராயணகுரு.
சாதி, மத வேற்றுமை இல்லாமல் அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நாராயணகுரு, ‘மனிதர்களுக்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்’ என்ற புதிய கொள்கையை நிறுவினார். அப்படியே அவர் சங்கராச்சாரி நடைமுறைப்படுத்திய சாதி வேற்றுமையை எதிர்த்தும் வந்தார். சாதி, மதம் தொடர்பான ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகள், உலகமெங்கும் எழுந்துவந்த மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற புதிய முழக்கங்களுக்கும், அளவுகோல்களுக்கும் ஏற்றதாக இருந்தது. சங்கராச்சாரியாரின் நால்வருண போதனைகள், ஶ்ரீ நாராயணகுருவின் கோட்பாடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.
நால்வருண வேற்றுமைகளுக்கு எதிர்ப்பு:
இப்படியான சூழலில், பாஜக அரசு நாராயணகுருவை விலக்கிவிட்டு, சங்கராச்சாரியாரே கேரளாவின் அடையாளம் என்று கூறுவதற்கு முக்கியக் காரணம் உண்டு. கிருஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே, இந்திய துணைக்கண்டத்தில், மனிதர்களை வேற்றுமைப்படுத்தி பிரித்து வைக்கும் போக்கு இருந்து வந்தது. கேரளாவிலிருந்து தொடங்கி இந்தியா முழுமைக்குமே நான்கு வர்ணங்களும், வேறு பல வேற்றுமைகளும் மக்களின் மீது சுமத்தப்பட்டன. இதனைப் பரப்புவதில் சங்கராச்சாரியார் முதன்மையான பங்கினை வகித்தார். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பிற பகுதிகளில் பக்தி அமைப்புகளின் வடிவில் அதற்கு எதிரான பிரச்சாரங்களும் முழக்கங்கங்களும் எழுந்தன.
மீண்டும் 11-ம் நூற்றாண்டின் பாதியில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான முழக்கங்களும், பிரச்சாரங்களும் முதல் சுதந்திரப் போராட்டத்தில் இருந்து வலிமையடைந்தன. மனிதர்களை பலவாக பிரிக்கும் சாதி வேற்றுமைக்கு எதிரான போராட்டங்களும் அதில் அடங்கியிருந்தன. அந்த நூற்றாண்டின் கடைசியில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் பற்பல பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் இணைக்கின்ற புதிய கொள்கைகளோடு அறிமுகமானார். சங்கராச்சாரியார் முன்னெடுத்த நான்கு வர்ண தத்துவங்களையும், சாதி வேற்றுமைக் கொள்கைகளையும் சுவாமி விவேகானந்தர் ஏற்றுக்கொள்ளவில்லை.
விவேகானந்தரும், நாராயணகுருவும்:
ஆதி சங்கரரின் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்தவர்தான் சுவாமி விவேகானந்தர். அந்தக் காலத்தில் இந்திய சமூகத்தில் கொள்கை ரீதியாக பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. விவேகானந்தர் சுதந்திரமான கருத்துக்களை ஏற்பவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் சங்கராச்சாரியாரின் கருத்துக்களை அவருடைய காலத்தோடு பொருத்திப் பார்த்ததுடன், சந்தேகத்திற்கிடமின்றி நிராகரித்தார்.
ஶ்ரீ நாராயணகுருவும், விவேகானந்தரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். விவேகானந்தருக்கு பிறகு ஏறத்தாழ முப்பதாண்டுகள் கூடுதலாக செயல்பட்டார் நாராயணகுரு. இவர்கள் இருவருமே பிராமணிய சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவேதான் அவர்கள் சங்காராச்சாரியாரின் நால்வர்ணச் சிந்தனைகளை ஏற்காமல் இருந்தார்கள். அது மட்டுமல்ல, 19 ஆம் நூற்றாண்டின் கடைசியில், தென் இந்தியாவின் கடைக்கோடியில் இருந்து எழுந்த அய்யா வைகுண்டரின் போதனைகளும் பிராமணிய மதக் கோட்பாடுகளை கேள்வி கேட்பவையாகவும், எதிர்ப்பவையாகவும் இருந்தன. அய்யா வைகுண்டரின் போதனைகள், ஶ்ரீ நாராயண குருவை ஈர்ப்பதாகவும், ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தன.
இவர்களின் சிறப்பு என்னவென்றால், இந்து மத நம்பிக்கைகளுக்குள் மட்டும் சுருங்கிக்கொள்ளவில்லை. அதனை வெளிப்படுத்தக்கூடிய முழக்கம்தான் ‘மனிதனுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’.
நவீன இந்தியாவிற்கான நிலைப்பாடு:
இந்தக் கொள்கை, வேற்றுமையில் ஒற்றுமை என்ற சுதந்திர இந்தியாவிற்கு ஏற்ற நிலைப்பாடாக இருந்தது. அரசியலமைப்புச் சட்டம், அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதிப் படுத்துகின்றபோது, நாராயண குருவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமானதாகவும், சம வாய்ப்புக்களைக் கொடுப்பதாகவும் இருந்தன.
