கே.பாலகிருஷ்ணன்
“சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற இந்த நூல் இந்திய சமூகத்தில் ஊடுபாவாக நீடித்து நிலைத்திருக்கும் சாதியம் பற்றிய ஓர் ஆய்வுநூலாக வெளியிடப்படுகிறது. பல சிறந்த படைப்புகளை வெளியிட்டு பதிப்புலகில் முத்திரைப் பதித்துவரும் பாரதி புத்தகாலயத்தின் ஆய்வுப் படைப்புகளில் இது மேலும் ஒரு புது வரவாகும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் கடந்த 25 ஆண்டு காலமாக எழுதிவந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. 32 பகுதிகள், 300 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலில் சாதியின் தோற்றம், பரிணாமம் பற்றி பல ஆய்வுகள் உள்ளன.
சமகால அரசியல் தேவைகளைக் கடந்தும், அறிவியல் பூர்வமான அணுகுமுறையோடும் ஒரு ஆய்வு அமையும்போதுதான் பிரச்சினையின் வேர்களை கண்டறிய முடியும்; இந்திய சமூகத்தின் தனித்துவ சவாலாக திகழக்கூடிய சாதியத்தைஎதிர்கொள்ளவும், தீர்வுகளை நோக்கி நகரவும் முடியும்.
சாதியே வர்ணாசிரம தர்மத்தின் தோற்றுவாய் எனவும், பிராமண ஆதிக்கம் ஒழிந்தால் சாதியும் ஒழிந்துவிடும் என்ற கருத்தோட்டங்களும், இன்னொரு பக்கம் சாதியம், நிலப்பிரபுத்துவ சமூக மேல்கட்டுமானத்தோடு இணைந்தது எனவும், நிலப்பிரபுத்துவம் ஒழிந்தால் சாதியமும் ஒழிந்துவிடும் என பல கண்ணோட்டங்கள் நீடித்து வருகின்றன.
ஆனால் ஆதிகால இனக்குழு சமுதாயம் சிதைந்து வர்க்கங்களாக உருவெடுத்த காலத்திலேயே இந்திய நாட்டில் சாதியம் ஊடுருறுவியதை வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வரலாற்று வெளிச்சத்தை பாய்ச்சுபவையாக இந்நூலில் உள்ள முதல் மூன்று கட்டுரைகள் அமைந்துள்ளன. மார்க்சிய அணுகுமுறையோடு நூலாசிரியர் தனது பார்வையை முன்வைத்துள்ளார். வேதகாலத்தில் கருக்கொண்ட வருணாசிரம முறை, கோத்திரங்களுக்குள் படர்ந்த நால்வருணம், கோத்திர சகோதரத்துவம் வர்ண சகோதரத்துவமாக பரிணாமம் பெற்றதுடன், பஞ்சமர்களின் உருவாக்கம், தொழில்கள் வளரவளர சாதிகள் -– உபசாதிகளின் பிறப்பு, மதம்தந்த புனித முத்திரை, மனுதர்மத்தின் சித்தாந்த அடித்தளம், தீண்டாமை, ஆளும் வர்க்கங்களின் சுரண்டல்முறைமைக்கு பொருந்திய பாங்கு, துவக்ககால சமூக அமைப்பில் வர்க்கமே சாதியாக அமைந்த வரலாறு என இக்கட்டுரைகள் மிக விரிவாக பேசுகின்றன.
இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான இ.எம்.எஸ்., வரலாற்று ஆய்வாளர்கள் டி. டி. கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா ஆகியோரின் விளக்கங்கள், மேற்கோள்கள் எளியமுறையில் கடினமான பொருளைப் புரிந்துகொள்ள அழைத்துச் செல்கின்றன. சாதிஅமைப்பிற்குள் நிகழ்ந்து வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் மிகச்சரியாக எடுத்துரைக்கிறார். இன்று இந்தியாவின் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பற்றி எழுகிற திரிபுகளை புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் நிச்சயம் உதவும்.
