(கொல்கத்தா பிளீனம் ஆவணத்தில் இருந்து, இந்தியாவின் ஊரக மற்றும் நகர்ப்புற சூழலில் நவ-தாராளமய காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு தக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விளக்கும் பகுதிகள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன– ஆசிரியர் குழு )
ஊரக இந்தியா:
ஊரக இந்தியாவில் விவசாய உறவுகளின் தற்போதைய நிலைமை, காலத்திற்கு ஒவ்வாத அமைப்புகளும், சமூக உருவாக்கங்களும் கொண்டதாகவும், இதன் ஊடாகவே முதலாளித்துவ வளர்ச்சியின் விரிவாக்கத்தையும், தீவிரப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. ஊரக இந்தியாவில் சமச்சீரற்ற வளர்ச்சி நிலைமையை, உலகமய காலகட்டம் மேலும் தீவிரப்படுத்தியிருப்பது இன்னொரு அம்சம் ஆகும்.
நிலவுடைமை குவிவதும், மற்ற விவசாய உடைமைகளும், விவசாய – விவசாய வருமானங்களின் குவிப்பும் வேகமடைந்துள்ளன. ஊரகப் பகுதிகளில் வாழும் நிலவுடைமையாளர்கள் – பெரும் முதலாளித்துவ விவசாயிகள் – ஒப்பந்தக்காரர்கள் – பெரும் வர்த்தகர்களுக்கு இடையில் நிலவும் செல்வாக்கு மிக்க ஊரக பணக்கார கூட்டணி, ஆதிக்க வர்க்கமாக இருக்கிறது.
எனவே, ஊரகப் பகுதிகளில் வர்க்கப் போராட்டமும், விவசாய இயக்கத்தின் வளர்ச்சியும் மேற்சொன்ன பணக்காரர்களின் கூட்டணிக்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். நிலத்தின் மீது செலுத்தப்படும் கட்டுப்பாடுதான் அவர்களுடைய அதிகாரத்திற்கான அடிப்படை. ஆனால் அந்த ஆதாரங்களை மட்டும் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. கடனுக்கான வாய்ப்புகள், நில வர்த்தகம், தானிய அரவை ஆலைகளை நடத்துவது, பால் பொருட்கள் வர்த்தகம், உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகம், கட்டுமானம், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் நிரப்பும் மையங்கள், போக்குவரத்து வசதிகள்,வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடுவது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகள், தொழிலாளர்களாக மாறி வருவது, இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் ஆகும். விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். நிலப்பிரபுக்களை ஒழித்து, அவர்கள் வசமுள்ள நிலம் அனைத்தையும் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களுக்கு விநியோகிப்பதே அடிப்படையான இலக்கு ஆகும். எனினும், இப்போது புதிய வடிவங்களை எடுத்திருக்கும் நிலப்போராட்டத்தை புரிந்துகொண்டு நமது செயல்பாடுகளை அமைக்க வேண்டும்.
நில உரிமை போராட்டங்கள்:
நவீன தாராளமயக் கொள்கைகள் அமலான பிறகு, முதலாளித்துவக் கட்சிகளின் மாநில அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்திருக்கின்றன. பெருமுதலாளிகளுக்குச் சாதகமான விதத்தில் நிலத்தை தாங்களே கையகப்படுத்திக் கொடுக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. விவசாயிகளின் வசமுள்ள நிலங்களை பாதுகாப்பது, குறிப்பாக பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது இப்போது முன்னுக்கு வந்திருக்கிறது. ஏழைகளுக்கான வீட்டுமனைப் பிரச்சனை நாம் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு அம்சம் ஆகும்.
ஊரகப் பகுதிகளில், விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் சுரண்டக் கூடிய இந்த ஆதிக்க வர்க்கங்களுக்கு எதிரான முரண்பாடு – விவசாயம் அல்லாத முதலாளித்துவ நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றன. எனவே, நிலப் பிரச்சனை மட்டுமல்லாது, சுரண்டப்படும் பகுதியினரின் அனைத்து பிரச்சனைகளையும் கையிலெடுக்க வேண்டும்.
கோரிக்கைகளின் உருவாக்கம்:
விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை, கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளின் மீது இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். அதேசமயம் விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மத்தியதர விவசாயிகள் மற்றும் மற்ற உழைக்கும் மக்கள் பகுதியினரின் நலன்களை தெளிவாக மையப்படுத்துவதாக இந்த இயக்கத்தின் தன்மையை அமைத்திட வேண்டும்.
