பிரெடெரிக் எங்கெல்ஸ்
நூல் வாங்குவதற்கு: Buy NOW
மூன்றாம் பகுதி சுருக்கம்
தமிழில்: சிவலிங்கம்
பகுதி 3
[விஞ்ஞான சோசலிசம்]
… வரலாற்றில் உருவாகி வந்த ஒவ்வொரு சமுதாயத்திலும், செல்வம் வினியோகிக்கப்படும் முறையும், சமுதாயம் வர்க்கங்கள் அல்லது படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் முறையும்,
[அந்தச் சமுதாயத்தில்] என்ன உற்பத்தி செய்யப்படுகிறது,
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது,
உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எவ்வாறு பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன என்பதைச் சார்ந்தே உள்ளன.
வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்துரு, இந்த வரையறுப்பிலிருந்தே தொடங்குகிறது.
இந்தக் கண்ணோட்டத்தின்படி, அனைத்துச் சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, வினியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல.
அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதாரவியலில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, தத்துவத்தில் அல்ல. தற்போது நிலவும் சமூக நிறுவனங்கள் நியாயமற்றவையாகவும், நேர்மையற்றவையாகவும் இருக்கின்றன, நியாயம் அநியாயமாகவும், தர்மம் அதர்மமாகவும் மாறி விட்டன* என்கிற மன உணர்வு [நாளுக்குநாள்] வளர்ந்து வருகிறது.
[அனைவரும் அறிய] வெளிக்கொணரப்பட்டுள்ள இந்த முரண்பாடுகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும், மாறிவிட்ட இந்த உற்பத்தி முறைகளுக்குள்ளேதான், ஏறத்தாழ வளர்ச்சிபெற்ற நிலையில் இருந்தாக வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த வழிமுறைகள், அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து தருவிப்பதன் மூலம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட (invented) வேண்டியவை அல்ல. தற்போது நிலவும் உற்பத்தி அமைப்புமுறையின் மறுக்க முடியாத உண்மைகளிலிருந்தே கண்டறியப்பட (discovered) வேண்டியவை.
அப்படியெனில், இது தொடர்பாக நவீன சோசலிசத்தின் நிலைபாடு என்ன?
சமுதாயத்தின் தற்போதைய கட்டமைப்பு,, இன்றைய ஆளும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கம் தோற்றுவித்ததாகும். …
… முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறிந்து, அதன் இடிபாடுகள் மீது முதலாளித்துவச் சமுதாய அமைப்பை நிறுவியது. கட்டற்ற [வணிகப்] போட்டி, தனிமனித சுதந்திரம், சட்டத்தின் முன் சரக்குடைமையாளர்கள் அனைவருக்குமான சமத்துவம், ஏனைய மீதமுள்ள அனைத்து முதலாளித்துவ அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் சாம்ராஜ்யமாய் அது விளங்கியது.
அதனைத் தொடர்ந்து, முதலாளித்துவ முறையிலான உற்பத்தி [தங்கு தடையின்றி] சுதந்திரமாக வளர முடிந்தது. நீராவியும், எந்திர சாதனங்களும், எந்திரங்களைக் கொண்டே எந்திரங்களைத் தயாரித்தலும், பழைமையான பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றியமைத்தன.
அதன்பிறகு, முதலாளித்துவ வர்க்கத்தின் வழிகாட்டுதலில் பரிணமித்த உற்பத்திச் சக்திகள், இதற்குமுன் கண்டு கேட்டிராத வேகத்திலும், அளவிலும் வளர்ச்சி பெற்றன.
…இப்போது நவீனத் தொழில்துறையானது, அதன் முழுமையான வளர்ச்சி நிலையில், முதலாளித்துவ உற்பத்திமுறை தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வரம்புகள் மீது முட்டி மோதுகிறது. புதிய உற்பத்திச் சக்திகளோ அவற்றைப் பயன்படுத்திவரும் முதலாளித்துவ முறையை விஞ்சி ஏற்கெனவே வளர்ந்துவிட்டன. உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி முறைக்கும் இடையேயான இந்த மோதல், ஆதிப் பாவத்துக்கும் தெய்வ நீதிக்கும் இடையேயான மோதலைப் போன்று, மனிதனின் மனத்திலே உதித்தெழுந்ததல்ல. உண்மையில் இம்மோதல், புறநிலை ரீதியாக, நமக்குப் புறத்தே, இம்மோதலை உருவாக்கிய மனிதர்களின் எண்ணத்தையும் செயல்களையும்கூடச் சாராமல் சுயேச்சையாய் நிலவுகிறது.
நவீன சோசலிசம் என்பது, உண்மையில் இந்த மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. முதற்கண், இந்த மோதலால் நேரடியாகப் பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே அன்றி வேறல்ல.
சரி, இந்த மோதல் எதில் அடங்கியிருக்கிறது?
… தொழில்துறை முதலில் எளிய கூட்டுறவு அமைப்பாகவும், பட்டறைத் தொழிலாகவும் மாறுதல் அடைகிறது. இதுநாள்வரை சிதறிக் கிடந்த உற்பத்திச் சாதனங்கள் பெரிய தொழில்கூடங்களாய் ஒன்றுகுவிக்கப்படுகின்றன. அதன் விளைவாக, தனிநபரின் உற்பத்திச் சாதனங்களாய் இருந்தவை, சமூக உற்பத்திச் சாதனங்களாக மாற்றப்படுகின்றன. ஆனால், இந்த மாற்றம், மொத்தத்தில் பரிவர்த்தனையின் வடிவத்தைப் பாதிக்கவில்லை. கைவசப்படுத்தலின் பழைய வடிவங்கள், மாற்றமின்றி அப்படியே நடைமுறையில் உள்ளன. முதலாளி தோன்றுகிறார். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர் என்ற தகுதியில், உற்பத்திப் பொருள்களையும் தாமே கைவசப்படுத்திக் கொண்டு அவற்றைச் சரக்குகளாய் மாற்றுகிறார். உற்பத்தி, சமூகச் செயலாய் ஆகிவிட்டது. பரிவர்த்தனையும் கைவசப்படுத்தலும் தனிப்பட்ட செயல்களாக, அதாவது தனிநபர்களின் செயல்களாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமூக உற்பத்திப் பொருள் தனிப்பட்ட முதலாளியால் கைவசப்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படை முரண்பாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டுதான், நம்முடைய இன்றைய சமுதாயம் உழல்கின்ற, நவீனத் தொழில்துறை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்ற, அனைத்து முரண்பாடுகளும் உதித்தெழுகின்றன.