நாராயண குரு, ஒரு மதத்தின் கூண்டிலோ, ஜாதியின் கூண்டிலோ அடைபடாத ஒரு புதிய கொள்கையை பரப்பி, பதியச் செய்திருக்கிறார். இந்தக் கொள்கை, அன்றைய கேரளத்தின் இந்துச் சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லை. யாரும் யாருக்கும் மேலானவராகவோ, கீழானவராகவோ இல்லை என்ற அவருடைய நிலைப்பாட்டிற்கு உயர் சாதிகளிடமும், தாழ்த்தப்பட்டோரிடமும் ஆதரவு கிடைக்கவில்லை. அனைவரும் சமமானவர்கள் என்ற சமத்துவ சித்தாந்தத்தை எவரும் முதலில் அங்கீகரிக்கவில்லை. பிறகு கீழ் அடுக்கில் இருந்தவர்கள் (அவர்ணர்) மத்தியில் பொதுவான அங்கீகாரம் உருவானது. மேல் தட்டில் இருந்தவர் (சவர்ணர்) இதை ஏற்றுக் கொள்ல பல காலம் ஆனது.
நால்வருணமே ஆர்.எஸ்.எஸ் விருப்பம்:
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஶ்ரீ நாராயணகுருவின் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை. அவர்களுடைய விருப்பமான, நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து ராஷ்ட்டிரத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு ஒத்துழைப்புத் தேட முயன்றார்கள். அவர்கள் சிவகிரிக்குச் சென்று, ஶ்ரீ நாராயணகுருவின் அமைப்பை தங்கள் பக்கம் திருப்பிட முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் நால்வர்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துக்ககுக்கு, நாராயண குருவின் சிந்தனையும், அமைப்பும் எதிராகவே இருந்தன.
இந்துக்கள் அனைவரையும் தங்களுடைய பக்கம் கொண்டுவர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விருப்பத்திற்கு, நாராயணகுருவின் சிந்தனைகள் உதவாது என்பதால், அவருடைய உருவம் கொண்ட வாகனத்தைப் புறக்கணித்துவிட்டு, நான்கு வர்ணத்தைக் கட்டிப் பாதுகாக்கத் துணிந்த சங்கராச்சாரியாரை அடிப்படையாகக் கொண்டு ஊர்தி உருவாக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., பொறுத்தவரையில் அவர்கள் செய்ய விரும்புவதெல்லாம் ஒன்றுதான். இந்திய நாட்டினை இந்து ராஷ்ட்டிரமாக மாற்ற வேண்டும். நால்வர்ணக் கட்டமைப்பில் இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும். தற்போது மோடி அரசாங்கமும், பாஜகவும் வேகமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அதனை நோக்கியதாகவே உள்ளன. அதனால்தான் ஶ்ரீ நாராயணகுருவின் சித்தாந்தத்திற்கு எதிரான முயற்சிகளை மோடி அரசு நிர்ப்பந்திக்கிறது.
அடிமைத்தனத்தின் மீதே விருப்பம்:
குடியரசு தினம் என்பது, இந்திய அரசிலமைப்புச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட நாள் ஆகும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் முதல் பத்தியின் உள்ளடக்கம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெளிப்பட வேண்டுமென்றால், பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களும், அவைகளின் ஊர்திகளும் இடம்பெற்றிட வேண்டும். இவையெல்லாம்தான் குடியரசு தின அணிவகுப்பிற்கு உருவம் கொடுக்கிறது. கேரளத்தில் மட்டுமல்லாது, பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களின் அலங்கார ஊர்திகளையும், தங்கள் உத்தரவுக்கு மாறாக இருந்த காரணத்தால் ஒன்றிய அரசு நிராகரித்தது.
இந்த அலங்கார ஊர்திகளின் விசயத்தில் ஒன்றிய அரசாங்கம் தங்களுடைய விருப்பத்தினை மாநில அரசுகளின் மேல் சுமத்துகிறது. இந்த முரட்டுத்தனமான போக்கினால் ஒன்றிய அரசுக்கும் – மாநிலங்களுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வுப்போக்குகள்.
மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் விடுதலையையும், சுதந்திரப் போராட்ட தியாகங்களையும் அடையாளப்படுத்தும் அத்தகைய ஊர்தியின் சாரத்திற்கு மாறாக அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் வடிவமைப்புகளையே ஒன்றிய அரசாங்கம் விரும்பியது. தாங்கள் சொல்வதை அடிமைகளைப் போல மாநில அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது.
அதிகாரக் குவியலை அனுமதியோம்:
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே அரசு, ஒரே மக்கள் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு அதனை வேகமாக முன்னெடுக்கத் துடிக்கிறது ஒன்றிய அரசு. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கைப் பாரம்பரியத்தில் எழுச்சி பெற்ற இந்திய விடுதலைப் போராட்டம் எல்லோராலும் ஏற்கப்பட்டது. அதன் வெளிப்பாடாக அமைந்த அரசியலமைப்புச் சட்டமும், மாநில அரசாங்கங்களும், உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கேற்ப உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் பெற்றுள்ளன. அவைகள் அனைத்தையும் நிராகரித்து, தானே எடுத்துக்கொள்ள முயற்சிக்கிறது ஒன்றிய அரசாங்கம். அதனை நோக்கியே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், பாஜகவும் மிக வேகமாக காய்களை நகர்த்துகிறார்கள். இந்த அதிகாரக் குவியலுக்கு எதிராக கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்கள் நிற்கின்றன. குடியரசு தின விழாவில், அதிகார ஊர்திகளை மையப்படுத்தி எழுந்த பிரச்சனைக்கு இதுவே அடிப்படையாகும்.
Leave a Reply