கடன் தள்ளுபடி, கடன் வசதி, விவசாய இடுபொருட்களுக்கான மானியம் ஆகியவற்றைக் கோரும்போது, இதன் மூலம் கிடைக்கும் பலன் முக்கியமாக ஏழை, நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்குச் சென்றடையும் வகையில் கோரிக்கை வகுக்கப்பட வேண்டும்.
அதே போல குத்தகை முறைகளின் பல்வேறுபட்ட இயல்பை கணக்கில் கொண்டு, நாம் எழுப்பும் கோரிக்கைகள், அவ்விடத்தின் திட்டவட்டமான நிலைமைகளை கணக்கில் கொண்டும் அப்பகுதியில் இயக்கத்தின் வலுவின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.
குறைந்த கூலி,விவசாய கருவிகளுக்கான வாடகை, வட்டி வசூல், நிலத்தின் மீதான கட்டுப்பாடு, தண்ணீர் வளத்தின் மீதான கட்டுப்பாடு, விவசாய சேமிப்புக் கூடங்கள் மற்றும் வேளாண் பொருட்களின் வர்த்தகம் என அனைத்து நடவடிக்கைகளிலும் சுரண்டலுக்கு எதிரான இயக்கங்களை திட்டமிட வேண்டும்.
நகரப்புறங்களை நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும்.
வேளாண் உற்பத்தியை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்தல், கடன்வசதி ஆகியவற்றிற்காக சுய உதவிக் குழுக்களையும், கூட்டுறவு அமைப்புகளையும் கிராமங்களில் உருவாக்க வேண்டும்.
நீர்ப்பாசன மேம்பாடு, இயற்கைப் பேரழிவுகளைத் தடுத்தல், சுற்றுப்புற சூழல் பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துதல் ஆகியவற்றைப் பற்றி மீது நவீன தாராளமயக் கொள்கைகள் எந்தவிதமான கவனமும் செலுத்துவதில்லை. மேற்சொன்ன விஷயங்களில் ஊரக மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி இயக்கங்களை கட்டமைக்க வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் நிலவக்கூடிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும், பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கல்வி, பொது சுகாதாரம் மற்றும் வீட்டுவசதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதி செய்வதில் விவசாய அமைப்புகள் முன்னணியில் இருக்க வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் பலவகைத் தன்மை:
நவ-தாராளமய காலகட்டத்தில், தொழிலாளி வர்க்க சேர்மானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எண்ணிக்கை விரிவடைந்துள்ளது, அதே சமயத்தில் முறைசாராத் தொழிலிலும், அணி திரட்டப்பட்ட தொழில்களிலும், ஒப்பந்தப் பணிகளிலும், நிரந்தரமற்ற பணிகளிலும்தான் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெரும்பகுதி தொழிலாளர்கள் தினக்கூலிகள், சேவைத்துறை தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டில் இருந்து வேலை செய்கிறவர்கள் மற்றும் ‘தொழிலாளர்களாக’ எடுத்துக் கொள்ளப்படாத திட்டப் பணியாளர்கள் ஆவர்.
போக்குவரத்துத் துறையில் முறைசாராத் தன்மை அதிகரித்துள்ளது. இந்தத் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. அணிதிரட்டப்பட்ட தொழில்களில், தனியார் நிறுவனங்களிடம் மிக மோசமாக சுரண்டப்படுவோராக இளம் தொழிலாளர்கள் உள்ளார்கள். குறைந்த கூலியில் எந்த சமூகப் பாதுகாப்பு பலன்களுமின்றிப் பணிபுரியும் அவலநிலையில் சிக்குண்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்களை அணிதிரட்டசிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் பல்வகைத்தன்மை, இந்திய முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அம்சம் ஆகும்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்:
ஒரே மாதிரியான வேலைக்கு ஒரே கூலி, சட்ட பூர்வமான சமூகப் பலன்கள் போன்ற முழக்கங்களை முன்னெடுக்கும் விதத்தில் தொழிற்சங்கம் தனது கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அணிதிரட்டப்பட்ட தொழில்கள், முறைசாராத் தொழில்கள் இரண்டிலும் பணி புரியும் பெண் தொழிலாளர்களை அணிதிரட்ட சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தல் உட்பட பெண் தொழிலாளர்களின் குறிப்பான பிரச்சனைகளை கையிலெடுக்க வேண்டும். தலித், பழங்குடி தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துக் கொள்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இளம் தொழிலாளர்களைப் பொறுத்த வரை, பழைய முறையிலான தொழிற்சங்க நடவடிக்கைகள் அவர்களை ஈர்க்காது. தொழிற்சங்க ஊழியர்கள் அதற்குத்தகுந்த முறையில் இயங்கி,அவர்களது மொழியில் பேசி, அறிவு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவர்களிடையே பணிபுரியத் தம்மை திறன்மிக்கவர்களாக்கிக் கொள்வது அவசியம்.
