மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சிஸ்ட் கட்சியும், மதுரை மாநாடுகளும் !


எஸ்.பி.ராஜேந்திரன்

“நமது எதிர்கால நடவடிக்கைகளின் விளைவாக இன்னும் ஆயிரக்கணக்கான புதிய உறுப்பினர்களை நமது கட்சி தமிழ்நாட்டில் ஆகர்ஷிக்கப் போவது நிச்சயம். கம்யூனிஸ்ட் கட்சியின் பரம்பரைக்கேற்ப ஒரு பலம் பொருந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த நெருக்கடிக்கும் சோதனைக்கும் பின் நமது நாட்டில் மலரப் போவது திண்ணம். அந்தக் கடமை பூர்த்தி செய்யப்படுவதில் நமது பங்கை உறுதியாக நிறைவேற்றுவோம் என்று சபதமேற்று இந்த மாநாட்டிலிருந்து செல்லுவோமாக!”

1964 ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 18 வரை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில ஏழாவது மகாநாட்டில் – உதயமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய அரசியல் ஸ்தாபன அறிக்கையின் கடைசி வரிகள் இவை.

அந்த மாநாடு தீர்க்கதரிசனமாக தீர்மானம் போட்டதைப் போலவே இன்று தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் அணிகளும் பல லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. இந்த மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட ஏழாவது மாநாடு – தமிழ் நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான மாநாடு நடைபெற்ற இடம், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியால் “இந்தியாவின் மகத்தான புரட்சி மையங்களில் ஒன்று” என்று வர்ணிக்கப்பட்ட மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.
1964 ஏப்ரலில், மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டைப்போல பல்வேறு மாநிலங்களில் மாநாடுகள் நடைபெற்று, அதன் உச்சக் கட்டமாக கல்கத்தாவில் 1964 அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழாவது அகில இந்திய மகாநாட்டில் (கட்சியின் ஏழாவது காங்கிரஸ்) இந்திய புரட்சியின் உறுதிமிக்க திட்டங்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது. எனவே 1964 மதுரை மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும், தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும் முத்திரைப் பதித்த மாநாடு ஆகும்.
அதற்கு முன்பும், பின்பும் தமிழக அரசியல் வரலாற்றில் மதுரையின் பங்கும், மதுரை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கும் அளப்பரியது. மதுரையில் நடைபெற்ற மாநாடுகள் ஏற்படுத்திய அதிர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுமிக்க புரட்சிகர ஸ்தாபனமாக கூர்மைப்படுத்தி கொண்டு செல்வதில் மதுரை மாநாடுகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சி உதயத்திற்கு முன்பு 1953 டிசம்பர் 27ல் துவங்கி 1954 ஜனவரி 4 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு மிகப் பிரம்மாண்டமான முறையில் மதுரையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பின்பு 1972 ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை கட்சியின் ஒன்பதாவது அகில இந்திய மாநாடு மிகப்பெரும் எழுச்சியுடன் நடைபெற்றது. இதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து 2008ல் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இந்த மாநாடுகளின் வரிசையில் 2022 மார்ச் 30,31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவிருக்கிறது. வலதுசாரி பிற்போக்குவாத பாசிச சக்திகள் இந்தியாவின் ஒன்றிய ஆட்சியிலும் பல்வேறு மாநில ஆட்சிகளிலும் அமர்ந்து அட்டூழியங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் மிகக் கடுமையான அரசியல் சூழலில்; தமிழகத்திலும் மதவெறி சக்திகள் காலூன்ற துடிக்கும் சூழ்ச்சிகரமான அரசியல் பின்னணியில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கும் தொடர்ந்து இடதுசாரி ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும் திட்டமிட வேண்டிய மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றுகிற மாநாடாக மதுரையில் நடைபெறவுள்ள 23 ஆவது மாநாடு அமையவுள்ளது.