சமூகத்தில் பாராட்டத்தகுந்த பங்களிப்பினை சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆற்றியுள்ளபோதிலும் சாதிஒழிப்பு போராட்டத்தை அதன் ஆணிவேரான சுரண்டல் ஒழிப்பு, வர்க்கஒழிப்பு போராட்டங்களோடு இணைக்கத் தவறியதால் ஏற்பட்ட தோல்விகளை இந்நூல் அழுத்தமாக பட்டியலிட்டுள்ளது. சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம், எல்லைகள், இணைய வேண்டிய புள்ளிகளையும் இக்கட்டுரைகள் சுட்டுகின்றன. “விடுதலைப் போராட்டக் காலத்தில் விடுதலை இயக்கமும் சமூக சீர்திருத்த இயக்கமும் இணைந்து செயல்படாமல் முரண்பட்டு நின்றதால் இரண்டு இயக்கங்களுமே பலவீனப்பட்டன” என்ற கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர் பி.டி. இரணதிவேவின் கருத்து மிகக் கூர்மையான முறையில் கையாளப்பட்டு ஆழமாக விவாதிக்கப்பட்டும் உள்ளது. பாலின ஒடுக்குமுறைகள் எவ்வாறு வர்க்க, சாதிய ஒடுக்குமுறையின் பிரிக்கமுடியாத அங்கமாக திகழ்கிறது என்பதும் அவரின் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு காலங்களில் தரப்பட்ட மூன்று நேர்காணல்கள், இந்த தொகுப்பு நூலில் உள்ளன. சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றி வந்திருக்கும் பணிகளும், கடைப்பிடித்து வந்த தெளிவான கருத்தியல் அணுகுமுறைகளையும் தனது நேர்காணல்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார்.
உழைக்கும் மக்களின் ஒன்றிணைக்கும் கடமையில் இருந்து வழுவாமல், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பில் இருந்து பிறழாமலும் மார்க்சிஸ்ட் கட்சி பயணிப்பதை எடுத்துரைக்கிறார். இடதுசாரிகள்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மிக நேர்மையோடும், உறுதியாகவும் பதில் கொடுக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் விளக்கிய “படிநிலைச் சமத்துவமின்மை” சாதிகளுக்கு இடையே மட்டுமின்றி, சாதிகளுக்குள்ளும், உட்சாதிகளுக்குள்ளும் கூட எப்படி வேறுபாடுகளை விதைத்துள்ளன என்பதை உள்வாங்கி, சமரசமின்றி செயல்படுகிற மார்க்சிஸ்ட் கட்சியின் தனித்துவத்தினை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். தலித் அமைப்புகள் மத்தியிலேயே “படிநிலைச் சமத்துவமின்மை” பற்றிய பார்வையின்மை வெளிப்பட்டதை அருந்ததியர் உள்ஒதுக்கீடு பிரச்சினையில் பார்த்தோம் என்றால், இன்னொரு பக்கம் தலித்அல்லாத உழைப்பாளி மக்களும் சாதிய ஒடுக்குமுறை களத்தில் இணைந்து நின்றதை உத்தபுரம் உள்ளிட்ட உதாரணங்களில் பதிவு செய்து, நம்பிக்கையை அளிக்கிறார்.
இந்த நூலில் இடம் பெற்றுள்ள “சாதி அமைப்பும் -– மக்கள் ஜனநாயகத் திட்டமும்” என்ற கட்டுரை முக்கியமான ஒன்று. சமூக மாற்றத்திற்கான சாலை வரைபடத்தில் சாதிய முறை ஒழிப்பு எப்படி இரண்டறக் கலந்தது என்று அழுத்தமாக விளக்குகிறது.
“சாதி அமைப்பை ஒழிப்பதற்காக போராடுவது மற்றும் அனைத்து வகையிலான சமூக ஒடுக்குமுறைகளை சமூக சீர்திருத்த இயக்கங்கள் வாயிலாக முடிவுக்கு கொண்டு வருவது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதி ஆகும்.” என்ற வரிகள் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுதியான பயணத்தின் திசைகாட்டி ஆகும்.