வகுப்புவாத கருத்தியல் தொழிலாளர்களிடம் விரிவாகப் பரவியுள்ளது. சாதி அடையாளமும், தாக்கமும் கூட ஆழமாகச் சென்றுள்ளது. வகுப்புவாத, சாதி தாக்கம் ஆகியவற்றை எதிர்க்கும் பணியை கட்சி நேரடியாக எடுத்துக் கொள்ளவேண்டும். அதே சமயத்தில் தொழிற்சங்கங்கள் வகுப்புவாதம் தொடர்பான விஷயங்களை எடுத்துக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை உடைக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.
குடியிருப்புப் பகுதிகளில் எப்படி தொழிலாளர்களை அணி திரட்டுவது என்ற ஒரு முக்கியமான கேள்வியை கட்சியின் 21வது காங்கிரஸ் எடுத்துக் கொண்டது.
அரசியல்-ஸ்தாபன அறிக்கை இப்படிக் கூறுகிறது:
- அ. “தொழிலாளி வர்க்கத்தின் சமூகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த அறிக்கை தொழிலாளி வர்க்கத்தின் மாறியுள்ள சேர்மானத்தை வெளிப்படுத்துகிறது. முறைசாராத் தொழில் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மொத்த உழைப்பாளர்களில் 94 சதவிகிதமாக உள்ளனர்; இதில் விவசாயத் துறையும் அடக்கம். பணியிடத்தில் தொழிலாளர்களை சங்கத்தில் இணைக்கும் பாரம்பரிய முறைகளின் வாயிலாக அணிதிரட்டுவதில் கஷ்டங்கள் உள்ளன.
- ஆ. அணிதிரட்டப்பட்ட தொழில்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், வீட்டிலிருந்து பணிபுரிவோர், சேவைத்துறை ஊழியர்கள், சுயதொழில் செய்வோர் என அனைத்து வகை தொழிலாளர்களின் பெரும்பகுதி சேரிகளிலும், நகரத்தின் ஏழ்மை பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களை திரட்டுவதற்கான ஒரு வழி, வாழ்விடங்களில் தொழில் வாரியாக திரட்டுவதாகும். அவர்களின் பணியிடங்கள் சிதறிக்கிடப்பதாலும், அடிக்கடி இடம் மாறுவதாலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் அவர்களை அணுக வேண்டும். வீட்டிலிருந்தபடியே வேலை செய்வோர், அயலாக்கத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வீடேபணியிடமாக உள்ளது. அல்லது குடியிருப்பு பகுதிகள் பணி செய்யுமிடத்திற்கு அருகமைந்துள்ளது.
- இ. “எனவே தொழிற்சங்கங்கள் பகுதி வாரியாக ஸ்தாபனங்களை அமைப்பதில் ஈடுபட வேண்டும். இது அருகமை / குடிசைப்பகுதி கமிட்டிகளாக இருக்கலாம். இந்த கமிட்டிகளும், இணைப்புகளும் இளைஞர், மாதர் மற்றும் பிற பகுதி வாரியான ஸ்தாபனங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். சமூக வாழ்க்கை அடிப்படையிலான கமிட்டிகள் பல்வேறு விதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அதில் சில தொழிற்சங்க குணாம்சத்தைக் கொண்டதாகஇருக்கலாம். ஆனால் மற்ற செயல்பாடுகள் சமூகநலம், படிப்பகங்கள், கலாச்சாரக் குழுக்கள், உடல் நலவாழ்வு மையங்கள், நுகர்வோர்அமைப்புக்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
- ஈ. “இவ்வாறு கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் பிற வெகுஜன அமைப்புக்களை இத்தகைய சமூக அடிப்படையிலான ஸ்தாபனங்களின்பால் செலுத்தும்போது, அது நம்மை முறைசாரா தொழிலாளர்களிடம் மட்டுமல்லாமல், பொதுவாக நகர்ப்புற ஏழைகளையும் சென்று அடைய உதவி செய்வதாக வேண்டும்.”