1954ல் மதுரையில் நடைபெற்ற 3ஆவது அகில இந்திய மாநாடு, சர்வதேச அரங்கில் கொரிய யுத்தம் நடந்து முடிந்து 1953 ஜூலை 23ல் சோவியத் ஒன்றியம் மற்றும் மக்கள் சீனத்தின் ஒன்றுபட்ட தலையீடுகள் அமைதி முயற்சிகளின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளை பின்வாங்கச் செய்து, கொரியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்த மகத்தான நிகழ்வுகளை உலக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திக் காட்டிய பின்னணியில் உணர்ச்சிப் பெருக்குடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் ஹாரி பாலிட் கலந்து கொண்டது, அன்றைய நாளில் மதுரையில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. அந்த மாநாட்டுக் காட்சியை 1954 ஜனவரி 3 அன்று வெளியான கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ஜனசக்தி உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்திருக்கிறது. “அலை கடலென ஜன சமூகம் கொந்தளித்து ஆரவாரம் செய்கிறது. தலைவர்கள் இதோ ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்து விட்டார்கள். வீராவேசம் கொண்ட மதுரை மக்கள், தம் உரம் கொண்ட கரங்களை உயர்த்தி வாழ்த்தொளி முழங்குகிறார்கள். முரசங்கள் அதிர்ந்தன. தாரை, தப்பட்டை, பறைகள் ஒலித்தன. அதிர் வெடிகள் விடப்பட்டன. தலைவர்கள் கைகளை உயர்த்தி மதுரை மக்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். ஈடு இணையற்ற வரவேற்பை கண்டு உணர்ச்சிப்பெருக்கும், உற்சாகப்பூரிப்பும் அடைந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி காரியதரிசி தோழர் ஹாரி பாலிட் மதுரை மக்களுக்கு நன்றி தெரிவித்து சொற்பொழிவு ஆற்றினார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் பொருந்திய மூன்றாவது காங்கிரஸ் கூடும் இச்சமயத்தில் பிரிட்டிஷ் மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்தியாவின் ஜனநாயக சக்திகள் அனைத்தையும் இயக்குவிக்கும் சாவியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விளங்கப் போகிறது” என்று பேசி முடித்தார்.

ஹாரி பாலிட்டின் வார்த்தைகளும் தீர்க்கதரிசனமிக்கவை. இன்றைக்கும் இந்தியாவில் ஜனநாயக சக்திகளை எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று அழைத்துச் செல்கிற மகத்தான பணியை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்து கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.

299 பிரதிநிதிகள் பங்கேற்ற மூன்றாவது அகில இந்திய மாநாட்டில் இலங்கையிலிருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் கோஷ், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றிய உரைகள் மதுரை பாட்டாளி வர்க்கத்தை பெரும் எழுச்சிக் கொள்ளச் செய்தது. மூன்றாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1948ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு 1950ல் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மூன்றாண்டு காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது நாடு முழுவதும் தாக்குதல்கள் ஏவப்பட்டன. இவற்றையெல்லாம் உறுதியுடன் எதிர்கொண்டு, தடைக் காலத்தில் நடந்த கொடுமைகளையெல்லாம் துணிவுடன் எதிர்கொண்டு உறுதியாக எழுந்து நின்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. நேருவின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சோவியத் பாணியில் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. முதலாவது ஐந்தாண்டு திட்டம் அமலாக துவங்கியிருந்தது. ஆனால் நிலப் பிரபுத்துவ- முதலாளித்துவ அரசாங்கம் அமலாக்கிய அந்தத் திட்டம் இந்த நாட்டில் நிரந்தரமான தீர்வுகளை ஏற்படுத்தி விடாது என்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் கூறியது.

மூன்றாவது அகில இந்திய மாநாடு, கட்சி மீதான தடை மற்றும் தலைமறைவு காலங்களுக்கு பிறகு கூடிய முதல் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில்தான் முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 1954 ஏப்ரலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, கட்சியின் நகல் திட்டத்தை தயாரித்து, அது நாடு முழுவதும் கட்சிக் கிளைகள் வரையிலும் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. அதைத் தொடர்ந்து 1951 அக்டோபரில் கல்கத்தாவில் அகில இந்திய சிறப்பு மாநாடு நடத்தப்பட்டு, நாடு முழுவதும் இருந்து வந்திருந்த திருத்தங்கள் மற்றும் கருத்துக்கள் இறுதி செய்யப்பட்டன. இறுதி செய்யப்பட்ட நகல் திட்டம், மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் திட்டம்தான் முற்றிலும் முற்போக்கான ஓர் இந்தியா, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உருவானால் எப்படி இருக்கும் என்ற சித்திரத்தை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தியது.