(அ) உற்பத்தியாளர் உற்பத்திச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்படுகிறார். தொழிலாளி வாழ்நாள் முழுவதும் கூலியுழைப்பில் உளையச் சபிக்கப்படுகிறார். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையேயான பகைமை [உருவாகிறது].
(ஆ) சரக்குகளின் உற்பத்தியை ஆட்சி புரியும் விதிகளின் மேலாதிக்கம் வளர்கிறது; அவற்றின் பயனுறுதி அதிகரிக்கிறது. கட்டுப்பாடற்ற போட்டி. தனிப்பட்ட ஆலையில் [உற்பத்தியின்] சமூகமயப்பட்ட ஒழுங்கமைப்புக்கும், ஒட்டுமொத்த உற்பத்தியில் சமூக ஒழுங்கின்மைக்கும் இடையேயான முரண்பாடு [தோன்றுகிறது.[
(இ) ஒருபுறம், போட்டியானது, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரும் எந்திர சாதனங்களைச் செம்மைப்படுத்துவதைக் கட்டாயமாக்குகிறது. அதன் உடன்விளைவாகத் தொழிலாளர்கள் வேலையிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. [அதனால்] தொழில்துறை சேமப் பட்டாளம் [உருவாகிறது]. மறுபுறம், போட்டியின் விளைவாக, உற்பத்தியின் வரம்பில்லா விரிவாக்கம் ஒவ்வோர் உற்பத்தியாளருக்கும் கட்டாயமாகிறது. இவ்வாறு, இருபுறமும், இதற்குமுன் கேட்டிராத அளவுக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, தேவைக்கு மிஞ்சிய வரத்து, மிகை உற்பத்தி, சந்தைகளில் [தேவைக்கதிகச் சரக்குகளின்] தேக்கநிலை, ஒவ்வொரு பத்தாண்டிலும் நிகழும் நெருக்கடிகள், நச்சு வட்டம்; இங்கே உற்பத்திச் சாதனங்கள், உற்பத்திப் பொருள்களின் மிகை – அங்கே வேலைவாய்ப்பின்றி, பிழைப்புச் சாதனங்களின்றித் தவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகை. ஆனால், உற்பத்திக்கும் சமூக நல்வாழ்வுக்குமான இவ்விரு உந்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. காரணம், முதலாளித்துவ உற்பத்தி முறை உற்பத்திச் சக்திகளைச் செயல்படவிடாமல் தடுக்கிறது; உற்பத்திப் பொருள்கள் முதலில் மூலதனமாக மாற்றப்படாவிட்டால், அவற்றைச் சுற்றோட்டத்தில் செல்லவிடாமல் தடுக்கிறது. [ஆனால்] அதே உற்பத்திப் பொருள்களின் மிகைநிறைவுதான் அவை மூலதனமாய் மாற்ற முடியாதபடி தடுக்கின்றது. இந்த முரண்பாடு ஓர் அபத்தமாய் வளர்ந்துவிட்டது. உற்பத்தி முறை பரிவர்த்தனை முறைக்கு எதிராகக் கலகம் புரிகின்றது. முதலாளித்துவ வர்க்கத்தினர் அவர்களின் சொந்தச் சமூக உற்பத்திச் சக்திகளையே தொடர்ந்து நிர்வகிக்க இயலாத தகுதியின்மைக்காகக் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
(ஈ) உற்பத்திச் சக்திகளின் சமூகத் தன்மையை, பகுதி அளவுக்கு அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் முதலாளிகளுக்கே ஏற்படுகிறது. உற்பத்திக்கும் தகவல்தொடர்புக்குமான மாபெரும் நிறுவனங்களை முதலில் கூட்டுப் பங்கு நிறுமங்களும், பிறகு பொறுப்பாண்மை அமைப்புகளும், அதன்பின் அரசும் உடைமையாக்கிக் கொள்கின்றன. முதலாளித்துவ வர்க்கம் தான் தேவையற்ற ஒரு வர்க்கம் எனத் தெளிவுபடுத்திக் காட்டிவிட்டது. அதனுடைய சமூகப் பணிகள் அனைத்தையும் தற்போது சம்பள அலுவலர்களே செய்து முடிக்கின்றனர்.
III. பட்டாளி வர்க்கப் புரட்சி – முரண்பாடுகளுக்கான தீர்வு [காணப்படுகின்றது]. பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயப்பட்ட உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுநாள்வரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் சமூகத் தன்மை தானே தீர்வு கண்டுகொள்ள முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது. … தனக்கே உரிய சமூக நிறுவன வடிவத்தின் எஜமானனாகத் திகழும் மனிதன், அதேவேளையில், இயற்கையின் தலைவன் ஆகிறான். தனக்குத் தானே எஜமானன் ஆகிறான். அதாவது, சுதந்திரமடைகிறான்.
இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்.
பகுதி 3 (விஞ்ஞான சோசலிசம்)
Leave a Reply