நடுத்தர வர்க்கமும், நகர்ப்புறமும்:
நகர்மயமாதல் தொடர்ந்துஅதிகரித்து வருகிறது. தொழிலாளர் வர்க்கம் நகர்ப்புறத்திலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு நகரின் எல்லைகளுக்கு வெளியே வீசப்பட்டுள்ளனர். நகர்ப்புறப் பகுதிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை ஒட்டி கட்சியும், வெகுஜனஅமைப்புகளும் தமது பணியின் தன்மைகளை மாற்றிக் கொண்டு நகர்ப்புறப் பகுதி பணிக்கான தகுந்த வடிவங்களைக் கொண்ட செயல்பாட்டுத் திட்டத்தை வகுக்கவேண்டும்.
நவீன தாராளமய நகர்ப்புற சீர்திருத்தங்கள் ஏழைகள், கீழ் நடுத்தர மக்களின் பணி நிலைமைகளை மோசமாக்கியுள்ளன; ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் உட்கட்டுமானம் மோசமடைந்துள்ளது. அடிப்படை சேவைகள் தனியார்மயம் மூலமாகவோ, சேவைக்கட்டணங்கள் திணிப்பு வாயிலாகவோ வழங்கப்படுவதால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. சீர்திருத்தங்களின் இன்னொரு விளைவு அரசாங்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கும் நிதி, கடன் போன்றவை குறைக்கப்பட்டதாகும். இவ்வாறாக, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதாக
கூறப்படும் வெற்று வார்த்தை ஜாலங்களைத் தவிர உண்மையில் எந்த உண்மையான அதிகாரமும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
குடிசைகளிலும், அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகளிலும் தான் பெரும்பாலான நகர்ப்புற ஏழைகள் வசிக்கின்றனர். நகர்ப்புற ஏழைகள் மத்தியில் பணிபுரிய ஸ்தல அமைப்புகளை உருவாக்கவேண்டும். ஏற்கனவே அமைப்புகள் இருக்கும் இடங்களில் அவற்றில் நாம் சேர்ந்து பணிபுரிவது குறித்து விவாதிக்க வேண்டும்.
அடிப்படை வசதிகளற்ற பகுதிகளில் வீட்டு வசதி, வீடுகள் இடிக்கப்படும் அச்சுறுத்தல், குடிதண்ணீர், கழிவுநீர்வசதிகள், பொது விநியோக முறை, பள்ளி, சுகாதார வசதிகள் அளித்தல், போலீஸ் துன்புறுத்தல், கிரிமினல், மாஃபியா குண்டர்களின் ஒடுக்குமுறை ஆகிய பிரச்சனைகளை கையிலெடுத்தால் அங்குள்ள மக்கள் நம்முடன் சேருவர்.
தலித், முஸ்லீம் பகுதிகள், ஏழை குடியிருப்பு பகுதிகள், காலனிகளில் பணிபுரிய நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பல மாநிலங்களில் அவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.
நடுத்தர வர்க்கங்கள்:
இந்த நவ-தாராளமய காலகட்டம், நடுத்தர வர்க்கத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்ந்த கல்வி, அதிக ஊதியத்துடன் கூடிய வேலை, அதிக நுகர்வுடன் கூடிய உயர் நடுத்தர வர்க்கம் வளர்ந்துள்ளது. அவர்கள் அதிக விலையுடைய எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், கார்கள் போன்றவற்றை வாங்கும் சந்தையாக உருவெடுத்துள்ளனர். மேல்தட்டு கல்வி, சுகாதார வசதிகளுக்கு அவர்கள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்த உயர்நடுத்தர வர்க்கத்தினர், சில விதிவிலக்குகளைத் தவிர, நவீன தாராளமய விழுமியங்களுக்கு ஆதரவானவர்களாக உள்ளார்கள்.
ஏனைய நடுத்தர வர்க்கத்தினரும் உயர்பகுதியினரின் வாழ்க்கைதரத்தை அடைய ஆவலாக உள்ளனர். ஆனால் வாழ்க்கையின் நிதர்சனம் அதற்கு சாதகமாக இல்லை. ஒரு ஃப்ளாட், வீடு வாங்கவும், தமது குழந்தைகளின் கல்விக்கு கட்டணம் செலுத்தவும், மருத்துவச் செலவுகளைச் செய்திடவும்,முதுமையில் வாழ்க்கை பாதுகாப்புக்கு என அனைத்திற்காகவும் அவர்கள் போராட வேண்டியுள்ளது.