கட்சித் திட்டம் மட்டுமல்ல, கட்சி அமைப்பு (ஸ்தாபனம்) தொடர்பான தீர்மானத்தையும், மூன்றாவது மாநாடு நிறைவேற்றியது. இந்த தீர்மானம் முன்னதாக அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள அம்சங்கள்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனங்கள் நாடு முழுவதும் வலுப்படுத்துவதற்கான அடிப்படை ஸ்தாபன விதிகளாக அமைந்தன.

இந்தத் தீர்மானம் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை விரிவாக ஆய்வு செய்து, பலவீனங்களை களைந்து வலுவான கட்சியாக கட்டப்படுவதற்காக வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்தது.

(1) முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கருத்தியல்புகளுக்கு எதிரான இடைவிடாதப் போராட்டம்;

(2) கட்சியின் பிரதான அடித்தளமாக இருக்கும் தொழிலாளி – விவசாயி ஒற்றுமை;

(3) விமர்சனம் மற்றும் சுய விமர்சனம், குறிப்பாக கட்சி அணிகளின் கீழ்மட்டத்திலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனத்தின் முக்கியத்துவத்தை உள்வாங்கிக் கொள்ளும் வகையிலான ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள்;

(4) அனைத்துக் கிளைகளிலும் கூட்டுச் செயல்பாடு என்ற கோட்பாட்டை உறுதியாக செயல்படுத்துவது – ஆகிய நான்கு அம்சங்களுக்கும் கட்சியின் அமைப்பை பலப்படுத்துவதற்கான இடையிலான மிக நெருங்கிய தொடர்பை இத்தீர்மானம் விரிவாக முன்வைத்தது.

இந்த மாநாடு நிறைவேற்றிய திட்டத்தின் அடிப்படையிலும் ஸ்தாபன தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர இந்தியாவில் தனது புரட்சிகரப் பயணத்தை துவக்கியது. அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் எத்தனை எத்தனை போராட்டங்கள்; எத்தனை எத்தனை அடக்குமுறைகள்; 1957ல் கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி ஆட்சி தோழர் இஎம்எஸ் தலைமையில் அதிகாரத்திற்கு வந்ததுபோன்ற பிரம்மாண்டமான வெற்றிகள். இவை அத்தனைக்கும் மதுரை மாநாடு வித்திட்டது என்றால் மிகையல்ல.
இதன் பின்னர் மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான 1964 தமிழ் மாநில மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் ஸ்தாபன அறிக்கை, அன்றைய சூழலில் கட்சிக்குள் வளர்ந்த சீர்திருத்தவாதம், எப்படி கட்சியையே விழுங்கும் அளவிற்கான திருத்தல் வாதமாக தலையெடுத்தது என்பதையும் அதை கட்சிக்குள்ளேயே இருந்து நிதானமாகவும், மார்க்சிய – லெனினிய வழியில் நின்று போராடி, அதன் உச்சக் கட்டமாக மார்க்சிய லெனினிய வழியில் இந்தியப் புரட்சியை தலைமை தாங்கி நடத்துவதற்கான உறுதிமிக்க பாட்டாளி வர்க்க கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எப்படி உதயமானது எனும் உட்கட்சி வரலாற்றை விரிவாக விவாதிக்கிறது.