முதலாளித்துவ கட்சிகளின் ‘வாக்குவங்கி அரசியல்’ பற்றிய கட்சியின் அணுகுமுறையினை சுட்டிக்காட்டி கட்சியின் மாறுபட்ட பாதையை, செயல்திட்டத்தை இந்த நூல் விளக்குகிறது.
இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான சிந்தனைசிற்பி சிங்காரவேலர் 1921 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அதில் “20 கோடி மக்களின் அவலம் தீராமல் சுயராஜ்ய போராட்டம் நன்மை பயக்காது. நாம் விரும்புவது உண்மையான சுதந்திரம். அதனுடைய மாயை அன்று” எனவும்,
“நமது நாட்டில் மூன்று முதன்மையான தீமைகள் பரவியுள்ளதைக் காணலாம். அவை மதபேதம், சாதிபேதம், பொருளாதாரபேதம். மற்ற தேசங்களில் பொருளாதார பேதம் ஒன்றே காணப்படும். இந்திய தேசத்தில் மட்டும் இம்மூன்றும் நிலைபெற்றுள்ளது…. அறிவீனமும், ஆபாசமுமான சாதிப் பாகுபாடை அழித்தொழிக்க வேண்டியது சமதர்மவாதிகளின் மிக முக்கியமான கடமை” எனவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அவர் குறிப்பிட்டுள்ளது கம்யூனிஸ்ட்டுகள் கொண்டிருந்த தொலைநோக்கு பார்வையின் அத்தாட்சியாகும்.
“கீழத் தஞ்சையின் கிழக்கு வானம்” கட்டுரை கருத்தியல் புரிதலை களத்தில் அமலாக்கிய வரலாற்று அனுபவம். சன்னதித் தெருக்களில் தலித்துகள் உடன் கைகோர்த்து சீனிவாசராவ் நடந்துசென்ற காட்சியை நூல்ஆசிரியர் விவரிக்கும்போதும், கூலிஉயர்வு போராட்டத்தை சாணிப்பால், சவுக்கடி உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தோதொடு சீனிவாசராவ் இணைத்ததும் இன்றுவரை சாதிய அமைப்பை ஒழிக்கிற பயணத்தில் ஈடுஇணையற்ற நிகழ்வாக நம் மனதில் பதிகிறது.
1990களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதிய மோதலின் வேர்களை உள்வாங்கிய ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை ஆணித்தரமாக நிறுவுவதாக “தீண்டாமை ஒழிப்புப் போரில் மார்க்சிஸ்டுகள்” என்ற கட்டுரை அமைந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயன்றபோது எப்படி சாதிஆதிக்க சக்திகள் வன்கொடுமைகளை ஏவினார்கள், அதை எதிர்கொண்ட தலித் மக்களின் எழுச்சியில் சனநாயக உள்ளடக்கம் எவ்வாறு இருந்தது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார். மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாக “ஒற்றுமைக்கான” வேண்டுகோளை விடுத்தபோது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் “தீண்டாமையை ஒழிப்போம்; மக்கள் ஒற்றுமை காப்போம்” என்ற முழக்கத்தை இணைத்ததை விவரிக்கிறார்.
களத்திற்கு நேரடியாக சென்று சாதிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் களம் இறங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட கிராமம் ஒன்றில் உத்தண்டராமன், முருகன் ஆகிய தோழர்கள் வேனில் மைக்கை கட்டிக்கொண்டுபோய் அரிவாள் ஏந்தி சாதிவெறி ஊட்டப்பட்டு திரண்டிருந்த மக்கள் மத்தியில் நடத்திய உரையாடல் நினைவிலிருந்து நீங்காதது.