தொழிலாளி வர்க்கம் சந்திப்பது போலவே நடுத்தர வர்க்கங்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றன. தாராளமயம் அவர்களை பல விதங்களில் பாதித்துள்ளது. இது பல தருணங்களில்அவர்களை தொழிலாளி வர்க்கத்துடன் இணைந்த போராட்டங்களிலும், இயக்கங்களிலும் தள்ளியுள்ளது. இந்த வர்க்கத்திற்கு ஜனநாயகத்தின் மீது ஆவலும் உண்டு. அங்கு அது அனைத்து குடிமக்களுக்கும் நீதியையும், நியாயமான நடைமுறையையும் வேண்டுகிறது. அது அரசியலை பண பலத்திலிருந்தும், ஊழலிலிருந்தும்,குற்றமயத்திலிருந்தும் விடுவிக்க விரும்புகிறது. இவற்றோடு கூடவே அதற்கு சமூக முன்னேற்றம் பற்றிய ஆவலும்உண்டு. மேலும் சந்தைப் பொருளாதாரம் பற்றிய மாயையும் அதற்கு உண்டு. இவை அனைத்தும் நடுத்தர வர்க்கத்துக்குள் வெளிப்படும் முரண்பாடான போக்குகள் ஆகும்.
நடுத்தர வர்க்கத்தை திரட்டுதல்:
நவீன தாராளமய அரசின் கீழ் நடுத்தர வர்க்கங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் காரணமாக இடதுசாரிகளின் செல்வாக்கும், உழைக்கும் வர்க்கத்துடன் அதன் இணைப்புகளும் பலவீனப்பட்டுள்ளன. நடுத்தர வர்க்கத்தின் கீழ்ப்பகுதியிலும், நடுப்பகுதியிலும் நாம் கவனத்தை செலுத்த வேண்டும். நமது அரசியல் செய்திகளை
எடுத்துச் செல்ல புதிய வடிவங்களையும், அவர்களைச் சென்றடையும் விதத்தில் புதிய ஸ்தாபன வடிவங்களையும் கையில் எடுக்கவேண்டும். நடுத்தர வர்க்கத்தின் இந்தப் பகுதி சந்திக்கும்விஷயங்களும், பிரச்சனைகளும் துல்லியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.
நடுத்தர வர்க்கங்களின் கவலைகளாக உள்ள ஊழல், நல்ல நிர்வாகம், சுற்றுச்சூழல் மாசடைதல் போன்ற விஷயங்களை நாம் கையிலெடுக்க வேண்டும். உயர் கல்வி பயிலும் மாணவிகளும், வேலையிலிருக்கும் இளம்பெண்களும் நகர்ப்புற ஜனத்தொகையில் மிக முக்கியமான பகுதியினர் ஆவார்கள். பொதுவான இடங்களில் அவர்கள் பாகுபாடு,சமத்துவமின்றி நடத்தப்படுதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை சந்திக்கின்றனர். நமது சங்கங்கள் செயல்படும்
இடங்களில் நாம் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ள உபகுழுக்களை உருவாக்க வேண்டும். தேவையான இடங்களில் நாம் அவர்களிடையே பணி புரிய சிறப்பு அமைப்புகளை உருவாக்கலாம்.
நடுத்தர வர்க்கத்தில் பணி புரிய வேண்டிய முக்கியமான பகுதி தத்துவார்த்த தளம் ஆகும். இதற்காக குடிமக்கள் அமைப்புகள்,கலாச்சார அமைப்புகள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.அங்கு நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை, நலன்களுடன் தொடர்பான விவாதங்களும், கலாச்சார நிகழ்வுகளும் நடைபெறவேண்டும்.
நடுத்தர மக்கள் வசிக்குமிடங்களில் மிக அதிகமான குடும்பங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வசிக்கின்றனர். நமதுஉறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மூலமாக நாம் இந்த குடியிருப்பு சங்கங்களில் தீவீரமாகப் பணிகளில் ஈடுபட வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில் மூத்த குடிமக்கள், ஓய்வு பெற்றோர், ஓய்வூதியர்கள் ஆகியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அவர்கள் நிதி, ஆரோக்கியம், முதிய வயது பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்காக ஓய்வு பெற்றோர் சங்கங்கள், நலவாழ்வு அளித்தல், முதியோர் இல்லங்கள், பொழுதுபோக்கு இல்லங்கள் ஆகியவற்றில் நாம் தீவீரமாகச் செயல்பட வேண்டும்.
Leave a Reply