கட்சிக்குள் திருத்தல்வாதம் வேரெடுத்த சூழ்நிலையை அந்த அறிக்கை ரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறது: “சுதந்திர இந்தியாவில் அரசியல் அதிகாரம் பெற்ற முதலாளி வர்க்கம், ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் துரிதமாக வளர முற்பட்டது. புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டன. அணைக்கட்டுகள் பல தோன்றின. மின்சார வசதி அதிகரித்தது. ரோடுகள் எங்கும் பரவின. தேசிய விஸ்தரிப்புத் திட்டம். சமுதாய நல அபிவிருத்தித் திட்டம் என்ற பெயர்களுடன் பணப்புழக்கம் கிராமங்களில் மேலும் நுழைந்தது. முதலாளித்துவ வளர்ச்சி பல கிராமங்களுக்கும் சென்றது. தொழிலபிவிருத்திக்கெனத் துவக்கப்பட்ட புதிய நிதி நிறுவனங்களின் மூலம் வசதியோ செல்வாக்கோ இருந்தவர்கள் கையில், பண நடமாட்டத்திற்கு சௌகரியம் கிடைத்தது. லைசென்சுகள் பெர்மிட்டுகளுடன் லஞ்சலாவண்யங்களும் பலவிதத் தரகர்களும் தோன்றினர். திட்ட நடவடிக்கைகளில் பிரதானமாக மேல் தட்டு வர்க்கங்களே பலன் பெற்றாலும் ஆங்காங்கு சில மத்திய தர வர்க்கப் பகுதிகளுக்கும் சிறு ஆதாயம் கிடைத்தது. தொழிலாளிகளில் ஒரு பகுதியினரும், குறிப்பாக அவர்களது சங்கங்கள் பலமாயிருந்த தொழில்களில், இதர தொழிலாளிகளோடு ஒப்பிடும் போது, சில சலுகைகளையும், ஓரளவுக்கு ஊதிய உயர்வையும் பெற முடிந்தது. பல தொழிலதிபர்கள் ஏற்பட்டார்கள். கிராமப்புறங்களில் பணக்கார விவசாயிகளின் பகுதி உரம் பெற்றது.

ஐந்தாண்டுத் திட்டங்களினால் ஏற்பட்ட முரண்பாடு மிக்க இந்த முதலாளித்துவ வளர்ச்சியை, காங்கிரஸ் கட்சியும் சர்க்காரும் பெரிய சாதனையாக ஓயாமல் வர்ணித்தனர். அன்றாட ரேடியோச் செய்திகள் மூலமும, அறிக்கைகளின் மூலமும், எண்ணற்ற வெளியீடுகளின் மூலமும் பார்லிமெண்டையும் சட்டசபைகளையும் இதற்கு நன்கு பயன்படுத்துவதின் மூலமும நாட்டின் சுபீட்சத்திற்கு இவ்வாறு வழி செய்துள்ளதாக மிக வன்மையாகப் பிரச்சாரம் செய்தனர். திட்ட நடவடிக்கைகளினால பலனடைந்த முதலாளி வர்க்கமும் அதன் பத்திரிகைகளும் இதற்கு ஒத்து ஊதும் முறையில், தங்களுக்குக் கிடைத்த சுபீட்சத்தை நாடு பூராவிற்கும் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியாக வர்ணித்து விளம்பரப்படுத்தத் தவறவில்லை.

சுதந்திரமடைந்த பிறகு இந்தியாவில் ஏற்பட்ட இந்தப் புதிய முதலாளித்துவ வளர்ச்சியும் விஸ்தரிப்பும்தான் மக்களின் பல பகுதிகளிடையே இதைப்பற்றிப் பல பிரமைகள் ஏற்படுத்துவதற்கு இடமளித்தது. இதே புறநிலைதான் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் இந்தப் பிரமைகள் படையெடுத்துத் திருத்தல் வாதம் தோன்றி வளர்வதற்கு அனுசரணையாயிருந்தது.”
இத்தகைய பின்னணியில் கட்சிக்குள் தலைதூக்கிய சீர்திருத்தவாதம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக பல்லாண்டு காலம் நடந்த உட்கட்சிப் போராட்டத்தின் முடிவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமானது.

இதை விவரிக்கும் 1964 மதுரை மாநாட்டு அரசியல் ஸ்தாபன தீர்மானம், கட்சிக்குள் திருத்தல்வாதம் தீவிரமடைந்திருந்த சூழலில் கட்சி ஸ்தாபனத்திற்குள் நுழைந்த கட்சி விரோதப் போக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டு சுட்டிக்காட்டியது: “கூட்டங்களுக்கு சரியாக வராமலிருத்தல், வெகுஜன ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாக இருந்து அவற்றில் பணிபுரிவதை தட்டிக்கழித்தல், ஓயாது ஏதாவது அரசியல் பேசுவதோடன்றி எத்தகைய உருப்படியான கட்சி வேலைகளை நிறைவேற்றாமல் இருத்தல், பத்திரிகை, பிரசுரங்களை படிக்காமலும், பரப்பாமலும் இருத்தல், கொள்கையை பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும், அதற்காக போராடுவதிலும் அசிரத்தை, கட்சிக்கு நிதி கொடுக்காமல் காலம் கடத்துதல், கட்சி ஸ்தாபன கோட்பாடுகளுக்கு புறம்பாக யாரிடமும் எங்கும் எதையும் பேசுதல், கட்சி முடிவுகளையும் தனது யூனிட் முடிவுகளையும் நிறைவேற்றாமல் இருத்தல்” ஆகிய சீரழிவுகள் ஸ்தாபனத்தை செயல்படவிடாமல் தடுக்கும் விதத்தில் உள்ளிருந்தே கட்சியை அரித்து தின்றுகொண்டிருந்தன என்கிறது அந்தத் தீர்மானம்.