எத்தனை எத்தனை கிராமக் கூட்டங்கள், நடைப்பயணங்கள், தீண்டாமைக்கு எதிரான களங்கள், கள ஆய்வுகள், ஆலயம் நுழைவு -– தேனீர்கடை பயன்பாடு – சலவையகம் – சலூன் – சுடுகாட்டுபாதை – சுடுகாடு – பொதுக்கிணறு – குளம் -– பொதுத்தெருக்கள் என எல்லா இடங்களிலும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிரான முன்னெடுப்புகள், வன்கொடுமைகள், காவல்துறை அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள். தமிழகத்தில் வேறு எந்த அரசியல் இயக்கமும் இப்படி ஒரு செயல்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது இந்த நூலை வாசிக்கிற அனைவருக்குமே ஏற்படும் உணர்வாக அமைந்திடும்.
நமது கட்சியின் மூத்த தலைவரும், அன்றைய மாநில செயலாளருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் விடுத்த அறிக்கை ஒன்று இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. 1990களில் எழுந்த வீரர் சுந்தரலிங்கத்தின் பெயரை போக்குவரத்துக் கழகத்திற்கு சூட்டுவதில் எழுந்த பிரச்சினையை “நாட்டு மக்கள் அனைவருக்கும் தலைக்குனிவு” என்று அந்த அறிக்கை அழுத்தமாக விமர்சிக்கிறது. வெறும் வார்த்தைகள் அல்ல அவை. ஆழமான பார்வை, உறுதியின் வெளிப்பாடு அது.
வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் தலைவர் இராமதாசின் நடவடிக்கைகள் பற்றிய மிகச்சரியான எதிர்வினையை இந்நூலின் கட்டுரைகள் சில ஆற்றியுள்ளன. பிற்பட்ட மக்களை “தலித் எதிர்ப்பு அரசியல்”அடிப்படையில் திரட்டுவதன் குறுகிய அரசியலை தோலுரிக்கிறது. அடித்தள வன்னிய மக்களின், பிற்பட்ட மக்களின் வாழ்வுரிமை பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்புகிற நடவடிக்கைகள் அவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கக் கூடியவை என்பதை மிகத் தெளிவாக நிதானமாக முன்வைத்துள்ளார்.
அருந்ததியர் வாழ்நிலை பற்றியும், மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும் தீர்வுகளையும் பற்றிய நான்கு கட்டுரைகள் சாதிய அமைப்பின் நுகத்தடியின் கொடூரமான, இழிவான தாக்குதலுக்கு ஆளாகும் மக்களைப் பற்றி அக்கறையோடு விவாதிக்கிறது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு மார்க்சிஸ்ட் கட்சியின் முன்முயற்சி -– அருந்ததியர் இயக்கங்களின் இணைப்பிற்கு கிடைத்த மகத்தான வெற்றி. அதற்கான களம் எவ்வாறுரு அமைக்கப்பட்டது, தரவுகளைத் திரட்டியது எப்படி, தாக்கங்கள் உருவானது எப்படி, பொதுசமூகத்தின் இசைவை எவ்வாறு பெறமுடிந்தது என்பதை மிக அருமையாக விளக்கியுள்ளார். “மலம் சுமந்த எங்களை மார்க்சிஸ்ட் கட்சி சுமக்கிறது” என கோவையில் நடைபெற்ற அகில இந்திய கட்சி மாநாட்டு பேரணியில் கொண்டு வரப்பட்ட பதாகை வெறும் முழக்கம் அல்ல. அந்த உள்ளத்தின் ஆழத்தில் கிளர்ந்து எழுந்த வார்த்தைகள் என்பதை இக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 12 ஆண்டுகால பயணம் என்ற கட்டுரை மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வளவு தலையீடுகளை செய்கிற அமைப்பு வேறுஎதுவும் இல்லை என்பது மட்டுமின்றி, அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கிற அச்சாணியாகவும் அது திகழ்கிறது.
சாதிய மேலாதிக்கத்தின் மூலம் வர்க்கச் சுரண்டலை முன்னெடுக்க முயலும் ஆதிக்க சக்திகள், தலித் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்குகிற முயற்சிகள், அடையாள அரசியல் அபாயங்கள், உட்சாதி பெருமிதம் என்ற பெயரில் மேலும்மேலும் ஒற்றுமையை சுக்குநூறாக உடைக்கிற முனைப்புகள், இதர உழைப்பாளி மக்களை தலித் மக்களிடம் இருந்து பிரிக்கிற சதிகள், பொதுப் போராட்டத்தில் இருந்து தலித் மக்களை தனிமைப்படுத்தும் அணுகுமுறைகள், நவீன தாராளமய எதிர்ப்புப் போராட்டத்தில் இணையாமல் விலகிநிற்பது, இந்துத்துவா வலைவீச்சுக்கு இரையாவது என்ற சமூகத்தின் போக்குகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி எதிர்கொள்கிறது.
தர்மபுரி, உத்தப்புரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க தலையீடுகளை இந்த நூல் விரிவாக பேசுகிறது. அம்பேத்கருடைய பேரனும், மிகச்சிறந்த ஆளுமை ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களின் பாராட்டு இந்த நூலில் இணைக்கப்பட்டு இருப்பது தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்படுத்தியிருக்கும் அகில இந்திய அளவிலான தாக்கத்திற்குச் சான்று.
சுதந்திர இந்தியாவில்ன் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சுரண்டல் கொள்கைகளால் வளங்கள் அனைத்தும் பெருமுதலாளிகளுக்கும், வறுமையும், பஞ்சமும் உழைப்பாளி மக்களிடத்திலும் குவிந்துள்ளன.
ஆசியாவின் பெரும்பணக்காரரான அதானியின் சொத்தும் ஓராண்டில் 800 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் 10 பெருமுதலாளிகள் ஒட்டுமொத்த தேசத்தின் சொத்துமதிப்பில் 50 சதவீதத்தை உடமையாகப் பெற்றுள்ளனர். அதேசமயம், ஒட்டுமொத்த ஏழைமக்களின் சொத்துமதிப்பு 13 சதவீதமாகக் குறைந்துள்ளது. கொடுமையான கொரோனா காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் உழைப்பாளிகள் கொரோனா நோய்க்கிருமிக்கும் வேலையின்மை, வறுமை, வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் கார்ப்பரேட் பெரும் பணக்காரர்கள் கொள்ளைலாபம் ஈட்டிக் கொண்டுள்ளனர். இத்தகைய கொடுமையான சுரண்டல் அமைப்பை எதிர்த்துப் போராடி வாழ்வாதாரங்களை பாதுகாத்திட ஏழை, நடுத்தர, உழைப்பாளி மக்கள் ஒன்றிணைந்து போராடவேண்டிய காலத்தில் உழைப்பாளி மக்களை சாதிஅடிப்படையில் பிளவுப்படுத்தும் சக்திகள் தீவிரமாகச் செயல்படுகின்றன.
சாதிய அணிசேர்க்கை அமைப்புகளின் செயல்பாடுகள் நவீன தாராளமயமாக்கல் சூழலில் குணாம்ச ரீதியாக மாறியுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு கோரிக்கைகள் முன்னிறுத்துவது என்பதோடு நிகழ்கால அரசியல்சூழலை மத்திய, மாநில அரசுகளில் அதிகார பதவி சுகங்களை அனுபவிப்பது என்ற நிலைக்கு உயர்ந்துள்ளன.
சுயசாதி பெருமைகளை கொண்டாடுவதற்காக பிறசாதிகளோடு மோதுவது, குறிப்பாக, அடித்தட்டு பட்டியலின மக்கள்மீது கொடூரமான தாக்குதல்களை தொடுப்பது அனுதினமும் நடந்து வருகின்றன. இத்தகைய சாதிய அணிதிரட்டல் உழைப்பாளி மக்களின் வர்க்க ஒற்றுமையை சீர்குலைப்பதோடு வரலாற்றுக்காலம் தொட்டு தொடர்ந்துவரும் சுரண்டல் அமைப்பிற்கு சேவை செய்வதாகவே அமைகின்றன.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முன்மொழிந்த மண்டல்குழு அடிப்படை மாற்றங்களுக்கு நிலச்சீர்திருத்தம் அவசியம் என்று அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான சாதிய அமைப்புகள் நிலக்குவியலை உடைத்து ஏழைகளுக்கு நிலம்விநியோகம் போன்ற அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. மறுபுறத்தில், தொழிலாளர்கள் என்கிற ஒற்றை அடையாளத்துடன் அணிதிரட்டப்பட வேண்டிய வர்க்கத்தின் ஒற்றுமையை சிதைக்கும் விதமான சாதிய திரட்டல்களும் நடக்கின்றன. இதேநேரத்தில் தங்கள்மீது காலங்காலமாக தொடுத்துவரும் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்து களம்காணுவதற்கு பட்டியலின மக்கள் சாதிய வடிவத்தோடு திரள்வதும் நடக்கிறது உள்ளது. எனவேதான், பட்டியலின மக்களின் எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது.
வர்க்கத்திற்கும், ஜாதிக்கும் இடையிலான இயங்கியலை எந்திரகதியாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஜாதி, மதம் போன்றவை மேல்கட்டுமானம் என்று வரையறுக்கப்பட்டாலும் அடித்தட்டுமானத்தின் இவை அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவை பொறுத்தவரையில் சாதியம் என்பது சுரண்டல் அமைப்பின் அடிக்கட்டுமானத்தில் தாக்கம் செலுத்துகிறது.
பொருளாதார சுரண்டலும், சாதிய சமூக கட்டுமானச் சுரண்டலும் ஒன்றோடுஒன்று பின்னிப் பிணைந்துள்ள நிலையில் அதற்கு எதிரான போராட்டமும் ஒருங்கிணைந்ததாகவே இருக்க முடியும். அதே சமயம் பொருளாதார அமைப்பை மாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாத, அடையாள அரசியலை முன்னிறுத்துகிற சாதிய அமைப்புகள் குறித்த பார்வையும் அவசியமாகிறது.
சமூக ஒடுக்குமுறைக்குக் காரணமான உயர்சாதி ஆதிக்கத்தையும், உழைப்பாளி மக்களை உறிஞ்சிக் கொழுக்கும் உடமை வர்க்கத்தின் சுரண்டலையும் எதிர்த்த போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலமே உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்பதே சமூக, பொருளாதார ஆய்வுகள் போதிக்கும் படிப்பினையாகும். பொருளாதார சுரண்டல் எதிர்ப்பை இணைக்காத சமூக சீர்திருத்த இயக்கங்கள் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடுகின்றன என்பதே வரலாறு உணர்த்தும் பாடம்.
மார்க்சிஸ்ட் கட்சி, வெறுப்பை என்றும் விதைக்காது. உழைப்பாளி மக்கள் மத்தியில் நேசம் வளர்வது, அதேநேரத்தில், சாதிய சமூகம் உழைப்பாளிகள் மத்தியில் ஊடுருவச் செய்துள்ள பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியாகப் போராடுவது என்ற உறுதியோடு முன்னேறும். அந்த நோக்கத்திலேயே சாதிக்கு அப்பாற்பட்டு ஜனநாயக உள்ளங்களை திரட்டுகிறது. சமூக மாற்றத்திற்கான பயணத்தில் எல்லோரையும் கைகோர்க்க செய்கிறது. இந்தப் பயணத்தை முன்னெடுக்கும் இரண்டு சக்கரங்களாக வர்க்க ஒடுக்குமுறை எதிர்ப்பும் -– சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பும் அமைந்துள்ளது.
ஏகாதிபத்திய, ஏகபோக, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பாதையில் நிலம், நவீன தாராளமய எதிர்ப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கான போராட்டங்களை இணைக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இந்தப் பாதையைப் பற்றிய தெளிவினை வழங்கிடும் நூலாக சாதி – வர்க்கம் – விடுதலை என்ற இந்நூல் அமைந்துள்ளது.
Leave a Reply