இப்பின்னணியில் 1990 களுக்குப் பிறகு அமலுக்கு வந்த நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சூழலில் அதிதீவிரமாக வளர்ந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் விளைவாக கட்சி ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளில் பற்றுருதியுடன் கூடிய புரட்சியின் மீதான நம்பிக்கை கொண்ட கட்சி உறுப்பினர்களை வளர்த்தெடுப்பதன் அவசியத்தையும் கொல்கத்தா பிளீனம் கவனப்படுத்துகிறது.

மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை புரிந்து கொள்ளாமலும், புரட்சியின் மீது நம்பிக்கையோ பிடிப்போ இல்லாமலும் இன்றைக்கும் கூட கட்சி ஸ்தாபனத்தில் இத்தகைய போக்குகள் பல்வேறு வடிவங்களில் நீடித்து வருகின்றன என்பதை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. இவை புரட்சியின் பாதை எது என்ற தத்துவார்த்த மோதல் நடந்த காலக்கட்டத்தில் மட்டுமல்ல, இந்தியப் புரட்சிக்கான பாதை மிகத்தெளிவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும், 1990களுக்குப் பிறகு அமலுக்கு வந்த நவீன தாராளமய கொள்கைகளின் தீவிர அமலாக்கம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகச் சூழலில் அதிதீவிரமாக வளர்ந்துள்ள நுகர்வுக் கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் விளைவாக மேற்கண்ட திருத்தல்வாதப் போக்குகளுக்கு இணையான சீர்குலைவு போக்குகள் தலைதூக்கி உள்ளன என்பதை கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டுகிறது.

மதுரை மாநாட்டு தீர்மானம் மற்றொரு மிக முக்கிய அம்சத்தை விளக்கியுள்ளது. திருத்தல்வாதத்திற்கு எதிரான உட்கட்சிப் போராட்டத்தில் தமிழகத்தில் மதுரை கட்சித் தோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு முன்னணியில் நின்று, மார்க்சிய – லெனினிய பாதையில் கட்சியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள் என்பதை மாநாடு விவரிக்கிறது: “திருத்தல்வாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. மதுரை மாவட்ட கட்சித் தோழர்கள் இதில் முக்கியப் பங்கு வகித்து திருத்தல்வாத தலைமையின் கோபத்திற்கும் உருட்டல் மிரட்டல்களுக்கும் ஆளானார்கள்… ஆனால் இவை அனைத்தும் மதுரை கட்சி ஸ்தாபனத்தால் உறுதியாக முறியடிக்கப்பட்டன.”

இந்த நடவடிக்கைகளில் கோவை கட்சி தோழர்களும், கன்னியாகுமரி, தென்னாற்காடு, வடஆற்காடு, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் கட்சித் தோழர்களும் உறுதியாக நின்று ஸ்தாபனத்தைப் பாதுகாத்தார்கள் எனவும் மதுரை மாநாட்டுத் தீர்மானம் பாராட்டுகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக கட்சி ஸ்தாபனத்தை பாதுகாப்பதிலும், அதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனும் ஸ்தாபனத்தை உருவாக்கிடவும் வடிவமைக்கவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் ஏ.கே.கோபாலன் அவர்கள் இங்கேயே தங்கியிருந்தும், 1962 காலக்கட்டங்களில் தலைமறைவாக செயல்பட்டும் வழிகாட்டினார் என்பதை விவரிக்கும் அத்தீர்மானம், ஏ.கே.ஜி.க்கு செவ்வணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்திருக்கிறது. அதேபோல எல்லா நடவடிக்கைகளிலும் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களது ஈடு இணையற்ற பங்கு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை கட்சியின் முதலாவது மாநாடு நடைபெற்ற மதுரை பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உதயமான பிறகு, இக்கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்டிருப்பதைப் போல தமிழ்நாட்டில் லட்சோபலட்சம் மக்களை தனது போராட்ட அலைகளால் ஈர்த்தது. அதன் மையங்களாக மதுரையும் கோவையும் தஞ்சை பூமியும் கன்னியாகுமரி உள்ளிட்ட பிரதேசங்களும் அமைந்திருந்தன. சென்னையில் தொழிற்சங்கம் வலுப்பெறத் துவங்கியது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் 1972 ஜுன் 27 முதல் ஜூலை 2 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -ன் 9வது அகில இந்திய மாநாடு மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி மதுரையை குலுக்கியது.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் 1967 காலக்கட்டத்தில் கட்சிக்குள் எழுந்த இடது அதீதிவிரவாத போக்கின் விளைவாக ஏற்பட்ட நாசங்களை சுட்டிக்காட்டி, அது எப்படித் தோல்வி அடைந்தது என்பதை விவரிக்கிறது. 1969-71 காலத்தில் வங்கத்தில் நக்சலைட்டுகள் குட்டி முதலாளித்துவ சக்திகளோடு இணைந்து கொண்டு; அமெரிக்க சிஐஏ உளவாளிகள் மற்றும் போலீஸ் ஏஜெண்டுகளின் கைக்கூலியாக மாறி இடதுசாரிகளை, குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 650க்கும் மேற்பட்டோரை கொடூரமாக படுகொலை செய்த பயங்கரங்களையும் விவரிக்கிறது. அதுமட்டுமல்ல, வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் அரை பாசிச பயங்கரத்தைப் பற்றியும் அரசியல் தீர்மானம் விவரிக்கிறது. இத்தகைய தாக்குதல்களை எதிர்கொண்டுதான் வங்கத்தில் கட்சி மிகப்பிரம்மாண்டமாக எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

9வது அகில இந்திய மாநாட்டின் தீர்மானம் வங்கத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் ஐக்கிய முன்னணி தந்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகச்சரியான மார்க்சிய – லெனினியப் பாதையில் செல்கிறது; ஆகவேதான் அதிதீவிர இடதுசாரிகளும் வலதுசாரிகளும் சேர்ந்து நமது கட்சியைத் தாக்குகிறார்கள்; எத்தனை தாக்குதல்கள் வந்த போதிலும் நமது கட்சி நமது சொந்த வர்க்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து விசுவாசமாக பணியாற்றும்; நமது நாட்டின் திட்டவட்டமான சூழ்நிலைமைகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற விதத்தில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளை அமலாக்கும் என்று அத்தீர்மானம் அறைகூவல் விடுத்தது.

கட்சியின் மேற்கண்ட 9வது மாநாட்டில், கட்சித் திட்டத்தில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1968 டிசம்பரில் 25ல் கீழவெண்மணியில் 44 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கொடூரமாக எரித்துப் படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்திற்குப் பிறகு நடைபெற்ற மாநாடு இது என்பதால் தஞ்சை தரணியிலிருந்து ஏராளமான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மதுரை மாநாட்டுப் பேரணியில் குவிந்தார்கள். கீழவெண்மணி தியாகிகள் ஜோதி தமுக்கம் மைதானத்தில் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யாவால் ஏற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு குறித்த மிக முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் மற்றும் தீர்மானங்கள், கட்சித் திட்டம் மற்றும் திருத்தப்பட்ட திட்டம் போன்ற அனைத்தும் பல நூறு பக்கங்கள் கொண்டவை. மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்தான் இன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) -யின் இயக்கு சக்திகளாக திகழ்ந்துகொண்டிருக்கின்றன என்றால் மிகையல்ல. அந்த அடிப்படையில் மதுரை மாநாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலங்கரை விளக்கங்கள்; அதன் நீட்சியாக, புதிய சவால்களை எதிர்கொள்ள வியூகங்கள் வகுக்கும் மாநாடு 2022 மார்ச் மாதம் மதுரையில் கூடுகிறது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: